Tamil Madhura சிறுகதைகள் வல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audio

வல்லிக்கண்ணன் கதைகள் – புன் சிரிப்பு – Audio

ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி.

கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து நின்ற அகிலாண்டநாயகி திரு உருவம், அர்ச்சகரின் பக்தி சிரத்தையான சிங்காரிப்பினால் உயிர் பெற்று இலங்கியது.

“சொல்லி வரம் கொடுக்கும் அகிலாண்டநாயகி” வாய் திறந்து பேசிவிடுவாள் போல் காட்சி அளித்துக்கொண்டிருந்தாள். கன்னக் கனிந்த அன்னையின் கரிய திரு முகத்தில் அருள் ஒளி சிந்தும் விழிகளும், குமின் சிரிப்பு நெளியும் உதடுகளும் சன்னிதியில் கைகூப்பி நினிற ராமலிங்கத்தை நோக்கிச் சிரிப்பது போலவே தோன்றின.

“ரொம்ப அவசரம். ரொம்ப ரொம்ப அவசரம் உனக்கு இல்லையா?” என்று அவள் கேட்டுக் குறும்பாகச் சிரிப்பதுபோல் ராமலிங்கத்துக்குப்பட்டது.

தேவியின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காது பார்த்து நின்ற ராமலிங்கம் “அம்மா தாயே, என்னை காப்பாற்று” என்று வணங்கி, தன் கன்னங்களில் அடித்துக்கொண்டார்.

அன்னையின் குறுநகை மேலும் பிரகாசம் பெற்றது போலிருந்தது.

பட்டர், கர்ப்பூர வில்லைகள் வரிசையாய், அடுக்கடுக்காய், கொளுத்தப் பெற்ற அடுக்குச் சூடத் தட்டை கைகளில் பற்றி, தனி லயத்துடன் மேலும் கீழுமாக லேசாக அசைத்து அசைத்து ஆட்டி, “நடன தீபாராதனை” பண்ணி நின்றார். அதற்கேற்ற முறையில் நாதசுரம் தனித் தன்மையோடு இசைஒலி எழுப்பியது. மணிகள் ஒலித்தன. “அம்மா தாயே, அகிலாண்டநாயகி” என்று பக்தர்கள் பரவசத்துடன் முனகிக் கரங்கூப்பி நின்றனர்.

ஒளியில் குளிக்கும் மங்களப் பேரொளியாய் காட்சி தந்த அம்பாளின் திரு உருவும், மோகனப் புன்னகையும் ராமலிங்கத்தை என்னவோ செய்தன. அந்தத் திருமுகத்தையே கவனித்து நின்ற அவருக்கு அம்பாள் தன்னைப் பார்த்துப் பரிகாசமாய் சிரிப்பது போல் இருந்தது.

“சுடுற கஞ்சியை காலில் கொட்டிக் கொண்டது போல் தவித்தாயே – நேரமாச்சு, நேரமாச்சு; சீக்கிரம் போகணும் என்று, ரொம்பவும் பரபரப்பு காட்டினாயே! இப்போ பறக்கலியா?” என்று கேட்பதாகத் தோன்றியது.

அவர் பார்வை இயல்பாகக் கைப் பக்கம் பாய்ந்தது. மணி என்ன என்று பார்ப்பதற்காக. கையில் கடியாரம் இல்லை. நெஞ்சு திக்கென்றது ஒருகணம். உடனேயே, “கோயிலுக்குத் தானே. வாட்ச் வேண்டாம்” என்று அதை கையில் கட்டிக் கொள்ளாமலே வந்து விட்டது நினைவில் உறைத்தது.

அகிலாண்டநாயகியின் சிரிப்பு அழுத்தம் பெற்றதாக அவருக்குப் பட்டது.

“அம்மா, தாயே, அகிலாண்ட நாயகி. என்னை மன்னித்து விடு” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டு, அன்னையை உள்ளத்தில் நினைந்து, கண்மூடிக் கரம் குவித்து வணங்கி நின்றார் ராமலிங்கம்.

அவர் அவசரமாகப் பயணம் புறப்பட்டுக் கொண்டு தான் இருந்தார். சிவபுரத்திலிருந்து பஸ் பிடித்து, ஐந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஜங்ஷனுக்குப் போய், எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் போகவேண்டும். முக்கிய அலுவல் ஒன்று அவருக்காகக் காத்திருந்தது.

இந்த ஊர் பஸ்ஸை நம்பமுடியாது. எப்ப வரும், எப்போ போய்ச் சேரும் என்று கணக்கே கிடையாது. டிரைவர் கண்டக்டர் இஷ்டத்துக்கு வரும், போகும், மணிக் கணக்கில் வராமலே ஒழிஞ்சு போனாலும் போகும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்று பேரு. ஒன்றரை மணி நேரம், ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பஸ் வருவதுதான் வழக்கமாக இருக்கு. அதனாலே வீட்டை விட்டு சீக்கிரமே புறப்படனும்” என்று அவர் பரபரப்புக் கொண்டிருந்தார்.

அவருடைய அவசரத்தை அறியாதவர்களாக வீடுதேடி வந்தார்கள் ராசாப்பிள்ளையும் அவர் மனைவியும். ஊரிலே பெரிய மனிதர். ராமலிங்கத்துக்கு நெருங்கிய உறவும் கூட. தம்பி, இன்று நம்ப குழந்தைக்கு ஆண்டு நிறைவு. அகிலாண்டம் மனுக்கு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். நீங்க கட்டாயம் வரணும்” என்று வருந்தி அழைத்தார்.

ராமலிங்கம் தனது பிரயாண ஏற்பாடு பற்றியும், அவசர அவசியம் குறித்தும் எவ்வளவோ சொன்னார். ராசாப்பிள்ளை கேட்பதாக இல்லை.

“எக்ஸ்பிரசுக்குத் தானே போகணும்? ஏயம்மா எவ்வளவு நேரம் கிடக்கு கோயிலுக்கு வந்து, அம்பாளை தரிசித்து பூசையில் கலந்து பிரசாதமும் வாங்கிக் கொண்டு போக தாராளமா நேரம் இருக்கும். அம்மன் அருளும் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் சொன்னார். அவர் மனைவியும் வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் மனசை முறிக்க ராமலிங்கம் விரும்பவில்லை. பூஜையில் கலந்து கொள்ள முடியாது; தேவியின் திருவருள் கிடைக்கிற போது கிடைக்கட்டும் என்று அடித்துப் பேசவும் அவர் மனம் இடம் தரவில்லை.

“பஸ்ஸை பிடித்து எக்ஸ்பிரசுக்குப் போய்ச் சேரணுமே அதுதான் யோசனையாயிருக்கு” என்று இழுத்தார் ராமலிங்கம்.

கவலைப்படாதீங்க. எல்லாத்தையும் அகிலாண்டநாயகி கவனித்துக் கொள்வா” என்று தைரியமூட்டினார் ராசாப்பிள்ளை.

எப்படி தட்டிக் கழிக்கமுடியும்?

“பூஜை சீக்கிரமே நடந்துவிடும்” என்று ராசாப்பிள்ளை உறுதி கூறிய போதிலும், கோயிலில் நேரம் இழுத்துக்கொண்டே போயிற்று. மெது மெதுவாகத் தான் காரியங்கள் நடை பெற்றன.

அம்பாளுக்குத் திருமுழுக்குச் செய்து, திருக்காப்பிட்டு, அலங்காரம் பண்ணி முடிப்பதற்கே வெகுநேரம் ஆகிவிட்டது. திரை விலகியதும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில் அம்மனின் திரு உருவம் உயிர்பெற்றுச் சிரித்து நிற்கும் திவ்யமங்கள சொரூபமாகத் திகழ்ந்தது. அத்திருக்காட்சியில் ராமலிங்கம் பக்தி பரவசரானார். தனது பரபரப்பையும் பிரச்னைகளையும் மறந்தார். இந்தத் தரிசனத்துக்காக எத்தனை நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

தீபாராதனை முடிந்து, விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டதும், “அப்ப நான் வரட்டுமா?” என்று ராமலிங்கம் ராசாப்பிள்ளையிடம் கேட்டார்.

“நல்லாயிருக்குதே நியாயம்! இத்தனை நேரம் இருந்து போட்டு பூஜைப் பிரசாதம் பெற்றுக் கொள்ளாமல் போவ தாவது இருங்க இருங்க, இதோ ஆச்சுது!” என்றார் மற்றவர்.

அங்கேயே வசதியான ஒரு இடத்தில் இலைகள் பரப்பி, பிரசாதம் விநியோகித்தார்கள். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல். ராமலிங்கம் இலையில் தாராளமாகவே பரிமாறப்பட்டன.

“இதே போதும். இனிமேல் சாப்பாடு தேவையில்லை. வீட்டுக்குப் போயி, உடனே கிளம்ப வேண்டியது தான்” என்று அவர் எண்ணிக் கொண்டார்.

மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அகிலாண்ட நாயகியின் உருவத்தை அவர் திரும்பிப் பார்த்தபோது, மீண்டும் அந்த புன்னகை அவரை வீசிகரித்தது. குறும்புத்தனமும் பரிவும் பிரியமும் கலந்த ஒரு மோகனப் புன்னகை. எதிரே நின்று முகம் பார்த்து அன்னை சிரிப்பது போலவே தோன்றியது.

ராமலிங்கத்தின் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஒரு நிறைவு புகுந்தது. அம்மனையே பார்த்தபடி நின்றார்.

சிறிது நேரம் சென்றதும், திடுக்கிட்டவராய் தன்னை சுதாரித்துக் கொண்டு, “அம்மா அகிலாண்ட நாயகி! நீ தான் எனக்குத் துணை. அம்மா, என்னை கைவிட்டு விடாதே” என்று மனமாறப் பிரார்த்தித்து வணங்கினார். பிறகு திரும்பித் திரும்பி அன்னையின் அருள் முகத்தைப் பார்த்தபடி நடந்தார்.

ராமலிங்கம் “பஸ் நிற்குமிடம் சேர்ந்தபோது, “ஜங்ஷன் போற பஸ் இப்ப தான், சித்தெ முந்தித்தான் போச்சு” என்ற தகவல் கிடைத்தது. அடுத்த பஸ் இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடும்” என்று ஆறுதல் மொழியும் கிடைத்தது.

“இன்னும் கொஞ்ச நேரம்” என்பது அந்த ஊர் பஸ்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு நாள் – ஒவ்வொரு நேரத்தில் – வெவ்வேறு கால அளவாக அமையும். ராமலிங்கம் காத்திருந்த வேளையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக ஆயிற்று.

என்ன செய்வது? போய்த்தானே தீரவேண்டும் என்று முணுமுணுத்துக் கொண்டார் அவர்.

பஸ் வந்தது, அவசரம் அவசரமாகப் பிரயாணிகள் ஏறி இடம் பிடித்தார்கள். அவர்கள் பொறுமையை மேலும் சிறிது நேரம் சோதித்த பிறகு பஸ் சாவதானமாகக் கிளம்பியது. ஒடியது. ராமலிங்கம் அடிக்கடி கைக்கடியாரத்தைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்.

“எக்ஸ்பிரசை பிடிக்கும்படியா இது போய் சேருமோ என்னமோ!” என்ற உதைப்பு அவர் மனசை அலைக் கழித்தது. “உம்ம். எல்லாம் அவள் அருள். நடக்கிறபடி நடக்கட்டும்” என்றும் மனம் குறுகுறுத்தது.

இடை வழியில் ஒரு பெரும் சோதனையாக லெவல் கிராஸிங் கேட் அடைக்கப்பட்டு விட்டது. எப்பவோ வரவிருந்த ஏதோ ஒரு டிரெயினுக்காக முன்கூட்டியே கதவை அடைத்து விட்டார்கள். வழக்கமான இச்செயலினால் பாதிக்கப்படுகிற பஸ் பயணிகள் வழக்கமாகப் புலம்புகிற குறை கூறல்களை இந்த பஸ்ஸின் பயணிகளும் புலம்பினார்கள். ராமலிங்கத்தின் மனமும் ஒத்துப் பாடியது.

“வெகுநேரம்” எனத் தோன்றிய ஒரு கால அளவுக்குப் பிறகு – ரயில்வண்டி கடந்து போன பின்னர் – கேட் திறக்கப்பட்டது. வண்டிகள், பஸ்கள், லாரிகள் மற்றும் பலவகை வாகனங்களும் ஏற்படுத்திய நெரிசலில், பஸ் மிக மெதுவாகத்தான் முன்னேற முடிந்தது.

ராமலிங்கம் ஜங்ஷன் ஸ்டேஷனை அடைந்த போது, எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிஷங்கள் ஆகியிருந்தன.

ஏமாற்றம் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன செய்வது இனி என்ன செய்யலாம் என்று குழம்பியபடி நின்றார் அவர்.

“ஸார் வாறேளா? ஒரே ஒரு ஸிட் இருக்கு. அருமையான வண்டி. நல்ல பிளஷர் கார் ரயில் கட்டணத்துக்கு மேலே ஒரு ரூபா கொடுத்தால் போதும் ஜம்னு உட்கார்ந்து, எக்ஸ்பிரஸை விட வேகமாப் போயி சீக்கிரமே நகர் சேர்ந்திடலாம்!”

அவர் அருகில் வந்து இதைச் சொன்னவனின் குரல் அவரது ஆசையை தூண்டியது. சிறிது தயங்கினார். பிறகு துணிந்து விட்டார். அந்த ஆள்காட்டிய காரில் ஏறி அமர்ந்தார்.

காரினுள் செளகரியமாக அமர்ந்து, கார் புறப்பட்டு வேகமாக ஒடவும், அவர் நிம்மதியாக மூச்சு விட்டார். “அகிலாண்ட நாயகி எல்லாம் உன் கிருபை” என்று அவர் மனம் பேசியது.

அப்போதும் குறும்பும் பரிவும் அருளும் கலந்த புன்னகை யோடு அவரையே பார்த்த அன்னையின் திருமுகம் அவர் உள்ளத்தில் பளிரென்று நிழலிட்டு மறைந்தது. “அம்மா அகிலாண்டநாயகி, உன் அருள்” என்று மனசுக்குள் கூறிக் கொண்டார் அவர்.

ராமலிங்கம் இப்படி ஆத்ம பூர்வமாக அடிக்கடி எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் அந்தப் பிரயாண முடிவிலேயே நேரிட்டது.

அந்தக் கார் அடையவேண்டிய நகரை உரிய காலத்தில் அடைந்தது. அதில் வந்த பயணிகளுக்கு ஒரு பரபரப்பான செய்தி அங்கே காத்திருந்தது.

ராமலிங்கமும் மற்றவர்களும், காலம் துணைபுரிந்திருந்தால் ஏறி பயணம் செய்திருக்கக் கூடிய – செய்திருக்க வேண்டிய – எக்ஸ்பிரஸ் ரயில் இடை வழியில் ஒரு இடத்தில் தண்டவாளம் பெயர்ந்து, தடம் புரண்டு, விபத்துக்கு உள்ளாகியிருந்தது. என்ஜினும் அதை அடுத்த இரண்டு பெட்டிகளும் கவிழ்ந்து விழுந்து விட்டன. பல பேர் செத்துப் போனார்கள்; ஏகப்பட்ட பேருக்கு பலத்த அடி, காயம்.

இதைக்கேட்ட ராமலிங்கத்தின் உள்ளத்தில் இனம்புரியாத உணர்ச்சி ஒன்று பொங்கிப்பிரவாகித்தது. அதில் ஆனந்தமும், “அம்மா நாம் பிழைத்தது பெரிய அதிர்ஷ்டந்தான்” என்ற நிம்மதியும் கலந்திருந்தன. அதற்கெல்லாம் மேலாக தேவியின் திருவருள்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறது என்ற பரவசமும் இணைந்து ஒலித்தது. அன்னையின் குறும்புத்தனமும் பாசமும் பிரியமும் நிறைந்த புன்னகை இப்பவும் அவர் கண்முன்னே களிநடம் புரிவதுபோன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

“அம்மா அகிலாண்டநாயகி…” வேறு எதுவும் கூறமுடியாத உணர்ச்சித் தழுதழுப்புடன் அந்த இடத்திலேயே கரம் குவித்து வணங்கினார் ராமலிங்கம்.
(கலா வல்லி, தீபாவளி மலர் – 1981)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பசித்த மரம் – ஸத்யஜித் ராய்பசித்த மரம் – ஸத்யஜித் ராய்

பசித்த மரம் – ஸத்யஜித் ராய் (வங்காளிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்     அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது

ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.ஜெனிபர் அனுவின், “காதல் குறியீடு” சிறுகதை.

வணக்கம் வாசக நெஞ்சங்களே! ஜெனிபர் அனு அவர்கள், “காதல் குறியீடு” எனும் சிறுகதை ஒன்றுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ஜெனிபர் அனுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. காதல் குறியீடு “சார்! நான் ஒண்ணு சொன்னா தப்பா

வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்

கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்! அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. “சிங்காரவேலு, போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்?” இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன. சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான்