Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 24

24
 

    • “காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை” என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.

 

    • “காதல் என்பது மிகவும் சுலபமானது என நினைத்துக் கொண்டாயா? இந்த ஹேம்பர்கர் போல நினைத்தவுடன் வாங்கி சிரமமில்லாமல் சாப்பிட்டு நிம்மதியாக ஏப்பம் விடலாம் என நினைத்தாயா? சலித்துவிட்டது என்று தோன்றும்போது தூக்கி அதோ இருக்கிற குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடலாம் என நினைத்தாயா?” என்று அவனைக் கேட்டாள்.

 

    • வளாகத்துக்குத் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு முதுகை முறிக்கின்ற வேலைகள் இருந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசெக் ஆசியப் பிரதேச மாநாட்டிற்கான வேலைகள் குவிந்து கிடந்தன. ஐசெக் சங்கத் தலைவரும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும் விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு இந்த வேலைகளைக் கவனிக்க வெள்ளனத் திரும்பியிருந்தார்கள். ஜெசிக்காவும் திரும்பியிருந்தாள்.

 

    • திறப்பு விழாவுக்குக் கல்வி அமைச்சரை அழைப்பதிலிருந்து பேராளர்களுக்கு இருப்பிடம், உணவு முதலிய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்புக்களை எல்லாரும் சேர்ந்தே செய்தார்கள். ஏராளமான கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் செய்ய வேண்டியிருந்தது. பல்கலைக் கழக மாணவர் விவகாரப் பிரிவு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. ஏராளமான அரசாங்க அலுவலகங்களிலிருந்து ஏராளமான அனுமதிகள் பெற அலைய வேண்டியிருந்தது.

 

    • ஜெசிக்காவும் கணேசனும் அணுக்கமாக இருந்து பணியாற்ற வேண்டியிருந்தது. ஜெசிக்கா முற்றாக மாறிப் போயிருந்தாள். கணேசன் மீது அவளுக்கு இன்னும் அன்பு இருந்தது. ஆனால் முன்பு இருந்த பிரேமை இல்லை. ஒரு சக நண்பன் என்பதைத் தவிர்த்த எந்த உணர்ச்சியையும் அவள் காட்டவில்லை.

 

    • அவளுடைய புதிய காதலன் சுதாகரன் ஒரு சிறிய கார் வைத்திருந்தான். அவனுக்கு ஐசெக்கில் எந்த வேலையும் இல்லை என்றாலும் ஜெசிக்காவின் அருகில் இருப்பதற்காக அவனும் வளாகத்திற்கு விடுமுறை முடிவதற்கு முன்னரே திரும்பியிருந்தான். அவனிடம் நிறையப் பணமிருந்தது. ஒவ்வொரு இரவிலும் புதிது புதிதாக உடுத்திக் கொண்டு ஜெசிக்கா அவனோடு இரவு விடுதிகளுக்குப் போய் மறுநாள் காலையில் தூக்கம் மிகுந்த கண்களுடன் வந்து கொட்டாவி விட்டபடியே இருந்தாள்.

 

    • மத்தியான வேளைகளில் கணேசனும் அவளும் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு அடிக்கடி சாப்பிடப் போனார்கள். தன் காதல் வாழ்க்கையைப் பற்றி அவள் கூச்சமில்லாமல் பேசினாள். அவள் பேசக் கேட்டுக் கேட்டு கணேசனுக்கும் கூச்சம் விட்டுப் போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் அந்தரங்கங்களை அவன் சொல்ல ஆரம்பித்திருந்தான். அன்று மத்தியான வேளையில் ‘மெக்டோனால்ட்ஸ் போய் ஹேம்பர்கர் சாப்பிட்டு வரலாம் வா’ என்று அவள் அவனை இழுத்துக் கொண்டு போயிருந்த வேளையில் மல்லிகாவைப் பற்றி அவளிடம் சொல்ல வேண்டியதாயிற்று. “நீயில்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்று அவள் சொன்னதை ஜெசிக்காவிடம் சொன்னான். அவளை எப்படி சமாதானப் படுத்தி மாற்றுவது தனக்குத் தெரியவில்லை என்றான்.

 

    • அப்போதுதான் ஜெசிக்கா வாயிலிருந்து தக்காளி சாஸ் ஒழுகச் சிரித்தாள். “நானும் அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம், இல்லையா கணேசன்?” என்று கேட்டாள்.

 

    • “அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் போனதே!” என்று சிரித்தவாறு வேடிக்கையாகச் சொன்னான்.

 

    • “ஆனால் அதிர்ஷ்டம் எனக்குத்தான். எனக்கு ஒரு அருமையான காதலன் கிடைத்திருக்கிறான் பார். உன்னை விடப் பணக்காரன், புத்திசாலி. இவனை விட்டு உன்னை எப்படிச் சுற்றிக் கொண்டிருந்தேனோ தெரியவில்லை!” என்றாள்.

 

    • கணேசனுக்கு அவள் உண்மையாகச் சொல்லுகிறாளா விளையாடுகிறாளா என்பது தெரியவில்லை. “அவனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் அவனை விட மென்மையானவன் என்பதாய்த்தான் இருக்க வேண்டும். நான் அவனை விட நல்ல உணர்ச்சி மிக்க காதலனாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்புத்தான் விட்டுப் போய்விட்டது!” என்றான்.

 

    • ஜெசிக்கா அலட்சியமாகச் சிரித்தாள். “சுதா போல தீவிரமான காதலன்தான் எனக்குப் பொருத்தம். யாருக்கு வேண்டும் மென்மை? இப்போது பார், உனது மென்மையால் எந்தக் காதலியை ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறாய்! உறுதியான முடிவுகள் எதையும் உன்னால் செய்ய முடியவில்லை!” என்று அவனைப் பழித்தாள்.

 

    • “அப்படி இல்லை ஜெசிக்கா! என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை! அகிலாதான் என் காதலி. மல்லிகாவை ஒரு விளையாட்டுத் தோழியாகத்தான் இதுவரை கருதி வந்தேன். அவள் இத்தனை ஆசைகளைத் தானே உருவாக்கி வைத்திருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை. அவள் இத்தனை உறுதியாக இருப்பாள் என்றும் நினைக்கவில்லை!”

 

    • “அப்படியானால் ‘எனக்கு வேறு காதலி இருக்கிறாள். என்னை விட்டுத் தொலை’ என்று நேராகச் சொல்வதற்கென்ன? என்னிடம் நீ அப்படிச் சொல்லவில்லையா?”

 

    • “உன்னிடமும் அத்தனை கொடூரமாகச் சொல்லவில்லையே ஜெசிக்கா. நான் மென்மையானவன் என்று அப்போதே சொன்னேன் இல்லையா? உன்னிடம் மெதுவாகத்தானே எடுத்துச் சொன்னேன்!”

 

    • “அப்படியே அவளிடமும் சொல். தற்கொலை செய்து கொள்வேன் என்பதெல்லாம் ஒரு பயமுறுத்தல். ஒரு உத்தி. அவ்வளவுதான். எந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதில் உயிரை விட்டுவிட மாட்டாள்!”

 

    • ஜெசிக்காவின் பேச்சு அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும். கல்யாணத்துக்காகச் சத்தியம் பண்ணுவதையும் தற்கொலைசெய்து கொள்வதையும் இந்த மல்லிகா ஏராளமான மூன்றாந்தரத் தமிழ்ப் படங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆகவேதான் இந்த வசனங்கள் பேசுகிறாள். உண்மை வாழ்க்கை என்று வரும்போது புரிந்து கொள்வாள். அவளிடம் முறையாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

 

    • யோசித்தவாறு ஹேம்பர்கரைக் கடித்துக் கொண்டிருந்த போது அகிலா அடுத்த வாரம் திரும்பி விடுவாள் என்ற நினைப்பு வந்தது.

 

    • *** *** ***

 

    • வளாகம் கணேசனுக்கு வெறிச்சென்றிருந்தது. ஆனால் விடுமுறையாக இருந்தாலும் வளாகத்தில் மாணவர்கள் நடமாட்டம் இல்லாமல் இல்லை. வளாகத்துக்கு வெளியே இருந்து தொலைக்கல்வி மூலம் படிக்கும் ஓ•ப் கேம்பஸ் மாணவர்கள் நிறைய இருந்தார்கள். விடுமுறையில் மட்டுமே இவர்கள் சில வாரங்கள் வளாகத்துக்கு வந்து விரிவுரையாளர்கள் மூலமாக சில விரிவுரைகள் கேட்டு சந்தேகங்களும் கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.

 

    • அனைவரும் வேலை செய்கின்ற முதிர்ந்த மாணவர்கள். குடும்பம் உள்ளவர்கள். பள்ளிக்கூட நாட்களில் வறுமையாலும் வேறு காரணங்களாலும் உயர்கல்வி பெறும் வாய்ப்புக்களைத் தவற விட்டவர்கள். இப்போது அவர்கள் முகங்களில் உயர்கல்வி பெறுகின்ற தாகம் இருந்தது. நூலகங்களிலும் புத்தகக் கடைகளிலும் அவர்கள் கூட்டமே அதிகமாக இருந்தது.

 

    • குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு முழு நேர வேலையும் பார்த்துக் கொண்டு இவர்கள் படிப்பதற்குப் படும் கஷ்டம் கணேசனுக்குப் பரிதாபமாக இருந்தது. விரைவாக முன்னேறி வரும் மலேசியாவில் ஒரு பட்டம் இல்லாவிட்டால் தங்கள் முன்னேற்றம் முடங்கி விடும் என்பதை அவர்கள் கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் முன்னேறுவதைக் காணக் காண தாங்களும் அந்தப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்னும் மனநெருக்குதல் அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. ஆகவேதான் தற்காலிகமாகத் தங்கள் சுகங்களைத் துறந்து பட்டக் கல்வி பெற வந்திருக்கிறார்கள். சிலருக்கு ஏழு எட்டு வருடங்கள் நீடிக்கும் நீண்ட பயணமாக அது அமைந்து விடுகிறது.

 

    • அந்த வகையில் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எண்ண கணேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. படிப்பை கிரகித்துக் கொள்ள மூளையில் போதுமான அறிவு இருந்தது. முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மனதில் இருந்தது. பல்கலைக் கழகத்தில் எளிதாக இடம் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனக்குக் காவல் தேவதையாக ஒரு அத்தை வந்து சேர்ந்தாள்.

 

    • கிள்ளானை விட்டுப் புறப்பட்ட போது அத்தை அவனை மிக விசேஷமாகக் கவனித்துக் கொண்டாள். அவனுக்கு மருமகன் ஸ்தானம் உறுதிப் படுத்தப் பட்டுவிட்டதைப் போலவே நடந்து கொண்டாள். ஒவ்வொரு பருவ விடுமுறை முடியும் போதும் அவன் கையில் அவனுடைய கல்விக் கட்டணம் சாப்பாடு அனைத்துக்குமாக இரண்டாயிரம் வெள்ளி கொடுத்ததனுப்புவது வழக்கம். இந்த முறை 500 வெள்ளி அதிகமாகக் கொடுத்தனுப்பினாள்.

 

    • “நல்ல பொருளா வாங்கிச் சாப்பிடு, கணேசு! உடம்ப நல்லா பாத்துக்க! எதப் பத்தியும் கவலப் படாத! அத்தை இருக்கேன்ல! எல்லாத்தையும் கவனிச்சுக்குவேன்!” என்று சொல்லி பஸ் நிலையம் வரை வந்து வழியனுப்பினாள்.

 

    • “போய் மறக்காம •போன் பண்ணு மாமா!” என்று கொஞ்சி விடை கொடுத்தாள் மல்லிகா. ஏனோ அவளோடு அவனால் முன்பு போல சரளமாகப் பேச முடியவில்லை. “மாமா! தீவாளி வருது. மறந்திராம வந்திரு!” என்று நினைவூட்டினாள்.

 

    • “ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!” என்று அத்தையும் உற்சாகமாகச் சொன்னாள்.

 

    • “சரி அத்தை!” என்று பஸ் ஏறினான்.

 

    • எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு வளாகம் வெறுமையானதாகத்தான் இருந்தது. அகிலா அங்கே இல்லை என்பதே முக்கிய காரணம். அகிலா அவன் வாழ்க்கைக்குள் வந்ததிலிருந்து அவன் மனசுக்குள் புதிய புதிய உணர்ச்சிகள் வந்திருந்தன. அழகுணர்ச்சி அதிகமாக இருந்தது. அவள் பக்கத்தில் இருந்த வரை வளாகத்தின் அழகிய மரங்களிலும் செடிகளிலும், வளாகத்தின் எல்லையிலிருந்த குன்றுகளிலும் எதிர்ப்புறத்திலிருந்த கடலிலும் காதல் பூச்சுப் பூசியிருந்தது. தொட்ட இடத்திலிருந்தெல்லாம் காதல் வாசனை வந்தது. அவள் இல்லாத இந்த வேளைகளில் இந்த அழகெல்லாம் வீணாகப் போவது போலத் தோன்றியது. இத்தனை பரபரப்பான வேலைகளுக்கிடையிலும் அவன் மனதைத் தனிமை பிழிந்து கொண்டிருந்தது.

 

    • அவன் மனதைப் பிழிய உண்மையில் பல விஷயங்கள் இருந்தன. கிள்ளான் போய் பெற்றோர்களைப் பார்த்து அத்தையையும் பார்த்து வந்ததிலிருந்து அவன் மனதில் ஒருவித புகை கவ்வியிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் புதிய குழப்பமான திருப்பங்கள் உருவாகியிருக்கின்றன என்று தோன்றியது. எதிர்காலத் திசை தெளிவாகத் தெரியவில்லை.

 

    • மல்லிகா எப்போது இந்தத் திருமண விஷயத்தை இவ்வளவு நிச்சயமாக மனதில் கொண்டாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் மூக்கில் சளி ஒழுக உருளைச் சக்கரம் வைத்து ஓட்டிக் கொண்டிருந்த நாள் முதல் அவளை அவனுக்குத் தெரியும். அவன் அவளோடு ஆயிரம் தடவை சண்டை போட்டிருக்கிறான். நூற்றுக் கணக்கான தடவை தலையில் கொட்டி அழ வைத்திருக்கிறான். அவளும் கையில் கிடைத்ததைத் தூக்கி அடித்து அவனை விரட்டியிருக்கிறாள்.

 

    • அத்தை உத்தரவிடும் நேரத்திலெல்லாம் அவளுக்குப் பாவாடை கட்டி சட்டை போட்டு விட்டிருக்கிறான். முகத்திற்குப் பௌடர் பூசி விட்டிருக்கிறான். அவளுக்காகப் பரிந்து மற்ற பிள்ளைகளிடம் சண்டை போட்டிருக்கிறான். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதைச் சரியாகச் செய்யாத போதெல்லாம் அவளுக்குத் தண்டனை கொடுத்து வாத்தியாராக இருந்திருக்கிறான்.

 

    • அவள் மேல் பாசம் உண்டு. அன்பு உண்டு. ஆனால் காதல்? அது எந்த நாளும் வந்ததில்லை. அவள் புஷ்பித்து அவள் அங்கங்களில் செழிப்பு பூசி அவள் முகத்தில் புதிய வெட்கம் வந்த போது கூட அவையெல்லாம் தனக்கு என அவன் நினைத்ததில்லை. அவள் அணுக்கம் அவனுக்கு எந்த நாளும் மோகம் ஊட்டியதில்லை.

 

    • வீட்டில் அத்தையும் மற்றவர்களும் அவர்களுக்கு முறை வைத்துப் பேசும் போதும் “கட்டிக்கிறியா? கட்டிக்கிறியா?” என்று கேட்ட போதும் அதை ஒரு பெரும் விளையாட்டு என்றுதான் நினைத்திருக்கிறான்.

 

    • மல்லிகாவுக்கும் அவனைப் பற்றி அதே நினைப்புத்தான் இருக்கும் என்பதைத் தவிர வேறு மாதிரி அவனால் நினைக்க முடியவில்லை. அத்தை பேசும் இந்தத் திருமண விளையாட்டுப் பேச்சுக்களை மல்லிகாவும் விளையாட்டு என்று புறக்கணித்திருப்பாள் என்றுதான் நம்பினான். ஆனால் அது சரியில்லை என்று இப்போது விளங்கிவிட்டது.

 

    • மல்லிகாவும் தானும் கணவன் மனைவியாகவா? முடியவே முடியாது என அவன் மனம் சொல்லியது. அத்தை இதற்காகத் திட்டம் போட்டிருக்கலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது. பல வருடங்களுக்கு முன்பிருந்தே இப்படி ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களை வளைத்துத் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் மேல் அத்தைக்கு இத்தனை அக்கறை பொங்கி வழிவதற்கு இதுதான் காரணம் என விளங்கியது.

 

    • ஆனால் தன்னோடு தோழியாகவும் தங்கையாகவும் பழகிய மல்லிகாவுக்கும் இந்த கல்யாண நோக்கம் இருக்கும் என்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அத்தை இதை ஆழமாக விதைத்திருக்கிறாள். மல்லிகாவுக்கு வேறு வெளி உலகத்தைக் காட்டவில்லை. வேறு ஆண்களோடு சரளமாகப் பழகி தனக்கு வேண்டியவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கவில்லை.

 

    • அத்தையின் உலகமும் மிகக் குறுகியதுதான். தானாகக் குறுக்கிக் கொண்டாள். அவளுக்கு ஆடம்பரமாக வாழத் தக்கப் பணம் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வாழுகின்ற மற்றவர்களுடன் சமமாகப் பழகப் போதிய அனுபவமோ வளர்ப்போ குடும்பப் பின்னணியோ இல்லை. தன் செல்வத்தைப் பயன் படுத்தித் தனக்குத் தாளம் போடுபவர்களும் தலையாட்டுபவர்களுமாக இரண்டு மூன்று கொடுக்கல் – வாங்கல் ஆட்களை மட்டும் வெளி உலகத் தொடர்புக்கு வைத்துக் கொண்டாள்.

 

    • குடும்பம், உறவு என்று சொல்வதற்குத் தன் பெற்றோர்களை வைத்துக் கொண்டாள். அவர்கள் அவள் கையில் வாங்கிச் சாப்பிட்டு அவளால் வாழுகிறார்கள். அவள் சொன்னதற்கு மறுப்பிருக்காது. அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆனந்தம் அத்தைக்கு இருந்தது.

 

    • அதோடு கணேசன் என்ற அவளுக்கு வேண்டிய முக்கியமான பொருளும் அங்கிருந்தது. கணேசனை மருமகனாக வளைத்துப் போட்டு விட்டால் அத்தையின் எதிர்காலம் பற்றிய பிரச்சினையும் வாரிசுப் பிரச்சினையும் தீரும். அந்நியர்களோடு போய் அவள் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களோடு சமமாகப் பழக வேண்டிய நாகரிகம் தனக்கு இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலத் தேவையில்லை. கணேசனையும் கணேசனின் பெற்றோர்களையும் அவள் முழுதாக ஆதிக்கம் செலுத்த முடியும். சாகும் வரை இந்தக் குடும்பத்தின் தலைவியாகவும் அதிகாரியாகவும் இருந்து சாக முடியும்.

 

    • அத்தை போட்டிருக்கிற இந்த “மாஸ்டர் பிளேனுக்கு” தான் ஒரு வெறும் கருவிதான் என கணேசனுக்குப் புரிந்தது. அது புரிந்ததும் அத்தையின் மேல் அவனுக்கு இத்தனை நாள் இல்லாத பெரும் வெறுப்பும் வந்தது.

 

    • இந்த அத்தை தன்னை இத்தனை நாள் இப்படிப் பயன்படுத்திக் கொண்டது போகட்டும். இனியும் அதற்குத் தான் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது என எண்ணினான். அத்தையின் இந்த ஆதிக்கத்திலிருந்து விலக வேண்டும். படிப்புச் செலவுக்கு இப்போதைக்கு அவளைத்தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கிறது. படிப்புக்குக் கடன் வாங்கலாம். பகுதி நேர வேலை பார்த்துச் சம்பாதிக்கலாம். எத்தனையோ மாணவர்கள் அப்படித்தான் படிக்கிறார்கள்.

 

    • தன் பெற்றோர்களையும் அவளுடைய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதில் பல சிரமங்கள் இருக்கின்றன. அப்பாவிடமும் அம்மாவிடமும் கடுமையாகப் பேசி அப்பாவுடைய குடிப் பழக்கத்தை மாற்ற வேண்டும். படிப்பு முடிந்ததும் அவர்களை அடிமை வாழ்க்கையில் கட்டிப் போட்டிருக்கின்ற அந்தத் தோட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிப் பட்டணப் புறத்தில் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

 

    • ஆனால் மல்லிகா? அவளை அவன் புண் படுத்த விரும்பவில்லை. பச்சைப் பிள்ளை. ஒருவேளை நன்றாக எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வாள். உலகம் பெரியது. அவளுக்கேற்ற எத்தனையோ மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள். “நானே உனக்கு என்ன விட அழகான, அன்பான, எடுத்ததுக்கெல்லாம் ஒன் தலையில கொட்டாத மாப்பிள்ளையா பாத்து கட்டி வைக்கிறேன் மல்லிகா” என்று சொல்லி அவள் மனதை மாற்ற வேண்டும். அவள் வெகுளி. கண் முன் கண்டதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் காணாதவை, அவள் தாய் அவளுக்குக் காணாமல் ஒளித்தவை, ஆயிரம் இருக்கின்றன என அவளுக்குக் காட்ட வேண்டும். இந்த வருடம் தீபாவளிக்கு கிள்ளான் திரும்பும் போது கொண்டாட்டப் பரபரப்புக்கள் ஓய்ந்த பின் அத்தையிடம் உட்கார்ந்து விரிவாகப் பேசவேண்டும். முடிந்த வரை அவள் கோபித்துக் கொள்ளாமல் இதமாக… இயலாவிட்டால் உறுதியாக, தேவையானால் முரட்டுத் தனமாக.

 

    • “அவ்வளவு திமிர் வந்திருச்சா ஒனக்கு! இனிமே ஒரு சல்லிக் காசு ஒனக்கோ ஒங்குடும்பத்துக்கொ குடுக்க மேட்டேன்!” என்பாள்.

 

    • “உங்க பணத்த நீங்களே வச்சிக்கிங்க! நான் கடன் வாங்கி படிச்சிக்கிறேன். வேல செய்ய ஆரம்பிச்சதும் உங்க கடன தூக்கி எறிஞ்சிட்றேன்!” என்று சொல்ல வேண்டும்.

 

    • எல்லாவற்றுக்கும் அகிலாவின் துணை வேண்டும். தன் பெற்றறோர்களைத் திருத்த, அவர்களைப் பராமரிக்க, அத்தையோடு பேசி வெல்ல, மல்லிகாவுக்கு வெளி உலகத்தைக் காட்ட, எல்லாவற்றிற்கும் தனக்கு பக்க பலமாக நிற்க அகிலா அவனுக்கு வேண்டும்.

 

    • இன்னும் இரண்டொரு நாட்களில் அகிலா திரும்பி விடுவாள். அவளோடு உட்கார்ந்து ஆழமாகப் பேச வேண்டும். தன் மனத்தையும் வாழ்க்கைப் பின்னணியையும் திறந்து காட்ட வேண்டும். “என் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு என் பக்கத்தில் எந்நாளும் நில் அகிலா!” என்று சொல்ல வேண்டும்.

 

    • ஆனால் காதல் அரும்பி வருகின்ற இந்த நேரத்தில் குடும்பத் துயரங்களை இப்படி விரிவாகச் சொல்ல வேண்டுமா? காதல் என்ற இந்தத் தளிர் ஒரு மகிழ்ச்சியான காற்றை சுவாசித்து, ஆசை, மோகம் என்ற நீர் பருகி உறுதியான செடியாக வளர காலம் தர வேண்டாமா? அதற்குள் “என் பெற்றோர் இப்படி!” “என் அத்தை மகள் இப்படி!” என்று சொல்லி அந்த இன்ப நேரங்களைக் கெடுத்துக் கொள்வதா?

 

    • அகிலா அவற்றைத் தாங்குகிற பெண்ணா? அல்லது இந்தத் தொல்லைகளெல்லாம் வேண்டாம் என்று ஓடுகிற பெண்ணா? தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கொஞ்சம் காலம் கழித்துச் சொல்லலாம். அவசரமில்லை. சிக்கல்களை அவிழ்க்க இன்னும் ஒரு வருடம், ஒன்றரை வருடம் இருக்கிறது.

 

    • முதலில் அகிலாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவள் அணுக்கத்தை அனுபவிக்க வேண்டும். அவள் ஸ்பரிசத்தில் மயக்கம் காண வேண்டும். மல்லிகாவைப் போல அல்லாமல், ஜெசிக்காவைப் போல அல்லாமல் பார்த்த அளவில் போதை தரும் ஓவியமாக இருக்கிறாள். பக்கத்தில் போனால் மோகம் தரும் மோகினியாக இருக்கிறாள்.

 

    • அகிலாவுக்காகத் தவிப்புடன் காத்திருந்தான்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

12  வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.   மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 29

29  அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு “உம்” என்று ஓட்டி வந்தார்.   பகல் முழுவதும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

13  நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும்