Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

13
 

    • நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும் பரசுராமனும் இருந்தது அவன் முற்றிலும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருந்தது. பரசுராமன் தலை குனிந்து இருந்தான். அகிலாவின் மீது அவன் பார்வை பட்ட போது அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். எப்படி இங்கே வந்தாள்? ஏன்?

 

    • இன்னொரு நாற்காலியில் ஓரமாக அவனுடைய விடுதியில் தங்கியிருக்கும் சீன மாணவரான லீ எம் பூன் இருந்தார். இவருக்கும் இங்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அதே போல பரசுராமன் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவரான டாக்டர் கான் என்பவரும் அங்கிருந்தார். நிலைமை மிகவும் குழப்பமாக இருந்தது. படபடப்பு மேலும் அதிகமாக உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைப் பார்த்தவாறு இருந்தான்.

 

    • டத்தோ சலீம் பேசினார். “இந்த விசாரணை இரண்டாவது கட்டமாக இன்று நடக்கிறது. இரண்டு விஷயங்களை இதில் விசாரிக்கப் போகிறோம். முதலில் பல்கலைக் கழக வளாகத்தில் ரேகிங் நடந்தது உண்மையா அல்லவா? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது. இரண்டாவதாக ராஜனும் அவர் நண்பர் வின்சன்டும் வெளியில் உள்ள ரகசியக் கும்பல் ஆட்களை உள்ளே கொண்டு வந்து கணேசனை மிரட்டியதாக கணேசன் கொடுத்துள்ள முறையீடு.

 

    • “இந்த விசாரணையில் புதிய தகவல்கள் வெளிப்பட்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு முன் காலை எட்டு மணிக்கெல்லாம் இன்னொரு முன் விசாரணையும் நடத்தப்பட்டது என்பதைப் புதிதாக வந்திருப்பவர்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். அந்த முன் விசாரணையில் பரசுராமன் என்ற முதலாண்டு மாணவர், அகிலா என்ற முதலாண்டு மாணவி, லீ எம் பூன் என்ற இறுதியாண்டு மாணவர் ஆகியோர் இதுவரை விசாரிக்கப் பட்டார்கள். அந்த விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களை இப்போது புகார்தாரர்களுக்கு, அதாவது கணேசன், ராஜன், வின்சன்ட் ஆகியவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன். அந்தத் தகவல்கள் உண்மையா அல்லவா என்பதைப் பற்றி அவர்கள் கருத்துரைக்கலாம்”

 

    • கணேசனுக்கு எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு முன்விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? எப்படி?

 

    • ராஜனும் வின்சன்டும் கூட முகங்களை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இங்கு நடப்பது அதிர்ச்சியாக இருப்பது போலத்தான் தெரிந்தது.

 

    • டத்தோ சலீம் தொடர்ந்தார்: “முதலில் பரசுராமனின் சாட்சியம். முதலில் அவர் தன்னுடைய முதல் முறையீட்டில் தான் கணேசன் பற்றிக் கொடுத்துள்ள ரேகிங் முறையீடு பொய் என இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ராஜன், வின்சன்ட் இவர்களின் வற்புறுத்தலினால்தான் தான் அந்த முறையீட்டைச் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். மேலும் கணேசன், அகிலா ஆகியோர் அந்த ரேகிங் நிகழ்ச்சி பற்றிக் கொடுத்துள்ள விளக்கங்கள்தான் சரி என ஒத்துக் கொண்டுள்ளார். அகிலாவிடமும் இது பற்றி விளக்கம் பெற்றிருக்கிறோம். பரசுராமன், அகிலா இருவரும் ரேகிங் எப்படி யாரால் நடத்தப்பட்டது என்பது பற்றியும் அதில் கணேசனின் பங்கு என்ன என்பது பற்றியும் ஒரே வகையான விவரங்களைத் தந்துள்ளார்கள்.

 

    • “இந்த விவரங்களின் படி ராஜன் அகிலாவை ஏமாற்றி ரேகிங் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரசுராமன் ஏற்கனவே அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கிறார். பரசுராமனை வற்புறுத்தி அகிலாவை முத்தமிடச் செய்தது ராஜனும் நண்பர்களும். கணேசன் அங்கு வந்து பரசுராமனை அடித்து வீழ்த்தி அகிலாவை மீட்டுச் சென்றுள்ளார்”

 

    • டத்தோ சலீம் நிறுத்தினார். கணேசனின் உள்ளத்தில் புதிய மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. எப்படி இவையெல்லாம் நிகழ்ந்தன? எந்தத் தெய்வம் தோன்றி என் தலைக்கு மேல் திரண்டிருந்த கருமேகங்களைப் போக்கியது? அகிலாவை நன்றியுடன் நோக்கினான்.

 

    • “பரசுராமனின் முதல் பொய் முறையீட்டுக்கு ராஜனும் வின்சன்டும் காரணமாக இருந்திருப்பதோடு பொய்யான சாட்சியங்களையும் வழங்கியிருக்கிறீர்கள் இன்று இதன் மூலம் தெரிகிறது. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

 

    • ராஜன் நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னான்: “டத்தோ, இந்தப் பரசுராமனை யாரோ மிரட்டி இப்படிப் பொய் பேச வைத்திருக்கிறார்கள். அவர் இப்போது சொல்வதுதான் பொய். பரசுராமனை கணேசன் ரேகிங் செய்தார் என்பதற்கு நான் பல சாட்சிகளைக் கொண்டு வர முடியும்!”

 

    • டத்தோ சலீம் பரசுராமனைப் பார்த்தார். “பரசுராமன். நீ உன்னுடைய முதல் முறையீட்டை இப்படி மாற்றிக் கொண்டதற்கு என்ன காரணம் என்று சொல்!” என்றார்.

 

    • பரசுராமன் தணிந்த குரலில் பேசினான்: “டத்தோ! நான் புதிய மாணவன். என் சீனியர்களுக்கு பயந்து நடுங்கியிருந்தேன். ராஜனின் குழு என்னைப் பிடித்து ரேகிங் செய்த போது அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் சொன்ன படியெல்லாம் செய்தேன். அப்புறம் இந்த ராஜன் அகிலாவைக் கொண்டு வந்து கேலி செய்து என்னைக் கூப்பிட்டு முத்தமிடச் செய்தார். அது எனக்கு அருவருப்பாக இருந்தாலும் அவர்களுக்குப் பயந்து செய்தேன். இதனால் அகிலா வருத்தப்பட்டு அழுதபோது நானும் வருந்தினேன். கணேசன் தலையிட்டு என்னை அடித்து அகிலாவைக் காப்பாற்றியது எனக்கு உண்மையில் பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த ராஜனும் நண்பர்களும் என்னை விடவில்லை. கையோடு அழைத்துப் போய் கணேசன் மீது முறையீடு கொடுக்கச் சொன்னார்கள். என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சக்தியில் நான் முற்றாகக் கட்டுப் பட்டிருந்தேன். என் மனசாட்சிக்கு மாறாகத்தான் அனைத்தையும் செய்தேன்” நிறுத்திக் கண்களைத் துடைத்தான்.

 

    • “இப்போது நீ மனம் மாறியது எப்படி?” டத்தோ சலீம் கேட்டார்.

 

    • “எனக்கு கணேசன் யாரென்று முன்னால் தெரியாது. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த பிறகு பலர் அவர் எவ்வளவு உதாரணமான மாணவர் என்றும் இவ்வளவு நல்ல மாணவர் தண்டிக்கப்படுவது எவ்வளவு பெரிய அநீதி என்றும் பேசிக் கொண்டதைக் கேட்ட போதுதான் நான் செய்த தவற்றால் ஒரு நல்ல உதாரணமான, குற்றமற்ற மாணவர் தண்டிக்கப்படப் போகிறார் என்று உணர்ந்தேன்”

 

    • “அதுதான் நீ உன் முறையீட்டை மாற்றிக் கொண்டதன் காரணமா?”

 

    • “இல்லை. ராஜனும் அவர் நண்பர்களும் எப்போதும் என்னைச் சூழ்ந்து கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். கணேசனுடனோ அவருக்கு அனுதாபமாக உள்ள மற்ற மாணவர்களுடனோ என்னைப் பழக விடவில்லை. ஆகவே நானும் பயந்து இருந்தேன்!” மௌனமானான்.

 

    • “அப்புறம்?”

 

    • “முந்தா நாள் நான் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவர் டாக்டர் கான் இரவில் என்னை அவருடைய அலுவலகத்திற்குக் கூப்பிட்டனுப்பினார். அங்கே நான் போனபோது பேராசிரியர் முருகேசுவும் அவருடன் இருந்தார். இந்த ரேகிங் கேஸ் பற்றி என்னிடம் பேச விரும்புவதாகப் பேராசிரியர் கூறினார். நான் ஏற்கனவே முறையீட்டில் தெரிவித்ததைத் தவிர வேறு புதிய தகவல்கள் இருந்தால் அதைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகவும் அதற்கு டாக்டர் கான் சாட்சியாக இருப்பார் என்றும் கூறினார். ராஜனின் அடக்குமுறைக்கு உட்படாமல் உண்மையைக் கூற இதுதான் சந்தர்ப்பம் என்று அவரிடம் எல்லா உண்மைகளையும் கூறினேன். பின்னர் அவர்கள் இருவரின் ஆலோசனையின் பேரில் இன்றைக்கு விசாரணையில் எல்லோர் முன்னிலையிலும் மீண்டும் உண்மைகளைக் கூற ஒப்புக் கொண்டேன்!” மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

 

    • “இப்போது ராஜனும் வின்சன்டும் என்ன சொல்கிறீர்கள்?”

 

    • ராஜன்தான் மீண்டும் பேசினான்: “டத்தோ! கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லோரும் செயல் படுகிறீர்கள். பேராசிரியர் தலையிட்டு பரசுராமனின் மனசைக் கலைத்திருக்கிறார்”

 

    • பேராசிரியர் பேசினார்: “டத்தோ! இந்தக் குற்றச்சாட்டு என் மேல் வரும் என்று முன்னறிந்துதான் நான் இந்தப் பரசுராமன் என்ற மாணவரிடம் தனியாகப் பேசாமல் அவருடைய விடுதித் தலைவரின் அனுமதியுடன் அவர் முன்னிலையில் பேசினேன். ஆகவே எந்த விதத்திலும் அவர் மனதைக் கலைக்கவில்லை!”

 

    • டாக்டர் கான் குறுக்கிட்டுச் சொன்னார்: “உண்மைதான் டத்தோ! பரசுராமன் எந்த வகையிலும் வற்புறுத்தப் படவில்லை. இந்த சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகத்தான் இருந்தார். எல்லா உண்மைகளையும் தாமாகத்தான் சொன்னார்”

 

    • ராஜனின் முகத்தில் கோபமும் குரோதமும் கொப்பளித்தன. அவனைச் சுற்றி ஒரு வலை இறுக்கப் படுகிறது என உணர்ந்து கொண்டான். ஆனால் இன்னும் அவன் விட்டுக் கொடுத்துவிடத் தயாராக இல்லை. “டத்தோ! ரேகிங் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களில் என் நண்பர்கள் இன்னும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் விசாரித்துப் பார்த்தால் நான் சொல்வதை உறுதிப் படுத்துவார்கள்! அவர்களையெல்லாம் நம்பாமல் அகிலாவும் கணேசனும் இப்போது இந்தப் பரசுராமனும் சொல்லும் பொய்யை ஏன் நீங்கள் நம்பவேண்டும்?”

 

    • “பரசுராமன்தான் இதில் முறையீடு செய்தவர். அவருடைய பேச்சுக்குத்தான் நாம் முதல் மதிப்பு அளிக்க வேண்டும். முதலில் பொய்யான குற்றச் சாட்டு ஏன் சுமத்தினார் என்பதற்கும், பின்னால் அதை மாற்றிக் கொண்டதற்குமான சூழ்நிலைகளை அவர் விளக்கியிருப்பதால் அவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் முக்கியம். இனி இதற்கு அதிகமான பேர்களை சாட்சிக்கு அழைக்கத் தேவையில்லை”

 

    • கோப்புகளைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து மீண்டும் பேசினார்: “நான் இப்போது கணேசன் செய்த முறையீடு பற்றி விசாரிக்க விரும்புகிறேன். கணேசனின் விடுதியில் ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களைக் கொண்டு வந்து மிரட்டியதாக கணேசன் கூறியுள்ளார். அது முற்றிலும் பொய் என ராஜன் மறுத்துள்ளார். ஆனால் கணேசன் சொன்ன அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் எனச் சொல்ல இப்போது ஒரு சாட்சி கிடைத்திருக்கிறார்”

 

    • கணேசன் நிமிர்ந்து உட்கார்ந்தான். யார் சாட்சி? இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்தது இந்த சாட்சி?

 

    • “லீ எம் பூன்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

 

    • லீ எம் பூன் நிமிர்ந்து உட்கார்ந்தார். “டத்தோ! எங்கள் விடுதியில் அந்த நாள் நான் இரவில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போய்விட்டதனால் வரவேற்பறையில் உள்ள செட்டியில் படுத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் எனக்குப் பின்னால் சிலர் பேசுகின்ற சத்தம் கேட்டது. தமிழிலும் மலாயிலும் மாறி மாறிப் பேசினார்கள். யார் என்று தலை உயர்த்திப் பார்த்தேன். கணேசனை அடையாளம் கண்டு கொண்டேன். ராஜனையும் எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு பேர் எனக்குத் தெரியாதவர்கள். அவர்கள் மாணவர்களா வெளி ஆட்களா என்று தெரியாது. ஆனால் கணேசன் சொன்னது போல அவர்கள் விடுதியின் வரவேற்பறையில் கொஞ்சம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தது உண்மைதான். எதைப்பற்றிப் பேசினார்கள் என எனக்குத் தெரியாது!”

 

    • கணேசன் மனதில் மீண்டும் மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. லீ எம் பூன் தன்னைக் காக்க வந்த தெய்வம் போலத் தெரிந்தான்.

 

    • “மிஸ்டர் லீ! இந்தச் சம்பவம் பற்றித் தெரிந்தவர்கள் விடுதித் தலைவருக்கு அறிவிக்க வேண்டும் என பல நாள் நோட்டீஸ் எழுதிப் போட்டிருந்ததாக அறிகிறேன். நீங்கள் இது வரை சொல்லாமல் இருந்தது ஏன்?”

 

    • “டத்தோ, நான் வீடமைப்பு, கட்டடவியல், திட்டமிடுதல் பிரிவில் நான்காம் ஆண்டு மாணவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் விடுமுறையின் போது கோல லும்பூரில் என்னுடைய ஆண்டிறுதி புரொஜெக்ட் செய்ய ஆரம்பித்தேன். அதை முடிக்க முடியவில்லை. இந்தப் பருவ ஆரம்பத்தில் புதிய பாடங்களைப் பதிவு செய்வதற்காகத் திரும்பினேன். பதிவு முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு என் டீனிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் கோல லும்பூர் போய் புரொஜக்டை முடித்து இரண்டு நாள் முன்புதான் வந்தேன். நேற்றுதான் நோட்டீஸ் பார்த்தேன். உடனே பெங்காவாவைச் சென்று பார்த்தேன். அவர் உங்களிடம் பேசி இன்று காலை விசாரணை இருப்பதைக் கூறி என்னை அழைத்து வந்தார்”

 

    • “சரி! நீங்கள் அந்த அறையில் இருந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?”

 

    • “நான் படுத்திருந்தேன். சத்தம் கேட்டவுடன் தலையைத் தூக்கி குஷன்களின் இடுக்கில் பார்த்து விட்டு இந்த இந்திய மாணவர்கள் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வார்கள், நமக்கு என்ன என்று மீண்டும் குத்துச் சண்டையில் ஆழ்ந்து விட்டேன்! அந்த நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கச் சந்தர்ப்பம் இருந்திருக்காது”

 

    • டத்தோ சலீம் ராஜனைப் பார்த்தார். “ராஜன், அன்றைக்கு நீங்கள் கணேசனின் விடுதிக்குப் போகவே இல்லை என்று சொன்னீர்களே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உங்களுடன் விடுதிக்கு வந்திருந்த அந்த மற்ற இருவர் யார்? வெளி ஆட்கள் என்பது உண்மையா?”

 

    • ராஜனின் முகம் கடுமையாக இருந்தது. ஆனால் வின்சன்ட் பயந்து ஒடுங்கி இருந்தான். ராஜன் சத்தமாகப் பேசினான்: “டத்தோ! எனக்கு எதிராக இங்கே பெரிய சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னைக் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். இது அத்தனையும் பொய். இந்த லீ கணேசனின் நண்பர். அவருக்குப் பொய் சொல்லிக் கொடுத்து தயார் படுத்தியிருக்கிறார்கள்!”

 

    • கணேசனின் விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் பேசினார். “டத்தோ! லீ எம் பூனும் கணேசனும் நண்பர்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் லீ எம் பூன் புரொஜக்ட் வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பிய பிறகு கணேசனைப் பார்க்கவே இல்லை. கணேசன் மீது இப்படி ஒரு விசாரணை இருக்கும் செய்தியே அவருக்குத் தெரியாது. நோட்டீஸ் போர்டில் நோட்டீஸ் பார்த்ததும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வரவேற்பறையில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் என்னைப் பார்க்க வந்தார். இதையெல்லாம் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் உங்களுக்குப் போன் செய்தேன்!”

 

    • ராஜன் மீண்டும் உரத்த குரலில் பேசினான். “டத்தோ! இதில் முக்கியமாக கணேசன் ரேகிங்கில் ஈடுபட்டாரா இல்லையா என்பதுதானே முக்கியம்? ரேகிங் நடந்த அன்று என்னோடு இருந்தவர்கள் யார் யாரென்று நான் உங்களுக்குச் சொல்லத் தயாராக இருக்கிறேன். இன்னும் நான்கு முதல் ஐந்து பேர் ரேகிங்போது நடந்தது உண்மை என்று சாட்சி சொல்லுவார்கள். நீங்கள் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்! அப்போதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் கணேசனின் சகாக்களும் நண்பர்களும் இட்டுக்கட்டியுள்ள கற்பனைக் கதைகள்தான்!” என்றான்.

 

    • டத்தோ சலீம் சுற்றிலும் பார்த்தார். “அப்படியானால் இந்த இரண்டு விடுதித் தலைவர்கள், பேராசிரியர் முருகேசு எல்லோருமே கூடிப் பேசி இப்படி ஒரு பொய்க்கதையை உக்களுக்கு எதிராக ஜோடித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்!”

 

    • “அப்படித்தான் தெரிகிறது!”

 

    • “உங்கள் நண்பர்கள் இன்னும் நாலைந்து பேரை அழைத்துக் கேட்டால் அவர்கள் உங்கள் சார்பாக உண்மை பேசுவார்கள்!”

 

    • “என் சார்பாக அல்ல! நடந்த உண்மையைச் சொல்லுவார்கள்!”

 

    • பரசுராமன் கை உயர்த்தித் தான் பேச விரும்புவதைத் தெரிவித்தான். டத்தோ அவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். “டத்தோ! அன்று ரேகிங் நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ராஜாவின் தலைமையில் உள்ள காராட் கேங் உறுப்பினர்கள். ஆகவே தங்கள் ரகசியக் கும்பல் விசுவாசத்தால் ராஜனின் கூற்றை ஆதரிப்பார்கள். அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். காராட் கேங்கிற்கு வெளியே உள்ளவர்களாக அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் நான், அகிலா மற்றும் கணேசன் மூவரும்தான்!” என்றான்.

 

    • டத்தோ சலீம் நிமிர்ந்து உட்கார்ந்தார். “பரசுராமன் சொல்லியதிலிருந்து நாம் விசாரிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த காராட் கேங் என்ற பெயரில் இந்திய மாணவர்கள் ரகசியக் கும்பல் ஒன்று இந்தப் பல்கலைக் கழகத்தில் இருக்கிறதா? ரித்வான்! உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

 

    • “இப்படி ஒரு கேங் இருப்பதாக வதந்திகள் கேள்விப் பட்டிருக்கிறேன் டத்தோ! ஆனால் இதுவரை அது நிருபிக்கப் படவில்லை. அப்படி இருந்தால் அந்தக் கும்பல் மிக ரகசியமாகச் செயல் படுகிறது என்றுதான் அர்த்தம்!” என்றார் பாதுகாப்புத் துறைத் தலைவர்.

 

    • “ராஜன்! இப்படி ஒரு கும்பலை நீங்கள் நடத்தி வருவது உண்மையா?” டத்தோ அவனை நோக்கி நேரடியாகக் கேட்டார்.

 

    • ராஜனின் முகம் இருண்டிருந்தது. “சுத்தப் பொய் டத்தோ. அப்படி ஏதும் கும்பல் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!”

 

    • “பரசுராமன், அப்படி ஒரு கும்பல் இருப்பதாக எப்படிச் சொல்லுகிறீர்கள்?”

 

    • பரசுராமன் நிதானமாகப் பேசினான்: “டத்தோ, இந்த காராட் கேங் என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது. அதற்கு ராஜன்தான் தலைவர். என்னையும் காராட் கேங்கில் வற்புறுத்திச் சேர்த்து விட்டார்கள். இதோ இருக்கிறது சான்று!” பரசுராமன் தன் பைக்குள் வைத்திருந்த ஒரு வெள்ளை டீ சட்டையை எடுத்துக் காட்டினான். அதில் “காராட் கேங்” என எழுத்துக்கள் அச்சிடப் பட்டிருந்தன. “இதை எனக்குக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னது ராஜன்தான்!” என்றான்.

 

    • டத்தோ ராஜனைப் பார்த்தார். “பொய் டத்தோ! எனக்கும் இந்த டீ சட்டைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை! இந்த மாதிரு டீ சட்டையை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம்”

 

    • பரசுராமன் மீண்டும் கை உயர்த்தினான். “ட்த்தோ, காரட் கேங் உறுப்பினர்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் இந்த டீ சட்டையை மேல் சட்டைக்குள் அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதிப்படி ராஜனும் வின்சண்டும் இந்தச் சட்டையை இப்போதும் அணிந்திருக்கிறார்கள்.

 

    • ”பொய்” என்று கத்தினான் ராஜன்.

 

    • “அது பொய் என்றால் உன் மேல் சட்டையை இப்போது அவிழ்த்து உள்ளா டீ சட்டையைக் காட்ட முடியுமா?” என்று கேட்டார் டத்தோ சலீம்.

 

    • ராஜன் மீண்டும் கத்தினான். “டத்தோ! இது எங்களுக்குப் பெரிய அவமானம். ஒரு பெண் உட்பட இத்தனை பேர் நிறைந்துள்ள இந்த அவையில் எங்களை சட்டையை அவிழ்த்துக் காட்டச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் அப்படிச் செய்ய மறுக்கிறோம்”

 

    • பொறியில் அகப்பட்டுக் கொண்ட எலி முட்டி மோதித் திரிகிறது என கணேசன் நினைத்துக் கொண்டான்.

 

    • டத்தோ சலீம் அமைதியாகக் கூறினார்: “சரி! அப்படியானால் பாதுகாப்புத் தலைவர் ரித்வான் அவர்களோடு நீங்கள் ஒரு தனி அறைக்குப் போய் அவருக்கு மட்டும் சட்டையை அவிழ்த்துக் காட்ட முடியுமா?”

 

    • “முடியாது! அப்படி எங்களை வற்புறுத்த உங்களுக்கு உரிமையில்லை! நீங்கள் உங்களுக்கு முன் உள்ள வழக்கை வாய் மூலமாகத்தான் விசாரிக்க வேண்டும். இந்த வகையான அவமானத்துக்கு நாங்கள் உட்பட மாட்டோம்” என்று கத்தினான்.

 

    • டத்தோ சலீம் ரித்வானோடு குனிந்து காதில் பேசினார். இருவரும் தலையசைத்துக் கொண்டார்கள். பிறகு டத்தோ சலீம் ராஜனைப் பார்த்துச் சொன்னார். “என்னுடைய கோரிக்கைக்கு நீங்கள் கட்டுப்பட மறுப்பதால் மூன்று பாதுகாவலர்களை இங்கு அழைத்து வந்து உங்களை இந்த அறையிலேயே தடுத்து வைக்கப் போகிறேன். தொடர்ந்து போலீசுக்குப் போன் பண்ணி அவர்களை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்புவிக்கப் போகிறேன். அது தவிர இதைச் சுமுகமாகத் தீர்க்கும் வழி எனக்குத் தெரியவில்லை!” என்றார்.

 

    • வின்சன்ட் திடீரென எழுந்து நின்றான். “டத்தோ அப்படிச் செய்யத் தேவையில்லை!” என்றான். அவர்கள் அனைவரின் முன்னும் சட்டைப் பொத்தான்களைக் கழற்றினான். உள்ளே இருந்த வெள்ளை டீ சட்டையில் “காராட் கேங்” எனக் கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது.

 

    • ——————

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23  அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 30ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 30

30  மாலையில் அறையில் உட்கார்ந்தவாறு நூலகத்தில் இருந்து கடன் பெற்று வந்த ஒரு கணினிப் பாடநூலிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் அகிலா. கொஞ்ச நேரம் நூலைப் பார்ப்பதும் அப்புறம் கொஞ்சம் வெறித்து ஜன்னல் கண்ணாடிகள் வழியாக வெளியில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 20

20  பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத்