Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 26

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 26

26
 

    • தீபாவளி அவன் நினைத்ததைவிட அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் அவன் முன் குவிந்து விட்ட வேலைகளும் இடையறாத அலைச்சலும்தான். அவனுடைய நிறுவன நிர்வாகப் பாடத்திற்காக இந்தப் பருவத்தில் கேஸ் ஸ்டடி (case-study) ஒன்று செய்ய ஒன்று செய்ய வேண்டியிருந்தது. அதற்காகப் பினாங்கின் பழம் பெரும் நிறுவனமான பர்காத் ஸ்டோர்ஸை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த நிறுவனத்தின் தமிழ் முஸ்லிம் உரிமையாளர்கள் அவனுக்கு எல்லா ஒத்துழைப்பையும் தந்தார்கள். அவர்கள் நிறுவனத்திற்கு பல நாட்கள் சென்று நிர்வாகிகளுடன் உட்கார்ந்து பேசி கோப்புக்களைப் பார்த்து குறிப்பெடுத்து எழுத வேண்டியிருந்தது.

 

    • ஐசேக் மாநாட்டுக்கான ஏராளமான மனுபாரங்கள் வரத் தொடங்கியிருந்தன. இரவில் ஜெசிக்காவுடன் உட்கார்ந்து அவற்றுக்கெல்லாம் பதில் எழுத வேண்டியிருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தனது தோட்டப்புற மாணவர் சேவைத் திட்டத்தை நிர்வகிப்பதில் அவனுடைய உதவியைக் கோரியிருந்தது. அகிலாவும் அந்தக் குழுவில் இருப்பதால் உற்சாகமாக ஒப்புக் கொண்டிருந்தான்.

 

    • இதற்கிடையே தீபாவளி நினைவுகள் வந்து கொண்டேயிருந்தன. அகிலாவின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோர்களைச் சந்திப்பதை அவன் ஒரு வித மனப் படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இது ஒரு நல்ல தொடக்கமாகத் தோன்றியது. ஆனால் நினைவு தெரிந்ததிலிருந்து அத்தை வீட்டில்தான் அவன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். பினாங்கு வந்ததிலிருந்து சென்ற இரண்டு வருடங்களிலும் அவன் தீபாவளிக்குத் தவறாமல் போய் வந்திருக்கிறான்.

 

    • “ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!” என்று அத்தை சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

    • அகிலாவுக்கு வாக்குக் கொடுத்த போது அத்தை வீட்டுக்குப் போகவேண்டும் என்ற நினைவு இல்லாமல் இல்லை. ஆனால் அவள் இதனை இத்தனை முக்கியமாக எண்ணிக் கேட்கும் பொழுது எந்தக் காரணம் கொண்டும் அதை ஒத்திப் போடுவதென்பது அவளை வருந்தச் செய்யலாம் என்ற எண்ணம் வந்து தடுத்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னால் அல்லது பின்னால் அவள் வீட்டுக்குப் போவதும் கூட சரியானதாக இருக்காது. அது தீபாவளி விருந்தினராக வருவதைப் போல் இல்லாமல் விஷேச வருகையாகப் போய்விடும். ஆகவே தான் ஒப்புக் கொண்டது சரிதான் என்று தோன்றியது.

 

    • அதோடு அத்தையின் ஆதிக்கத்தை எதிர்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. அதற்கு இந்த தீபாவளிக்குப் போகாமல் இருப்பதே ஒரு நல்ல தொடக்கம் என்றும் சொல்லிக் கொண்டான். அத்தை இழுத்த இழுப்புக்கெல்லாம் இனிப் போகப் போவதில்லை. ஓரிரண்டு முறை “முடியாது” “வரமாட்டேன்” என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.

 

    • ஆனால் அதை அத்தைக்கோ மல்லிகாவுக்கோ அறிவிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். அவசரமில்லை, நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்றும் இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே என்ன அவசரம் என்றும் நாட்கள் தள்ளிப் போயின. அத்தையிடம் இதைச் சொன்னால் கோபப் படுவாள். டெலிபோனிலேயே கத்துவாள். மல்லிகாவிடம் சொன்னாலும் உடனே அழுது அத்தையைத்தான் கூப்பிடுவாள். அப்படி இப்படியாக அழுது தன்னைக் கிள்ளானுக்கு வரச் செய்து விட்டால் அகிலாவுக்குத் தான் கொடுத்த வாக்கு தவறிப் போகும் என்ற பயமே அவனை இப்படித் தள்ளிக் கொண்டிருந்தது.

 

    • இதற்கிடையே அகிலா இரண்டு முறை அவனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.

 

    • தீபாவளிக்கு முதல் நாள் கிள்ளான் போய்விட்டு அன்று காலை கிள்ளானில் பஸ் ஏறி மாலையில் அலோர்ஸ்டார் போகலாமா என்றும் நினைத்தான். ஆனால் கிள்ளான் போய்ச் சேர்ந்து விட்டால் அத்தையிடமிருந்து தப்பித்து வரமுடியாது. பெற்றோர் வீட்டுக்கும் போய் வரவேண்டியிருக்கும். ஒரு காலையில் இதெல்லாம் முடிக்க முடியாது. ஆகவே தீபாவளி காலை அகிலாவின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் போய்த் திரும்பிவிட்டு பினாங்கிலிருந்து பஸ்பிடித்தால் இரவில் கிள்ளான் போய் விடலாம். அதன் பின் ஒரு நாள் இருந்து வரலாம். அதுதான் நல்லது என முடிவு செய்தான்.

 

    • ஆனால் இதன் காரணங்களை அத்தையிடம் சொல்ல முடியாது. ஏதாகிலும் பொய் சொல்லித்தான் சமாளிக்க வேண்டும்.

 

    • தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது ஒரு மாலை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அத்தை வீட்டுக்குப் போன் பண்ணினான். மல்லிகாதான் பேசினாள்: “மாமா, எப்ப வர்ரிங்க? உங்களுக்கு நீலக் கலர்ல ஒண்ணும் பச்சைக் கலர்ல ஒண்ணுமா ரெண்டு சட்டை எடுத்திருக்கோம். ரெண்டு ஜீன்ஸ் வாங்கியாச்சி. அன்டர்வேர் கூட வாங்கி வச்சிருக்காங்க அம்மா!” என்றாள்.

 

    • “சரி, அம்மாவக் கூப்பிடு மல்லிகா!” என்றான்.

 

    • “அத்தை போனுக்கு வந்தாள். “நல்லா இருக்கியா கணேசு? என்னா போனதில இருந்து கூப்பிடவே இல்லியே!” என்றாள்.

 

    • “ரொம்ப வேல அத்த! அதுனாலதான் கூப்பிடல!”

 

    • “அப்படியா? சரி அப்ப தீவாளிக்கு வந்திடுவதான?

 

    • “அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன் அத்த! தீபாவளி அன்னிக்கின்னு பார்த்து ஒரு முக்கியமான வேல வந்திடுச்சி! அதினால தீபாவளி காலையில வர முடியாது. அன்னைக்கு ராத்திரிதான் வரமுடியும்னு நினைக்கிறேன்!”

 

    • அத்தையின் அதிர்ச்சி நிறைந்த முகம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தாலும் அவன் மனதில் தோன்றி கலவரப்படுத்தியது.

 

    • “என்னா சொல்ற கணேசு? என்ன அப்படி தல போற வேல? அதுவும் தீபாவளி அன்னைக்கு!”

 

    • “இங்க எங்க இந்திய மாணவர் சங்கம் அனாதைப் பிள்ளைகளுக்கெல்லாம் தீபாவளி அன்னைக்குக் காலையில ஒரு விருந்து நடத்திறாங்க அத்த! அத நடத்திறத என் பொருப்பில விட்டிருக்காங்க! நாந்தான் இருந்து செய்ய வேண்டியிருக்கு. அத முடிச்சிட்டு மத்தியானம் பஸ் ஏறி ராத்திரிக்கு அங்க வந்து சேந்திர்ரேன்!”

 

    • “என்னா இப்படி பண்ணிட்ட கணேசு!” அத்தையின் பெரு மூச்சில் ஏமாற்றத்தோடு ஆத்திரமும் இருந்தது எனத் தெரிந்தது. “வேற அங்க இருக்கிற பிள்ளைங்கள பாத்துக்க சொல்லக் கூடாதா? நான் காலையில உங்க மாமாவுக்கு சாம்பிராணி போட்டாகணுமே!”

 

    • “நீங்க போடுங்க அத்த! கண்டிப்பா நான் ராத்திரி வந்து சேர்ந்துர்ரேன். வச்சிரட்டுமா அத்த?” பதில் வருமுன் போனை வைத்தான்.

 

    • குற்ற உணர்வு நகங்கொண்டு உள்ளத்தைப் பிராண்டியது. தன் செய்தியால் அத்தையின் வீட்டில் இருள் கொஞ்சம் சூழ்வதை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. மல்லிகா சிணுங்கிச் சிணுங்கி இன்று சாப்பிடாமல் இருக்கப் போகிறாள் என்று தெரிந்தது. இந்தச் செய்தி தன் பெற்றோர் வீட்டுக்கும் பரவி அங்கும் கருமேகங்கள் கூடுவதையும், அன்றிரவு அப்பா கள் குடித்த பிறகு தோட்டம் முழுவதும் தெரியுமாறு கூச்சல் போட்டுக் கத்தப் போவதையும் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதன் விளைவாக அம்மா அடி வாங்குவாரா, இன்றிரவு? மனம் கலவரப்பட்டது.

 

    • ஏன் செய்தேன் என்றும் தன்னையே கேட்டுக் கொண்டான். ஒரு குடும்பத்தில் இத்தனை கலவரங்கள் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருந்தும் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியது அவசியம்தானா என்று தன்னையே கேட்டான். அது தவிர்க்க முடியாதது என்று விடையையும் கூறிக் கொண்டான். அத்தையிடமோ மல்லிகாவிடமோ உண்மையைக் கூறி அனுமதி பெற்றிருக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.

 

    • காதலின் மூர்க்கமும் காதலியின் ஈர்ப்பும் தனது குற்றத்தை மனதுக்குள் சமன் செய்ய விடுதி நோக்கி நடந்தான்.

 

    • *** *** ***

 

    • தீபாவளி அன்று காலையில் விடுதியில் தனியனாக எழுந்திருக்கும் போது என்னவோ போல் இருந்தது. இன்று தீபாவளிக்கு விசேஷமாக என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது விரட்டி விரட்டியே எல்லாம் செய்து பழக்கமாகிவிட்டது. எண்ணெய் வைத்துக் குளிக்கலாமென்றால் அறையில் எண்ணெயோ சிகைக்காயோ இல்லை. ஷாம்பூ மட்டும் போட்டுக் குளித்து வந்தான்.

 

    • உடுத்திக் கொள்ள புதிது ஏதும் எடுத்து வைக்க வில்லை. பழையதில் நல்லதாகப் போட்டுக் கொண்டான்.

 

    • வணங்குவதற்கு அறையில் கடவுள் படம் ஏதும் இல்லை. அவனுடைய துணிப் பெட்டியைத் திறந்தால் மூடியின் உள் பக்கத்தில் கணேசர் படம் ஒன்று இருக்கும். அதை வணங்கி கொஞ்சம் திருநீறு இட்டுக் கொண்டான். அவனுடைய தீபாவளி வழிபாடு அதனோடு முடிந்தது.

 

    • வளாகத்தில் மருந்துக்குக் கூட ஒரு இந்திய மாணவர் இல்லை. அவனுடைய மலாய் அறைத் தோழன் கூட விடுமுறையைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான்.

 

    • விடுதிக் கண்டீனுக்குச் சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டான். அத்தையின் வீட்டில் இன்று இறைச்சிக்கறி மணக்கும் பசியாறல் இருக்கும். தோசை இருக்கும். வெள்ளையும் மஞ்சளுமாக இந்தியப் பலகாரங்களும் சிகப்பும் பச்சையுமாக மலாய்ப் பலகாரங்களும் செய்து வைத்திருப்பாள். “சாப்பிடு கணேசு, சாப்பிடு கணேசு!” என்று அத்தை ஊட்டாத குறையாக அவனை வலியுறுத்தியிருப்பாள்.

 

    • இன்று இப்படி இருப்பாள்? முகம் சூம்பிப் போயிருப்பாளா? மல்லிகா எப்படி இருப்பாள்? இன்று இரவு அவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை எண்ணி மனம் கொஞ்சம் மருண்டது.

 

    • ஏற்கனவே சொன்ன ஒரு பொய்யை நிறுவ இன்னும் எத்தனை கூடுதல் பொய்கள் சொல்ல வேண்டும்? அத்தையின் முகத்தை நேராகப் பார்த்துச் சொல்ல முடியுமா? சொல்லும் போது தன் முகம் நேராக இருக்குமா? தன் அகத்தின் அழுக்கு முகத்தில் தெரிந்து விடுமா?

 

    • ஆனால் அகிலாவின் வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற நினைப்பு விரைவாக வந்து கலவரங்களை மாற்றியது. அவளுடைய பெற்றோர்களை முதன் முதலில் சந்திக்கப் போவதை நினைத்து ஒரு வித படபடப்பு வந்தது. அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் மனதில் ஒரு நல்லெண்ணம் எழும்படி செய்வது எப்படி? காதல் வேகத்தில் வந்திருக்கிறேன் என்பது பச்சையாகத் தெரியாமல் அடக்கமாக நடந்து கொள்வது எப்படி? மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

    • அலோர் ஸ்டார் இதற்கு முன் அவன் பார்த்திராத ஊர். அகிலா வீட்டுக்கு வழி சொல்லியிருந்தாள். “அப்படியே வழி தவற விட்டிட்டிங்கன்னா எந்த இந்தியர் வீட்டிலாவது வாத்தியார் மயில்சாமி வீடுன்னு கேளுங்க, சொல்லுவாங்க!” என்றாள். ஆசிரியர் வேலை பார்க்கத் துவங்கிய காலத்திலிருந்து அங்கேயே இருக்கிறார். அரசியல், சமுதாய இயக்கங்கள் அனைத்திலும் இருக்கிறார். அகிலாவின் தந்தை அந்த ஊரில் பிரபலமான மனிதராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

    • கெடா மாநிலத்தின் நெற் களஞ்சியப் பகுதிகளில் மலாய்க் கம்பங்கள் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் நிறைய இருந்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் போகும் போது அகிலா அவன் மனதில் நிறைந்திருந்தாள். இந்த வருகை சாதாரண தீபாவளி வருகை இல்லை. அது அகிலாவின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்ற பிரக்ஞை அவனுக்கு இருந்தது.

 

    • ” ‘ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு’ன்னு சொன்னாரு” என அகிலா தன் தந்தையின் சொற்களைச் சொல்லிக் காட்டியது அவன் மனதில் பதிந்திருந்தது. ஆகவே இன்று அவன் “ஒரு நண்பன்கிற அளவுக்கு” மேற்பட்டவன் என்பதை குடும்பம் புரிந்து கொள்ளும். அவனைக் கூர்ந்து பார்க்கும். அவனை எடை போடும்.

 

    • *** *** ***

 

    • அலோர் ஸ்டாரின் புறநகர் பகுதியில் ஒற்றை மாடி வரிசை வீடுகளில் ஒன்றாக வீட்டு எண் தவிர தனித்து அடையாளம் சொல்ல முடியாத அந்த வீட்டுக்கு முன்னால் அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு சீப்பால் தலைசீவி முகத்தைத் துடைத்துக் கொண்டான். அந்தக் காலை பத்து மணிக்கு வீட்டில் கூட்டம் இல்லை. வரவேற்பறையில் ரேடியோ முழங்கிக் கொண்டிருந்தது. கதவு திறந்திருந்தது. நுழை வாசலில் “வருக, வணக்கம்” என்று தங்க நிறத் தாள் அலங்காரமாகக் கட்டப்பட்டிருந்தது.

 

    • கதவுக்குப் பக்கம் போனபோது கூட ஆட்களைக் காணோம். ஆனால் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. யாரை எப்படிக் கூப்பிடுவதென்று தெரியவில்லை. ரொம்ப வெள்ளன வந்து விட்டோமா, அழையாத விருந்தாளி போல என்று எண்ணினான். சப்பாத்தைக் கழற்றி சாக்சையும் கழற்றி ஒதுப்புறமாக வைத்துவிட்டு வாசலில் அடியெடுத்து வைத்த போது ஒல்லியாக வேட்டி கட்டிய பெரியவர் வந்தார். இவர்தான் அப்பாவா?

 

    • “வாங்க” என்று வாய் நிறையக் கூப்பிட்டார்.

 

    • “வணக்கம், தீபாவளி வாழ்த்துகள்” என்றான்.

 

    • “வணக்கம். தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும். நீங்க….?”

 

    • “நான் அகிலாவோட படிக்கிறேன். கணேசன்!”

 

    • அவர் முகம் மலர்ந்தது. “ஓ சரி சரி. நீங்கதானா அது? அகிலா சொன்னிச்சி நீங்க வருவிங்கன்னு. உக்காருங்க தம்பி!” என்றார்.

 

    • உட்கார்ந்தான். உள்ளே பார்த்து “அகிலா!” என்று கூப்பிட்டார். உள்ளிருந்து ஓடிவந்தாள்.

 

    • அப்போதுதான் கோவிலுக்குப் போய் வந்த களை தெரிந்தது. திருநீறும் சந்தனமும் கருப்புச் சாந்துப் பொட்டும் கூந்தலில் சூடிய மல்லிகைச் சரம் தோளின் இருபக்கமும் சரிய….

 

    • புதுச் சேலை அணிந்திருந்தாள். அவளை அதிகமாக அவன் சேலையில் பார்த்ததில்லை. உடலைக் கவ்வியிருந்த அந்த மெல்லிய பட்டில் வண்ணக் கண்ணாடித் தாளில் சுற்றப்பட்ட ஈரங்காயாத மஞ்சள் ஒற்றை ரோஜா போல நளினமாக இருந்தாள்.

 

    • சிரித்தாள். “வாங்க கணேஷ்!” என்றாள். அப்பாவைப் பார்த்து “அப்பா இவரு..” என்று ஆரம்பித்த போது “தெரியும்மா, தம்பி பேர் சொன்னிச்சி! தம்பிக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வந்து குடும்மா!” என்றார். டெலிபோன் அடித்தது. மயில்சாமி போய் எடுத்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

 

    • “என்ன அகிலா! வீட்டில யாரையுமே காணுமே! நான் ரொம்ப வெள்ளன வந்திட்டேனா?” என்று கேட்டான்.

 

    • “எல்லாம் பதினொருமணிக்கு மேலதான் வருவாங்க. காலையில கோயிலுக்குப் போய் இப்பதான் திரும்பி வந்தோம். அம்மா சமையல்ல இருக்காங்க. தம்பி எங்கயோ கூட்டாளி வீட்டுக்கு ஓடிட்டான். இப்ப வந்திருவான்” என்றாள்.

 

    • வீடு சுத்தமாக இருந்தது. ஆடம்பரம் ஒன்றும் தெரியவில்லை. சாதாரண அலமாரிகளும் மேசை நாற்காலிகளும் இருந்தன. நடுநாயகமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் வீடியோவும் இருந்தன. சாப்பாட்டு மேசைமேல் பலகாரங்கள் இருந்தன. ஒரு அழகிய மலர்க்கொத்து இருந்தது. அவள் அங்கு இருந்ததால் வீடு அதிகக் களையுடன் தோன்றியது.

 

    • “வீடு கண்டு பிடிக்கிறது சுலபமா இருந்ததா?” என்று கேட்டாள்.

 

    • மயில்சாமி இன்னும் டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தைரியத்தில் தணிந்த குரலில் “உன் வாசனையைப் பிடிச்சிக்கிட்டே வந்திட்டேன்!” என்றான். நாணிச் சிரித்து முகம் தாழ்த்தினாள். “உங்க ஊருக்கு இதுக்கு முன்னால நான் வந்ததே இல்ல அகிலா. ரொம்ப அழகா இருக்கு!” என்றான்.

 

    • “அரச நகரம் இல்லியா, அப்படித்தான் இருக்கும்!” என்றாள்.

 

    • மயில்சாமி டெலிபோனை வைத்து விட்டு வந்தார். “தம்பி என்ன படிக்கிறிங்க?” என்று கேட்டார்.

 

    • பாடம், வருடம் சொன்னான். அந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புக்கள் எப்படி என்று கேட்டார். நல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்று சொன்னான். சொந்த ஊர், ஆரம்பக்கல்வி பற்றிக் கேட்டார். சொன்னான். இது முகமனுக்காகவா அல்லது தன் பின்னணியை ஆராய்வதற்காகவா என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

    • “என்ன அகிலா நீயும் கதை கேட்டுக்கிட்டு உக்காந்திருக்க! போயி சாப்பிடப் பலகாரங் கொண்டாந்து குடு! அம்மாவை வரச்சொல்லு” என்றார். அகிலா எழுந்து ஒரு விசிறலாக முந்தானை பறக்க உள்ளே போனாள்.

 

    • “நீங்க அகிலாவுக்குச் செஞ்ச உதவி, அதனால ஏற்பட்ட சிரமம் எல்லாம் அது விவரமா சொன்னிச்சி தம்பி. ரொம்ப நன்றி!” என்றார்.

 

    • “நன்றியெல்லாம் எதுக்குங்க? தற்செயலா செஞ்ச உதவி!” என்றான்.

 

    • “இருந்தாலும் அதனால நீங்க எவ்வளவு சிரமம் அனுபவிக்க வேண்டியதாய்ப் போச்சி!”

 

    • “நம் பையனுங்க சில பேருதான் இப்படி என்ன இக்கட்டுல மாட்டி விட்டுட்டாங்க. ஆனா இப்ப எல்லாம் ஒரு வகையா சரியாப் போச்சு” என்றான்.

 

    • “பல்கலைக் கழகத்திலேயே குண்டர் சங்கமா? என்னால நம்ப முடியில தம்பி!” என்றார்.

 

    • “இப்பதான் சிலர் ஆரம்பிக்க முயற்சி பண்ணினாங்க. இதுவரையில இப்படி நடந்ததில்ல பாருங்க. இனிமேலும் நடக்காது. பல்கலைக் கழக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்காங்க. இனிமே அப்படி நடக்க வழியில்ல” என்றான். பல்கலைக் கழகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.

 

    • அகிலா பலகாரங்களும் இனிப்பு பானமும் கொண்டுவந்து வைத்தாள். ஆனால் அவன் எதிர் பார்த்தைப் போல அவளுடைய அம்மா வரவில்லை. அவர்களைப் பேசவிட்டு அப்பா உள்ளே போனார்.

 

    • “உங்க அப்பா ரொம்ப அன்பானவரா இருக்காரு அகிலா!” என்றாள்.

 

    • “பத்து நிமிஷங்கூட பேசில. அதுக்குள்ள எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்றாள்.

 

    • “பேசின வரைக்கும் தெரியுதில்ல! ஒரு தலைமை ஆசிரியருக்கு உள்ள கண்டிப்பு கூட இல்லியே” என்றான்.

 

    • “அதெல்லாம் பள்ளிக்கூடத்திலதான் தலைமை ஆசிரியர். வீட்டில அவரு அப்பாதான்!” என்றாள்.

 

    • வாசலில் நிழல் தெரிந்தது. ஒரு ஐந்து இளம் பையன்கள் நுழைந்தார்கள். அவர்களில் முன் நின்றவனை “இவன்தான் என் தம்பி!” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள். “ஹலோ அங்கிள்!” என்றான். அது கேட்கக் குளிர்ச்சியாக இருந்தது. அதோடு தன் நண்பர்களுடன் பலகாரம் சாப்பிட உள்ளே போய்விட்டான்.

 

    • உள்ளே போயிருந்த மயில்சாமி வெளியே வரவும் வாசலில் இன்னும் சில மலாய்க்கார நண்பர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லி உட்கார வைத்தார் அவர். கணேசனையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். வந்தவர்களில் ஒருவர் தேசியப் பள்ளியின் ஆசிரியர்; சொந்தத் தொழில் செய்யும் பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு; மயில்சாமியோடு படித்து பெரிய மனிதராக இருக்கும் டத்தோ ஒருவர். அவருடைய அழகிய டத்தின் மனைவியுடன்.

 

    • அனைவரும் கணேசனுடன் முகமனுக்காகப் பேசினார்கள். தம் பிள்ளைகள் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயில்வது பற்றிச் சொன்னார்கள். அப்புறம் மயில்சாமியோடு கட்டித் தழுவி ஊர்க்கதைகளும் அரசியலும் பழைய நினைவுகளுமாகக் கலந்து கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

    • அகிலாவின் அம்மா சிறிது நேரம் வெளியில் வந்து வந்தவர்களை வரவேற்றுவிட்டு உள்ளே போய் சாப்பாடு எடுத்து வைப்பதில் முனைப்பாக இருந்தார். அவன் பக்கம் வரவில்லை. வாய்ப்பில்லையா, தெரியவில்லையா அல்லது வேண்டாமென்றிருக்கிறாரா என்று புரியவில்லை. அகிலாவும் அம்மாவுக்குத் துணையாக ஓடிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது கணேசனைக் கண்ணால் பார்த்துப் புன்னகைப்பதோடு சரி.

 

    • மேலும் சிலர் வந்தார்கள். வீட்டில் கூட்டம் நெருக்கியது. அவனுக்குத் தனிமை அதிகமாக இருந்தது. தன் இருக்கையை இன்னொரு பெண்மணிக்கு விட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தான். அகிலா ஓடிவந்து அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை அருகில் கொண்டு விட்டாள். காகிதத் தட்டைகளில் ஒன்றைக் கையில் கொடுத்து “சாப்பிடுங்க” என்றாள். அப்புறம் வேறு யாரையோ கவனிக்கப் போய்விட்டாள்.

 

    • கணேசன் தட்டில் இடியப்பமும், பூலுட்டும் நிரப்பிக் கொண்டு அவற்றில் கறி பெய்து ஒரு ஓரத்துக்கு எடுத்துக் கொண்டு வந்தான். சாப்பாடு சுவையாக இருந்தது. ஆனால் தனியாகச் சாப்பிடவேண்டியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அவனையொத்த வயதினர் யாரும் இல்லை. வந்தவர்கள் ஜோடி ஜோடியாக குடும்பக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

    • சாப்பிட்டுக் கை கழுவினான். மயில்சாமி மட்டும் வந்து “என்ன தம்பி, முடிச்சிட்டிங்களா? இன்னுங் கொஞ்சம் சாப்பிடலாமே!” என்றார். போதும் என்றான். அகிலாவின் அம்மா சாப்பாடு கொண்டு வருவதும் சமயலறைக்குள் போவதுமாக இருந்தார். அவன் பக்கம் அவர் பார்வை திரும்பவில்லை.

 

    • இன்னும் சிலர் வர சிலர் விடைபெற்றுப் போனார்கள். அவனுக்கும் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்காமல் போவது நல்லது எனப் பட்டது. அகிலாவைப் பிடிக்க முடிந்தபோது சொன்னான்: “நான் புறப்படலாம்னு பாக்கிறேன் அகிலா!”

 

    • “என்ன அவசரம் கணேஷ்? கொஞ்சம் நேரம் இருங்க, போகலாம்!” என்றாள்.

 

    • “இல்ல அகிலா! நான் பினாங்கு திரும்பி, முடிஞ்ச சீக்கிரம் பஸ் பிடிச்சி கிள்ளானுக்குப் போயாகணும். இப்ப போகலன்னா ரொம்ப நேரம் ஆயிடும்!”

 

    • “அப்படியா!” அவனைப் பார்த்தவாறு விழிகள் படபடக்க ஏதோ யோசித்தவாறிருந்தாள். அப்புறம் அவன் கையை உறுதியாகப் பிடித்தாள். அவனை இழுத்துக் கொண்டு சமயலறைக்குச் சென்றாள். அங்கு அவள் அம்மாவும் அவருக்கு உதவியாக இன்னொரு பெண்ணும் இருந்தார்கள். “அம்மா, இவருதான் கணேஷ்! எங்கூடப் படிக்கிறவரு, வருவாருன்னு சொன்னேன்ல!”

 

    • ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்து “அப்படியா, வாங்க!” என்று மீண்டும் தலை குனிந்து வேலையில் ஈடுபட்டார். “இதோ இவங்க எங்க சின்னம்மா! இங்க பக்கத்திலதான் இருக்காங்க!” என்று அறிமுகப் படுத்தினாள்.

 

    • “வாங்க தம்பி! அகிலாவுக்கு ரொம்ப உதவி பண்ணினிங்களாமில்ல! ரொம்ப நன்றி!” என்றார் அந்தச் சின்னம்மா.

 

    • “பரவால்லிங்க! சின்ன விஷயம்!” என்றான்.

 

    • “இப்படிப் புது இடத்தில அண்ணன் மாதிரி இருந்து ஒருத்தர் ஒதவி செய்றது ஒரு பொம்பிள பிள்ளைக்கு தைரியந்தானே!” என்று தொடர்ந்தார் அந்தச் சின்னம்மா. கொஞ்சம் முட்டாள் தனமாகச் சிரித்தான்.

 

    • அகிலாவின் அம்மா ஏதோ ஒரு சாப்பாட்டைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்குப் போய்விட்டார். சமயலறையில் அதற்கு மேல் நிற்பதற்குக் காரணமில்லாமல் இருவரும் வெளியே வரும்போது அம்மா எதிரில் வந்தார். அகிலா அவரைத் தடுத்து “அம்மா, கணேஷ் போகணும்கிறாரு!” என்றாள்.

 

    • “சரிம்மா, போயிட்டு வரட்டும். பலகாரங் குடுத்தியா?” என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கக் காத்திராமல் நடந்தார்.

 

    • வரவேற்பறையில் மயில்சாமி எதிர்ப்பட்டார். “என்ன தம்பி கிளம்பிட்டிங்களா?” என்று கேட்டார். “ஆமாங்க, நான் இனி பினாங்கு போய், கிள்ளானுக்குப் போகணும்!” என்றான்.

 

    • “அப்படியா, சரி! முடிஞ்ச போது வந்து போங்க!” என்றார்.

 

    • அகிலா மோட்டார் சைக்கிள் வரைக்கும் வந்தாள். அவன் ஏறி உட்கார்ந்து தலைக் கவசத்தை அணிந்து கொண்டான். கொஞ்சம் வருத்தமான குரலில் சொன்னாள்: “அம்மாவுக்கு சரியான டென்ஷன் கணேஷ்! வீடு நெறய ஆட்கள் வந்துட்டாங்கள்ள! அதினாலதான் அவங்களால முகங் குடுத்து பேச முடியல!” என்றாள்.

 

    • “பரவாயில்ல அகிலா. அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!” என்றான்.

 

    • கையைப் பிடித்து அழுத்தி விடை கொடுத்தாள். “வாரேன் அகிலா! கேம்பஸ்ல பார்ப்போம்!” என்று சொல்லி அவன் மோட்டார் சைக்கிள் நகர்ந்த போது தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கையாட்டி நகர்ந்தான்.

 

    • நெடுஞ்சாலையில் முகத்தில் காற்று அறைய பினாங்கு நோக்கி விரைந்த போது மனதில் கொஞ்சம் வெறுமை இருந்தது. “இவ்வளவுதானா அறிமுகங்கள்? இதற்காகவா அத்தையிடம் இத்தனை பொய் சொல்லி வந்தேன்?” என்று கேட்டுக் கொண்டான். அந்த வீட்டில் தனக்குக் கொஞ்சம் நிராகரிப்பும் இருந்தது என்பதை அவனால் உணர முடிந்தது.

 

    • ஆனால் அகிலாவின் கனிவு, மயில்சாமியின் திறந்த மனதுடனான உபசரிப்பு ஆகியவை ஆறுதலாக இருந்தன. இன்றிரவு அத்தையைச் சந்தித்து தான் காலையில் வரமுடியாத காரணத்தை எப்படிச் சொல்லி விளக்குவது என்ற யோசனையில் மனது மீண்டும் கலவரமடைந்தது.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28  அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24

24  “காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை” என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.   “காதல் என்பது மிகவும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 4ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 4

4  காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி   அண்ணாந்து பார்த்தால்