Tamil Madhura சிறுகதைகள் ரெ. கார்த்திகேசுவின் ‘ஒரு சுமாரான கணவன்’

ரெ. கார்த்திகேசுவின் ‘ஒரு சுமாரான கணவன்’

“அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு!” என்றான் தியாகு.

அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா!

வேனில் கணவன் தியாகு அவள் தோளைத் தழுவியபடி பக்கத்தில் இருந்தான். இப்போதுதான் கல்யாணம் பண்ணிக்கொண்ட களை இருவர் முகத்திலும் இருந்தது. இரண்டு மூன்று இரவுகள் உபசரிப்பிலும் சரசத்திலும் சரியாகத் தூக்கமில்லாமல் கழிந்த களைப்பும் கூடவே இருந்தது.

“ரொம்ப அளகா இருக்கு உங்க ஊரு” என்றாள்.

“பாத்தியா, பாத்தவொண்ணயே புடிச்சிப் போச்சி தங்கச்சிக்கு?” என்று சிரித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தை. பேர்தான் குழந்தை. ஆள் தொந்தியும் தொப்பையுமாய் கடோ த்கஜன் மாதிரி இருப்பான். தியாகுவுக்கு ரொம்ப நெருக்கமான கூட்டாளி.

இந்தக் குழந்தையினால்தான் நேற்றே பினாங்குக்கு வந்து புதிய வீட்டில் குடிபுக வேண்டியவர்கள் ஒரு நாள் தாமதமாக வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அவனும் அவன் நண்பர்களும் கொடுத்த கல்யாண விருந்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் குவாலா லும்பூரை விட்டுப் போக வேண்டும் என அவன் அடம் பிடித்து விட்டான்.

“ஐயோ, திங்கக் கிளம காலையில நான் பினாங்கில லோரி எடுக்கணும் கொளந்த! ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே! அதுக்கு ஊரும் புதிசு, ஊடும் புதிசு” என்றான் தியாகு.

“காடி கெடக்குது தியாகு. ஒங்க ரெண்டு பேரயும் என்னொட வேன்லயே கொண்டி கரக்டா உட்டர்ரேன். ஞாயத்துக்கிளம விருந்து முடிஞ்சவொண்ண பத்து மணி போல உட்டம்னா கால ஒரு மணிக்கெல்லாம் போயிடலாமே” என்றான் குழந்தை.

தியாகு நண்பர்களைத் தட்டிக்கழிக்க முடியாதவனாக இருந்தான். கண்ணால் அவளிடம் அனுமதி கேட்டான். அவள் சரியென்பதுபோலச் சிரித்து விட்டாள். அதுதான் தப்பாகப் போனது.

விருந்து கோலாகலமாகத்தான் நடந்தது. ஆனால் தண்ணீர் ஏராளமாகப் புரண்டது. ஒரு மணி வரைக்கும் கூத்தும் கேலியுமாகப் போனது. ஒன்றரை மணிக்குத்தான் விட்டார்கள். இப்போது பினாங்கு வந்து சேர மணி காலை 5. முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான். இரண்டு முறை தூங்கி விழுந்து வேன் வளைந்து வளைந்து போக அவள் வற்புறுத்த தைப்பிங் வந்தபோதுதான் குழந்தையிடம் கொடுத்தான்.

அன்னம்மாவுக்குக் கலவரமாக இருந்தது. தன்னைக் கொண்டு போய் தான் இந்தப் புதிய ஊரில் தான் இன்னமும் பார்த்திராத அந்த அடுக்கு மாடி வீட்டில் விட்டுவிட்டுத் தியாகு உடனே கிளம்பிவிடப் போகிறான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவனுக்கு டிரைவர் வேலை. அவனுக்கு ஒரு வாரம் கல்யாணத்திற்காக லீவு கொடுத்திருந்த அவன் சீன முதலாளி, திங்கள் கிழமை கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். காலையிலேயே முக்கியமான டிரிப் இருக்கிறதென்று முதலிலேயே சொல்லி எச்சரித்து வைத்திருந்தான் தியாகு. “வெளியூர் டிரிப். ஈப்போ வரிக்கும் போய் திரும்புனும். ராத்திரிக்குத்தான் திரும்ப முடியும். மொதலாளி மொரடன் அன்னம்மா. கண்டிப்பா போயிடணும்.”

ஆயர் ஈத்தாம் பகுதியில் நெருப்புப் பெட்டிகளை நிறுத்தி வைத்திருந்தது போல அடுக்கு மாடி வீடுகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு கடைசிக் கட்டிடத்திற்கு வழி சொல்லிக்கொண்டு வேனைக் கொண்டு நிறுத்தச் செய்தான் தியாகு.

அந்த அதிகாலை நேரத்தில் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சீனர் உணவுக்கடைகள் சுறுசுறுப்பாக வியாபாரம் தொடங்கியிருந்தன. மீயும் பீஹூனும் பன்றிக் கொழுப்பில் பொறியும் வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. இரும்புச் சட்டிகளில் சட்டுவங்கள் படார் படார் என்று தட்டப்படும் ஒசைகள் கேட்டன. கும்பல் கும்பலாகச் சீனர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

கட்டிட வாசலுக்குப் போகும் வழியெல்லாம் நிறையக் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. ஒருவகையாக நெறிசலுக்கிடையில் நுழை வாயிலில் கொண்டு நிறுத்தினான் குழந்தை.

இறங்கியவுடன் தியாகு அண்ணாந்து அவளுக்குக் காட்டினான். “அதோ பாரு. பத்தாவது மாடி. அந்த செவப்புத் துணி தொங்குது, அதுக்கு அடுத்தாப்பில!” அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. “இவ்வளோ ஒயரமா?” என்றாள்.

“பயப்படாத. ரெண்டு லிஃப்டு இருக்குது. ஒரு நிமிஷத்தில ஏறிடலாம்!” என்றான்.

இறங்கி விறுவிறுவென்று சாமான்களை இறக்கினார்கள். இரண்டு சூட் கேஸ்கள், படுக்கைக்கான சட்டங்களும் பலகைகளும்., ஒரு மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய இரு கைப்பைகள், அன்னம்மாவின் அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய்த்தூள் ஊறுகாய் போத்தல்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் லிஃப்டுக்கு அருகில் வைத்தார்கள்.

தியாகு லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. இரண்டு மூன்று முறை அழுத்தினான். ஊஹூம். அப்படியே எதிர்ப்பக்கம் போய் அடுத்த லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். இல்லை.

“அட, லிஃப்டு வேல செய்யிலியே!” என்றான்.

அன்னம்மா இரண்டு பைகளைக் கையில் பிடித்தவாறே நின்றாள். இரவு முழுக்கத் தூங்காத அலுப்பும் பிரயாணக் களைப்பும் அவள் கண்களில் தெரிந்தன. பக்கத்தில் இருந்த படிகளில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். லிஃப்டின் முன்னால் பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன. ஒரு ஓரத்திலிருந்து மூத்திர வாசம் வந்துகொண்டிருந்தது.

“சரி அப்ப ஏறிட வேண்டியதுதான்!” என்றான் தியாகு.

“சாமாங்க?” என்று கேட்டான் குழந்தை.

“ஆளுக்கொண்ணா தூக்க வேண்டியதுதான்” என்றான்.

“பத்து மாடிக்கா?”

“வேற வழி இல்ல கொளந்த. லிஃப்டு வர்ரதுக்குக் காத்துக்கிட்டு இருக்க முடியாது. சாமாங்கள இங்க வச்சிட்டுப் போகவும் முடியாது. இந்தப் பக்கம் திருட்டு அதிகம். எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான். நான் மெத்தயத் தூக்கிக்கிறேன். நீ ஒரு சூட்கெச எடுத்துக்க. ஒரு ரெண்டு மாடி போய் அங்க வச்சிட்டு எறங்கி வந்து அடுத்த ஜாமானத் தூக்குவோம். அங்க வச்சிட்டு இன்னும் ரெண்டு மாடி. இப்படியே மாத்தி மாத்திக் கொண்டி சேத்திருவோம்.”

குழந்தை கொஞ்சம் யோசித்து விட்டு “சரி” என்று ஒரு சூட்கேசைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டான்.

அன்னம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் தியாகு. “அன்னம்மா, நீ உன்னால முடிஞ்சத தூக்கிக்கிட்டு நேரா பத்தாவது மாடிக்குப் போய் அங்க நில்லு. நாங்க வந்து சேந்தர்ரோம்” என்றான்.

அன்னம்மா இரண்டு பைகளுடனும் படிக்கட்டை நெருங்கி ஏறத் தொடங்கினாள். சேலையின் அடிப்பாகம் காலில் சிக்கியது. ஒரு கையால் லேசாகத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாள்.

மூன்றாவது மாடி ஏறுவதற்குள் அன்னம்மாவுக்கு இளைத்தது. வராந்தாவில் நின்று கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். கீழே சீனர் ஒட்டுக் கடைகளிலிருந்து மீ பிரட்டும் புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. சலசலவென பேச்சுச் சத்தமும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றமும் கேட்டது. ஒட்டுக்கடைகளின் படுதாக் கூரைகளின் மேல் சில மரங்களின் கிளைகள் நிழல் கொடுத்து அணைத்தவாறு படர்ந்திருந்தன.

மெத்தையை முதுகில் சுமந்தவாறு மூசு மூசு என்று இளைத்துக் கொண்டு தியாகு அங்கு வந்து சேர்ந்தான். மெத்தையை இறக்கி வைத்தான். “நீ போய்ட்டே இரு. நான் போயி இன்னொரு சூட்கேசக் கொண்டாந்து இங்க வச்சிட்றேன்” என்று இறங்கி ஓடினான்.

அவனைக் கொஞ்ச நேரம் இரக்கமாகப் பார்த்து விட்டு மீண்டும் ஏறினாள் அன்னம்மா. எந்த மாடியிலும் எண்கள் போட்டிருக்கவில்லை. உத்தேசமாக வைத்துக்கொண்டு ஏறினாள். அந்த குறுகிய படிகளில் ஆட்கள் அவசரமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்குப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி நின்று ஏறினாள். ஒன்பது மாடி என்று கணக்கு வந்தவுடன் நின்று அவன் வந்து சேரக் காத்திருந்தாள்.

ஒரு ஐந்து நிமிடத்தில் அவன் மெத்தையோடு வந்தான். அவன் உடல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு நிற்க நேரமில்லை. நின்றால் காற்றுப் போய்விடும் என்பது போல நிற்காமல் ஏறினான். “இன்னும் ஒரு மாடி மேல அன்னம்மா. ஏறு ஏறு” என்று சொல்லிக்கொண்டே அவன் ஏறிப் போனான். ஒரு ரெண்டு நிமிடத்தில் குழந்தை ஒரு சூட்கேசுடன் இளைக்க இளைக்க வந்தான். அன்னம்மாவைப் பார்த்ததும் “பொண கனம் கனக்குது தங்கச்சி இந்தப் பொட்டி” என்றான்.

“மத்தப் பொட்டி எங்க?” என்று கேட்டாள் அன்னம்மா.

“இதோ ரெண்டு மாடிக்குக் கீள இருக்கு! போய் எடுத்தாரணும்” என்றான்.

இரண்டு பேருமாக பத்தாவது மாடிக்கு ஏறினார்கள். தியாகு மெத்தையை ஒரு பக்கத்தில் சாத்தி வைத்து விட்டுக் கம்பிக் கதவில் சாவி போட்டுத் துழாவிக் கொண்டிருந்தான். எல்லாம் கொஞ்சம் துருப்பிடித்துப் போயிருந்தன. பூட்டைக் கொஞ்சம் ஆட்டி அசைத்துத் திருகித்தான் திறக்க வேண்டி இருந்தது. அவன் திறக்கும் வரை அன்னம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் புது வாழ்கையை அவன் திறப்பதற்குக் காத்திருந்தாள்.

பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சீனத்தி சத்தம் கேட்டுக் கோபத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

ஒரு வழியாகக் கம்பிக் கதவு திறந்தது. அடுத்ததாகப் பலகைக் கதவின் பூட்டுடன் கொஞ்சம் போராடினான். அது திறந்ததும் “சீக்கிரமா உள்ள போ அன்னம்மா” என்றான்.

“சோத்துக்கால எடுத்து வச்சிப் போ தங்கச்சி” என்றான் குழந்தை.

“ஆமா இவன் ஒருத்தன் சாத்திரம் சொல்ல வந்திட்டான், இந்த அவசரத்தில! எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல” என்றான் தியாகு. ஆனால் அவள் கவனமாக வலது காலை எடுத்து வைத்துத்தான் உள்ளே போனாள். அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து மக்கிய மணம் கப்பென்று அடித்தது.

தியாகு மெத்தையைக் கொஞ்சம் வளைத்துக் கதவில் திணித்து உள்ளே கொண்டு வந்து தம்மென்று தரையில் போட்டான். தரையிலிலிருந்து குப்பென்று தூசு எழுந்தது.

“சரி நாங்க போய் மத்த சாமானத் தூக்கிட்டு வந்திர்ரொம்” என்று தியாகு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினான்.

வீடு மிகச் சிறியதாக இருந்தது. இரண்டு அறைகள். குறுகிய வரவேற்பறை. பெட்டி போல ஒரு சமயலறை. குழாயைத் திறந்தாள். புஸ்ஸென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்ட பின்னர் பழுப்புக் கலரில் தண்ணீர் வந்தது. கொஞ்சம் ஒடிய பிறகு தெளிவானது.

சூட் கேஸும் ஒரு மூட்டையும் வந்தன. “தோ போய் கட்டிலத் தூக்கிட்டு வந்திர்ரோம்” என்று ஒடினார்கள். குழந்தையால் முடியவில்லை. சோர்ந்து நடந்தான். “சீக்கிரம் வா கொளந்த, இல்லன்னா எவனாச்சம் தூக்கீட்டு போயிடுவான்” என்று அவனை அவசரப் படுத்தினான் தியாகு.

அவளுக்குப் பாவமாக இருந்தது. வீட்டைப் பார்க்க சோகமாகவும் இருந்தது. அவள் பெற்றோரின் வீடு குவால லும்பூரில் இருந்தாலும் ஸ்தாபாக் பக்கத்தில் ஒரு கம்பத்தில் இருந்தது. நாலு விசாலமான அறைகள். பின்னால் நிலம் இருந்தது. அப்பா காய்கறி போட்டிருந்தார். கொஞ்சம் வேலி அடைத்து சில கோழிகள் கூட வளர்த்தார். காலாற நடந்து சுற்ற ஏற்ற வீடு.

“அங்க பினாங்கில உங்க ஊடு மாரி இருக்காது. சின்ன பிளேட்தான்” என்று தியாகு கொஞ்சம் வருத்தமாகக் கூறியிருக்கிறான்.

“நம்ப ரெண்டு பேருக்கு அது போதும்!” என்று அவள் அவனை ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.

தியாகு நல்லவனாகத் தெரிந்தான். அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்த போதே தன் அக்காளுக்கு வாய்த்த கணவனைப் போல எல்லாரையும் அதிகாரம் பண்ணும் முரடனாக இல்லாதவனாக ஒருத்தன் வாய்த்தால் போதும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது. தியாகு எப்போதும் சிரித்த முகமாக இருந்தான். கனிவாகப் பேசினான். முக்கியமாக அக்காவின் கணவனைப் போல அவன் இடை விடாமல் சிகிரெட் ஊதித் தள்ளுவதில்லை.

கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது முதல் முதலில் தியாகுவைத் தனியாக அவள் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த போது அவள் முதலில் கேட்டது அந்தக் கேள்விதான். “சிகிரெட் பிடிப்பிங்களா?”

“சீச்சீ!” என்றான். “அந்தப் பளக்கம் ஜென்மத்துக்கும் கிடயாது”

சந்தோஷமாக இருந்தது.

“தண்ணி குடிப்பிங்கிளா?”:

“எப்பவாச்சும். கூட்டாளிங்களோட சந்தோஷமா இருக்கும் போது மாத்ரம்!”

“அத விட்டுடுங்களேன்!”

“சரி அன்னம்மா. கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன். கொஞ்சம் டைம் குடு” என்றான்.

மீண்டும் சந்தோஷமாக இருந்தது. இத்தனை இணக்கமாக ஒரு ஆண் பேசி அவள் கேட்டதில்லை. அவள் அப்பாவும் அக்காள் புருஷனும் ஒரு நாளும் இப்படிப் பேசியதில்லை. அன்னம்மா அவனை அன்றே காதலிக்கத் தொடங்கி விட்டாள்.

வீட்டுக்கு வெளியே தடாலென்று சத்தம் கேட்டது. ஏதோ பலகைகள் விழுவது போலவும் சத்தம் கேட்டது. அன்னம்மா படபடப்போடு வந்து எட்டிப் பார்த்தாள். கதவுக்குப் பக்கத்தில் தியாகு சருக்கி விழுந்து கிடந்தான். அவன் தூக்கி வந்த படுக்கைப் பலகைகள் சிதறி விழுந்து கிடந்தன.

“ஐயோ” என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். “ஒண்ணுமில்ல அன்னம்மா. ஒடியாந்தனா, சருக்கி விட்டிருச்சி!”

“ஏன் இந்த அவசரம்?”

“வேலைக்கி நேரமாச்சில்ல!” பலகைகளைப் பொறுக்கி எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தான். அவன் வந்து இரண்டு நிமிடம் கழித்து குழந்தை நாலு சட்டங்களைத் தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க வந்து சேர்ந்தான்.

“சரி அன்னம்மா. நான் கெளம்பறேன். நீ வீட்ட பூட்டிக்கிட்டு இரு. சாயந்திரம் ஆறு ஏளு மணி போல வந்திருவேன். சரியா? வா வா கொளந்த! ரொம்ப லேட்டாய்ப் போச்சி” அவன் முன்னால் ஓட குழந்தை மூச்சு இன்னும் அடங்காமல் பின்னால் ஓடினான்.

அவன் போன பின் வீடு வெறிச்சென்றிருந்தது. இது வீடா?

மூலைக்கு மூலை ஒட்டடை. சுவரில் முன்பு பசை போட்டு ஒட்டப்பட்டுக் கிழிக்கப் பட்டிருந்த சீன மொழிப் போஸ்டர்கள், படங்களின் தொங்கும் எச்சங்கள். சமையலறை எண்ணெய்ச் சிக்குப் பிடித்துக் கிடந்தது. பின்பக்கம் கம்பித் தடுப்புப் போட்டிருந்தார்கள். எல்லாம் துருப்பிடித்திருந்தன. அதன் பின்னால் அந்த அடுக்கு மாடி சதுரக் கட்டிடத்தின் நடுப்பகுதியான திறந்த வெளி இருந்தது. அங்கிருந்து எட்டிப்பார்த்தால் குப்பைகள் மலையாய்க் குவிந்திருந்தன. தூக்கி எறியப்பட்ட உணவு அழுகும் வீச்சம் வந்து கொண்டிருந்தது.

“நான் இன்னும் வீட்ட சரியா கூடப் பாக்கில. எங்க நேரம்? ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க! இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா!” என்று கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லியிருந்தான்.

“அது போதும். சமாளிச்சிக்கலாம்!” என்று அப்போது சொன்னாள். இப்போது பார்க்கும்போது அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

இவ்வளவு மோசமாகவா? ஆணி அடித்து அடித்துச் சுவர்களில் அம்மை வார்த்திருந்தது. சுவர்கள் இருண்டிருந்தன. வர்ணம் அடித்து இருபது வருடமாவது இருக்க வேண்டும். ஓர் அறைக்கு ஒரு 40 வாட் பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒயர் முழுக்க ஒட்டடை. குளியலறையிலிருந்து மக்கிப்போன மூத்திர மணம் வந்து கொண்டிருந்தது. பிளஷ் வேலை செய்யவில்லை. இங்கு எப்படி வாழ்வது?

எப்படிப்பட்ட மனிதன் இந்தக் கணவன்? ஒரு லோரி டிரைவராக வருமளவுக்குதான் அவனுக்கு தெரவிசு. அவ்வளவுக்குத்தான் சம்பாத்தியம். ஒரு நல்ல வீடு பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. கூட்டாளி சொன்னான் என்றும் மலிவாக இருக்கிறது என்றும் கண்ணை மூடிக்கொண்டு பிடித்து விட்டான். கூட்டாளிகள் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுகிறான்.

நிதானமாகக் காரியம் செய்யத் தெரியவில்லை. பேய் போல வண்டி ஓட்டுகிறான். படபடவென்று ஒடுகிறான். அந்த ஓட்டத்தில் சருக்கி விழுகிறான். வெகுளித் தனமாகச் சிரிக்கிறான். வேலைக்கு ஓடும் அவசரத்தில் புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் மனைவியிடம் அன்பாகச் சொல்லிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. மனைவி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவனா என்னை வாழ்நாளெல்லாம் கட்டிக் காக்கப் போகிறான்?

அவளுக்குப் பசி கடுமையாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது? அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்…? அங்கு உள்ள ஜனங்களை நினைத்தாலே பயமாக இருந்தது. இப்படி விட்டுப் போனானே!

நேற்றிரவெல்லாம் கண் விழித்து வந்த அலுப்பு அவளைத் தள்ளிற்று. இந்த வீட்டில் உட்காரக் கூட நாற்காலி இல்லை. பிரித்துத் தாறுமாறாக இறைந்து கிடந்த கட்டில் பலகைகளைப் பார்த்தாள். மெத்தை தனியாக அவன் எறிந்து விட்டுப் போன அதே இடத்தில் கோணலாக ஓவென்று கிடந்தது. புதிய மெத்தை. கல்யாணப் பரிசு. விரிப்பு சூட்கேசில் இருக்கிறது. அதைத் திறந்து எடுக்க உற்சாகம் இல்லை. தலையணை இன்னும் வாங்கவில்லை.

அங்கிருந்த நூற்றுக் கணக்கான புறாக்கூண்டு வீடுகளில் எந்தத் திசை என்று சொல்ல முடியாத ஒரு வீட்டில் சீன மொழியில் ஒரு பெண் கூக்குரலிட்டு ஏசி தப்தப்பென்று எதையோ போட்டு அடித்தாள். தொடர்ந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. இன்னும் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து ஊற்றும் சத்தம் கேட்டது.

எல்லாச் சத்தங்களும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஓங்கி உயர்ந்த காங்க்ரீட் சுவர்களுக்குள் மோதி எதிரொலித்துச் சுற்றி வந்தன. ஒலி அடங்கிய பின்னும் ஓவென்ற பின்னொலி சுருண்டு கொண்டிருந்தது.

தனிமையும் பயமும் கரிய மேகங்களாகி அவளை அழுத்தின. நேற்று கலகலப்பான கல்யாணப் பெண்ணாக இருந்து விட்டு இன்று இப்படி ஒண்டியாய்த் திசை தெரியாமல் வாழவா பெற்றோர்கள் இத்தனை தூரம் அனுப்பி வைத்தார்கள்? இப்படியா? பசியாறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல்…, அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல்… ஒரு மக்கிப் போன வீட்டில், வர்ணம் தேய்ந்து கருப்பாகி என்னைச் சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் சிமிந்திச் சுவர்களுக்கு மத்தியில்…!

சுவரில் சரிந்து உட்கார்ந்தாள். ரவிக்கையில் அழுக்கு அப்பிக் கொள்வதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்தது. தொண்டையிலிருந்து விக்கல் வந்தது. புடவைத் தலைப்பால் கண்களைப் பொத்திக் கொண்டு கேவி அழுதாள்.

யாரோ அவள் வீட்டுக் கம்பிக் கேட்டைப் பிடித்து உலுக்கினார்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓர் இந்தியப் பையன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன வேணும்?” என்றாள்.

“ரொட்டிச் சானாய்” என்றான்.

எழுந்து நின்று “என்ன?” என்றாள் விளங்காமல்.

“கதவத் தொறங்க, அந்த அண்ணன் ரொட்டிச் சானாய் கொண்டி குடுக்கச் சொன்னாரு!” என்றான்.

“அண்ணனா? எந்த அண்ணன்?”

“உங்க புருஷன்னு சொன்னாரு!”

சாவியைத் தேடிக் கம்பிக் கதவைத் திறந்து விட்டாள். அவன் ரொட்டிச் சானாய்ப் பொட்டலம், பிளாஸ்டிக்கில் முடிக்கப்பட்டு ஸ்ட்ரா வைக்கப்பட்டிருந்த சூடான தேனீர், ஒரு பெரிய போத்தல் குடி தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்தான்.

” நீ யாரு?” என்று கேட்டாள்.

“சுலைமான். எங்க அத்தா கீள சாப்பாட்டுக் கடை வச்சிருக்காரு”

“எப்படி வீடு தெரியும்?”

“உங்க புருஷன் சொன்னாரு!”

“பத்து மாடி ஏறி வந்தியா?”

“முடியாதுன்னுதான் சொன்னேன். அப்பறம் அதுக்குன்னு ரெண்டு வெள்ளி தந்தாரு. அப்புறம்தான் சரின்னேன்!” என்றான்.

அவள் மகிழ்ந்து சிரித்தாள்.

“அப்புறம் மத்தியானத்துக்கு நாசி புங்குஸ் அனுப்பச் சொன்னாரு. வேற எதாச்சும் வேணுமான்னு உங்ககிட்ட கேட்டு வாங்கித் தரச் சொன்னாரு!”

என்ன கேட்பதென்று தெரியவில்லை. “இது இப்ப போதும்!”

“சரி” என்று அவன் திரும்பினான். “இப்ப லிஃப்டு வேலை செய்யிது” என்று சொல்லியவாறு லிஃப்டை நோக்கி நடந்தான்.

அவள் போய் அவசரமாக வாய் கை அலம்பி வந்து ரொட்டிச் சானாய்ப் பொட்டலத்தை ஆசையுடன் அவிழ்த்தாள். அதை அப்படையே வைத்துவிட்டு தேனீரை எடுத்து உறிஞ்சினாள். வெது வெதுப்பான சூட்டுடன் அது தொண்டைக் குழாயில் தேனாய் இறங்கியது.

லிஃப்டு வேலை செய்வதால் முதல் வேலையாகக் கீழே போய் ஒரு கூட்டுமாறும் தூள் சவர்க்காரமும் ப்ரஷும் வாளியும் ரப்பர் குழாயும் வாங்கி வரவேண்டும் என்று நினைத்தாள். கழுவி விட்டால் வீடு பளிச்சென்று இருக்கும். புதிய இடமாய் இருந்தால் என்ன? இது என் வீடு. என்ன பயப்படுவது? எல்லாரும் மனிதர்கள்தான்.

ரொட்டி சானாயைப் பிய்த்து வாய்க்குள் போட்டாள். கணவன் நினைவு வந்தது. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இது காதலா?இது காதலா?

வணக்கம் பிரெண்ட்ஸ், தனது  ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள்

சேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதைசேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதை

பச்சை பசேல் என்று வயல்வெளி நிறைந்த ஊர். அதிகாலை நேரத்தில் பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த நேரம். கைகளில் தூக்குபோசியில் சோறும் வெங்காயமும் தலையில் வேலை உபகரணங்களையும் தூக்கி கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் ஊர்மக்கள்.

விசுவின் ‘ஒரு தோட்டா மருந்தானது! ‘விசுவின் ‘ஒரு தோட்டா மருந்தானது! ‘

 ஒரு தோட்டா மருந்தானது!  “கெவின் … கெவின்…” அலறியது அந்த மருத்துவமனையின் அவசர ஒலி பெருக்கி. ஆம். .. கெவின் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக சேர்ந்த மருத்துவர். சேர்ந்து சில நாட்கள் துணை  சிகிச்சை நிபுணராக