Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘பரிசல் துறை’-4

கல்கியின் ‘பரிசல் துறை’-4

4

குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். “யாராயிருக்கலாம்?” என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே வருவதைக் கண்டதும், அவனுக்குச் சொரேல் என்றது. ஒரு கணத்தில் என்னவெல்லாமோ தோன்றி விட்டது. குமரி அங்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றும், தன்னைக் கொன்றாலும் கொன்று போடுவான் என்றும் எண்ணினான். தன் கதி எப்படியானாலும், குமரிக்கு என்ன நேருமோ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு பதை பதைத்தது.

“தம்பி! இரண்டு நாளாய் உனக்குக் காயலாவாமே? உன் ஆயா கூட இல்லையாமே? பார்த்துவிட்டுப் போக வந்தேன்” என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும்? முதலில், அவனால் இதை நம்ப முடியவேயிலை. பரிகாசம் செய்கிறான், சீக்கிரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டுவான் என்று பழனி நினைத்தான்.

அப்படியொன்றும் நேரவில்லை. காளிக் கவுண்டன் கடைசி வரையில் ரொம்பப் பிரியமாகப் பேசினான். கிட்டவந்து உட்கார்ந்து உடம்பைத் தொட்டுப் பார்த்தான். “வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான். “ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா?” என்று விசாரித்தான். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படி புத்திமதி கூறினான்.

“தம்பி! நான் சொல்கிறதைக் கேளு, நீ இப்படி இன்னமும் கல்யாணம் கட்டாமலிருக்கிறது நன்றாயில்லை. ஒரு பெண்ணைக் கட்டிப் போட்டிருந்தால், இப்படி தனியாய்த் திண்டாட வேணாமல்லவா? உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள்? அவளுக்கும் வயசாச்சோ, இல்லையோ?” என்றான்.

பிறகு, “எது எது எந்தக் காலத்தில் நடக்கணுமோ, அது அது அந்தக் காலத்தில் நடந்து விட்டால்தான் நல்லது. அதுதான் நான் கூட நம்ம குமரியை இந்த ஐப்பசியில் கட்டிக் கொடுத்திடணும்னு பார்க்கிறேன். அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது?” என்று சொல்லி நிறுத்தினான்.

மறுபடியும் அவன் கோபம் வந்தவனைப்போல், “இந்த அதிசயத்தைக் கேளு, தம்பி! நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். ‘அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா! உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம்!’ என்று சொல்லிவிட்டேன்” என்றான்.

கடைசியில் “சரி தம்பி, நாளைக்கு வந்து பார்க்கிறேன். உடம்பை நல்லாப் பார்த்துக்கோ! என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் பேசப் பேசப் பழனிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தது. பேசும் போதெல்லாம் கவுண்டனிடமிருந்து கள்ளு நாற்றம் குப் குப் என்று வந்து கொண்டிருந்தபடியால், அவன் குடி வெறியில் தான் அப்படிப் பேசி இருக்க வேண்டுமெனத் தோன்றியது பழனிக்கு. மதுபானத்தின் எத்தனையோ சேஷ்டைகளில் இப்படித் திடீரென்று உறவு கொண்டாடுவதும் ஒன்றாயிருக்கலாமல்லவா?

மறுநாள் பழனியின் தாய் வந்து விட்டாள். பிறகு இரண்டு மூன்று தினங்களில் பழனிக்கு உடம்பு சரியாய்ப் போய்விட்டது. கை வீக்கமும் வடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு அவன் பரிசல் தள்ளத் தொடங்கி விட்டான்.

ஆனால் அவன் காளிக் கவுண்டனைப் பற்றி எண்ணியது தவறாய்ப் போய் விட்டது. அவன் பழனியிடம் கொண்ட அபிமானம் குடிவெறியில் ஏற்பட்டதல்லவென்று தெரிந்தது. அடிக்கடி அவன் பழனிசாமியின் வீட்டுக்கு வந்து பேசத் தொடங்கினான். பழனியின் தாயாரிடம் பழனியின் கல்யாணத்தைப் பற்றிக் கூடப் பேசலானான்.

“அவன் அப்பனில்லாத பிள்ளை; அவனுக்கு உங்களைப் போல் நாலு பெரிய மனுசாள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்தால்தான் உண்டு” என்றாள் பழனியின் தாயார்.

“அதற்கென்ன, நானாச்சு! கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றான் கவுண்டன்.

காளி கவுண்டனிடம் ஏற்பட்டிருந்த இந்த அதிசயமான மாறுதலின் காரணம் பழனிக்குப் புலப்படவில்லை.

இதில் ஏதாவது “சூது” இருக்குமோ என்று அவன் சந்தேகித்தான். அதனால், அவன் மனத்தில் சாந்தி இல்லாமல் போயிற்று.

ஒரு நாள் காலையில் காப்பி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் காதில் விழுந்த சில வார்த்தைகள் பளிச்சென்று அவனுக்கு உண்மையை உணர்த்தின.

“அடுத்த வெள்ளியிலிருந்து பரிசல்காரத் தம்பிக்குக் கொண்டாட்டந்தான். ஒரு பரிசல் போதாது; மூன்று பரிசல் விடலாம்” என்றான் ஒருவன்.

“அது என்ன அப்படி?” என்று இன்னொருவன் கேட்டான்.

“ஆமாம்; அக்டோ பர் முதல் தேதி தான் இங்கே கள்ளுக்கடை மூடப் போகிறார்களே? அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்குப் போய்த் தானே குடிக்க வேணும்?”

“அப்படி யாரடா இரண்டும் இரண்டும் நாலணா பரிசல் காசு கொடுத்துண்டு குடிக்கப் போறவனுக?”

“எல்லாம் போவானுக, பாரு! போகாதே இருப்பானுகளா? நாலணா கொடுத்தாத்தானா? பரிசல்காரத் தம்பியிடம் சிநேகம் பண்ணிக்கிட்டா சும்மாக் கொண்டு விட்டுடறாரு!”

இந்தப் பேச்சு பழனியின் காதில் விழுந்ததும் “ஓஹோ!” என்ற சப்தம் அவன் வாயிலிருந்து அவனை அறியாமலே வந்தது. பிறகு அவர்கள் பேசியது ஒன்றும் அவன் காதில் படவில்லை. அப்படிப் பெரிய யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 33சாவியின் ஆப்பிள் பசி – 33

 அசட்டு ‘அச்சச்சோ’ லல்லு சொன்ன செய்தி சாமண்ணாவை அதிசயத்தில் ஆழ்த்தியது. எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஹோட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிறான். முனகாலா தன்னை அழைத்துப் போய் விசாரித்துத் துன்புறுத்திய போதெல்லாம், ‘புராணத்தில்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 33கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 33

அத்தியாயம் 33 – முத்தையன் எங்கே? முன் அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு மாதம் ஆகியிருக்கும். திருப்பரங்கோவிலில் ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி ஒரு நாள் மாலை மிகுந்த மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் வரும்போது, உள்ளே,      “போது

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16

அத்தியாயம் 16 – “திருடன்! திருடன்!”      அன்று சாயங்காலம் கையெழுத்து மறையும் நேரத்துக்கு முத்தையன் நாணற் காட்டிலிருந்து லயன் கரைச் சாலைக்கு வந்தான். நேற்று மத்தியானத்துக்குப் பிறகு அவன் சாப்பிடவில்லையாதலால், கோரமான பசி அவனை வாட்டிக் கொண்டிருந்தது. உடம்பு சோர்ந்து போயிருந்தது.