சாவியின் ஆப்பிள் பசி – 23

அந்த வட இந்திய அழகியின் கடல் போன்ற விழிகளும், நிறமும், வித்தியாச அமைப்பும் சாமண்ணாவை பிரமிக்க வைத்தன.

‘இப்படி எல்லாம் அழகிகள் இருக்கிறார்களா உலகில்?’

“நொமஷ்கார்” என்றாள்.

முறுவலை விரித்தபோது அரும்பிய பல் வரிசை முத்துக்களாய்ப் பளிச்சிட்டன. இளம் குருத்து போன்ற வயிற்றின் சருமம் அவனை சொர்க்கத்துக்கு இழுத்தது. இடுப்பில் இறுக்கியிருந்த ஸாரியும், அதை அடுத்த விஸ்தீரணமான இடுப்புப் பகுதியும் போதையை ஏற்படுத்தின.

முதல் ஒத்திகை நடந்தது. ‘சைலன்ஸ்’ என்ற இரைச்சலுக்குப் பின் நிசப்தம் நிலவ, டைரக்டர் ‘ஆக்ஷன்’ என்றார்.

சுபத்ரா முகர்ஜி கையில் குடத்துடன் நடந்து வந்தாள். ஆசிரமப் பெண் போன்ற அசல் சாயலில் மென்மையாகக் குலுங்கி, ஒரு பூங்கொடி அசைந்து வருவது போல் வந்தாள்.

ஸெட்டில் நிற்பதுபோல் தெரியவில்லை. ஒரு ஆசிரமத்துக்கு அருகே அசல் சகுந்தலையைப் பார்த்து நிற்பது போல் தோன்றியது. அந்தக் கணத்தில் ஒரு பழங்காலத்துள் போன மாதிரி இருந்தது.

“ஆ!”

அந்த முள் குத்திய முகபாவம் பிரமாதமாக வந்தது. நெற்றியில் படிந்த சுருக்கமும், முகத்தில் ஓடிய வலியும் அப்படியே தத்ரூபம். முகத்தில் தோன்றிய அந்த பாவத்தில் அவள் வலி அவனுக்கே ஏற்பட்டது போன்ற பிரமை தோன்றியது.

“குட்” என்றார் டைரக்டர். ஒத்திகை நின்றது. சுபத்ரா முகத்தில் வியர்வை அரும்ப, உதவிப் பெண் அவள் அருகே ஓடினாள்.

“பிரமாதம் உங்கள் நடிப்பு!” என்று அவளிடம் சாமண்ணா சொன்னபோது, அவள் மலர்ச்சியாகச் சிரித்து, “தாங்க்ஸ்” என்றாள்.

அடுத்த ‘ஷாட்’டில் சாமண்ணா ‘ஆ’ என்ற குரல் கேட்டு சகுந்தலாவைத் திரும்பிப் பார்க்கிறான். பிரமிப்பும், திகைப்பும் காட்டுகிறான். முள்ளை எடுக்கத் துடிக்கிறான்.

அடேயப்பா! சாமண்ணாவுக்கு அந்த நடிப்பு உச்சம் எப்படி வந்தது? திரும்பிய முகத்தில் அத்தனை உணர்ச்சியும் பின்னல் போட்டதோடு ஒரு துளிக் காதல் உணர்வும் தனித்துத் தெரிந்தது.

அசந்து போனார் டைரக்டர்.

சாமண்ணா அருகில் வந்து, “எக்ஸெலண்ட்” என்றாள் சுபத்ரா.

“தாங்க்ஸ்” என்றான் அவன்.

அடுத்து ஆரம்பக் காதல் வைபவங்கள் ஒவ்வொன்றாகச் சுடப்பட்டன. எல்லாம் கண்களின் நடிப்பாகப் போய்விட, இருவரும் அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வந்து காட்ட, ஸெட்டில் பார்த்தவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் உள்ளங்களில் ‘காதல்’ அரும்புவதை உணர்ந்தார்கள்.

டைரக்டர் ‘குட், வெரிகுட்’ என்றெல்லாம் பாராட்ட, சேட் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

அந்தக் காட்சிகள் இரண்டு நாள் தொடர்ந்து நடந்தன. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் பார்க்கும் கூட்டம் அதிகம் கூடியது.

சாமண்ணா – சுபத்ரா நடிப்பு பார்ப்பவர் மனதில் ஓர் ஆழமான முத்திரையை ஏற்படுத்தி மறக்க முடியாத காட்சியாக மனத்தில் பதிந்து விட்டது.

மூன்றாம் நாள் சுபத்ரா சாமண்ணாவை இரவுச் சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.

ஹூக்ளிக் கரையில் பெரிய நந்தவனத்துடன் மாளிகையாக இருந்தது சுபத்ராவின் வீடு. இளநீலத்தில் பட்டு உடுத்தி, நகை ஏதும் இல்லாமல், தலையை அருவியாக அவிழ்த்து விட்டிருந்தாள். அவளுடைய இயற்கை வடிவம் செயற்கையோடு கைகோத்துக் கொண்டு ஒரு மாற்று அழகு காண்பித்தது.

சொப்பனத்தில் புகுந்தது போன்ற உணர்வில் சாமண்ணா மயங்கினான். சில மாதங்கள் முன் வரை வறுமையில் வாடியவனுக்கு, அழுக்கு வேட்டியும், ரெடிமேட் கதர்ச்சட்டையும் போட்டு அலைந்த அவனுக்கு, இப்படி ஓர் அரண்மனை யோகம் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை! அவளோடு அரைகுறை ஆங்கிலத்தில் பேசினான். அதை அவள் ரசித்தாள்! அவளுடைய சிரிப்பு காரணத்தோடும் வந்தது. காரணம் இல்லாமலும் வந்தது. ஒரு கோப்பையில் மதுவும், தாம்பாள வெள்ளித் தட்டில் சைவ உணவும் பரிமாறினாள் அவள். விருந்து முடிந்து பத்து மணிக்கு மேல் சுபத்ராவிடம் விடைபெற்று, காரில் ஏறச் சென்றபோது உடம்பு காற்றில் மிதந்தது. எதை நினைத்தாலும் ‘கிளுகிளு’த்தது. வாழ்க்கையில் இவ்வளவு உல்லாசங்கள் இருக்கின்றனவா?

பத்து நாள் போனதே தெரியவில்லை. பொழுது எப்போது முடிந்தது எப்போது ஆரம்பமாகியது என்பதே புரியவில்லை. ஆனந்தமயமான நினைவுத் தொடரில் சஞ்சரித்தான்! சுபத்ரா பேசினாள், சிரித்தாள், காதலோடு பார்த்தாள், ஆலிங்கனம் செய்து கொண்டாள். அத்தனை உணர்வுகளும் அவனைப் புதுமையாக்கிக் கொண்டிருந்தன.

பதினோராம் நாள் தான் டூயட் எடுக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் இந்தி ட்யூனில் பாட்டு. அவனுக்கு சுலபமாக முடிந்தது. சுபத்ரா தமிழ் வார்த்தையில் கஷ்டப்பட்டாள்.

இருவரும் ஒரே ஒரு அடியைப் பாட, பக்கத்தில் அனைத்து வாத்தியக்காரர்களும் நின்று கொண்டே வாசிக்க, பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.

சின்ன இடைவேளை வந்தபோதுதான் நாற்காலியில் அமர்ந்திருந்த அவனை ‘ஸார்’ என்று ஒரு சிப்பந்தி அழைத்தான். திரும்பிப் பார்த்தபோது ஸெட்டில் யாரோ வந்திருப்பது தெரிந்தது. யார் அது?

சகுந்தலா வந்து கொண்டிருந்தாள்.

“வாங்க!” என்று ஒரு அலட்சியத்தோடு நாற்காலியைக் காட்டினான் சாமண்ணா.

“எப்ப வந்தீங்க? எங்க இப்படி திடுதிப்புன்னு?” என்று காற்றை நோக்கிக் கேட்டான்.

“அப்பா ஒரு மெடிகல் கான்பரன்ஸுக்காக வந்தார். நானும் வந்துட்டேன்!” என்று கூறிய சகுந்தலா, “நான் இங்கே ஏன் வந்தேன் தெரியுமா?” என்று குழந்தைத்தனமாகப் புதிர் போட்டு நிறுத்தினாள்.

“கல்கத்தா பார்க்கத்தானே?” என்றான் அவன்.

“இல்லை! கல்கத்தா பார்க்கிற சாக்கில்…” என்று இழுத்தாள்.

“சாக்கில்?” என்று கேள்வியைத் தூக்கி நிறுத்தினான் சாமண்ணா.

அவள் பொய்க் கோபமாகச் சிணுங்கி, “புரியலையா? சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“ம்…” என்றான்.

“இலுப்புச் சட்டியும், வாளியும் வாங்க வந்திருக்கேன்!” என்று கூறிக் கலகலவென்று சிரித்தாள்.

“அதற்கு இவ்வளவு பணத்தைச் செலவழித்துக் கொண்டா?” என்றான்.

சகுந்தலா பேசவில்லை.

ஸெட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த சாமண்ணா வந்திருந்த உதவியாளரிடமிருந்து அடுத்த உரையாடலைக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று முறை நெட்டுருச் செய்துவிட்டு, அவன் சகுந்தலாவைப் பார்த்தபோது, தலைகுனிந்து நின்றிருந்த அவள் முகத்தில் நிழலிட்டிருந்தது.

“அப்புறம் எத்தனை நாள் இருப்பீங்க?” என்றான் ஒரு பொதுக் கேள்வியாக.

“இரண்டு நாள் இருப்போம்” என்றாள்.

“முடிஞ்சா வந்து பார்க்கிறேன். இங்கே ரொம்ப பிஸி. நேரம் கிடைக்கிறதில்லை. இன்னொரு படம் உடனே இங்கே ‘புக்’ ஆகும் போல இருக்கு” என்றான்.

காரியதரிசியை அழைத்தான். “இவர்தான் என் ஸெக்ரிடரி” என்று அறிமுகப்படுத்தினான்.

“இவங்க அட்ரஸ் வாங்கி வச்சுக்க, இவங்களுக்கு நம்ம ஷூட்டிங் தேதி, ஸெட், ஃப்ளோர் எல்லாம் எழுதிக் கொடு” என்று அவனிடம் கூறிவிட்டு எழுந்து, அடுத்த காட்சிக்காக ஸெட்டுக்குள் சென்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 52கல்கியின் பார்த்திபன் கனவு – 52

அத்தியாயம் 52 திரும்பிய குதிரை குந்தவி குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் பெண்ணாக வளர்ந்து வந்தவள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். நரசிம்மச் சக்கரவர்த்தியே அவளுக்குத் தாயும் தகப்பனும் ஆச்சாரியனும் உற்ற சிநேகிதனுமாயிருந்தவர். அவளுக்கு ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட்டால் அப்பாவிடம் சொல்லித்தான் ஆறுதல் பெறுவாள்.

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

8. பூ உதிரும்   பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்– நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு

சாவியின் ஆப்பிள் பசி – 33சாவியின் ஆப்பிள் பசி – 33

 அசட்டு ‘அச்சச்சோ’ லல்லு சொன்ன செய்தி சாமண்ணாவை அதிசயத்தில் ஆழ்த்தியது. எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஹோட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிறான். முனகாலா தன்னை அழைத்துப் போய் விசாரித்துத் துன்புறுத்திய போதெல்லாம், ‘புராணத்தில்