சாவியின் ஆப்பிள் பசி – 10

பன்னீர் மலை, பூவேலிக்கு வடமேற்கில் மூன்று மைல் தள்ளி உள்ள முருகன் ஸ்தலம். பன்னிருகை வேலன் கோயில் பிரசித்தமானது. வேலனின் ஒவ்வொரு கையிலும் சம்ஹாரக் கருவிக்குப் பதிலாக யாழ், குழல் போன்ற இசைக் கருவிகள் இருந்தன.

இதனால் தானோ என்னவோ அங்கே ஆண்டுதோறும் ஆடி மாதக் கடைசி வார வெள்ளிக்கிழமையில் பெரியவர், சின்னவர் என்ற வித்தியாசமில்லாமல் சுற்று வட்டாரக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி, இருபத்து நாலு மணி நேரமும் பெரிய விழாக் கொண்டாடுவார்கள்.

சிம்மப்பாதையிலிருந்து தாசிகுலக் கன்னிகைகள் சதிர் ஆடிக்கொண்டு அபிஷேகத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் காட்சியைப் பார்ப்பதற்கென்றே அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் அத்தனை பேரும் கூடி விடுவார்கள்.

வக்கீல் வரதாச்சாரியும் அவர் மனைவி கோமளம்மாளும் வழக்கம் போல் அந்த வருட விழாவுக்கும் வந்திருந்தார்கள்.

மொட்டையாக நின்று கொண்டிருந்த தேர்ச் சப்பரத்துக்கு அருகே வரதாச்சாரியின் பீட்டன் வண்டி வந்து நின்றது. வரதாச்சாரிக்கு ஏக வரவேற்பு. கோயில் நிர்வாகிகள் அவரை முதல் வரிசைக்கு அழைத்துப் போய் உட்கார வைத்தார்கள். மஞ்சள் நீராடி, புதுசு உடுத்தி, பளீர் பளீர் என்று கன்னிகைகள் வெள்ளிக் குடத்தில் நீர் மொண்டு ஊர்வலமாகக் கோயிலுக்குள் போவதைக் கோமளம்மாள் மட்டும் வண்டியிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மாமி!” என்று பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது நிலவு போல பாப்பா நின்று கொண்டிருந்தாள். நகை ஏதும் அணியாமல், பளிச்சென்ற மேனி, மூன்றாவது அழகுக் கண் திறந்தது போல் நெற்றியில் குங்குமப் பொட்டு.

“வாம்மா! வா! ஏறிக்கோ. இந்தக் கூட்டத்திலே நான் வந்திருப்பது உனக்கு எப்படித் தெரிஞ்சுது?” என்று கேட்டாள் மாமி.

“பீட்டன் வண்டியைப் பார்த்தேன். நீங்க வந்திருப்பிங்கன்னு நினைச்சேன்!” என்றாள் பாப்பா.

“நீ குடம் எடுக்கப் போகலையா?”

“ஆசைதான் மாமி! ஆனா அதுக்கு எனக்கு அருகதை உண்டோ இல்லையோன்னு சந்தேகமாயிருந்தது. அதனால போகலே” என்று குரலில் சிறிதே வருத்தம் தொனிக்க கூறினாள்.

“அதுக்கென்ன, பாப்பா! நீயும் குடம் எடுத்தா யார் வேண்டாங்கப் போறா?” என்றாள் மாமி.

“எனக்கு எதிலுமே புத்தி போகலை மாமி! அவர் வந்திருக்கார் பார்த்தேளா?” என்றாள்.

“யாரு, சாமண்ணாவா?”

“ஆமாம்! அவர் மட்டுமில்லை. எல்லா நாடகக்காரர்களும் வந்திருக்காங்க. சிங்காரப் பொட்டு செல்லப்பா கூட வந்திருக்கார்.”

“உடம்பு சரியில்லாமல் இருந்தாரே, அவர் எப்படி வந்தார்?”

“ஆமாம்! கொஞ்ச நாளாகவே படுத்த படுக்கையா இருந்தாராம். முருகன் அருளாலே இப்ப பூரணமா குணமாயிட்டுதாம்.”

“நாடகங்களில் கதாநாயகன் வேஷம் போடுவார். ஜில்பாக் குடுமி வைத்துக் கதுப்புக் கன்னங்களில் குழி விழச் சிரிச்சார்னா ஊரே மயங்கிப் போகுமே!”

“இப்ப சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சு மறுபடியும் நாடகம் நடத்தப் போறாராம். அதுக்காகத்தான் இங்கே வந்திருக்கார்னு அப்பா சொன்னார். பல பெரிய மனுஷாளைச் சந்திக்கிறதுக்கு இது ஏத்த இடமாச்சே! எல்லாரும் இங்கே வந்திருக்கா பாருங்கோ!”

“சந்திச்சு என்ன செய்யப் போறார்?”

“எல்லாப் பெரிய மனுஷாகிட்டேயும் பணம் வசூல் பண்ணிக்கிட்டு இருக்காராம்!”

“அடி சக்கை! அப்படின்னா சீக்கிரமே புதுக் கம்பெனி ஊர்லே வந்துடும்னு சொல்லு” என்று சந்தோஷப்பட்டாள் கோமளம்.

“வரலாம்” என்று தலைகுனிந்து கூறினாள் பாப்பா.

“ஏன் பாப்பா! உனக்கு இதில் ஏதாவது வருத்தமா?”

“இல்லை மாமி” என்று சொல்லும் போதே ஒரு பெருமூச்சு வந்து அவளது உண்மை நிலையைக் காட்டியது.

“ஏதாவது மனசுலே இருந்தாச் சொல்லிடு. எங்க ஆத்துக்காரர் உங்க குடும்ப வக்கீல் இல்லையா? உங்களுடைய சுகதுக்கத்துல எங்களுக்கும் பங்கு உண்டே! நீ எதையும் என்கிட்டே மனம் திறந்து பேசலாம்!” என்றாள் கோமளம்.

“இல்லை மாமி! அவரை நான் பார்த்தேன்.”

“யாரு, சாமண்ணாவையா?”

“ஆமாம்.”

“அவர் என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டார். மனசு சுக்கலாப் போச்சு. அப்படி நான் என்ன மாமி இவருக்குத் தப்பு செய்தேன்? நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சு, மத்த நாடகக்காரர்களெல்லாம் ஒரு அபிமானத்துக்கு என்னை வந்து பார்த்துட்டுப் போனா. எங்க அம்மா காலத்திலே இவர்களுக்கெல்லாம் எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? அந்தப் பழைய விசுவாசம். இவருக்கு என்னைப் பிடிக்கலைன்னா பிடிக்காமப் போகட்டும். அதுக்காகப் பார்த்த கண்ணை இப்படியா வெட்டி முறிச்சு வேறு பக்கம் திருப்பிட்டுப் போகணும்?”

“அழாதேம்மா, இதுக்கெல்லாம் கண் கலங்கலாமோ?” என்று மாமி அவளைத் தேற்றினாள்.

“நாடகத்திலே இவர் நடிப்பையும் ரூபத்தையும் பார்த்து மயங்கிப் போனேன். எதேச்சையா அன்னைக்கு ஒரு நாள் நாங்க இவர் வீட்டுக்குப் போனப்போ ரொம்ப அக்கறை காட்டி அன்பாகப் பழகினார். இப்ப திடீர்னு அவருக்குப் பிடிக்கலை போல இருக்கு. போனாப் போகட்டும். யாரும் வற்புறுத்தலையே!”

“ஸ்திர புத்தி இல்லாம இருக்காண்டி அவன். என்னென்னவோ பேசுறான். கேஸ் வேறே குழப்பிட்டுதா! கொஞ்ச நாள் போகட்டும்: எல்லாம் சரியாப் போயிடும் நான் அவனுக்குப் புத்தி சொல்லிண்டுதான் இருக்கேன். நான் சும்மா விடப் போறதில்லை அவனை. இப்படியா ஒரு பெண்ணை வயிற்றெரிச்சல் கொட்டிக்கிறது?” என்று சற்று ஆவேசமாகப் பேசினாள் கோமளம்.

“நான் அப்படி என்ன கொடுமை பண்ணிட்டேன்? ஏன் இப்படி நடந்துக்கிறார்? நினைக்க நினைக்க இதயமே வெடிச்சுடும் போல இருக்கு மாமி!”

தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

“இந்தா பாப்பா! சின்னக் குழந்தையாட்டம் அழாதே! எதுக்கு அழணும்? அவன் போனாப் போறான். விட்டுத் தள்ளு. நன்றி கெட்டவன்! நீ மட்டும் வக்கீல் மாமாகிட்டே சிபாரிசுக்கு வரலைன்னா இவன் இந்தக் கேஸ்லேருந்து தப்பி வெளியே வந்திருக்க முடியுமா? போலீஸ் இன்ஸ்பெக்டர் முனகாலா சும்மா விட்டிருப்பாரா? முட்டியைப் பெயர்த்துட்டுத்தானே வெளியிலே அனுப்பிச்சிருப்பார்! கொஞ்சமாவது நன்றி இருக்கா? உன்கிட்டே நேரிலே ஒரு வார்த்தை சொல்ல வேணாமா? எங்கிட்டே சொல்லி என்ன பிரயோசனம்? வரட்டும்! வரட்டும்” என்று கறுவினாள் மாமி.

“ஐயோ, மாமி! கோபப்பட்டு அவரை எதுவும் உங்க வாயாலே சொல்லிடாதீங்க. சாபம் கொடுத்துராதீங்க. பெரியவங்க வாக்குப் பலிச்சுடும். அவர் எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனா அவருக்கு எந்தக் கெடுதலும் வரக் கூடாது. அவர் நன்னாயிருக்கணும். நான் உதவி செஞ்சது உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்சாப் போதும். இப்பவும் அவருக்கு நான் ஏதாவது செய்யணும்னுதான் நினைக்கிறேன்! இந்தச் சிங்காரப் பொட்டுக்காரர் ஒவ்வொரு பெரிய மனுஷாளாய்ப் பார்த்து சகாயம் கேட்கிறார். அவர் பின்னாலே இவர் அலையறார். இவர் ஏன் போகணும்? தலையெழுத்தா இவருக்கு? சொல்லுங்கோ. என்னை அவர் பார்க்க வேண்டாம். என்கிட்டே பேச வேண்டாம். தூரத்திலேயே இருந்துக்கட்டும். ஒரு வார்த்தை சொல்லி விட்டிருந்தா இவருக்கு நான் ஒரு டிராமாக் கம்பெனியே ஆரம்பிச்சுக் கொடுத்திருப்பேனே!”

“ஐயோ பாப்பா! திருப்பித் திருப்பி ஏன் புலம்பறே? அவனை விடு! உனக்கு ஏன் இப்படி துக்கம் பீறிப் பீறிண்டு வர்றது? அவன் ஏதோ புத்தி தடுமாறிப் போயிருக்கான். நாலு இடத்திலே போய் முட்டிக் கொண்டு வரட்டும். பட்டால்தான் தெரியும் அவனுக்கு.”

“மாமி! நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவீங்களா?”

“என்ன செய்யணும் சொல்லு?”

“நான் அவருக்கு எப்படியாவது, எந்த விதத்திலாவது உதவியாயிருக்கணும்னு நினைக்கிறேன். இப்ப அவருக்கு அது தெரிய வேண்டாம். பின்னாடி அவர் தெரிஞ்சுக்கிட்டு மனம் மாறி என்கிட்ட வரணுங்கிறதுக்காக இல்லை. சத்தியமா அந்த எண்ணம் இல்லை. ஒரு நல்ல நடிகர் வாழ, நான் உதவணும்னு தான் மனப்பூர்வமா விரும்பறேன். அதுக்காகத்தான் உதவி செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த அனாதைக்கு ஒத்தாசை செய்யணும்.”

“ஏன் இப்படியெல்லாம் பேசறே? அனாதைன்னு சொல்லிக்காதே! உனக்கென்ன குறைச்சல்? அப்படி அனாதை ஆக நாங்களெல்லாம் விட்டுற மாட்டோம். என்ன செய்யணும் சொல்லு!”

“அவர் கஷ்டப்படக் கூடாது மாமி! அதுதான் நான் வேண்டிக்கிறது. நீங்கதான் அவரைக் காப்பாத்தணும். அவருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், எவ்வளவு பணம் வேணும்னாலும் நீங்களே கொடுத்து உதவுங்க. நான் அதையெல்லாம் உங்களுக்குத் தந்துடறேன். ஆனா, நான் தான் இதெல்லாம் செய்யறேன்னு அவருக்குத் தெரிய வேண்டாம்.”

“இது என்ன பெரிய விஷயம்? உனக்காக அவசியம் செய்யறேன். கவலையே படாதே! ஆனா எனக்கு இன்னொரு யோசனை தோண்றது. அது சரியாயிருக்குமான்னு பாரு. சொல்லட்டுமா?”

“சொல்லுங்கோ.”

“சிங்காரப் பொட்டு பணத்துக்காக அலையறார்னு சொன்னியே! நீ ஏன் சிங்காரப் பொட்டுக்கே ஒரு டிராமாக் கம்பெனி ஆரம்பிச்சுக் கொடுக்கக் கூடாது? அந்தக் கம்பெனியிலே சாமண்ணா சேர்ந்துக்கலாமே! அது மறைமுகமாக இவனுக்கு உதவின மாதிரி இருக்குமே! என்ன சொல்றே?”

மாமி நிறுத்த, பாப்பா பரவசத்தோடு யோசித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 35சாவியின் ஆப்பிள் பசி – 35

நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு. ‘தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 37

அத்தியாயம் 37 – கமலபதி “கண் எல்லாவற்றையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய், காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போதும் மற்றயாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர்