சாவியின் ஆப்பிள் பசி – 25

சாமண்ணா அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போன போது சுபத்ரா முகர்ஜிக்கு மூர்ச்சை தெளிந்திருந்தது. ஆனாலும் மெலிந்து வாடிப் போயிருந்தாள். ஈனசுரத்தில் பேசினாள். உதடுகள் தெளிவில்லாத ஓசைகளை விடுத்தன. நகரின் புகழ் பெற்ற டாக்டர் மக்டனால்ட் துரையே வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “‘பல்ஸ்’ சரியாக இருக்கிறது. யூ ஆர் ஆல் ரைட்?” என்று சொல்லிவிட்டுப் போனார். இரண்டு ஐரோப்பிய நர்சுகள் எந்நேரமும் படுக்கை அருகிலேயே இருந்தார்கள்.

சாமண்ணா உள்ளே நுழைந்தபோது யாரோ வசீகரமான வாலிபன் ஒருவன் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருந்தான். கிருதா மீசை வைத்திருந்தான். அவனைப் பார்த்தபோது சாமண்ணாவுக்கு ஏதோ மாதிரி இருந்தது. நெஞ்சில் உஷ்ணமாக ஜ்வாலை வீசியது.

யார் அவன்?

சுபத்ராவைத் தொட்டு அந்நியோன்யமாய்ப் பேசுகிறான். ஜோக் அடித்துச் சிரிக்கிறான். அவளும், ‘கோஷ்! கோஷ்!’ என்று கொஞ்சி அழைத்து நெருக்கம் கொண்டாடி இழைகிறாள். எல்லோரும் அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

செக்கச்செவேர் என்று நிறம். திண்மையாகப் புருவம். பளபள என்று வாரிவிட்ட கிராப்!

சாமண்ணா தெரிந்தவர்களிடம் நாசூக்காக விசாரித்தபோது, அவன் பெரிய ஜூட் மில் சொந்தக்காரர் மகன் என்றும் சுபத்ராவிடம் ரொம்ப நாளாகப் பழக்கம் என்றும் சொன்னார்கள்.

இரவில் சுபத்ராவைப் பற்றிய இன்ப எண்ணங்கள் குமிழ்குமிழாகச் சுழித்து வந்தபோது அங்கங்கே அந்த இளைஞனின் நினைவு ஒரு முள் போலத் தோன்றி அந்தக் கண்ணாடிக் குமிழ்களைக் குத்திவிட்டுச் சென்றது.

இவர்களுக்குள் அப்படி என்ன உறவாக இருக்க முடியும்? தூரத்து உறவுக்காரனோ? காதலனா, கல்லூரித் தோழனா? யார் இவன்?

இரண்டாம் நாள் சாமண்ணா ஆஸ்பத்திரிக்குப் போனபோது, சேட் அவனைத் தனியாக அழைத்துப் போய், “சாமண்ணாஜி! சுபத்ரா எழுந்தாச்சு. இப்போ உடம்பு குணமாயிட்டுது! ரெண்டு நாளில் ‘ஆக்ட்’ பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார். ஆனா தர்பார் சீனை இப்போ எடுக்க வேணாம். வேறே சீன் எடுங்கன்னு சொல்லியிருக்கார்.”

“ஏனாம்?” என்றான் சாமண்ணா.

“அந்த சீன்லே உங்க நடிப்புதான் அவளை இந்த அளவுக்குப் பாதிச்சுட்டுதாம். அதனால் அதைத் தள்ளிப் போடச் சொல்லியிருக்கார்.”

“அப்படியா?”

“ஆமாம். ஆஸ்பத்திரியில் கூட சுபத்ரா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. ‘நான் நிஜ சகுந்தலை! நான் நிஜ சகுந்தலை’ன்னு. டாக்டர் இதை ஒரு அபூர்வ கேஸ் என்கிறார். அதாவது தான் நடிக்கிற பாத்திரமாகவே மாறி, தன்னை சகுந்தலையாகவே அந்த அம்மா நினைச்சுக்கறாங்களாம். அந்த நினைப்பில்தான் அன்னிக்கு மூர்ச்சை ஆயிட்டாங்களாம்!”

சேட் சொன்னதும் சாமண்ணவுக்குப் பளிச்சென்று ஓர் எண்ணம் உதித்தது. ஒருவேளை தன்னை அவள் கணவனாகவே தீர்மானித்துக் கொண்டு, அந்தப் பிரமையில் துஷ்யந்தன் நிராகரிப்பதை உண்மையாக எடுத்துக் கொண்டு விட்டாளோ?

சாமண்ணா மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை வெளிக் காண்பிக்கவில்லை. அன்று வார்டுக்குள் நுழையும்போது சுபத்ராவே அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

மெல்லிய வெளிச்சத்தோடு அறை நிதானமாக இருந்தது.

சாமண்ணாவைக் கண்டதும், “வாங்க சாமண்ணா!” என்றாள் ஆர்வத்தோடு.

தன் அருகில் உட்கார்ந்திருந்த கோஷை அலட்சியமாகப் பார்த்து, “சரி, அப்புறம் பார்க்கலாம் கோஷ்” என்றாள்.

சாமண்ணா வந்ததும் அவள் மாறுதலாக நடந்து கொள்வதை கோஷ் புரிந்து கொண்ட போதிலும் எழுந்திருக்காமல் தயங்கினான்.

“எனக்கு ஓய்வு வேணும். நல்லாத் தூங்க விரும்பறேன். ஒரு ரெண்டு நாள் யாரும் வராம இருந்தா நல்லது” என்று ஆங்கிலத்தில் கூறினாள் அவள்.

கோஷ் அப்போதும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சுபத்ரா,

“கோஷ்! உங்களைத்தான் சொல்கிறேன்” என்று சற்று அழுத்தமாகக் கூறினாள்.

கோஷ் குமைவது தெரிந்தது.

இந்தச் சமயத்தில் சாமண்ணாவுக்கு அங்கிருப்பது உசிதமாகப் படவில்லை. அவன் திரும்பி வெளியே நடந்தான். “சாமு! நீங்க எங்கே போறீங்க? நீங்க இருங்க” என்றாள் சுபத்ரா. வெறும் குரலாக இல்லை அது! அவளுடைய ஆன்மாவின் அந்தரங்க தொனியாக ஒலித்தது.

“இல்லை சுபத்ரா! நான் அப்புறம் வரேன்…” என்று கூறிக்கொண்டே சாமண்ணா அந்த இடத்தை விட்டு அகலப் பார்த்தான்.

“சாமு!” என்று தாபத்துடன் மேலும் தீர்க்கமாக அழைத்தது அவள் குரல்.

கோஷ் அவர்கள் இருவரையும் கடுமையாகப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து வெளியேறினான்.

சுபத்ரா படுக்கையிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்து சாமண்ணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பிடியின் அழுத்தத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. “சாமு… சாமு… நீங்க வந்தால் தான் எனக்கு மனசுக்கு இதமாக இருக்கு!” என்று குழந்தை போல் சொல்ல, சாமண்ணா எதுவும் பேசாமல் அவளைக் கனிவோடு பார்த்தான்.

இருவரும் அந்தப் பரவச நிலையிலே சிறிது நேரம் மெய்மறந்து இருந்தார்கள்.

ஏதோ சப்தம் கேட்டுக் கைகளை விடுவித்துக் கொண்ட சாமண்ணா திரும்பியபோது ராமமூர்த்தியும், சகுந்தலாவும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

“வாங்க! வாங்க!” என்றான் சாமண்ணா.

“வாங்க டாக்டர்! அன்னிக்கு நீங்கதான் எனக்கு முதலுதவி செஞ்சீங்களாம். ரொம்ப நன்றி” என்றாள் சுபத்ரா.

சகுந்தலா எந்த பாதிப்பும் இல்லாததுபோல் சலனமற்று நின்றாள்.

“ஊருக்குப் போகணும். வந்து நாளாச்சு” என்று பேச்சை ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

“டாக்டர் ஸார்! அதுக்குள்ள என்ன அவசரம்? மெதுவாப் போகலாம் இருங்க. ஊரைச் சுற்றிப் பார்த்தீங்களா? பேலூர் மடம், காளி கோவில் எல்லாம் பார்க்க வேண்டாமா? நான் வேணும்னா நாளைக்குக் கார் அனுப்பறேனே!” என்றான் சாமண்ணா.

‘நீ என்ன சொல்கிறாய்?’ என்பது போல் சகுந்தலாவைப் பார்த்தார் டாக்டர்.

“என்ன சகுந்தலா, நான் சொல்றது?” என்று கேட்டுக் கண்களைச் சிமிட்டி சகுந்தலாவிடம் மாறாத அன்பு கொண்டவன் போல் ஒரு பிரமையை உண்டாக்கினான் அந்த நடிப்புக் கலைஞன்.

சகுந்தலாவின் அடி உதட்டில் அரைகுறையாகச் சின்னப் புன்னகை தோன்றி மறைந்தது. சாமண்ணாவின் கபட நாடகம் அவளுக்குப் புரியாமலில்லை. ஆனாலும் தன் உணர்ச்சிகளை அவள் வெகு திறமையோடு மறைத்துக் கொண்டாள்.

“ஏன் சாமண்ணா, கதாநாயகி திரும்பற வரைக்கும் ஷூட்டிங் கிடையாதுதானே? நீயும் நாளைக்கு எங்களோடு வாயேன்” என்றார் ராமமூர்த்தி.

“நானா?” என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்த சாமண்ணாவின் குரலில் வறட்சி தெரிந்தது. சகுந்தலை ஒய்யாரமாகத் திரும்பி அர்த்தத்தோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“என்னது? என்ன விஷயம்?” என்றாள் சுபத்ரா.

“ஒன்றுமில்லை. நாளைக்கு இவர்களோடு நான் ஊர் பார்க்க வரணுமாம்!”

“நோ, நோ. நீங்க என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க. நீங்க எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும். அப்போதான் நான் உடம்பு தேறி சீக்கிறம் ஷூட்டிங் வர முடியும்!” என்றாள்.

“ரொம்ப சரி. சாமண்ணா உங்களோடயே இருக்கட்டும். நாங்கள் தனியாகவே ஊர் சுற்றிப் பார்த்து விடுகிறோம். என்ன சாமண்ணா! நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் ராமமூர்த்தி. ‘சரி’ என்பதுபோல் தலையாட்டிய சாமண்ணா அவர்களை ஜாடை காட்டி வெளியே அழைத்துப் போனான்.

“எதுக்கும் நான் சாயங்காலம் இவளுக்கு டிமிக்கி கொடுத்துட்டு வந்துடப் பார்க்கறேன். இன்னும் ஒரு அவுட்டோர் தான் பாக்கி. அப்புறம் இவளையும் இந்தக் கல்கத்தாவையும் விட்டுட்டு வந்துடறேன், பாருங்கோ!” என்றான்.

ராமமூர்த்தி அர்த்தமில்லாமல் தலையாட்டிப் புறப்பட்டார்.

வாசல்வரை அவர்களைக் கொண்டுபோய் விட்டு வந்தான் சாமண்ணா.

அன்று இரவு சாமண்ணா உறங்கவில்லை. தங்க மயமான சொர்க்கம் அவன் மீது இறங்கியிருந்தது. எங்கே திரும்பினாலும் தெய்வ வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு இன்பத்தையும் தாங்க முடியாமல் திணறினான் சாமண்ணா.

சுபத்ரா அவன் கையைப் பற்றிய இடம் இன்னும் குளிர்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்துதான் அத்தனை ஆனந்தங்களும் உற்பத்தி ஆகின. அமிருதத் துளிகள் சுரந்து உடல் எங்கும் பரவி நின்றன.

‘நீங்க தான் எனக்குத் துணை’ என்று அவள் கூறிய வார்த்தை செவிகளில் தேனாய் ஒலித்தது.

“என்னை விட்டுப் போயிடாதீங்க, சாமண்ணா.”

ஒரு நிலை கொள்ளா ஆனந்தம் அவனது சரீரத்தை ஆட்கொண்டு சுழற்றுவது போலிருந்தது.

சுபத்ராவா! அந்தக் கல்கத்தா ராணியா? வங்கத்துக் கனவு சுந்தரியா? அவளா என்னை நேசிக்கிறாள்? அவளா இப்படியெல்லாம் பேசுகிறாள்? நினைக்க முடியவில்லையே!

ஏன்? என்னிடம் திறமை இருக்கிறது. தகுதி இருக்க்றது. அந்தஸ்து இருக்கிறது. அதனால் தான் சுபத்ரா என்னிடம் இப்படி மயங்கிக் கிடக்கிறாள்! எப்படிப்பட்ட பெரியவங்க, ஜமீந்தாருங்க சமஸ்தான ராஜாக்கள் எல்லாம் அவள் காலடியில் விழத் தயாராயிருக்கிற போது அவள் என் காலைப் பிடிச்சு கெஞ்சத் தயாராயிருக்கிறாள்!

காலையில் எழுந்ததும் ராமமூர்த்திக்குக் கார் அனுப்ப வேண்டிய நினைவு வந்தது.

சகுந்தலாவின் சலனமற்ற முகத்தை ஆராய்ச்சியோடு எண்ணிப் பார்த்தான்.

ஹூம்! இந்தப் பேரழகி சுபத்ராவின் முன்னால் அவள் ஒன்றுமே இல்லை. அவனுக்கு உயர் ரக ஆப்பிளே கிடைத்தாயிற்று. இனிமேல் சொந்த ஊரில் விளைந்த கிச்சிலிப்பழம் இனிக்குமா?

மணி அடித்து டிரைவரை அழைத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 13கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 13

அத்தியாயம் 13 – பயம் அறியாப் பேதை      முத்தையனைப் போலீஸ் சேவகர்கள் வீதியில் சந்தித்து அழைத்துக் கொண்டு போனதை அச்சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் போக நேர்ந்த செங்கமலத்தாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தச் செங்கமலத்தாச்சி, முத்தையன் குடியிருந்த அதே வீதியில், அவனுடைய

கல்கியின் பார்த்திபன் கனவு – 68கல்கியின் பார்த்திபன் கனவு – 68

அத்தியாயம் 68 பைரவரும் பூபதியும் பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். “சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?” என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு,

கல்கியின் பார்த்திபன் கனவு – 77கல்கியின் பார்த்திபன் கனவு – 77

அத்தியாயம் 77 கனவு நிறைவேறியது நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன் நரசிம்மப் பல்லவரிடம் சென்று அவருடைய ஆசியைக்