சாவியின் ஆப்பிள் பசி – 31

ற்று தலை குனிந்திருந்த சாமண்ணா நிமிர்ந்தான். “என்ன சொல்றே சிங்காரம்?” என்றான்.

“அவங்க அந்த்கோஷ் கூடப் போயிட்டிருக்காங்க” என்றான் சிங்காரப் பொட்டு.

“சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு” என்றான்.

சிங்காரப் பொட்டுக்குச் சொல்வது போல் தனக்குத் தானே ஆறுதலாகக் கூறியது போல் இருந்தது அது.

பேச்சை மாற்றி சாமண்ணாவை உற்சாகப்படுத்தும் நோக்கில், “உங்க நடிப்பை ஸ்டூடியோக்காரங்களெல்லாம் ரொம்பப் பாராட்டறாங்க” என்றான்.

இதனால் அண்ணனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படாது என்பது அவனுக்குத் தெரியும். அந்த வார்த்தைகள் சாமண்ணாவை மேலும் ஆழ்ந்து எதையோ நினைக்க வைத்தன.

சிங்காரம் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு விடைபெற்றான்.

அன்றிலிருந்து தினமும் அவன் வந்தான். ஊர் உலகத்தைப் பற்றி இரண்டு வார்த்தை பேசினான். சற்று நேரம் இருந்து விட்டுத் திரும்பினான்.

சாமண்ணா மௌனங்களில் சோகத்தைக் கரைத்துக் கொண்டிருந்தான். அதிகம் பேசுவதில்லை. பேசினால் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நின்றன. கண்கள் வெறுமையாகப் பார்த்தன. புன்னகைகள் வறண்டு வெகு நாட்களாயின.

ஆனால் பார்வை மட்டும் வாசலையே நோக்கி இருந்தன. ஒரு சின்ன நிழல் பட்டாலும் உடம்பு சிலிர்த்தது. பிறகு அந்த நிழல் ஒரு நர்ஸ், அல்லது சிப்பந்தியாக மாறும்போது அவன் முகம் வாடியது.

இன்னும் அவன் கண்கள் சுபத்ராவைத் தேடி அலைவது சிங்காரத்துக்குத் தெரியும். அவள் இனி வரமாட்டாள் என்பது சிங்காரத்துக்குத் தெரியும். சாமண்ணா நம்பிக்கையோடு அவள் வருவாள் என்று காத்திருப்பதும் தெரியும்.

ஓர் இரவு சிங்காரம் புறப்படும்போது சாமண்ணா அவனை அழைத்தான். பத்திரமாக ஒட்டியிருந்த ஒரு கவரை அவனிடம் கொடுத்தான்.

“பெட்டியிலே போட்டுடட்டுமா அண்ணே?” என்று கேட்டுக் கவரை இப்படியும் அப்படியும் திருப்பி விலாசம் இல்லை என்பதை உணர்ந்தான்.

சிங்காரம் தலைநிமிர, “அவகிட்டே நேரிலேயே கொடு” என்றான். வார்த்தை மெல்லிய குரலில் வந்தது.

“சுபத்ராவிடமா?” என்றான் சிங்காரம்.

“ஆமாம்!” என்று கூறாமல் அந்த அர்த்தத்தில் தலையாட்டினான்.

சிங்காரப் பொட்டு மறுநாளே அதை சேட் மூலம் சுபத்ராவுக்குக் கொடுத்தனுப்பி விட்டான்.

அன்றிலிருந்து மாலை சிங்காரம் வரும் போதெல்லாம் சாமண்ணா ஆவலோடு எதிர்பார்த்தான். அவன் கண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டன. “ஏதாவது பதில் உண்டா?”

அதை எதிர்பார்த்து, சிங்காரமும் சொல்லிக் கொண்டிருந்தான். “இல்லை, ஊரிலே இல்லை போல இருக்கு!”

சாமண்ணா ஆஸ்பத்திரியை விட்டுப் புறப்பட இரண்டு நாட்களே இருந்தன. சேட் அவனைப் பார்ப்பதற்கு வந்தார். அவன் கைகளைப் பற்றித் தழதழப்போடு பேசினார்.

“சேட்ஜி, என்னை எல்லாரும் மறந்துட்டாங்க சேட்ஜி! நீங்கள் தான் எனக்கு ஆறுதலா வந்து போய்க்கிட்டிருக்கீங்க” என்று கண்ணீர் பெருக்கினான்.

“சாமு! எல்லாரும்னு சொல்லாதீங்க! எல்லோரும் உங்களை நினைவு வச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. எனக்கு வசதி இருக்கு, தவிர கடமை இருக்கு! நான் உங்களைப் பார்க்க ஓடி வந்துடறேன். அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ?”

“அப்படிச் சொல்லாதீங்க! வசதி இருக்கறவங்களுக்கு மனசு இல்லை… அவ்வளவுதான்” என்றான் சாமண்ணா.

“எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு நபர்தான் வசதி, நேரம், கடமை மூணும் இருந்தும் உங்களைப் பார்க்க வரல்லை. அதை நான் யாருன்னே சொல்ல வேணாம்!” என்றார்.

சாமண்ணாவின் புருவம் உயர்ந்தது.

“உலகத்திலே யாரால் அதிக துக்கம் வரும்னு சொல்லுங்க?” என்று கேட்டார்.

சாமண்ணா யோசித்தான். “தெரியலையே, சேட்ஜி!” என்றான்.

“இது தெரியலையா? உலகத்திலே யார் மீது அதிக அன்பும் பாசமும் வைக்கிறோமோ அவர்களாலேதான் துக்கம் நிறைய வரும்னு சொல்லுவாங்க” என்றார் சேட்!

சாமண்ணா பேசவில்லை.

“பந்தம் வச்சுக்கக் கூடாது.”

அவன் கண்களில் கண்ணீர் பீறிட்டது.

“பந்தம் வச்சுக்கிற இடத்திலே இரண்டு பேருக்கும் நோக்கம் சரியாயிருக்கான்னு பாக்கணும். உங்க நோக்கம் என் நல்வாழ்க்கை மேலே இருந்து என் நோக்கம் உங்க பணத்து மேலே இருக்கக் கூடாது. இருவர் நோக்கமும் சம நோக்கா இருக்கணும். சம அளவா இருக்கணும். தாரதம்மியம் இல்லாம இருந்தா அது உன்னதமான நட்பா இருக்கும்.”

சாமண்ணா இன்னும் தவித்தான்.

“நான் சொல்லலை; பெரியவங்க சொல்லி இருக்காங்க! சாமண்ணா, இதெல்லாம் நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. நீங்க தவறான இடத்திலே அன்பு செலுத்தி மனசைக் கெடுத்துக்கிட்டீங்க! அதை மறந்துருங்க! ஊஹூம் வேண்டாம்! ஏதோ போன இடத்திலே மிகுந்த அர்த்தமில்லாத பாசம்னு நினைச்சு விட்டுடுங்க! இல்லாட்டி இவ்வளவு இழைஞ்சவங்க, இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு நடை வந்து பார்த்திருக்க மாட்டாங்களா?”

சாமண்ணா தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

“லெட்டர் எழுதி விட்டீங்களே! ஒரு வார்த்தை பதில் எழுதினாங்களா? உடுங்க! உங்களுக்கு அந்தப் பாசம் வந்திருக்க வேணாம். வெளுத்ததைப் பால்னு நினைச்சுட்டீங்க! இங்கே இந்த நகரத்திலே இங்கிலீஷ்காரன் நினைப்பு இறங்கியாச்சு. விடுங்க! ஒரு கெட்ட நினைவு! கை மாறிப் போனப்புறம் இன்னும் நினைவு வச்சா நாம்பதான் பைத்தியக்காரங்க!”

சாமண்ணாவின் கை சேட் கையோடு இறுகியது. வார்த்தை வரவில்லை. தேவையுமில்லை! எல்லாமே பளிச்சென்று வெயில் பட்டுத் துலங்குவது போல் சேட் விளக்கிவிட்டார்.

சாமண்ணாவுக்குக் குமுறிக் கொண்டு அழுகையே வந்தது.

ஓர் ஆசுவாச நிலை வந்ததும், “சாமு!” என்று மீண்டும் ஆரம்பித்தார் சேட். “மனசை ஆற்றிக்கிடுங்க. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகப் போறீங்க. உங்களுக்கு இங்கே வீடு எடுத்துத் தர்றேன். இன்னும் ஒரு மூணு மாசம் தங்குங்க. ஊருக்குப் போறதைப் பற்றி அப்புறம் நினைக்கலாம்” என்றார்.

“இங்கே இருக்க வேணாம் சேட்ஜி! நான் உடனே புறப்படறேன். என்னை ரயில் ஏற்றி விடுங்க!” என்றான் அவன்.

“அப்படியா சொல்றீங்க? ஒரே ஒரு மாசம் இருங்க! உடம்பு தேறணுமில்ல? நாங்களும் உங்களைக் கவனமாப் பார்த்துப்போம்.”

“இல்லே சேட்! ஒரு நாள்தான்! ஒரே ஒரு நாள் தான் இருப்பேன். அதுகூட ஏன்னு சொல்லிடறேன். நான் இங்கு வந்த போது பேலூர் மடம், கல்கத்தா காளி எல்லாம் காட்டறதாச் சொன்னீங்க. அப்போ எனக்கு அதிர்ஷ்டம் இல்லாமப் போச்சு! இப்போ பார்த்துடறேன். கண் கெட்ட பிறகு நமஸ்காரம் என்பாங்க! நான் கால் கெட்ட பிறகு பண்றேன். அடுத்த நாள் வண்டி! தயவு செய்து சேட்ஜி, எனக்கு இதை ஏற்பாடு பண்ணி வையுங்க.”

சாமண்ணாவின் ரணப்பட்ட நெஞ்சத்துக்குக் காளி கோயிலும் பேலூர் தரிசனமும் இதமாக இருந்தன.

மறுநாளே சென்னைக்கு ரயில் ஏறி விட்டான். ராமசாமி என்கிற துணையை சேட் ஏற்பாடு பண்ணியிருந்தார்.

கூடைகளாகப் பழங்கள் ஏறியிருந்தன.

சேட்ஜியே அவனைத் தாங்கலாகத் தூக்கிச் சென்று உள்ளே ஸீட்டில் உட்கார வைத்த பாங்கு அவன் மனத்தைத் தொட்டது.

சேட்ஜி எவ்வளவு பெரிய பணக்காரர்! நினைத்தால் பாதி கல்கத்தாவை சாயங்காலத்துக்குள் வாங்கிவிட முடியும்!

சிங்காரப் பொட்டு வந்திருந்தான். கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான்.

“விடுங்க, சேட்ஜி! நானும் ஊருக்குப் போயிடறேன். அண்ணனைக் கவனிக்க அங்கே ஆளு இல்லை. விடுங்க” என்றான்.

“சிங்காரம்! சொன்னாக் கேளு! ஊருக்குப் போனா எல்லா நேரமும் சாமு பக்கத்திலே இருப்பீங்க! அவ்வளவுதானே! அப்புறம் சாமுவுக்குச் சம்பாதிக்கிறது யார்? அவரை ஆயுசு வரைக்கும் வைத்துக் காப்பாற்ற ஒரு வருவாய் வேண்டாம்? ஆண்டவன் புண்ணியத்திலே நீங்க இருக்கீங்க அதுக்கு! அண்ணனை அப்படி உள் அன்போடு நேசிக்கிறீங்க! ரெண்டு மூணு படம் பண்ணிக் கொடுங்க! சாமண்ணா உங்களுக்குச் செஞ்ச நன்றியை மறக்காம அவருக்குக் கடைசி வரை உபகாரியாய் இருங்க! என்ன நான் சொல்றது?” என்று சாமண்ணாவைப் பார்த்துத் திரும்பினார் சேட்.

சாமண்ணா சன்னலோரம் அமர்ந்திருந்தான். கம்பியை விரலால் பிடித்திருந்தான். அவன் விழியில் ஒரு திவலை ஆடிற்று. அதன் முன் பிளாட்பாரமும், அதில் உள்ள யாவருமே நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

தலையை மட்டும் ஆமோதிப்பில் ஆட்டினான். இன்னும் கூட அவன் அடித்தளத்தில் ஒரு நினைப்பு!

இந்தச் சமயத்தில் சுபத்ரா வந்து கையைக் காட்டி, “போய் வாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொல்வாளோ என்று.

கண்ணைத் துடைத்தான். ஹௌரா ஸ்டேஷனின் பெருத்த இரும்புக் கூடாரத்தைப் பார்த்தான். உள்ளே பிளாட்பாரங்களைப் பார்த்தான்.

எல்லாருக்கும் எத்தனை பேர் வந்து வழி அனுப்புகிறார்கள்! அவனுக்கும் எத்தனை பேர் வந்திருக்க வேண்டியது!

கால் மட்டும் சரியாக இருந்து அவன் ஊருக்குத் திரும்பியிருந்தால், பிளாட்பாரத்தில் கல்கத்தாவே கூடியிருக்கும்.

சுபத்ரா சன்னல் ஓரம் நின்று சோகத்துடன் பேசுவாள். சுற்றிலும் ஒரு காமிரா கூட்டமே அலையும்.

வந்த போது அவனுக்குக் கிடைத்த விமரிசை என்ன? இப்போது நடக்கும் மௌனப் பிரிவு உபசாரம் எப்படி?

மணி அடித்தது. சேட்ஜி கையைக் காண்பித்தார்.

ரத்தினங்கள் போல் கண்கள் சொட்ட சாமண்ணா கையைக் காண்பித்தான்.

“அண்ணே, விட மாட்டேன் அண்ணே!” என்று சிங்காரப் பொட்டு பெட்டிக்குள் பாய்ந்தான்.

“அண்ணே! உங்க கூடத்தான் வருவேன். இங்கே வந்தது உங்களைப் பார்க்கத்தான். இடையிலே வந்த சினிமா வேணாம். நீங்க தான் வேணும்” என்றான்.

அவனை அத்தனை நேரமும் நிறுத்தி வைத்திருந்த சேட்ஜியும் சட்டென்று படியேறி உள்ளே புகுந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 72கல்கியின் பார்த்திபன் கனவு – 72

அத்தியாயம் 72 தாயும் மகனும் “மகாராணி அகப்பட்டுவிட்டார்” என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, “குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!” என்று

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

யுக சந்தி – ஜெயகாந்தன்     கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். “பாட்டி…பாட்டி’ பையைத் தூக்கியாரட்டா? ஓரணா

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 09வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 09

சமயற்காரர், “மகாராஜனே அந்தப் பணத்தை நான் என் கையாலும் தொடுவேனா? தொட்டிருந்தால் சட்டப்படி அது குற்றமாய் விடாதா? பிறருடைய பொருளை எவனொருவன் சுய நலங்கருதி அபகரிக்கிறானோ அவன் சட்டப்படி குற்றவாளியா கிறான் அல்லவா? ஆகையால், நான் என் சுய நலத்தைக் கருதவே