Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘பரிசல் துறை’-2

கல்கியின் ‘பரிசல் துறை’-2

2

சூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன.

பரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி, சாமான்கள் அதில் வைத்திருந்தன. வாழைப்பழக் குலைகளும், கயிற்றில் கோத்த முறுக்குகளும் தொங்கின. பழனிச்சாமி அந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு கடைக்காரச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கவனம் பேச்சில் இல்லையென்று நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில் அடிக்கடி அவன் சாலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ எதிர் பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பவன் போல் காணப்பட்டான்.

கடைசியாக, தூரத்தில் சாலையின் வளைவு திரும்புகிற இடத்தில் குமரி நங்கை வருவதை அவன் கண்டான். உடனே, துள்ளிக் குதித்து எழுந்து, “செட்டியாரே, போய் வாரேன்,” என்று சொல்லி விட்டு நதிக்கரைக்குப் போனான். அங்கே அப்போது வேறு யாரும் இல்லை. பரிசல் காலியாக இருந்தது. சந்தைக்கு வந்தவர்கள் எல்லாரும் திரும்பிப்போய் விட்டார்கள்.

குமரி நங்கை தண்ணீர்த் துறைக்குக் கிட்டத்தட்ட வந்த போது, பழனி பரிசலைக் கரையிலிருந்த அவிழ்த்துவிட்டு அதில் ஏறிக் கொண்டான். குமரி தயங்கி நின்றாள். வேறு யாராவது வருகிறார்களா வென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லை.

“நீ வரவில்லையா? நான் போகட்டுமா? இனிமேல் திரும்பி வரமாட்டேன். இதுதான் கடைசித் தடவை” என்றான்.

குமரி இன்னமும் தயங்கினாள். மறுபடியும் சாலைப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள்.

“இதோ பார் சந்தைக்கு வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நீ இப்போது உடனே வராவிட்டால், இராத்திரி இங்கேயே தங்க வேண்டியதுதான்” என்றான்.

குமரி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலை குனிந்தபடி சென்று பரிசலில் ஏறினாள்.

பரிசல் போக ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் வரை வேகமாய்ப் போயிற்று. பிறகு, ரொம்பத் தாமதமாய்ப் போகத் தொடங்கியது.

குமரி நங்கை மேற்குத் திக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மலைவாயில் இறங்கி விட்டது. அவ்விடத்தில் சற்று முன் காணப்பட்ட மஞ்சள் நிறம் விரைவாக மங்கி வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருட்டியே போய்விடும். அதற்குள் படகு கரைசேராதா என்ன?

பழனிச்சாமி அவளுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான். அவள் முகத்தில் அவன் என்னத்தைத் தான் கண்டானோ, தெரியாது. தினம் பார்க்கும் முகம் தானே? அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும்? சற்று நேரத்துக்கெல்லாம் இருட்டிப் போய்விடும். அப்புறம் அந்த முகத்தை நன்றாய்ப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினால் தானோ என்னமோ, கண்ணை எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான்.

குமரி நங்கைக்கு உள்ளுணர்வினாலேயே இது தெரிந்திருக்க வேண்டும். அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். “ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?” என்றாள்.

“நீ ஏன் என்னைப் பார்க்கிறாய்?”

“நான் எங்கே பார்த்தேன்?”

“நீ பார்க்காவிட்டால் நான் உன்னைப் பார்த்தது எப்படித் தெரிந்தது?”

குமரி சற்றுப் பேசாமல் இருந்தாள். பிறகு, “பரிசல் ஏன் இவ்வளவு தாமதமாய்ப் போகிறது?” என்று கேட்டாள்.

“காரணமாய்த்தான். இரண்டு வருஷமாய் நான் உன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லவில்லை. இன்றைக்கு பதில் சொன்னால் தான் பரிசலை அக்கரைக்குக் கொண்டு போவேன்” என்றான்.

குமரி பேசவில்லை. பழனி மறுபடியும், “இதோ பார் குமரி! உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா? சொல்லுகிறேன். இன்று காலையில் நான் உன் முகத்தில் விழித்தேன். முதல் பரிசலில் நீ வந்தாய். அதனால் இன்றைக்கு எனக்கு நல்ல அதிர்ஷ்டம். ஏழு ரூபாய் வசூலாயிற்ரு. இன்னொரு பரிசல் வாங்குவதற்குப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றோடு ரூபாய் ஐம்பது சேர்ந்து விட்டது” என்று சொல்லி, பரிசலின் அடியில் கிடந்த பணப்பையை எடுத்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு மறுபடி கீழே வைத்தான்.

“நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், தினமும் உன் முகத்தில் விழிக்கலாமே, தினமும் எனக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்குமே என்று பார்க்கிறேன்” என்றான்.

“இப்படி ஏதாவது சொல்லுவாய் என்று தான் உன் பரிசலில் தனியாய் ஏறப்படாது என்று பார்த்தேன்…”

“பின் ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்?”

“சீக்கிரம் போனால், கத்திரிக்காய் விற்ற பணம் அவ்வளவையும் அப்பன் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடும். ‘அது’ கடைக்குப் போன பிறகு நான் வீட்டுக்குப் போனால் தேவலை என்று கொஞ்சம் மெதுவாய் வந்தேன். இருக்கட்டும்; நீ இப்போது சீக்கிரம் பரிசலை விடப் போகிறாயா, இல்லையா?”

“முடியாது அம்மா, முடியாது!” என்று பழனி கையை விரித்தான். பரிசல் தள்ளும் கோலைக் கீழே வைத்துவிட்டு, குமரியின் சமீபமாக வந்தான். “இன்றைக்கு நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய், சுவாமி கிருபையினால். உன்னை நான் விடப் போவதில்லை. நீ என்னைக் கட்டிக் கொள்கிறதாக சத்தியம் செய்து கொடு. கொடுத்தால் பரிசலை விடுகிறேன். இல்லாவிட்டால் மாட்டேன்” என்றான்.

குமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் கோபம் ஜொலித்தது.

“கிட்ட வராதே! ஜாக்கிரதை!” என்றாள்.

“கிட்ட வந்தால் என்ன பண்ணுவாய்? சத்தியம் செய்து கொடுப்பாயா! மாட்டாயா?”

“மாட்டேன்.”

“பின்னே, அந்தக் கள்ளுக் கடைக்காரனையா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?”

“சீ! வாயை மூடு!”

“அதெல்லாம் முடியாது. உன்னை நான் விட மாட்டேன். நீ என்னைக் கட்டிக் கொள்ள மாட்டேனென்றால், நான் உன்னை கட்டிக் கொள்ளப் போகிறேன்” என்று சொல்லி, பழனி இன்னும் அருகில் நெருங்கினான்.

“என் பெயர் என்ன தெரியுமா? ‘பத்திரகாளி!'” என்றாள் குமரி.

“நீ பத்திர காளியாயிருந்தால் நான் ரண பத்திரகாளி” என்று பழனி சொல்லி, அவளுடைய தோளில் கையைப் போட்டான்.

உடனே, குமரி அந்தக் கையை வெடுக்கென்று ஒரு கடி கடித்தாள். “ஐயோ!” என்று அவன் அலறிக் கொண்டு கையை எடுத்ததும், ‘தொப்’பென்று தண்ணீரில் குதித்தாள்.

அவள் குதித்தபோது பரிசல் ஒரு பெரிய ஆட்டம் ஆடி ஒரு புறமாய்ப் புரண்டது. அப்போது, குமரியின் கூடை, பழனியின் மேல் துணி, பணப்பை எல்லாம் ஆற்றிலே விழுந்தன.

பழனிக்கு ஒரு நிமிஷம் வரை இன்னது நடந்தது என்றே தெரியவில்லை. பரிசல் புரண்டபோது பரிசல் தள்ளும் கோல் ஆற்றில் போய் விடாதபடி இயற்கை உணர்ச்சியினால் சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். பிறகு, குமரி நங்கை அந்தப் பிரவாகத்தில் நீந்துவதற்கு முயன்று திண்டாடுவதைப் பார்த்துத்தான் அவனுக்குப் புத்தி ஸ்வாதீனம் வந்தது. “ஐயோ! குடி முழுகிப் போச்சே!” என்று அவன் உள்ளம் அலறிற்று.

அவசரமாய்ப் படகைச் சமாளித்துக் கொண்டு, பிரவாகத்துடன் குமரி போராடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய், “குமரி, குமரி! நான் செய்தது தப்புத்தான். ஏதோ கெட்ட புத்தியினால் அப்படிச் செய்து விட்டேன், மன்னித்துக்கொள். இனிமேல் உன்னைத் தொந்தரவே செய்வதில்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இப்போது இந்தக் கழியைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்ப் பரிசலில் ஏறிக்கொள்” என்று கதறினான். குமரி அவனை ஒரு பார்வை பார்த்தாள். பழனி, “என் தலைமேல் ஆணை. உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். ஏறிக் கொள்” என்றான்.

குமரி அவன் நீட்டிய கழியைப் பிடித்துக் கொண்டு, பரிசலின் அருகில் வந்தாள். ஒரு கையால் கழியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர நீட்டினாள். பழனி அதைப் பிடிப்பதற்குத் தயங்கினான்.

“கையைக் கொடு!” என்றாள். அவன் கொடுத்ததும் ஒரு எம்பு எம்பி பரிசலுக்குள் ஏறினாள். பரிசல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு மறுபடி சரியான நிலைமைக்கு வந்தது.

அவள் ஏறினவுடனே பழனிச்சாமி அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பாராமல் பரிசலில் இன்னொரு பக்கத்துக்குப் போனான். வெகு வேகமாகப் பரிசல் தள்ள ஆரம்பித்தான். குமரி இருந்த பக்கம் பார்க்கவேயில்லை.

குமரி இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய துணியில் இரத்தக் கறை பட்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்குத் துணுக்கென்றது. அவன் அருகில் போய்ப் பார்த்தாள். கையில் அவள் கடித்த இடத்தில் இன்னமும் இரத்தம் பெருகிச் சொட்டிக் கொண்டிருந்தது.

குமரியின் உள்ளத்தில் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. கொஞ்சம் துணி இருந்தால் காயத்தைக் கட்டலாம். பழனியின் மேல் துண்டு கிடந்த இடத்தைப் பார்த்தாள். அந்தத் துண்டைக் காணவில்லை. அங்கிருந்த பணப் பையையும் காணவில்லை! குமரியின் நெஞ்சு மீண்டும் ஒரு முறை திடுக்கிட்டது. தான் நதியில் குதித்த போது பரிசல் புரண்டதில் பணப்பையும் மேல் துண்டும் வெள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்!

ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, குமரி தன்னுடைய சேலைத் தலைப்பில் ஒரு சாண் அகலம் கிழித்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து பழனியின் கையில் கடிபட்ட இடத்தில் கட்டிவிட்டாள். பிறகு, பரிசலின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்புறமுங்கூடப் பழனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கீழ் வானத்தின் அடியில் உதயமாகிக் கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய ‘கண்ட’த்திலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு உள்ளத்திலே ஏற்படக் கூடிய சாந்தி அவள் மனத்தில் இப்போது ஏற்பட்டிருந்தது. கடவுளே! எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே! எல்லாம் உன் அருள்தான்!

கையில், குமரி பல்லால் கடித்த இடத்தில் ‘விண் விண்’ என்று தெறித்துக் கொண்டிருந்தது. அதை அவன் இலட்சியம் செய்யவில்லை. கோலுக்குப் பதிலாகத் துடுப்பை உபயோகித்து முழு பலத்துடனும் தள்ளினான். சிறிது நேரத்துக்கெல்லாம் பரிசல் கரையை அடைந்தது.

இருட்டுகிற சமயம் ஆற்றங்கரையோடு இரண்டு வாலிபர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழனியும் குமரியும் மட்டும் பரிசலில் வந்து கரை சேர்ந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவன் சீட்டி அடித்தான்! இன்னொருவன் தெம்மாங்கு பாடத் தொடங்கினான்.

கரை சேர்ந்ததும் குமரி பரிசலிலிருந்து குதித்தாள். பழனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவசரமாய்க் கரையேறிச் சென்றாள்.

பழனி சற்று நேரம் பரிசலிலேயே இருந்தான். பிறகு அதைக் கரையில் வழக்கமான இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்தான். நடக்கும் போதே அவனுடைய கால்கள் தள்ளாடின. தேகம் நடுங்கிற்று. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொண்ட பிறகுதான், தனக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வந்தது.

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 44

அத்தியாயம் 44 – கோஷா ஸ்திரீ மதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 19திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலைவு நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்புமாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது.

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06

அதைக்கேட்ட சேவகன் ஒருவன் ‘’அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவதுபிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு. கொடாவிட்டால், பிணத்தைவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று