Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 31

31
 

    • மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து மல்லிகாவின் முகத்தை ஏக்கத்தோடு பார்ப்பதும், வெளியே போய் கேன்டீனில் ஏதாவது கிடைத்ததை அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அவள் கண் விழித்து விட்டாளா என்று பார்ப்பதற்காக மீண்டும் லி•ப்டில் ஏறி ஓடி வருவதுமாக இருந்தான்.

 

    • மல்லிகா எந்த நேரமும் மீண்டும் கண் விழிக்கலாம் என அவளை மாறி மாறி வந்து பார்த்த இரண்டு டாக்டர்களும் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே இரு முறை விழி திறந்து ஓரிரு விநாடிகள் பார்த்து விட்டு மீண்டும் மயங்கிப் போனாள். குடலிலிருந்து விஷம் எல்லாம் வெளியாகிவிட்டது என டாக்டர்கள் கூறியிருந்தார்கள். நுரையீரலுக்கு காற்று சீராகப் போய் வந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் தொண்டையின் உள் ஓரங்கள் புண்ணாயிருக்கின்றன என்று டாக்டர் சொல்லியிருந்தார். அந்தப் புண் நாளாவட்டத்தில் ஆறிவிடும் என்று கூறியிருந்தார்கள். இப்போதைய முக்கிய சிகிச்சை அவள் இதய ஓட்டத்தைச் சீராக்குவதற்காகத்தான் என்று சொல்லிப் போனார்கள்.

 

    • கொஞ்ச நேரம் முன்புதான் அத்தை வீட்டுக்குத் திரும்பிப் போனாள். “எதுக்கும் வீட்டுக்குப் போயி கொஞ்சம் கோழி சூப் வச்சி எடுத்திட்டு வந்திர்ரேன் கணேசு. புள்ள கண்ண முழிச்சவொண்ண கொஞ்சம் சூப் வாயில ஊத்தலாம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். அப்பாவும் அம்மாவும் நேற்றிரவு முழுக்க மருத்துவ மனையில் இருந்து விட்டு இன்றைக்குத்தான் எஸ்டேட்டுக்குத் திரும்பியிருந்தார்கள்.

 

    • முந்தாநாள் இரவு பினாங்கு – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நான்கு ஐந்து மணி நேர மோட்டார் சைக்கிள் பயணம் அவன் உள்ளத்தையும் உடலையும் உலுக்கிப் போட்டிருந்தது. இரண்டு ஓய்விடங்களில் பெட்ரோல் போட நிறுத்திய சந்தர்ப்பங்களில் அத்தை வீட்டுக்குப் •போன் செய்து பார்த்தான். ஒரு பதிலும் இல்லை. முன்னிரவில் பினாங்கிலிருந்து போன் செய்த போது அவன் •போனை எதிர்பார்த்து பதில் சொல்வதற்கென்று பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைதன் வீட்டில் காவல் வைத்துப் போயிருந்தாள் அத்தை. அவர்தான் மல்லிகா பற்றிய விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.

 

    • “துங்கு அம்புவான் ரஹிமா ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருக்காங்க. தம்பி •போன் பண்ணா நேரே அங்க வந்திரச் சொன்னாங்க!” என்று மட்டும் அவர் சொன்னார். பின்னர் கடமை முடிந்தது என்று அவரும் போய்விட்டார். அப்புறம் •போனை எடுத்துப் பேச வீட்டில் யாரும் இல்லை.

 

    • மல்லிகா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற தகவல் தெரியாத அந்த ஐந்து மணி நேரமும் அவன் மனம் புயலாக இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் அந்த நடு நிசியில் பேய்க்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருக்க அவன் மோட்டார் சைக்கிள் என்ஜின் போலவே அவன் மனமும் இடைவிடாது ஓங்கி ஓலமிட்டவாறு இருந்தது.

 

    • “என்ன செய்து விட்டாய்? என்ன செய்து விட்டாய்?” என்று மனம் குத்திக் குத்தி கேட்டவாறு இருந்தது. “என் அன்புக்கினிய ஒரு உயிரை நானே வதைத்து விட்டேனா?” என்ற கேள்வி எழுந்து அவனைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே எச்சரித்திருக்கிறாள். சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!” என்று தெளிவாகக் கூறியிருக்கிறாள். இருந்தும் என் காதல் மூர்க்கத்தில் அதை நான்தான் அலட்சியம் செய்து விட்டேன்.

 

    • ஹெல்மெட்டுக்குள் வழிகின்ற கண்ணீரை அவன் துடைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

 

    • “இல்லை இது என் குற்றம் இல்லை! அத்தை வளர்த்துவிட்ட இந்த ஆசைகளுக்கும் மல்லிகா வளர்த்துக் கொண்ட ஒரு தலைக் காதலுக்கும் நான் பொறுப்பில்லை” என்ற ஒரு தற்காப்பு வாதமும் எழுந்தது.

 

    • “இருந்தாலும் மல்லிகாவின் மென்மையான மனதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக அவளிடம் முடிவைச் சொல்லிக் கை கழுவி வந்தது உன் குற்றம்தான். அவள் செத்தால் நீதான் அதற்குக் காரணம்” என்று மனத்தின் இன்னொரு பகுதி எதிர் வாதம் செய்தது. கோபத்திலும் தாபத்திலும் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

 

    • விடியற்காலை நான்கு மணிக்கு அவன் கிள்ளானை அடைந்து ஆஸ்பத்திரியை அடைந்து இரவு நர்சிடம் விவரம் சொல்லி அறுவை சிகிச்சை வார்டை அடைந்த போது அத்தையுடன் அப்பா அம்மாவும் இருந்தார்கள். அத்தை அவனைக் கண்டதும் ஓவென்று அழத் தொடங்கினாள். அவளைத் தோளைப் பிடித்து ஆறுதல் சொல்லி என்ன நடக்கிறது என்று கேட்டான். “வயித்தக் களுவுறாங்களாம் அப்பா! ஒண்ணும் விவரமா சொல்ல மாட்டேங்கிறாங்க! வந்தவொடன உள்ளுக்குக் கொண்டு போயிட்டாங்க. இங்கதான் உக்காந்து காவல் காத்துக்கிட்டு இருக்கோம். பாவிப் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே! எனக்கு ஒரே பிள்ளையாச்சே!” என்று அத்தை அழுதாள்.

 

    • கொஞ்சங் கொஞ்சமாக அவளிடமிருந்து வந்த வார்த்தைகளில் தான் கிள்ளானில் இருந்து புறப்பட்டுப் போனவுடன் மல்லிகா தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதாகவும், நீண்ட நேரம் சத்தமில்லாமல் இருப்பதைக் கண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது தோட்டத்துக்குத் தெளிக்கும் பூச்சி விஷ போத்தலுடன் வாயில் நுரை தள்ள கைகால்கள் வலித்துக் கொண்டு அவள் கிடந்ததாகவும் உடனே அவளைக் காரில் ஏற்றி இங்கு கொண்டு வந்ததாகவும் தெரிந்தது.

 

    • அப்பா கனல் கக்கும் விழிகளுடன் உட்கார்ந்திருந்தார். அம்மா வழக்கம் போல் பயந்து போய் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தாள். இருவரும் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அத்தை கூட மல்லிகாவின் இப்போதைய நிலைமையைப் பற்றிப் பேசியதைத் தவிர்த்து இதற்கு முன் நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை.

 

    • ஒரு வகையில் அந்த மௌனம் ஆறுதலாக இருந்தாலும் அவர்கள் பேசாமல் உள்ளுக்குள் அடக்கிக் குமுறிக் கொண்டிருந்த அந்த எண்ணங்கள் அவனுக்குத் தெரிந்தன. அவன் அவர்கள் உள்ளத் திரையில் ஒரு கொலைகாரனாக உலவி வருவதை அவனால் ஊகிக்க முடிந்தது. உண்மையா? தான் கொலைகாரனா? இப்படி நடந்து விட்டதற்கெல்லாம் தேனே காரணமா? அவனுக்கே சரியாகத் தெரியவில்லை.

 

    • அன்றிரவும் மறுநாள் பகல் முழுவதும் மல்லிகா கோமாவில் இருந்தாள். அவளுக்குத் தொடர்ந்து செலைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

 

    • மறுநாள் இரவு இரண்டு முறை முனகிக் கண் விழித்து மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். பக்கத்தில் இருப்பவர்கள் யாரையும் அவள் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. மண்ணிலிருந்து பிடுங்கிப் போட்ட செடி போல வாடிப் போய்க் கிடந்தாள்.

 

    • முதல் நாள் காலையில் ஒரு இந்தியப் போலிஸ்காரர் வந்து விசாரித்தார். பெயர் எல்லாம் கேட்டு எழுதிக்கொண்டு எப்படி நடந்தது என்று கேட்டார். “இல்லங்க, பொண்ணுக்கு இருமல் இருந்திச்சி. இருமல் மருந்துன்னு நெனச்சி இந்த பூச்சி மருந்த எடுத்துச் சாப்பிட்டிடிச்சி, வேற ஒண்ணும் இல்ல” என்று அத்தை அவசரம் அவசரமாக விளக்கம் கொடுத்தாள்.

 

    • “இது என்ன காதல் தோல்வியா?” என்று கேட்டுச் சிரித்தார் அவர்.

 

    • “அய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க!” என்றாள் அத்தை.

 

    • “பரவால்லம்மா, சொல்லுங்க! ஒரு மாசத்துக்கு எப்படியும் ஒரு கேசு ரெண்டு கேசு பாத்துக்கிட்டுத்தான இருக்கிறோம்! அதிலியும் நம்ப புள்ளைங்கதான் ஆ ஊன்னா விஷத்த தூக்கிக்கிறாங்க! இருமல் மருந்துக்கும் விஷத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறதுக்கு என்ன இது சின்னக் கொழந்தயா?” என்றார் அவர்.

 

    • அத்தை தயங்கிச் சொன்னாள்: “கேஸ் கீஸ்னு ஆவாம பாத்துக்கணுங்க!”

 

    • “அதெல்லாம் ஆகாது. எல்லா கேசயும் கோர்ட்டுக்குக் கொண்டு போறதின்னா எங்களுக்கு வேற வேலயே செய்ய முடியாது! உண்மையச் சொல்லுங்க. பதிஞ்சு வச்சிக்கிறோம். இதுக்கு மேல கேஸ் ஒண்ணும் இல்லாம பாத்துக்கிறோம்!” என்றார்.

 

    • “ஆமாங்க! ஒரு பையன விரும்பிச்சி. அது நடக்கலேன்னவொண்ண ஒரு கோவத்தில இப்படி செஞ்சிடிச்சி!”

 

    • “நீங்க முடியாதின்னிட்டிங்களா? அந்தப் பிள்ளய அடிச்சிங்களா?”

 

    • “அய்யோ அப்படியெல்லாம் இல்லிங்க. இது கொஞ்சம் குழப்பமான விஷயம்!” ஒரு முறை கணேசனைப் பார்த்து விட்டு அத்தை அமைதியானாள்.

 

    • என்ன மருந்து குடித்தாள், ஏன் வீட்டில் இருந்தது, என்றெல்லாம் கேட்டு எழுதிக் கொண்டு அவர் போய்விட்டார். போகும் போது கணேசனைப் பார்த்து “இந்தப் பையனா?” என்று கேட்டார். யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை. “இந்த இந்தியர்கள் எந்த நாளும் திருந்த மாட்டார்கள்” என்பது போலத் தலையாட்டிவிட்டு அவர் போய்விட்டார்.

 

    • *** *** ***

 

    • மருத்துவ மனையில் மல்லிகாவுடன் தனித்து இருந்த போது அவன் மனம் அலை மோதியது. அவள் துவண்டு போய்க் கிடந்தாள். பெண்மை அழகென்று ஒன்றும் இல்லாத சோர்ந்த தசைப் பிண்டமாய்க் கிடந்தாள். தலை முடி அலங்கோலமாக இருந்தது.

 

    • எப்படி இருந்தவள்! எப்படி ஆடி ஓடிக் குதித்துத் திரிந்தவள்! எத்தனை துடுக்கான வாய்ப்பேச்சு! எத்தனை ஆசைகளைத் தேக்கி வைத்திருந்த மனது! இப்போது அவை எதையும் பற்றிய பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாள். இவ்வளவு தீவிரமான ஆசைகளைத் தேக்கி வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று துடிக்கின்ற ஒரு பெண்ணுக்கு அந்த வாழ்க்கையை பட்டென்று முடித்துக்கொள்ள வேண்டும் என்ற துணிவு எங்கிருந்து வருகிறது? ஏன் இப்படிச் செய்தாய் மல்லிகா? என்ன நினைத்து இப்படிச் செய்தாய்?

 

    • நான் ஒருவன் உனக்குக் கணவனாய் வாய்க்காவிட்டால் என்ன? உனக்குக் கணவனாக வர எத்தனையோ பேர் காத்திருப்பார்களே! ஏன் என்னை மட்டும் உயிர்க்கொம்பாய்ப் பிடித்தாய்? ஏன் என்னையே பற்றிக் கொண்டாய்? நான் வேறு ஒரு கொடி என்மீது படர இடம் கொடுக்க விரும்புகிறேன். உனக்குப் பற்றிக் கொள்ள இன்னும் எத்தனையோ கொம்புகள் உண்டே! என்னிலிருந்து உன்னைப் பிய்த்துப் போட வைத்தாயே! உன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றவாளியாய் என்னையே ஆக்கி விட்டாயே!

 

    • அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.

 

    • திடீரென்று மல்லிகா அசைந்தாள். முனகினாள். கண்களை சிரமப்பட்டுத் திறந்தாள். அவள் கையைப் பற்றினான் கணேசன். கண்களை விழித்து வெறுமையாகப் பார்த்தாள். “யாரு?” என்று கேட்டாள்.

 

    • “நாந்தான் மல்லிகா” என்றான்.

 

    • “மாமா! கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதே!” என்றாள். சொல் குழறலாக இருந்தது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்ள சிரமப் படவேண்டியிருந்தது. இடது கையை மட்டும் தூக்கி அவன் கைகளைத் தடவினாள்.

 

    • “இப்பதான விழிச்சிருக்கே. ஓய்வெடுத்துக்க!” என்றான்.

 

    • “தண்ணி வேணும்!” என்று ஈனசுவரத்தில் சொன்னாள்.

 

    • அவன் எழுந்து தாதியைக் கூப்பிட்டான். ஒரு மலாய் தாதி வந்தாள். மல்லிகாவின் தலையை ஒரு கையால் தாங்கியவாறு அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள். மீண்டும் படுக்க வைத்தாள். “மறுபடி தண்ணீர் கேட்டால் தாராளமாகக் கொடுக்கலாம். தண்ணீர் குடிப்பது நல்லது” என்று சொல்லி மீதியிருந்த தண்ணீரை கண்ணாடிப் பாத்திரத்தோடு அங்கேயே வைத்துச் சென்றாள்.

 

    • மல்லிகா அவனைப் பார்த்து பலவீனமாகப் புன்னகைத்தாள். அவள் கைகளைப் பாசத்தோடு மீண்டும் இறுக்கினான். இடது கையால்தான். வலது கை படுக்கை மீதே கிடந்தது.

 

    • “எப்படியிருக்கு மல்லிகா?” என்றான்.

 

    • “அதான் நான் பொழச்சிக்கிட்டேனே! இனிமே நல்லாத்தான் இருப்பேன்! இப்பதான் உங்க முகம் லேசா தெரியுது. ஆனா கண்ண ஏதோ மறைச்சிருக்கிற மாதிரி இருக்கு” என்றாள். அவளையே பார்த்திருந்தான்.

 

    • “அம்மா எங்கே?” என்று கேட்டாள்.

 

    • “வீட்டுக்குப் போயிருக்காங்க. சூப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ரேன்னு சொன்னாங்க! இப்ப வந்திருவாங்க!”

 

    • விழிகளைச் சுழல விட்டு கொஞ்சம் மருண்டாள். “எந்த ஆஸ்பத்திரி?”

 

    • “துங்கு அம்புவான் ரஹிமா!”

 

    • “எப்ப வந்தேன்?”

 

    • “ரெண்டு நாளாச்சி!”

 

    • “ரெண்டு நாளாச்சா?” களைத்துக் கண் மூடினாள். எதையோ விழுங்குவது போல அவள் தொண்டைக் குழி அசைந்தது. அப்புறம் வலியால் முனகினாள். சற்றுப் பொறுத்துக் கண் திறந்தாள். “நீங்க பினாங்குக்குப் போகலியா?”

 

    • “போனேன். செய்தி வந்தது. உடனே வந்திட்டேன்!”

 

    • அவனைப் பாவமாகப் பார்த்தாள். “உங்க எல்லாருக்கும் பெரிய சிரமத்தக் கொடுத்திட்டேன்!”

 

    • “அதப்பத்தி இப்ப என்ன? நீ பேசாம ஓய்வெடுத்துக்க!” என்றான்.

 

    • “இந்த சோத்துக் கை பக்கம் அப்படியே மரத்துப் போன மாதிரி இருக்கே!” என்றாள்.

 

    • அந்தப் பக்கத்தை கைகளால் அழுத்தினான். ஆனால் அவளுக்கு அந்தத் தொடு உணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.

 

    • “மாமா! உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்!”

 

    • “இப்ப வேண்டாம் மல்லிகா! ஓய்வெடுத்துக்க!”

 

    • “இல்ல! இப்பவே சொல்லணும். கேளுங்க! உங்க காதலி பேரென்ன?” என்றாள்.

 

    • “அத இப்பப் பேச வேணாம் மல்லிகா!”

 

    • “இல்ல சொல்லுங்க!”

 

    • “அவ பேரு அகிலா!”

 

    • “மாமா. நீங்க அகிலாவையே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு முழு சம்மதம்!”

 

    • “இப்ப அந்தப் பேச்சு வேணாம் மல்லிகா…!

 

    • “இல்ல! விஷம் குடிச்சி மயக்கம் வர முன்னாலேயே எனக்கு இந்த நெனப்பு வந்திடுச்சி. பெரிய முட்டாள் தனம் செஞ்சிட்டமேன்னு அப்பவே நெனச்சேன்! நல்ல வேள! உங்களுக்கு இந்த செய்தியச் சொல்றதுக்கு ஆண்டவன் எனக்கு உயிர் பிச்சை கொடுத்திருக்கான். நெசமாத்தான் சொல்றேன். நீங்க அகிலாவயே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்குப் பூரண சம்மதம்!”

 

    • அவள் கைகளைத் தன் கண்களுக்குள் புதைத்துக் கொண்டான். இலேசான கண்ணீரில் அது நனைந்தது.

 

    • அவள் கண்கள் மூடி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

 

    • *** *** **

 

    • அத்தை திரும்பி வந்த போது அவள் கண்விழித்துப் பேசியதைப் பற்றிச் சொன்னான். ஆனால் என்ன பேசினாள் என்று சொல்லவில்லை. அத்தை அவளை மெதுவாகத் தொட்டு “மல்லிகா, கண்ணு!” என்று கூப்பிட்டாள். அவள் கண் விழித்துப் பார்த்தாள். “அம்மா” என்றாள்.

 

    • அத்தை அவளைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள். “இப்படிப் பண்ணிட்டியே கண்ணு! இந்த அம்மாவ உட்டுட்டுப் போவப் பாத்தியே! நீ போயிட்டா எனக்கு வேற யாரு இருக்கா இந்த ஒலகத்தில? நான் ஒண்டிக்கட்டயா இருப்பேனா? நீ போயிட்டா நான் இருப்பேனே? நானும் பின்னாலேயே வந்திருக்க மாட்டேன்?”

 

    • மல்லிகா அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். குழறிக் குழறி பேசினாள். “அழுவாதம்மா! இனிமே அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்! அழுவாத!” என்றாள்.

 

    • அத்தை கண்களைத் துடைத்துக் கொண்டு மல்லிகாவுக்கு அவசரம் அவசரமாக சூப்பை எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள். கணேசனை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு அவள் சூப்பை மெதுவாக உறிஞ்சிக் குடித்தாள். சூப் வாயின் ஓரத்தில் வழிந்தது.

 

    • ஒரு இந்திய டாக்டர் தாதியுடன் வந்தார். “ஓ நல்லது! கண் முழிச்சிருக்கே உங்க பொண்ணு!” என்று சந்தோஷப் பட்டார். அத்தையையும் கணேசனையும் ஒரு முறை பார்த்துப் புன்னகைத்துவிட்டு பதிவேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். மல்லிகாவின் இமைகளை இழுத்துக் கண்களைப் பரிசோதித்தார். விளக்கு அடித்துப் பார்த்தார். ஸ்டெதெஸ்கோப்பை வைத்து இருதயத் துடிப்பைப் பார்த்தார். “நன்றாக இருக்கிறது!” என்றார். தொண்டையின் பக்கங்களை அழுத்திய போது மல்லிகா வலியால் முனகினாள். பின்னர் அடிவயிற்றை அமுக்கினார். அப்போதும் அவள் வலியால் துடித்தாள்.

 

    • அவள் வலது கையையும் இடது கையையும் தூகிப் பார்த்தார். வலது கை துவண்டு கிடந்தது.

 

    • “எப்படி இருக்கு டாக்டர்?” என்று அத்தை படபடப்புடன் கேட்டாள்.

 

    • அத்தையைப் பார்த்து டாக்டர் சொன்னார்: “தொண்டை ரொம்பப் புண்ணா இருக்கம்மா. அது ஆற ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆகும். மருந்து குடிக்கணும். அதே போல கல்லீரலும் பாதிக்கப் பட்டிருக்கு. அதை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும். கண்கள்ள பாதிப்பு இருக்கு. ஒரு பக்கம் கை விளங்காம இருக்கு. அதையெல்லாம் சோதிச்சுப் பார்க்கணும். இன்னும் ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கட்டும். அப்பறந்தான் சொல்ல முடியும் “

 

    • “புள்ளைக்கு ஒண்ணும் ஆயிடாதே!” என்று அத்தை கேட்டாள்.

 

    • “உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல. பயப்படாதீங்க!” என்று சொல்லி விட்டு டாக்டர் நடந்தார். கணேசன் அவர் பின்னாலேயே போனான். அத்தையின் காதுக்கெட்டாத தூரம் வந்தவுடன் “டாக்டர்” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் நின்று “என்ன?” என்பது போல அவனைத் திரும்பிப் பார்த்தார்.

 

    • “ஏன் ஒரு பக்கம் கை விளங்கிலன்னு சொல்றிங்க?” என்று கேட்டான்.

 

    • “இப்ப தெளிவா சொல்ல முடியாது. தொடு உணர்ச்சி குறைவாத்தான் இருக்கு. பரிசோதிச்சி கவனிச்சாத்தான் சொல்ல முடியும். பாருங்க, விஷங் குடிச்சி கிட்டத்தட்ட மூணு மணி நேரம் போய்தான் கொண்டாந்திருக்காங்க. இதுக்கிடையில அந்தப் பெண்ணுக்கு வலிப்பு வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூளைக்கு பிராண வாயு போறது தடைப் பட்டிருக்கு. அதினால மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்படிருக்கு. இதினால ‘பார்ஷியல் பேரலிசி]ஸ்’ ஏற்பட்டிருக்கு. அதினாலதான் ஒரு பக்கம் விளங்கில. முகத் தசைகள் கூட சரியா அசையில. அதினாலதான் வாய் குழறுது” என்றார். கணேசன் அதிர்ந்து நின்றான்.

 

    • “பாத்திங்களா! ஒரு கோவத்தில ஒரு கணத்தில செய்றது வாழ்நாள் முழுக்க பாதிச்சிருது. இந்தப் பெண்ண யாராவது இனி கிட்டவே இருந்து கவனிச்சிக்கிட்டு இருக்கணும். சும்மா உடம்புக்காக மட்டுமில்ல! இந்த அதிர்ச்சியிலிருந்து அந்தப் பொண்ணு மீண்டு வரும் போது அதனுடைய மன நலத்தையும் யாராவது பக்கத்திலிருந்து கவனிச்சிக்கத்தான் வேணும். நீண்ட நாளைக்கு தெராப்பி தேவைப் படலாம். அவங்க அம்மாகிட்ட சொல்லுங்க!” டாக்டர் அடுத்த நோயாளியைக் கவனிக்க அகன்று விட்டார்.

 

    • கணேசன் நின்ற இடத்திலிருந்து மல்லிகாவின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அத்தை பாசமாக அவளுக்கு சூப் ஊட்டிக் கொண்டிருந்தாள். சூப் வாயில் ஒரு பக்கம் ஒழுக ஒழுக அதைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இருவரும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மல்லிகாவின் கட்டிலுக்குத் திரும்ப நினைத்த கணேசன் அப்படிச் செய்யாமல் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றான். பின்னர் திசை திரும்பி வார்டை விட்டு வெளியே வந்தான். லி•ப்டில் ஏறி கீழே வந்தான்.

 

    • மருத்துவ மனைக்கு வெளியே கார் பார்க்கை அடுத்திருந்த புல் வெளிக்கு வந்தான். வெயில் மங்கியிருந்த நேரம். மருத்துவ மனையில் நோயாளிகளைப் பார்க்கும் நேரமாதலால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கையில் பழங்களுடனும் உணவுப் பொட்டலங்களுடனும் மலர்களுடனும் உறவினர்கள் மருத்துவ மனை வாசலுக்குள் நுழைந்தவாறிருந்தார்கள்.

 

    • தனியிடத்தை நாடினான். ஒரு மரத்தின் நிழலிலிருந்த இரும்பு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான். முன்னால் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்தவாறிருந்தான். நெஞ்சில் விம்மல் வந்தது. அடக்கப் பார்த்தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கம் வந்தது. முகத்தைக் கைகளால் மூடினான். அழுகை வெடித்து வந்தது. விம்மி அழுதான்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 18ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 18

18  மோட்டார் சைக்கிளைக் கீழ்த் தளத்தில் நிறுத்தி விட்டு “ஷங்ரிலா” ஹோட்டலின் பிரம்மாண்டமான வரவேற்பறைக்குள் நுழைந்த போது அதன் அகண்ட பரப்பும் உயரமும் ஆடம்பரமும் கணேசனை வியப்பில் ஆழ்த்தின. பினாங்கின் மையப் பகுதியான கொம்தாரின் பக்கத்தில் அந்தக் கட்டடத் தொகுதியின் ஒரு

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28  அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6

6  அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட