Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10

10
 

    • “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்” என்றார் பேராசிரியர் முருகேசு.

 

    • கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை மறுநாள் பார்க்க வேண்டும் என ராகவன் தொலை பேசியில் நேற்று கேட்ட போது முதலில் மறுத்து விட்டார்.

 

    • “நாளைக்கு முழுக்க எனக்கு வேலைகள் இருக்கு ராகவன். எட்டரை மணிக்கு டீன் என்னைச் சந்திக்கணும்னு சொல்லியிருக்காரு. ஒன்பது மணிக்கு நானும் டீனும் ஒரு மீட்டிங் போக வேண்டியிருக்கு. பதினொரு மணிக்கு விரிவுரை. மத்தியானம் டியுட்டோரியல். நாலு மணிக்கு என்னுடைய எம்.ஏ. மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வர்ராரு. ஆகவே நேரம் இருக்காது. அவசரம் இல்லைன்னா இன்னொரு நாளைக்கு வாங்களேன்!” என்றார்.

 

    • ராகவன் நிலைமையின் அவசரத்தை எடுத்துச் சொன்னார். கணேசனைப் பற்றிச் சொன்னார்.

 

    • “சரி. அப்ப ஒரே வழிதான் இருக்கு. நாளைக்கு காலையில ஏழரை மணிக்கெல்லாம் வந்திருங்க. எட்டரைக்குள்ள பேசி முடிக்கலாம்!” என்றார்.

 

    • “நீங்கள் எங்களுக்காக அத்தனை வெள்ளன வரவேண்டியிருக்கே!” என்று வருத்தப் பட்டார் ராகவன்.

 

    • “பரவாயில்ல! எப்படியும் வழக்கமா நான் எட்டு மணிக்கு என்னுடைய அலுவலகத்துக்கு வந்திருவேன். அப்பதான் மாணவர்கள் தொந்தரவு இல்லாம கடிதங்களையும் ஈமெயிலையும் பார்த்து பதில் எழுத முடியும். இந்த கணேசன் கேஸ் பத்தி நானும் கணேசன் கிட்ட பேசத்தான் வேண்டியிருக்கு. அதினால ஏழரைக்கு வந்திடுங்க. பேசுவோம்!” என்றார்.

 

    • ஏழரை மணிக்கு அவர்கள் மனிதவியல் கட்டடத்தை வந்தடைந்த போது கட்டடக் கதவு திறந்திருந்தாலும் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை. அலுவலக ஊழியர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. கார் நிறுத்துமிடங்கள் வெறுமையாகக் கிடந்தாலும் பேராசிரியருடைய கார் அங்கு ஒற்றையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் தங்களுக்காக அவர் வெள்ளென வந்து காத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

 

    • முதல் மாடிக்கு ஏறிச் சென்று அவருடைய அறைக் கதவை அவர்கள் தட்டிய போது “வாங்க, வாங்க!” என்று தமிழிலேயே பதில் சொன்னார்.

 

    • அவருடைய அறையை முழுவதுமாக புத்தக அலமாரிகள் அடைத்துக் கொண்டிருந்தன. ஆசிய வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால் இந்திய, சீன, தென்கிழக்காசிய வரலாற்று நூல்கள் ஏராளமாக இருந்தன. அவரே எழுதிய “தென்னிந்தியாவில் திராவிடர் கழகத்தின் தாக்கம்” என்ற ஆங்கில நூலின் பல பிரதிகள் இருந்தன. அதே போல “தென்கிழக்காசியாவில் இந்தியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள்” என்ற அவர் எழுதி தேவான் பஹாசாவால் பதிப்பிக்கப்பட்ட மலாய் நூலும் அந்த அலமாரி ஒன்றில் இருந்தது.

 

    • தமிழ் நூல்களும் ஏராளமாக வைத்திருந்தார். தமிழ் பக்தி இலக்கியத்திலும் சைவ சித்தாந்தத்திலும் ஆராய்ச்சி ஈடுபாடு உள்ளவராதலால் அந்த நூல்கள் ஏராளமாக இருந்தன. பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆதி சங்கரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றிய நூல்கள் இருந்தன.

 

    • நவீன இலக்கியத்திலும் ஈடுபாடு உள்ளவராதலால் பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு என பலவித நூல்கள் இருந்தன. சீலிங் உயரத்துக்கு அடிக்கப்பட்டிருந்த அலமாரிகளில் இன்னும் தடிப்புத் தடிப்பான தமிழ் ஆங்கில புத்தகங்கள் இருந்தன. அவற்றை எடுக்க ஏறுவதற்காக ஒரு ஆளுயுர ஏணியும் அவர் அறையில் இருந்தது.

 

    • கம்ப்யூட்டர் திரையில் ஏதோ ஈமெயிலைப் படித்துக் கொண்டிருந்தவர் அதை மூடிவிட்டு அவர்களைப் பார்த்தார்.

 

    • அவருடைய நாற்காலிக்கு மேலாக ஒரு பெரிய புத்தர் படம் தொங்கிக் கொண்டிருந்தது. தாமரையில் அமர்ந்து மடிமேல் திறந்த இடது உள்ளங்கை மேல் வலது புறங்கை அமர்த்தி கண்களை மூடி தியான நிலையில் அமைதி தவழும் முகத்தோடு தங்க வண்ணத்தில் அந்த புத்தர் இருந்தார். கணேசன் முன்பு ஓரிரு முறை அவரைப் பார்க்க அந்த அறைக்கு வந்திருந்த போது அந்தப் படத்தைப் பார்த்து தன் உள்ளத்திலும் பக்தியும் பரவசமும் பரவுவதை அனுபவித்திருக்கிறான்.

 

    • வணக்கம் சொல்லி அமர்ந்தபின் ராகவன் சொன்னார்: “உங்க அறையில இவ்வளவு தமிழ் புத்தகங்கள் வச்சிருக்கிறிங்களே சார். பார்க்க சந்தோஷமா இருக்கு!”

 

    • “அப்படியா ராகவன்! ஆனா அடிக்கடி குறிப்பு பாக்கிறதுக்காக உள்ள புத்தகங்கள மட்டும்தான் இங்க வச்சிருக்கேன். மற்ற தமிழ் புத்தகங்கள்ளாம் வீட்டில. அது அலமாரி அலமாரியாக குப்பை குப்பையா கிடக்கு!” என்றார் சிரித்துக் கொண்டே.

 

    • “சரி வந்த விஷயம் சொல்லுங்க! எப்படி நல்ல மாணவரான கணேசன் இந்த மாதிரி ஒரு இக்கட்டில மாட்டிக்கிட்டார்?” அவர் வெற்றுரையாடலில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; நேராக விஷயத்துக்கு வர விரும்புகிறார் என்பதை கணேசன் புரிந்து கொண்டான்.

 

    • கணேசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான். “உண்மையில நான் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல பேராசிரியர் அவர்களே! அன்றைக்கு நான் விசாரணையில சொன்னது அத்தனையும் உண்மை. அதே போல அந்தப் பையன் பரசுராமன் சொல்றதும் அவனுடைய கூட்டாளிகள் சொல்ற சாட்சியமும் பொய். ராஜனும் அவனுடைய காராட் கேங் நண்பர்களும் பரசுராமன மிரட்டி வச்சிருக்காங்க. அந்த பயத்திலதான் அப்படிச் சொல்றார். நான் நிரபராதி. ஒரு முதலாண்டுப் பெண்ணுக்கு நல்ல மனசோட உதவி செய்யப் போய் சந்தர்ப்ப வசத்தால என்னுடைய உண்மைய நிருபிக்க முடியாம இருக்கிறேன்!”

 

    • சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின. இந்தப் பேராசிரியரை நட்புச் சூழ்நிலையில் சந்தித்துச் சுமுகமாகப் பேசிக்கொண்டிருந்த காலங்கள் போய், இப்போது முறையீடு செய்து கெஞ்ச வேண்டிய நிலைமை அவனை உள்ளுக்குள் துன்புறுத்தியது. தலை குனிந்து துடைத்துக் கொண்டான். அப்போதுதான் பேராசிரியர் முருகேசு சொன்னார்: “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்”

 

    • அவர் அந்தப் பல்கலைக் கழகத்தில் தொடக்கத்திலிருந்தே வேலை பார்த்து வந்திருக்கிறார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் அடிப்படை பட்டப் படிப்பை முடித்தபின் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயிற்சி விரிவுரையாளராகச் சேர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்புக்கும் முனைவர் பட்டப் படிப்புக்கும் உபகாரச் சம்பளங்கள் பெற்று வெளிநாடுகள் சென்று படித்து முடித்தவர். அதே பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், பின்னர் முழுப் பேராசிரியராகவும் பதவிகள் பெற்றவர். இப்போது வரலாற்றுத் துறைக்குத் தலைவராகவும் உள்ளவர்.

 

    • தொடக்க காலம் முதலே இந்திய மாணவர்களோடு தொடர்பு உள்ளவர். தான் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த சில ஆண்டுகளைத் தவிர்த்து பிற எல்லா ஆண்டுகளிலும் இந்திய பண்பாட்டுச் சங்கத்திற்குத் தொடர்ந்து ஆலோசகராக இருந்து வந்திருக்கிறார்.

 

    • “தொடக்க காலத்தில இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ர மாணவர்கள் தமிழ் அவ்வளவாத் தெரியாதவங்களா இருந்தாங்க. இருந்தாலும் தமிழ் பண்பாட்டின் மேல ஆர்வம் உள்ளவங்கதான். பெரும்பாலும் நடுத்தர வகுப்புப் பிள்ளைகள். ஆனா அண்மையில தமிழ் பள்ளிக் கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கி தேசியப் பள்ளிகளுக்குப் போய் முன்னேறின தொழிலாளர் வகுப்புப் பிள்ளைகள் பலர் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வரத் தொடங்கியிருக்காங்க. இது பாக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

 

    • “தமிழ்ப் பள்ளிக்கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கிய முதல் தொகுதி பல்கலைக் கழக மாணவர்கள் ரொம்ப பணிவுள்ளவர்களாகவும் மரியாதையுள்ளவர்களாகவும் மொழி கலாச்சாரத்தில ரொம்ப பிடிப்பு உள்ளவங்களாகவும் இருந்தாங்க. ஆனா போகப் போக இந்த நிலமை மாறி வர்ரத நான் பார்க்கிறேன்.

 

    • “இப்ப வர்ர தமிழ் மாணவர்களுடைய பழக்கவழக்கங்கள் ரொம்ப கொச்சைத் தனமா இருக்கு. இதை நான் இடை நிலைப் பள்ளிகளிலியும் பார்க்கிறேன். இடைநிலைப் பள்ளிகள்ள இவங்க நடத்திர கலைநிகழ்ச்சிகள், வேற நடவடிக்கைகள் எல்லாத்திலியும் ஒரு கொச்சைத் தனம் இருக்கு. ரொம்ப கீழ்த்தரமான பேச்சுகள், சினிமா மேல பைத்தியம், சினிமாவ தங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்கள்ள காப்பியடிக்கிறது, சிகரெட் குடி போன்ற பழக்கங்கள் எல்லாம் அதிகரிச்சி வருது. அந்தப் பழக்க வழக்கங்களையே பல்கலைக் கழகத்துக்கும் கொண்டு வர்ராங்க”

 

    • நிறுத்தி ஒரு பெருமூச்சு விட்டார். பொதுவாகச் சொல்லுகிறாரா அல்லது தன்னைத்தான் குற்றவாளியாக்கிக் கூறுகிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கணேசன் இருக்கையில் நெளிந்தான்.

 

    • “அது மட்டும் அல்ல. பிறர் அவங்களுக்குப் புத்திமதி சொல்றதையும் அவங்க வெறுக்கிறாங்க. விரிவுரையாளர்கள் உட்பட யார் மேலயும் அவர்களுக்கு மரியாதை இல்லாம போச்சி. ஆகவே போன சில ஆண்டுகளாக என்னுடைய ஆலோசனய கூட அவங்க செவி மடுக்கிறது கிடையாது. யாரும் நம்ம ஒண்ணும் செய்ய முடியாது என்கிற ஒரு திமிரான போக்கு இருக்கு! இதுவே எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கு”

 

    • கணேசனை நேராகப் பார்த்தார். பேசினார்: “இந்த நிலைமையிலதான் கணேசனப் போல அமைதியான புத்திசாலித்தனமான மரியாதையுள்ள மாணவர்களப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”

 

    • திரும்பி ராகவனைப் பார்த்தார். “உங்களையுந்தான் ராகவன். பல ஆண்டுகளாக வேல செய்து வருமானம் தேடி குடும்பத்த அமைச்சிக்கிட்ட நிலைமையிலும் படிப்புக்காக வேலய விட்டுட்டு குடும்பத்த விட்டுட்டு வந்திருக்கிற உங்களயும், நீங்க படிப்பில காட்டிற அக்கறையையும் நான் ரொம்ப மதிக்கிறேன்!”

 

    • மீண்டும் கணேசன் பக்கம் திரும்பினார்: “இந்த எண்ணத்தோட இருக்கும் போதுதான் கணேசன் ரேகிங்கில பிடிபட்டார்னு செய்தி வந்தது. எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்திச்சி. உண்மையா பொய்யான்னு முடிவு செய்ய முடியில. அப்படி உண்மையிலேயே நடந்திருந்து இப்ப பொய் சொல்லித் தப்பிக்க நினைச்சிங்கன்னா இனி இந்திய மாணவர்கள் மேல உள்ள எல்லா நம்பிக்கையையும் நான் இழந்திருவேன்!”

 

    • சொல்லி நிறுத்தினார். ராகவனும் கணேசனும் வாயடைத்துப் போயிருந்தனர். அவர் உள்ளம் இந்த நிகழ்ச்சியால் எவ்வளவு புண்பட்டுப் போயிருக்கிறது என்பது கணேசனுக்குப் புரிந்தது.

 

    • குரல் தளும்பச் சொன்னான்: “சார்! என்னப் பத்திய உங்களுடைய நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி. அந்த நல்லெண்ணத்துக்குப் பாதகமான காரியம் எதையும் நான் செய்யில. இது சத்தியம்”

 

    • ராகவன் பேசினார்: “சார்! இந்த காராட் கேங் பையன்களுக்கு கணேசன் அல்லது என் போன்றவர்கள் மேல எப்போதுமே கோபம், பொறாமை. ஏன்னா அவங்களுடைய அட்டூழியங்களுக்கு நாங்க தடையா இருக்கிறோம்கிறதுக்காக. இந்த முறை கணேசன் அவங்ககிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு. அவங்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகிட்டாரு. இந்த விஷயம் துணைவேந்தர் வரைக்கும் போயிட்டதினால அவருடைய நண்பர்களான நாங்கள் வருத்தத்தோட அனுதாபப் பட்றதத் தவிர வேற எதுவும் செய்ய முடியல. அதினாலதான் உங்க உதவிய நாடி வந்திருக்கோம்” என்றார்.

 

    • பேராசிரியர் சற்று நேரம் யோசித்தவாறு இருந்தார். கணேசனைப் பார்த்தார். “கணேசன். நீங்க சொல்றத உண்மைன்னே வச்சிக்குவோம். ஆனா உங்கள் பக்கம் சாட்சிகள் இல்ல. ராஜன் வெளி ஆட்களக் கொண்டு வந்து உங்கள மிரட்டினதாக நீங்க சொன்னதுக்கும் சாட்சிகள் யாரும் இதுவரையில இருக்கிறதா தெரியில. இந்த நிலையில எத வச்சி உங்கள காப்பாத்திறதுன்னு எனக்கும் தெரியில”

 

    • நிறுத்தி யோசித்தார். பின் தொடர்ந்தார்: “என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் கணேசன், டத்தோ சலீமிடம் பேசிப் பார்க்கிறதுதான். நீங்கள் சந்தர்ப்ப வசத்தால இதில மாட்டிக்கிட்டிங்கன்னு சொல்றேன். உங்களுடைய நல்ல குணத்தப்பத்தி சொல்றேன். நீங்கள் இந்தத் தவறை செஞ்சிருக்க மாட்டிங்க அப்படிங்கிற என்னுடைய நம்பிக்கையையும் சொல்றேன். அதற்கு மேல அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!” என்றார்.

 

    • கணேசன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். “மறு விசாரணை இந்த வெள்ளிக்கிழமை வச்சிருக்காங்க சார்!” என்றான்.

 

    • “தெரியும். எனக்கும் சொல்லிட்டாங்க. நான் இன்றைக்கே டத்தோ சலீம்கிட்ட பேசிறேன். நீங்க நாளக்குக் காலையில எட்டு மணிக்கு மீண்டும் வந்து என்னப் பாருங்களேன். என்ன பதில்னு சொல்லிட்றேன்!” என்றார்.

 

    • சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.

 

    • அவருடைய டெலிபோன் அடித்தது. எடுத்துப் பேசிவிட்டு வைத்தார். “டீன் வந்திட்டாரு. அவரப் பார்க்கிற நேரமாச்சி!” என்றார்.

 

    • ராகவனும் கணேசனும் எழுந்து புறப்படத் தயாரானார்கள். அவர்கள் கதவைத் திறக்கும்போது பேராசிரியர் கூறினார்: “மனத்த தளரவிடாதிங்க கணேசன். உண்மை வெல்லுங்கிறதில நம்பிக்கையோட இருங்க!”

 

    • “நன்றி சார்!” என்று வெளியே வந்து கதவைச் சாத்தினான் கணேசன். அவனுடைய உள்ளத்தில் புதிய நம்பிக்கைகள் தளிர் விட்டிருந்தன.

 

    • *** *** ***

 

    • அன்று இரவு ஐசெக் சங்கத்தின் செயலவைக் கூட்டம் இருந்தது. அந்த சங்கத்தின் பொருளாளர் என்ற முறையில் அவன் கட்டாயமாக அதில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டில் தென்கிழக்காசிய பல்கலைக் கழகத்தில் உள்ள பொருளாதார மாணவர்களின் கருத்தரங்கம் ஒன்று அறிவியல் பல்கலைக் கழகத்தில் நடத்த ஏற்கனவே திட்டங்கள் முடிவடைந்திருந்தன. ஆகவே அதைப்பற்றி அன்று முக்கியமாகப் பேசவேண்டியிருந்தது. ஐசெக்கின் செயலாளரான ஜெசிக்கா போன வாரம் அவனுக்கு நினைவூட்டியிருந்தாள்.

 

    • மாணவர் சங்கக் கட்டடத்தின் ஐசெக் அறைக்கு அவன் எட்டு மணியளவில் வந்த போது ஜெசிக்கா ஏற்கனவே வந்து காத்திருந்தாள். கணேசனைப் பார்த்தவுடன் “கணேசன், இங்கே வா, இங்கே வா! உனக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன்!” என்று கத்தினாள்.

 

    • அவளருகில் சென்று உட்கார்ந்தான். “என்ன செய்தி ஜெசிக்கா?” என்று கேட்டான்.

 

    • “கணேசன்! நேற்று நடந்த மாணவர் பேராளர் மன்றக் கூட்டத்தில் உன்னுடைய ரேகிங் கேஸ் பற்றி நான் பேசினேன். நீ அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டிருப்பது பற்றி துணைவேந்தருக்கு கண்டனக் கடிதம் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். மாணவர் பேராளர் மன்றத்தில் உள்ள 22 பேரில் மூன்றில் இரண்டு பங்கு – அதாவது 15 பேர் – கையெழுத்துப் போட்டால் அப்படி ஒரு கடிதம் எழுதலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்றே ஆறு பேரிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஒன்பது பேர் கையெழுத்து வாங்கிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்!” என்றாள் உற்சாகமாக.

 

    • கணேசனுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. இப்படி மாணவர்கள் ஆதரவை வலிந்து பெற்று வளாகம் முழுவதும் தம்பட்டம் அறைந்து தன் வழக்கு வெல்லுவதை அவன் விரும்பவில்லை. “ஏன் இந்த வீண் வேலை ஜெசிக்கா? இப்படியெல்லாம் செய்தால் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எரிச்சல்தான் ஏற்படும்!” என்றான்.

 

    • “ஏற்படட்டுமே! இதை இப்படியே விடக் கூடாது. உன்னை இந்தத் தீய சக்திகள் வீழ்த்தி விட நான் அனுமதிக்க மாட்டேன். இதில் உனக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் மாணவர்களைத் திரட்டி ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தப் போகிறேன்!” என்று கத்தினாள். ஐசெக் கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற மாணவர்கள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். கணேசனுக்குத் தன் விஷயம் இப்படி உரத்த குரலில் பேசப்படுவது கூச்சமாக இருந்தது.

 

    • ஐசெக் தலைவர் லீ யென் லாவ் மேசையைத் தட்டினார். “ஓக்கே, ஓக்கே! நாம் இன்று பேசி முடிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளன. வீண் பேச்சில் நேரத்தை விரயமாக்க வேண்டாம். கூட்டத்தை ஆரம்பிப்போம். சிலாமாட் டத்தாங் உந்தோக் செமுவா!” என்று நல்வரவு கூறிக் கூட்டத்தைத் தொடங்கினார்.

 

    • தன்னுடைய விசாரணை பற்றிய விஷயம் ஜெசிக்காவைத் தவிர மற்றவர்களுக்கு “வீண் பேச்சாக” இருப்பது கணேசனுக்குப் புரிந்தது.

 

    • பத்து மணிக்கு அவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஜெசிக்கா அவனுடன் சேர்ந்தே வெளியே வந்தாள். மாணவர் சங்கம் மற்றும் கலாச்சார மண்டபம் கொண்ட அந்த இணைக் கட்டடம் இரவில் வெறுமையாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த மாணவர் கேன்டீன், கம்ப்யூட்டர் விற்பனை மையம், பல்கலைக் கழகக் கூட்டுறவு மினிமார்க்கெட், கூட்டுறவு புத்ததகக் கடை, பேங்க் சிம்பானான் நேஷனல் ஆகிய எல்லாமும் அடைபட்டுக் கிடந்தன. மாணவர் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த ஏராளமான அறைகளில் ஓரிரண்டு அறைகளில் மட்டுமே விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஓரறையிலிருந்து ஜோகெட் இசை வந்து கொண்டிருந்தது.

 

    • கட்டடத் தொகுதியின் மையத்தில் புல் வெளியும் பூச்செடிகளும் நட்டு அழகு படுத்தியிருந்தார்கள். ஈசல்கள் சூழ்ந்து அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

 

    • கட்டடத்தின் முன்னிருந்த சாலையை வாகனங்கள் போகமுடியா வண்ணம் அடைத்து வண்ணச் செங்கற்கள் பதித்து நடக்க மட்டுமே அனுமதிக்கப்படும் பாட்டையாக ஆக்கியிருந்தார்கள். அந்தச் சாலையின் ஓரத்தில் பழைய மழை மரங்கள் பிரம்மாண்டக் குடைகள் விரித்திருந்தன. அவற்றின் கீழ் இருந்த சக்தி மிகுந்த மின் விளக்குகள் மரத்தின் மீது ஒளி வீசி இலைகளை ஒளி-நிழல் காட்சிகளாக மாற்றியிருந்தன.

 

    • தன் மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்குத் திரும்ப விரைந்த கணேசனை கைபிடித்து நிறுத்தினாள் ஜெசிக்கா. “என்ன ஜெசிக்கா?” என்று கேட்டான்.

 

    • “இப்படிக் கொஞ்ச நேரம் உட்காரலாம் கணேசன். நாளைக்கு யார் யாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது பற்றிப் பேசவேண்டும்!” என்று அவனை இழுத்துக் கொண்டு கலாச்சார மண்டபத்திற்குச் செல்லும் படிகளில் முதல் படியில் அவனை உட்கார வைத்து அவளும் அவனுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.

 

    • “ஜெசிக்கா! நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு நான் பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க வேண்டும். இன்றிரவு அறைக்குப் போய் நண்பனிடமிருந்து கடன் வாங்கி வைத்துள்ள பாடப் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் பார்த்துக் குறிப்பெழுத வேண்டும். அப்புறம் மூன்று நான்கு மணி நேரமாவது தூங்க வேண்டாமா?” என்றான்.

 

    • ஜெசிக்கா அவனை முறைத்தாள். “அதெல்லாம் சின்ன விஷயம். நான் உன் வாழ்க்கையைக் காப்பாற்றப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். நீ புத்தகம் படிப்பது பற்றியும் தூங்குவது பற்றியும் பேசுகிறாயே!” என்றாள்.

 

    • மேலும் சொன்னாள். “உன் நலனுக்காக நான் எவ்வளவு முயற்சிகள் எடுத்திருக்கிறேன் என்பது நாளைக்குக் காலையில் மேலும் உனக்கு விளக்கமாகத் தெரியப் போகிறது” என்றாள்.

 

    • “ஏன்! நாளைக்குக் காலையில் அப்படி என்ன அதிசயம் நிகழப் போகிறது?” என்று புரியாமல் கேட்டான்.

 

    • “பொறுத்து பார். தானாகத் தெரியும்” என்றாள்

 

    • கணேசனுக்கு அவளின் முயற்சிகள் ஒன்றும் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை அதற்குரிய கண்ணியத்தோடு தீர்க்காமல் போருக்குத் தயாராவது போல அவள் பேசுவது அதிகமாகப் பட்டது. இருந்தாலும் தன் மேல் உள்ள அன்பினால் அவள் செய்வதை உணர்ந்து அடங்கிக் கேட்டான்.

 

    • தன்னுடைய கோரிக்கைக்குச் சார்பாக யார் யாரெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதை அவனுக்குச் சொன்னாள். இன்னும் சிலர் பேரைச் சொல்லி நாளைக்கு அவர்களை எப்படியாவது பார்த்துப் பேசி கையெழுத்து வாங்க வேண்டும் என்றாள். “இதோ பார், இந்த சுதாகரன். இவரும் நிர்வாகத் துறை மாணவர்தானே? இந்திய மாணவராக இருப்பதால் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நீ அவரைப் பார்த்து நாளைக்குப் பேசேன்!” என்றாள்.

 

    • சுதாகரனை அவனுக்குத் தெரியும். ஆனால் அவர் மற்ற இந்திய மாணவர்களோடு சுமுகமாகப் பழகும் மாணவர் அல்ல. எப்போதும் ஒதுங்கியே இருப்பார். கொஞ்சம் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிய முற்றாகத் தமிழ் பேசத் தெரியாத கொஞ்சம் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அவரைப் பார்ப்பதும் அவரைத் தனக்கு உதவும்படி கேட்பதும் அவனுக்குப் பிடித்த விஷயங்களாக இல்லை.

 

    • “ஜெசிக்கா! சுதாகரனோடு எனக்கு சுமுகமான பழக்கமில்லை. அவர் என்னை மதித்து இதில் கையெழுத்துப் போடுவார் என்று தோன்றவில்லை” என்றான்.

 

    • ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். “ஏன் நீங்கள் இந்திய மாணவர்கள் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்களோ தெரியவில்லை. எங்கள் சீன மாணவர் ஒருவருக்கு இப்படிப் பிரச்சினை வந்தது என்றால் நாங்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் கூட எல்லாவற்றையும் மறந்து ஒன்றாகி விடுவோம், தெரியுமா?” என்றாள்.

 

    • தெரியும். தெரிந்த விஷயம்தான். இப்படிச் சீனர் மலாய்க்காரரின் ஒற்றுமை நிதர்சனமாகக் கண்முன் இருந்தும் இந்தியர்கள் மட்டும் எந்த விஷயத்திலும் ஒரு குரலாக இணைய முடியாததன் ரகசியம் அவனுக்கும்தான் விளங்கவில்லை. அது விளங்கியிருந்தால் அவனுக்கு இப்போது நிகழ்ந்திருக்கும் இக்கட்டுக்கே இடம் இருந்திருக்காது. ஒரு இந்திய மாணவியை ஒரு இந்தியத் தறுதலைக் கூட்டம் மானபங்கப் படுத்துவதும் அவளைக் காப்பாற்றப்போன இன்னொரு இந்தியனை இப்படி எதிர்காலத்தை இருளடையச் செய்யும் ஆபத்தில் மாட்டிவிட்டுக் கைகொட்டிச் சிரிப்பதும் இந்தியர்களிடையேதான் நடக்கும் என நினைத்துப் பார்த்தபோது அவமானமாக இருந்தது.

 

    • ஜெசிக்கா தன் பட்டியலைப் பார்த்துத் தொடர்ந்து யாரைப் பார்க்க வேண்டும் எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு வீயூகங்களை வகுத்துக் கொண்டிருந்தாள். மாடியில் உள்ள அறையில் ஜோகெட் இசை நின்று விளக்குகள் அணைந்தன. ஒரு பத்துப் பதினைந்து மாணவர்கள் கலகலவென பேசிக்கொண்டு இறங்கி வந்து அவர்களுக்கு முன்னால் நடந்தார்கள். அந்தக் கூட்டத்தில் வியர்வையைத் துடைத்தபடி அகிலாவும் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர்களைப் பார்க்காதது போல நேராக நடந்தாள்.

 

    • முழங்கால் வரையிலான தொடைகளை இறுக்கிய வெள்ளை டைட்சில் தொளதொளவென்ற வெள்ளை டீ சட்டையில் வியர்வை ஊற தலை கலைந்து நடந்தாள். அவளை இரண்டாம் முறையாக இந்தக் கோலத்தில் பார்த்தபோது அருவியில் குளித்து முழுகி ஈரத்தோடு நடக்கும் ஒரு தேவதை போல இருந்தாள்.

 

    • “இதோ போகிறாள் பார் பிசாசு! இவளால்தான் உனக்கு இத்தனை தொல்லைகள்!” என்றாள் ஜெசிக்கா. அவள் குரலில் வெறுப்பு இருந்தது. கணேசனுக்கு மனசில் துணுக்கென்றது.

 

    • “பாவம் ஜெசிக்கா! அவள் என்ன செய்வாள்? எல்லாம் சந்தர்ப்ப வசத்தால் வந்தது!” என்றான் கணேசன்.

 

    • “சரியான பேய்! இவளுடன் ஒரே அறையில் இருப்பதே வெறுப்பாக இருக்கிறது. விரைவில் அறையை விட்டு அவளைத் துரத்தப் போகிறேன் பார்!” என்றாள்.

 

    • ஏன் ஜெசிக்காவுக்கு அகிலாவின் மேல் இத்தனை வெறுப்பு வருகிறது என்பது கணேசனுக்குப் புரியவில்லை. விளக்குகளைத் தாண்டித் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று தன் விடுதி அறையை நோக்கிய திசையில் இருளில் மறைந்து கொண்டிருக்கும் அந்த அப்பாவி தேவதைமேல் அவனுக்குப் பரிதாபம்தான் மிகுந்தது.

 

    • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28  அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27  எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 5ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 5

5  “பஹாசா மலேசியாவும் குடிமக்கள் கடப்பாடுகளும்” என்ற பாடம் எல்லா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டிருந்தது. அதில் தேர்வடையாவிட்டால் பட்டம் கிடைக்காது என்பதால் எல்லா மாணவர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். “பூசாட் பஹாசா” என்னும் மொழிகள்