Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 7

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 7

7
 

    • எட்டே முக்கால் மணிக்கு ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டத்தின் முன்னால் அகிலா வந்து இறங்கியபோது கணேசன் ஏற்கனவே அங்கு காத்திருந்தான். அவர்களைக் கண்டதும் புன்னகைத்தவாறே அவர்களிடம் சென்றான்.

 

    • விசாரணை ஒன்பது மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. ராஜன், மனோகரன், வின்சன்ட் ஆகியோர் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு இன்னொரு இடத்தில் நின்றார்கள். கணேசனைப் பார்த்து கேலிச் சிரிப்புகளும் கெக்களிப்புக்களும் எழுந்தன. இந்த இரண்டு மூன்று வாரங்களில் அந்தக் கூட்டம் பரசுராமனை விட்டு அகலவில்லை. பரசுராமன் தனது உரிமைப் பதிவான கோணல் சிரிப்புடன் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்.

 

    • அகிலா மனப்படபடப்புடன் கணேசனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெசிக்கா வழக்கம் போல் “ஹை கணேஷ்” என்று பிரகாசமான குரலில் கூவினாள்.

 

    • “ரெடியா இருக்கிங்களா அகிலா?” என்று கேட்டான் கணேஷ்.

 

    • “ரெடிதான். ஆனால் பயமா இருக்கு!”

 

    • “இவள் ரொம்பவும் பயப்படுகிறாள் கணேஷ். உண்மையைச் சொல்ல ஏன் பயப்படவேண்டும்?” என்றாள் ஜெசிக்கா.

 

    • “உண்மையைச் சொல்ல பயப்படவில்லை. விசாரணை என்றாலே ஏதோ கோர்ட்டுக்குப் போவது போல நடுக்கம் வருகிறது”

 

    • “அந்த பயமே வேண்டாம். இந்த அதிகாரிகளை நிமிர்ந்து பார். உரக்கப் பேசு!” என்று தைரியமூட்டினாள் ஜெசிக்கா.

 

    • “ஆமாம் அகிலா. நாம் மறைப்பதற்கும் பயப்படுவதற்கும் என்ன இருக்கிறது. தைரியமாகப் பேசுங்கள்!” என்றான் கணேசன். அகிலா பலவீனமாகத் தலையாட்டினாள்.

 

    • ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருக்கையில் மாணவர் பிரிவு உதவிப் பதிவதிகாரி முத்துராமன் வந்து எல்லாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வந்தார். பொதுவாகப் பேசினார்.

 

    • “முதலில் முறையீடு செய்த பரசுராமனையும் அவரது சாட்சிகளையும் உள்ளே கூப்பிட்டு விசாரிப்போம். அது முடிந்ததும் கணேசனையும் அவருடைய சாட்சிகளையும் கூப்பிடுவேன். தயாராக இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்றார்.

 

    • கொஞ்ச நேரத்தில் பாதுகாப்புத் துறைத் தலைவர் ரிட்வான் வந்தார். “பல்கலைக் கழகத்தின் பேரைப் பாழ்படுத்துகிறீர்களே!” என்பதைப் போல் எல்லாரையும் ஒரு கடுமையான குற்றவாளிப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார்.

 

    • அடுத்த ஐந்து நிமிடங்களில் பேராசிரியர் முருகேசு காரில் வந்து காரை நிறுத்திவிட்டு ஒரு கோப்புடன் இறங்கினார். விசாரணைக் குழுவில் அவர் இருக்கிறார் என்று தெரிந்த போது கணேசனுக்குத் தைரியமாக இருந்தது. ஆனால் அவர் முன்பு பேசியிருப்பது அவன் நினைவுக்கு வந்து அவனைப் பயமுறுத்தியது. “ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”

 

    • அகிலா அறிமுக வாரத்தில் இந்து மாணவர்களுக்கான சமய விளக்கக் கூட்டத்தில் அவர் பேசக் கேட்டிருக்கிறாள். அவர் தன் அப்பாவுக்கு அறிமுகமானவர் என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் அவரைப் பார்த்து புன்னகைத்தனர். ஜெசிக்கா “ஹலோ புரொ•பெசர்!” என்று தனது இயற்கையான உச்சக் குரலில் கத்தினாள். சரித்திர இயலில் அவருடைய பாடம் ஒன்றை ஜெசிக்கா எடுத்திருக்கிறாள். ஆகவே அவரைத் தெரியும்.

 

    • “ஜெசிக்கா! உனக்கென்ன வேலை இங்கே?” என்று கேட்டார் முருகேசு.

 

    • “நான் கணேசன் சார்பில் முக்கிய சாட்சி!” என்றாள் ஜெசிக்கா.

 

    • “அப்படியா! சரி. குட் லக்!” என்று ராஜன் பக்கமாகவும் திரும்பி ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு உள்ளே நடந்தார்.

 

    • ஒன்பது மணிக்கு சரியாக முத்துராமன் கூப்பிட பரசுராமன், ராஜன் குழு கூட்டமாக உள்ளே சென்றது. கதவு அடைக்கப் பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கணேசன், அகிலா, ஜெசிக்கா தணலில் இருப்பது போல் இருந்தார்கள்.

 

    • “அன்றைக்கு அந்தக் கூட்டத்தில நடந்த உண்மைகளை நமக்காகப் பேச சாட்சிகள் இல்லை அகிலா. இருந்தவங்க அத்தனை பேரும் அவங்க ஆளுங்க. ஆகவே நீங்களும் நானுந்தான் உறுதியாகப் பேசணும்!” என்றான் கணேசன்.

 

    • “ஜெசிக்கா இருக்காங்களே!”

 

    • “ஜெசிக்கா நேரடியான சாட்சி இல்ல. நடந்தத உங்க வாயால கேட்ட வெளி சாட்சிதான். ஆகவே அவ்வளவு பலமா இருக்காது.!”

 

    • அகிலாவுக்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது.

 

    • 9.20க்கு முத்துராமன் கதவைத் திறந்து வெளியே வந்து “வாங்க!” என்றார்.

 

    • உள்ளே நுழைந்தார்கள். முட்டை வடிவ மேசையில் விசாரணை அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவே மாணவர்கள் விவகாரப் பிரிவின் உதவித் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ சலீம் தலைவராக இருந்தார். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் மென்மையாகப் பேசி இனிமையாகப் பழகும் மனிதர். கணேசனை அவருக்குத் தெரியும் அவருக்கு இடது பக்கத்தில் ரித்வான். வலது பக்கத்தில் பேராசிரியர் முருகேசு. கொஞ்சம் தள்ளி உதவிப் பதிவதிகாரி முத்துராமன்.

 

    • பரசுராமன், ராஜன் குழுவினர் எதிர்ப்பக்கத்தில் கூட்டாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடனான விசாரணை முடிந்து விட்டதற்கான ஆறுதல் அவர்கள் முகங்களில் தெரிந்தது.

 

    • டத்தோ சலீம் மிருதுவான மலாயில் பேசினார். “கணேசன். இது விசாரணைக் குழு. இந்தக் குழுவில் இந்திய மாணவர் பண்பாட்டுச் சங்கத்தின் ஆலோசகர் என்ற முறையில் பேராசிரியர் முருகேசுவையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது தெரியும் அல்லவா? பரசுராமன் என்ற இந்தப் புதிய மாணவனை நீங்கள் ரேக் பண்ணியதாகவும், கன்னத்தில் அறைந்து தள்ளியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அந்தச் சம்பவம் நடந்தபோது உடனிருந்ததாக ராஜன், மனோகரன், வின்சன்ட் சாட்சியம் கூறியிருக்கிறார்கள். ரேகிங்கைப் பல்கலைக் கழகம் தடைசெய்திருப்பதுடன் ரேகிங் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரித்திருக்கிறோம். அப்படியிருந்தும் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

 

    • கணேசன் முதலில் பரசுராமனைப் பார்த்தான். அவன் கோணல் சிரிப்பு மறைந்து அவன் முகத்தில் கொஞ்சம் பயம் படர்ந்திருந்தது.

 

    • “டத்தோ. நடந்த சம்பவத்தை இவர்கள் திரித்துச் சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை அகிலா என்ற இந்த முதலாண்டு மாணவியின் விளக்கத்திலும் நான் எழுதிக் கொடுத்துள்ள முறையீட்டிலுமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ரேகிங் செய்தது ராஜன், மனோகரன், வின்சன்ட் குழுவும் அவர்கள் நண்பர்களும்தான். ரேகிங்கிற்கு உட்படுத்தப் பட்டவர்கள் பரசுராமனும் அகிலாவும். நான் தற்செயலாக அங்கு போக நேர்ந்தது. இந்தப் பரசுராமன் அகிலாவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பெண் பயந்து ஒடுங்கியிருந்தார். இவரைக் காப்பாற்றவே நான் பரசுராமனை அறைந்து தள்ளி இவரை விடுவித்து வந்தேன்! ரேகிங்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!” அதோடு நிறுத்தினான். இப்போது அதிகம் பேசவேண்டாம் என முடிவு செய்து கொண்டான்.

 

    • டத்தோ அகிலாவைப் பார்த்தார். “அகிலா! நீ என்ன சொல்கிறாய்?”

 

    • அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தொண்டை வரண்டு போனது. “அவர் சொல்வதுதான் உண்மை டத்தோ, அப்படித்தான் நடந்தது!” என்று அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.

 

    • “இது உண்மையாக இருந்தால் இந்தச் சம்பவம் பற்றி நீ ஏன் முதலில் பாதுகாப்புத் துறைத் தலைவருக்கு முறையீடு செய்யவில்லை. இதுபற்றி அறிமுக வாரத்தில் படித்துப்படித்துச் சொல்லியிருக்கிறோமே!”

 

    • ஆமாம். படித்துப்படித்துச் சொன்னார்கள். பயம். கூச்சம். தப்பித்ததே போதும், இந்த சனியன்களிடம் இன்னமும் விகாரம் வேண்டாம் என்று பயந்து ஓடும் புத்தி. விசாரணை வழக்குகள் என்ற தொல்லைகளைத் தவிர்த்தல். “சும்மா வேடிக்கையா விளையாண்ட நம்ம இந்தியப் பசங்களப் போய் காட்டிக் குடுத்திட்டியே!” என்று மற்ற இந்திய மாணவர்கள் சொல்வார்கள் என்ற அச்சம். இதில் எந்தக் காரணத்தைச் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள்?

 

    • “எனக்கு பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது டத்தோ!”

 

    • “அப்புறம் மறுநாள் காலந் தாழ்த்தி சொல்வதற்கு எப்படி தைரியம் வந்தது?”

 

    • “கணேசன் மேல் பழி வந்தது என்று கேள்விப் பட்டவுடன் உண்மையைச் சொல்ல முன் வந்தேன்!”

 

    • “அப்படியானால் கணேசனைக் காப்பாற்றத்தான் இப்படிச் செய்தாயா?”

 

    • திகைத்தாள். இந்தக் கேள்விக்கு ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அது தவறாகப் போய்விடக் கூடும் என அவளுக்குப் பட்டது. ஆனால் உண்மையைச் சொல்லுவதைத் தவிர வேறு யுத்திகளைப் பற்ற யோசிக்க வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள். “உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்” என்று ஜெசிக்கா அன்று சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

 

    • “ஆம் டத்தோ! உண்மையைச் சொன்னால் அவர் மீதுள்ள குற்றம் நீங்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்!”

 

    • “அப்படிச் சொல்ல உன்னை யாராவது வலியுறுத்தினார்களா?”

 

    • கேள்வியின் தொனி நன்றாக இல்லை. ஜெசிக்காவைத் திரும்பிப் பார்த்தாள். ஜெசிக்காவின் சிரித்த முகத்தில் கூடக் கொஞ்சம் கலவரம் இருந்தது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். என்ன நடந்தாலும் நடக்கட்டும்.

 

    • “ஜெசிக்கா என் ரூம் மேட். அவர் மூலமாகத்தான் கணேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டேன். அவர் கூறிய ஆலோசனைதான். ஆனால் அவர் வலியுறுத்தியிராவிட்டாலும் செய்தி தெரிந்தவுடன் நானாக முன் வந்திருப்பேன்! ஏனென்றால் ரேகிங்கிலிருந்து அவர் என்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றி உணர்ச்சி இருக்கிறது” குரலில் தைரியம் ஏறிக் கொண்டிருந்தது. நான் ஏன் குற்றவாளி போலப் பயந்து பேச வேண்டும் என்ற கோபம் வந்தது.

 

    • டத்தோ சலீம் ஜெசிக்காவைப் பார்த்தார். “ஜெசிக்கா. உனக்கு கணேசனைத் தெரியுமா?”

 

    • “நன்கு தெரியும். நண்பர். சில பாடங்கள் ஒன்றாக எடுக்கிறோம்!” ஜெசிக்கா தெளிவாகச் சொன்னாள்.

 

    • “கணேசன் உன் நண்பர் என்பதால் அவர் மீதுள்ள குற்றத்தைத் தவிர்ப்பதற்காக நீங்கள் மூவரும் சேர்ந்து இந்தப் பொய்யை ஜோடித்திருப்பதாக ராஜன் என்ற இந்த மாணவர் கூறியிருக்கிறார். அதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?”

 

    • ஜெசிக்கா அதிர்ச்சியடைந்திருந்தாள். கணேசனும் விதிர்த்திருந்தான். அகிலாவின் முகம் இரத்தக் களையிழந்தது.

 

    • “இல்லை இது பொய் டத்தோ. நாங்கள் மூவரும் நடந்ததைத்தான் பேசுகிறோம்!”

 

    • “ஆனால் ரேகிங் போது நடந்தது என்ன என உனக்குத் தெரிய வாய்ப்பில்லையே?”

 

    • “ரேகிங் நடந்து அதிலிருந்து மீண்டு அகிலா அறைக்குத் திரும்பியதும் படுக்கையில் படுத்து விம்மி அழுதார். நான் கேட்டவுடன் நடந்ததைச் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் அவர் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அதை நான் நம்பினேன். அதைத்தான் உங்களிடம் சொல்லுகிறேன்!”

 

    • பேராசிரியர் முருகேசு தொண்டையைக் கனைத்தார். “டத்தோ! நான் இந்த பரசுராமனை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்!” என்றார்.

 

    • “கேளுங்கள்” என்றார் டத்தோ சலீம்.

 

    • அவர் பரசுராமனைப் பார்த்துக் கேட்டார். “ரேகிங் ஒன்றும் நடக்கவில்லை. சும்மா பேசிக்கொண்டுதான் இருந்தோம் என்று முறையீட்டில் எழுதியிருக்கிறாய். கணேசன் வந்துதான் ரேகிங் ஆரம்பித்தார் என்றும் நீ அவர் சொல்லியதைச் செய்ய மறுத்ததால் அறைந்து தள்ளியதாகவும் சொல்லியிருக்கிறாய். அந்த இடத்தில் அகிலா என்ற பெண் இருந்தாரா? அதைப்பற்றி உன் முறையீட்டில் ஒன்றும் இல்லையே?”

 

    • பரசுராமன் கொஞ்சம் பரக்கப் பரக்க விழித்தான். “அங்கே பலபேர் கூட்டமாக இருந்தார்கள். யார் யார் என எனக்குத் தெரியாது. எல்லார் பெயரையும் நான் ரிப்போர்ட்டில் எழுதவில்லை. இந்தப் பெண் இருந்தாரா என்றும் தெரியாது. இருந்திருந்தாலும் நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்”

 

    • “அப்படியானால் இந்தப் பெண் சொன்ன எதுவும் அங்கு நடக்கவில்லை. இவரை நீ முத்தமிட முயன்றதாக அவர் சொல்லியிருப்பது கணேசன் சொல்லியிருப்பது பொய். அப்படித்தானே?”

 

    • பரசுராமன் மேலும் கீழும் பார்த்தான். “அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது எனக்கு முற்றாக நினைவில்லை. கணேசன் வந்து என்னை அடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதைத்தான் எழுதினேன்!”

 

    • “அப்படியானால் இந்தப் பெண்ணை முத்தமிடு என்று யாரும் உனக்குச் சொல்லவுமில்லை, நீ அப்படிச் செய்யவுமில்லை!”

 

    • ஒரு நிமிடம் தயங்கி ராஜாவைப் பார்த்துவிட்டு பலவீனமான குரலில் சொன்னான்: “அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!”

 

    • “அப்படியானால் இந்தப் பெண் உன்மீது பொய்க்குற்றச் சாட்டு சுமத்துகிறாரா?”

 

    • பரசுராமன் மேலும் மிரண்டான். “அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!” என்றான்.

 

    • ராஜன் முந்திக் கொண்டு சொன்னான்: “டத்தோ! அங்கு நடந்ததைக் கண்ணால் பார்த்தவர்கள் நாங்கள். ஏன் நாங்கள் சொல்வதை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்?”

 

    • டத்தோ சலீம் சொன்னார்: “இங்கே நடப்பது விசாரணைதான். உண்மையை வெளிக் கொணர்வதே எங்கள் வேலை. சந்தேகம் எல்லார் மீதும் உண்டு. ஆகவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி உதவி செய்யுங்கள்!” என்றார்.

 

    • இன்னும் சில கேள்விகள் கேட்டார்கள். ஆனால் புதிய விவரங்கள் ஏதும் வரவில்லை.

 

    • இறுதியாக டத்தோ சொன்னார். “சரி எல்லோரும் வெளியில் சென்று காத்திருங்கள்! நாங்கள் கலந்து பேசி எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்!”

 

    • கணேசனும் மற்றவர்களும் எழுந்து வெளியே வந்தார்கள். கட்டடத்தை விட்டு வெளியேறி மர நிழலுக்கு வந்தார்கள். கணேசன் அங்குள்ள பானம் வழங்கும் இயந்திரத்தில் காசு போட்டு அவர்கள் மூவருக்கும் டின் பானங்கள் வாங்கி வந்தான். வறண்ட தொண்டைகளை நனைத்துக் கொண்டார்கள்.

 

    • ஒரு மிணறு கொக்கோ கோலா பருகிவிட்டு ஜெசிக்கா சொன்னாள்: “நாம் சொல்லியதை அவர்கள் நம்பவில்லை என்றுதான் தெரிகிறது கணேசன்!”

 

    • கணேசன் பேசாமல் இருந்தான். அகிலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. “சேச்சே! அழாதிங்க அகிலா!” என்றான்.

 

    • “இல்லை கணேஷ். இது என்னுடைய குற்றம்தான். நான் உடனே ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும். அவர்கள் முந்திக் கொண்டதால் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்து குற்றவாளி ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு ஏதாவது தண்டனை என்றால் எனக்குப் பொறுக்காது” என்றாள்.

 

    • “சேச்சே! அப்படியெல்லாம் நடக்காது!” என்றான் கணேசன். ஆனால் அப்படியும் நடக்கலாம் என உள்மனம் சொல்லிற்று. அவனுடைய எதிர்காலத்தில் திக்கென இருள் கவிந்து நின்றது.

 

    • ஓர் இருபது நிமிடம் அவர்கள் நிம்மதி கொள்ளாமல் தங்கள் பயங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். வெறும் பேச்சுக்கள் பேசினார்கள். அதே போல இன்னொரு மூலையில் ராஜனும் அவன் தோழர்களும் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு நின்றும் நடந்தும் அலைந்தார்கள்.

 

    • முத்துராமன் கதவு திறந்து வந்து அழைத்தார். அனைவரும் உள்ளே போனார்கள். மனப் படபடப்புடன் உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.

 

    • டத்தோ அவர்களைத் தீர்க்கமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். “இந்த இடத்தில் எல்லாரும் உண்மை பேசவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் உங்கள் முறையீடுகளில் உள்ள முற்றிலும் முரண்பாடான தகவல்களைப் பார்க்கும் போது யாரோ ஒரு தரப்பினர் பொய் பேசுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.”

 

    • சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார். அனைவரையும் இன்னொரு சுற்றுப் பார்த்தார். அந்த மௌனம் கனத்தது.

 

    • “இப்போது ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன். பொய் சொல்லியவர் உண்மையை ஒப்புக்கொள்ள விருப்பமா?”

 

    • “நான் பொய் சொல்வில்லை!” என உரக்கக் கூவவேண்டும் என கணேசனுக்குத் தோன்றியது. ஆனால் அதனால் பயன் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்தது. பரசுராமன் தலை கவிழ்ந்திருந்தான். ராஜன் முகத்தை மரம் போல வைத்துக் கொண்டிருந்தான்.

 

    • “சரி. நீங்கள் யாரும் சொல்லத் தயாராக இல்லை. இந்த விசாரணையில் நிருபிக்கப்படும் ஒரே உண்மை கணேசன் பரசுராமனை அடித்தார், தள்ளினார் என்பது. அதை கணேசன் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் கூறும் காரணங்கள் வேறாக இருக்கின்றன. இது ரேகிங் என்று எடுத்துக் கொண்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். ஆகவே ரேகிங் குற்றச்சாட்டை நிராகரிப்பது என குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் பரசுராமனைத் தாக்கியதற்காக கணேசன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு 100 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறோம்!”

 

    • அகிலா விம்மும் சப்தம் கேட்டது. பரசுராமன் உம்மென்று இருந்தான். ராஜனும் வின்செண்டும் சிரித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள்.

 

    • கணேசனின் மனது இருண்டு போனது. நீதி தேவதைக்குக் கண்ணில்லை என்பது உண்மைதானோ? எப்படி நான் இந்த நிலைக்கு ஆளானேன்? என்ன தவறு செய்தேன்? இந்தக் கழிவிரக்கக் கேள்விகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.

 

    • “என்ன சொல்கிறாய் கணேசன்?” டத்தோ கேட்டார்.

 

    • என்ன சொல்வது? மேலும் மறுத்து மேலும் தண்டனைக்கும் சிக்கலுக்கும் உள்ளாவதா? அது விவேகமாகாது எனப்பட்டது. ஆனால்… ஆனால் இந்த விஷயம் இதனோடு முடிந்து விட்டதா?

 

    • “டத்தோ. உங்கள் தீர்ப்பை நான் மறுப்பதாக எண்ண வேண்டாம். ஆனால் இந்த விஷயம் இதனோடு முடியவில்லையே. இந்தச் சம்பவம் நடந்த பிறகு ராஜனும் அவன் நண்பர்களும் வெளியிலிருந்து குண்டர் கும்பல்காரர்களை அழைத்து வந்து என் விடுதிக்கே வந்து என்னை மிரட்டினார்கள். அது பற்றி நான் முறையீடு செய்திருக்கிறேன். அதை விசாரித்தால்தானே இந்த விவகாரம் முடியும்?” என்றான்.

 

    • டத்தோ சலீம் கொஞ்சம் திகைத்து ரித்வானைப் பார்த்தார். பேராசிரியர் முருகேசுவும் ரித்வானைப் பார்த்தார். “இது உண்மையா ரித்வான். நீங்கள் இதை என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லையே!” என்றார்.

 

    • ரித்வான் நிமிர்ந்து உட்கார்ந்தார். “டத்தோ. இப்படி ஒரு முறையீடு கணேசன் செய்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து இந்தப் பரசுராமனின் முறையீட்டுக்குப் பிறகுதான் செய்யப் பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து விட்டோம்!”

 

    • “ஏன்?”

 

    • “இரண்டு காரணங்கள் டத்தோ. ஒன்று இதற்கும் சாட்சிகள் யாரும் இல்லை. கணேசனின் வார்த்தை ஒன்றுதான். ராஜனை விசாரித்த போது இது உண்மையில்லை என மறுத்துவிட்டார். கணேசன் தன் முதல் குற்றத்தை மறைப்பதற்காக ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களை அடுக்குவது போலத்தான் தெரிகிறது. இரண்டாவது இந்தக் குற்றச் சாட்டு மிகக் கடுமையானது. ரேகிங் குற்றச்சாட்டுப் போல இதுவும் பொய்யாய்ப் போனால் கணேசனுக்கு அது நல்லதல்ல. கணேசனை எனக்குத் தெரியும் நல்ல மாணவர். அவரைக் காப்பாற்றத்தான் நான் இதை விசாரணைக்குக் கொண்டு வரவில்லை!”

 

    • கணேசனுக்குத் தலை சுற்றியது. நாற்காலியின் பிடிகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களா? நானா? எப்படி நான் செய்வது சொல்லுவதெல்லாம் இப்படித் தலை கீழாகப் போகின்றது?

 

    • “ம்… எப்படி கணேசன்?” டத்தோ கேட்டார்.

 

    • சேற்றில் முழுகிக் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை. ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் நிர்வாணமாகி அவமானப்பட்டு முழுக மாட்டேன். என் எதிரிகள் தற்காலிக பலம் பெற்றிருக்கிறார்கள். காற்று அவர்கள் பக்கம் வீசுகிறது. ஆனால் நான் நேர்மையானவன். வளைய வேண்டிய அவசியம் இல்லை என உறுதிப் படுத்திக் கொண்டதும் பலம் வந்தது.

 

    • “டத்தோ. நான் மேலும் மேலும் பொய்ப்பட்டம் கட்டிக் கொள்ள விரும்பவில்லை. இது நடந்தது உண்மை. ஆகவே அதை நீங்கள் விசாரிக்கத்தான் வேண்டும். உங்கள் இறுதித் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்!”

 

    • “முழுகி விடுவாய்! மூச்சுத் திணறி விடுவாய்! இந்த மரணச் சேறு உன்னை விழுங்கிவிடும்” என உள் மனம் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. பரவாயில்லை. உண்மை என்னைக் கொல்லுமானால் அப்படியே ஆகட்டும் என்று உறுதியாக இருந்தான்.

 

    • பேராசிரியர் பேசினார்: “சே ரித்வான். இந்த கணேசனின் முறையீடு மீது ஏதாவது விசாரணை நடத்தினீர்களா?”

 

    • “குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜனை அழைத்து விசாரித்தேன். இல்லை என்று சொன்னார். அதோடு கோப்பை மூடிவிட்டேன்!”

 

    • “விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததா என்று கண்டறிய முயன்றீர்களா?”

 

    • “பார்த்தவர்கள் யாரும் இல்லை. யாரை விசாரிப்பது?”

 

    • கணேசன் சொன்னான்: “சே ரித்வான். அன்றிரவில் விடுதியின் வரவேற்பறையில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் ஓடிக் கொண்டிருந்தது. யாராவது பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்பதை ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்!”

 

    • ரித்வான் கோபப் பட்டவர் போல இருந்தார். “ஆள் இருந்ததா இல்லையா என்பதே தெரியாது என்கிறாய். டெலிவிஷன் யாரும் இல்லாமலே கூட ஓடிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? யாராவது அடைக்க மறந்து போயிருக்கலாமல்லவா?”

 

    • டத்தோ சலீம் குறுக்கிட்டார். “ரித்வான். இது கடுமையான குற்றச் சாட்டாக இருக்கிறது. கணேசன் இதில் உறுதியாக இருக்கிறார். நீங்கள் தயவு செய்து விசாரித்து எனக்கு ஒரு அறிக்கை தயார் படுத்துங்கள்”

 

    • டத்தோ கணேசனைப் பார்த்தார். “கணேசன். நீ விரும்பியபடி செய்துவிட்டேன். இரண்டாவது குற்றச் சாட்டு நிருபணமாகும் வரையில் இந்த முதல் குற்றச்சாட்டுக்கான தண்டனையை நான் தள்ளி வைக்கிறேன். ஆனால் இந்த இரண்டாம் குற்றச்சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் உன் தண்டனை இன்னும் கடுமையாகக் கூடும். சம்மதமா?” என்றார்.

 

    • மரணச் சேறு மேலும் என்னை அழுத்துகிறது. இதில் மூச்சு முட்டச் சாக வேண்டும் என்று விதியிருந்தால் அப்படியே நடக்கட்டும்.

 

    • “சம்மதம் டத்தோ!” என்றான்.

 

    • “சரி. அடுத்த விசாரணைக்கு விரைவில் நாள் குறிக்கிறேன். அனைவருக்கும் நன்றி!” எழுந்து தன் சகாக்களுடன் கைகுலுக்கிவிட்டு அவர் தன் அலுவலகத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் எழுந்தார்கள்.

 

    • அகிலா தன் வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23  அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10

10  “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்” என்றார் பேராசிரியர் முருகேசு.   கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 27

27  எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும்