Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28
 

    • அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது உம்மென்று ஆகிவிட்டாள். வீட்டில் ஒருவருடனும் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்கு “உம்” “ஊகூம்” என்று முனகலில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தம்பி அருண் எதையோ கேட்கப் போக “போடா, போய் வேலயப் பாரு!” என்று விரட்டினாள்.

 

    • கணேசன் வந்து போனதற்கும் அம்மாவின் மனமாற்றத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதென்று அகிலாவுக்குத் தெரிந்தது. ஆனால் அது ஏன் எனப் புரியவில்லை. கணேசனோடு அம்மா பேச மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்ட போதே அவளுக்கு கணேசன் அங்கு வந்திருப்பதில் விருப்பமில்லை என்று புரிந்து கொண்டாள். அப்பா மிகவும் நாகரிகத்துடன் நடந்து கொண்டார். அன்பாக உபசரித்தார். முகமன்களைக் குறைவில்லாமல் செய்தார். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் பட்டுக் கொள்ளாமல் இருந்தார்.

 

    • கணேசனை இப்படித் தீபாவளிக்கு வரச் சொன்னது தவறோ என நினைத்தாள். ஆனால் அப்பாவின் உத்தரவின் பேரில்தானே வரவழைத்தாள்! அதுவும் தீபாவளிக்கு முன் கூட்டியே பெற்றோர்களுக்குத் தெரிவித்திருந்தாள். அப்படித் தெரிவித்த போதும் அப்பா “அப்படியாம்மா! அதுக்கென்ன, நல்லா வரட்டும்!” என்று சொன்ன போது அம்மா மட்டும் ஒன்றும் சொல்லாமல் மௌனம்தான் சாதித்தாள்.

 

    • அன்று இரவு வீடு களைத்திருந்தது. தீபாவளித் துணிகளைக் களைந்து விட்டு இரவு உடுப்புகளுடன் தொலைக்காட்சி முன்னால் அனைவரும் சோர்ந்து கிடந்த போது அம்மா திடீரென ஆரம்பித்தாள்: “அந்தப் பையன் ஏன் நம்ம வீடு தேடி வரணும்?”

 

    • அகிலா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததால் இந்தக் கேள்வியை அவளால் சரியாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

 

    • “என்ன கேட்ட அம்மா?”

 

    • “அந்தப் பையன், அதான் உன் •பிரண்டு, ஏன் இவ்வளவு தூரம் நம்ம வீடு தேடி வரணும்?” குரலில் கோபமும் எரிச்சலும் இருந்தன.

 

    • அகிலாவுக்கு ஏனோ அப்பாவைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. ஏறிட்டுப் பார்த்தாள். அவர் பதில் சொல்லவில்லை. அகிலாவே பதில் சொல்ல வேண்டும் என்பது போலத் திரும்பப் பார்த்தார்.

 

    • அகிலா சொன்னாள். “என்ன கேக்கிற அம்மா? இன்னைக்குத் தீபாவளி! அவர் என் •பிரன்டு! வீட்டுக்கு வந்ததில என்ன தப்பு? அவரப் போல எத்தனயோ •பிரண்டுங்க வந்து போனாங்க. அவர் மட்டும் ஏன் வரக்கூடாது?”

 

    • “மத்த •பிரண்டுங்க அக்கம் பக்கத்தில உள்ளவங்க. ஏற்கனவே நமக்குத் தெரிஞ்சவங்க! ஆனா கிள்ளான்ல வீடு இருக்கிற பையன், தீபாவளி அன்னைக்கு அவங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு இங்க முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஊருக்கு வரணும்னு என்ன இருக்கு?” தொடர்ந்து கேட்டாள்.

 

    • “நாந்தான் வரச் சொன்னேன்! வந்து எங்க வீட்டப் பாத்துப் போங்கன்னு சொன்னேன்! இதில என்ன தப்பு? அவர் வரப் போரார்னு ஏற்கனவே உங்கிட்டியும் அப்பா கிட்டியும் சொல்லியிருக்கேனே!”

 

    • அப்பா வேடிக்கை பார்த்தவாறிருந்தார். இந்த உரையாடலில் வெளியே இருந்து பார்ப்பதையே விரும்பியவர் போல இருந்தார்.

 

    • “எனக்கென்னமோ இதல்லாம் நல்லதா படல! முன்ன பின்ன தெரியாதவங்கள இப்படி பெரிசா ஊட்டுக்கு நடுவுல கொண்டு வந்து உக்கார வச்சிக்கிறது அழகா இருக்கா?”

 

    • “யார் முன்ன பின்ன தெரியாதவங்க? என்னுடைய நண்பர், எனக்குப் பல்கலைக் கழகத்தில உதவி செய்தவர்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்?” அகிலாவின் குரலிலும் சூடு ஏறியது.

 

    • “என்னடி நண்பர்? யுனிவர்சிட்டியில நண்பர்னா அங்கயே வச்சிக்கனும்? ஏன் வீட்டுக்குக் கொண்டு வர்ர? அவங்க குடும்பத்தப் பத்தி தெரியுமா? நல்லவங்களா கெட்டவங்களா என்ன மாதிரி பரதேசிங்கன்னு தெரியுமா? அந்தப் பையனப் பாத்தா சுத்த தோட்டக்காட்டான் மாதிரி தெரியுது. அதுங்களோடல்லாம் உனக்கு என்ன பளக்கம் வேண்டி கிடக்கு?”

 

    • அம்மாவின் சீற்றமும் இந்த உதாசீன மிக்க பேச்சும் அகிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கணேசன் வந்தது பற்றி அம்மா விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை வெறுப்பை அவள் உமிழ்வாள் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

    • தன்னைத் தற்காக்க அப்பா கூட முன்வராமல் இருந்தது அவளுக்குத் தவிப்பாக இருந்தது. கணேசனைப் பற்றி அம்மா முரட்டுத் தனமாக வீசும் சொற்களுக்குத் தானும் அதே தீவிரத்தில் பதில் சொன்னால் நிலைமை சூடாகிவிடும் என்று தெரிந்தது. ஆனால் தன் உள்ளத்தில் ஒரு பாசமான இடத்தில் வைத்திருக்கும் கணேசன் என்ற தனது நண்பனை — காதலனை — இப்படி உதாசீனப் படுத்தும் அம்மாவின் போக்கை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன சூடான சொற்களால் பதில் சொல்லுவது என்று அவள் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்த போது அப்பா பேசினார்:

 

    • “என்ன வனஜா, எதுக்காக இப்படிப் பேசிற? ஒரு நல்ல நாளும் அதுவுமா தன்னோட படிக்கிற நண்பர வீட்டுக்கு வரச் சொல்றதில என்ன தப்பு? நீ பேசிறது எனக்கே சரியா புரியில! பிள்ளைக்கு எப்படிப் புரியும்?”

 

    • “ஆமா, இப்படி நீங்க எடங்குடுத்து எடங்குடுத்துத்தான் இவ இப்படிக் கெட்டுப் போயிட்டா! அன்னைக்கே அவ இந்தப் பையன வரச்சொல்றன்னு சொன்ன போது அதெல்லாம் வேண்டான்னு நீங்க தடுத்திருக்கனும். அப்படிச் செய்யாம நீங்களும் அவ கூடச் சேந்துக்கிட்டு கொஞ்சிறதினாலதான் அவளும் தலைக்கு மேல போறா!” அப்பாவிடமும் சீறினாள்.

 

    • “என்ன பேசிறன்னு எனக்குப் புரியலியே! தீவாளி அன்னைக்கு ஒரு •பிரண்டு வீட்டுக்கு வந்திட்டுப் போறதுக்கு நீ இப்படி கோவிச்சிக்கிறியே!”

 

    • “ஏங்க, இந்தப் பையன் வெறும் கூட்டாளி இல்ல, இவங்களுக்கு இடையில என்னமோ இருக்குன்னு உங்களுக்குத் தெரியிலியா? போற போது அந்தப் பையன் இவ கைய பிடிச்சி சொல்லிட்டுப் போற அளவுக்கு இது முத்திப் போயிருக்கு. உங்களுக்கு சம்மதமா இதில? இதெல்லாம் மொளையிலேயே வெட்டி எறிய வேணாமா?”

 

    • தம்பி தான் பார்த்ததை அம்மாவிடம் சொல்லியிருக்கிறான் எனத் தெரிந்தது. அகிலா அவனை முறைத்தாள். அவன் அப்பாவித் தனமாக தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

    • ஆனால் தம்பி இதை உடைத்துச் சொல்லியிருப்பதில் ஒரு நன்மை இருப்பதாகவும் தோன்றிற்று. ஒரு வகையில் கணேசனை வீட்டுக்கு வரச் செய்ததே தன் பெற்றோரின் உணர்வுகளை ஆழம் பார்ப்பதற்குத்தானே! ஆகவே அதுதான் இப்போது நடக்கிறது. கணேசனின் கையைத் தான் பிடித்ததும், அவன் கையைப் பிடித்து அழுத்த அனுமதித்ததும் கூட பெற்றோருக்கும் தெரியட்டும் என்ற மன தைரியத்தில் நடந்ததுதான். ஆகவே தன் மனதைத் திறந்து சொல்ல இது சந்தர்ப்பம்தான் என அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கொஞ்சம் மறைமுகமாகவும் மெதுவாகவும் சொல்வது அவசியம் என எண்ணினாள்.

 

    • “போய்ட்டு வாரேன்னு கை குலுக்கிப் போனாரு. அதுவும் தப்பா?” என்று கேட்டாள்.

 

    • “இந்த நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம். எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்காத. நீ அளவுக்கு மீறிப் போற. இதில எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்ல!”

 

    • அகிலா தலை குனிந்திருந்தாள். பேசவில்லை.

 

    • அப்பா பேசினார். “என்ன இந்த விஷயத்த இவ்வளவு பெரிசு படுத்திற வனஜா? என்ன தப்பு நடந்து போச்சு இப்போ?”

 

    • “நீங்க இப்படியே எடங் குடுத்தீங்கன்னா இனிமேதான் நடக்கப் போவுது பெரிய தப்பு. இந்தப் பையன எனக்கு ஒரு துளிக் கூடப் பிடிக்கில. இகவே இந்தப் பளக்கம் வேண்டான்னு சொல்லிருங்க! இல்லன்னா, தன் இஷ்டப்படிதான் செய்வேன்னா இனிமே அவ எங்கிட்ட பேசவே வேணாம். அம்மாங்கிறவ ஒருத்தி வேணான்னு அவ இஷ்டத்துக்குப் பண்ணிக்கிட்டும்!”

 

    • அம்மா சரேலென எழுந்து அறைக்குள் போய் விட்டாள்.

 

    • கொஞ்ச நேரம் அந்த இடம் பேச்சடைத்துக் கிடந்தது. அப்பா நாற்காலியில் சாய்ந்து யோசித்தவாறு இருந்தார். தம்பி படம் பார்ப்பதாக நடித்துக் கொண்டிருந்தான். அகிலா அடக்கி அடக்கிப் பார்த்து தவிர்க்க முடியாமல் மெல்ல விம்ம ஆரம்பித்தாள்.

 

    • “நீ ஏம்மா இப்ப அளுவுற? அம்மா ஏதோ கோபத்தில பேசுது. விட்டுத் தள்ளு!” என்றார் அப்பா ஆறுதலாக.

 

    • “இப்ப இவ்வளவு பேசிற மாதிரி நான் என்ன குத்தம் செஞ்சிட்டேன் அப்பா?”

 

    • “எனக்கும் சரியா தெரியில அம்மா! அம்மாவுக்குக் கோவம் தணியட்டும். நான் கேட்டுப் பாக்கிறேன்!” என்றார்.

 

    • அந்த இறுக்கத்தில் கொஞ்ச நேரம் மௌனமாகக் கழிந்தது. தொலைக் காட்சிப் படத்தின் எல்லா அர்த்தங்களும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தில் தொலைந்து போக முதலில் தம்பி அங்கிருந்து சத்தமில்லாமல் நழுவி அறைக்குப் போனான். அகிலா தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் மனதில் வேறு குழப்பமான படங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்பாவும் கண்களும் மனமும் குவியாமல் தொலைக் காட்சியை வெறித்தவாறிருந்தார்.

 

    • அங்கு மேலும் நடப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டு அகிலா எழுந்து படுக்கப் போனாள்.

 

    • *** *** ***

 

    • மறுநாள் அவள் பினாங்குக்கு பஸ் ஏற அவளை பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டார் அப்பா. கூட வரத் தயாரான தம்பி அருணை அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். “போய்ட்டு வாரேம்மா!” என்று அகிலா கூவிச் சொன்ன போதும் சமையலறையில் இருந்த அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

    • அரை மணி நேரம் முன்னதாகவே அவளை அவசரப் படுத்தி அழைத்து வந்தார். ஒரு மரத்தடியில் காரைப் போட்டு விட்டு அகிலாவிடம் பேசினார்.

 

    • “ராத்திரி அம்மாகிட்ட பேசினேன் அம்மா! அது ரொம்ப பிடிவாதமா இருக்கிது!” என்றார்.

 

    • “என்ன பிடிவாதம் அப்பா?”

 

    • “அந்தப் பையனோட உனக்குப் பழக்கம் இருக்கக் கூடாதாம். இப்ப இருக்கிற பழக்கத்த முறிச்சிக்க சொல்லுது!”

 

    • “ஏனாம்?”

 

    • “தெரில அம்மா. அந்தப் பையனப் பாத்தவொடனே உங்கம்மாவுக்குப் பிடிக்காம போச்சி!”

 

    • “ஏன் அப்படி? அவர சரியா ஏறெடுத்தும் பாக்கில. ஒரு வார்த்த கூட பேசில. அப்புறம் ஏன் இப்படி சொல்றாங்க?”

 

    • “எனக்குத் தெரியிலம்மா! உண்மையிலேயே அதோட மனப் போக்கு விளங்கல! அந்தப் பையனப் பார்த்தா நல்ல குடும்பத்துப் பையனா தெரியில, சுத்தத் தோட்டக் காடு மாதிரி இருக்குது அப்படின்னு கன்னா பின்னான்னு பேசுது. நான் சொல்றது எதையும் காதில போட்டுக்க மாட்டேங்குது” பெரு மூச்சு விட்டவாறு காரின் ஜன்னலூடே தெரிகின்ற மரத்தின் கிளையைப் பார்த்தவாறிருந்தார்.

 

    • “ஏன் அப்பா, பல்கலைக் கழகத்தில எனக்கு நண்பர்கள்னு சிலர் இருக்கத்தான வேணும்! அவர்கள்ள எனக்கு வேண்டியவர்கள தேர்ந்தெடுக்க எனக்குத்தானே தெரியும்! அம்மா வந்து எனக்குத் தேர்ந்தெடுத்துக் குடுக்க முடியுமா?” அவள் குரலில் கொஞ்சம் கோபம் நுழைந்தது.

 

    • அப்பா கொஞ்ச நேரம் ஓய்ந்திருந்து கொஞ்சம் தணிந்த குரலில் பேசினார்: “இந்தப் பையன் சாதாரண நண்பர் இல்லன்னு அம்மா நெனைக்குது. உன்னுடைய காதலனா இருக்கும்னு நெனைக்குது. அதனாலதான் இத்தனை ஆவேசம் வருது!”

 

    • அகிலா மௌனமாக இருந்தாள். அப்பா தலை திருப்பி அவளை நேரடியாகப் பார்த்துக் கேட்டார்: “அது சந்தேகப் பட்றது உண்மையா அகிலா?”

 

    • உண்மையா? அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அகிலாவுக்குத் தெரியவில்லை. அவள் மனமே இன்னும் உறுதிப்படவில்லை போல இருந்தது. கணேசனை எனக்குத் தெரியுமா? அழகன், அறிவாளி, நல்லவன் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதல் முறை பார்த்த அம்மாவின் மனதில் அவன் இப்படியெல்லாம் தோன்றவில்லை. உதாசீனப் படுத்தத் தக்க தோட்டக் காட்டானாகத் தோன்றியிருக்கிறான். தான்தான் தவறு செய்து விட்டேனோ? எனது தற்காப்புகள் அனைத்தும் இழந்திருந்த ஆதரவற்ற ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில் அவனுடைய அறிமுகம் கிடைத்ததால் அறிவு பின்னின்று உணர்ச்சி முந்தி நிற்க கண்டவுடன் காதல் என்று கொண்டு விட்டேனோ?

 

    • “நீ இப்படி மௌனமா இருக்கிறதப் பார்த்தா அம்மா சந்தேகப் பட்றது சரின்னுதான் நெனைக்க வேண்டியிருக்கு!” என்றார் அப்பா.

 

    • நிமிர்ந்து பார்த்தாள். “பழக்கம் கொஞ்சம் நெருக்கமா இருக்கிறது உண்மைதான் அப்பா. ஆனா அதுக்காக கல்லாணம் வரைக்கும் நான் வந்திட்டேன்னு சொல்ல முடியாது. நல்லவரா இருக்கிறாரு. எனக்கு ஆதரவா இருக்கிறாரு. மனசுக்குப் பிடிச்சவரா இருக்கிறாரு! அவ்வளவுதான்!”

 

    • “அப்படின்னாம்மா, இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும். இல்லியா?”

 

    • அகிலாவுக்கு ஒன்று தெரிய வேண்டியிருந்தது: “அம்மா சொல்றது இருக்கட்டும் அப்பா. நீங்க என்ன சொல்றிங்க?”

 

    • அப்பா யோசிப்பதற்குக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அப்புறம் சொன்னார்: “முதல் பார்வையில ஒருத்தரப் பத்தி சொல்ல முடியாது. பையனப் பார்த்தா கொஞ்சம் சாதாரணமாத்தான் இருக்குது. நமக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பங்கள்ளியே இத விடவும் நல்ல நாகரிகமான படிச்ச அழகான பிள்ளைகள் எவ்வளவோ பேர் இருக்காங்களே. அதோடு கூடம்மா, இந்த விஷயங்கள்ள என்ன விட உங்கம்மாவுக்கு ஒரு உள்உணர்வு இருக்கு. அது முதல்ல சொல்றது தப்புங்கிற மாதிரி பட்டாலும் பின்னால அது சரியா இருந்திருக்கிறத நான் வாழ்க்கையில பல தடவ பாத்திருக்கிறேன். ஆகவே இந்த விஷயத்தில நான் உங்கம்மாவோட உணர்ச்சிக்குத்தான் மதிப்புக் கொடுக்க விரும்புறேம்மா! பரவால்ல நீ யோசிச்சிப் பாரு. நீயும் படிச்ச பிள்ள! உன் விருப்பத்தையும் நான் மதிக்கிறேன். உன் எதிர்காலத்த நீயே தீர்மானிக்கிறதும் முக்கியம்தான். ஆனா குடும்பத்தப் பகைச்சிக்காம அதச் செய்ய முடிஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும் இல்லியா?”

 

    • *** *** ***

 

    • நெடுஞ்சாலையில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. ஏர் கண்டிஷன் உள்ள பஸ்ஸில் இறுக்க மூடிய ஜன்னல்களிலிருந்து பார்க்கின்ற போது அவை சத்தம் எழுப்பாக ஊமைப் படங்களாகத் தெரிந்தன. அளவாக வெட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்த நெடுஞ்சாலை விளிம்புகளில் அழகிய குட்டையான மரங்கள் அணிவகுத்து இருந்தன.

 

    • அப்பா தன்னை மிகவும் குழப்பி விட்டிருக்கிறார் என அகிலாவுக்குத் தோன்றியது. அம்மா சொன்னது செய்தது எல்லாவற்றையும் விடவும் அப்பா சொன்னதுதான் அவளை மிகவும் பாதித்திருந்தது. அம்மா தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் தன் மதிப்பைக் காத்துக்கொள்வதையே ஒரு பெரிய விஷயமாக நினைக்கிறாள். அவளுடைய முதிராத மனதில் இந்த சமுதாயப் பேச்சுதான் வாழ்வு-சாவுப் பிரச்சினையாக முக்கியத்துவம் பெற்று அவள் மூளையில் பாசியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.

 

    • ஆனால் அப்பா தன் முதிர்ச்சியில் சோர்ந்திருக்கிறார். வீட்டின் தலைமைத்துவத்தை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவளுடைய புடவை முந்தானையில் தற்காப்புத் தேடிக் கொள்கிறார் என்று தோன்றியது. குடும்பத்தின் பெருமை என்பது அம்மாவின் சொற்படி மூட நம்பிக்கைகள் மிகுந்த வழியானாலும் பாதுகாப்பான பாதைகளில் நடப்பதுதான் என்று ஆக்கிக் கொண்டார்.

 

    • இந்த இரண்டு பிற்போக்குவாதிகளுக்குத் தானும் தலை குனிந்து போகவேண்டுமா என அகிலாவின் மனம் சீறியது. தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தடுக்கத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போலப் பேசுகிறார்களே! தான் படித்ததவள் என்பதையும் நவீனமான எதிர் காலத்தில் வாழப் போகிறவள் என்பதையும் மறந்து விடுகிறார்களே!

 

    • கணேசனுக்கு என்ன குறை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவன் அசாதாரண அழகனல்ல. ஆனால் எந்தப் பெண்ணின் நெஞ்சையும் கவரும் தோற்றமுடையவன்தான். அவனுக்கு நல்ல குணங்கள் இருக்கின்றன. அவன் குடித்தோ சிகரெட் புகைத்தோ அவள் பார்த்ததில்லை. தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வானோ என்னவோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் தெரியாமல் இருந்திருக்காது.

 

    • அவனைத் “தோட்டக்காட்டான்” என்று அம்மா சொன்னது அகிலாவை வெகுவாகப் புண் படுத்தியது. இது என்ன புதிய இழிஜாதியா? இன்னுமா அவன் தோட்ட வேலைக்காரன்? அவன் படிக்கவில்லையா? நாளை நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றால் ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரம் உள்ளவனாக இருக்கப் போகிறானே. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அவன் பூர்வீகம் தோட்டப்புறமாக இருப்பதால் இப்படி எடுத்தெறிந்து பேசுவதா? அவன் என்ன ஜாதி என்பது இந்த நவீன காலத்தில் முக்கியமா?

 

    • எல்லாம் தெரிந்த அப்பாவும் ஏதோ அவன் நாகரிகமில்லாதவன் என்பது போலத்தானே பேசுகிறார். தனக்குத் தெரிந்த குடும்பங்களில் நாகரிகமுள்ள எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் கணேசன் நாகரிகமில்லாதவன் என்றுதானே அர்த்தம்! அப்படி என்ன நாகரிகமில்லாதவனாக நடந்து கொண்டான் கணேசன்?

 

    • கணேசனுடன் தான் பழகியிருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை அகிலா நினைத்துப் பார்த்தாள். அவன் இதுவரை தன்னை ஒரு பூப்போலத்தான் நடத்தியிருக்கிறான். தன் எண்ணங்களை மதித்திருக்கிறான். தான் இடம்கொடுக்காமல் அவன் தன்னைத் தொட்டதில்லை. தான் வேண்டாம் என்ற எதையும் தன் மேல் அவன் திணித்ததில்லை.

 

    • கணேசனுடைய பெற்றோர்கள் ஒருவேளை தோட்டத்திலேயே வாழ்ந்த, பட்டண நாகரிகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் பழைய தலைமுறை. தன்னால் அவர்களை அனுசரித்துப் போக முடியும். கணேசன் – அகிலா வாழ்க்கை முறையை அவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. தன் வாழ்க்கையின் மேல் அவர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை. அதற்குக் கணேசனும் அனுமதிக்க மாட்டான். ஆகவே அவர்களோடு தாங்கள் சமாதான சகவாழ்வு நடத்த முடியும். அதே போலத்தான் தன் பெற்றோர்களும் தன் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை என அகிலா முடிவு செய்து கொண்டாள்.

 

    • கணேசனுக்கும் தனக்குமுள்ள காதலால், அன்பால் ஒரு புதிய குடும்பத்தைத் தாங்கள் அமைத்துக் கொள்ள முடியும். அவன் பார்வை கனிவானதாக இருக்கிறது. என் மேல் ஆதிக்கம் செலுத்த அவன் நினைக்கவில்லை. அவன் மேல் ஆதிக்கம் செலுத்த நானும் நினைக்கவில்லை. எங்கள் குடும்பம் அமைதியான இனிமையான இணக்கமான குடும்பமாக இருக்கும். அம்மா – அப்பாவின் பத்தாம் பசலித் தனங்கள் அதில் குறுக்கிடத் தான் அனுமதிக்கக் கூடாது.

 

    • கிட்டத்தட்ட “நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!” என்று கணேசன் தன் அத்தையிடம் சூளுரைத்த அதே நேரத்தில், கணேசன்தான் தன் வருங்காலக் கணவன் என்ற எண்ணம் அகிலாவின் மனதிலும் உறுதிப் படத் தொடங்கியிருந்தது.

 

    • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1

  காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசு முன்னுரை காதல் என்பது உன்னதமான பொருள்.   காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்.

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19

19  அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27  எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும்