சாவியின் ஆப்பிள் பசி – 17

 பெருந்தொகை ஒன்று கைக்கு கிடைத்ததும் சாமண்ணாவின் மனம் கிறுகிறுத்தது. சட்டென தாயாரின் முகம் மின்னி மறைந்தது. தாயின் கையில் அதைக் கொடுப்பது போலவும், அவள் காலில் விழுந்து வணங்குவது போலவும், அவள் ஆனந்தக் கண்ணீரோடு நிற்பது போலவும் தோன்றியது.

“சேட்ஜி! நாடகம் அரங்கேத்தணும், உடனே நான் கல்கத்தா வருவதென்பது ரொம்பக் கஷ்டம்…”

“காமிராக்காரர், டைரக்டர் எல்லாரும் காத்திருக்காங்க. அடுத்த வாரமே ஷூட்டிங் ஆரம்பிச்சுடணும். அவங்களை சும்மா வச்சிருக்க முடியாது. உங்களுக்கு வர முடியலேன்னா சொல்லிடுங்க. வேறே ஒருத்தரைப் போட்டு எடுத்துடறோம்…”

“இல்லை சேட்ஜி! நான் வந்துடறேன்!”

“அப்போ முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துரலாமா?”

“சரி” என்றான்.

“கல்கத்தாவுக்குத் தந்தி கொடுத்துரலாமா?”

இன்னொரு சரி.

“உங்களுக்குத் தனி ஜாகை எடுத்துக் கொடுத்துடறேன். சவாரிக்குக் காரும் கொடுத்துடறேன்.”

சேட் வியாபார தந்திரத்தில் கைதேர்ந்தவர். எதைச் சொன்னால் ஆட்கள் பறப்பார்கள் என்று அறிந்தவர்.

சாமண்ணா அதற்குள் பெரிய கோட்டை கட்டத் தொடங்கி விட்டான். முதல் வகுப்பு மெத்தையில் ஜம்மென்று சாய்ந்து பிரயாணம் செய்வது போலவும், எதிரே சில பணக்காரப் பெண்கள் அவனை அடிக்கடி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பது போலவும் கனவு கண்டான்.

கல்கத்தா வீதிகளில் அவன் கார் பறக்கிறது. கடைத் தெரு சினிமா ஸ்டூடியோ என்று அலைகிறான். சினிமா சேட் அவனைத் தாங்கு தாங்கென்று தாங்குகிறார்.

“அப்போ உத்தரவு வாங்கிக்கலாமா?” என்று கைகூப்பிப் புறப்பட்டார் சேட்.

விரலில் வைரம் பளபளக்க, இப்படி ஒரு முதலாளி அவனுக்குக் கும்பிடு போடுவது வாழ்க்கையில் இதுதான் முதல் தடவை.

“மறு பேச்சே வேணாம். நான் வந்து விடுகிறேன்” என்றான் சாமண்ணா.

அன்று ராத்திரியெல்லாம் அவன் தூங்கவில்லை. பொழுது விடிந்ததுதான் தாமதம். அவசரமாக டாக்டர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அவரிடம் மெதுவாக விஷயத்தை பிரஸ்தாபித்தான்.

“எனக்குத் தெரியுமே! சகுந்தலா ராத்திரியே சொன்னாளே! அரங்கேற்றத்துக்கு இன்னும் பத்து நாள் கூட இல்லை. கலெக்டர் கிட்டே வேறே நாங்க ‘டேட்’ வாங்கியாச்சு. ஊரே அமர்க்களப்படுது. இந்த நேரத்தில் நீ எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டுக் கல்கத்தாவுக்குப் போகப் போறேங்கறயே, இது சரியா? நன்னா யோசிச்சயா?” என்று கேட்டார் டாக்டர்.

சாமண்ணா பதில் சொல்ல முடியாத நிலையில் தலைகுனிந்தபடி நின்றான்.

“நீங்க சொல்றது புரியறது டாக்டர். இந்த நேரத்திலே நான் போறது தப்பாத்தான் தெரியும். ஆனால் வாழ்க்கையிலே ஒரு சந்தர்ப்பம் ஒரு வாட்டித்தான் வரும்; அதிர்ஷ்ட தேவதை ஒரு தடவைதான் கதவைத் தட்டுவான்னு சொல்லுவாங்க. எனக்கு அந்தச் சந்தர்ப்பம் வந்திருக்கு. இதுபோல யாருக்காவது கிடைக்குமான்னு யோசியுங்கோ!” என்றான் சாமண்ணா.

“அரங்கேற்றத்தை முடிச்சுட்டுப் போறது! அதுக்குள்ளே என்ன அவசரம்?” என்றார் டாக்டர்.

“நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா சேட் அவசரப் படறாரே! ‘வர முடியலைன்னா சொல்லிடு. இன்னொருத்தரைப் போட்டுக்கறேங்கறாரே! அப்புறம் அடுத்த படத்துலே சான்ஸ் தரேங்கறாரே! இந்த சான்ஸை விட்டால் மறுபடியும் கிடைக்குங்கறது என்ன நிச்சயம்!” என்றான்.

“ஒரு சான்ஸ் விட்டா இன்னொரு சான்ஸ் வந்துட்டுப் போறது!”

“வரலைன்னா என்ன செய்வேன்? வீட்டுக் கதவைத் தட்டின ஸ்ரீதேவியை அலட்சியப்படுத்தின மாதிரி ஆகாதா? பயாஸ்கோப் பயாஸ்கோப்னு ஊரெல்லாம் ஒரே பேச்சாயிருக்கு. யாரைப் பார்த்தாலும் பயித்தியமா அலையறா! சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி என்கிறா! பட்டணத்திலே இப்ப பயாஸ்கோப்புக்குத்தான் அதிக மவுசாம்! நாடகம் ரெண்டாம் பட்சம் தானாம். அதுக்குத்தான் காற்றுள்ள போதே தூற்றிக்கணும்னு பார்க்கிறேன்.”

“அப்போ உன்னை நம்பிப் பணம் போட்டவங்களை அம்போன்னு விட்டுடப் போறியா? இவ்வளவு பணத்தைக் கொட்டிப் புது நாடகம் தயார் பண்ணினவங்களுக்கு என்ன பதில் சொல்றது? அவங்க பணமெல்லாம் என்ன ஆறது?” என்று சற்றுக் கடிந்த மாதிரி பேசினார்.

“அரங்கேற்றத்தைக் கொஞம் தள்ளி வச்சுக்க முடியாதா? ஒரு மாசம் தள்ளினா என்ன? அதுக்குள்ளே நான் கல்கத்தா போய் நடிச்சுட்டு வந்துடறேன்” என்றான் சாமண்ணா.

“ஹும்! உனக்கு உன் காரியம்தான் பெரிசாப் போச்சு. பணம் போட்டவங்களைப் படிக்கட்டாக்கி மேலே ஏறிக்கப் போறே! இதுதானே உன் நோக்கம்? எல்லாம் வீண்! பண விரயம்!” என்று சலித்துக் கொண்டார்.

சாமண்ணாவுக்கு அது சுருக்கென்று தைத்தது.

“டாக்டர் ஸார்! என்னைக் கோவிச்சுக்காதீங்க! ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் முன்னுக்கு வர நேரம். கடவுள் புண்ணியத்துலே சேட்ஜி நிறையப் பணம் கொடுத்துட்டுப் போயிருக்கார். இதுவரை ஆன ரிஹர்ஸல் செலவை வேணும்னா நான் கொடுத்துடறேன்.”

“எனக்குத் தெரியாது. வக்கீலைப் போய்ப் பாரு. அவர் என்ன சொல்றாரோ அதுப்படி நடந்துக்கோ!” என்று ஒரு அலட்சியத்தோடு சொல்லி எழுந்தார்.

சாமண்ணாவுக்குக் கஷ்டமாக இருந்தது. ‘டாக்டர் ஒரு முற்போக்குவாதி. அவரே தன்னுடைய பேச்சை அவ்வளவு சரியாக எடுத்துக் கொள்ளாத போது வக்கீல் என்ன சொல்லப் போகிறாரோ?

‘கீழேயிருந்து ஒருத்தன் முன்னேறி அவாளுக்குச் சமமா, அந்தஸ்தா வரதை யாருமே ஒத்துக்க மாட்டா! வீண் ஆசைன்னு சொல்லிடுவா! இவா மட்டும் நிறைய ஆசைப்படலாம். எப்படியும் வக்கீல் கிட்டே சொல்லிட்டுப் புறப்பட வேண்டியதுதான்.’

இதற்குள் வீட்டுத் தரகர் பல முறை சாமண்ணாவைத் தேடி வந்து விட்டார். “பழைய தாசில்தார் வீடு! ரொம்ப ராசி. அரண்மனை மாதிரி இருக்கு. குதிரை லாயம் வேறே இருக்கு. வெல்ல மண்டி செட்டியார் அதை வாங்கத் துடிக்கிறார். நான் தான் நிறுத்தி வச்சிருக்கேன்” என்றெல்லாம் ஆசை வார்த்தைக் காட்டிக் கொண்டிருந்தார்.

“பணம் கையிலே வச்சிருந்தா செலவாகிப் போகும். எதையாவது செய்யுங்கோ” என்று சுண்டி இழுத்தார்.

மூன்று நாள் யோசித்து யோசித்துக் கடைசியில் தாசில்தார் வீட்டை வாங்குவதென்று முடிவு செய்து விட்டான் சாமண்ணா.

பெருமிதம் தாங்கவில்லை. இப்போதே நாலு பேர் அவனை ஓரு ஆச்சரியத்தோடு பார்ப்பதுபோல் தெரிந்தது. இதற்கு முன் அவனை அலட்சியமாகப் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது இவனைக் கண்டதும் மேல் துண்டை இறக்கிவிட்டு மரியாதை காட்டினார்கள்.

“அப்படியா! அப்படியா! அப்படியா!” என்று நூறு ‘அப்படியா’ போட்டுவிட்டார் வக்கீல் வரதாச்சாரி.

வக்கீல் மாமி கோமளம் கோவிலுக்குப் போயிருந்தாள். அந்த நேரம் பார்த்து, அந்த ஏழு மணி இருட்டில், அவர் வீட்டிற்கு வந்திருந்தான் சாமண்ணா.

கோமளம் மாமி இருந்தால் சும்மா விட்டிருக்க மாட்டாள். அவளது பேச்சு ஒவ்வொன்றும் அவனை ராமபாணமாய்த் தாக்கியிருக்கும்.

“என்ன சாமண்ணா! எங்கே இந்த இருட்ல?” என்று கேட்டார் வக்கீல்.

“உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். மாமி இல்லையா?” என்று தெரியாதது போல் விசாரித்தான்.

“இப்ப வந்துருவா. கோயிலுக்குப் போயிருக்கா. என்ன விஷயம் சொல்லு” என்றார்.

சாமண்ணா லேசாகக் கனைத்து கொண்டான். எப்படி ஆரம்பிப்பது என்று சற்று யோசித்துப் பிறகு பேசத் தொடங்கினான்.

“நீங்களே சொல்லுங்கோ! இந்தக் காலத்துலே யாருக்குத் தான் ஆசை வராது? யாருக்கு இந்த மாதிரி இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும்? என் நிலையிலே இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ வேலை செய்யறதுக்கு யாராவது ஐயாயிரம் கொடுப்பாளா? எனக்கு அந்த அதிர்ஷ்டம் வந்திருக்கு மாமா” என்றான்.

“அப்படியா?”

“ஆமாம். இதெல்லாம் ஏதோ கடவுள் கிருபை! எனக்கு இப்ப எங்கம்மா இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கலையேன்னு துக்கமா இருக்கு! நான் முதல் சம்பளம் வாங்கினப்போ ஏழு ரூபாய் கொண்டு கொடுத்தேன். அதை எழுநூறு தரம் கையாலே எண்ணிட்டா. இப்போ ஐயாயிரத்தைக் காண்பிச்சிருந்தா, அப்படியே பெருமையிலே பூரிச்சுப் போயிருப்பா! நான் மட்டும் நல்லபடியா முன்னுக்கு வந்தா அம்மா பேரிலே ஒரு ஸ்கூல்…”

“அப்படியா?”

வக்கீல் குறுக்கிட்டு ஒரு ‘அப்படியா?’ போட்டது அவனுக்கு என்னவோ போல இருந்தது.

பேச்சில் கோர்வை அறுந்து போயிற்று. தடுமாற்றத்தோடு தொடர்ந்தான்.

“நான் என்னவோ தீர்மானிச்சுட்டேன் மாமா! டாக்டர் கிட்டே நாடகப் பணத்தைத் திருப்பித் தந்துடறேன்னு கூடச் சொல்லிட்டேன். ஒரு மாசம் தள்ளி அரங்கேற்றத்தை வச்சிக்கிறதா இருந்தா வச்சுக்கலாம்னும் கறாராச் சொல்லிட்டேன். அடுத்த வாரம் நான் கல்கத்தா போயாகணும். நான் முன்னுக்கு வரத்துக்கு நான் எடுத்திருக்கிற தீர்மானம் இது! நீங்கதான் ஆதியிலிருந்து என் மேலே பாசமும் அக்கறையும் வச்சு எனக்கு வழி காட்டிண்டு வறீங்க. அதனாலே உங்களையும் மாமியையும் பார்த்து நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு வந்திருக்கேன்” என்று சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தான்.

“நன்னா தீர்க்காயுசோடு இரு!”

சாமண்ணா தலை நிமிர்ந்தான். “அப்போ நான் கல்கத்தா போகலாமில்லையா?”

“தாராளமாப் போ! அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வந்திருக்கு. நீ போறதுக்கு யாரு குறுக்கே நிற்பா? ஆனா சட்டம் உன்னை விடாதே!”

“சட்டமா?” சாமண்ணா முகம் விகாரமாய் மாறியது.

“ஆமாம்; நீ ஜாமீன்லே இருக்கேங்கறதை மறந்துட்டியா? கொலைக் கேஸ்! நீ இந்த ஊரை விட்டு வெளியே ஒரு இஞ்ச் கூட நகர முடியாதே…! போலீஸ்ல விட மாட்டாளே!”

“என்ன சொல்றீங்க வக்கீல் ஸார்! அப்படின்னா நான் கல்கத்தா போகவே முடியாதுங்கறேளா?”

“யாராவது ஜாமீன் கொடுத்தாப் போகலாம். ஜாமீன் யார் அம்பதாயிரம் ரொக்கத்தோட கொடுப்பா?”

சாமண்ணா அதிர்ச்சியோடு நின்றான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 30சாவியின் ஆப்பிள் பசி – 30

சாயங்காலம் எல்லோருமாக ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, சுபத்ராவுக்காகக் காத்திருந்தார்கள். அரை மணி காத்திருந்த பிறகு, சேட் எழுந்து போய் டெலிபோன் பண்ணிப் பார்த்துவிட்டு, “இன்னும் வீட்டுக்கு வரலையாம் ஜீ” என்று டைரக்டரிடம் சொன்னார். டைரக்டர் பொறுமை இழந்து கொண்டிருந்தார். “வந்திரட்டம். அவங்க

சாவியின் ஆப்பிள் பசி – 12சாவியின் ஆப்பிள் பசி – 12

 சகுந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, “என்ன பிரமாதம் போங்கள். கடைசியில் கண்ணீர் வந்துடுத்து!”