Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25

25
 

    • “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.

 

    • கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட நீரிணைக் கடலைப் பாலாக்கி அந்த நீண்ட பினாங்குப் பாலத்துக்குப் பொன் முலாம் பூசி “இந்தக் காட்சிகளெல்லாம் உனக்காகத்தான், உனக்காகவேதான்” என்று இயற்கை அள்ளி வழங்கியிருந்த ஆனந்தம் அவளை இந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது. அவர்கள் வி.சி. பாறையை ஒட்டிய புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். கணேசனின் கையை தன் கையில் இறுகக் கோத்துக் கொண்டு தன் மடியில் உரிமையோடு வைத்துக் கொண்டிருந்தாள் அகிலா. இந்த இடத்தில் முன்பும் பல முறை அவள் கணேசனோடு உட்கார்ந்து பேசியிருக்கிறாள். ஆனால் இந்தப் பூரண நிலவின் முழு மந்திரமும் இன்றுதான் அவளுக்குப் புலனானது. இது இளம் உள்ளங்களுக்கான போதை மருந்து. காதலுக்கான சொக்குப்பொடி. காவியங்களுக்கான முதலடி. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வியைத்தான் கேட்க அவளுக்குத் தோன்றியது.

 

    • “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

 

    • அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதென்பது தெரிந்துதான் இருந்தது. ஆனால் அதை அவன் வாயால் கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்த இரவு வேளைக்கான இன்ப சங்கீதமாக அந்தப் பதில் இருக்கும் என்று நினைத்தாள்.

 

    • “சொல்லுங்க! என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

 

    • அவன் அவள் தோள்களோடு அழுத்தி உரசிச் சிரித்தான். “உன்னைப் பிடிக்காமலா இப்படி இந்த இருட்டுல உன்னோட உக்காந்திருக்கேன் அகிலா?”

 

    • “கேள்விக்கு பதில் கேள்வியா சொல்லாம நேரா பதில் சொல்லுங்க?”

 

    • “எப்படி?”

 

    • “நான் சொல்ல மாட்டேன். நீங்களே சொல்லுங்க?”

 

    • “இன்னும் என் மேல நம்பிக்கை இல்லியா?”

 

    • “பாத்திங்களா? மறுபடி கேள்விதான வருது? வேண்டாம் முழு வாக்கியமா பதில் சொல்லுங்க!”

 

    • சிரித்துச் சொன்னான்: “உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அகிலா!”

 

    • “என்னைக் காதலிக்கிறிங்களா?”

 

    • “இதென்ன கேள்வி?”

 

    • “பதில் சொல்லுங்க!”

 

    • “ஏன் இத்தன கேள்வி?”

 

    • “உங்களுக்கு ஏன் இத்தன மறு கேள்விங்க? பதில மட்டும் சொல்லுங்க!”

 

    • மீண்டும் சிரித்துச் சொன்னான்: “உன்னை என் உயிருக்குயிரா காதலிக்கிறேன் அகிலா!”

 

    • அவன் மார்பில் நிம்மதியாக முகம் புதைத்தாள். “உயிருக்கு உயிராக” என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை. ஆனால் அந்த மாதிரி அர்த்தத்துக்கு அப்பாற்பட்ட உறுதிகள் அந்த நேரத்துக்குப் பொருந்தியிருந்தன.

 

    • “நானும் அப்படித்தான் கணேஷ். உங்கள உயிருக்குயிரா காதலிக்கிறேன்!” அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் கட்டியது. முழு நிலவு அதில் கொஞ்சம் கலங்கித் தெரிந்தது.

 

    • அதற்கு மேல் அந்த நேரத்தில் அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் தன் கையை அவள் கைகளில் இருந்து பிரித்துக் கொண்டு அவள் தோள்களை இறுக அணைத்துக் கொண்டான். அதில் இனந் தெரியாத சுகம் இருந்தது.

 

    • “தாயார் அணைத்திருந்த அணைப்பு முண்டு – நான்

 

    • தந்தை மடி கிடந்த பழக்கமுண்டு

 

    • நீயாரோ நான் யாரோ தெரியவில்லை – இங்கு

 

    • நேர்ந்தது என்ன வென்று புரியவில்லை”

 

    • என்றோ கேட்ட பாடல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.

 

    • இரவுக் காற்றின் குளிர் உடைகளுக்குள் எல்லாம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் உடல் வெப்பமாக இருந்தது. அவளுடைய கன்னம் அவன் மார்பில் ஒட்டிக் கிடந்தது. அவளுடைய மூச்சு அவன் மார்பில் பட்டு எதிர்த்த போதெல்லாம் அந்தச் சூடு அவள் மேலும் தெறித்தது. அவனுடைய முத்தங்கள் அவள் உதடுகளில் இனித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சட்டைப் பொத்தானை நெருடியவாறிருந்தாள். இமையை நெறித்து கண்களை உயர்த்திப் பார்த்தால் புன்னகைக் கீற்று விழுந்திருந்த அவன் உதடுகள் தெரிந்தன. மீண்டும் தலை தாழ்த்தியிருந்தாள்.

 

    • “என்ன பேச்சையே காணும் அகிலா?”

 

    • மீண்டும் பேசாமல் இருந்தாள். “ஏதாகிலும் பேசு என் கண்ணு!” என்றான். பேசாமலே இருந்தாள்.

 

    • “என் மேல கோபமா அகிலா?” என்றான்.

 

    • “ஏன் கோபப் படணும்?”

 

    • “கண்ணுன்னு கூப்பிடதினால!”

 

    • “இல்ல கணேஷ்! உங்களுக்கு நான் இவ்வளவு இடம் கொடுத்தாச்சி! இதுக்குப் பிறகா இந்த “கண்ணு”காகக் கோவிச்சிக்கப் போறேன். கோபம் இல்ல. இனிப்பாதான் இருக்கு! மறுபடி கூப்பிடுங்க!”

 

    • “என் கண்ணு!” அணைப்பை இறுக்கினான். மீண்டும் மௌனமானாள்.

 

    • இதுதான் காதல் என்பதா? இதைத்தானா சினிமாவில் பார்த்து, பாடல்களில் கேட்டு, நாவல்களில் படித்து, தோழிகளுடன் பேசி, இரவில் மெய்மறந்து கனாக் கண்டு, என்று இது விளையும் என்று ஏங்கியிருந்தேன்? என்ன இது? என்ன செய்கிறேன்? இது சரியா? இது ஒளித்து மறைத்துச் செய்யும் குற்றமா? இது என் மனம் இழுக்கும் இழுப்புக்கு நான் ஓடுகின்ற தவறான நடத்தையா? இதுதான் கெட்டுப் போவது என்பதா? நான் இப்போது கெட்டுப் போகிறேனே? கெட்டுப் போவது என்பது ஏன் இத்தனை இன்பமாக இருக்கிறது? இந்த இன்பத்தோடு இந்தக் குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது? ஏன் அம்மாவின் நினைவு வருகிறது?

 

    • *** *** ***

 

    • விடுமுறை எப்போது முடியும் எனக் காத்திருந்தாள். ஒருநாளைக்கு முன்னாலேயே பெட்டியை எல்லாம் அடுக்கித் திரும்பத் தயாராக இருந்தாள்.

 

    • “நாளைக்கு போனா எப்ப திரும்ப வருவ?” என்று அன்றிரவு அம்மா கேட்டாள். அந்தக் கேள்வியில் வழக்கமான அன்பு இருந்ததை விட ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது என அகிலாவுக்குத் தோன்றியது.

 

    • “பார்ப்போம்மா! நிறைய வேலைகள் இருக்கும். எப்பப்ப ஓய்வு கெடைக்குதோ அப்ப வாரேன்!” என்றாள்.

 

    • “தோ இங்க இருக்கிற பினாங்கில இருந்து வர்ரதுக்கு எதுக்கு ஓய்வு? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ பஸ் ஏறி வந்திர வேண்டியதுதான?” என்றாள் அம்மா.

 

    • “பஸ் ஏறி வர்ரது பெரிசில்ல அம்மா. ஆனா விரிவுரையாளர்கள் குடுக்கிற எசைன்மென்டெல்லாம் வாரக் கடைசியிலதான் செய்ய முடியும். லைப்ரரிக்கும் போய் உக்காந்து ஆறுதலா அப்பதான் படிக்கலாம்!”

 

    • “இங்க இருந்த போது நீ வீட்டில இருந்து படிக்கிலியா? அப்படி வீட்டுக்கு வந்து படிக்க வேண்டியதுதான? ஒன் படிப்ப நாங்க கெடுக்கிறமா?” என்று அம்மா மீண்டும் வாதிட்டாள்.

 

    • அம்மாவுக்குத் தன்மேல் கடுமையான சந்தேகம் விழுந்துவிட்டது என்று தோன்றியது. ஏன் இப்படிச் சந்தேகிக்கிறாள்? ஏன் இது பற்றி எரிச்சல் படுகிறாள். அன்று இரவு இது பற்றித் தெளிவாகப் பேசியிருந்தாலும் அவள் பயம் இன்னமும் தீரவில்லை என்று தோன்றியது. மகள் கெட்டுப் போவதற்குத் தயாராகிவிட்டாள் என்றே அவள் உள்ளம் கணக்குப் போட்டுவிட்டதாகத் தோன்றியது.

 

    • “சரிம்மா! எப்ப எல்லாம் ஓய்வு கிடைக்குதோ அப்ப எல்லாம் வந்திர்ரேன். நீ சொல்றது போல இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வேணுன்னாலும் கண்டிப்பா வந்திர்ரேன்! அவ்வளவுதான உனக்கு வேணும்? அப்படியே செய்திட்றேன்!” என்றாள்.

 

    • அம்மா முறைத்துப் பார்த்தாள். “என்ன கிண்டல் பண்றியா அகிலா?” என்றாள்.

 

    • அகிலா பெரு மூச்சு விட்டாள். “அடிக்கடி வரமுடியாதின்னாலும் கோவிச்சிக்கிற! சரி ரெண்டு வாரத்துக்கு ஒருமுற வந்திர்ரேன்னு ஒப்புக் கொண்டாலும் கோவிச்சிக்கிர! நான் என்னதான் பண்றது?”

 

    • அம்மா கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்தவாறு இருந்தாள். அப்புறம் முகம் சோர்ந்து வேறு புறமாகத் திருப்பிக்கொண்டாள். கண்களைத் துடைத்தாள்.

 

    • அகிலா அவள் தோளைப் பிடித்தாள். “ஏம்மா இப்படி சந்தேகப் பட்ற? நான் கெட்டுப் போகணும்னு நெனைச்சா நீ கொடுக்கிற ரெண்டு வார இடை வேளையில கெட்டுப் போக மாட்டேனா? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ இங்க வந்து உன்னுடைய விசாரணைகளுக்கு பதில் சொல்லிட்டு நான் திரும்பிப் போயிட்டா உனக்குத் திருப்தியாயிடுமா? உங்கிட்ட பொய் சொல்லி ஏமாத்த எனக்குத் தெரியாதா?”

 

    • அம்மாவின் முகத்தை வலுக்கட்டாயமாகத் திருப்பினாள். “இதோ பாரும்மா! ஒரு காலமும் இந்தக் குடும்பத்துப் பேருக்குக் களங்கம் வர்ர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். ஆனா அதுக்காக இல்லாத கட்டுப்பாடெல்லாம் போட்டு என்னக் கட்டிப் போட்டுடாதம்மா! மத்த பெண்களப் போல சகஜமா நடந்துக்க எனக்கு சுதந்திரம் கொடு!” என்றாள்.

 

    • அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு கண்ணு! கவனமா நடந்துக்க! அவ்வளவுதான்!” என்று சிரித்தாள் அம்மா.

 

    • *** *** ***

 

    • இவ்வளவும் பேசிய பின், இத்தனை உறுதி கொடுத்த பின் இப்படிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது குற்றமில்லையா என்று மனம் கேட்டவாறே இருந்தது.

 

    • விடுமுறை முடிந்து பல்கலைக் கழகத்துக்கு பஸ்ஸில் வந்து பெட்டியுடன் இறங்கியபோது கணேசன் பஸ் நிலையத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். தோளில் கைபோட்டு வரவேற்றான். பெட்டியுடன் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விடுதியில் கொண்டு வந்து விட்டான். அன்று மாலையில் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு இரவில் இந்தப் பௌர்ணமிச் சந்தரனின் ஈர்ப்பில் இங்கு வந்தார்கள். சில வாரங்கள் அவனைப் பிரிந்திருந்ததில் அவன் நினைவு இன்னும் அதிகமாகி ஒரு காட்டுக் கொடி போல தன் மனத்தில் படர்ந்து கிடந்ததை அவளால் உணர முடிந்தது.

 

    • தன் உள்ளம் விரும்பியவனை பார்ப்பதும் பேசுவதும் எப்படித் தவறாகும் என்று உள்ளம் எதிர்வாதம் செய்தது. இப்படி இவனோடு தனிமையில் இருப்பது தவறாகுமா? கையைப் பிணைத்துக் கொள்வதும் தோளையும் துடையையும் உரசிக் கொள்வதும் தவறாகி விடுமா? முத்தம் பரிமாறிக் கொள்வது தவறாகுமா? தவறு இல்லையென்றால் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கும்? அம்மா போட நினைக்கும் கட்டுப்பாடுகளின் எல்லை என்ன? தான் எடுத்துக் கொள்ளவிருக்கும் சுதந்திரத்தின் எல்லைதான் என்ன?

 

    • அந்த எல்லைகளைக் கணித்துக் கொண்டா இந்த சந்திப்பு நடக்கிறது? இது போதும்; இதற்கு மேல் வேண்டாம் என்று எந்தக் கட்டத்தில் நான் சொல்ல வேண்டும்? இந்த இரவின் போதைகள் தலைக்கு ஏறிவிட்டால் எல்லா எல்லைகளையும் தாண்டிப் போய்விடுவேனா? மனதில் பயம் வந்தது.

 

    • அவன் மார்பில் புதைந்திருந்த முகத்தைப் பிரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

 

    • “என்ன அகிலா?” இரவில் அவன் வார்த்தைகள் மிருதுவாக வந்தன. அவள் முடியைக் கோதினான்.

 

    • “ஏதோ தவறு செய்றமோன்னு அடிக்கடி ஒரு சந்தேகம் வருது கணேஷ்!” என்றாள்.

 

    • “காதலிக்கிறது தவறுன்னு சொல்றியா அகிலா? உலகத்தில எல்லாருந்தான காதலிக்கிறாங்க?”

 

    • “உலகத்தில எல்லாரும் காதலிக்கிறதில்ல! எவ்வளவு பேரு ஒழுங்கா முறையா அப்பா அம்மா பாத்துக் குடுக்கிற வாழ்க்கைத் துணைய கட்டிக்கிட்டு இருக்காங்க! அப்படி இல்லாம நமக்கு நாமே ஜோடியத் தேடிக்கிறது கொஞ்சம் தறுதலைத் தனந்தானே!”

 

    • “எல்லாரும் காதலிக்கிறாங்க அகிலா. தங்கள் உள்ளத்தில தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கத்தான் செய்றாங்க. ஆனா பலருக்கு அந்தக் காதல் உள்ளத்தை விட்டு வெளியேற முடியிறதில்ல. ஆனா அதினால என்ன? நாம் பெற்றோர்கள் சம்மதம் கேட்டுத்தான கல்யாணம் பண்ணிக்கப் போறோம்! ஆனா அதுக்குக் காலம் வரணுமில்லியா?”

 

    • கால் பக்கத்தில் பனி ஈரம் தோய்ந்திருந்த ஒரு புல்லைப் பிடுங்கியவாறு சொன்னாள்: “அம்மா இந்த முறை என்ன பல மாதிரி கேள்வி கேட்டாங்க?”

 

    • “எப்படி?”

 

    • “அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் •போன் பண்ணனும்னு கேட்டாங்க!”

 

    • “ஒரு நண்பர்னு சொல்ல வேண்டியதுதான?”

 

    • “சொன்னேன். அவங்களுக்கு திருப்தி ஏற்படல! ‘நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?’ன்னு பொரிஞ்சி தள்ளுனாங்க!”

 

    • “நீ என்ன சொன்ன?”

 

    • “ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியிலன்னு சொன்னேன்”

 

    • கணேசன் கொஞ்சம் யோசித்துச் சொன்னான்: “அப்ப உனக்கும் மனந்திறந்து “அவர் என் காதலர்னு” சொல்ல முடியில, இல்லியா?”

 

    • அவனை நிமிர்ந்து பார்த்தாள். “முடியில கணேஷ்! அதுக்குக் காலம் வரல. அம்மாகிட்ட இப்படிச் சொன்னா ஒடைஞ்சி போவாங்க. அதோட எனக்கே என் மனசுக்கு நிச்சயமா தெரியில!” என்றாள்.

 

    • “என்ன தெரியல?”

 

    • “இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!”

 

    • “சரிதான் அகிலா! கால அவகாசம் கொடுக்கிறதில எனக்கு ஒண்ணும் ஆட்டசேபனை இல்ல! ஆனா உங்கம்மா இப்படி அவசரமா இந்தப் பேச்ச எடுக்காம இருந்திருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காதில்ல! அவங்க அவசரப்பட்டு உன்ன இப்படி நேருக்கு நேர் கேக்கப் போயித்தான இப்படி இக்கட்டான நிலம வந்திருக்கு!”

 

    • “அவங்களோட பயம் எனக்குப் புரியிது கணேஷ். நாலு பேரு நம்மப் பார்த்திட்டு பேசிட்டா அவங்க குடும்ப மானம் போயிடும்னு அவங்க பயப்பட்றாங்க!”

 

    • “உங்க அப்பா என்ன சொன்னார்?”

 

    • “அப்பா ரொம்ப பரந்த மனம் உள்ளவரு! ‘நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு’ன்னு சொன்னாரு”

 

    • “அப்புறம் ஏன் இப்ப பயம் அகிலா?”

 

    • அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். “கண்டிப்பா நாம் கல்யாணம் பண்ணிக்குவோமா கணேஷ்?”

 

    • “எனக்கு எந்த சந்தேகமும் இல்ல! உனக்கு?”

 

    • தலை குனிந்தாள். “எனக்குக் குழப்பமா இருக்கு கணேஷ். உங்கள எனக்குப் பிடிக்குது. உங்களோட இப்படி ஒட்டியிருக்கப் பிடிக்குது. ஆனா கல்யாணங்கிறது நான் தீர்மானிக்க முடியாத விஷயம் போலவும், எனக்காக இதுவரைக்கும் எல்லாமும் செஞ்சிக் கொடுத்திருக்கிற பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் போலவும் இருக்கு!”

 

    • “அப்ப அவுங்கிட்ட கூடிய சீக்கிரம் பேசித் தீர்மானிச்சிக்குவோமே!”

 

    • “அப்படி செய்யலாம். அதினாலதான் கூடிய சீக்கிரம் உங்கள வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு இருக்கேன்!”

 

    • “எப்ப?”

 

    • “அடுத்த மாசத்தில தீபாவளி வருதுல்ல. அன்னைக்கு வாங்களேன். தீபாவளிக்கு விருந்துக்கு வந்த மாதிரியும் இருக்கும். எங்க பெற்றோர்கள சந்திச்ச மாதிரியும் இருக்கும்.”

 

    • ஒரு திடீர்க் காற்றின் விசிறலில் இலைகள் சலசலத்தன. பௌர்ணமி நிலவு இன்னும் மேலே ஏறியிருந்தது. வானில் கொஞ்சம் கருமேகங்கள் கூடியிருந்தன. தூரத்தில் கடலில் இரவுப் படகு ஒன்று “டுப் டுப்” என்று சத்தம் எழுப்பிக்கொண்டு பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருந்தது.

 

    • “சரி அகிலா!” என்று அவன் சொன்னான். அந்தச் சொற்களில் கொஞ்சம் சோர்வும் தயக்கமும் இருந்தது போல அகிலாவுக்குத் தோன்றியது.

 

    • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6

6  அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20

20  பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

12  வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.   மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன்