Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

அத்தியாயம் 4

 

    • மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.

 

    • “வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த ‘ஏரோகிராமை’ அவசரப்பட்டு இன்னிக்கே போஸ்ட் பண்ணிட வேண்டாம்னு உடனே உங்ககிட்ட சொல்லிட்டு வரச் சொன்னா…”

 

    • “ஏண்டி…? திடீர்னு இப்போ என்ன வந்திடுத்து உங்கப்பாவுக்கு….?”

 

    • “அதென்னமோ… தெரியலே, வேண்டாம்னு சொல்லிவிட்டு வரச் சொன்னார்…”

 

    • பார்வதியை வசப்படுத்துவதற்கு மிகச் சுலபமான வழி ஒன்று வசந்திக்குப் புலப்பட்டது.

 

    • “பாரு! ரவி அண்ணா இப்போ ஊருக்கு வரணும்னு உனக்கும் ஆசை தானே…?”

 

    • “ரவி அண்ணாவைப் பார்த்து மூணு வருஷத்துக்கு மேலே ஆச்சு வசந்தி அக்கா…! எனக்கும், குமாருக்கும் அம்மாவுக்கும் அண்ணாவை உடனே பார்க்கணும்னு கொள்ளை ஆசை.”

 

    • “அப்படியானா நீ ஒரு உபகாரம் பண்ணனும் பாரு! நீ என்னைப் பார்க்கிறதுக்குள்ளேயே நான் இந்த ஏரோகிராமை தபால்லே சேர்த்தாச்சுன்னு உங்க அப்பாட்டச் சொல்லிடணும். ரவி அண்ணாவைப் புறப்பட்டு வரச் சொல்லி சித்த முன்னே தான் இதிலே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தார் உங்கப்பா. இப்போ இதைப் போஸ்ட் பண்ண வேண்டாம்னு அவரே சொல்லியனுப்பிச்சதா நீ சொல்றே… உங்கப்பா என்ன பண்ணுவாரோன்னு எனக்கும் பயமா இருக்குடி. வரச்சொல்லி எழுதியிருக்கிற இந்த லெட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு வர வேண்டாம்னு இன்னொரு லெட்டர் எழுதப் போறாரோ என்னமோ?”

 

    • “ஐயையோ! அது வேண்டாம் அக்கா! நீங்க இதையே போஸ்ட் பண்ணிடுங்கோ… நான் உங்களைப் பார்க்கறத்துக்குள்ளேயே நீங்க ‘ஏரோகிராமை’ப் போஸ்ட் பண்ணியாச்சுன்னு அப்பாட்டச் சொல்லிடறேன்.”

 

    • தபாலாபீஸ் வரை பார்வதியையும் உடனழைத்துச் சென்றே அந்தக் கடிதத்தைப் பெட்டியில் போட்டாள் வசந்தி. தபாலாபீஸ் வாசலில் இருந்தே வசந்தியும், பார்வதியும் அவரவர் வழிகளில் பிரிந்து சென்றனர்.

 

    • பார்வதி வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது அவள் தந்தை விசுவேசுவரசர்மா பூமிநாதபுரத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். அம்மா வாசல் திண்ணைப் பிறையில் அந்தி விளக்கு ஏற்றி வைத்து விட்டு உட்கார்ந்திருந்தாள். பிறைக்குக் கீழே திண்ணையில் தண்ணீர் தெளித்து அழகாகச் சிறிதாகத் தாமரைப்பூக் கோலம் போட்டிருந்தாள் அம்மா. வயதாகியும் கை சிறிதும் நடுங்காமல் அம்மாவால் எப்படி இத்தனை அழகாக அளவாகக் கோலம் போட முடிகிறதென்று பார்வதி ஒவ்வொரு முறையும் அம்மாவின் கோலத்தைப் பார்க்கும் போது ஆச்சரியப்படுவதுண்டு. தாமரைப்பூ, தேர் எதைப் போட முயன்றாலும் கோலம் போடும் போது தனக்குக் கைகோணி விடுவதும், அம்மாவுக்கு அச்சுப் போல் கச்சிதமாக வரைய வருவதும் சேர்ந்தே நினைவு வரும் அவளுக்கு. இதற்காக அம்மாவிடம் அவள் பொறாமைப் படுவது கூட உண்டு. பார்வதி பாத்திரக்கடையில் தகரத் தகட்டில் தாமரைப் பூ போலவும், தேர் போலவும் செய்த கோல அச்சுக்களையும் கோலக் குழலையும் வாங்கப் பணம் கேட்ட போது அம்மா மறுத்து விட்டாள்.

 

    • “எங்க நாளிலே இதெல்லாம் ஏதுடி…? கன்னியாப் பெண்களோட மனசுலேயும் கைகள்ளேயும் லட்சுமி கடாட்சமும், சரஸ்வதி கடாட்சமும் போட்டி போட்டுண்டு நிற்க வேண்டாமோ…? சிரத்தையும் அக்கறையும் இருந்தாக்க மனசு நெனைச்சப்படி கை கோடு இழுக்காதோ…? கோலத்துக்கு அச்சும், குழலும் வந்திருக்குன்னு சொன்னா அந்த நாளிலே சிரிப்பாடீ… சிரிப்பா… அதெல்லாம் ஒண்ணும் வாங்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகு. எல்லாம் தானாக வந்துடும்…”

 

    • சங்கரமங்கலம் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தால் தேறக்கூடிய முதல் தரமான குடும்பத் தலைவிகளில் முதல் இடம் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளுக்குக் கிடைக்கும். ‘கிருகலட்சுமி’ என்ற பதத்துக்குத் தனியாக இலட்சணம் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பதைவிட அந்த அம்மாளை அப்படியே சுட்டிக் காட்டி விடலாம். ஆனாலும், அவளுக்குக் காது கொஞ்சம் மந்தம் என்ற ஒரே காரணத்துக்காக சர்மா அவளிடம் திட்டுவதும் கூப்பாடு போதுவதும் வழக்கமாக இருந்தது. அப்படி அவர் திட்டுவதற்கும் கூப்பாடு போடுவதற்கும் கூடப் பல சமயங்களில் ஆழ்ந்த அர்த்தம் இருக்காது. அவள் மேல் தனக்கு இருக்கும் உரிமையையும், ஆதிக்கத்தையும் காட்டும் ஓர் உணர்ச்சி வெளிப்பாடாகவே சர்மாவின் இந்த விதமான கோபதாபங்கள் அமையுமே தவிர வேறு ஆழ்ந்த பொருளோ பொருத்தமோ அவற்றுக்கு இருக்காது. அந்த அம்மாளும் அதை அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தாள். பிரியமுள்ளவரிடத்தில் பெய்யப்படும் வசைச் சொற்களுக்குப் பொருளே இருப்பதில்லை. பிரியமும் உறவும் பாசமும் ஆகிய அன்புப் பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும்போது, அப்புறம் அவற்றுக்குத் தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும்…?”

 

    • சர்மாவின் கோபமும், கூப்பாடும் அவர் தன்னிடம் அப்போது ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதற்கும் அதிகமாகவோ, மேலாகவோ, வேறெந்தப் பொருளையும் காமாட்சியம்மாளின் மனதில் உண்டாக்கியதே இல்லை. அந்த அளவு கடுஞ்சொற்களைக்கூட அநேகமாக அவளறிந்தவரை அவர் வேறு யாரிடமும் உரிமையோடு உபயோகப்படுத்துவதில்லை. தன்னைத் தான் அவர் அப்படித் திட்டுவதற்கு உரிமை கொண்டாடுகிறார் என்பதே காமாட்சியம்மாளுக்கு உள்ளூறப் பெருமைதான். கணவனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதற்காகவே பெருமப்படும் பழைய தலைமுறை இந்தியப் பெண்களில் ஒருத்தியாகத்தான் அந்த அம்மாளும் இருந்தாள். கணவன் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ குடும்பம் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ விடுபட விரும்பும் நவீன காலத்து நகர்ப்புற இந்தியப் பெண்களின் முனைப்பு அவர்கள் தலைமுறையின் கடைக்கோடியில் கூட இன்னும் எட்டிப் பார்க்க வில்லை. தங்களது சுதந்திரமும், பெருமையும், பீடும், சுகமும், துக்கமும், வீடு என்னும் எல்லைக்குள், குடும்பம் என்னும் சாம்ராஜ்யத்துக்குள் மட்டுமே இருப்பதாக எண்ணிக் கருமமே கண்ணாக அந்த தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருந்தனர். கன்னியாகத் தாயாகப் பாட்டியாக அந்த எல்லைக்குள்ளேயே அவர்கள் வளைய வளைய வந்து கொண்டிருந்தார்கள். அதை விடச் சுதந்திரமும், சுகமும் உள்ள வாழ்வு ஒன்று அந்த வட்டத்துக்கு வெளியே இருப்பதாக அவர்கள் ஒரு போதும் எண்ணிப் பார்த்து ஏங்கியதில்லை.

 

    • “என்னடி காமூ! பிள்ளையாண்டான் தூர தேசத்துக்குப் போய் வருஷக் கணக்கிலே ஆச்சே…? வரச் சொல்லி ஒரு கால்கட்டைப் போட்டு அனுப்பப் படாதோ…?” என்ற விசாரணையுடன் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாட்டி காமாட்சியம்மாளின் காதில் விழுவதற்காக உரத்த குரலில் பேசியது தெருவில் எதிர்ச்சரகத்து வீடுகள் வரை கேட்டது.

 

    • நாள்தோறும் சந்தியா காலத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு வழக்கமாகச் சொல்லும் தோத்திரம் ஒன்றை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள், அதை முடித்து விட்டுப் பதில் சொல்வதாகப் பாட்டியை நோக்கிச் சைகை செய்தாள். பாட்டி அந்தச் சைகை புரிந்து பாருவிடம் பேச்சுக் கொடுத்தாள். “குமார் இன்னும் காலேஜிலேருந்து வரலியாடி பாரு…? டவுன்லேருந்து ஒரு சாமான் விலை விசாரிச்சுண்டு வரச்சொல்லி அவனிட்டக் காலம்பரக் கேட்டுண்டேன்.”

 

    • “இன்னும் வரலே பாட்டீ! அவன் வரத்துக்கு ஏழு ஏழரை மணியாகும்…”

 

    • இதற்குள் காமாட்சியம்மாள் தோத்திரத்தை முடித்து வணங்கிவிட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு அருகே வந்து அமர்ந்தாள். பாட்டி மறுபடியும் தன் கேள்வியைத் தொடங்கினாள்.

 

    • “இந்த வருஷமாவது சீமையிலேருந்து பிள்ளை வரப் போறானோ இல்லியோ..?”

 

    • “வரதா அவன் எழுதியிருக்கானாம். ‘வான்னு’ சொல்லி இவரும் பதில் எழுதிப் போட்டிருக்காராம். வேணுமாமா பெண் வசந்தி சொன்னதா இப்போ தான் பாரு எங்கிட்டச் சொன்னாள். இவரா இதெல்லாம் எனக்கெங்கே சொல்றார் பாட்டி…?”

 

    • “வேணுகோபாலன் பொண் உன் பொண்ணிட்டச் சொல்லித்தான் உனக்கே அவன் வரான்கிறது தெரியறதாக்கும்!”

 

    • “ஆமாம் வேற யார் இதெல்லாம் எனக்குச் சொல்றா? இவருக்கோ நான் எதைக் கேட்டாலும் மூக்குக்கு மேலே கோபம் வந்துடறது.”

 

    • வாசல் திண்ணையில் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டியும் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி திண்ணையில் இருந்து தெருவுக்குக் கீழே இறங்கும் படிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

 

    • கிழக்கு மேற்காக நீண்டிருந்த தெருவின் மேற்குப் பக்கமிருந்து கட்டை குட்டையாக ஓர் இரட்டை நாடியுள்ள மனிதர் வந்து கொண்டிருந்தார். இடுப்பில் நாலு முழம் வேஷ்டி, கறுப்பு நிறத்தில் அரைக்கைச் சட்டை மேலே ஒரு சிறு துண்டு அணிந்த தோற்றத்தில், நீண்ட வெட்டரிவாள் மீசையுடன் அந்த நடுத்தர வயது மனிதர் வீட்டு வாசலில் வந்து நின்றதும் பார்வதி தயங்கித் தயங்கிப் படியிலிருந்து மெல்ல எழுந்திருந்தாள்.

 

    • “ஐயா இருக்காரா பாப்பா…?”

 

    • “இல்லையே…? பூமிநாதபுரம் போயிருக்கார். திரும்பி வர நாழியாகும்.”

 

    • “சரி பரவாயில்லை. அவரு திரும்பி வந்ததும் ஞாபகமா ‘இறைமுடிமணி’ தேடி வந்தார்ன்னு சொல்லு, மறுபடி நாளைக்கிக் காலையிலே வந்து பார்க்கிறேன்…”

 

    • வந்தவர் போய்விட்டார். பார்வதியிடம் யாரோ பேசும் குரலைக் கேட்டுத் தலைப்பை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டு எட்டிப் பார்த்த காமாட்சியம்மாளிடம்,

 

    • “அப்பாவைத் தேடி வந்துட்டுப் போறார்… மறுபடி காலம்பர வராறாம்…?” – என்றாள் பார்வதி.

 

    • “யாருடீது…? வெறகுக் கடைத் தேசிகாமணிநாடார் குரல் மாதிரின்னா கேட்டுது” என்று இருந்த இடத்திலிருந்தபடியே நீட்டி முழக்கி வினவினாள் முத்து மீனாட்சிப் பாட்டி.

 

    • காமாட்சியம்மாள் பார்வதியை விசாரித்துத் தெரிந்து கொண்டபின், “ஆமாம் பாட்டி! நீங்க சொன்னவர்தான். இவரைத் தேடி வந்துட்டுப் போறார்…” என்று பாட்டிக்குப் பதில் சொன்னாள்.

 

    • “தேசிகாமணி நாடார்தானா? அவனுக்கு விசுவேசுவரன் கிட்ட என்னடீ காரியம் இருக்கும்…?”

 

    • “என்ன காரியம்னு தெரியலே, எப்பவாவது இப்படி இவரைத் தேடிண்டு வரது உண்டு. இவரும் அவரைத் தேடிப் போறதுதான்!”

 

    • “என்ன ஆச்சரியம்டீ இது?”

 

    • “இதுலே ஆச்சரியம்னு என்ன இருக்கு…?”

 

    • காமாட்சியம்மாளின் இந்தக் கேள்விக்கு நேரடியாக மறுமொழி கூறாமல் முத்து மீனாட்சிப் பாட்டி தெய்வ சிகாமணி நாடாரைப் பற்றி விவரிக்கத் தொடங்கினாள்.

 

    • எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் காமாட்சியம்மாள் சொன்னாள்:-

 

    • “நீங்க தான் இப்படியெல்லாம் சொல்றேள் பாட்டி! இவரானா அந்த மனுஷரைக் கொண்டாடாத நாள் கிடையாது…”

 

    • தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் புத்தகமும் கையுமாக இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியான பையன் ஒருவன் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 

    • அதைப் பார்த்துவிட்டுப் பார்வதி குரல் கொடுத்தாள்.

 

    • “பாட்டி! குமார் வந்தாச்சு…”

 

    • குமார் படியேறி உள்ளே நுழைந்ததும் பாட்டியைப் பார்த்தவுடனே அவள் சொல்லியிருந்த தகவல் நினைவு வந்தவனாக, “பாட்டி! நீங்க சொன்ன மாதிரி சைஸிலே வெண்கல உருளியே இப்போ வரதில்லையாம். பாத்திரக் கடைக்காரன் சொன்னான். ‘இது எவர்சில்வர் காலம். வெங்கலத்தையும் பித்தளையையும் தாமிரத்தையும் யாரும் விசாரிக்கிறதே இல்லே’ங்கிறான் அவன்” என்றான்.

 

    • “அவன் எதை வேணாச் சொல்லட்டும்டா குமார்! உங்கம்மாகிட்டக் கேட்டுப் பாரேன். நல்ல பால் வெங்கலத்திலே வார்த்த குண்டு அருக்கே, அதுலே பருப்பு வேகவச்சால் வர்ற ருசி ‘எவர்சில்வர்லே’ வருமா கேளு…!”

 

    • “வருமோ வராதோ பாட்டீ… அவன் சொன்னதை உங்ககிட்டச் சொன்னேன்.”

 

    • “அது சரிடா கொழந்தே! தினம் ஏன் இத்தனை நாழியாறது….? காலேஜ் நாலு மணிக்கே விட்டுடமாட்டாளோ…! புது நகரத்திலேயிருந்து சங்கரமங்கலத்துக்கு ரெயில் வந்து சேர மூணு மணி நேரமா ஆறது…”

 

    • “புது நகரம் டூ சங்கரமங்கலம் முழுசா இருபது மைல் கூட இல்லே பாட்டி! பத்தொம்பது மைல்தான். ஆனா இந்தப் பத்தொம்பது மைல்லே முப்பத்தொம்பது ஊர் சிறிசும் பெரிசுமா இருக்கு. நாலு ஊருக்குத்தான் ரயில்வே ஸ்டெஷன் போட்டிருக்கா. சட்டப்படி ரயில் அங்க மட்டும்தான் நிக்கணும். ஆனா, எல்லா ஊர்லேருந்தும் புதுநகரம் காலேஜூக்குப் பையன்கள் வந்து திரும்பறதுகள் அங்கங்கே செயினைப் பிடிச்சு இழுத்து ரெயிலை நிறுத்தி இறங்கதுங்கறது வழக்கமாப் போச்சு. காலம்பர இங்கேயிருந்து காலேஜூக்குப் போற ரெயில்லேயும் இதே தொல்லை. சாயங்காலம் திரும்பற ரயில்லேயும் இதே தொல்லை பாட்டீ!”

 

    • பாட்டிக்கு விவரம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற குமாரைப் பின் தொடர்ந்து பார்வதியும் வீட்டின் உள்ளே சென்றாள்.

 

    • “அப்பா இல்லையாடீ பாரு…”

 

    • “அப்பா பூமிநாதபுரம் போயிருக்கா… அது சரி… ரவி அண்ணா வரப்போறதா, அப்பா பாரிஸுக்கு லெட்டர் எழுதியிருக்கா… உனக்குத் தெரியுமோ…?”

 

    • “தெரியாது… எப்போ வரானாம்…?’

 

    • “எப்போன்னு சரியாத் தெரியாது… ஆனா ரவியண்ணா வரப் போறது நிச்சயமாக்கும்…”

 

    • சொல்லியபடியே கூடத்து மேடையிலிருந்த ஸ்டவ்வைப் பற்ற வைத்துக் காப்பி கலப்பதற்காகப் பாலைச் சுட வைத்தாள் பார்வதி. டிகாக்ஷன் ஏற்கெனவே போடப்பட்டு ஃபில்டரில் தயாராயிருந்தது.

 

    • அந்த வீட்டில் சமையலறைக்குள் காப்பி, டீ கலந்து சாப்பிட அநுமதி இல்லை. காப்பி, டீ சாப்பிடுகிறவர்கள் சர்மாவும் குமாரும் பார்வதியும் தான். வீட்டுக் கூடத்தில் அவர்கள் காப்பி, டீ போட்டுக் கொள்வதற்காகத் தனி ஸ்டவ் மேடை இருந்தது. அதையும் அவர்களே தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்டவ் – போன்ற மண்ணெண்ணெய் அடுப்புக்கள் சமையலறைக்குள் நுழையக்கூடாது. அடுப்பாகவும், கொடியடுப்பாகவும் பிரிக்கப்பட்டிருந்த புராதனமான மண் அடுப்பு மட்டுமே சமையலறை மேடையில் இருந்தது. அந்த மண் அடுப்பு அதன் சுற்றுப்புறச் சூழல், எல்லாவற்றையுமே ஒரு கோயில் கர்ப்பக்கிருகம் போலச் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள் காமாட்சி அம்மாள். கோயில் கர்ப்பக்கிருகத்துக்குள் கண்டிப்பான அனுமதி நிபந்தனைகளும், சேர்க்கக் கூடியவை – சேர்க்கக் கூடாதவை என்ற விதிகளும் இருப்பது போல அந்த வீட்டின் புராதனமான சமையலறைக்குள் விதிகள் ஆசார அநுஷ்டானங்கள் எல்லாம் இருந்தன. நேமநிஷ்டை தவறாத ஒரு முனிவரின் ஆசிரமத்தில் தங்க வந்தவர்கள் போல் மற்றவர்கள் அந்த வீட்டில் பழக வேண்டியிருந்தது.

 

    • நீண்ட காலம் வரை சர்மாவும் காப்பி, தேநீர் எதுவும் அருந்தாமல்தான் இருந்தார். அவர் காப்பி சாப்பிடத் தொடங்கிச் சில ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், அவருக்காகக்கூட அந்த வீட்டின் ஆசாரத்தையும், சமையலறை நிபந்தனைகளையும் காமாட்சி அம்மாள் தளர்த்தவில்லை. அவரையும், அவருடைய காப்பிப் பழக்கத்தையும் கூடத்து மேடையோடு தடுத்து நிறுத்திவிட்டாள்.

 

    • ரவியே பாரிஸ் போகுமுன் சென்னையில் வேலையாக இருந்தபோது ஒரு தடவை விடுமுறைக்குச் சங்கரமங்கலம் வந்திருந்த சமயத்தில், “அம்மா, விடிஞ்சு எந்திருந்தா கோபூஜை, துளசி பூஜை, விளக்கு பூஜைன்னு வீட்டையே கோயிலாக்கிட்டே நீ… இனிமே, நாங்கள்ளாம் வேற வீடு பார்த்துண்டு போயிட வேண்டியதுதான்…” என்று சிரித்துக் கொண்டே காமாட்சியம்மாளிடம் சொல்லியிருக்கிறான்.

 

    • ‘இங்கே நிற்காதே, அங்கே நிற்காதே, அதைத் தொடாதே… இதைத் தொடாதே’, என்று அம்மா பண்ணுகிற கெடுபிடிகளில் சலிப்படைந்து அப்படிச் சொல்லியிருந்தானே ஒழிய உள்ளுற அவனுக்கும் அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கும் காமாட்சியம்மாளின் ஆசார அனுஷ்யானங்களில் பெருமைதான். அந்த அம்மாளின் சத்திய விசுவாசத்தையும் இனிய கொள்கை முரண்பாடுகளையும் அவர்கள் மதித்திருக்கிறார்கள். சொல்லப் போனால் சர்மாவே பல விஷயங்களில் ஆசார அநுஷ்டானங்களைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்ததற்குக் காமாட்சியம்மாள் தான் மிகப்பெரிய தூண்டுதல்.

 

    • “காப்பியோட நிறுத்திக்குங்கோ… ஒண்ணொண்ணாக் கெடுத்துக்காதீங்கோ…” என்று அவள் அவரிடமே கேலி செய்யத் தவறுவதில்லை.

 

    • அதிகாலை இருள் பிரிந்தும் பிரியாமலும் இருக்கிற வைகறை வேளையில் நீராடிய ஈரக் கூந்தலும், திலகம் துலங்கும் பொன்நிற நெற்றியுமாக மல்லிகையும் சாம்பிராணியும் கற்பூரமும் துளசியும் மடிப்பாலும் தசாங்கமும் கமகமவென்று மணக்க அம்மா எதிரே தென்படும் போது சாட்சாத் ராஜ ராஜேஸ்வரியே வீட்டுக்குள் வந்து நிற்பது போல் ரவிக்குத் தோன்றும்.

 

    • அம்மாவின் ஆசார அநுஷ்டானங்கள் அசௌகரியமாக மற்றவர்களைச் சிரமப்படுத்தியபோது கூட அவை மங்கலமான-தவிர்க்க முடியாத அசௌகரியங்களாகத் தான் அவனுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கின்றன. அம்மா தோன்றி வளர்ந்து வந்த குடும்பம் அப்படிப்பட்டதென்று அவன் அறிவான்.

 

    • அதே அகஸ்திய நதி தீரத்தில் சங்கரமங்கலத்திலிருந்து சில மைல் தொலைவிலிருந்த பிரம்மபுரத்தில் ஒரு வைதிகமான குடும்பத்தில் கனபாடிகள் ஒருத்தரின் ஒரே மகளாகத் தோன்றிய பெண் வேறு எப்படி இருக்க முடியும்? அப்பா அளவிற்கு இல்லையென்றாலும் அம்மாவுக்கும் போதுமான அளவு சாஸ்திரஞானம், சமஸ்கிருத ஞானம், தமிழ்த் தோத்திரப் பாடல்களில் ஞானம் எல்லாம் உண்டு. தன் இளமையில் ஊரில் இருந்தபோது, அம்மாவின் ஆசாரங்களால் விளையும் அசௌகரியங்களுக்கு ‘ஹோலி – இன்கன்வீனியன்ஸ் – ஆசார அசௌகரியங்கள்’ என்று செல்லமாக ஒரு பெயரே சூட்டியிருந்தான் ரவி. வீடே அந்த அசௌகரியங்களில் சிறைப்பட்டிருந்தது. ஆனாலும் அதிலிருந்து விடுபட விரும்பாமல் அதை அப்படியே தொடர விரும்பியது.

 

    • ரவியின் கடிதத்தை வீட்டில் யாரும் அறிய விடாமல் சர்மா தடுத்தது காமாட்சியம்மாளுக்குப் பயந்துதான். ரவி ஒரு பிரெஞ்சு யுவதியைக் காதலிக்கிறான் என்ற உண்மை தனக்கும் முன்னதாக ஏற்கெனவே எந்த இரண்டு பேருக்குத் தெரியுமோ, அந்த இரண்டு பேருக்கு மட்டுமே அவராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அந்தப் பிரெஞ்சு யுவதியுடன் அவன் சங்கரமங்கலத்துக்குப் புறப்பட்டு வரப் போகிறான் என்பதை அவர் வேறு யாருக்கும் தெரிவிக்கத் தயங்கினார்.

 

    • இதில் அவருக்குப் பல தர்ம சங்கடங்கள் இருந்தன. வேணு மாமாவும், வசந்தியும், ரவியையும் அவனுடைய பிரெஞ்சுக் காதலியையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாலும் கூடச் சொந்த ஊரில் சொந்த வீடு இருக்கும்போது… ஏதோ ஓர் அந்நிய நாட்டு யுவதியுடன் வருகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ரவியை மற்றொருவர் வீட்டில் தங்க வைப்பது எப்படி நியாயமாயிருக்கும் என்றெண்ணி அவர் மனம் தயங்கியது.

 

    • சற்றே லௌகீகமாகவும் கூட இந்த விஷயத்தில் அவர் யோசித்தார். அவன் மேல் உயிரையே வைத்திருக்கிற அந்தப் பெண்தான் அவனைப்பற்றி என்ன நினைப்பாள்? இன்னொருவர் வீட்டில் தங்கிக்கொள்ளக் காரணமென்று அவன் தான் அந்தப் பெண்ணிடம் எதைச் சொல்ல முடியும்? ‘உங்கள் நாட்டில் காதல் செய்வது இவ்வளவு பெரிய, தண்டனைக்குரிய காரியமா? ‘ என்று அவள் அவனைத் திருப்பிக் கேட்டால் அவன் என்ன பதில் சொல்லுவான்? என் வீட்டில் நான் தங்குவதற்குப் போதுமான வசதிகள் இல்லை. அதனால் இங்கே தங்க நேர்ந்தது என்று அவன் சொல்ல உன் வீட்டின் வசதியின்மையே எனக்குப் போதும். அங்கு போகலாம்’ என்று அவள் பதில் கூறிவிட்டால் என்ன செய்வது? தூர தேசத்துக்குப் போய்விட்டுப் பல வருஷங்களுக்குப் பின் ஊர் திரும்புகிற பிள்ளையை இத்தனை தயக்கங்களோடும் வரவேற்க நேர்கிறதே என்று மனம் குழம்பினார் அவர். அவன் ஊருக்கு வருவதை ஒரு மாதம் தள்ளிப்போட்டால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவுக்கு வரலாமே என்று அவருக்குத் தோன்றியது. அதனால் தான் வேணு மாமாவைப் பார்த்து விட்டு வீடு திரும்பியதுமே ‘அந்த ஏரோகிராமைத் தபாலில் போட வேண்டாம்’ என்று தன் பெண் பார்வதியிடம் வசந்திக்கு அவசர அவசரமாகச் சொல்லி அனுப்பிவிட்டுப் பூமிநாதபுரம் புறப்பட்டிருந்தார் சர்மா.

 

    • பூமிநாதபுரத்திற்குச் சென்ற போதும், அங்கு இருந்த போதும் இரவு நேரங்கழித்துத் திரும்பிய போதும் சர்மாவுக்குத் தாம் ரவிக்கு எழுதிய கடிதத்தின் தொடர்பான சிந்தனைதான். அவர் இரவு வீடு திரும்பிய போது பார்வதி தூங்கிப் போயிருந்தாள். காலையில் அவர் அகஸ்திய நதியில் நீராடி வீரு திரும்பிப் பூஜை புனஸ்காரங்களை முடித்துக் காப்பி மேடையை அணுகிய போது பார்வதி அந்த விவரங்களைத் தந்தையிடம் தெரிவித்தாள்.

 

    • “அப்பா! நான் ஓடிப்போய்ச் சொல்றதுக்குள்ளே வசந்தி அக்கா அந்த லெட்டரைப் போஸ்ட் பண்ணிட்டா. அப்புறம் நீங்க பூமிநாதபுரம் போயிருந்தப்போ இறைமணி முடி உங்களைத் தேடிண்டு வந்தார். இன்னிக்குக் காலம்பர மறுபடி வரேன்னார்…”

 

    • “இறைமணி முடியில்லே! இறை முடிமணீன்னு சொல்லு”.

 

    • “இறை மணிமுடி.”

 

    • “இறை மணி முடியில்லேடீ! இறைமுடி மணி….அதாவது தெய்வ-சிகா-மணியங்கறதைத் தெய்வ-இறை, சிகா – முடி, மணி-மணின்னு நீ வரிசைப் படுத்திக்கணும்.”

 

    • “எனக்கு இப்படித்தான் சொல்ல வருது அப்பா!’

 

    • காப்பியைக் குடித்து விட்டு அவர் தெருத் திண்ணைக்கு வரவும் இறைமுடிமணி அவரைத் தேடி வரவும் சரியாயிருந்தது.

 

    • “வணக்கம் விசுவேசுவரன்…”

 

    • “யாரு… தேசிகாமணியா…வா…”

 

    • “நேற்றே வந்தேன்… நீ பூமிநாதபுரம் போயிட்டேன்னு பாப்பா சொல்லிச்சு…”

 

    நீராடி நுனியில் முடிந்த ஈரத்தலை, நெற்றியிலும் மார்பிலும் பளீரென்று விபூதி, பஞ்சகச்சம், கழுத்தில் நவமணி மாலை சகிதம் ஒரு பரம வைதிகரும் உடம்பில் இருளாக மின்னும் கருநிறச் சட்டையும் வெட்டரிவாள் மீசையும் குண்டு முகமுமாக ஒரு சுயமரியாதைக்காரரும் அந்த அதிகாலையில் அக்ரகாரத்தில் வீட்டுத் திண்ணையில் எதிரெதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது தெருவில் போவோர், வருவோர் கவனத்தை எல்லாம் கவர்ந்தது.

 

1 thought on “தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 15தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 15

அத்தியாயம் 15 ஒரு புராதனமான வைதீகக் கலாசாரம் நிறைந்த தென்னிந்திய வீடும் அதன் அசௌகரியங்களும், முரண்டுகளும் மிக்க குடும்பத் தலைவியும் பழைய தழும்பேறிய பழக்க வழக்கங்களும், கமலியைப் போன்ற ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்குப் பெரிய இடையூறுகளாக இருக்கும் என்று சர்மா எதிர்பார்த்ததற்கு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21

அத்தியாயம் 21 ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 28தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 28

அத்தியாயம் 28 மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடிய போது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல்