சாவியின் ஆப்பிள் பசி – 27

டிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தாள் சகுந்தலா. உலகத்து ஆனந்தத்தை, உல்லாசத்தை, இன்பத்தை யாரோ அப்படியே ஒரு போர்வை போல் உருவி எடுத்து விட்ட மாதிரி இருந்தது அவளுக்கு. இந்த மல்லிகை ஓடையில் முன்பெல்லாம் இருந்த ஒரு குதூகலமான உயிரோட்டம் இப்போது எங்கே?

உணர்ச்சியின் முதல் திவலை கண் ஓரம் வந்தது. சகுந்தலா தேம்பினாள். நெஞ்சு அடிக்கொரு முறை விம்மியது. அந்தத் தனிமையில், லேசாக இருள் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவளால் மனம் விட்டு அழ முடிந்தது.

அவள் தனிமையில் நின்று அழுவதைச் சற்று தூரத்தில் ஒளிந்து கவனித்துக் கொண்டிருந்தது ஓர் உருவம். அதை சகுந்தலா கவனிக்கவில்லை. இருள் கனக்கவே, அதற்கு மேல் அந்த இடத்தில் இருப்பதற்கு அஞ்சியவளாய் காருக்குச் சென்றாள். உடனேயே அந்த உருவமும் லேசாக ஓடி அங்கே மரத்தோடு சாத்தி வைத்திருந்த சைக்கிளில் ஏறிக் காற்றாய்ப் பறந்தது.

அந்த உருவம் ராமமூர்த்திதான். தம் மகளுடைய போக்கில் ஏதோ துயரம் நேர்ந்திருப்பதை ஊகித்த அவர், அவள் தனிமையில் எழுந்து சென்றதுமே ரகசியமாகப் பின் தொடர்ந்து போய் மறைந்து நின்று கவனித்தார். இப்போது அவளுக்கு முன்னால் குறுக்கு வழியில் புகுந்து வேகமாய் வீடு போய்ச் சேர்ந்து விட்டார்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே, “மிஸ்டர் ராமமூர்த்தி!” என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

“இன்னிக்கு என்ன கிளப்புக்கு வரல்லியா?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் பஞ்சாபகேசன்.

“இல்லை! எனக்கு உடம்பு சரியில்லை.”

“அப்படியா! சரி; ஓய்வு எடுங்க! நான் வரேன்!” என்று போய்விட்டார் பஞ்சாபகேசன்.

சகுந்தலாவை எண்ணியபோது ராமமூர்த்திக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார். இதற்குள் சகுந்தலா வந்துவிட்டாள். அவள் காரிலிருந்து இறங்கும் போதே, “வந்துட்டியா சகுந்தலா! ஒரே கவலையாயிடுத்து!” என்றார்.

கல்கத்தாவுக்குப் போகும் போது அவளிடமிருந்த ஆனந்தம், அங்கே அவளிடம் காணப்பட்ட குதூகலம் எல்லாம் இப்போது மேகத்தில் மறைந்து விட்டன.

கல்கத்தாவைச் சுற்றிப் பார்க்கக் கூட விருப்பமின்றித் திரும்பி விட்ட விரக்தி, ஊருக்குத் திரும்பியதும் சோர்ந்து படுத்துவிட்ட நலிவு, காய்ச்சல், அவளை விட்டுப் போய்விட்ட அந்த நிரந்தர உல்லாசம், சிரிப்பு, புன்னகை – இதற்கெல்லாம் என்ன காரணம்?

இன்று மல்லிகை ஓடைப் பாதையில் அவள் தனிமையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.

காதல் என்ற மாயப்பிணி சகுந்தலாவையும் பற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்தக் காதல் யார் மீது?

‘சாமண்ணா மீதா? படிப்பு வாசனையே இல்லாத அந்தப் பாமர நடிகனையா சகுந்தலா காதலிக்கிறாள்?

இவ்வளவு நாகரிகமாக வளர்ந்துள்ள சகுந்தலாவா சாமண்ணாவைக் காதலிக்கிறாள்?

தனக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத, அந்தஸ்து இல்லாத ஒரு சாதாரண நடிகனைத் தேர்ந்தெடுக்க அவள் மனம் எப்படி ஒப்பியது?

ஒருவேளை அவன் கலையில், நடிப்புத் திறமையில் மயங்கி விட்டாளா? ஆச்சரியம்!

சகுந்தலா! வாழ்க்கையில் எத்தகைய தவறு செய்து விட்டாய் நீ! உன் உள்ளத்தை நீ ஒருவனிடம் பறிகொடுப்பது தவறல்ல! அது இயற்கை, ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த ‘ஒருவன்’ அதற்குத் தகுதியானவன் தானா என்பதைச் சிறிதாவது யோசித்துப் பார்த்தாயா? படித்த பெண்ணான நீயா இப்படிச் செய்வது?’

மறுநாள் மாலை டாக்டர் டிஸ்ட்ரிக்ட் கிளப்புக்குப் போயிருந்த போது அங்கே ‘ஸில்வர் ஸ்க்ரீன்’ என்ற பத்திரிகை வந்திருந்தது.

அதன் நடுப் பக்கத்தில் காணப்பட்ட வண்ணப்படம் ஒன்று அவருக்கு எரிச்சல் மூட்டியது.

சாமண்ணாவும், சுபத்ரா முகர்ஜியும் தம்பதி போல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றனர்.

கீழே ஆங்கிலத்தில்… “இவர்கள் வெறும் திரை ஜோடி மட்டுமல்ல! வாழ்க்கை ஜோடியாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று ஒரு வாசகம்.

‘தூ’ என்று அதைத் தூக்கி எறிந்தார். வெளியே போக எழுந்தவர் ஒரு கணம் தயங்கி அந்தப் பத்திரிகையைக் குனிந்து கையோடு எடுத்துக் கொண்டார். நேராக வீட்டுக்குப் போய் சகுந்தலாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தார். அவளை அங்கே காணவில்லை. சட்டென அவளது மேஜை மீது அந்தப் படத்தைப் பரப்பி வைத்துவிட்டு வெளியே வந்தார். ‘சகுந்தலா அந்தப் படத்தைப் பார்ப்பாள். பார்த்துவிட்டுக் கண்ணீர் விடுவாள். சாமண்ணாவின் துரோகம் அவளைச் சுட்டுப் பொசுக்கும். உடம்பெல்லாம் தனலாய் தகிக்கும். அந்தத் துயரம் மிக்க உச்சத்தில் அவள் கண்ணீர் விடும்போது நாம் அருகில் இருக்கக் கூடாது. எங்காவது வெளியே போய்விட வேண்டும்.” உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளப் கட்டடத்தை நோக்கி விரைந்தார்.

கல்கத்தாவைப் பார்த்ததும் சிங்காரப் பொட்டு மலைத்து நின்றுவிட்டான். ஆடம்பரங்கள் நிறைந்த குபேரப் பட்டணமாக மின்னியது அது. நிறைய இங்கிலீஷ் காரிகள் உலாவினார்கள். கார்கள் புதிது புதிதாக ஓடின. பெரிய மாளிகைகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், சாலை மரங்களும் கம்பீரமாக நின்றன. ஹௌரா பிரிட்ஜ் ஆச்சரியத்தைத் தந்தது. டிராம் கார் ‘கிணுங், கிணுங்’ என்று மணி அடித்தது.

தமிழர் பகுதியில் ‘கோமள விலாஸ்’ ஓட்டலில் ரூம் பிடித்து, குளித்து சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பி சாமண்ணாவைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டான். ‘உனக்கு வாழ்வு தந்த நண்பனை வெறுங்கையோடு பார்க்கலாமா?’ என்று கேட்டது உள்குரல். வழியில் வங்காளிப் பெண் ஒருத்தி ஆஸ்திரேலிய திராட்சையைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். அழகாயிருந்தாள். பேரம் செய்யாமல் வாங்கிக் கொண்டான்.

பிறகு சாமண்ணாவின் விலாசம் கண்டுபிடித்து அந்தப் பெரிய பங்களா முன்னால் போய் நின்ற போது காக்கிச் சட்டை காவல்காரன் தடுத்து நிறுத்தினான். உடம்பு குறுகிவிட்டது. “சாமண்ணாவின் நண்பன். கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்று சொல்லி அனுமதி பெற்றான். சிறிதும் பெரிதுமாகப் பல கார்கள் சாமண்ணாவுக்காகக் காத்திருந்தன. வராந்தாவில் நின்ற இளைஞன் ஒருவன் சிங்காரப் பொட்டுவின் பெயரைக் கேட்டுச் சீட்டில் எழுதி வாங்கிக் கொண்டு, “இப்படி உட்காருங்க, கூப்பிடறோம்” என்று முகப்பு ஹாலில் உட்கார வைத்தான்.

மேலே பிரம்மாண்டமான ‘சேண்ட் லியர்’ ஒன்று காற்றில் அசைந்த போது சிறுசிறு கண்ணாடிக் குழல் சரங்கள் ‘கிணுகிணு’த்தன.

எதிரே சுவரில் கங்கைக் கரைக் காட்சியின் ஓவியம் தத்ரூபமாக இருந்தது. சில்க் பிடிகளுடன் நீளநீளமாய் வெல்வெட் சோபாக்கள்! நடுவில் ஓவல் வடிவத்திலிருந்த மேஜையின் பளபளப்பு பிரதி பிம்பம் காட்டியது.

சிங்காரப் பொட்டுவுக்கு முன்பே வந்து ஹாலில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருத்தராக உள்ளே போய் வந்தார்கள். ‘அண்ணன் சாமண்ணாவைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம்! அண்ணனுக்கு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் வந்து விட்டதா!’

மனசில் சந்தோஷம் புரண்டது.

‘அடடே, ஊரிலேர்ந்து வக்கீல் ஐயா, அவங்க சம்சாரம், குமாரசாமி, பாப்பா இவங்கல்லாம் வந்து பார்க்காமப் போயிட்டாங்களே!’

எல்லோரும் போன பிறகு சிங்காரப் பொட்டு கடைசியாக அழைக்கப்பட்டான்.

உள்ளே ஒரு நடையைத் தாண்டி அந்தப் பெரிய அறைக்குள் காலை வைத்ததும் சாமண்ணா தென்பட்டான். அந்தக் குசேல சாமண்ணாவுக்கும் இப்போது காணும் குபேர சாமண்ணாவுக்கும் எத்தனை வித்தியாசம்! மேனியில் பணக்காரத்தனம் தெரிந்தது. பாவனைகளில் பெரிய மனுஷத்தனம் இருந்தது. “வா சிங்காரம். எப்ப வந்தே? முன்னாடி ஒரு லெட்டர் போட்டிருக்கக் கூடாதா? ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பியிருப்பேனே? எல்லாரும் நல்லாயிருக்காங்களா? நாடகமெல்லாம் நடக்குதா?” என்று ஒரு தோரணையுடன் கேள்விகளை அடுக்கினான்.

மேஜைகளும் மற்ற சாதனங்களும் விதவிதமாய்க் குவிந்திருக்க, மேலே சில்க் பங்கா ஒன்று பெரிய ஊஞ்சல் போல ஆடியது.

“அண்ணே!” என்று கூறிய சிங்காரப் பொட்டுவுக்குச் சந்தோஷத்தில் நெஞ்சு விம்மியது. அவனையும் மீறித் தாவிப் போய் பரதன் வேடத்தில் ராமனைக் கட்டிக் கொள்வது போல் தழுவிக் கொண்டான்.

அப்படியே அவன் தோள் மேலே வளைத்துக் கை போட்டுக் கொண்டு யாரும் பார்க்காதபடி அடுத்த அறைக்குள் அழைத்துப் போய் விட்டான்.

“இந்தா சிங்காரம்! நம்மூர் மாதிரி உரக்கப் பேசாதே! நாட்டுப்புறம்னு நினைப்பாங்க! இப்படி உட்காரு. உன்னைக் காக்க வெச்சதுக்குக் காரணம் அவங்களை முதல்லே அனுப்பிச்சுட்டு உன்னோடு சாவகாசமாப் பேசணும்னுதான்.”

இன்னும் உணர்ச்சி வசத்தில் இருந்த சிங்காரப் பொட்டு, “அண்ணே, நீங்க இப்படி இவ்வளவு பெரிய ஆளா வருவீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும். அதனாலேதான் நீங்க கல்கத்தா போறதை நான் தடுக்கலை. இப்போ உங்க வாழ்க்கை அடியோடு மாறிப் போச்சு! என் மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது… எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க” என்று சொல்லி திடீரென்று முழங்கால் போட்டு சாமண்ணாவின் கால்களைப் பற்றினான்.

“இந்தா! இந்தா! சிங்காரம்! என்ன இதெல்லாம்?” என்று சாமண்ணா பதற்றத்தோடு கால்களை உயரத்தில் தூக்கிக் கொள்ள, பிடிவாதமாய் அவன் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான் சிங்காரம்.

“உங்ககிட்ட ஒரு முக்கிய சமாசாரம் சொல்லணும் அண்ணே! அதுக்குத்தான் கல்கத்தா வந்திருக்கேன்!”

“சிங்காரம்! நீ எது வேணுமானாலும் சொல்லு. ஆனா இந்த ‘அண்ணே, அண்ணே’ மட்டும் வேணாம். இப்ப சொல்லு. அதென்ன அப்படிப்பட்ட சமாசாரம்?” என்று கேட்டான் சாமண்ணா.

“நீங்க நாடகத்தை விட்டுட்டுப் போனீங்களா? உங்க இடத்தை எனக்குத் தந்துட்டுப் போனீங்களா? நானும் அதிலே நடிச்சேனா? இப்போ பேரும் புகழுமா வாழறேன். பணங்காசும் நிறையவே கிடைக்குது. அண்ணன் புண்ணியத்திலே, (நாக்கைக் கடித்துக் கொண்டு) உங்க புண்ணியத்திலே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” என்றான் சிங்காரப் பொட்டு.

கையோடு கொண்டு வந்திருந்த திராட்சைப் பழங்களை எடுத்துச் சாமண்ணாவின் முன் வைத்தான்.

சாமண்ணாவின் இடது மூக்கோரம் ஒரு வரி தோன்றி சட்டென்று மறைந்தது. “இதெல்லாம் எதுக்கு?” என்று ஒரு பந்தாவோடு செல்லமாகக் கண்டித்தான்.

“இன்னிக்கு உங்களால்தானே எனக்கு இந்தப் பவிசெல்லாம்? அதை நான் மறந்துட முடியுமா?”

“சிங்காரம்! நீ எனக்கு ஒரு முறை விட்டுக் கொடுத்தாய். அதைப் போல நான் ஒருமுறை உனக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பர உதவி! அவ்வளவுதானே?” என்றான் சாமண்ணா.

“எனக்கு நீங்க செஞ்ச உதவி சாதாரணம் இல்லை. நீங்க போட்ட பிச்சையிலே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இல்லாட்டி எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைச்சிருக்குமா?”

“சிங்காரம்! உன் அன்பை இங்கே இவ்வளவு தூரம் வந்து தெரிவிச்சிருக்கணும் என்கிறதில்லை. ஒரு காலணா, கார்டு போட்டிருந்தாலே போதுமே! அதையே நான் பெரிசா நினைச்சிருப்பேன். நீ மேலுக்கு வந்தது, உனக்குப் புகழ் வந்தது எல்லாம் கேட்கிறப்போ சந்தோஷமா இருக்கு. நீ இன்னும் பிரமாதமா வரப் போறே பாரு! வாழ்க்கையிலே திறமை இருந்தா அதை யாரும் தடை போட முடியாது! இப்போ… இப்போ”

பேச்சு பாதி யந்திரத்தனமாக வந்தது. அடிக்கடி சாமண்ணா வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்போ நீ ரொம்பக் களைச்சுப் போயிருப்பே! ஓய்வு எடுத்துட்டு அப்புறமா வா. சாவகாசமாப் பேசலாம். நான் கொஞ்சம் வெளியிலே போக வேண்டியிருக்கு. ஆமாம்; நீ எங்கே தங்கி இருக்கேன்னு சொன்னே?”

“கோமள விலாஸ்” என்றான் சிங்காரப் பொட்டு.

“ரைட்! நம்பளவங்களுக்கு அதுதான் சரியான இடம்! ஓட்டல்காரர் பாலக்காடு ஐயர்தான். எனக்குத் தெரிஞ்சவர் தான். ஓட்டல் பில் பணத்தை நான் கொடுத்திடறேன். நீ ஒரு சல்லிக் காசு செலவழிக்கக் கூடாது…”

“உங்க பிரியம்…”

“நிறையப் போடாதே! நாகரிகமா நடந்துக்கணும்” என்று கண்சிமிட்டி வலது கட்டை விரலை வாய்க்கு நேராய்க் காட்டினான் சாமண்ணா.

அந்த நேரத்தில் வாசலில், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வந்து நிற்க, சாமண்ணா விரைந்து போய் காரின் பின் கதவைத் திறக்க, அதிலிருந்து பேரழகி சுபத்ரா முகர்ஜி சொகுசாக இறங்கி வந்தாள்.

நீல நிறத்தில் பனாரஸ் பட்டு உடுத்தியிருந்தாள். பவுன் களை அடிக்க, சந்திரன் முளைத்தது போல் ஒரு தோற்றம்.

சிங்காரப் பொட்டுவின் கண்கள் சலனமற்று நின்றன. உள் மனம் பேசியது! “அடேங்கப்பா! என்ன அழகு? அசல் அப்சரஸ் மாதிரில்லே இருக்காங்க! இவங்க முன்னாலே நம்ப ஜில்ஜில் ரமாமணி ஒரு தூசு மாதிரி! இவங்களை மட்டும் ஊருக்கு அழைச்சிக்கிட்டுப் போய் மேடைலே ஏத்திட்டா, அத்தனை பயகளும் சொக்கிப் போயிடுவானுக!”

சாமண்ணாவும் சுபத்ராவும் கைகோத்துப் படியில் ஏறினார்கள்.

“மெதுவா நடங்க, மெதுவா!” என்று சாமண்ணா சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் அந்தரங்க அறைக்குள் சென்று மறையும் வரை சிங்காரப் பொட்டு காத்திருந்தான். கண் கொட்டாமல் அவர்களையே பார்த்து நின்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 19கல்கியின் பார்த்திபன் கனவு – 19

அத்தியாயம் 19 தந்தையும் மகளும் குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள். இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 51கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 51

அத்தியாயம் 51 – காலைப் பிறை முத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ? பொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணியிருந்தாளோ, அது

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 31கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 31

அத்தியாயம் 31 – காதலர் ஒப்பந்தம்      கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மாமரத்தில் பட்டுப் போல் சிவந்த இளம் இலைகளுக்கு மத்தியில் கொத்துக் கொத்தாக மாம் பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூக்கள் இருக்குமிடந் தெரியாதபடி வண்டுகளும், தேனிக்களும் மொய்த்தன. அவற்றின் ரீங்கார சப்தம் அந்த