சாவியின் ஆப்பிள் பசி – 28

சாமண்ணாவும் சுபத்ராவும் உள்ளே நுழைந்ததும் சிங்காரம் ஹால் சோபாவில் போய்க் காத்திருந்தான். கோமள விலாஸ் போவதற்கு சாமண்ணா கார் அனுப்புவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு சிப்பந்தி பெரிய வெள்ளித் தட்டில் சீமை பாட்டில் ஒன்றை வைத்து உள்ளே போய்க் கொண்டிருந்தான்.

‘அண்ணன் குடிப்பாரோ?’

அடுத்தாற்போல் இரண்டு சிப்பந்திகள் தட்டு நிறையத் தின்பண்டங்களை எடுத்துப் போனார்கள்.

ஹாலில் தாத்தா காலத்துக் கடிகாரம் ஒன்று நீளமான பெண்டுலத்தை ஊஞ்சலிட்டுக் கொண்டிருந்தது.

சாமண்ணா இருந்த அறைக் கதவு திறக்கும் போதெல்லாம் கே.ஸி. டேயின் சங்கீதம் விட்டு விட்டு ஒலித்தது.

நிமிட முள் இருபது முறை கடிகார முகத்தைச் சுற்றும் வரை காத்திருந்தான். பசி எடுத்தது. ஆயாசம் வந்தது. ‘என்ன, ஒருவேளை அண்ணன் மறந்துட்டாரா?’

யாரோ இரண்டு பேர் உள்ளே வந்தார்கள். புது ஆசாமிகள். “நீங்க யாரு?” என்று சிங்காரத்தைக் கேட்டார்கள்.

“ஐயா இருக்கச் சொன்னாரு!”

“யாரு, சாமண்ணாவா?”

“ஆமாம்.”

“அவர் இனிமே இன்னிக்கு வெளியே வரமாட்டார். நீங்க போகலாம்” என்றனர்.

“வர மாட்டாரா? என்னைக் காத்திருக்கச் சொல்லிட்டுப் போனாரே! கார் அனுப்பறதாச் சொன்னாரே!”

“சொல்லியிருப்பார். இப்போ யாரோ வந்துட்டாங்க! முக்கியமான விஷயம் பேசிட்டிருக்காங்க. இப்ப அவர்கிட்டே யாரும் போய் எதுவும் பேச முடியாது. நீங்க நாளைக்கு வாங்க.”

இங்கும் அங்கும் பார்த்துவிட்டு மெள்ள வெளியே சென்றான். ‘அண்ணன் ஒரு வார்த்தை டிரைவர் கிட்டே சொல்றதுக்குள்ளே மளமளன்னு இவ்வளவும் நடந்து போச்சு! அண்ணன் என்ன செய்வாரு, பாவம்! மறந்திருப்பாரு!’

வாசல் தோட்டம் பூராவும் நடந்து போய்த் தயங்கினான். கேட்டில் நின்ற காக்கிச் சட்டை ஒரு மாதிரியாகப் பார்க்க, ‘பாஷை தெரியாதவன். ஏதாவது திட்டப் போகிறான்’ என்று அஞ்சி அவசரமாக வெளியே நடந்தான்.

‘சினிமான்னா அது வேற மாதிரிதான். அண்ணனும் அந்த அம்மாவும் ஒத்திகை எடுக்கறாங்க போல இருக்கு! அடேயப்பா! அந்த அம்மா என்னமா இருக்காங்க!”

ரிக்ஷாவைத் தேடினான்.

‘ஒரு வேளை இவங்களை ஜோடி ஆக்கி வச்சுட்டாக் கூட…’

அப்படி நினைக்க சிங்காரப் பொட்டுவுக்கு மனம் ஒப்பவில்லை. அந்த எண்ணத்தோடு இணங்க அவன் மனம் மறுத்தது. தமிழ்நாட்டை விட்டு சாமண்ணாவையும் அவனது அபார நடிப்பையும் வெளியே விட்டுவிடத் தயாராக இல்லை.

ஊர் சுற்றிப் பார்த்தான். வீதிகளில் நடந்தான். கால் வலி எடுக்கும் வரை அலைந்தான். பசி எடுக்கவே கோமள விலாஸுக்குப் போய்ச் சாப்பிட்டான். பிறகு படுத்ததுதான் தெரியும். அயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மீண்டும் அந்த பங்களாவுக்கு வந்து சேர்ந்தான்.

முந்திய தினத்தைப் போலவே இன்றும் பல பேர் உட்கார்ந்திருந்தார்கள்.

தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த சாமண்ணா சிங்காரத்தைப் பார்த்துவிட்டு, “என்ன சிங்காரம்! நீ வந்திருக்கே இல்லே! நேத்து வந்தே இல்லே! மறந்தே போயிட்டேன். எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியலை. கோமள விலாஸ்லதானே தங்கியிருக்கே! அங்கேயே இருந்துக்க. செலவைப் பற்றிக் கவலைப்படாதே. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். எத்தனை நாள் இருப்பே?” என்று நேற்று சொன்னதையே திரும்பச் சொன்னான்.

“எனக்கு இங்கே என்ன வேலை? உங்களைப் பார்த்தாச்சு. புறப்பட வேண்டியதுதான். அதுக்கு முன்னாடி ஒரே ஒரு ஆசை!”

“என்ன சொல்லு.”

“நீங்க சினிமாவிலே நடிக்கிறதை என் கண்ணாலே பார்த்துடணும்!”

“இவ்வளவுதானா? சினிமா எடுக்கிறதைப் பார்க்கணுமா?”

“ஆமாம்!”

“அடப் பாவமே! வெளிப்புறக் காட்சியெல்லாம் எடுத்தாயிட்டுதே! நாளைக்கு மறுபடியும் காட்டுக்குள்ளே போய் எடுக்கப் போறாங்க. அதுதான் கடைசி.”

“நானும் வரேன், காட்டுக்குள்ளே!”

“அங்கே விருந்தாளிங்க யாரையும் அழைச்சுட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க!”

“அதுக்கப்புறம் வேற எங்கயும் எடுக்க மாட்டாங்களா?”

“மங்களக் காட்சி மட்டும் இங்கே திரும்பி வந்து எடுப்பாங்க! ஒரு வாரம் ஆகும். அதுவரை நீ இங்கேயே தங்கிடு! அடுத்த வாரம் அந்த மங்களக் காட்சியைப் பார்த்துட்டுப் போகலாம்!” என்றான் சாமண்ணா.

“ரொம்ப சந்தோஷம்.”

“அப்போ, ஓட்டலுக்குப் போறியா? வண்டியிலே உன்னை அனுப்பி வைக்கிறேன். யாரப்பா! டிரைவரைக் கூப்பிடு.”

இந்த முறை ரிக்ஷாவுக்கு அலையாமல் கப்பல் போன்ற காரில் மிகப் பெருமையோடு போய் ஓட்டல் வாசலில் இறங்கினான் சிங்காரப் பொட்டு.

முந்திய நாள் தோன்றிய சிறுமை நினைவுகள் யாவும் இன்று அழிந்து விட்டன. சந்தோஷ அலைகள் மனத்தைப் புரட்டி எடுத்தன.

ஓட்டலில் தங்கிக் கொண்டு தினம் ஒரு இடமாகப் போய்ப் பார்த்து விட்டு வந்தான். தினமும் கொஞ்சம் ‘விஸ்கி’ போட்டுக் கொண்டான்.

கல்கத்தா உண்மையில் பெரிய அதிசயபுரியாகத் தோன்றியது. இரவில் பார்க் தெருப் பக்கம் போனபோது விளக்குகள் செய்த ஜாலங்களும் நாகரிக யுவதிகளின் நடமாட்டமும் சொப்பனம் போல் இருந்தன.

ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. கணக்காக எட்டாவது நாள் சாமண்ணா வீட்டில் போய் நின்றான்.

சாமண்ணா இன்னும் அவுட்டோர் ஷூட்டிங்கிலிருந்து திரும்பி வரவில்லை என்று சொன்னார்கள்.

எப்படியும் அண்ணன் சினிமாவில் நடிப்பதை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானமாய்க் காத்திருந்தான்.

மேலும் ஒரு வாரம் தாமதித்த பின் மீண்டும் சாமண்ணாவைத் தேடிச் சென்ற போது வீட்டு வாசலில் பலர் கும்பல் கும்பலாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சூழ்நிலையில் சோகம் தெரிந்தது.

தோட்டத்தில் ஆம்புலன்ஸும் கார்களும் பரபரப்பாயிருந்தன. சாமண்ணா திரும்பி வந்திருக்கும் அறிகுறிகள் தென்பட்டன. கூட்டமாக நின்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அறிந்த போது ‘திகீர்’ என்றது. டாக்டர்களும் நர்ஸுகளும் இங்குமங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். “சாமண்ணாவுக்கு என்ன? ஏதாவது விபத்தா?” உள்ளே சென்று விசாரித்தான்.

“ஆமாங்க. காட்டுக்குள் குதிரை சவாரி பண்ணி வரப்போ கீழே விழுந்துட்டார். பலத்த அடி. பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்.”

“ஐயோ! உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?”

“காலிலே அடின்னு சொன்னாங்க!”

“சாதாரண அடிதானே!”

“தெரியாது; இன்னும் நினைவு வரவில்லை.”

சிங்காரப் பொட்டு வேகமாக நடந்து முன்னேறிப் போனான். தடுப்பவர்களை அவன் பொருட்படுத்துவதாக இல்லை. அப்படி ஒரு பாச வெறி அவனிடம் கிளைத்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 47கல்கியின் பார்த்திபன் கனவு – 47

அத்தியாயம் 47 காட்டாற்று வெள்ளம் சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! – என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 7திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 7

அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும். அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 22திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 22

ஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்டதால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலைகளைக் கொய்து கொண்டு வருகிறான். மஞ்சள் பூச்சு