Tamil Madhura நா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 2

அத்தியாயம் 2

 

    • இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.

 

    • “உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ…?”

 

    • “எங்கப்பா எதை எழுதி, அண்ணா என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறேள் மாமா?…”

 

    • “ரவியும் அந்தப் பெண்ணும் இங்கே புறப்படறத்துக்கு முந்தி சுரேஷ் அங்கேயே அவாளைப் பார்த்துப் பேசி ஏதாவது பண்ணலாம்மோன்னு தோணித்து… அது சாத்தியமா இல்லையான்னு நீதான் சொல்லணும்…”

 

    • “நீங்க கேக்கற விஷயத்தைப் பத்தி என்ன பதில் சொல்றதுன்னே எனக்குத் தெரியலையே மாமா! நம்ம தேசத்துக்கும் ஐரோப்பா, அமெரிக்கா போல இருக்கிற மேனாடுகளுக்கும் இந்த மாதிரிப் பிரச்சனைகளை அணுகறதிலேயே ரொம்ப வித்தியாசம் உண்டு. இங்கேயிருந்து போய் அங்கே வசிக்கறவாளுக்குக் கூட நாளாக நாளாக அந்த தேசங்களின் தாராள மனப்பான்மை, ‘பெர்மிஸிவ்னெஸ்’ எல்லாம் வந்துடறது. உங்க பிள்ளை ரவியும் கமலியும் காதலிக்கிறதைப் பத்திச் சுரேஷ் அண்ணாகிட்டச் சொன்னா, அவன் ‘அப்படியா…? ரொம்ப நல்லது! அதிலே என்ன தப்பு…? ரவியோட அதிர்ஷ்டத்தைப் பாராட்டுகிறேன்’ பான். இந்தப் பிரச்சனையை நீங்க அணுகற விதத்தை அவாளுக்கெல்லாம் புரிய வைக்கறது ரொம்ப சிரமமான காரியம் மாமா! அப்படியே புரிஞ்சாலும் உங்க தரப்பு வாதங்களை இன்னிக்கு நாகரிக உலகத்திலே அவாள்ளாம் ஒத்துக்க மாட்டா…”

 

    • “சங்கரமங்கலம் வியாகரண சிரோன்மணி குப்புசாமி சர்மாவோட பேரன் – இப்படி ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிண்டு வீட்டுக்கு அடங்காமப் போயிட்டானாம்னு நாலு பேர் பேசுவாளே அம்மா…? நம்ப சமஸ்காரம், சம்பிரதாயம் எல்லாத்தையும் விட்டுட்டு அவன் இப்படிச் செய்யலாமா…? நாளைக்கு நானோ அவனோட அம்மாவோ – போயிட்டா எங்களுக்குக் கர்மம் எல்லாம் பண்ண வேண்டிய பிள்ளையாச்சே அவன்?”

 

    • இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே “அடடே…யாரு? சர்மாவாளா? வாங்கோ…” என்று கூறிய படியே வேணுமாமா உள்ளே நுழைந்தார். பாரிஸிலிருந்து ரவியின் கடிதம் வந்த விவரத்தைச் சொல்லி வேணுமாமாவிடமும் அதைப் படிக்கக் கொடுத்தார் சர்மா.

 

    • படித்து முடித்து விட்டுச் சிரித்துக் கொண்டே “காந்தர்வ விவாகம்னு ஒண்ணு நம்ம சாஸ்திரங்கள்ளேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குன்னு உங்களுக்கே அழகா ஞாபகப்படுத்தியிருக்கானே பிள்ளையாண்டான்?” என்றார் வேணு மாமா.

 

    • சர்மா தயங்கித் தயங்கி சுரேஷ் மூலமாகப் பாரிஸிலேயே ரவியைச் சந்தித்து அவன் மனத்தை மாற்ற முயற்சி செய்ய இயலுமா என்ற தம் யோசனையை வேணு மாமாவிடமும் கூறினார்.

 

    • “அது சாத்தியம் இல்லை சர்மா…! அங்கே எல்லாம் ஒருத்தரோட தனி வாழ்க்கையிலே இன்னொருத்தர் தலையிடறதை அநாகரிகமா நெனைப்பா. சுரேஷ் அவனுக்குக் கலியாணமாகி ஒரு குழந்தையும் பொறந்தப்பறம் டெல்லியிலே பார்த்துண்டிருந்த வேலைலேருந்து அப்பிடியே யுனேஸ்கோவுக்கு செலக்ஷன் ஆகி நியூயார்க் போனான். அப்புறம் இப்போ பாரிஸ் வந்திருக்கான். இப்படி எல்லாம் இல்லாமே கட்டைப் பிரம்மச்சாரியா அங்கே போயிருந்தான்னா இன்னிக்கு நீர் இருக்கிற நிலைமையிலே நானும் இருக்க நேர்ந்திருக்கலாம். ஒரு பிரெஞ்சு மருமகளையோ, அமெரிக்க மருமகளையோ என் வீட்டுக்குள் வரவேற்கிற நெலைமையை நானே எதிர்த்தாலும் தவிர்க்க முடியாமல் போயிருந்திருக்கும்.”

 

    • சர்மாவின் இதயத்தில் அந்தப் பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிற கனத்தைக் குறைத்து இலகுவாக்க விரும்பியவர் போல வேணுமாமா இப்படிக் கூறியிருந்தார். சர்மாவின் பயங்கள், தயக்கங்கள், தர்ம சங்கடங்கள் எல்லாம் வேணு மாமாவுக்குப் புரிந்தன. சர்மாவின் குடும்பம் பரம்பரையான வைதீகக் குடும்பம். சர்மாவோ சுபாவத்தில் நல்லவர் என்றாலும் கட்டுப்பட்டி. வெளி உலகை அதிகம் சுற்றிப் பார்த்திராதவர். சிறு வயதிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர். பரம்பரை பரம்பரையாக வேதாத்யயனம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தின் மூன்று பெரிய தெருக்களையும் சேர்ந்த மற்றவர்களுக்குச் சாஸ்திர விஷயங்களிலோ சம்பிரதாய விஷயங்களிலோ யோசனை சொல்லி வழிகாட்டும் உயர் அந்தஸ்தை உடையதாயிருந்தது சர்மாவின் குடும்பம். வடக்குத் தெரு, நடுத்தெரு, தெற்குத்தெரு என்ற அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ளவர்கள் பெரும்பாலும் அத்வைத மடத்தின் வழிகளைப் பின்பற்றுகிறவர்கள். அத்வைத மடத்தின் சுவாமிகளால் சங்கரமங்கலத்திற்கும், அகஸ்திய நதிக்கரையிலிருந்த சுற்றுப்புற கிராமங்களுக்கும் ஸ்ரீ மடத்தின் பிரதிநிதியாக, முந்திராதிகாரி பதவியில் இருந்து வருபவர் விசுவேசுவர சர்மா. ஸ்ரீ மடத்தின் ஏஜண்ட் என்ற இந்தக் கௌரவப் பதவியை ஏற்றிருந்ததனால் சங்கர மங்கலத்திலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் நல்லது கெட்டதுகளில் ‘ஸ்ரீ மடம் சம்பாவனை’ என்ற பெயரில் ஓதியிடப்படும் தொகையையும் மரியாதையையும் பெற்று வரும் அதிகாரம் சர்மாவுக்கு இருந்தது. பிரான்சில்-பாரிஸில் வேலை பார்க்கும் தன் மகன் செய்திருக்கும் காரியத்தால் இனி இந்த அந்தஸ்துக்களும், மரியாதைகளும் என்ன என்ன மாறுதல்களை அடையும் என்றெல்லாம் எண்ணியே சர்மா சலனம் அடைந்திருக்கிறார் என்பது வேணு மாமாவுக்கு இப்போது புரிந்தது.

 

    • “எப்படியாவது இதைத் தவிர்த்துடலாம்னு நினைச்சுத்தான் உங்ககிட்டவும், உங்க பொண்கிட்டவும், இப்போ பிரஸ்தாபிச்சதைத் தவிர வேற யாரிட்டவும் இந்த லெட்டரிலுள்ளதைப் பத்தியே நான் பிரஸ்தாபிக்கலே.”

 

    • “தவிர்க்கறதுங்கிற எண்ணத்தையே நீங்க விட்டுடணும் மாமா! ரவியையும், கமலியையும் இனிமே நீங்க பிரிக்கிறது நடக்காத காரியம். நான் பாரிஸியே கமலிகிட்டேயிருந்து விடை பெற்றபோது, அவ ரொம்ப பிரியத்தோட எனக்கு ஒரு ஆல்பம் ‘பிரஸண்ட்’ பண்ணினா. நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா உங்களுக்கு இப்போ அதைக் காண்பிக்கிறேன்.”

 

    • மனத்தின் மேற்பரப்பில் மண்டிக்கிடந்த வித்தியாசங்களையும் வெறுப்புகளையும் மீறி மகனைக் கவர்ந்த அந்தப் பிரெஞ்சு யுவதியைப் படத்திலாவது பார்க்க வேண்டுமென்று சர்மாவுக்கும் ஆவலாகத்தான் இருந்தது. ஆனால், அந்த ஆவலை அவர் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் தமது சம்மதத்தையும் தெரிவிக்காமல், சம்மதமின்மையையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.

 

    • “மாமாவுக்கு ஆல்பத்தைக் கொண்டு வந்து காண்பியேன். பார்க்கட்டும்” என்று தம் மகளிடம் சொல்லி விட்டு சர்மாவின் பக்கம் திரும்பி, “எவ்வளவு விகல்பமில்லாத மனசு இருந்தா இப்படித் தங்கள் படத்தை எல்லாம் ஒட்டின ஆல்பத்தை எங்க ஞாபகார்த்தமா வச்சிக்குங்கோ’ன்னு குடுக்கணும்கிறதை நினைச்சுப் பாருங்கோ சர்மா. பிரெஞ்சு ஜனங்களே நல்ல மாதிரி. அதுவும் ரவியோட…இவ இருக்காளே – அதான் – கமலி – அவ அற்புதமான பொண்ணு. இன்னிக்குப் பூராவும் அவளோட சிரிச்சுப் பேசிண்டிருக்கலாம்னு தோணும். இங்லீஷ்லே, ‘பிரான்ஸ் இஸ் நாட் எ கண்ட்ரீ பட் ஆன் ஐடியா’ன்னு ஒரு வசனம் உண்டு. அது நூத்துக்கு நூறு உண்மை சர்மா…” என்றார் வேணு மாமா.

 

    • இப்படி வேணுமாமாவும் கமலியைப் புகழ்ந்து பேசவே சர்மா யோசிக்கத் தொடங்கினார். முதலில் வேணுமாமாவின் பெண் வசந்தி அவளைப் புகழ்ந்து பேசியிருந்தாள். இப்போது வேணுமாமாவும் அந்தப் பிரெஞ்சு யுவதியைச் சிலாகித்துச் சொல்கிறார். ரவியையும் அந்தப் பிரெஞ்சு யுவதியையும் பிரித்து வைக்க முயலும் தன் திட்டத்துக்கு அப்பாவோ, பெண்ணோ பாரிஸில் யுனஸ்கோவில் இருக்கும் வேணுமாமாவின் பிள்ளையோ ஒத்துழைப்புத் தரமாட்டார்கள் என்பது சர்மாவுக்கு இப்போது குறிப்பாகவும், தெளிவாகவுமே புரிந்தது.

 

    • வேணுமாமா பேசியபோதே ‘உங்க ரவியோட… இவ’ என்று அவர் சொல்லிய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்ததில் ‘ரவியோட மனைவி’ என்று முதலில் சொல்ல நினைத்துப் பின்பு அந்த ஒரு வார்த்தையை விழுங்கி விட்டு ‘இவ’ என்பதாக மழுப்பிக் கூறினாரோ என எண்ணினார் சர்மா. ஒரு வேளை ரவியும் கமலியும் காதலர்கள் என்ற நிலையையும் கடந்து அங்கெல்லாம் ‘மோதிரம் மாற்றிக் கல்யாணம்’ – என்று சொல்கிறார்களே, அப்படிக் கல்யாணமே செய்து கொண்டு விட்டார்களோ என்றும் சந்தேகமாயிருந்தது அவருக்கு.

 

    • வசந்தி அந்த அழகிய ஆல்பத்தைச் சர்மாவிடம் கொடுத்தாள். அவர் பிரித்த முதல் பக்கத்திலேயே வெண் பனி மூடிய மலைச்சரிவு ஒன்றில் ரவியும், அந்தப் பிரெஞ்சு யுவதியும் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட அழகிய வண்ணப் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

 

    • சர்மாவுக்கு அருகே நின்று அவர் ஆல்பத்தைப் பிரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த வசந்தி “இந்தப் படம் ரவியும் கமலியும் ஸ்விட்ஜர்லாந்துக்கு உல்லாசப் பிரயாணம் போயிருந்த போது எடுத்ததுன்னு சொன்னா-” என்று அவருக்கு விளக்கினாள்.

 

    • “சர்மா படத்தைப் பார்த்து வெறும் உல்லாசப் பிரியமும், விளையாட்டுப் புத்தியும் அசல் லௌகீக ஆசைகளும் மட்டுமே உள்ளவளா இருப்பா போலிருக்கேன்னு நினைச்சுடாதீரும். கமலியைப் போல புத்திசாலிப் பொண்ணை நீர் ஐரோப்பா முழுவதும் தேடினால்கூடக் கண்டுபிடிக்க முடியாது. பிரெஞ்சு தவிர ஜெர்மனும், இங்கிலீஷூம் அவளுக்குத் தெரியும். ரவிகிட்ட சமஸ்கிருதமும், தமிழும், இந்தியும் கத்துக்கறா…”

 

    • சர்மா ஆல்பத்தில் அடுத்த பக்கத்தைப் புரட்டினார்.

 

    • “இது வெனிஸ்-அவா ரெண்டு பேரும் போட்லே போறா. வெனிஸை மிதக்கும் நகரம்னு இத்தாலியிலேயே சொல்லுவா மாமா. பாரிஸிலேயிருந்து ஜெனிவா, ரோம் எல்லாத்துக்கும் ரயில்லேயே போயிடலாம் மாமா… நானும் அப்பாவும்கூட ரயில்லேயேதான் அங்கெல்லாம் போனோம். அவா ரோம்’னு சொல்றதில்லே ‘ரோமா’ன்னு தான் சொல்றா…”

 

    • ஆல்பத்தில் மற்றொரு பக்கம் புரள்கிறது. சர்மாவின் கைவிரல்கள் சுபாவமாக இயங்காமல் மெல்ல நடுங்குவதையும், பதறுவதையும் வசந்தி கவனித்தாள். வேணு மாமா சர்மாவைக் குஷிப்படுத்த முயன்றார்.

 

    • “நான் பாரிஸிலே அவகிட்டப் பேசிண்டிருந்தப்போ, ‘சௌந்தர்ய லஹரி’யைப் பற்றி-என்னை ஏதோ இவன் ரொம்பத் தெரிஞ்சவனாக்கும்னு அவளா நெனைச்சுண்டு என்னமோ சந்தேகம் கேட்டாள். “கமலீ! இதெல்லாம் நீ சங்கரமங்கலத்துக்கு வர்றப்போ உன் எதிர்கால மாமனாரிட்டக் கேளு. அவர் பெரிய சான்ஸ்கிரிட் ஸ்காலர்”னு அவகிட்டச் சொல்லியிருக்கிறேன்…”

 

    • “ஏன் ரவியையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமே?” என்று அமுத்தலாகப் பதில் வந்தது சர்மாவிடம் இருந்து.

 

    • வேணுமாமா தளரவில்லை. சர்மாவின் மன நிலையை இளகச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.

 

    • “கமலியோட விநயம், அடக்கம், பணிவு, இதையெல்லாம் பார்த்தால் அவ அத்தனை பெரிய பிரபுத்துவக் குடும்பத்துப் பெண்கிறதை எப்பேர்க் கொத்தவாளாலேயும் ஊகிக்கக் கூட முடியாது சுவாமி! அவ்வளவு நல்ல சுபாவம்…!”

 

    • சர்மா பட்டென்று ஆல்பத்தை மூடி வசந்தியிடம் நீட்டி விட்டு எழுந்து நின்றார். புறப்படத் தயாரான நிலையில் நின்று கொண்டு, “எனக்கு மனசு சரியில்லை, அப்புறமா இன்னொரு நாள் வரேன். மத்ததைப் பேசலாம்” என்று சொல்லி விட்டுக் கிளம்பத் தயாராகி விட்டார். அவரைச் சமாதானப்படுத்தி மறுபடியும் உட்கார வைப்பதற்குள் வசந்திக்கும் அவள் தந்தைக்கும் போதும் போதுமென்றாகி விட்டது.

 

    • விசுவேசுவர சர்மாவுக்கு மனத்தில் அழுத்தமான சந்தேகமே விழுந்து விட்டது. வேணு மாமாவும், அவர் பெண் வசந்தியுமே இந்தக் காதல் பிரச்சனையில் ரவியின் நிலையைத் தீவிரமாக ஆதரிக்கிறார்களோ என்று எண்ணினார் சர்மா.

 

    • உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி அவர் நிதானப்படுகிற வரை ஒரு மாறுதலாக வேறு எதையாவது பற்றி அவரிடம் பேசலாம் என்று தோன்றியது வேணு மாமாவுக்கு!

 

    • “ஆத்தங்கரை நத்தத்துத் தென்னந் தோப்பை யாருக்குக் குத்தகை பேசியிருக்கேள் சர்மா? இந்த வருஷம் தென்னை, மா, பலா எல்லாமே நல்ல காய்ப்பாமே…”

 

    • “குத்தகை எதுவுமே சரியாத் தெகையலெ, நல்ல குத்தகை அமையலேன்னா ஒரு காவல் ஏற்பாடு பண்ணிட்டு நானே சொந்தமாக் கவனிக்கலாம்னு தீர்மானம்.”

 

    • “மடத்து நிலமெல்லாம் என்ன செய்யப் போறேள்…?”

 

    • “அதெல்லாம் எப்படியும் நல்ல மனுஷாளாப் பார்த்துக் குத்தகைக்கு அடைச்சுத்தான் ஆகணும். நெல விஷயம் வேறே. தோப்புத் துரவு விஷயம் வேறே. நிலத்துக்கு எப்படியும் நல்ல குத்தகை அமையும்.”

 

    • “தெக்குத் தெரு சங்கரசுப்பன் இரண்டு பெண்ணுக்கும் கல்யாணம் பண்றத்துக்காக நெலம், தோப்புத் துரவு எல்லாத்தையும் கிரயம் பேசிட்டானாமே; தெரியுமா?”

 

    • “அப்படித்தான் யாரோ பேசிண்டா… எங்காதிலேயும் விழுந்தது.”

 

    • இந்த விதமாகச் சிறிது நேரம் ஊர் விவகாரம் பேசிய பின் மறுபடி பழைய பேச்சை மெதுவாக ஆரம்பித்தார் வேணு மாமா.

 

    • “ஆத்திரப்பட்டு ரவியை இங்கே வரவேண்டாம்னு எழுதிடாதீங்கோ…கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்குங்கோ…உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்ங்கிறதில்லே, நீங்க மகா வித்வான். பெரிய படிப்பாளி. ஞானஸ்தர்…”

 

    • “இதிலே எனக்கிருக்கிற தர்ம சங்கடங்கள் உங்களுக்கும் புரியணும். பல வகையிலே கிராமத்தாருக்கும் ஸ்ரீ மடத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன் நான். எடுத்தேன் கவிழ்த்தேன்னு மத்தவாளை மாதிரி நான் எதையும் பண்ணிண்டு அப்புறம் ஊர்லே நிமிர்ந்து நடக்க முடியாது. ரவியைத் தவிர எனக்குக் கல்யாணத்துக்கு இன்னொரு பிள்ளையும், பொண்ணும் வேற இருக்காங்கறதை மறந்துடாதீங்கோ! இந்தக் கிராமமும் ஜனங்களும் எப்படிப்பட்டவான்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்கிறதில்லே. ஊருக்குப் பயன்படற ஒரு பொது நன்மையைச் செய்யணும்கிறபோது அதுக்காக ஒண்ணாச் சேர மாட்டா. ஊருக்குப் பயன்படாத ஒரு தனி மனுஷ விவகாரத்தைப் பெரிசு பண்ணி விரோதத்தை வளர்த்துக்கணும்னா அத்தனை பேரும் உடனே ஒண்ணாச் சேருவா. நல்லது உடனே புரியாது. கெட்டதை உடனே புரிஞ்சுப்பா. முக்கால்வாசி சமயங்கள்ளே நல்லதையே அவசரப்பட்டுக் கெட்டதாப் புரிஞ்சுண்டுடுவா. ரெண்டுங் கெட்டான் ஊர், ரெண்டுங்கெட்டான் மனுஷா…”

 

    • “நீங்க சொல்றது அத்தனையும் நியாயம் தான் சர்மா… ஆனா…உங்க பிள்ளை ரவியோட மனதை நீங்க புண்படுத்திடப் படாது. புஷ்பம் மாதிரி மனசு அவனுக்கு…”

 

    • சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் சற்று முன் திருப்பிக் கொடுத்ததும் உள்ளே கொண்டு போய் விடாமல் வசந்தி அங்கேயே வைத்திருந்த ஆல்பத்தைக் கையிலெடுத்து மீண்டும் அவரே பார்க்கத் தொடங்கினார். சர்மா கவனித்து விடாமல் வசந்தியும் அவள் அப்பாவும் ஒருவரை ஒருவர் குறிப்பாகப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள். வசந்தி பழையபடி தன்னுடைய ‘ரன்னிங் காமெண்ட்ரி’யைத் தொடர்ந்தாள்.

 

    • “இது ஜெனீவா லேக்-கரையிலே நின்னு மணிக்கணக்காப் பார்த்துண்டிருக்கலாம். எனக்கு இது ரொம்பப் பிடிச்ச இடம் மாமா!”

 

    • பெரியதாய்க் கிண்ணம் கிண்ணமாகப் பூத்திருந்த பூக்கள் நிறைந்த ஒரு பெரிய பூங்காவில் ரவியும் கமலியும் நிற்கிறாற்போல ஒரு படம் ஆல்பத்தில் வந்தது. சர்மா வினவினார்.

 

    • “இதென்ன பூம்மா? இத்தனை பெரிசா…இத்தனை அழகா…?”

 

    • “அது துலீப் பூன்னு ஹாலந்திலே ரொம்பப் பிரசித்தம் மாமா. ‘துலீப் ஃபெஸ்டிவல்’னு அது நிறையப் பூக்கிற காலத்திலே அங்கே ஒரு விழாவே கொண்டாடுவா…”

 

    • ஆல்பத்தில் அடுத்தபடம் திரும்பியது.

 

    • “இதென்ன இடிஞ்ச மண்டபமா…? அரண்மனையா….?”

 

    • ” ‘அக்ரோ-போலிஸ்’னு கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலே இது பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் மாமா!”

 

    • “அப்போ அவனும், இவளுமா ஐரோப்பா பூராவும் சுத்தியாச்சுன்னு சொல்லு…”

 

    • “……..”

 

    • “ரெண்டு பேரும் தனியாத்தானே இதெல்லாம் சுத்தியிருக்கா….? இல்லியா….?”

 

    • சர்மாவின் இந்தக் கேள்வி குழந்தைத் தனமானதா அல்லது உள்ளர்த்தம் வைத்துக் கேட்கப் படுகிறதா என்பதை வசந்தியாலும் வேணு மாமாவினாலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. கொந்தளிப்பிலும் அலை மோதலிலும் படகு கவிழ்ந்து விடாமல் மெல்ல நடத்திச் செல்லும் தேர்ந்த படகோட்டியைப் போல் அந்த உரையாடலை அவர்கள் மேலே கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. மீண்டும் விசுவேசுவர சர்மா கோபித்துக் கொண்டு எழுந்திருந்து போய் விடாமல் அந்தப் பேச்சைச் சுமூகமாகக் கொண்டு செல்ல முயன்றார்கள் அவர்கள்.

 

    • எதிர்பாராத விதமாக மறுபடியும் சர்மாவே தாமாக ரவியைப் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது கண்டு அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சு எப்படி எந்த சமயம் எதிர்பாராத கோணத்துக்குத் திரும்புமோ என்ற தயக்கமும் முன்னெச்சரிக்கையும், ஒரளவு பயமும் கூட இருந்தன. அதனால் சர்மாவின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்தார்கள் அவர்கள். ஆனால் பேச்சு மேலே வளர்ந்த விதத்தைப் பார்த்தால் அவர் அதைப் பற்றியே உரையாடலைத் தொடர விரும்புவதாகப்பட்டது. அவர்கள் இருவரையும் நோக்கி அவர் கேட்டார்.

 

    • “இவன் தான் காணாததைக் கண்ட மாதிரி அவமேலே பிரியம் வெச்சுட்டான். அவ குடும்பத்திலேயாவது இதை எல்லாம் கண்டிக்க மாட்டாளோ? அவ தகப்பன் யாரோ பெரிய கோடீசுவரப் பிரபூன்னு சொன்னேளே…?”

 

    • “அந்தத் தேசத்திலே அப்படிக் கண்டிக்கிற உரிமையெல்லாம் எடுத்துக்கமாட்டா மாமா. படிச்சு வயசு வந்த ஆண் பெண்களுக்கு அவா அவாளே தங்களோட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கிற உரிமை உண்டு. அப்பா அம்மா பார்த்து ஏற்பாடு பண்ற கல்யாணம்கிறது அங்கே எல்லாம் எப்பவாவது அபூர்வமாகத்தான் நடக்கும்…”

 

    • “பெரிய பணக்காரக் குடும்பத்துப் பொண்ணுன்னியே…? தன்னோட பொண்ணு அந்தஸ்துக்குக் குறையாத இடத்துக்குப் போய்ச் சேரணும்னாவது அப்பாவுக்கு அக்கறையோ கவலையோ இருக்காதா…?”

 

    • “நம்மூர்ப் பணக்காரா மாதிரி இருபத்து நாலுமணி நேரமும் தாங்க பணமுள்ளவா, தனி அந்தஸ்துள்ளவா, தனி ஜாதி, தனி ரகம்னே நினைச்சுண்டிருக்க அங்கே அவாளுக்கெல்லாம் தெரியாது. பணம்கிறதை ஒரு வசதியா நினைப்பாளே ஒழிய வரப்பிரசாதமா நினைச்சுக் கர்வம் பிடிச்சு அலைய மாட்டா. நீக்ரோவைக் காதலிச்சு வெற்றி கண்ட பணக்காரக் குடும்பத்து வெள்ளைப் பெண் உண்டு. அந்தக் காதல் பெற்றோர்களுக்கும் மக்களுக்கும் எந்த விரோதத்தையும் உண்டு பண்ணினதில்லை. இதிலே ஒளிவு மறைவுகள், இலை மறைவு, காய் மறைவு எதுவும் கிடையாது. ‘இவனை நான் காதலிக்கிறேன்’ என்று தன் தாய் தந்தையிடம் தன் காதலனை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தும் துணிவும் நேர்மையும் ஒரு பெண்ணுக்கு அங்கே உண்டு. கமலியைப் பொறுத்த மட்டிலே இண்டியன் ஸ்ட்டீஸ் ஃபேகுல்டியில் ரவியிடம் ‘இண்டாலஜி’ படிக்க வந்த போது அவளாகவே விரும்பி ரவியால் வசீகரிக்கப்பட்டுத் தான் அவனைக் காதலிச்சிருக்கா… இதை அவளே எங்கிட்ட மனசு விட்டுச் சொன்னா மாமா…”

 

    • “இனிமே யாரைச் சொல்லி என்ன பிரயோஜனம் அம்மா…? நான் என் தலையிலேதான் செருப்பாலே அடிச்சுக்கணும். ரவியை நான் பிரான்சுக்கு உத்தியோகம் பார்க்கப் போகவே விட்டிருக்கப்படாது….”

 

    • “நீங்க சொல்றது வேடிக்கையாகத்தான் இருக்கு சர்மா…! இன்னும் கொஞ்ச நாழி போனா ‘அவனை நான் பெத்தே இருக்கப்படாது’ன்னு கூட வருத்தப் படுவேள் போலிருக்கே?” – என்று சிரித்துக் கொண்டே மெல்லக் கேட்டார் வேணு மாமா.

 

    • சிறிது நேரம் மௌனத்திற்குப் பின் சர்மாவே தொடர்ந்து பேசலானார்.

 

    • “நீங்க ரெண்டு பேரும் இப்ப நான் என்னதான் செய்யணும்னு சொல்றேள்? சொல்லுங்கோ…? இந்த லெட்டருக்குப் பதில் எழுதணுமோ, வேண்டாமோ…? வரச் சொல்லி எழுதவும் எனக்குப் பிரியம் இல்லே. வர வேண்டாம்னு சொல்லி எழுதவும் என் மனசு துணியலே…”

 

    • “சொந்தப் பிள்ளையை வர வேண்டாம்னு எழுதறத்துக்கு உங்களுக்குப் பயித்தியம் பிடிச்சிருக்கா என்ன…”? அப்பிடி எழுதற அளவுக்கு அவன் தான் பெரிசா என்ன தப்புப் பண்ணிட்டான்?”

 

    • “இது வரை பயித்தியம் ஒண்ணும் பிடிக்கலே… நீங்களும் அவனும் படுத்தற பாட்டைப் பார்த்தா இனிமேல்தான் அதெல்லாம் பிடிக்கணும்…”

 

    “ஏன் இப்படி எல்லாம் பேசறேள் சர்மா…? உங்களுக்குப் பகவான் கிருபையிலே ஒரு கொறையும் வராது. எல்லாம் தெய்வசங்கல்பப்படி நல்லவிதமா நடக்கும். தயவு பண்ணிக் கொஞ்சம் நான் சொல்றதை இப்போ பொறுமையா கேட்கணும் நீங்க” என்று இதமாக ஆரம்பித்தார் வேணு மாமா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23

அத்தியாயம் 23 வேணு மாமா ரவியைக் கேட்டார். “எக்ஸ்பிரஸ் டெலகிராமாக் குடுத்தியோ? ஆர்டினரியாக் குடுத்தியோ? இங்கே அவ சீக்கிரம் வந்தாகணும்.” “எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம்பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பாயிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?” சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 20

அத்தியாயம் 20 தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 30தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 30

அத்தியாயம் 30 “இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற்கும், வளர்ப்பதற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடையாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்புமுள்ள தனி மனிதர்களால்