Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 3

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 3

அத்தியாயம் 3

 

    • வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-

 

    • “ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும் அழகிய பிணைப்புத்தான் இந்திய வாழ்வின் சிறப்பு என்பதாக அவாள்ளாம் நினைக்கறா… இந்து அவிபக்த குடும்பம்ன்னு நாம் சொல்றோமே – இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்பு – இதன் பந்த பாசங்கள் எல்லாம் அவாளுக்குப் புதுமை. அவா கண் காணவே நாம் அப்பாவும் பிள்ளையும் எலியும் பூனையுமா அடிச்சிண்டு நிக்கப்படாது.”

 

    • இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, தெருப்பக்கம் பார்த்தவாறே நாற்காலியில் அமர்ந்திருந்த வசந்தி, “மாமா! உங்க பொண் பாரு, உங்களைத் தேடிண்டு வரா” என்று சர்மாவிடம் கூறினாள். சர்மா தெருப்பக்கம் திரும்பினார். வசந்தி எதிர்கொண்டு போய்ப் பாருவை அழைத்து வந்தாள்.

 

    • “அப்பா! அந்தப் பூமிநாதபுரம் மாமா தேடி வந்தா. இன்னிக்கு ‘லக்கினப் பத்திரிகை’ எழுதணுமாம். ரெடியா இருக்கச் சொன்னார். இன்னம் ஒரு மணி நேரத்துலே வந்து அழச்சிண்டு போறாராம்.”

 

    • “யாரு ராமசாமியா… வந்திருந்தான்? ஓகே…? இன்னிக்குச் சாயரட்சை பூமிநாதபுரம் நிச்சயதார்த்தத்துக்குப் போகணும்கிறதையே மறந்துட்டேன்.”

 

    • “இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படறீர்… பூமிநாதபுரம் என்ன இங்கேயிருந்து அம்பது மைலா, அறுபது மைலா…? அகஸ்திய நதிப் பாலத்தைத் தாண்டினா அக்கரையிலே தானே இருக்கு…? கூப்பிடு தூரம். சூரியன் மலைவாயிலே விழறப்போ புறப்பட்டீர்னாப் போறுமே…” என்றார் வேணு மாமா.

 

    • சர்மாவின் பெண் பார்வதி பாவாடை தாவணி அணிந்திருந்தாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுக்குள்ளேயே அதைவிட இரண்டு மூன்று வயது அதிகம் மதிக்கிற மாதிரி ஒரு வளர்த்தி. துறுதுறுவென்று களையான முகம். ‘எச்சில் விழுங்கினால் கழுத்தில் தெரியும்’ – என்பார்களே அப்படி நிறம். கருகருவென்று மின்னும் நெளியோடிய கூந்தலும் இலட்சணமான முகமும் சேர்ந்து ஒருமுறை பார்த்தவர்களை இன்னொரு முறையும் பார்க்க ஆசைப்பட வைக்கிற அழகு பார்வதிக்கு. வசந்தி பார்வதியை விசாரித்தாள்:

 

    • “ஏண்டி…? அதுக்குள்ளேயே ஸ்கூல் விட்டாச்சா…? இன்னும் மணியாகலியே?”

 

    • “நாலஞ்சு டீச்சர் லீவு மாமி! அதுனாலே லாஸ்ட் பீரியட் கிடையாதுன்னு விட்டுட்டது.”

 

    • பார்வதியைத் தழுவினாற்போல உள்ளே அழைத்துச் சென்றாள் வசந்தி.

 

    • “இவ இந்த வருஷம் ஸ்கூல் ஃபைனல் முடிக்கிறா. குமார் பி.ஏ முதல் வருஷம் படிக்கிறான். காலேஜூக்காக அவன் தினசரி இருபது மைல் இரயில் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கு. நாள் தவறாமே இருட்டி ஏழு ஏழரை மணிக்குத்தான் வீடு திரும்பறான். பொண்ணை நான் காலேஜ் படிப்புக்கு அனுப்பப் போறதில்லே. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் கல்யாணத்துக்கு வரன் பார்க்கறதாத் தான் உத்தேசம்…”

 

    • “உள்ளூர்லியே காலேஜ் இருந்தாப் படிக்க வைக்கலாம். பெண் குழந்தைகள் – வெளியூர் போய் வர்றது சாத்தியமில்லே. பக்கத்து டவுன்லே இருக்கிற ஒரே காலேஜூம் கோ-எஜுகேஷன் காலேஜ்… ஆணும் – பொண்ணும் சேர்ந்து படிக்கிற காலேஜ். உமக்குப் பிடிக்காது.”

 

    • “எனக்குப் பிடிக்கும் பிடிக்காதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். வித்தைங்கிறது ஞானத்தையும் விநயத்தையும் வளர்க்கணும். இன்னிக்கு அது பெரும்பாலும் அஞ்ஞானத்தையும், முரட்டுத்தனத்தையும் தான் வளர்க்கிறது. ஒவ்வொரு பையனும் தன்னைச் சினிமாவிலே வர்ற ஹீரோவா நினைச்சிண்டு முக்காவாசி நாழி ஏதோ ஒரு தினுசான சொப்பனத்துலே வாழறான். ஒவ்வொரு சின்ன வயதுப் பெண்ணும் தன்னைச் சினிமா ஹீரோயினா நினைச்சிண்டு சீரழியறா. நிஜமா? இல்லையா…? என்ன நான் சொல்றது…?”

 

    • “நீர் சொல்றதெல்லாம் இன்னிக்கு எடுபடாது சர்மா! ஒரே வார்த்தையிலே ‘சுத்த மடிசஞ்’சீன்னு உம்மை ஒதுக்கிடுவா!”

 

    • “அது தான் இல்லை! நீங்க தான் அப்பிடிச் சொல்றேள்! நம்மூர்ப் பகுத்தறிவுப் படிப்பகம் இறை முடிமணி இருக்கானே அவனும் இந்த விஷயத்திலே என்னோட ஒத்த அபிப்பிராயம் உள்ளவனா இருக்கான். எதிர்காலத்தை மறந்த – உழைப்பாற்றலை இழந்த – வெறும் போலி உல்லாச நிகழ்காலத் திளைப்பு இன்றைய இளைஞர்களிடையே காணப்படுகிறது. அவர்கள் கடினமான உடலுழைப்புக்கும் இலாயக்கில்லாமல், நுணுக்கமான மூளை உழைப்புக்கும் இலாயக்கில்லாமல் ஏனோ தானோ என்று தயாராகிறார்கள். இது அபாயமானதுன்னு ஒவ்வொரு பிரசங்கத்திலேயும் அவன் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான்.”

 

    • “யாரு…? தெய்வசிகாமணி நாடார்தானே? அவருக்கும் உங்களுக்கும் ஒத்த அபிப்பிராயம் ஒண்ணு இருக்குங்கறதே ஆச்சர்யமான விஷயந்தான் சர்மா…!”

 

    • “அதென்னமோ ஆயிரம் அபிப்பிராய பேதம் இருந்தாலும் சில பொது அபிப்பிராயங்களாலே நாங்க இன்னும் சிநேகிதத்தோட தான் பழகறோம். இறைமுடிமணி யோக்கியன். நாணயஸ்தன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன். பரோபகாரி…”

 

    • “உம்மை மாதிரி ஒரு பரம ஆஸ்திகர் அவரை மாதிரி ஒரு தீவிர சுயமரியாதைக்காரரை இத்தனை தூரம் சிலாக்கியமாச் சொல்றதே பெரிய ஆச்சரியம்தான்….!”

 

    • “நாஸ்தீகாள் யோக்கியமுள்ளவாளாயிருக்கக் கூடாதா என்ன…?”

 

    • “சரி சரி! நீரும் வந்த காரியத்தை மறந்துட்டீர். நானும் பேசவேண்டிய விஷயத்தை மறந்துட்டேன். ஆஸ்தீக – நாஸ்தீகத் தர்க்கங்களை இன்னொரு நாள் வச்சுப்போமே…? இப்போ நாம பேச வேண்டியதைப் பேசலாம்.”

 

    • சர்மா வேணு மாமாவுக்கு அருகே நெருங்கி வந்து குரலை முன்னினும் தணித்துக் கொண்டு பேசினார். “இந்தப் பிள்ளையாண்டான் பண்ணியிருக்கிற சுந்தர கோளத்திலே இனிமே என் பொண்ணுக்கு நல்ல இடத்துலே சம்பந்தம் கிடைக்குமோ கிடைக்காதோன்னு கூடப் பயமாயிருக்கு. குமாரைப் பொறுத்த மட்டுலே கவலையில்லை. அவன் ஆண்பிள்ளை. கொஞ்ச நாள் கல்யாணம் ஆகாமே இருந்தாக்கூடப் பெரிய பழி ஒண்ணும் வந்துடாது. தவிர அவனோட காலேஜ் படிப்பு முடியறத்துக்கு இன்னும் ரெண்டு மூன்று வருஷம் ஆகும். பொண் விஷயம் அப்பிடி இல்லே. ஒரு குடும்பத்திலே ஆண்கள் பண்ற ஒவ்வொரு தப்பும் அந்தக் குடும்பத்திலே கல்யாணத்துக்கு நிக்கிற பொண்களைன்னா பாதிக்கிறது?”

 

    • “திரும்பத் திரும்பப் பழைய ராமாயணத்துக்கே போறீரே…? ரவி என்னமோ பெரிய மகாபாதகத்தைப் பண்ணிட்ட மாதிரியும் அதுனாலே உம்ம குடும்பமே முழுகிடறாப்பிலேயும் பேசறதை முதல்லே விட்டுடும். இது இருபதாம் நூற்றாண்டுங்கறதை ஞாபகப்படுத்திக்கணும் நீர். இந்த நூற்றாண்டிலே இரயில் பிரயாணம், விமானப் பிரயாணம், தேர்தல், ஜனநாயகம், சோஷலிஸம் இதெல்லாம் போலக் காதலிப்பதும் சகஜமான விஷயம்.”

 

    • “இந்தச் சங்கரமங்கலம் மாதிரியும், பூமிநாதபுரம் மாதிரியும் ரெண்டுங்கெட்டான் கிராமங்கள்ளே அது இன்னும் சகஜமான விஷயமாகல. விசேஷமா என் குடும்ப பாரம்பரியத்துக்கு ஒட்டாதது அது. அதனாலே தான் படிப்பைப் பாதியிலே நிறுத்தினாலும் பரவாயில்லேன்னு இந்தப் பாருவுக்கு ஒரு நல்ல இடமாகப் பார்த்து உடனே கல்யாணத்தைப் பண்ணிட்டா என்னன்னு தோணறது… அவன் இங்கே அந்தப் பிரெஞ்சுக்காரியோட வந்து கூத்தடிக்கிறதுக்குள்ளே இந்தப் பொண்ணு கல்யாணத்தைப் பண்ணி இவளைப் புருஷனோட புக்காத்துக்கு அனுப்பிச்சுட்டா ரொம்பச் சிரேஷ்டமாயிருக்கும். இந்த நிமிஷத்திலே இது தான் என் மனசிலே படறது.”

 

    • “இதென்ன பொம்மைக் கல்யாணமா…?அல்லது மரப்பாச்சிக் கல்யாணமா…? பச்சைக் குழந்தையைப் போய்ப் படிப்பையும் கெடுத்துட்டு மணையிலே உட்காத்தித் தாலி கட்டச் சொல்றேங்கறீரே…? உமக்கு ஈவு இரக்கமே கிடையாதா ஓய்; கேக்கறேன்?”

 

    • “பால்ய விவாகம் ஒண்ணும் விநோதமில்லியே…? எனக்கும் அப்படித்தான் கல்யாணம் ஆச்சு. உமக்கும் அப்படித்தான் ஆச்சு…”

 

    • “அதனாலே இவளுக்கும் அப்படித்தான் ஆகணும்னு நிர்ப்பந்தமா அல்லது தலையெழுத்தா…?”

 

    • “என்னோட பிள்ளையாண்டான் இப்போ பண்ணியிருக்கிற கூத்தைப் பார்த்து அப்படித் தோணித்துன்னு தானே சொன்னேன்.”

 

    • “அதெல்லாம் ஒண்ணும் தோண வேண்டாம். மேலே ஆகவேண்டிய காரியத்தைக் கவனியும். முதல்லே சுமூகமா அவனுக்கு ஒரு பதில் எழுதும், அப்புறம் அவா ரெண்டு பேரும் இங்கே வந்தால் தங்கறத்துக்குத் தகுந்த மாதிரி நீர் சில ஏற்பாடுகளைப் பண்ணணும்…”

 

    • “என்ன பண்ணணும்கறேள்…?”

 

    • “பிரெஞ்சுக்காராளுக்குப் ‘பிரைவஸி’ ரொம்ப முக்கியம். மேல் நாட்டுக்காரர் எல்லோருமே பிரைவஸியைக் கவனிப்பான்னாலும் பிரெஞ்சுக்காரா ரொம்ப மென்மையான மனசுள்ளவா… இங்கிதம், நாசூக்கு இதெல்லாம் அதிகம். சங்கரமங்கலம் அக்ரகாரம் நடுத்தெருவிலே இருக்கிற உங்க பூர்வீக வீடோ ராணி மங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரி இருக்கு. கீழ் வீட்டில் ஒரே பெரிய கூடம். மச்சும் கூட ஒரு பெரிய ஹால் தான். பாத்ரூம்னு எதுவுமே இல்லே. கிணத்தடிதான் பாத்ரூம். நீரோ, மாமியோ கிணத்தடியிலே குளிக்கிற வழக்கமே இல்லே. சூரியோதயத்துக்கு முன்னாடியே அகஸ்திய நதிக்குப் போயிட்டு வந்துடறேள். இந்த ஊர்லே பிறந்து வளர்ந்த உம்ம பிள்ள ரவியே இப்போ வர்றப்பப் பாருமே, முன்னே மாதிரி இனிமேக் கிணத்தடியிலேயோ, ஆத்தங்கரையிலேயோ குளிக்க மாட்டான். பாத்ரூம்கிறது ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிப் போயிருக்கும் அவனுக்கு…!”

 

    • “அவாளுக்காக இனிமே நான் புதுசா ஒரு வீடே கட்டணும்கிறேளா…!”

 

    • “நான் அப்பிடிச் சொல்லலே. மாடியிலே ஒரு தனி ரூம் போடுங்கோ -அதை ஒட்டினாற்போல ஒரு அட்டாச்டு பாத்ரூமும் ஏற்பாடு பண்ணிடுங்கோ. இதை நீங்க கமலிக்காகப் பண்ணறதா நினைச்சுக்க வேண்டாம். உங்க பிள்ளையாண்டானே இப்போ இதை அவசியம்னு நினைப்பான். என் பிள்ளை சுரேஷ் ரெண்டு தரம் இங்கே வந்து ரெண்டு ரெண்டு நாள் தங்கினத்துக்காக, இந்த வீட்டையே நான் ரீமாடல் பண்ணினேன். சந்தேகமாயிருந்தா… என் பின்னாடி வாங்கோ காமிக்கிறேன்….!”

 

    • சர்மாவும் வேணு மாமாவும் உள்ளே சுற்றிப் பார்ப்பதற்குச் சென்ற போது பார்வதி எதிரே வந்தாள்.

 

    • “நான் ஆத்துக்குப் போறேன்ப்பா… நீங்க சீக்கிரம் வந்துடுங்கோ, பூமிநாதபுரம் மாமா வந்தா உட்காரச் சொல்கிறேன்” என்று சர்மாவிடம் சொல்லிவிட்டு, “நான் வரேன் மாமா” என்று வேணு மாமாவிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பார்வதி.

 

    • “இந்தா வசந்தி! மாடிச் சாவியை எடுத்துண்டு வா. மாமாவுக்கு மாடியைத் திறந்து காமிப்போம் பார்க்கட்டும்.”

 

    • வசந்தி சாவிக் கொத்தைக் கொண்டு வந்து தன் தந்தையிடம் கொடுத்தாள். வெளி நாட்டில் உத்தியோகம் பார்க்கிற பிள்ளையிடமிருந்து கணிசமான தொகை மாதா மாதம் வருகிறது என்பதைத் தவிர வேணு மாமாவே நல்ல வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குச் சுரேஷ் ஒரே பிள்ளை. வசந்தி ஒரே பெண். வசந்தியின் கணவருக்கு அதாவது வேணு மாமாவின் மாப்பிள்ளைக்குப் பம்பாயில் ஒரு பெரிய கம்பெனியில் சேல்ஸ் மானேஜர் உத்தியோகம். அந்தக் கம்பெனியின் தயாரிப்புகள் ஏற்றுமதியாகி விற்கிற இடம் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள் என்பதால் கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி ஈட்டும் அந்த வெளி நாட்டு வர்த்தகதை மேலும் பெருக்குவதற்கு அடிக்கடி அந்த நாடுகளுக்குப் பயணம் செய்பவர் அவர். அவர் மாதக்கணக்கில் வெளிநாடு போகும் சமயங்களில் வசந்தி அப்பாவோடு ஊரில் வந்து தங்குவது வழக்கம். கல்யாணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை குட்டி இல்லை. பிள்ளை வந்தாலும் சரி மாப்பிள்ளை வந்தாலும் சரி கிராமத்து வீட்டில் அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நவீன வசதிகள் இருக்கட்டும் என்று மாடியில் குளியலறை இணைந்த அறைகளைக் கட்டியிருந்தார் வேணு மாமா. மாடியிலிருந்து வீட்டு முன்புறமும் பின்புறமும் இறங்குவதற்குத் தனித்தனிப் படிக்கட்டுகள் இருந்தன. மாடி முகப்பில் திறந்த வெளியில் குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று தொட்டியில் நிறையச் செடிகளும், கொடிகளும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு சர்மா வேணுமாமாவிடம் சொன்னார்.

 

    • “உங்களுக்குச் சரி. இதெல்லாம் தேவைதான். பிள்ளை, மாப்பிள்ளை யாராவது மாத்தி மாத்தித் தங்க வந்திண்டிருப்பா. எனக்கு இதெல்லாம் எதுக்கு? ஒரு நாள் கூத்துக்குத் தலையைச் சிரைச்சிண்ட கதையா இப்போ ரவியும் அவனோட எவளோ ஒருத்தியும் வராங்கறதுக்காக நான் உடனே இதெல்லாம் பண்ணியாகணுமா…? எல்லாம் போறாதுன்னு நீங்க மேற்கே மலையிலே ஏலக்காய் எஸ்டேட் வேற வாங்கியிருக்கேள். அது சம்பந்தமாகவும் உங்ககிட்ட மனுஷாள் வரப்போக இருப்பா…லௌகிகம் அதிகம் உள்ளவாளுக்கு, உம்மைப் போல நாலு பேரோடப் பழகறவாளுக்கு – இது எல்லாம் பிரயோஜனப்படும்.”

 

    • “ஓய் சர்மா…? இந்த மாதிரி சாமர்த்தியப் பேச்சு தானே வேண்டாம்கிறேன். எனக்கு இதெல்லாம் தேவைதானா இல்லையான்னு நீர் ‘சர்டிபிகேட்’ கொடுக்கறதுக்கு உம்மை நான் கூப்பிட்டுக் காமிக்கலே. நீர் என்ன செய்யணும்னு யோசனை சொன்னா அதை காதுலேயே வாங்கிக்காம வேற என்னென்னமோ பேசறீரே…?”

 

    • சர்மாவும் வேணு மாமாவும் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி அருகில் நின்ற வசந்தி ஒரு யோசனை சொன்னாள்.

 

    • “மாமாவுக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லேன்னாக் கமலியும், ரவியும் கொஞ்ச நாளைக்கி இங்கேயே தங்கிக்கலாம். நான் பம்பாய் திரும்பறத்துக்கும் ஒரு மாசம், ரெண்டு மாசம் ஆகும். அதுவரை கமலிக்கு நானே பேச்சுத் துணையா இருக்கலாம். உங்காத்திலே நீங்களும் வைதீகம், மாமியும் படு ஆசாரம். பார்க்கப் போனா மாமி உங்களை விடக் கடுமையான வைதீகம்னு சொல்லணும். அத்தனைக்கும் நடுவிலே வர்றவாளையும் சிரமப்படுத்திண்டு, நீங்களும் சிரமப்படறதைவிட சுலபமா அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்.”

 

    • இதற்கு சர்மா உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வேணு மாமா இந்த அருமையான யோசனையைக் கூறியதற்காகத் தம் பொண்ணைப் பாராட்டினார்.

 

    • “நல்ல ஐடியா வசந்தி! இந்த யோசனை எனக்குத் தோணலியே…? பேஷான காரியம்! இங்கேயே அவாளை தங்க வச்சுண்டுடலாம். சர்மாவுக்கும் செலவு மிச்சம். இப்போ உடனே கட்டிட வேலை மர வேலைன்னு ஆளைத் தேடி அலையவும் வேண்டாம். என்ன சொல்றீர் சர்மா?…”

 

    • சர்மா பதில் எதுவும் சொல்லவில்லை. ஏதோ யோசனையில் மூழ்கினாற் போல் இருந்தார். அவர் உடனே அந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு வீட்டில் சுரேஷூக்குப் போடலாம் என்று எப்போதோ வாங்கி வைத்திருந்த ஓர் ஏரோகிராம் தாளை எடுத்து வந்து சர்மாவிடம் நீட்டினாள் வசந்தி.

 

    • “நீங்க இப்போ பூமிநாதபுரம் போகப் போறேள். நாளைக்குப் போஸ்ட் ஹாலிடே. ஏரோகிராம் வாங்கவோ எழுதிப் போஸ்ட் பண்ணவோ முடியாது. இப்பவே இரண்டு வரி எழுதிக் குடுத்துடுங்கோ மாமா! நானே அதைப் போஸ்ட் பண்ணிடறேன்.”

 

    • அவள் குரல் அவரிடம் கெஞ்சாத குறையாக குழைந்தது. முதலில் அவர் தயங்குவதாகப் பட்டது. அப்புறம் வசந்தியின் முகதாட்சண்யத்துக்கு மனசு இளகினார் அவர்.

 

    • “பேனா இருந்தாக் குடும்மா! நான் கொண்டு வரலை-“

 

    • வேணுமாமா உடனே தம் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துச் சர்மாவிடம் கொடுத்தார்.

 

    • சர்மாவின் உள்ளடங்கிய ஆத்திரமும் கோபமும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய வாக்கியங்களிலேயே தெரிந்தன.

 

    • “சிரஞ்சீவி ரவிக்கு அநேக ஆசீர்வாதம். உபய க்ஷேமோபரி. உன் கடிதம் கிடைத்தது. விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. நிறுத்திவிட்டேன்.

 

    • “இங்கு உன் அம்மா, சௌ. பார்வதி, சிர. குமார் அனைவரும் சௌக்கியம். மற்ற விஷயங்களை நீ வரும் போது நேரில் பேசிக் கொள்கிறேன்” – என்று நாலைந்து வரிகளில் எழுதிக் கையெழுத்திட்டு வசந்தியிடம் கொடுத்தார் சர்மா.

 

    • வசந்தி அதை வாங்கிக் கொண்டு, “நீங்க இதிலே என்ன எழுதியிருக்கேள்? கோபமா ஒண்ணும் எழுதலியே…?” என்று அவரைக் கேட்டாள். அவரிடமிருந்து சிரித்தபடி பதில் வந்தது.

 

    • “முதல்லே நீ படிம்மா! அப்புறம் உங்கப்பாட்டக் கொடுத்து அவரையும் படிக்கச் சொல்லு! உங்களுக்கெல்லாம் தெரியக்கூடாத பெரிய ரகசியம் ஒண்ணும் அதிலே எழுதிடலே…”

 

    • “நான் படிக்கணும்கிறது இல்லே மாமா! நீங்க சொன்னாச் சரிதான்…”

 

    • “நீ படீம்மா… நானே சொல்றேனே… படீன்னு.”

 

    • அவள் அதைப் படித்துவிட்டுத் தன் தந்தையிடம் கொடுத்தாள். அவரும் அதைப் படித்தார்.

 

    • “ஏன் ஓய்? இவ்வளவு செலவு பண்ணி ஒரு ஏர்மெயில் கடிதாசு போடறோம். அதிலே போயி இத்தனைக் கஞ்சத்தனமா நாலேநாலு வரிதானா எழுதணும். அத்தனை தூரத்திலே இருந்து புறப்பட்டு வரேன்’னு எழுதியிருக்கிற பிள்ளையாண்டானுக்கு, ‘உன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறான்’னு… ஒரு வரி கொஞ்சம் தாராளமாக மனசுவிட்டு எழுதப்படாதா…?”

 

    • சர்மா பதில் சொல்லவில்லை.

 

    • “மாமாவைக் கஷ்டப்படுத்தாதீங்கோ அப்பா. எல்லாம் இவ்வளவு எழுதியிருக்கிறது போறும். சரியாத்தான் எழுதியிருக்கார்.”

 

    • வேணு மாமாவிடமும் அவர் பெண் வசந்தியிடமும் சர்மா விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது “அப்போ அவா இங்கே தங்கற விஷயமா என்ன முடிவு பண்றேள்னு யோசனை பண்ணி அப்புறமாச் சொல்லுங்கோ” என்றார் வேணுமாமா.

 

    • “சொந்தக் கிராமத்திலே சொந்த அப்பா, அம்மா, தங்கை, தம்பியெல்லாம் இருக்கிற கிருஹத்திலே தங்க முடியாதபடி ஒருத்தன் வரான்னா – அவன் அப்புறம் எங்கே தங்கினாத்தான் என்ன…? இந்த ஊர்லே நீங்க சொல்ற மாதிரி பாத்ரூம் வசதி – தங்கற வசதியோட ஆத்தங்கரையிலே ஹைவேஸ் – பி.டபுள்யூ.டி. பங்களா, மலையடிவாரத்திலே ஃபாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ் எல்லாம் கூட இருக்கே…?”

 

    • வேணுமாமா இதைக் கேட்டு அயர்ந்தே போனார். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் மகன் மேல் சர்மாவுக்கிருந்த பாசம் புரியும் படி இந்த வாக்கியங்கள் ஒலித்தன. சொந்த மகன் தன்னோடு தங்க முடியாமல் போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சர்மாவின் மனம் அப்போது தவிப்பது புலப்பட்டது.

 

    • சர்மா புறப்பட்டுப் போய் விட்டார்.

 

    • “என்னம்மா வசந்தி? திடீர்னு இப்படிப் பேசிட்டுப் போறார்…?”

 

    • “அவர் தப்பா ஒண்ணும் சொல்லலே அப்பா. பிள்ளை மேலே இருக்கிற பிரியத்தையும் விட முடியலே. அதே சமயம் ஊர் மெச்சற ஆசார அனுஷ்டானங்களைப் பத்தின பயமும் இருக்கு. இறுதலைக் கொள்ளி எறும்பு மாதிரி மாட்டிண்டு தவிக்கிறார்.”

 

    • “சரி! முதல்லே லெட்டரைத் தபாலுக்கு அனுப்பு. மனுஷன் ஏதோ பெரிய மனசு பண்ணி இந்த லெட்டரையாவது எழுதிக் கொடுத்திருக்காரே…?”

 

    …வசந்தியே அந்த ஏரோகிராமை ஒட்டி ரவியின் பாரிஸ் முகவரியைத் தெளிவாக எழுதி எடுத்துக் கொண்டு தன் கையாலேயே தபாலில் சேர்ப்பதற்காகத் தபாலாபீஸூக்குப் புறப்பட்டாள். வசந்தி பாதி வழி கூடப் போயிருக்க மாட்டாள். எதிரே சர்மாவின் புதல்வி பார்வதி அவசர அவசரமாகத் தன்னை நோக்கி வருவதை அவள் கண்டாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 4

அத்தியாயம் 4   மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.   “வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த ‘ஏரோகிராமை’

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20

அத்தியாயம் 20 தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 31தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 31

அத்தியாயம் 31 பொழுது விடிந்தால் முகூர்த்தம். கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று. இரண்டரை மணிக்குச் சமையற்காரர்கள் கூடத் துண்டை விரித்து அடுப்படியிலேயே தலை சாய்த்து விட்டார்கள். நடு இரவு இரண்டே முக்கால் மணி சுமாருக்கு