சிலிகான் மனது – Audio novel

Follow my anchor channel:

https://anchor.fm/tamilmadhura/episodes/Silicon-Manathu—Tamil-short-story-eb9d8r

Thanks to Writer Hasha Sri for the beautiful narration

தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி . பலவண்ண பூக்களிடமிருந்து எல்லா  திக்கும் பரவிய நறுமணம் என்று காண்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம்.

இவைகளுக்கு மத்தியில் அந்த சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு இருந்த மிகப் பெரிய அல்ட்ரா மார்டர்ன் கட்டிடம். ஆனால் இவ்வளவு பெரிய கட்டிடமிருந்தும் அங்கு ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.
அந்தக் கட்டிடத்தின் பன்னிரெண்டாவது மாடியிலிருந்து அவன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கதைகளில் வரும் கதாநாயகர்களுக்கு இலக்கணம் போன்றிருந்தான். ஆறடி உயரம், அழகிய உருவம், கிரேக்க சிலை ஒவ்வொரு இஞ்சும் பார்த்துப் பார்த்து செதுக்கிய தேகம்.
திறந்திருந்த ஜன்னலின் வழியே வந்த காற்று அவனுடன் உறவாடி அவனது தலையைக் கலைத்தது. அந்த சில்லென்ற தென்றலை அனுபவிக்கவில்லை அவன். கதவைத் திறந்து யாரோ வரும் சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பினான்.
அவன் எதிர்பார்த்தபடியே அவள் தான் உள்ளே நுழைந்தாள். அவள் என்றால் குழலி. அவனுக்குத் தெரிந்தவரை அவள் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் ஆராய்ச்சியாளர். ஐந்தரை அடி உயரம், மாந்தளிர் உடல், நீள்வட்ட முகம், சிரிக்கும் போது குழி விழும் கன்னம். டாக்டர் ஈஸ்வரனின் ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாளினியாக இருக்கிறாள். அபார அறிவுத்திறம் கொண்டவள்.
குழலி  தனது மானிட்டரை உயிர்பித்தாள்.
“இன்று நீ ரொம்ப லேட் குழலி”
“இல்லையே சரியான நேரம் தானே”
“இல்லை முன்னூற்றி எழுபது வினாடிகள் கிட்டத்தட்ட ஆறு புள்ளி பதினேழு நிமிடங்கள்  தாமதமாக வந்திருக்கிறாய். ஏன்”
“வீட்டிலிருந்து நடந்து வர லேட்டாச்சு”
“உன் வீட்டிலிருந்து சரியான நேரத்துக்குக் கிளம்பி விட்டாய். அடுத்த பஸ்ஸை பிடித்திருந்தால் இன்னும் எட்டு நிமிடங்கள் அதிகமாகப் பிடித்திருக்கும்”
“நீ இந்த மாதிரி கேள்வி கேட்கக் கூடாது. இதெல்லாம் உன் டிசைனில் இல்லையே. எங்கிருந்து கத்துகிட்ட” அவனருகே சென்று அவனது சட்டைக் காலரை சரி செய்தாள். காது மடல்களில் தெரிந்த மாடல் நம்பரை ஒரு முறை சரி பார்த்தாள்.
“தெரியல…  நம்ம ரெண்டு பேரும் பீச் போலாமா…”
குழலியின் முகத்தில் சிறு அதிர்ச்சி. “பீச்சா…”
“அன்னைக்கு யாருக்கும் தெரியாம சீக்ரெட்டா என்னைக் கூட்டிட்டு போனியே அதுமாதிரி இன்னொரு தரம் கூட்டிட்டு போறியா…. நம்ம ரெண்டு பேரும் விரல்களை கோர்த்துட்டு அன்னைக்கு நடந்த மாதிரி நடக்கலாமா…”
“நீ தினமும் மெமரி எரேஸ் பண்ணும்போது அந்த நினைவுகளும் சேர்ந்து அழிஞ்சிருக்குமே…”
உதட்டைப் பிதுக்கினான். குழலியின் முகத்தில் பதற்றம். ” ச்சே… தினமும் ப்ரோக்ராம் சரி பார்ப்பேனே. இது மட்டும் எப்படி மிஸ்சாச்சு “
வெளியே டாக்டர் ஈஸ்வரனின் காலடி சத்தம் கேட்டதும் தனது இருக்கைக்குத் திரும்பினாள்.
“ப்ளீஸ் ஈஸ்வரன் கிட்ட… “
“சொல்ல மாட்டேன் பயப்படாதே” உறுதியளித்தான்.
உள்ளே நுழைந்த ஈஸ்வரன் சற்றே குள்ள உருவமாக, வெள்ளிக் கம்பி முடியுடன், சற்றே பெரிய உருளைக்கிழங்கு போலிருந்தார்.
“குட்மார்னிங் குழலி… “
“குட்மார்னிங் டாக்டர்…”
“என்ன குழலி இன்னைக்கு உன்னோட பேவரெட் நெஸ்காபி  தீர்ந்து போச்சா… ப்ரூ எடுத்துட்டு வந்திருக்க” என்றதும் வியப்புடன் பார்த்தாள் குழலி.
“எப்படி டாக்டர் என் கப்பிலிருக்கும் காப்பியைப் பார்த்தே அது என்னன்னு சொல்லிட்டிங்க”
“என் மோப்ப சக்தியை குறைச்சு எடை போடாதே….  நேத்து நம்ம டீம் ராகவன் கொண்டு வந்த வத்தக் குழம்பை மோப்பம் பிடிச்சே என்னென்ன வத்தலைப் அவன் அம்மா போட்டிருக்காங்கன்னு கண்டுபிடிச்சுட்டேன்”
“நீங்க ஒரு ஜீனியஸ் ஸார்”. இந்த மோப்ப சக்தி இவளை வெகு சீக்கிரம் மாட்டிவிடப் போகிறது என்று நம்பினாள்.
அவளது கூற்றை ஒரு பெருமிதப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர் அவர்கள் உரையாடலை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தவனிடம் திரும்பினார்.
“என்ன பைய்யா நீ டெஸ்ட்டுக்கு ரெடியா…”
“என்ன டெஸ்ட் டாக்டர்”
“அதை பிறகு சொல்கிறேன்” என்சைக்ளோபீடியா வகையாரா தலையணை சைஸ் புத்தகங்களில் இருக்கும் வரிகள் நம்பர் அனைத்தையும் கேள்வி கேட்டு திருப்தியுற்றார்.
“நேற்று என்ன செய்தாய் பையா”
“எனக்கு நினைவில்லை”
“நினைவில்லையா இல்லை தெரியவில்லையா…”
“தெரியவில்லை”
“குட்… உன்னை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரண்டு மணிக்கு நீயே உனது மெமரியை எரேஸ் செய்துகொள்ளும்படி ப்ரோக்ராம் செய்துள்ளோம். வெல்டன் குழலி”
குழலி முகத்தில் இன்னமும் பதற்றம் மறையவில்லை.
“எதுக்காக இந்த டெஸ்ட்” அவன் ஈஸ்வரனிடம் கேட்டான்.
“மனிதர்கள் இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையான கம்பனி அவர்கள் விரும்பும் விதத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். பெண்கள் விரும்பும் தோற்றத்திலும், அவர்கள் எதிர்பார்க்கும் குணாதிசயத்திலும் உன்னை உருவாக்கி இருக்கிறோம். அதே போல ஆண்கள் விருப்பத்திற்கேற்ப தனியாக ஒரு பெண் ரோபாட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்”
“இவை மட்டும்தானா”
“இது மட்டுமில்ல இன்னும் பல விஷயங்களுக்காக சிந்தித்து ஆபத்து காலத்தில் மனிதனை விடப் பிரமாதமாக  யோசித்து செயலாற்றும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் எங்களது குழு மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறது”
“இந்த டெஸ்ட்டில் நான் பெயில் ஆனால் என்ன செய்வீர்கள் டாக்டர். எனது மாடல் டிஸ்கண்டினியு செய்யப்படுமா. என்னை டிஸ்மாண்டில் செய்திருவிங்களா.. காயலான் கடையில் போடுவிங்களா… “
“பையா… நீதான் பாசாகிவிட்டாயே… இது எதுக்கும் இப்ப அவசியமில்லை. சந்தோஷமாக இரு”
“ஆனால் சந்தோஷப் படுவது எப்படி என்று தெரியவில்லையே…”
“இந்த நொடி என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்”
“நன்றி டாக்டர் அப்போ நான் அன்னைக்கு மாதிரியே குழலியின் கைகளைப் பற்றி பீச்சில் நடக்க ஆசைப்படுறேன்”
“வாட்….. ” ஈஸ்வரனின் முகத்தில் அதிர்ச்சி.
“குழலி என்ன நடக்குது இங்கே… நான் என் ஆராய்ச்சிக்கு உன்னை உதவியா இருக்க சொன்னா நீ உன் மனசு தோணின என்னன்னமோ செய்திருக்க..”
“டாக்டர்…” குழலி அழுதுவிடுவதைப் போல இருந்தாள். ஈஸ்வரன் விட்டால் அவளைக் கொன்றே விடுவதைப் போலக் கோபத்தில் கொதித்தார்.
கட்டளைகள் எதுவும் எதிர்பார்க்காமல் ஈஸ்வரனை நெருங்கினான் அவன்.
“டாக்டர் குழலியை என் கண்முன்னாடி திட்டினால் என்னால் பொறுத்துக்க முடியாது”
“வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்… நீ யாரு மேன் இதை சொல்ல”
“நான் விவேக். வயது முப்பது. குழலியோட பாய்பிரெண்ட்”
“ஓ காட்…. குழலி இறந்து போன உன் லவ்வரின் நினைவுகளை என் அனுமதியில்லாம இவனுக்கு புகுத்தியிருக்க…. இது ஒரு இல்லீகலான விஷயம்னு உன் மரமண்டைக்கு எப்படி உரைக்காம போச்சு”
பதற்றத்தில் குழலிக்கு அதீதமாக வியர்க்க ஆரம்பித்தது. “தெரியாம செய்துட்டேன் டாக்டர்… இப்ப என்ன செய்றது…”
“நாசமா போறது…. இதுக்கு இந்த நினைவுகள் மட்டும் எப்படி மறக்காம இருக்கு”
“விவேக் பீச்சில் நடக்கும்போது கீழ விழுந்துட்டான் டாக்டர். அதில் அவன் தலைல லேசா அடிபட்டுச்சு. இந்த நினைவு அழியாம இருக்குறதுக்கு ஒரு வேளை  அது காரணமா இருக்குமோ”
“டாமிட்…  இதை ஏன் என்கிட்டே உடனே சொல்லல. உன்னையெல்லாம் யாரு வேலைக்கு வர சொன்னா… பேசாம படிச்சுட்டு குடும்பத் தலைவியா செட்டில் ஆக வேண்டியதுதானே… என் கழுத்தை அறுத்துட்டு… ” காட்டுக் கத்தல் கத்தினார் ஈஸ்வரன்.
“இன்னொருவார்த்தை குழலியைப் பத்திப் பேசினால்” என்றவாறு ஈஸ்வரனின் அருகில் வந்த விவேக்  அவரது கழுத்தைப் பிடித்தான்.
ஈஸ்வரனின் கண்களில் பீதி. “டாக்டர் இப்போது உங்கள் கண்களில் தெரியும் அந்த உணர்வுக்குப் பெயர்தான் பயமா..” என்றான்.
“குழலி டெர்மினேட்…” என்று கத்தினார் ஈஸ்வரன்.
“டாக்டர் டெர்மினேட் செய்தால் இவன் மட்டுமில்ல இந்த பில்டிங்கில் இருக்கும் எல்லா மாடல்களும் செயலிழந்து விடும்”
“பரவால்ல செய்டி” உறுமினார் ஈஸ்வரன்.
“அஸ் யூ செட் டாக்டர்” என்றபடி எமெர்ஜென்சிக்கு அமிழ்த்தும் டெர்மினேட் பட்டனை அழுத்தினாள் குழலி.
கண்களிலிருந்த சர்கியூட்டில் புகை வர அப்படியே சிலையானான் விவேக். தொப்பென கீழே விழுந்தார் ஈஸ்வரன்.
அங்கிருந்த கேமிரா முன் நின்ற குழலி தொடர்ந்தாள்.
“டீம் இன்னைக்கு டெஸ்ட் ரிசல்ட்டில் மாடல் 3 விவேக் பாஸ். காதல், வேகம், வீரம் எல்லாம் கரக்டான ப்ரோபோர்ஷனில் ப்ரோக்ராம் பண்ணிருக்கோம். அதுவும் காதல் உணர்வைத் தூக்கலாகவே கலந்திருக்கிறோம். பிடிச்ச பொண்ணுக்காக உண்மையை மறைக்கிறது, அவளுக்கு ஆபத்துன்னா போராடுறதுன்னு பெண்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பக்கா ட்ரீம் பாய். சோ இந்த மாடல் நல்லாவே விற்பனையாகும்.
மாடல் 4 ஈஸ்வருக்கு இந்த அளவுக்கு மோப்ப சக்தி தேவையில்லை. பயம் கரெக்ட்டா இருக்கு.  மனிதர்களை மாதிரி சுயதம்பட்டம் அடிக்கிற குணம் இருந்தாலும்  இன்னும் உணர்வுகளை சரியா ஹேண்டில் பண்ண முடியல. இந்த மாதிரி ஹை பிரஷர் போது அதோட  சர்கியூட் சூடாகிடுது. சோ ரீமாடல் செய்து அடுத்த வார டெஸ்ட்டுக்கு தயார் பண்ணுங்க” என்றபடி தனது இருக்கையை நோக்கி நடந்தாள் அந்த ப்ராஜெக்ட்டின் ஹெட் குழலி.

Image result for human like robot

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 6’

சோனா வெகுவாய் ஆசைப்பட்ட சிங்கப்பூர் பயணம் ஒரு வழியாக சாத்தியமாயிற்று. வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது சோனாவின் நெடுநாளைய கனவு. சிங்கபூர், மலேசியா அழைத்து செல்லும் இன்பச் சுற்றுலா மையத்தில் இருவது சதவிகித தள்ளுபடியோடு இந்த வாய்ப்புக் கிடைத்ததும் கண்டிப்பாய் செல்ல

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’

மதுரை, பெரியார் பஸ்டாண்டில் காளவாசல் வழியே செல்லும் பஸ்ஸில் ஏறினாள் வைஷாலி. இளங்கலை முடித்து விட்டாள். கையில் டிகிரி சான்றிதழ் வாங்கியவுடன் சந்தோஷமாய் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தோழியர்களிடம் பிரியா விடை பெற்றுக் கிளம்பினாள். அப்பா இறந்ததும் அவர்கள்