Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 4

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 4

4
 

    • காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி

 

    • அண்ணாந்து பார்த்தால் இந்தக் கட்டடம் தெரியும். ஒரு பிரம்மாண்டமான மழை மரத்தின் கிளைகள் கூரையை வருடியிருக்கும் மேட்டில் அது இருந்தது.

 

    • அவன் இந்தக் கட்டடத்திற்குள் பலமுறை வந்திருக்கிறான். பாதுகாப்பு அலுவலகத் தலைவர் ரித்வான் அஹ்மாட்டை அவனுக்குத் தெரியும். மாணவர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அவனும் அவன் சக நண்பர்களும் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.

 

    • தனது மோட்டார் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளே போனான். காலையில் நடந்த அந்த ரேகிங் விவகாரத்தையும் இரவில் ராஜனும் அவன் கும்பலும் வந்து மிரட்டியதையும் அவரிடம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சில குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தான்.

 

    • வரவேற்புக் கௌன்டரைக் கடந்து சென்று ரித்வான் அஹ்மட் என்று பெயர் எழுதப் பட்டிருந்த கதவைத் தட்டினான். “மாசோக்” (உள்ளே வா) என்ற குரல் கேட்டு கதவைத் திறந்து நுழைந்தான்.

 

    • ரித்வான் தன் மேசையில் ஒரு கோப்புடன் தயாராக உட்கார்ந்திருந்தார்.

 

    • “சிலாமட் பகி (காலை வணக்கம்) சே ரித்வான்” என்றான்

 

    • ஒன்றும் சொல்லாமல் இருக்கையைக் காட்டினார். உட்கார்ந்தான். அவர் கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசினார்.

 

    • “கணேசன், இந்த ஆண்டில் இந்திய மாணவர்களின் ரேகிங் நடவடிக்கையை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். இதைக் கண்டிப்பாக ஒழித்து விட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். துணை வேந்தரும் இதைப் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்.”

 

    • “மிக நல்லது சே ரித்வான். அப்படித்தான் செய்ய வேண்டும்.”

 

    • கோப்பிலிருந்து தலை தூக்கி அவனைப் பார்த்தார். “ஆனால் நீயே இப்படிப் பண்ணுவாய் என நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!”

 

    • கொஞ்சம் திகைத்தான். தான் உடனடியாக வராமல் காலந் தாழ்த்தி வந்ததால் கோபமுற்றிருக்கிறாரோ என நினைத்தான். “நான் நேற்றே வந்து முறையீடு செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டான்.

 

    • “நீ என்ன முறையீடு செய்வது? இங்கே உன்னைப் பற்றித்தான் முறையீடு வந்திருக்கிறது. நீதான் பதில் சொல்ல வேண்டும்!” என்றார்.

 

    • அதிர்ச்சியடைந்தான். “என்னைப் பற்றி முறையீடா? விளங்கவில்லையே!”

 

    • “நீ நேற்று காலையில் ஒரு முதலாண்டு மாணவனை ரேக் பண்ணியதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் இங்கே முறையீடு வந்திருக்கிறது!” என்று கோப்பைக் காட்டிச் சொன்னார்.

 

    • விஷயம் விளங்குவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம் பிடித்தது. அந்தப் பெண்ணைத் தற்காப்பதற்காக அந்த மாணவனை அறைந்து தள்ளப் போய் அது தன் மேல் குற்றமாக உருவெடுத்திருக்கிறது. தீமை செய்தவர்கள் முந்திக்கொண்டதால் தானே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதாகிவிட்டது.

 

    • வாயடைத்துப் போயிருந்தவனைப் பார்த்து ரித்வான் கேட்டார். “நீ இதற்கு என்ன சொல்கிறாய் கணேசன்? உன் வாதத்தையும் கேட்டுவிட்டுத்தான் இதை நான் மாணவர் விவகாரப் பிரிவு உதவித் துணை வேந்தருக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

 

    • “சே ரித்வான்! நான் குற்றவாளியல்ல. ஒரு முதலாண்டுப் பெண்ணையும் ஒரு முதலாண்டுப் பையனையும் ஒரு சீனியர் மாணவர் கும்பல் பிடித்து ரேக் செய்து கொண்டிருந்தது. அந்தப் பையனை அந்தப் பெண்ணிடம் அசிங்கமான முறையில் நடந்து கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான் அந்தப் பையனை அறைந்து தள்ளிவிட்டு பெண்ணைக் கொண்டு போய் அவள் விடுதியில் விட்டு வந்தேன்! நீங்கள் அந்த புதிய மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்துப் பார்க்கலாம்! இதை யாரோ திரித்துக் கூறியிருக்கிறார்கள்” என்றான்.

 

    • “யாரோ அல்ல! பரசுராமன் என்ற அந்தப் புதிய மாணவனே முறையீடு செய்திருக்கிறான். அதற்கு சீனியர் மாணவர்கள் இருவர் சாட்சியும் உண்டு!”

 

    • மீண்டும் திகைப்பாக இருந்தது. ஒரு சுண்டெலியைப் போல எழுந்து ஓடிய அந்த மாணவனா முன்வந்து முறையீடு செய்திருக்கிறான்? பரசுராமனை எப்படியோ வற்புறுத்தி இப்படிச் செய்ய வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. “சே ரித்வான். இது பொய்க் குற்றச்சாட்டு!” என்றான்.

 

    • “நீ சொல்வது உண்மையானால் இந்த ரேகிங் பற்றி நீ ஏன் முதலில் வந்து எங்களிடம் முறையீடு செய்யவில்லை?” என்று கேட்டார்.

 

    • ஏன் செய்யவில்லை? தன்னையே கேட்டுக் கொண்டான். நல்லெண்ணத்தினால் செய்யவில்லை. சக இந்திய மாணவனுக்குத் தொந்திரவு விளையுமே என்றுதான் சொல்லவில்லை. ராஜனும் அவன் நண்பர்களும் என்னதான் முரடர்களாக இருந்தாலும் ஏழை இந்தியக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் படிப்பில் மண் போட வேண்டாம், அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம் என்றுதான் செய்யவில்லை. ஆனால் இப்போது நடப்பதென்ன? ஒரு குற்றமும் செய்யாத என் எதிர்காலத்தில் இவர்கள் மண் அள்ளி வீசத் தயாராகிவிட்டார்களே!

 

    • ஒருநிமிடம் தலைகுனிந்திருந்து சொன்னான். “அவர்களைத் தற்காக்க வேண்டும் என்று எண்ணி முறையீடு செய்யாமல் இருந்தது என் குற்றம்தான். ஆனால் நான் சொல்வதுதான் உண்மை. அந்தப் பெண்ணைக் கேட்டால் விளங்கிவிடும்!” என்றான்.

 

    • “பெண்ணைப் பற்றி ஒரு பேச்சும் இல்லை! எந்தப் பெண்ணும் தான் ரேக் செய்யப் பட்டதாக முறையீடும் கொடுக்கவில்லை. யார் நீ சொல்லும் அந்தப் பெண்?”

 

    • யார் அந்தப் பெண்? அந்தக் கேள்விதான் அவன் மனதிலும் நின்றது. அந்தக் கணத்தில் ஒரு ஆதரவற்ற அபலைப் பெண்ணாக அவளைப் பார்த்தது தவிர அவளை முன்பின் தெரியாது.

 

    • “எனக்குப் பெயர் தெரியாது. ஆனால் கண்டுபிடித்துவிடலாம்!” என்றான்.

 

    • “அந்தப் பெண் சாட்சி சொல்ல வராவிட்டால்…!”

 

    • ஆமாம். அந்த சாத்தியம் இருக்கிறது. தன் பெயர் பொதுவில் இழுக்கப்படும் என்று பயந்து பல மாணவர்கள் முறையீடு செய்வதில்லை. ஆனால் இந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க வேண்டும். தான் அவளைக் காப்பாற்றியதற்கு நன்றியாக அவள்தான் தன்னைக் காப்பாற்றியாக வேண்டும்.

 

    • “சே ரித்வான்! நான் அந்தப் பெண்ணைத் தேடி அழைத்து வருகிறேன். அதுவரை இந்தக் கோப்பை மாணவர் விவகாரப் பிரிவுக்கு அனுப்பாதீர்கள்!” என்றான்.

 

    • கொஞ்ச நேரம் யோசித்தார். அப்புறம் கேட்டார். “நீ இந்தப் பரசுராமன் என்ற பையனை அடித்தது உண்மையா?”

 

    • “உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் இருக்கின்றன!”

 

    • “உண்மை என நீயே ஒத்துக் கொள்ளும் போது இந்த விவகாரத்தை நான் மேலே கொண்டு போகாமல் இருக்க முடியாது. காரணங்கள் இருந்தால் விசாரணையில் நீயே விளக்கலாம்!” என்றார்.

 

    • இந்த விவகாரம் தன் கைமீறிப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. “சே ரித்வான். இந்த குற்றச்சாட்டுத் திரிக்கப் பட்டிருப்பது மட்டுமல்ல. இதைச் செய்த மாணவர்கள் வெளியில் உள்ள குண்டர் கும்பல்காரர்களை அழைத்துவந்து என்னை என் தேசாவிலேயே வந்து மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கூறினார்கள்!” என்றான். குரலில் கோபம் இருந்தது.

 

    • ரித்வான் திகைத்தவர் போல் காணப் பட்டார். “வெளியில் உள்ள குண்டர்களா? அவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்?” சந்தேகத்துடன் கேட்டார்.

 

    • “தெரியாது. ஆனால் அழைத்து வந்த மாணவர்கள் யார் என எனக்குத் தெரியும்!”

 

    • “எப்போது நடந்தது?”

 

    • “நேற்றிரவு!”

 

    • “எங்கே?”

 

    • “என் தேசாவில், •பாஜார் பக்தியில்!”

 

    • “பெங்காவாவிடம் சொன்னாயா?”

 

    • “இன்னும் இல்லை!”

 

    • “ஏன்?”

 

    • “இரவு லேட்டாகி விட்டது. காலையில் சொல்லலாம் என இருந்தேன்! நீங்கள் கூப்பிட்டனுப்பியதால் உங்களிடமே சொல்லிக் கொள்ளலாம் என வந்துவிட்டேன்!”

 

    • நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் கணேசனுக்குப் புரிந்தது. குற்றம் சுமத்தப் பட்டுவிட்டதால் தற்காப்புக்காக இட்டுக்கட்டிச் சொல்லுகிறான் என நினைக்கிறார் போலும்.

 

    • “உன்னை அவர்கள் மிரட்டியதற்கும் வெளியாட்கள் வளாகத்துக்குள் வந்ததற்கும் சாட்சியங்கள் உண்டா?”

 

    • சாட்சியங்களா? அந்த இருட்டில் அந்த விடுதியின் வரவேற்பறையில் யார் இருந்தார்கள் என்பதை அவன் கவனிக்கவில்லை. யாரோ டெலிவிஷனில் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்தது. ஆனால் இவர்கள் நின்று பேசியதை யாரும் கவனித்திருப்பார்களா தெரியவில்லை.

 

    • “யாரும் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. வரவேற்பறை பெரும்பாலும் காலியாக இருந்தது. யாரோ டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். எங்களைக் கவனித்தார்களா என்று தெரியாது!”

 

    • “சரி! உன் பங்கிற்கு நீ ஒரு முறையீடு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! நான் விசாரிக்கிறேன்!” என்றார். அவர் முகத்தில் கோபமும் எரிச்சலும் இருந்தன.

 

    • அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தான். கௌன்டரில் முறையீட்டு பாரம் ஒன்று வாங்கி நேற்று நடந்த இரு சம்பவங்களையும் விரிவாக எழுதினான். அதைப் பெற்றுக் கொண்ட பாதுகாவல் அதிகாரி சில மேல் விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.

 

    • பாதுகாப்பு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அந்தப் பெண்ணை எப்படியாவது தேடிப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவள் பெயர் தெரியவில்லை. எந்த கல்விப் பிரிவு என்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன் என்றும் அங்குதான் ராஜனைச் சந்தித்தேன் என்றும் சொன்னாள் என்று ஞாபகம் வந்தது.

 

    • அந்தக் கூட்டத்தில் அன்று அவளைத் துன்புறுத்தக் கூடியிருந்த யாரையும் அணுகிக் கேட்க முடியாது. எல்லாரும் அவனை எதிரியாகப் பாவிப்பார்கள்.

 

    • அவள் இருக்கும் விடுதி தெரியும். விடுதிக்கு முன்னால் போய் காத்திருந்து கண்ணில் படுகிறாளா என்று பார்க்கலாமா? ஆனால் அப்படிக் காத்திருப்பதை யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள். அங்குள்ள தெரிந்த இந்தியப் பெண்கள் யாரையாவது பார்த்துப் பேசி அடையாளம் சொல்லிக் கேட்கலாம்.

 

    • சிகப்பாக இருந்தாள். கருப்புப் பொட்டு வைத்திருந்தாள். ஒல்லியாக அநேகமாய் ஐந்தடி இரண்டங்குலம் மூன்றங்குலம் இருக்கலாம். ஜீன்ஸ¤ம் இளஞ்சிவப்பு வண்ணத்தில் டீ சட்டையும் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றி இத்தனை விஷயங்கள் தனக்கு நினைவில் தங்கியிருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 

    • மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மனித இயல் கட்டடத்தைக் கடந்து பல்கலைக் கழக கிளினிக் வழியாக நான்கு மாடிக் கட்டடமான தேசா கெமிலாங் விடுதிக்குப் போனான். அநேகமாக எல்லாரும் விரிவுரைகளுக்குப் போய்விட்ட இந்த நேரத்தில் விடுதி ஓவென்றிருந்தது. மோட்டார் சைக்கிளை விடுதி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு நின்றவாறு யோசித்தான். தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஒன்றிரண்டு மலாய்க்கார மாணவர்கள் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து விரிவுரைகளுக்குப் பறந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் கட்டட நுழைவாயிலுக்கு வெளியில் இருந்த ஒரு மர பெஞ்சில் சோர்ந்து உட்கார்ந்தான்.

 

    • கணேசனுக்கும் பத்து மணிக்கு விரிவுரை இருந்தது. முதல் நாள் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டும். இன்று “இன்டர்மீடியட் நிதிக் கணக்கியல் 1” தொடங்குகிறது. இந்தப் பருவம் முழுவதுக்குமான பாடத்திட்டம் விநியோகிக்கப்பட்டு விளக்கப்படும். போகாவிட்டால் மற்ற மாணவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாடத்திட்டப் பிரதியை கடன் வாங்கி பட நகல் எடுக்க வேண்டி வரும். விரிவுரையாளரும் கோபித்துக் கொள்வார்.

 

    • ஆனால் தனக்கு முன் நிற்கின்ற இந்த இக்கட்டு பெரிதாக இருந்தது. தான் நல்லது செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டாயிற்று. ராஜாவும் அவன் நண்பர்களும் தன்னை நன்றாக மாட்டி வைத்து விட்டார்கள். இந்த பாதிக்கப்பட்ட முதலாண்டுப் பெண் முன் வந்து உதவி செய்தால்தான் உண்டு. அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் போய்க் கேட்பதென்றாலும் பெயர் தெரியாது. அறை எண் தெரியாது. அரச நடன நிகழ்ச்சிக்கு வந்த சின்டெரெல்லா பனிரெண்டு மணிக்கு மறைந்தது போல புகை மண்டலத்தில் மறைந்து போனாள்.

 

    • இன்னொரு வழி அந்தப் புகார் செய்த பரசுராமன் என்ற மாணவனைச் சந்தித்துப் பேசுவது. அவன் பெயர் தெரிகிறது. ஆனால் அவனைப் பார்த்துப் பேசுவதில் பலன் இருக்குமா அல்லது நேர்மாறான விளைவுகள் இருக்குமா எனத் தெரியவில்லை. ராஜனும் அவன் கும்பலும் பரசுராமனை மிரட்டித்தான் முறையீடு செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. இப்போது அவன் அவர்களுடைய முற்றான பாதுகாப்பில் இருப்பான். அவனிடம் கணேசன் நெருங்க விடமாட்டார்கள். அப்படியே நெருங்கிப் பேசிவிட்டாலும் முறையீடு செய்த காரணத்தால் மீண்டும் என்னை மிரட்டினான் என்று மறு முறையீடு கொடுக்கச் செய்து காரியத்தை இன்னும் சிக்கலாக்குவார்கள்.

 

    • கணேசன் மனதில் பயம் வந்து தங்கியது. இந்த ஆண்டு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள். ரித்வான் தனக்கு நண்பராக இருந்தும் கடுமையாகப் பேசியதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததையும் எண்ணிப் பார்த்தான். இந்த முறை வெளியில் உள்ளவர்களும் பல்கலைக் கழகம் இந்த இந்திய மாணவர்கள் ரேகிங் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறது என உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். ஆகவே நாங்களும் செயல்படுகிறோம் எனக் காட்டிக்கொள்ள பல்கலைக் கழகத்திற்குக் கேஸ்கள் வேண்டும். வேறு கேஸ் கிடைக்காவிட்டால் என்னையே பலிகடா ஆக்கிவிடுவார்களோ?

 

    • தள்ளிவைத்தல், நீக்கம் என்று வந்து விட்டால் அந்த அவமானத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. இது வரை இந்தப் பல்கலைக் கழகத்தில் கௌரவமாக இருந்து விட்டான். மாணவர்கள் திட்டங்களுக்கு முதன்மை வகித்து தலைமைத்துவ பதவிகள் பல வகித்துவிட்டான். இந்த விஷயம் வெளியானால் அவனுடைய ஆசிரியர்கள் “நீயா அப்படிச் செய்தாய்?” என்று கேட்பார்கள். மாணவர்கள் உதவிப் பதிவாளர் முத்துராமன் “உன்னை நம்பியிருந்தேன். இப்படிப் பண்ணிவிட்டாயே!” என்பார். பேராசிரியர் முருகேசு முகத்தில் எப்படி விழிப்பது? அவரே தன் முகத்தில் உமிழும் நிலை வந்து விடுமா?

 

    • பெற்றோர்கள் தனக்கு உதவ முடியாத நிலையில் தன்னை மகனாகப் பாவித்து தனக்குப் பண உதவி தந்து படிக்க வைக்கும் அத்தையின் நினைவு வந்தது. எவ்வளவு ஏமாந்து போவாள் அத்தை! இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வேன்?

 

    ஒரு ஆற்றாமை உணர்வும் திகிலும் மனதுக்குள் வந்தன. கண்களில் நீர் மல்கியது. இரண்டு உள்ளங்கைகளாலும் கசக்கிவிட்டுக் கொண்டபோது “ஹாய் கணேசன்! என்ன இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் ஜெசிக்கா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23  அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3

3  அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

2  எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த