Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23
 

    • அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில் ஒளி பாய்ச்சும் சக்தி இருக்கும் என எதிர்பார்த்தான். ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக அகிலா தயங்கித் தயங்கிப் பேசினாள்.

 

    • “ஏன் அகிலா தயக்கமா பேசிற?” என்று கேட்டான்.

 

    • “இல்ல கணேஷ், நேத்து வீட்டில ஒரு பேச்சுவார்த்தை நடந்திச்சி. யாருக்கு •போன் பண்ணி இப்படி ரகசியமாப் பேசிறன்னு என்னப் பிடிச்சிக்கிட்டாங்க!”

 

    • “இனிமே •போன் பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா?”

 

    • “சீச்சீ! என் அப்பா அம்மா அப்படிப் பட்டவங்க இல்ல. அப்படியெல்லாம் கட்டுப்பாடு போடல. ஆனா ஒரு சாதாரண நண்பராக இல்லாம, அதற்கு மேல யாரோட பழகினாலும் எங்ககிட்ட வந்து முதல்ல அறிமுகப் படுத்திட்டு பழகுன்னு அப்பா சொல்லிட்டாரு!”

 

    • “என் பேர சொல்லிட்டியா?”

 

    • “சொல்லிட்டேன். ஆனா முழுக்கவும் சொல்லல. அப்பாவோட அந்த அறிவுரைக்குப் பிறகு உங்கள முறையா வீட்டுக்குக் கொண்டாந்து அறிமுகப் படுத்தாம உங்களோட ரொம்ப நேரம் பேசிறது சரியில்லன்னு படுது.”

 

    • கணேசன் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தான்.

 

    • “என்ன பேசாம இருக்கிங்க கணேஷ்?”

 

    • “என்ன சொல்றதுன்னு தெரியில. உங்கூட •போன்ல பேசாம எப்படி இருக்கிறதுன்னு நெனச்சா கவலையா இருக்கு!”

 

    • “கொஞ்சம் அவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக்குவோம் கணேஷ்! அடுத்த பருவம் தொடங்கினவுடன ஒரு நாள் எங்க வீட்டுக்கு நாம ரெண்டு பேரும் சேந்து வருவோம். எங்க பெற்றோர்களுக்கு உங்கள அறிமுகப் படுத்தி வச்சிர்ரேன்!”

 

    • “உங்க வீட்டுக்கு வர்ரதுக்கு பயமா இருக்கு அகிலா!”

 

    • “பயப்படாதீங்க! அப்பா ரொம்ப நல்லவர். பண்பானவர். தன்னுடைய எதிரியக் கூட சத்தமா பேசமாட்டார்!”

 

    • “என்ன ஏத்துக்குவாங்களா உக்க பெற்றோர்!”

 

    • “நிச்சயமா! உங்கள அவங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்! இப்பவே அந்த ரேகிங் சம்பவத்தில நீங்க எனக்கு உதவி பண்ணினதக் கேட்டு அப்பாவுக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் உங்க மேல!”

 

    • “சரி அகிலா!”

 

    • “வச்சிரட்டுமா?”

 

    • “சரி அகிலா!”

 

    • வைக்கவில்லை. தொடர்ந்து டெலி•போனை காதில் வைத்துக் கேட்டவாறிருந்தான்.

 

    • “அப்புறம் ஏன் வைக்காம இருக்கிங்க?”

 

    • “நீதானே வச்சிர்ரேன்னு சொன்ன, வச்சிர வேண்டியதுதானே!”

 

    • “ஊஹ¥ம், நீங்க மொதல்ல!”

 

    • “முடியாது நீதான்!”

 

    • கொஞ்ச நேரம் கொஞ்சல் சிணுங்கல்களைக் கேட்டு விட்டு •போனைக் கீழே வைத்தான்.

 

    • *** *** ***

 

    • அன்றிரவு சாப்பாட்டின் போது மல்லிகா பெரிதாக முறையீடு செய்தாள்: “பாரும்மா இந்த அத்தான் இப்பல்லாம் எங்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குது. சிரிக்கிறது கூட இல்ல! ஒரு புஸ்தகத்த எடுத்து படிச்சிக்கிட்டே இருக்கு. இல்லன்னா டெலி•போன்ல யார் கிட்டயோ ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கு!”

 

    • “ஏய் மண்டு! நான் யுனிவர்சிட்டியில படிக்கிறேன்னு தெரியுந்தான உனக்கு? படிக்கிறவன் புஸ்தகத்த எடுத்துப் படிக்கிறதில என்ன ஆச்சர்யம் ஒனக்கு?” என்று திட்டினான்.

 

    • “அதான் உங்க யுனிவர்சிட்டி லீவு விட்டுட்டாங்கள! அப்புறம் ஏன் லீவிலியும் படிக்கிற?”

 

    • “யுனிவர்சிட்டி லீவு உன் பள்ளிக்கூட லீவு மாதிரியில்ல. லீவிலியும் எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. படிக்கிறதுக்கும் நெறயப் பாடம் இருக்கு!”

 

    • “•போன்ல மாத்திரம் எப்படி ரொம்ப நேரம் பேசிற?”

 

    • “அது எல்லாம் பாட சம்பந்தமாத்தான். என் •பிரன்ட்சுங்க சந்தேகம் கேக்கிறாங்க. நான் சொல்றேன்!” பச்சையாகப் பொய் சொன்னான்.

 

    • “சரி. பரவால்ல! இன்னைக்கு ஒரு நாளைக்கு என்ன படம் பாக்க கூட்டிக்கிட்டுப்போ. கிள்ளான்ல “எஜமான்” படம் விளையாடுது. ரஜினி படம்!”

 

    • கணேசனுக்குச் சலிப்பாக இருந்தது. “படமா? தோ பாரு மல்லிகா! நான் படமெல்லாம் பாக்கிற மூட்ல இல்ல! நீ எப்போதும் போற மாதிரி உங்க அம்மாவோட போயிட்டு வா! என்ன விட்டுடு!” என்றான்.

 

    • “எல்லாருமா போயிட்டு வருவோமேப்பா. புள்ள ஆசயா கேக்கிதில்ல!” என்று அத்தையும் சிபாரிசுக்கு வந்தாள்.

 

    • “இல்ல அத்த! நீங்க போயிட்டு வாங்க!” என்றான்.

 

    • அத்தை அவனைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். “என்னமோ உங்கப்பா ஊட்ல இருந்து திரும்பினதில இருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கே! என்ன நடந்திச்சி அங்க?”

 

    • அத்தையைப் பார்த்தான். இவளிடம் எந்த அளவுக்கு மனம் விட்டுச் சொல்ல முடியும் என்பது அவனுக்கு நிச்சயமில்லாமல் இருந்தது. ஆனால் சொல்லத்தான் வேண்டும். என் நலனில் அக்கறை உள்ளவள். இந்த விஷயத்தில் சம்பந்தம் உள்ளவள். ஆகவே தயங்கித் தயங்கிச் சொன்னான்.

 

    • “இல்ல அத்த! அப்பா ரொம்ப குடிக்கிறாரு. அம்மா ஒண்ணும் தெரியாதவங்களா இருக்காங்க. அப்பாவுக்குச் சொல்லி மாத்திறதுக்கு அவங்களுக்கு முடியில. நான் அதச் சொல்லி கொஞ்சம் திருத்தலான்னு பாத்தா கொஞ்சங்கூட நான் சொல்றது அவங்களுக்கு விளங்க மாட்டேங்குது. நேத்து கொஞ்சம் பேசினதும் அப்பா கோவிச்சிக்கிட்டாரு. ராத்திரி முழுக்க தனியா உக்காந்து என்னையே திட்டிக்கிட்டு இருக்காரு!”

 

    • “இவ்வளவுதானா?” என்று ‘பூ’ என்று அந்த விஷயத்தை ஊதித் தள்ளினாள் அத்தை. “இது தெரிஞ்ச விசயந்தான கணேசு! அண்ணங் குடிச்சிக் குடிச்சி சீரளிஞ்சாச்சி! மூளையே செத்துப் போச்சி! அதுகிட்ட போய் சொன்னா இதெல்லாம் எடுபடுமா? உங்கம்மா இருக்கே, அதுக்கு ஒரு எளவும் வௌங்காது. நான் ஒருத்தி இருந்து ஆதரிச்சி வர்ரதினால ரெண்டு கௌங்களும் ஒருமாதிரியா இருக்கு. இல்லன்னா அவங்க கதி என்னாவும்? உங்கப்பா சம்பாதிக்கிறது அதோட பாதி குடிக்குக் கூடக் காணாது”

 

    • கணேசன் மீண்டும் தயங்கினான். அத்தையிடம் சொல்ல வேண்டிய விஷயம் இருந்தது. ஆனால் அவள் மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது என்று தயங்கினான். அத்தை கேட்பாளா? அல்லது அப்பாவைப் போலவே கோவித்துக் கொண்டு விவாதத்தைத் திசை திருப்புவாளா என்று தெரியவில்லை. இருந்தும் மெதுவாகச் சொன்னான்:

 

    • “அத்த! நீங்களாவது அப்பாவுக்கு இப்படி ஏராளமா தண்ணி வாங்கிக் குடுக்கிறத நிப்பாட்டலாமில்ல! நீங்க குடுக்கிறத நிறுத்தினா அவருக்கு இவ்வளவு குடிக்க வழியில்லியே!”

 

    • “ஆமாம்மா! நீதான் இப்படி தண்ணி வாங்கி வாங்கிக் குடுத்து அவங்களக் கெடுக்கிற!” என்று மல்லிகாவும் குறுக்கிட்டுப் பேசினாள்.

 

    • “சீ, நீ சும்மா கெட!” என்று அதட்டினாள் அத்தை. “சாப்பிட்டல்ல, போய் கைய களுவு!” மல்லிகா பயந்து போய் சாப்பாட்டுத் தட்டை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

 

    • “என்னா பேசிற கணேசு? என்னா பேசிற?” அத்தையின் சுருதி ஏறிவிட்டது. “நான் குடிக்க வாங்கிக் குடுக்கலன்னா என்னா ஆவும் தெரியுமா? ஒங்கம்மாதான் ஒத பட்டு சாவும். அது சம்மதமா ஒனக்கு? இப்பவே ரெண்டு நாளக்கி ஒரு தடவ அடி ஒததான். உங்கம்மா யாருகிட்டயாவது சொல்லியனுப்பும். உடனே கொஞ்சம் காசு அனுப்பி வச்சி சமாதானப் படுத்துவேன். இல்லன்னா உங்கம்மா என்னைக்கோ செத்துப் போயிருக்கும்!”

 

    • கணேசன் சாப்பாடு இரங்காமல் தட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தை சொல்வதில் உள்ள கசப்பான உண்மை புரிந்தது. இந்தக் குடும்பத்தைக் கையில் போட்டுக் கொள்ள ஒரு உபாயமாகத்தான் அத்தை அவர்களோடு இத்தனை கரிசனமாக இருக்கிறாள். அப்பாவை மதுப் பித்தராக்கிவிட்டாள். இப்போது அவரால் அதில் இருந்து மீள முடியாது. அத்தை தண்ணி வாங்கி ஊற்றுவதை நிறுத்தி விட்டால் நிலைமை சீரடையப் போவதில்லை. இன்னும் மோசமாகத்தான் போகும்.

 

    • அத்தை சுருதி இறங்கி அன்பாகப் பேசினாள்: “கணேசு! இங்க பாரு! உங்க அப்பா அம்மா பத்தின கவல ஒனக்கு எதுக்கு? நான் இவ்வளவு காலம் அவங்களப் பராமரிக்கில? அந்த மாதிரி அதுங்க ரெண்டையும் நான் பாத்துக்கிறேன்! நீ கவலய உடு!”

 

    • “அதுக்கில்ல அத்த! எத்தனை நாள் அவங்கள உங்க பொறுப்பில விட்டிருக்க முடியும்? அடுத்த வருஷம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும். அந்த சமயத்தில அம்மாவும் அப்பாவும் ரிட்டையராயிடுவாங்க. ஒரு வேலையில அமர்ந்தப்புறம் நான்தான அவங்கள வச்சி பாக்கணும். அப்ப இந்த மாதிரியே இருந்தாங்கன்னா நல்லா இருக்குமா?” என்றான்.

 

    • “கணேசு! இதெல்லாம் எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா? இதப் பாரு! இந்த ரெண்டு கௌத்தோடயும் நீ இருந்து குப்பை கொட்ட முடியாது. இது ரெண்டையும் நீ மடியில தூக்கி வச்சிக்கிறதுக்கவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறேன்? ஒனக்கு அந்தக் கவலயே வேணாம். நீ பாட்டுக்கு படிச்சி உத்தியோகம் பாக்கிறதப் பாரு. இந்த கௌங்கள நான் கவனிச்சிக்கிறேன்!”

 

    • “என்ன சொல்றிங்க அத்தை? உங்க வீட்டிலியே கொண்டி வச்சிப் பாத்துக்கப் போறிங்களா?”

 

    • “சீச்சீ! நம்ப வீட்ல வச்சிக்கிறதா? நாறடிச்சிருவாங்க! என்ன சொல்றன்னா, இவங்க தோட்டத்த உட்டு வெளியேர்னவொண்ண இவங்களக் குடி வைக்கிறதுக்குன்னு இந்தக் கிள்ளான்லியே ஒரு கம்பத்து வீட்ட வாங்கிப் போட்டிருக்கேன். ஒரு சின்ன தோட்டங்கூடப் போட்டுக்கலாம். வசதியான வீடுதான். அங்க இருந்திட்டுப் போவட்டும். நாம அடிக்கடி போய் பாத்துக்குவோம்!” என்றாள்.

 

    • இதை நல்லெண்ணத்தோடு செய்கிறாளா, அல்லது அவர்களை நிரந்தரமாகத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்காக இப்படி சூழ்ச்சி பண்ணுகிறாளா என்பது அவனுக்கு விளங்கவில்லை.

 

    • “அத்தை! நீங்க சொல்றது எனக்கு விளங்குது. ஆனா பையன் படிச்சி முன்னேறிட்டவொடனே அப்பா அம்மாவ கவனிக்காம உட்டுட்டான்னு ஊர்ல பேச மாட்டாங்களா?”

 

    • “கணேசு! ஊர்ப் பேச்சா பெரிசு? ஊர்ல உள்ளவங்களா ஒனக்கு ஒதவி பண்ணுனாங்க? இல்ல உங்க அப்பா அம்மாதான் ஒன்னப் படிக்க வச்சிப் பெரிய ஆளா ஆக்கினாங்களா? யார் பேச்சயும் நீ சட்ட பண்ண வேணாம். நான் ஊர்ப் பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு ஒக்காந்திருந்தேன்னா இப்ப உங்க மாமா விட்டுட்டுப் போன இத்தன சொத்தையும் வச்சி ஆக்கியம் பண்ண முடியுமா? எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டிருக்கியா? இந்த ஊர்ல ஆளு மதிப்போட இருந்தா முன்னுக்குப் பாக்கிற போது ஈ ஈன்னு இளிப்பாங்க. முதுகு திரும்பினவொண்ண “இதப் பாரு இந்தப் படிப்பில்லாத முண்டத்துக்கு எத்தன ராங்கி!”ம்பாங்க. இதையெல்லாம் சட்டை பண்ண முடியுமா? நீ ஏன் அதையெல்லாம் நெனைக்கிற? நீ பாட்டுக்கு படிப்ப முடிச்சி உத்தியோகம் பாத்துக்கிட்டு கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு. உங்க அப்பா அம்மா எம் பொறுப்பு. என் அண்ணனுக்கு அண்ணிக்கு சாகிற வரையில நான் கஞ்சி ஊத்திறேன். அவங்க ஒன்னத் தொந்திரவு பண்ணாம நான் பாத்துக்கிறேன். சரியா? கவலப் படாத! எங்க சிரி பாக்கலாம்?” என்றாள்.

 

    • கை கழுவி வாய் துடைத்துக் கொண்டு அந்தப் பக்கம் வந்த மல்லிகா அவன் தாடையைப் பிடித்து “ஆமா அத்தான், கொஞ்சம் சிரி!” என்று கொஞ்சினாள்.

 

    • ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தான். அதில் உயிர் இல்லாமல் இருந்தது. மல்லிகாவின் கையை லேசாகத் தள்ளிவிட்டான். அத்தை சொல்லும் முடிவு சுமுகமாக இருந்தது. ஆனால் அதில் ஏதோ ஒரு குறை இருப்பது போலும் இருந்தது. முன்பு அவனுடைய பெற்றோர்களின் பொறுப்புக்களையெல்லாம் அத்தை அபகரித்துக் கொண்டாள். இப்போது மகன் என்ற அவனுடைய பொறுப்புக்களையும் அபகரித்துக் கொள்ளப் பார்க்கிறாள்.

 

    • தனது பெற்றோர்களின் பொறுப்புக்களை அவள் ஏற்றுத் தன்னை வளர்த்து ஆளாக்கியதில் சம்மதம் இருந்தது. ஆனால் தனக்கு வயது வந்து வசதிகளும் வரும் காலத்தில் தனக்குரிய பொறுப்புக்களையும் அவள் ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்பது வேண்டாததாகத் தோன்றியது. அப்படியானால் தான் என்ன அத்தையின் விளையாட்டுக்களுக்கு ஏற்ப தலையாட்டுகின்ற ஒரு பொம்மையா? அதில் தனக்குப் பெருமை இல்லை எனத் தோன்றியது.

 

    • அவன் அப்பா நேற்றிரவு வாயிலிருந்து சோறு தெறிக்கப் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது: “நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?”

 

    • அத்தையிடம் மீண்டும் பேசினான்: “அதுக்கு இல்ல அத்த! நீங்க அவங்க மேல அன்பு காட்றது சரி! ஆனா நாளைக்கு மல்லிகாவுக்குக் கல்யாணம் காட்சின்னு ஒண்ணு நடந்த பிறகு அதும் அது புருஷனும் எதுக்கு இந்தக் கௌங்கள கட்டிக்கிட்டு மாரடிக்கிறிங்கன்னு கேட்டா என்ன செய்விங்க?”

 

    • அத்தை அதிர்ச்சியடைந்து அவனைப் பார்த்தாள். மல்லிகாவும் ஒன்றும் புரியாமல் குழம்பி அவனைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அங்கு குழப்பமான மௌனம் நிலவியது. அப்புறம் அத்தை திடீரென்று வெடித்துச் சிரித்தாள். எதற்குச் சிரிக்கிறாள் என கணேசனுக்குப் புரியவில்லை.

 

    • “என்ன அத்த! இது சிரிக்கிற விஷயமா?” என்று கேட்டான்.

 

    • “ஆமா! சிரிக்காம பின்ன என்ன பண்றது? கணேசு, ஒன் மனசில இருக்கிறது இப்பதான் எனக்குப் புரியிது! ஏன் புள்ள இப்படி பயந்து பயந்து தயங்கித் தயங்கிப் பேசுதுன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே இருந்தேன். இப்பதான் புரியிது!”

 

    • “என்ன புரியிது அத்த?”

 

    • “அதாவது, எங்கடா இந்த மல்லிகாவ எனக்குக் குடுக்காம வேற ஆளுங்களுக்கு அத்த கட்டி வச்சிறப் போறாளோங்கிற பயம் ஒனக்கு வந்திருக்கில்ல கணேசு? அப்படி ஆயிட்டா இந்த கௌட்டு அப்பாவையும் அம்மாவையும் யார் வச்சி பாக்கப் போறாங்க அப்படிங்கிற கவல வந்திருக்கில்ல கணேசு? அப்படித்தான? சொல்லு!”

 

    • குழம்பியிருந்தான். அத்தை வேறு மாதிரி அர்த்தம் பண்ணிக் கொண்டாள். இதற்கு ஆமாம் என்று சொல்வதா இல்லையென்று சொல்வதா என்று யோசித்துச் சொன்னான்: “அத்த! மல்லிகாவுக்கு என்ன விட ஒசந்ததா எத்தனையோ மாப்பிள்ளங்க கெடைப்பாங்கதான். நீங்க விருப்பம் போல கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான!”

 

    • “கணேசு! ஒனக்கு அந்த பயமே வேணாம். உங்கிட்ட சொத்து இல்ல, சொகம் இல்லன்னு எனக்குத் தெரியும். உன் அப்பா அம்மா முன்ன நின்னு ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற நெலமையில இல்லன்னும் எனக்குத் தெரியும். அவங்க எனக்கு சமமான அந்தஸ்து உள்ள ஜனங்க இல்லன்னும் தெரியும். ஆனா ரத்த சொந்தம் விட்டுப் போகுமா? நான் விட்ருவேனா? எத்தன ஒசந்த மாப்பிள்ளங்க இருந்தா என்னா? அதெல்லாம் எனக்குக் கால் தூசு. மல்லிகா ஒனக்குத்தான்னு அவ பொறந்தப்பவே போட்டு வச்ச கணக்கு. அத யாரு மாத்திறது?”

 

    • கணேசன் அயர்ந்து போயிருந்தான். மல்லிகா தனக்கு ஒத்த பெண் அல்ல என்று சொல்ல வாய் வரவில்லை. படிப்பிலும் அறிவிலும் முதிர்ச்சியிலும் அவள் இணையானவள் அல்ல. அழகில் கூட இணையானவள் இல்லை. உட்கார்ந்தே சாப்பிட்டு ஊளைச் சதை வைத்துப் போயிருக்கிறாள். அளவாகச் சாப்பாட்டு பயிற்சி பண்ணி உடம்பை இரும்பாக வைத்திருக்கும் அவனுக்குப் பக்கத்தில் அவள் புளி மூட்டை போல இருந்தாள். உணர்வில் அனுதாபமும் பாசமும் காட்டப்பட வேண்டிய ஒரு வெகுளித் தங்கையாக மண்டுத் தங்கையாக மனதில் நின்றாள். அண்மையில் அகிலா வந்து எல்லாவற்றுக்கும் அவனுக்கு இணையாக மனதுக்குள் உட்கார்ந்தவுடன் தனக்கு வாழ்க்கைத் துணையாக இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

 

    • ஆனால் அத்தை மல்லிகாவை எங்கோ தூக்கி வைத்திருக்கிறாள். மல்லிகாவின் தகுதிக்குத் தன் தகுதி குறைவாக இருப்பதாக நினைக்கிறாள். அப்படித் தகுதி குறைந்திருந்தும் உன்னை ரத்த சொந்தத்தால் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சலுகை காட்டிப் பேசுகிறாள். அத்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

 

    • இதை வேறு வகையில் அத்தைக்கு விளக்க வேண்டும் என எண்ணினான். தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படியாவது அவளுக்கு உணர்த்தி அவள் மனதை மாற்றி விட வேண்டும். இதை உரிய நேரத்தில் செய்யாவிட்டால் இது முற்றிப் போகும். காலம் கடந்து விடும்.

 

    • “அத்தை! பொறக்கும் போது கணக்குப் போட்டு வைக்கிறதுங்கிறதெல்லாம் அந்தக் காலத்தில. இந்தக் காலத்தில பிள்ளைங்களோட மனசப் பொறுத்துத்தான ஜோடி அமையும்? ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறது, மனசு ஒத்துப் போறது முக்கியம் இல்லியா? அதக் கேட்டுத் தெரிஞ்சிக்க வேணாமா? பெரியவங்க மட்டும் முடிவு பண்ணிட்டா போதுமா?” என்றான்.

 

    • அத்தை அவனை குழப்பமாக வெறித்துப் பார்த்தாள். அப்புறம் மீண்டும் வெடித்துச் சிரித்தாள்.

 

    • “என்ன அத்த, நான் சீரியசாப் பேசிக்கிட்டிருக்கேன் நீங்க சிரிக்கிறிங்கள!”

 

    • “சிரிப்புத்தான் வருது கணேசு ஒம் பேச்சக் கேட்டா! அதாவது, எங்கடா இந்த மல்லிகா வேற யாரையாவது மனசில வச்சிக்கிட்டு இருக்காளோன்னுதான கேக்கிற? ரெண்டு வருஷம் இப்பிடிப் பிரிஞ்சி போயி பினாங்கில இருந்திட்டமே, இவ வேற ஆளத் தேடிக்கிட்டாளான்னு ஒனக்கு கவலை வந்திரிச்சி, அப்பிடித்தான? ஏன் கணேசு? எம்பிள்ளய எனக்குத் தெரியாது? நான் அப்படியா பிள்ளய வளத்திருப்பேன்?”

 

    • மீண்டும் அத்தை தப்பாகப் புரிந்து கொண்டாள் என்று தெரிந்தது. மீண்டும் விஷயத்தைத் தலைகீழ் ஆக்கிவிட்டாள். அவளுக்கு விளக்கியாக வேண்டும். “அது இல்ல அத்த…” என்று ஆரம்பித்தவனை வெட்டி நிறுத்தின்னாள் அத்தை. “மல்லிகா! இங்க வாம்மா! நீயே மனசு தொறந்து உங்க அத்தான்கிட்ட சொல்லிடு! உங்க அத்தான் ஒரு வேள உனக்கு வேற ஆள் மேல விருப்பமான்னு கேக்குது! உங்க அத்தான கல்யாணம் பண்ணிக்க ஒனக்கு மனப்பூர்வமா சம்மதமா இல்லையான்னு சொல்லிடு!”

 

    • மல்லிகா ஏதோ சொல்ல வாய் திறந்தாள். அத்தை திடீர் என தடுத்தாள். “இரு, இரு! நான் உள்ள போயிட்றேன்! நான் இங்க இருந்தா எனக்குப் பயந்துகிட்டுதான் நீ சொல்றேன்னு உங்க அத்தான் நெனைக்கும்!”

 

    • அத்தை விருட்டென்று எழுந்து கை கழுவி விட்டு அறையை நோக்கிப் போனாள். “இப்ப பேசுங்க ரெண்டு பேரும்” என்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

 

    • கணேசன் மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் முகத்தில் குபீரென்று வெட்கம் ஏறியிருந்தது. “மல்லிகா! உங்கம்மா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! நான் சொல்ல வந்து என்னன்னா…”

 

    • திடீரென்று வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள். தன் நெஞ்சின் மேல் அதை வைத்து அழுத்திக் கொண்டாள். அவளுடைய மெல்லிய வழவழப்பான மேல்சட்டையின் ஊடே அவள் இள மார்புகளுக்கிடையே அவள் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருந்து அவன் விரல்கள் மூலம் ஊடுருவியது.

 

    • கண்களில் நீர் பனிக்க மல்லிகா பேசினாள்: “மாமா! உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்திச்சி? சந்தேகம் வர்ர மாதிரி நான் நடந்திக்கிட்டேனா? இப்ப சொல்றேன்! சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!”

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 9

9  கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் “தம் தம்” ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.  

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3

3  அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

12  வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.   மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன்