Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15

15
 

    • அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான வேளையில் தனியே கிடந்து அழுதேன்? இதற்காகத்தானா பல்கலைக் கழகம் வந்தது? இப்படித்தானா பெற்றோர்களின் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது? மனச்சான்று பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.

 

    • இரவு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி இருக்கிறது. பேராசிரியர் கௌஸ் நடனம் இன்னும் சரியாக அமையவில்லை என அவர்களை விரட்டிக் கொண்டே இருக்கிறார். “இது என்ன பாசார் மாலாமில் ஆடுகின்ற நடனம் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? பல்கலைக் கழக வேந்தரான பெர்லிஸ் மன்னர் அங்கிருப்பார். பினாங்கு முதலமைச்சர் அங்கிருப்பார். இந்தப் பல்கலைக் கழகத்தின் அத்தனை பேராசிரியர்களும் அங்கிருப்பார்கள். இவர்கள் முன் உடம்பை வளைக்காமல் ஆடினால் என் பெயரல்லவா கெட்டுப் போகும்? கமான், கமான், இடுப்பை வளைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் ஒருவன் இந்த வயதில் ஆடும் போது சிறுபிள்ளைகள் உங்களுக்கென்ன?” சத்தம் போடுவார்.

 

    • எட்டரை மணி பயிற்சியைத் தவறவிடக்கூடாது என உறுதி செய்து கொண்டாள். ஆனால் அதற்குள் கொஞ்சமாவது ஏதாவது சாப்பிட வேண்டும். காலையிலும் மத்தியானத்திலும் சாப்பிடாமல் வயிறு வெறுமனே கிடந்தது. சீக்கிரம் எழுந்து குளித்தால் மாலதியைக் கூட்டிக் கொண்டு குளுகோர் நகரில் சாலையோரக் கடைகளுக்குப் போகலாம்.

 

    • வளாகத்தின் தெற்கு வாசலைத் தாண்டி மின்டன் ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதிகளினூடே கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தாலும், இந்திய உணவு வேண்டும் மாணவர்களுக்கு அந்த குளுகோர் ஒட்டுக் கடைகள்தான் தஞ்சம். அங்கு தோசை, இட்டிலி, இடியப்பம், பிட்டு என்று ஏதாவது கிடைக்கும். மீ கோரேங், ரொட்டிச் சானாயும் கிடைக்கும். அறிவியல் பல்கலைக் கழக மாணவர்களை நம்பியே அந்தப் பகுதி செழிப்பாக வளர்ந்திருந்தது.

 

    • குளித்து உடைமாற்றி மாலதியின் அறைக்குப் போய் அவளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று முடிவு செய்து எழுந்தாள். அங்கு எங்காவது கணேசனைப் பார்க்க முடியுமா என்று ஒரு நப்பாசை திடீர் என மனசுக்கு வந்தது. சீ என்று அதை அழித்தாள். அது ஜெசிக்கா எனும் கிளி கொத்திக் கொண்டு போன பழம். எச்சில் பழம். அது எனக்குத் தேவையில்லை. அதை நினைக்கவே வேண்டாம் என்று எண்ணிக் கொண்டாள்.

 

    • அவள் குளித்து ஜீன்சும் டீ சட்டையும் மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் நின்று ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாலதியே அவள் அறைக்கு வந்து விட்டாள். “என்ன ஆள எங்கியுமே பாக்க முடியில அகிலா? அறையை வேற சொல்லாம கொள்ளாம மாத்திட்டியே! என்ன விஷயம்?”

 

    • “வாங்க மாலதி! உங்களப் பாக்கதான் வர இருந்தேன். ஜெசிக்காவோட ஒத்து வரல. அதுதான் அறைய மாத்திக்கிட்டேன்!” என்றாள்.

 

    • “அப்படியா? அது இருக்கட்டும்! இன்னக்கிக் காலையில உங்க ஆளுக்குப் பெரிய வெற்றியாமே! கேம்பஸ் முழுக்க மோட்டார் சைக்கிள் வெற்றி ஊர்வலம் நடந்ததாமே! கேம்பஸ் முழுக்க இன்னைக்கு அதுதான் பேச்சு! அதப்பத்திக் கேக்கலாம்னு பாத்தா உன்ன எங்கியுமே பார்க்க முடியிலியே!” என்றாள் மாலதி.

 

    • “வெற்றி ஊர்வலத்துக்கும் எனக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல. வெற்றி யாருக்குக் கிடைச்சதோ அவங்க கொண்டாடுவாங்க! எனக்கென்ன?” என்றாள்.

 

    • “என்ன ரொம்ப சலிப்பா பேசிற மாதிரி இருக்குது? உங்க ஆளு வெற்றியில உனக்குப் பங்கு இல்லாம போயிடுமா?”

 

    • “அது என்ன உங்க ஆளு? அவர் ஒண்ணும் என் ஆளு இல்ல”

 

    • மாலதி சிரித்தாள். “ஏன் அகிலா! எங்கிட்டயே மறைக்கப் பாக்கிறியா? அன்னைக்கு கேண்டீன்ல நான் புறப்பட்டுப் போன பிறகு ரெண்டு பேரும் கை கோத்துக் குலாவினிங்கன்னு கேள்விப் பட்டேனே!”

 

    • அகிலா அதிர்ச்சி அடைந்தாள். “சீ! குலாவினிங்க அப்படியிப்படின்னு பேசாதிங்க! ஒரு ஆறுதலுக்குக் கையப் பிடிச்சா குலவுறாங்கன்னு அர்த்தமா?”

 

    • “அது என்னமோ எனக்குத் தெரியாது! கேம்பஸ் முழுக்க அந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. நீதான் கணேசனுக்குப் புது கேர்ள் •பிரண்டுன்னு முத்திரை குத்தியாச்சி. என்னாடா, நம்மளோட இவ்வளவு •பிரண்டா இருந்தும் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியே இந்த அகிலான்னு நாங்கூட மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன்!”

 

    • அந்தச் செய்தி அதிர்ச்சியாகவும் இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. கணேசனோடு தான் இணைத்துப் பேசப் படுவதில் அவள் உள் மனதிற்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்தது. ஜெசிக்கா தன் மீது இப்படி சீறி விழுவதற்கும் இந்தப் பேச்சுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

 

    • ஆனால் உண்மையில் நான் கணேசனோடா இருக்கிறேன்? “வா அகிலா, இந்த வெற்றியைக் கொண்டாடலாம்” என்று சொன்ன சொற்களின் சூடு ஆறுவதற்குள் அதை மறந்து இன்னொருத்தியுடன் போய்விட்டான் அல்லவா? மகிழ்ச்சியில் தன்னை மலை முகட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றப் படுகுழியில் தள்ளி விட்டானல்லவா? எப்படி வந்து எல்லார் முன்னிலையிலும் கட்டிப் பிடித்துக் கொண்டாள்! எவ்வளவு உல்லாசமாக ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றார்கள்! அந்த ஜெசிக்காவுக்கு நான் போட்டியா?

 

    • ஆனால் கணேசன் அன்பாகத்தானே பேசினான்! அந்த அன்பில் உண்மை கொஞ்சமாவது இருக்காதா? அந்தப் பார்வையில், அந்தப் பிடியில் நட்பைத் தவிர வேறு பொருள் இருக்காதா? அதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்ற ஆதங்கம் வந்தது. அப்படிப் பேசினால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றியது.

 

    • “உட்காருங்க மாலதி!” என்றாள். கணேசனிடம் தான் கேன்டீனில் பேசியதைச் சொன்னாள். கணேசனிடம் தன் முடிவைச் சொன்னதைச் சொன்னாள். கணேசன் கைபிடித்ததையும் தான் அழுததையும் சொன்னாள். விசாரணையில் ஏற்பட்ட திருப்பங்களையும் அதன் முடிவில் கணேசன் தன்னிடம் வந்து பேசியதையும், அவனை ஜெசிக்கா பறித்துச் சென்றதையும் சொன்னாள். அந்த இறுதிக் கட்டத்தில் அவள் கண்களில் கண்ணீர் அரும்பியது.

 

    • “சரி, சரி! எல்லாம் நல்லவிதத்தில முடிஞ்சது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. கணேசன் மேல வந்த வீண் பழி மறைஞ்சதே, அது பெரிய விஷயம்! ஆனா நீ மனசப் போட்டு வீணா அலட்டிக்காத அகிலா! கணேசனுக்கும் ஜெசிக்காவுக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்குன்னுதான் கேள்விப்பட்டேன். ஆனா அவங்க வெறும் நண்பர்களா அல்லது அதற்கு மேலயான்னு யாருக்கும் தெரியாது. எதுக்கும் ஜாக்கிரதையா இரு அகிலா! அவங்க பழைய நண்பர்கள். நீதான் புதுசா வந்தவ. ஆகவே குறுக்கிடாம கொஞ்சம் ஒதுங்கியே இரு!” என்றாள் மாலதி.

 

    • அகிலாவுக்கும் அப்படித்தான் பட்டது. தான் ஒதுங்கிவிட வேண்டும். இந்தச் சிறிய புயல் அடித்துக் கொண்டிருந்தபோது படபடப்பாக இருந்தது. இப்போது இது ஓய்ந்து விட்டது. இனி இதை உதறிவிட்டுப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். இனி தனக்கு உதவிக் கரம் நீட்டிய அந்த நல்லவனின் எதிர் காலம் என்னாகும், என்னாகும் என எண்ணி எண்ணி வருந்த வேண்டியதில்லை. என்னால் வீணானான் என்ற பழிக்கு அஞ்ச வேண்டியதில்லை.

 

    • “சரி மாலதி. நீங்க சொல்றது சரிதான். நான் ஒதுங்கிட்றேன்! அவங்க காரியத்தில நான் ஏன் தலையிடணும்? சரி. அது கிடக்கட்டும்! காலையிலயும் மத்தியானமும் நான் சாப்பிடல! பசிக்குது. வாங்க குளுகோர் போய் ஏதாவது சாப்பிட்டு வருவோம். எனக்கு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி வேற இருக்கு! அதுக்குள்ள திரும்பிடனும்” என்றாள்.

 

    • “வா, வா! நானும் அதுக்குத்தான் வந்தேன். சாப்பாடு வாங்கப் போகனும்னு ராணியும் ராஜேஸ்வரியும் வேற காத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் அழச்சிக்கிட்டுப் போகலாம்!” மாலதி எழுந்தாள்.

 

    • இருவரும் அவசரமாக வெளியேறி ராணி, ராஜேஸ்வரி என்ற அவர்களின் இரு தோழிகளையும் கூட்டிக் கொண்டு இறங்கி வந்தார்கள். விடுதியின் வரவேற்பறையை விட்டு படிக்கட்டுகளில் கால் வைத்து நடந்த போது மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து கணேசன் அவர்களை நோக்கி வந்தான்.

 

    • முதலில் மாலதிதான் பார்த்தாள். அகிலாவை தோளில் இடித்துக் காட்டினாள். அகிலா அவனை கொஞ்சம் வியப்போடும் வெட்கத்தோடும் பார்த்தாள். பார்க்காதது மாதிரிப் போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் அவன் விரைவாக நெருங்கி அவர்கள் முன் வந்து நின்றான்.

 

    • எல்லாரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க மாலதிதான் மௌனத்தைக் கலைத்தாள். “கணேசன், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ரேகிங் விசாரணையில உண்மை வெளியாகி உங்களை விடுதலை செய்திட்டதா கேள்விப் பட்டோம். ரொம்ப மகிழ்ச்சி!” என்றாள்.

 

    • “ஆமாம் கணேசன், கன்கிராட்சுலேஷன்!” என்று ராணியும் ராஜேஸ்வரியும் அவன் கை பிடித்துக் குலுக்கினார்கள். அகிலா பேசாமல் இருந்தாள்.

 

    • “ரொம்ப நன்றி உங்க எல்லாருக்கும். அதுக்கு அகிலா ரொம்ப உதவி பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு சரியான முறையில நன்றி சொல்ல முடியாம போச்சி! அதுக்குத்தான் அவங்களத் தேடி வந்தேன்!” என்றான்.

 

    • தன்னைத் தேடி வந்தான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் தன்னை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்ற நினைத்த போது கோபம் வந்தது. ஜெசிக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி மனசுக்கு வந்தது. பேசாமல் இருந்தாள்.

 

    • இரங்கிய குரலில் பேசினான்: “அகிலா! உங்களோட எப்ப ஓய்வா பேச முடியும்?”

 

    • மூன்று தோழிகளை நிற்க வைத்துக் கொண்டு அவனோடு பேசுவது கூச்சமாக இருந்தது. அதிலும் அவன் சந்திப்பிற்கு நேரம் கேட்பது இன்னும் வெட்கமாக இருந்தது. பின்னால் இந்தத் தோழிகளின் வெறும் வாய்க்கு இது அவலாகப் போகும் என நினைத்தாள். ஆனால் நேராக முகம் பார்த்து அவன் கேட்கும் போது பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பேசினாள்: “நன்றி சொல்லத்தானே கேக்கிறிங்க? அதுக்குத் தேவையில்லை. நான் ஒண்ணும் செய்யலியே. உண்மை தானா வெளிப்பட்டது, அதுக்கு எதுக்கு நன்றி? உண்மையில உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும் என்ன ரேகிங்ல இருந்து காப்பாத்தினதுக்கு!” என்றாள்.

 

    • “எப்படியும் உங்களைச் சந்திச்சி….”

 

    • இடை வெட்டினாள். “மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை! வாங்க மாலதி போலாம்!” என மாலதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைவாக நடந்தாள்.

 

    • வழியில் மாலதி திட்டினாள். “என்ன அகிலா! இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டியே!” என்றாள்.

 

    • “பின்ன எப்படி? அவர் வழியில குறுக்கிடாதேன்னு கொஞ்சம் முன்னால நீங்கதானே யோசன சொன்னிங்க?”

 

    • “அது சரி! அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?”

 

    • “அப்படி என்ன பேசிட்டேன்? உண்மையில நமக்கு அவசரம்தான? நின்னு கதை பேச நேரமில்லையே, அத சொன்னது குத்தமா?”

 

    • “குத்தமில்ல! ஆனா நாளைக்கு வாங்க ஓய்வா பேசலாம்னு ஏதாவது சொல்லியிருக்கலாமே!”

 

    • பல்கலைக் கழகத்தின் பழம்பொருள் காட்சியகம் மற்றும் ஓவியக் கூடம் வைக்கப் பட்டிருந்த கட்டிடத்தைத் தாண்டி துணைவேந்தர் இல்லத்தின் வழியாக பரந்த விளையாட்டுத் திடலை ஒட்டி அந்தத் தெற்கு வாசலுக்கான வழி நீண்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் கடலும் பினாங்குப் பாலமும் தெரியும். அகிலா பேச்சை மாற்ற வேறு வெற்றுப் பேச்சுக்களோடு நால்வரும் விரைந்து நடந்தார்கள்.

 

    • “நாளைக்குப் பேசலாம்” என்று சொல்லியிருக்கலாம்தான் என்று அகிலா நினைத்தாள். ஆனால் தேவையில்லை. நாளை வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இன்று ராத்திரி பத்து மணிக்கு மாணவர் இல்லத்திற்கு வெளியே காத்திருந்தால் போதும். ஜெசிக்காவுடன் ராத்திரி ராத்திரியாக உட்கார்ந்து பேசத் தெரிகிறதல்லவா? மூளை இருந்தால் நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் அகிலா.

 

    • *** *** ***

 

    • மலாய் ஜோகேட் இசை, இந்திய மேளமும் மேற்கத்திய டிரம்மும் தனி ஆவர்தனம், சீன வயலின் சோலோ எனக் கலவையாக ஒரு இசையை உருவாக்கி அதற்கு “இணைதல்” என்ற ஒரு தலைப்பையும் கொடுத்து உருவாக்கியிருந்தார் பேராசிரியர் கௌஸ். இசை மிகத் துரிதமாக இருந்தது. நடனத்திலும் ஏராளமான அசைவுகள். பத்து நிமிட நேரம்தான் நீடிக்கிறது என்றாலும் சரியாகச் செய்ய கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.

 

    • நாலாவது முறையாக ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பாதியில் நிறுத்தி “நோ, நோ, நோ” என்று கத்தினார் கௌஸ். “இப்படி வெட்டி வெட்டி அசைய வேண்டாம். இது என்ன கராத்தே என்று நினைத்துக் கொண்டீர்களா? இது நடனம். இது தற்காப்பு விளையாட்டல்ல. கலை. அசைவில் எவ்வளவு வேகம் இருந்தாலும் அது நளினமாக இயல்பாக இருக்க வேண்டும். ஒரு கிளை அசைவதைப் போல, ஒரு அலை வீசுவது போல, ஒரு கவிதையின் வரிகள் போல… ஓக்கே! இன்னொரு முறை! ரெடி… ரோல் மியூசிக்!”

 

    • ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த இசை கொஞ்சம் பின்னோக்கித் தள்ளப்பட்டு திடீரென்று ஆரம்பித்தது. சரியான இடத்தைப் பிடிக்க சில விநாடிகள் தயாரித்துக் கொண்டு அந்த ஆறு பேரும் தக்க இடத்தில் இசையோடு சேர்ந்து கொண்டு ஆடினார்கள்.

 

    • அகிலா இசையின் கட்டளைக்கு ஆடினாள். கேட்டுக் கேட்டு அந்த இசை மனப்பாடம் ஆகிவிட்டது. ஆகவே ஒவ்வொரு இசைக் குறிப்பையும் அவளால் முன்னறிந்து சரியான லயத்துடன் அதில் இணைய முடிந்தது. ஆனால் அதிகம் யோசிப்பதற்கு இடம் கொடுக்காத வேகமான இசை. கிட்டத்தட்ட உடல் உறுப்புக்கள் தானியங்கியாக ஆட வேண்டும். அந்த அளவுக்குப் பலமுறை பயிற்சி செய்ய வேண்டும்.

 

    • இசை தொடங்கப்பட்டு நடனம் நடந்து கொண்டிருக்கும் போது அகிலாவின் எல்லாச் சிந்தனைகளும் இயக்கங்களும் அதனோடு ஒன்றியிருந்தன. வேறு நினைப்புக்கு இடம் இல்லை. ஆனால் பயிற்சியில் ஏற்படும் சிறு சிறு இடைவெளிகளில் உறுப்புக்கள் களைத்து மனம் தளர்ந்து இருக்கும்போது கணேசனின் நினைவு குப்பென்று பற்றிக் கொண்டது.

 

    • தன் குறிப்பைப் புரிந்து கொண்டு வந்திருப்பானா? தனக்காகக் காத்திருப்பானா? பயிற்சி அறையிலிருந்து வெளியேறும்போது எதிர்ப்படுவானா? என்ற கேள்விகள் தோன்றின. அப்படி காத்திருந்தால் என்ன பேசுவது? ஆள் அங்கு இல்லாமல் போனால் எப்படி? அது தனக்குப் பெரிய ஏமாற்றமாகுமா? ஏன் ஏமாற்றமாக வேண்டும்? இந்த கணேசன் என்ற மாணவருடன் தான் பேச வேண்டிய விஷயம் ஒன்றுமில்லையே! அவன்தான் ஏதோ பேச வேண்டும் என்றான். வந்தால் பேசலாம். வராவிட்டால் தான் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்?

 

    • ஆனால் அடுக்கடுக்கான அந்த சிந்தனைப் படலங்களில் ஒன்று அவன் வர வேண்டும், அவனைச் சந்திக்க வேண்டும், அவனுடன் பேசவேண்டும் என்று விரும்பிக்கொண்டே இருந்தது. அவன் வராவிட்டால் தனக்குப் பெரிய ஏமாற்றம்தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆக இந்த சிந்தனைதான் முன்னணியில் நின்றது. பத்து மணிக்குப் பின் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.

 

    • “அகிலா – ரோஸ்மான் ஜோடி மற்றும் லத்தீப் – சபாரியா ஜோடி என்னைக் கவனியுங்கள். நானும் கேத்தரினும் முன்னால் வழிகாட்டுவோம். நீங்கள் சரியாக நான்கடி பின்னால் வலது பக்கமும் இடது பக்கமும் இருக்க வேண்டும். இரண்டு ஜோடிகளும் சமமான தூரத்தில் இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை அமைப்பு. மேடை முழுவதும் நாம் சுழன்று சுழன்று வந்தாலும் நடனத்தின் ஒரு பாகம் முடிந்து அடுத்த பாகம் ஆரம்பிக்கும் போது இந்த அமைப்புக்குத் திரும்பி விட வேண்டும்”

 

    • இன்னும் இரண்டு முறை ஆடி அமைப்பு சரியாக வருகிறதா என்று சோதித்தார்கள். அவளுடைய ஜோடியான ரோஸ்மான் அருமையான நடனக்காரன். பெண்களை விட அவனுடைய உடம்பு இன்னும் அருமையாக வளைந்தது. அவனுடைய முகத்தில் எப்போதும் ஒரு இளம் புன்னகை இருக்கும். ஆனால் அதிகம் பேசமாட்டான். அவனுடைய கவனம் முழுவதும் நடனத்தில்தான் இருக்கும். ரோஸ்மானோடு ஈடு கொடுத்து ஆடுவது அகிலாவுக்கு ஒரு சவாலாக இருந்தது.

 

    • அக்குளிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. ஆடும் வசதிக்காகப் போட்டிருந்த முழங்கால் வரையிலான லியோடார்ட்ஸ் வியர்வையை உறிஞ்சினாலும் இடையிலும் தொடையிலும் அந்தக் கசகசப்பு இருக்கத்தான் செய்தது. முகம், தோள் கைகள் எங்கணும் வியர்வை வழிந்தது. எப்போது போய் துண்டை எடுத்துத் துவட்டலாம் எனக் காத்திருந்தாள்.

 

    • பத்து மணி ஆகியும் பேராசிரியர் கௌஸ¤க்கு திருப்தி ஏற்படவில்லை. “சரி, •போர்மேஷன் ஒரு மாதிரியாக வந்துவிட்டது. ஆனால் அசைவுகளுக்கு இன்னும் மெருகூட்ட வேண்டும். ரோஸ்மான், நீ அருமையாக ஆடுகிறாய். ஆனால் பெண்கள் மாதிரி ஆடாதே. நீ ஆண். ஆடுவதில் ஆண்மை இருக்க வேண்டும். ஆகவே அசைவுகளை அளவாக வைத்துக் கொள்!”

 

    • அவனைத் தனியாகக் கூப்பிட்டு குனிந்து வளையச் சொல்லி அசைவுகளை அளவு படுத்தினார். அவன் டக்கென்று பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அகிலாவின் இறுகக் கட்டிய தலை முடிக்குள் ஈரம் கசகசத்தது. ரப்பர் ரிப்பனை அவிழ்த்து தலையை உதறி ஈரத்தை வழித்து விட்டாள்.

 

    • நேரம் பத்தே காலாயிற்று. அவளுக்கு உள்ளத்தில் கவலை படர்ந்தது. வந்திருப்பானா? வந்து பார்த்து காணவில்லையே என்று திரும்பிப் போயிருப்பானா?

 

    • ஏன் இந்தப் பேராசிரியர் இன்றைக்கு இப்படி நேரத்தைக் கடத்துகிறார் என்று எரிச்சல் பட்டாள். அப்புறம் அவன் வந்திருந்தால் என்ன? வந்து திரும்பியிருந்தால்தான் என்ன? வராமலே இருந்தால்தான் என்ன? ஏன் இப்படி மனம் அலைக்கழிக்கிறது? என்று தன் மீதே கோபப் பட்டாள்.

 

    • பத்து இருபதுக்குத்தான் கௌஸ் கடிகாரத்தைப் பார்த்தார். “ஓக்கே! நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. ஆகவே பயிற்சியைத் தவற விடாதீர்கள். அடுத்த வாரம் காஸ்டியூம் •பிட்டிங் இருக்கிறது. வந்து போட்டுப் பாருங்கள். சரி இன்றைக்குப் போதும்!” புறப்பட்டார்.

 

    • அவசரமாக தலைமுடியைச் சேர்த்து இறுக்கிக் கொண்டை போட்டாள். தொடர்ந்து ஊறிக் கோண்டிருந்த வியர்வையை மீண்டும் ஒரு முறை துண்டால் துடைத்தாள். கறுப்பு லியோடார்ட் சட்டைக்கு மேல் தனது வெள்ளை தொள தொள டீ சட்டையை அணிந்து கொண்டாள். “குட் நைட் ப்ரொ•பெசர்” என்று சொல்லி விட்டு விரைந்து இறங்கினாள்.

 

    • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8

8  அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 19

19  அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

13  நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும்