Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

12
 

    • வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.

 

    • மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன் பிடித்ததும் அதற்கு மறுக்காமல் இடங் கொடுத்து அந்தத் தொடுதலில் கனிந்து அவள் அழுததும் அவள் அப்போது சொன்ன முடிவுகளும் அவனை வெகுவாக நெகிழ வைத்திருந்தன.

 

    • ஏன் அப்படிச் சொன்னாள் என்ற கேள்வி அவன் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. தான் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதை எண்ணி அவள் மனம் வருந்துவதே அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் அதற்கு மேலாக “உங்களுக்கு விதிக்கப் படும் எந்தத் தண்டனையையும் நானும் எனக்கு விதித்துக் கொள்வேன்” என இத்தனை இலேசாகச் சொல்லிவிட்டாளே!

 

    • “வேண்டாம் அகிலா!”

 

    • “என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!”

 

    • “எனக்காகவா?”

 

    • “உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!”

 

    • எத்தனை உன்னதமான பெண்! தனக்காக தன் ஒருவனுக்காக அவளுடைய வாழ்க்கையை எதிர்காலக் கனவுகளை இத்தனை எளிதாக அழித்துக் கொள்ளத் தயாராகி விட்டாளே! அவளுடைய அந்தத் தியாகத்தில் அவன் முற்றாக அதிர்ந்திருந்தான். அவளுடைய இந்தச் செயலுக்குத் தான் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுவிட்டதைப் போல உணர்ந்தான்.

 

    • அவன் பல பெண்களுடன் பழகியிருக்கிறான். சில பெண்களிடம் ஈர்ப்பு அடைந்து காதல் போல ஒன்று இடையிடையே மொட்டு விட்டு மொட்டு விட்டுக் கருகியிருக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் விளையாட்டுப் போல கண்ட கண்ட பெண்களை மனசால் காதலித்து வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி அந்த உணர்வுகளெல்லாம் காலத்தால் கரைந்து போனதுண்டு.

 

    • பெண்களில் அத்தை மகள் மல்லிகா ஒருத்தியுடன்தான் அவன் நெருங்கிப் பழகியிருக்கிறான். ஆனால் சிணுங்கிச் சிணுங்கிப் பேசும் மல்லிகா அவனுக்கு ஒரு பாசமுள்ள தங்கையாகவும் விளையாட்டுத் தோழியாகவும்தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு எந்த விஷயத்தையும் சீரியசாகப் பேசத் தெரியாது. எதைக் கேட்டாலும் “போ மாமா! எனக்குத் தெரியாது!” என்று சிணுங்குவாள். அவளுக்கு நடக்கத் தெரியாது. ஓடத்தான் தெரியும். மென்மையாகப் பேசத் தெரியாது. சத்தம் போட்டுத்தான் பேசத் தெரியும். அவள் சிரித்தால் வீடு அதிரும்.

 

    • “சனியனே! வயசு 17 ஆச்சு, இப்படி என்ன ஒரு சத்தமும் குதிப்பும் உனக்கு!” என்று அத்தை அவள் தலையில் குட்டுவாள். “ஓ” என்று அழுது கொண்டு “பாரு மாமா இந்த அம்மா இப்படி தலையில குட்டுது” என அவனிடம் வருவாள். அவள் அவள் தலையைத் தடவி ஆறுதல் சொல்லுவான்.

 

    • “கணேசு, இவள என்னால அடக்க முடியாது. நீதான் சீக்கிரமா இவளக் கட்டிக்கிட்டு இவளை அடக்கி ஒடுக்கிப் பொம்பிளையாக்கணும்!” என அத்தை சொல்லுவாள். “போம்மா!” என்று மீண்டும் சிணுங்குவாள் மல்லிகா.

 

    • அவர்களெல்லாம் வேறு மாதிரியான பெண்கள். இந்தப் பெண் – அகிலா – வேறு மாதிரியாக இருந்தாள். முகத்தில் ஒரு பெண்மைக்குரிய பொலிவு, பார்வையில் மனசை ஊடுருவுகின்ற கூர்மை, உடுத்தும் உடையில் எளிமையிலும் ஒரு கவர்ச்சி, பேச்சில் ஒரு உறுதியும் தெளிவும், நடையில் எப்போதுமே ஒரு நளினம். மனசுக்குள் அறிவு வெளிச்சமும் சிந்தனையும் உள்ளவளாக இருந்தாள்.

 

    • அந்தச் சில கணங்கள் நடந்த நிகழ்ச்சியினால் அவனுடைய இதயத்தின் ஆழத்தைத் தொட்டு, அவளுடைய நினைவுகள் உள்ளத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்ட இப்போதைய நிலையை அவன் இதுவரை அனுபவித்ததில்லை. இது அனுதாபமா? காதலா? தன் எதிர்காலத்தை நினைத்து பயந்ததில் எழுந்த பக்க விளைவா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் எதிர்கால இருளில் அவள் ஒரு ஒளி மிக்க விளக்காக இருந்தாள். அந்த இருளில் அவள்தான் ஒரு ஆறுதல் எனத் தெரிந்தாள். உள்ளம் “அகிலா, அகிலா” என ஸ்மரணை செய்து கொண்டிருந்தது.

 

    • இன்று காலையில் அவள் மாணவர் விவகாரப் பிரிவுக்கு வருவாள். அன்று அவன் பிடியிலிருந்து கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு போகுமுன் சொன்னாள்: “வெள்ளிக் கிழமை காலையில நான் விசாரணை அறைக்கு முன்னால வந்து உங்களுடைய தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சிக்கக் காத்திருப்பேன். அது தெரிஞ்சவுடனே டத்தோ சலீமைப் பார்த்து என்னுடைய முடிவை அறிவிப்பேன். வர்ரேன் கணேசன், வர்ரேன் ராகவன் அண்ண!”

 

    • தீர்மானமாகப் பேசி எழுந்து திரும்பிப் பார்க்காமல் போனாள். கணேசனைப் போலவே ராகவனும் அவளுடைய செயலில் வியந்திருந்தார். “என்ன அருமையான பண்புள்ள பெண்ணப்பா இது!” என்று கணேசனிடம் வியந்து சொன்னார்.

 

    • அதற்கப்புறம் அடுத்த இரண்டு நாட்கள் அவனால் அகிலாவை எங்கும் சந்திக்க முடியவில்லை. விரிவுரைக்குப் போகும் போதும் வரும் போதும் அவளைத் தற்செயலாகச் சந்திக்க மாட்டோமா என ஏங்கினான். மாணவர் இல்ல நடனப் பயிற்சி அறைகளில் இரவில் பயிற்சிக்கு வந்திருப்பாளே என்று மோட்டார் சைக்கிளில் அந்தப் பக்கம் சுற்றினான். காணவில்லை.

 

    • விரிவுரைகளில் மனம் செல்லவில்லை. புத்ததகங்களைத் திறந்தால் அவள் முகமும் கண்ணீருமே வந்து நின்றன. இரவு நேர மாணவர் சங்கக் கூட்டங்களுக்குச் சென்ற போதும் மனம் அவற்றில் ஒன்றவில்லை.

 

    • அகிலாவின் அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு எண்ணம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்பட்டு வந்தது. இந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் விஷயத்தில் என்னதான் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் தன்னையே பலி கொடுத்துக் கொள்ளும் முடிவில் அவன் உறுதியாக இருந்தாலும், இப்போது அவனுடைய முடிவு அகிலாவையும் பாதிக்கும் என உறுதியாகத் தெரிந்த பொழுது அவனுடைய மனவுறுதி கொஞ்சம் ஆடிப் போயிருந்தது.

 

    • வீறாப்பாக மன்னிப்புக் கேட்காமல் இருப்பதால் தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக்கப்பட்டால் அது தன் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் அகிலாவின் எதிர்காலத்தையும் பாதிக்கப் போகிறது என உறுதியாகத் தெரிந்தது. ஆகவே அவளைக் காப்பாற்றுவதற்காகவாவது தான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு குறைந்த பட்சத் தண்டனையை ஏற்றுக் கொண்டு தன் எதிர்காலத்தையும் அவளுடைய எதிர்காலத்தையும் காப்பாற்றிக் கொள்வது முக்கியம் என நினைத்தான்.

 

    • “ஒரு பெண்ணுக்காகவா உன் கொள்கையை விட்டுக் கொடுத்து உன் எதிரிகளின் சிரிப்புக்கு ஆளாகப் போகிறாய்?” என அவன் மனம் அவனுக்குச் சவால் விடாமல் இல்லை. ஆனால் அகிலா தனக்காகச் செய்யத் தயாராகிவிட்ட தியாகத்தை விட இது ஒன்றும் பெரிய தியாகம் அல்ல என்று பட்டது. மேலும் மனதில் முன்னிருந்த ஆத்திரமும் முரட்டுத் தனமும் இப்போது இல்லை. அது இப்போது கனிந்திருந்தது. அவன் வீரமும் பிடிவாதமும் தணிந்திருந்தன.

 

    • விடியற்காலையில் எழுந்து விசாரணைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது இந்த எண்ணங்கள் மேலும் மேலும் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தன. தலை குனியலாம். மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். தண்டனை ஏற்றுக் கொள்ளலாம். அகிலாவின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம். இன்னும் ஈராண்டுகள் அகிலாவுடன் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து படிக்கலாம். எல்லாம் அகிலாவிற்காக!

 

    • அவள் இந்த வெள்ளிக் கிழமை காலையில் தனக்காக வருவாள்; அவளைப் பார்த்துப் பேச முடியும் என்ற ஆசையுடன் எழுந்து குளிக்கப் போனான்.

 

    • *** *** ***

 

    • ஒன்பது மணிக்குத்தான் விசாரணை. கணேசன் எட்டரை மணிக்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்து விட்டான். மாணவர்கள் யாரையும் காணவில்லை. குறிப்பாக அகிலாவைக் காணவில்லை. ராஜாவையும் அவன் நண்பர்கள் யாரையும் காணவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.

 

    • ஆனால் அந்த அதிகாலை வேளையிலேயே பேராசிரியர் முருகேசுவின் காரும் பாதுகாவல் துறை அதிகாரி ரித்வானின் காரும் அங்கு நின்றிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மாணவர் பிரிவின் துணைப் பதிவாளர் முத்துராமன் அவர்களின் காரும் நின்றிருந்தது. அவனுடைய மாணவர் விடுதியின் பெங்காவா (தலைவர்) காரும் இருந்தது. இவர் ஏன் இங்கு வந்தார் என்று வியந்தான். அவர்களுடைய கூட்ட அறையை உற்றுப் பார்த்த போது கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளே விளக்குகள் எரிந்து கூட்டம் நடைபெறும் அறிகுறிகள் தெரிந்தன.

 

    • என்ன செய்கிறார்கள் இவ்வளவு அதிகாலையில்? ஒன்பது மணிக்குத்தானே கூட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னரே இத்தனை காலையில் இவர்கள் கூடிப் பேசும் காரணம் என்ன? அவன் கொஞ்சம் குழப்பமடைந்து சுற்று முற்றும் பார்த்தான். இந்த விஷயம் ரொம்ப கடுமையானதாகத்தான் தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.

 

    • எட்டே முக்கால் மணியளவில் ராஜனும் அவனுடைய சகாக்களும் ஆரவாரமாக வந்து இறங்கி ஒரு மர நிழலில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கணேசனின் பக்கம் எள்ளலான பார்வைகளும் சிரிப்புக்களும் வந்தன. ஆனால் அந்தக் கூட்டத்தில் பரசுராமனைக் காணோம்.

 

    • அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெசிக்கா வந்தாள். கணேசனை நோக்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “கணேசன். உனக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது. நேராக கல்வி அமைச்சரிடம் மேல் முறையீடு செய்வோம். இந்த காராட் கேங் பற்றி நான் தகவல்கள் சேகரித்துக் கொண்டு வருகிறேன். உள்ளூர் பத்திரிகைகளில் எழுதப் போகிறேன்!” என்றாள்.

 

    • “ஜெசிக்கா! இந்த முயற்சிகளெல்லாம் வீண் என்றுதான் தெரிகிறது. நான் விசாரணைக் குழுவிடம் மன்னிப்புப் கேட்டுக் கொள்வதாக முடிவு செய்து விட்டேன். இந்த நேரத்தில் அதுதான் எல்லாருக்கும் நல்லதாகத் தெரிகிறது!”

 

    • ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். “சரி! உன் விருப்பம். ஆனால் இந்தப் பல்கலைக் கழகத்தையும் இந்த காராட் கேங்கையும் நான் சும்மா விடப் போவதில்லை! நான் உன் பக்கம் இருக்கிறேன் கணேசன். உனக்கு நீதி கிடைக்கும் வரையில் நான் ஓயப் போவதில்லை” என்றாள். அவன் கைகளைப் பிடித்து அழுத்தினாள்.

 

    • கணேசன் தயங்கித் தயங்கிக் கேட்டான்: “அகிலா இன்று காலை வருவதாகக் கூறியிருந்தாளே! காணோமே! உனக்குத் தெரியுமா ஜெசிக்கா?”

 

    • ஜெசிக்கா முகத்தைச் சுளித்தாள். “அந்தப் பிசாசு பற்றி ஏன் இப்போது பேசுகிறாய்? நேற்றே அவளைச் சண்டை போட்டு என் அறையிலிருந்து துரத்தி விட்டேன். வேறு அறைக்குப் போய்விட்டாள். இன்றைக்கு அதிகாலையிலேயே உடுத்திக் கொண்டு வெளியே போனதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். எங்கே போனாளோ தெரியாது. அவள் ஏன் இங்கே வரவேண்டும் என எதிர் பார்க்கிறாய்? அவள் உனக்குச் செய்திருக்கும் கெடுதல் போதாதா?”

 

    • அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அகிலாவை அறையை விட்டு விரட்டுமளவுக்கு இந்த ஜெசிக்காவுக்கு அவள் என்ன கெடுதல் செய்தாள்? அந்தத் தீவிரமான வெறுப்பு அவனைப் புண் படுத்தியது. அகிலாவும் தானும் சந்தித்ததை பேசியதை அவளிடம் சொல்வது வீண் என்று தோன்றியது. இவளுடைய மனதில் அகிலாவைப் பொல்லாத எதிரியாக ஆக்கிக் கொண்டாள். அகிலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை இவளிடம் சொன்னால் அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும் என்று நினைத்து சும்மா இருந்தான்.

 

    • ஒரு வேளை ஜெசிக்காவே அகிலாவை இங்கு வரவிடாமல் தடுத்திருப்பாளோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. சீச்சீ அப்படி இருக்காது என்று சமாதானம் செய்து கொண்டான். ஜெசிக்கா அவளைத் தடுக்கக் காரணமில்லை. தடுத்திருந்தாலும் அகிலா பயந்து நின்று விடுபவள் அல்ல. ஏன் வரவில்லை? வருவாள், எப்படியும் கடைசி நிமிடத்தில் வந்து விடுவாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

 

    • ராகவன், ரவி ஆகியோரும் இந்திய மாணவர் பண்பாட்டுக் குழுவின் தலைவர், செயலவை உறுப்பினர்களும் வந்திறங்கினார்கள். கணேசனுக்கு ஆதரவாக அவன் பக்கம் வந்து நின்று பேசினார்கள். அங்கு ஒரு சிறிய கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. காராட் கேங் உறுப்பினர்கள் சிலரும் வந்து ராஜனின் அணியைப் பலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பரசுராமனைக் காணவில்லை. பாதுகாப்புத் துறையிலிருந்து சீருடை அணிந்த இரு காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்கள் சாலையை அடைத்துக் கொண்டு நிற்காமல் ஓரமாக நிற்கும்படி ஆலோசனை கூறினார்கள்.

 

    • அகிலாவைக் காணவில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு? அதிகாலையில் எங்கே போயிருப்பாள்? ஜெசிக்காவின் தொந்தரவு பொறுக்க முடியாமல் இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் வேண்டாம் என முடிவு செய்து விட்டாளோ? இத்தனை ஆதரவாகப் பேசிவிட்டுக் கடைசி நேரத்தின் மனதை மாற்றிக் கொண்டாளா? இந்த ஒரு முன் பின் தெரியாத யாரோவுக்காகத் தன் எதிர்காலத்தை ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாளா? ஒரு உணர்ச்சி மயமான வேளையில் பேசிய பேச்சுக்கள் உண்மை வாழ்வைப் பாதிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற அறிவு வந்துவிட்டதோ? இந்தப் பிரச்சினைகள் தாமாக முடிந்து காற்றில் பறந்து மறையும் வரை இதிலெல்லாம் பட்டுக் கொள்ளாமல் கொஞ்சம் ஒதுங்கியும் ஒளிந்தும் இருந்து விடலாம் என எண்ணி விட்டாளோ? தான்தான் அவள் சொன்னவற்றை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்கள் காதல் போன்ற அர்த்தமில்லாத அவஸ்தைகளை அனுபவித்தேனோ? மீண்டும் ஒரு முறை தான் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து இளிச்சவாயனாக ஆகியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான்.

 

    • ஒன்பது மணி கடந்து மேலும் பத்து நிமிடங்கள் ஆகின. கதவு இன்னும் திறக்கப் படவில்லை. உள்ளே கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பொறுமை இழந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

    • ஒன்பதே காலுக்குக் கதவு திறந்தது. துணைப் பதிவாளர் முத்துராமன் வெளியே வந்தார். தான் கையில் வைத்திருந்த பட்டியலிலிருந்து பெயர்களைப் படித்தார். “கணேசன், ராஜன், வின்சன்ட். மூவரும் உள்ளே வாருங்கள்!” என்றார்.

 

    • கணேசனின் நண்பர்கள் அவனுடன் கைகுலுக்கி “கூட் லக்” என்று வாழ்த்தி அனுப்பினார்கள். கடைசி முறையாக மீண்டும் ஒரு முறை அகிலா வந்து விட்டாளா என்று தலை தூக்கி சாலையின் இறுதி வரை பார்த்தான். அவள் வந்ததற்கான அல்லது வருவதற்கான அடையாளம் எதையும் காணோம். ஜெசிக்காதான் அவனை ஏக்கத்துடன் பார்த்து வழியனுப்பி வைத்தாள்.

 

    • ஏமாற்றத்தால் அவன் மனமும் தலையும் கனத்தன. அவன் எதிர் காலத்தை அர்த்தமற்ற இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் மிக மோசமான நாள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே கணேசன் மனம் படபடக்க அறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து ராஜனும் வின்சன்டும் நுழைந்தார்கள். முத்துராமன் அவர்கள் உட்கார வேண்டிய நாற்காலிகளைக் காட்டினார்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

2  எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 21ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 21

21  வளாகத்தில் முதல் பருவப் பரிட்சைக் காய்ச்சல் தணிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் காய்ச்சல் அனைவரையும் பிடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாண்டு மாணவர்கள் வீடு திரும்பத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு, குடும்பம், பழைய பள்ளி மாணவர்கள், அம்மாவின் சமையல் என்ற எண்ணங்கள்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 26ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 26

26  தீபாவளி அவன் நினைத்ததைவிட அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் அவன் முன் குவிந்து விட்ட வேலைகளும் இடையறாத அலைச்சலும்தான். அவனுடைய நிறுவன நிர்வாகப் பாடத்திற்காக இந்தப் பருவத்தில் கேஸ் ஸ்டடி (case-study) ஒன்று செய்ய ஒன்று