சாவியின் ‘ஊரார்’ – 07

7

டிதத்தைப் பிரித்துப் படித்தாள் கமலா.

“கபாலி என்ன எழுதியிருக்கான்? நல்ல சமாசாரம் தானே?”

செருப்பு கடித்த இடத்தில் எண்ணெயைத் தடவிக் கொண்டே கேட்டார் சாமியார்.

“ஆமாங்க, அடுத்த வெள்ளிக் கிழமை வராராம். உடனே புறப்படணுமாம்.”

“உனக்கு நல்ல காலம் பொறந்துட்டுதுன்னு சொல்லு. நான் சொல்லலையா, கபாலி வருவான்னு. பிள்ளையாரை இன்னொரு தடவைச் சுத்திட்டுப் போ” என்றார் சாமியார்.

கமலா பிள்ளையாரைச் சுற்றினாள். உணர்ச்சிப் பெருக்கில், பரவச நிலையில் சாமியார் காலில் வீழ்ந்து கும்பிட்டு விட்டு ‘நான் வரேங்க’ என்று சொல்லிப் புறப்பட்டாள்.

“இந்தாம்மா, எண்ணெய் டம்ளர், புருசன் வர சந்தோசத்திலே இதை மறந்துட்டியா!” என்று கூறி டம்ளரைக் கமலாவிடம் கொடுத்தார் சாமியார்.

சற்று நேரத்துக்கெல்லாம் குமாரு வந்தான். சாமியாருக்கு லேசாகத் தலைவலித்துக் கொண்டிருந்தது. அலைச்சல், தூங்காமை, மனக்கவலை.

பையில் வைத்திருந்த அமிர்தாஞ்சனத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டார். உடம்பெல்லாம் வலித்தது. அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டார். குமாரு அவரைத் தொட்டுப் பார்த்தான். நெருப்பாய்ச் சுட்டது. “தலை வலிக்குதா சாமி?” என்று அவர் தலையை அமுக்கி விட்டான். “நல்ல காய்ச்சல் அடிக்குது” என்றான்.

அவர் உடல் நடுங்கியது. குளிர் ஜுரம். குமாரு ஒரு துணியை எடுத்துப் போர்த்தி விட்டான். சாமியார் பேச முடியாமல் திணறினார். மூச்சுக் காற்று உஷ்ணமாக வந்தது. அந்த உஷ்ணம் குமாருவைத் தாக்கியது.

அவன் கண்கலங்கினான்.

“நீ ஏண்டா அழுவறே!”

“நீங்க செத்துட்டீங்கன்னா நானும் செத்துடுவேன்.”

“நான் செத்துட்டா என்னடா நட்டம்! நீ சின்னப் பையன். வளர வேண்டியவன். உனக்கு சொத்து இருக்குது. எதிர்காலம் இருக்குது. நீ படிச்சு முன்னுக்கு வரணும். ஏதாவது தொழிற்சாலை தொடங்கி நடத்தணும். அதனாலே ஒரு நூறு பேருக்கு பிழைப்பு நடக்கணும்… செய்வியா?”

“துப்பாக்கித் தொழிற்சாலை ஆரம்பிக்கட்டுமா?”

“நீ துப்பாக்கியிலேயே இரு. அதெல்லாம் அரசாங்கத்திலே செய்வாங்க. நீ துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கிய படி.”

“அது என்ன துப்பாக்கி!”

“அது துப்பாக்கி இல்லேடா! திருக்குறள். மழை மாதிரி நாலு பேருக்கு உதவியாயிரு” என்றார்.

“மழை வரும் போல இருக்குதே. எங்க வீட்டுத் திண்ணையிலே வந்து படுக்கறீங்களா?”

“வேணாம். நான் பிள்ளையார் கோயில் ஆண்டி. எனக்கு இந்த எடமே போதும்.”

“ஆண்டின்னா? உங்களுக்கு யாருமே இல்லையா?”

“திண்டிவனத்திலே தங்கச்சி இருக்கா. சம்சாரம் கோயமுத்தூர் மில்லிலே வேலை செய்யுது. ஒரே ஒரு மகன் தான். அவன் ஆட்டோ ரிக்ஷா ஓட்றான். படிப்பு ஏறல்லே…”

“நீங்க ஏன் இங்கே வந்துட்டீங்க?”

“நான் சாமியாராயிட்டேன். பந்தம் பாசம் எல்லாத்தையும் விட்டுட்டேன். ஆனால் அதுதான் என்னை விட மாட்டேங்குது. அந்தப் பாசம் உன் பேரிலே திரும்பிட்டுது. இந்தப் பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டணும்… உன்னைப் படிக்க வச்சுப் பெரிய மனுசனாக்கணும்… இதாண்டா என் லச்சியம்.”

ஜுர வேகத்தில் சாமியார் படபடவென்று பேசினார்.

“நீங்க ரொம்பப் பேசாதீங்க. காய்ச்சல் அதிகமாயிடும்” என்றான் குமாரு.

“டெண்ட் சினிமா தங்கப்பனைப் பார்த்தியா எங்கேயாவது?”

“இப்பக் கூடப் பார்த்தனே. ஸ்கூட்டர்லே போயிக்கிட்டிருந்தாரு.”

“அவரைப் பார்த்தா இங்கே வரச் சொல்லுடா?”

“இப்பவே இட்டுக்கிட்டு வரேன்” குமாரு எழுந்து ஓடினான். கமலா எதிர்ப்பட்டாள். “எங்கடா ஓடறே?” என்று கேட்டாள்.

“சாமியாருக்குச் சரியான காய்ச்சல்!”

“இப்பப் பார்த்தனே, நல்லா பேசிக்கிட்டிருந்தாரே…”

“உடம்பெல்லாம் சுடுது. தலைவலி. படுத்துட்டாரு.” குமாரு ஓடிக்கொண்டே சொன்னான்.

தங்கப்பன் வெளியே போயிருந்தான். அவன் வீட்டில் தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து  தன் வீட்டுக்கு ஓடினான். மாமன் வேதாசலம் சிகரெட் ஊதியபடி செய்திகளை முந்தித் தரும் நாள் தாளைப் படித்துக் கொண்டிருந்தார்.

“சாமியாருக்குக் காய்ச்சல். படுத்திருக்காரு” என்றான்.

“இப்ப என்னடா அதுக்கு? நீ ஏன் பதர்றே?”

“பாவமாயிருக்குது?”

“பாவம் என்னடா! அனாதைச் சாமியார்தானே? இன்றைக்குச் செத்தால் நாளைக்கு ரெண்டு நாள்” என்றார் வேதாசலம் அலட்சியமாக.

ஆப்பக்கார அம்மாளிடம் போய்ச் சொன்னான். டெய்லர் கேசவனிடம் சொன்னான். நாட்டாண்மைக்காரரிடம் சொன்னான். ட்ராமாக்காரி ரத்னா பாயிடம் சொன்னான். யாருமே கவலைப்படவில்லை.

ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டார்கள். ரத்னாபாய் மட்டும் அலட்சியமாக “அவர் கிட்டதான் சூர்ணம் இருக்குமே சாப்பிடச் சொல்லு, சரியாயிடும்” என்றாள்.

அடுத்த ஊரிலிருந்து தினமும் ஒரு டாக்டர் வருவது வழக்கம். தெருக்கோடியில் உள்ள அவருடைய டிஸ்பென்ஸரிக்கு ஓடினான் குமாரு.

“சாமியாருக்குக் காய்ச்சல்! வந்து பாக்கறீங்களா?”

“பணம் வச்சிருக்கயா?” டாக்டர் சிரித்தார்.

“இல்லே…”

“இது தர்ம ஆஸ்பத்திரி இல்லே. போய்ப் பணம் கொண்டு வா. வந்து பாக்கறேன்.”

“எத்தினி ரூவா?”

“முதல்லே பத்து ரூவா கொண்டா. அப்புறம் மருந்துக்குத் தனி…”

குமாரு ஓடினான். கமலாவைத் தேடிப் போய்ப் பணம் கேட்டான்.

“டாக்டருக்குப் பத்து ரூவா வேணுமாம். பணம் இல்லாமே வரமாட்டாராம்…”

“இந்தாடா, என்கிட்டே இருக்குது பத்து ரூவா. இதைக் கொண்டு போய்க் கொடு. வருவாரு.”

கமலாவிடமிருந்து பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு குமாரு திரும்பி டாக்டரிடம் ஓடினான். பணத்தைக் கொடுத்துவிட்டு ‘வாங்க’ என்று அவசரப்படுத்தினான். டாக்டர் ஸ்கூட்டரில் ஏறி அரசமரத்தடிக்கு வந்தார். குமாரு அதே வேகத்தில் பின்னோடு ஓடி வந்தான்.

சாமியார் நினைவின்றி முனகிக் கொண்டிருந்தார். இதற்குள் கமலா அங்கே வந்து விட்டாள்.

சாமியார் முதுகிலும் மார்பிலும் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பார்த்தார் டாக்டர். பல்ஸ் பார்த்தார். கடைசியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்த்து விட்டு, ‘நூத்தி மூணு இருக்குது…” என்று சொல்லி ஒரு இஞ்செக்ஷன் போட்டார். “டிஸ்பென்ஸரிக்கு வாடா, மருந்து தரேன்” என்று குமாருவைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனார். ஊரில் யாருமே சாமியாரை வந்து பார்க்கவில்லை. வேதாசலம், நாட்டாண்மைக்காரர், டிராமாக்காரி ரத்னாபாய், பிளேடு பக்கிரி, டெய்லர் கேசவன், ஆப்பக் கடைக்காரி அத்தனை பேரும் ஊரில்தான் இருந்தார்கள். ஆனால் யாருமே சாமியாரை எட்டிப் பார்க்கவில்லை.

கமலா மட்டும் சாமியாருக்கு பார்லி கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குமாரு, டாக்டர் கொடுத்த மாத்திரை, பவுடர், மிக்சர் மூன்றையும் சாமியாருக்கு வேளை தவறாமல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சாமியார் சாயந்திரம் கொஞ்சம் கண்விழித்துப் பார்த்தார். தங்கப்பனும் குமாரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

தங்கப்பனைப் பார்த்து, “வா, தங்கப்பா! கொள்ளைக்காரங்க வந்தாங்களாம்…” என்று ஈனசுரத்தில் கேட்டார் சாமியார்.

“ஆமாம். நகை நட்டு, வெள்ளிப் பாத்திரம், பணம் எல்லாம் போயிட்டுது…”

“எவ்வளவு ரூவா?”

“மூவாயிரம் எண்ணி வெச்சிருந்தேன். சினிமாக் கொட்டகை வசூல், பாங்கிலே கொண்டு போய்ப் போடறதுக்கு… அவ்வளவும் போயிட்டுது. கூப்பிட்டீங்களாமே!”

“ஆமாம். இந்தப் பையிலே மூவாயிரம் இருக்குது. இந்தா.”

“ஏது?”

“இது வேறே பணம். பிள்ளையார் கோயில் கட்டறதுக்காக மெட்ராஸ்லேருந்து பிச்சை எடுத்து வந்தேன். நீதான் கோயிலைக் கட்டித் தரணும். முன்னே பின்னே ஆனாலும் நீயே போட்டுக் கட்டிக் கொடுத்துடு…”

“எனக்கு நேரம் சரியில்லையே! இப்ப எல்லாத்தையும் கொள்ளை கொடுத்துட்டு நிக்கறேன்.”

“பிள்ளையாருக்கு நீ செய். எல்லாம் சரியாயிடும். அவர் உன்னைக் காப்பாத்துவார்” என்றார் சாமியார்.

தங்கப்பன் பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவன் போனதும், “டாக்டருக்கு யாருடா பணம் கொடுத்தாங்க?” என்று குமாருவைப் பார்த்துக் கேட்டார் சாமியார்.

“கமலா!”

“எத்தனை ரூவா?”

“பத்து!”

“வேறே யாரும் வந்தாங்களா?”

“ஒருத்தருமே வரல்லே… அவங்களுக்கெல்லாம் உடம்பு சரியில்லேன்னா உங்ககிட்டே வைத்தியத்துக்கு வருவாங்க…”

“உங்க மாமனுக்குத் தெரியுமா?”

“தெரியும்.”

“என்ன சொன்னாரு?”

“அனாதை சாமியார்தானே! இன்னைக்குச் செத்தா நாளைக்கு ரெண்டு நாளான்னாரு.”

“அப்படியா சொன்னான்?” சாமியார் சிரித்தார்.

“என்ன சிரிக்கிறீங்க?”

“அதாண்டா ஒலகம்! நல்லாப் படிச்சுக்கோ” என்றார் சாமியார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 1,2காயத்திரியின் ‘தேன்மொழி’ – 1,2

வணக்கம் தோழமைகளே, நமது தளத்திற்கு ‘தேன்மொழி’ புதினத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் திருமதி காயத்திரி அவர்களை வரவேற்கிறோம். அழகான கிராமத்து தேன்மொழி உங்கள் அனைவரையும் கவர்வாள் என்று நம்புகிறோம். படித்துவிட்டு உங்களது எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 1

வணக்கம் தோழமைகளே! ‘காதல் யுத்தம்’ என்ற புதினத்தின் மூலம் நமது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.கணபதி அவர்களை வரவேற்கிறோம்.  கதையின் கதாநாயகன் விஷ்ணுவை வெறித்தனமாக விரும்பும் கவிதா, ஆனால் தான் கனவில் மட்டுமே தோன்றிக் கண்ணாமூச்சி காட்டும் கனவுக்கன்னியைத் தூரிகையில் சிறைபிடித்துக்

உள்ளம் குழையுதடி கிளியே – 1உள்ளம் குழையுதடி கிளியே – 1

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன். ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும்  ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது  ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால்