Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 6

6
 

    • அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட கச்சிதமான முகம். கண்களில் ஒரு தைரியமும் கருணையும் இருந்தன. அவன் தன்னைக் காப்பாற்றிய செய்கையின் நன்றி உணர்ச்சியோடு இந்த உருவம் அவள் மனதில் கலந்த போது அவளுக்கு அவன் மேல் அன்பு சுரந்தது.

 

    • மோட்டார் சைக்கிளைப் பார்க் பண்ணிவிட்டு தேசா கெமிலாங்கின் வரவேற்பறைக்குள் நுழைந்தவனை ஜெசிக்கா போய் கைகோர்த்து அழைத்து வந்தாள். அவள் முகம் நிறைய சிரிப்பு இருந்தது.

 

    • “அகிலா. இவர்தான் கணேசன், உனது சேவியர்!” என்றாள்.

 

    • அவன் கைநீட்டினான். அகிலா ஒரு புன்னகையுடன் கொஞ்சம் தயக்கத்தோடு மிருதுவாகப் பிடித்துக் குலுக்கினாள். கை கொஞ்சம் கூசியது. என்னதான் கல்வியில் முன்னேறிப் பல்கலைக் கழகம் வரை வந்து விட்டாலும் அந்நிய ஆண்களுடன் பழகுவதில் தூரமும் அடக்கமும் வேண்டும் என்னும் அவள் தாய் கற்றுக் கொடுத்துள்ள தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள தயக்கம்தான் முன் வந்து நின்றது. ஜெசிக்கா அவனை அத்தனை உரிமையுடன் கைகோர்த்து வரவேற்பதைப் பார்க்கும்போது தான்தான் தன்னை இந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது.

 

    • நேற்று தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற இவன் தன்னை உறுதியாகக் கைப்பற்றித்தான் இழுத்து வந்தான். அப்போது கை கூசவில்லை. “என்னைத் தொடாதே” என இழுத்துக் கொள்ளவில்லை. ஆபத்பாந்தவன் என்று எண்ணித் தன்னை முற்றாக ஒப்படைத்துக் கொள்ளும் நிம்மதிதான் இருந்தது.

 

    • கணேசன் உட்கார்ந்தான். “மன்னிக்கணும். அன்னைக்கு உங்களோட நான் சரியா பேசில. உங்க பேரக் கூட கேக்காம போயிட்டேன். நல்ல வேளை ஜெசிக்காவுக்கு நீங்க அறைத் தோழியா இருக்கிறதினால உங்கள மறுபடி கண்டு பிடிக்க முடிஞ்சது”

 

    • அகிலா ஒரு வெட்கங்கலந்த சிரிப்பை உதிர்த்தாள். “நீங்கதான் மன்னிக்கணும். என்னக் காப்பாத்தின உங்களுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாம ஓடிட்டேன் நேத்து! என்ன நன்றியில்லாதவள்னு நெனச்சிருப்பிங்க!”

 

    • “இல்ல, இல்ல அகிலா. நீங்க எவ்வளவு பயந்திருந்திங்கன்னு எனக்குத் தெரியும். ஆகவே நீங்க நன்றி சொல்லாமப் போனத நான் கொஞ்சமும் பெரிசா எடுத்துக்கில! அப்புறம் என்ன நடந்திச்சின்னு ஜெசிக்கா சொன்னாங்களா?”

 

    • தமிழ் உரையாடலுக்கிடையில் தன் பேர் கூறப்படுவதைப் புரிந்து கொண்டு ஜெசிக்கா குறுக்கிட்டுப் பேசினாள். “நான் அகிலாவுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன். பாதுகாப்புத் தலைவரிடம் முறையீடு செய்ய அவள் ஒப்புக் கொண்டு விட்டாள். மூவருமாகப் போவோம். அகிலா அலறிக் கொண்டு வந்து அறைக்குள் அழுததற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்!” என்றாள்.

 

    • “ரொம்ப நன்றி ஜெசிக்கா! ஆனால் அகிலா, நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும். ராஜாவும் நண்பர்களும் இப்படி முந்திக் கொண்டுவிட்டதால் நான் இப்பொழுது ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். வாதியாக இருக்க வேண்டியவன் பிரதிவாதியாகிவிட்டேன். ஆகவே நாம் என்ன மாதிரி முறையீடு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நான் ஏற்கனவே எழுதிக் கொடுத்த முறையீட்டுக்கும் இப்போது அகிலா செய்கின்ற முறையீட்டுக்கும் விவரங்களில் முரண்பாடு இருந்தால் அதைப் பிடித்துக் கொள்வார்கள். நாம் கூறுவது பொய் போலத் தோன்றும். ஆகவே என்ன எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பேசி முடிவு செய்து கொள்ளுவோம்!” என்றான் கணேசன்.

 

    • அவனுடைய நிதானம், திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற போக்கு அகிலாவைக் கவர்ந்தது. அவன் அவளுக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தான்.

 

    • “அகிலா! நேற்று அந்த ரேகிங் போது என்ன நடந்தது, எப்படி அவர்களிடம் சிக்கினீர்கள், யார் அழைத்துப் போனது, அழைத்துப் போனதும் படிப்படியாக என்ன நடந்தது என்பதை முதலில் என்னிடம் சொல்லுங்கள். ஒரு காகிதத்தில் குறிப்பை எழுதிக் கொள்ளுங்கள். அதையே முறையீட்டு பாரத்தில் எழுதுங்கள். பின்னால் விசாரணையில் இதையே சொல்ல வேண்டும்!”

 

    • அகிலா கொஞ்ச நேரம் தலை குனிந்து நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்திப் பார்த்தாள். அந்த நினைவு அவளுக்குப் பயமாக இருந்தது. கூச்சமாக இருந்தது. அவமானமாக இருந்தது. இவையனைத்தும் அவள் கண்களிலும் முகத்திலும் தெரிந்திருக்க வேண்டும்.

 

    • “நடந்த உண்மைகளை அப்படியே சொல் அகிலா. எதையும் மிகைப்படுத்த வேண்டாம். உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்” என்றாள் ஜெசிக்கா.

 

    • அகிலா அவளை நம்பிக்கையுடன் நிமிர்ந்து பார்த்தாள். இந்த இரண்டு நல்ல நண்பர்கள் துணையிருக்கும் போது தான் பயப்படத் தேவையில்லை என்று பட்டது.

 

    • நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்தி கணேசனிடம் ஒப்புவித்தாள். அங்கிருந்தவர்களில் ராஜன், பரசுராமன் தவிர வேறு மாணவர்களின் பெயர்கள் தெரியாது என்று அவள் சொன்ன போது மற்றவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தும் கணேசன் அவற்றை அவளுக்குச் சொல்லவில்லை. தெரியாத பேர்கள் தெரியாமலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.

 

    • அவர்கள் தங்கள் தகவல்களைச் சரிபார்த்து எழுந்து பாதுகாப்பு அலவலகத்திற்குப் புறப்பட்டபோது மணி ஒன்றாகிவிட்டிருந்தது.

 

    • *** *** ***

 

    • பல்கலைக் கழகக் கல்வி என்பது தான் இதுவரை கண்டிராத புதிய உலகம் என்பதை அகிலா கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு வந்தாள். ஒரு வாரத்தில் தொடக்க விரிவுரைகளுக்குப் போய் வந்தவுடனேயே அது விளங்கிவிட்டது. “விரிவுரையாளர்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள் என்றும், வாயில் வந்து ஊட்டுவார்கள் என்றும் எதிர் பார்க்க வேண்டாம். புத்தகங்கள் இருக்கின்றன, நூலகம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டிய விளக்கம் எல்லாம் அங்கிருந்தே கிடைக்கும். எங்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்” என்றே எல்லா விரிவுரையாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

    • விரிவுரையாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டுமானால் அப்பய்ன்ட்மன்ட் வைத்துத்தான் போக வேண்டியிருந்தது. மற்ற நேரங்களில் போனால் விரட்டி விடுவார்கள். அவளுடைய விரிவுரையாளர்கள் எல்லாம் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்.

 

    • கணினிக்குத் திட்டம் (புரோக்ராம்) எழுதும் வழிமுறைகள் என்ற பாடத்தின் விரிவுரையாளரை மட்டும் அவள் போய்ப் பார்க்க நேர்ந்தது. அவர் முதல் விரிவுரையில் கொடுத்த புத்தகப் பட்டியலில் எட்டு புத்ததகங்களில் நான்கு புத்ததகங்களை நூல்நிலையக் கணினியில் கண்டுபிடிக்க முடியவில்லை. நூல்நிலையப் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் கிரிசாலிஸ் என்ற அட்டவணையின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் பெயர் அல்லது புத்தகத்தின் பெயர் தெரிந்தால் கிரிசாலிசில் அதைத் தேடி அதன் புத்தக அடுக்கு எண்ணைக் கண்டுபிடித்து மாணவர்கள் தாமாக இடந்தேடி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டாக்டர் அஹமட் தாஜுடின் கொடுத்த பட்டியலில் இருந்த நான்கு தலைப்புக்களும் ஆசிரியர் பெயரும் கிரிசாலிசில் இல்லை. தேடி அலுத்த முதலாண்டு மாணவர்கள் அவரை இந்த வாரத்திலேயே நேரில் கண்டு இது பற்றிச் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தார்கள். யார் போவது என்று பயந்து விழித்த போது அகிலா “நான் போய்க் கேட்கிறேன்” என்றாள். ஜெசிக்காவைப் பார்த்துப் பழகியதிலிருந்து அகிலாவுக்கும் ஒரு புது தைரியம் வந்திருந்தது.

 

    • யுஎஸ்எம்மின் மருத்துவக் கல்லூரி கிளந்தான் மாநிலத்திற்குச் சென்று தனி வளாகம் அமைத்துக் கொண்ட பிறகு அது முன்பு இருந்த கட்டடத்தை பல கல்விப் பிரிவுகள் பகிர்ந்து கொண்டன. மருந்து தயாரிப்பு இயல் (•பார்மசி), போதைப்பொருள் ஆய்வு நிலையம் (டிரக் ரிசர்ச்), மேற்பட்டப் படிப்புத் துறை ( இன்ஸ்டிடியுட் ஆ•ப் கிராஜுவேட் ஸ்டடிஸ்)) இவற்றுடன் கணினி அறிவியல் துறையும் அங்கு போயிருந்தது. பெரிய பரந்த கட்டடம். குகைகள் போல் அதன் காரிடோர்கள் விரிந்திருந்தன. எந்தக் காரிடோர் போனாலும் பழைய மருந்து வாசனை அடித்தது.

 

    • மங்கிய விளக்கொளியில் உள்ள காரிடோரில் நடந்து போய் வெறும் தாஜுடின் அஹ்மட் என்று பெயர் போட்டிருந்த பெயரைக் கண்டு பிடித்தாள் அகிலா. இந்த விரிவுரையாளர்களின் கத்வுகளில் உள்ள பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களும் பதவிகளும் போட்டுக் கொள்வதில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

    • கதவை மிருதுவாகத் தட்டினாள். “யா மாசோக்” என்ற குரல் கேட்டது.

 

    • கதவு திறந்து உள்ளே போனாள்.

 

    • ஒரு விரிவுரையாளர் அறைக்குள் அவள் போவது இதுதான் முதன் முறை. அவர் தன் மேசையை விட்டு இன்னொரு பக்கத்து மேசையில் ஒரு கணினித் திரை முன் உட்கார்ந்திருந்தார். கீ போர்டில் கடகடவென தட்டிக் கொண்டிருந்தவர் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தார்.

 

    • “சிலாமாட் பகி டாக்டர். உங்கள் புத்தகப் பட்டியலில் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்” என்றாள். குரலில் பயம் இருந்தாலும் தெளிவாகச் சொன்னாள்.

 

    • “நீ யார்?”

 

    • “அகிலா. உங்கள் CAP 101 மாணவி”

 

    • “உட்கார், இதை முடித்துவிட்டு வருகிறேன்!”

 

    • உட்கார்ந்தாள். தாஜூடின் தொடர்ந்து திரைக்குத் திரும்பி கீ போர்டில் தட்டினார். அவர் திறந்திருந்தது ஈமெய்ல் என்று தெரிந்தது. ஏதோ ஒரு கடிதத்திற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்தது. சிந்தனை ஓட்டம் தடைபடுவதற்கு முன் முடித்து விட மும்முரமாக இருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டாள்.

 

    • அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். புத்தகங்கள் சுற்றிலும் இறைந்து கிடந்தன. சில விரித்தவாறு இருந்தன. சிறிய மஞ்சள் தாள்களில் புத்தகங்களில் அடையாளங்கள் வைத்திருந்தார். கணினி பிரின்ட் அவுட் தாள்கள் மடிப்பு மடிப்பாகக் குவிந்து கிடந்தன. நோட்டீஸ் போர்டில் கால அட்டவணை, அவருடைய அலுவலக மெமோக்கள், சில தேங்க்யூ கார்டுகள், சில வெளிநாட்டு கருத்தரங்க நோட்டீசுகள், மாணவர் பட்டியல், மீட்டிங் பட்டியல் அனைத்தையும் தாறுமாறாகக் குத்தி வைத்திருந்தார். மொத்தத்தில் தன் அம்மாவை உள்ளே அனுமதிக்காத பதின்ம வயது மாணவனின் அறை போல இருந்தது.

 

    • விரிவுரையாளர்கள் அனைவரும் பாதிப் பைத்தியங்கள் என மாணவர்கள் கிசுகிசுத்துக் கொள்வது உண்மைதான் போலும் என நினைத்துக் கொண்டாள். தனக்கு இரண்டு மணி நேரம் கொடுத்தால் இந்த அறையை ஒழுங்கு படுத்தி பளிச்சென்று ஆக்க முடியும் என நினைத்துக் கொண்டாள்.

 

    • டாக்டர் தாஜூடின் தான் எழுதியதைப் படித்தார். சில திருத்தங்கள் செய்தார். கம்ப்யூட்ர் மௌசை உருட்டி அம்புக் கர்சரை “சென்ட்” (அனுப்பு) என்ற கட்டளைக்குக் கொண்டு வந்து கிளிக் செய்தார். திரையில் நீலப் பட்டை ஒன்று தோன்றி “அனுப்ப வேண்டிய செய்தி ஒன்று” என்று காட்டியது. அதன் கீழ் வெள்ளைப் பட்டை ஒன்று தோன்றி அதில் நீல நிறம் ஓடி நிறைந்தவுடன் அந்தப் பட்டைகள் முழுதாக மறைந்தன. மின்னஞ்சல் அது போக வேண்டிய அமெரிக்காவுக்கோ ஆஸ்த்திரேலியாவுக்கோ பயணப்பட்டது. சொல்ல முடியாது. பக்கத்து அறையில் உள்ள அவருடைய சக விரிவுரையாளருக்காகவும் இருக்கலாம். கணினிக்கு எல்லாத் தூரமும் ஒன்றுதான்.

 

    • தாஜுடின் தனது ஓடும் சுழல் நாற்காலியையே வாகனமாக்கிக் கொண்டு கணினி மேஜைக்கு முன்னிருந்து தன் எழுத்து மேசைக்கு வந்தார். “எஸ் அகிலா! நான் என்ன செய்யலாம் உனக்கு?” என்று கேட்டார்.

 

    • “தொந்திரவு கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் டாக்டர். இந்தப் புத்தகப் பட்டியலில் உள்ள நான்கு புத்தகங்களை நூல் நிலைய கேட்டலாக்கில் கண்டு பிடிக்க முடியவில்லை!” என்றாள்.

 

    • “ஏன் முடியவில்லை? கிரிசாலிஸ் பயன் படுத்தத் தெரியுமா உனக்கு?”

 

    • “தெரியும். நானும் மற்ற பல மாணவர்களும் தேடியும் கிடைக்கவில்லை!”

 

    • பட்டியலை வாங்கிப் பார்த்தார். கிடைக்காத புத்தகங்களை அவள் கோடிட்டு வைத்திருந்தாள்.

 

    • “ஓல்ரைட், ஓல்ரைட்! இந்த நான்கும் புதிய புத்ததகங்கள். இந்த மாதம்தான் வந்து சேர்ந்தன. லைப்ரரி இன்னும் அதை கேட்டலோக் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். நல்ல வேளை எனக்குத் தெரியப் படுத்தினீர்கள். இந்தப் புத்தகங்களை “சிறப்புச் சேமிப்பு” பகுதியில் வைக்க ஏற்பாடு பண்ணுகிறேன். நீங்கள் உடனடியாக கடன் வாங்க முடியாவிட்டாலும் நூல் நிலையத்துக்கு உள்ளேயை வைத்துப் படிக்கலாம். லைப்பரரிக்கு நான் மெமோ அனுப்புகிறேன்” என்றார்.

 

    • “நன்றி டாக்டர்!” என்றாள் அகிலா.

 

    • “ஓக்கே. விரிவுரையெல்லாம் விளங்குகிறதா?” என்று கேட்டார்.

 

    • “விளங்குகிறது. கம்ப்யூட்டர் கலைச் சொற்கள் பஹாசாவில் நீங்கள் சொல்லுவது கொஞ்சம் குழப்பமாக உள்ளது. புத்தகங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார்கள்!”

 

    • “அடுத்தவாரம் ஆங்கிலம் – பஹாசா மொழிபெயர்ப்பு அட்டவணை கொடுக்கிறேன். அப்புறம் குழப்பம் இருக்காது!” என்றார்.

 

    • அவருடைய டெலிபோன் அடித்தது. அதன் மேல் கை வைத்தவாறு “வேறு என்ன அகிலா?” என்றார். “எனக்கு வேலை இருக்கிறது. கிளம்பு!” என்று அதற்கு அர்த்தம் என அகிலா தெரிந்து கொண்டாள்.

 

    • “ஒன்றும் இல்லை டாக்டர். நன்றி!” என்று எழுந்தாள். அவள் வெளியே வந்த போது அவர் டெலிபோனுக்குள் “ஹலோ” சொல்லிக் கொண்டிருந்தார்,

 

    • ஒரு விரிவுரையாளரை அவருடைய அறைக்குள் சென்று பார்த்த அனுபவம் அவ்வளவு மோசமாக இல்லை என மகிழ்ந்தவாறு விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

 

    • கணினித் துறை வளாகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. அந்தப்பகுதியில்தான் தேசா இன்டா விடுதியும் தேசா கெம்பாரா விடுதியும் அமைந்திருந்தன. இந்த விடுதிகள் அனைத்துமே விரிவுரை மண்டபங்களிலிருந்து மிக தூரத்தில் இருந்தன. வாகனங்கள் இல்லாமல் நடையை மட்டும் நம்பியிருப்பவர்களுக்கு மிகச் சிரமம்தான்.

 

    • பல்கலைக் கழகத்தின் மேற்கு வாயில் நோக்கிப் போகும் ஜாலான் யுனிவர்சிட்டியில் ஓரத்தில் வாகனப் போக்குவரத்தின் மிரட்டல்கள் இல்லாமல் நடக்க கற்களால் நடைபாதை போட்டிருந்தார்கள். அதில் ஏறி நடந்தாள் அகிலா. மத்தியான வெயில் சாலையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு புதன் கிழமை. இந்த இரண்டாம் வாரத்தில் புதன்கிழமை அகிலாவுக்கு விரிவுரைகள் ஒன்றும் இல்லை. அடுத்த வாரம் டியோடிரியல் ஆரம்பிக்கும். ஆனால் இந்த முதல் வாரம் ஒருநாள் ஓய்வுதான்.

 

    • அவளுடைய தேசா கெமிலாங் அத்தனை தூரமில்லை. வேப்ப மர நிழல்களுக்கிடையில் நடந்தாள். முனை வளைந்ததும் இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட பழைய ஆயுத சேமிப்புக் கிடங்கைத் தாண்ட வேண்டியிருந்து. இரண்டு சுரங்கங்கள் தோண்டி சிமெண்டினால் பலப்படுத்தப்பட்ட அமைப்புகள். சில ஆண்டுகளுக்கு முன் கூட இங்கிருந்து போர்க்கால குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன என்பதை அகிலா பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். அவற்றைக் கடக்கும் போது கொஞ்சம் அச்சமாக இருந்தது.

 

    • இந்த வளாகம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தினரின் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் அவர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருந்தன. அவற்றின் உட்புறத்தை புதுமைப் படுத்தியிருந்தாலும் அவற்றின் முகப்புக்களை அப்படியே விட்டிருந்தார்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் காலாற நடக்கும் இந்த வளாகத்தில் ஒரு காலத்தில் ராணுவத்தினரின் பூட்ஸ் ஒலியும் “லெ•ப்ட் ரைட், லெ•ப்ட் ரைட், அபவுட் டெர்ன்” என்ற கட்டளைகளும் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டிருக்கும் என்று அகிலா நினைத்துப் பார்த்தாள். மலேசியா சுதந்திரம் பெற்ற சிலகாலத்தில் ஒரு ரிங்கிட் அடையாள விலையில் இந்த போர்த்தளம் கல்வித்தளமாக மாறிவிட்டது.

 

    • அந்தப் பல்கலைக் கழக வளாகத்தின் பரப்பு எவ்வளவு பெரியது என்பதை இந்த இரண்டாவது வாரத்தில் அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். கணினி விரிவுரை முடிந்து கணக்கு விரிவுரைக்கு வேறு மண்டபத்துக்கு நடப்பதற்குள் நேரமாகிவிடுகிறது. நேரமாகிவிட்டால் உட்கார இடம் கிடைப்பது கஷ்டம். அடுத்தடுத்த வாரத்தில் வீட்டிற்குப் போகும்போது அப்பாவிடம் பேசி ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று பார்க்க வேண்டும். இது ஒரு வசதி. அகிலாவின் வீடு பக்கத்தில் அலோர் ஸ்டாரில் இருந்ததனால் நினைத்த நேரம் அவள் பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடலாம். இரண்டு இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம். இந்த ரேகிங் விவகாரம் விசாரிக்கப்பட்டு முடித்த பின் கண்டிப்பாக வீட்டுக்குப் போக முடிவு செய்திருந்தாள்.

 

    • வந்து இரண்டு வாரங்களே ஆனாலும் வீட்டின் நினைவு பிய்த்துத் தின்றது. அவளுடைய, அவளுக்கே சொந்தமான அந்தக் குட்டி அறை. அதன் படுக்கை, தலையணையின் வாசம், அம்மாவின் சமையல், தம்பியின் சேஷ்டைகள் அனைத்தும் நினைத்து ஏங்க வைத்தன. விடுதியிலுள்ள பொதுத் தொலைபேசியில் இதுவரை மூன்று நான்கு முறை வீட்டுக்குப் பேசிவிட்டாள்.

 

    • வளாகத்தில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார்கள். சிலர் கார்களும் வைத்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அப்பா முடியாது என்று சொல்ல மாட்டார். ஆனால் பணத்துக்குத்தான் சிரமப்படுவார். அப்பா வீடு வாங்கிப் போட்டிருந்தார். அதற்குத் தவணை ப்பணம் கட்டி வந்தார். தம்முடைய பதினான்கு வருடத்திய டாட்சன் காரை விற்று அண்மையில்தான் 30 ஆயிரம் கொடுத்து ஒரு இரண்டாண்டுகள் பயன்படுத்திய புரோட்டோன் சாகா வாங்கினார். அதற்கும் பணம் கட்டி வந்தார். தம்பியைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தங்கை – அகிலாவின் அத்தை – பிள்ளைகள் இருவருக்கு படிக்க உதவிகள் செய்து வந்தார். அகிலாவுக்குப் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்ததும் அவளுக்கு வேண்டிய எல்லா கட்டணங்களையும் கொடுத்தார். கைச்செலவுக்கும் பணம் கொடுத்தார். போதுமா இன்னும் வேண்டுமா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.

 

    • அகிலாவுக்கு எல்லாம் தெரியும். அப்பாவின் நல்ல மனமும் இரக்க சுபாவமும் குடும்பத்தின் மீது உள்ள அன்பும் நன்கு தெரியும். ஆகவே மோட்டார் சைக்கிள் பேச்சை எடுத்தால் சரி என்றுதான் சொல்லுவார். அப்புறம் பணம் திரட்டக் கஷ்டப்படுவார். தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்.

 

    • அகிலா அந்த வாரம் பல்கலைக் கழக உபகாரச் சம்பளங்கள், கடன் உதவி ஆகியவற்றுக்கான மனு பாரங்களை வாங்கி வைத்திருந்தாள். கெடா மாநில உபகாரச் சம்பள பாரமும் கொடுத்திருந்தார்கள். அப்பாவும் கெடா மாநில மஇகா பிரமுகர்களிடம் பேசி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இவற்றில் ஏதாவது ஒரு உபகாரச் சம்பளம் அல்லது கடன் கிடைத்தால் அப்பாவின் சுமையைக் குறைக்கலாம்.

 

    • முதல் வாரத்தில் ரேகிங்கினால் பட்ட மனத்துன்பங்கள் ஆறியிருந்தன. ஆனால் இந்த வெள்ளிக் கிழமை மாணவர் விவகாரப் பிரிவில் விசாரணை இருக்கிறது. அவளுக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் வந்திருந்தது. கணேசன், ஜெசிக்காவுக்கும் கடிதம் வந்திருந்தது. அவள் பாதிக்கப்பட்டவள் என்றாலும் விசாரணைக்குப் போவதற்கு ஒரு குற்றவாளியைப் போல் பயந்தாள். இந்த விசாரணை எப்படித் திரும்பும் என்று சொல்வதற்கில்லை என்று கணேசன் கூறியிருந்தான்.

 

    • எப்படியிருந்தாலும் விசாரணை யாராவது ஒருவருக்குப் பாதகமாகத்தான் முடியப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்தது. ராஜன் தண்டிக்கப் படுவான். அவன் நண்பர்கள் தண்டிக்கப் படுவார்கள். ஆனால் ராஜனின்

 

    • பொய்யும் பரசுராமனின் நடிப்பும் நிலைபெற்றால் கணேசன் தண்டிக்கப் படலாம். அங்கே நியாயம் தோற்கும். ஏமாற்று வெல்லும். எப்படியிருந்தாலும் யுஎஸ்எம் இந்திய மாணவர்களுக்கு அது பெரிய அவமானம் என்றுதான் தோன்றியது.

 

    • அவள் தேசா கெமிலாங்கை அடைந்து உள்ளே நுழைந்த போது இந்த எண்ணம்தான் அவளுடைய மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11

11  பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன.

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1

  காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசு முன்னுரை காதல் என்பது உன்னதமான பொருள்.   காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்.

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 16

16  பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து