Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

2
 

    • எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த நாள் முதலாண்டு மாணவர்களைக் கொஞ்சம் ஏளனமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள். கண்ணடித்தார்கள்.

 

    • அகிலாவின் அறைத் தோழியாக தொடர்புத் துறையில் (மாஸ் கம்யூனிகேஷன்) மூன்றாம் ஆண்டு மாணவியான ஜெசிக்கா என்ற சீன மாணவி பெட்டி படுக்கையுடன் வந்து சேர்ந்தாள். ஹாய் என்று சத்தமாய்ப் பேசினாள். எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருந்தாள். அகிலா பயந்தது போல் இல்லாமல் ஒரு தமக்கையைப் போல சரளமாகப் பழகினாள்.

 

    • இந்திய மாணவர்கள் கூட்டங் கூட்டமாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். கேன்டீனிலிருந்து “என்ன நம்மளப் பாக்காது மாரிப் போறீங்க?” என்று கேட்டார்கள். அகிலா அவர்களைப் பார்த்து அசடாகச் சிரித்துவிட்டு பயந்து ஒதுங்கி ஒடுங்கி நடந்தாள்.

 

    • “CAS 101 – கணினி அமைப்பு” முதல் விரிவுரைக்கு அவள் சென்றபோது 200க்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். ஒரு அழகான இளம் மலாய்ப் பெண் விரிவுரையாளர் அந்த விரிவுரையை வழங்கினார். “என் பெயர் சித்தி ஆய்ஷா ஹம்டான். உங்கள் பெயரையெல்லாம் தெரிந்து கொள்ள விருப்பம்தான். ஆனால் இந்தக் கூட்டத்தில் அது முடியாது. டியூட்டோரியலில் பின்னர் உங்களை நான் மெதுவாகத் தெரிந்து கொள்கிறேன்” என்று புன்னகையுடன் கனிவாகப் பேசினார்.

 

    • “கம்ப்யூட்டர் கணிதம் மிகவும் சிரமமானதென்று நினைக்க வேண்டாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டே எண்கள்தான். ஒன்று பூஜ்யம் மற்றொன்று ஒன்று. இதைத் தெரியாதவர்கள் யாராவது இங்கிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது வகுப்பு “ஓ”வென்று சிரித்தது.

 

    • “மிக எளிது அல்லவா? அதுதான் சிரிக்கிறீர்கள். ஆனால் கொஞ்சநாள் பொறுத்து ப்ரோக்ராம் எழுத ஆரம்பிக்கும் போது இதன் முக்கியத்துவம் தெரியும். ஒரு பூஜ்யத்தை விட்டு விட்டால் அழப் போகிறீர்கள்!”

 

    • ஓவர்ஹெட் புரொஜக்டரில் கணினியின் தோற்றம் வரலாறு பற்றி விளக்கினார். எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள மலாய்ப் பெண் குனிந்து அகிலாவின் காதில் கிசுகிசுத்தாள்: “இந்த விரிவுரையாளர் யாரென்று தெரியுமா?”

 

    • அகிலா புரியாமல் அவளைப் பார்த்துத் தலையாட்டி விழித்தாள். “இவர் துன் ஹம்டானின் மகள். பினாங்கின் கவர்னர். யுஎஸ்எம்மின் முன்னாள் துணைவேந்தரின் மகள்”

 

    • அகிலா “ஆ”வென்று வாய் பிளந்தாள். துன் ஹம்டானின் பெயர் அவளுக்குப் பரிச்சயமானதுதான். முன்னாள் கல்வித் துறை இயக்குனர். அவருடைய பெயர் பாடப் புத்தகங்களில் கூட இருக்கிறது. இந்தக் குடும்பத்தில் கல்வி அவர்கள் நரம்பில் ரத்தமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இந்தப் பல்கலைக் கழகத்தில் இன்னும் பல அறிவு ஜீவிகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்து கிளுகிளுப்பூட்டியது. அவர்கள் இருக்குமிடத்தில் தானும் இருப்பது பெருமையாக இருந்தது.

 

    • ஷனோன் அஹமாட் என்னும் நாடறிந்த இலக்கியவாதியை எப்படியாவது ஒருநாள் சந்திக்க வேண்டும். அவருடைய “வழியெல்லாம் ஆணிகள்” என்ற நாவலைத் தான் படித்து அனுபவித்திருப்பதைச் சொல்ல வேண்டும். அரசியல் ஆய்வில் புகழ்பெற்றவரும் அறிவார்ந்த அரசியல் விமர்சகருமான டாக்டர் சந்திரா முசாபார் இங்குதான் இருக்கிறாராம். அவரும் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என அவர் பெயரை பத்திரிகைகளில் பார்க்கும் போதெல்லாம் அப்பா சொல்லுவார், போலியோ நோயில் கால் விளங்காமல் போனாலும் மூளையின் பலத்தால் உலகப் புகழ் பெற்றவர். எப்படியாவது ஒருமுறை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும்.

 

    • ஆனால் விரிவுரை விட்டு வெளியே வரும் போது இவர்களுக்கெல்லாம் முற்றாக வேறுபட்ட ஒருத்தனை அவள் சந்திக்க வேண்டி நேர்ந்தது.

 

    • *** *** ***

 

    • “ஹலோ” என்று சிரித்துக் கொண்டே வந்தான். “நீங்க என்ன கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?” என்று கேட்டான். ஆமாம் என்று தலையாட்டினாள். அதே விரிவுரையிலிருந்து அவனும் வெளிவந்ததால் அவனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். இந்த வகுப்பில் ஒரு சக இந்திய மாணவனைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான் என எண்ணிக் கொண்டாள்.

 

    • “என் பெயர் ராஜன்!” என்று கை நீட்டினான். மென்மையாகப் பிடித்தாள். அவன் அழுத்தினான்.

 

    • “உங்க பேரென்ன?” என்று கேட்டான்.

 

    • “அகிலா”

 

    • “எங்கிருந்து வந்திருக்கிறிங்க?”

 

    • “அலோர் ஸ்டார், கெடா”

 

    • “நான் கோலாலம்பூர்”

 

    • “நீங்களும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?”

 

    • “இல்ல. நான் பிசிக்ஸ், மூணாம் வருஷம்”

 

    • அவளுக்குத் திக்கென்றது. சீனியர் மாணவன் இந்த வகுப்பிற்கு ஏன் வந்தான்?

 

    • “என்ன சீனியர்னவொண்ண பயந்திட்டிங்களா? பயப்படாதிங்க! இங்க சில பயலுங்க உங்கள “ரேக்” பண்ண அலஞ்சிக்கிட்டு இருக்கானுங்க! நீங்க என் கூடவே நடந்து வாங்க! பசங்க வந்தா நான் பாத்துக்கிறேன்”

 

    • தலை முடியை மொட்டையாக வெட்டியிருந்தான். ஒரு காதில் கடுக்கன் போட்டிருந்தான். ஆனால் வாயில் அகன்ற சிரிப்பு இருந்தது. ஆதரவாகப் பேசினான். சீனியர் மாணவர்களிடமிருந்து தப்பிக்க இப்படி ஒரு துணை இருந்தால் நல்லதுதான் என அகிலா எண்ணிக் கொண்டாள்.

 

    • “வாங்க இப்படியே நடந்து பக்தி விடுதிக் கேன்டீனுக்குப் போகலாம். அங்க ஒரு இந்திய அம்மா வடையெல்லாம் சுட்டு விக்கிறாங்க! நான் காட்டுறேன் வாங்க!”

 

    • பேசிக்கொண்டே பக்கம் பக்கமாக நடந்தார்கள்.

 

    • “நீங்க மூன்றாம் ஆண்டு மாணவர், ஏன் முதல் ஆண்டு வகுப்புக்கு வந்திங்க?” என்று அகிலா கேட்டாள்.

 

    • “போனவருஷம் இந்தப் பாடம் எடுத்தேன். ஆனா பெயிலாயிட்டேன்லா. ஆகவே “பேசிக்” பாடத்தில “யூனிட்” போதில. அதுதான் இந்த வருஷம் “ரிப்பீட்” பண்றேன்”

 

    • “அவ்வளவு கஷ்டமான பாடமா?”

 

    • “கஷ்டமில்ல. போன வருஷம் கொஞ்சம் வெளையாடிட்டேன்லா! அதான்!”

 

    • பேசிக்கொண்டே கண்டீனுக்கு வந்தார்கள். கண்டீனுக்கு வெளியே புல் வெளியில் ஒரு இந்தியப் பையன்கள் கூட்டம் உட்கார்ந்திருந்தது. ராஜாவைக் கண்டு “டே மச்சான்” என்று கூப்பிட்டது. ராஜா உற்சாகமாகக் கையசைத்தான்.

 

    • “வாங்க! இவங்கல்லாம் என் கேங். உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்!” என்று அகிலாவைக் கூப்பிட்டான்.

 

    • அகிலாவுக்கு மனதில் திகில் பரவியது. “வேணாம். வேணாம்! நான் வரல. பயமாயிருக்கு!” என்றாள்.

 

    • “சீ! பயப்படாதிங்க அகிலா. எல்லாம் நல்ல பசங்க. நம்ப கேங். இவங்களையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கனும். அப்புறம் ரொம்ப உதவியா இருப்பாங்க. கொஞ்சம் வேடிக்கையா பேசுவாங்க அவ்வளவுதான்!” என்றான். அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். கொஞ்சம் இழுத்தவாறு நடந்தான்.

 

    • அந்தக் கூட்டத்தில் ஒரு பத்துப் பேர் இருந்தார்கள். அத்தனை பேரும் இந்திய மாணவர்கள். எல்லோரும் ராஜனைப் போலவே தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தார்கள். சிலர் ஒரு காதில் மட்டும் வளையம் அணிந்திருந்தார்கள். பிருஷ்டங்களைப் பிதுக்கும் ஜீன்சும் டீ சட்டையும் போட்டிருந்தார்கள். சிகிரெட்டுகள் பிடித்தவாறிருந்தார்கள்.

 

    • அவளுக்குப் புரிந்து விட்டது. ரேகிங் செய்யக் காத்திருக்கும் ஓநாய்கள்தான் இவை. அந்தக் கூட்டத்தின் நடுவே ஏற்கனவே ஒரு பையன் பயங்கலந்த முகத்தில் கோணலான சிரிப்போடு உட்கார்ந்திருந்தான். இவர்களால் பிடிக்கப்பட்ட அவனும் முதலாண்டாக இருக்க வேண்டுமென அகிலா ஊகித்துக் கொண்டாள்.

 

    • “டே, நம்ம ராஜன் •பிரஷி குட்டி பிடிச்சிட்டு வந்துட்டான் பாத்தியா!” என்றான் ஒருவன். கூட்டம் “ஹே” என்று கை தட்டியது.

 

    • தனக்கு இரை போட்டு இழுத்து வந்து விட்டான். உனக்குத் தழை போடுகிறேன் என்று பறித்துக் காட்டி ஆட்டுக் குட்டியை மெதுவாக இழுத்து வந்து கண்ணியில் மாட்ட வைத்துவிட்டான். உள்ளே நடுங்கினாள்.

 

    • கூட்டத்தின் நடுவில் உட்காரச் சொன்னார்கள். தயங்கித் தயங்கி உட்கார்ந்தாள். மனதை பய இருள் கப்பென்று பிடித்துக் கொண்டது. யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்று பார்த்தாள். தனது சக தோழிகள் யாராவது… பல்கலைக்கழக அதிகாரிகள்… விரிவுரையாளர்கள்…? கூப்பிடு தூரத்தில் கேன்டீனில் மாணவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சிலர் அவர்கள் பக்கம் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் யாரும் இந்தக் கூட்டத்தின் பக்கம் வரவில்லை.

 

    • “என்ன மயிலு அப்படியும் இப்படியும் பாக்குது! இதோ பாரு அண்ணனுக்கெல்லாம் வணக்கம் சொல்லும்மா!” என்றான் ஒருவன்.

 

    • கைகூப்பி வணக்கம் சொன்னாள்.

 

    • “மயிலு பேரென்னா?”

 

    • “அகிலா!” என்றாள். குரல் நடுங்கியது.

 

    • “என்ன மயிலு பயப்பிடுது! நாங்கல்லாம் உங்க அண்ணன்மாருங்கதான, என்னா பண்ணிடுவோம் ஒன்ன…?” கூட்டம் கெக்கலித்தது.

 

    • “டேய் நீ வேணுன்னா அண்ணனா இரு. நா இதுக்கு அத்தான்!” என்றான் ஒருவன். அருகில் வந்தான். “என் கண்ணே!” என்று அவள் தலை மயிரைத் தடவினான்.

 

    • அவனைத் தீண்டலில் அருவருப்புப் பட்டுத் தலையை மேலும் குனிந்து கொண்டாள்.

 

    • “டேய் தொடாதடா! இதுக்கு வேற திட்டம் இருக்கு!” என்று ஒருவன் முன் வந்தான்.

 

    • “அகிலா மயிலு! இவரப் பாத்தியா! இவரும் ஒன்னப்போல •பிரஷிதான். இவரு பேரு… சொல்லுடா! அறிமுகப் படுத்திக்க!” அந்த முதலாண்டு மாணவனிடம் கத்தினான்.

 

    • முகத்தில் மாறாத கோணங்கிச் சிரிப்பைக் கொண்டிருந்த அந்த மாணவன் “ஹலோ, ஐ ஏம் பரசுராமன், சோஷியல் சயன்ஸ்!” என்று அவளிடம் கை நீட்டினான்.

 

    • “அடி செருப்பால! இங்கிலீஷ்ல பேசிறான் பாருடா! இங்க இருக்கிறவங்கல்லாம் செந்தமிழர் இல்ல? தமிழ்ள்ள பேசுடா!” என்று ஒருவன் அவன் தலையைத் தட்டினான்.

 

    • “ஹலோ என் பேரு பரசுராமன். நான் சோஷியல் சயன்ஸ்!” மீண்டும் கைகுலுக்க வந்தான்.

 

    • “டேய்! தமிழ் முறைப்படி விளுந்து கும்பிட்றா!”

 

    • தடாலென்று விழுந்து கும்பிட்டான். சொன்னதையெல்லாம் செய்யத் தயாரான கோமாளியாக இருந்தான்.

 

    • “பாத்தியா நல்ல பிள்ள. உருப்பிட்ருவான். மயிலு, அதே மாதிரி அறிமுகம் படுத்திக்கிட்டு உளுந்து கும்பிடும்மா!”

 

    • அகிலாவுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. மீண்டும் தன்னைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று பார்த்தாள்.

 

    • “தோ பாரு! அப்படியெல்லாம் பாக்காத! எவனும் வரமாட்டான். அதுக்கெல்லாம் காவல் வச்சிருக்கோம். நாங்க சொல்றத மாத்திரம் செஞ்சிரு. சீனியருக்கு மரியாத குடுத்திரு! அப்புறம் பாரு ஒனக்காக உயிரையே கொடுப்போம்!”

 

    • அந்த இளித்தவாய்ப் பரசுராமனைப் பார்த்தாள். “வணக்கம், என் பேர் அகிலா! கம்ப்யூட்டர் சயன்ஸ்!” என்றாள்.

 

    • கூட்டம் கைதட்டியது. “உளுந்து கும்பிடு!” என்றது.

 

    • விழுந்து கும்பிடும் கோமாளித் தனத்தைச் செய்ய வேண்டியதில்லை என்று அவளுக்குப் பட்டது. “அதான் வணக்கம் சொல்லிட்டேனே, அது போதும்!” என்றாள்

 

    • “நோ, நோ! நாங்க உளுந்து கும்பிடச் சொன்னா உளுந்துதான் கும்பிடணும்!”

 

    • பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

 

    • “பாத்தியா, மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இதுக்கு வேற வேல பண்ணனும்!”

 

    • கூடிக் குசுகுசுத்துக் கொண்டார்கள்.

 

    • “சரி, டே பரசுராமா! இப்ப இந்த மயிலு உன் காதலி! காதலிய எப்படிக் கொஞ்சுவ காட்டு பாக்கலாம்!”

 

    • காத்திருந்தவன் போல பரசுராமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவள் தாடைக்கு அருகில் கையைக் கொண்டு வந்து “என் கண்ணே!” என்றான்.

 

    • அவனைத் தொடவிடாமல் அவள் தலையைச் சடக்கென்று திருப்பினாள். கூட்டம் “ஹே” என்று கை தட்டியது.

 

    • உற்சாகம் வந்தவனைப் போல பரசுராமன் “என் அன்பே! ஏன் கோபம்?” என்று மேலும் வசனம் பேசினான்.

 

    • கூட்டம் மீண்டும் “ஹே” என்று கை தட்டியது. “நீ கை வைக்கிலியேன்னுதான் கோபம்!” என்றான் ஒருவன்.

 

    • “அப்ப கை வச்சர்ரா!”

 

    • பரசுராமன் தயங்கினான்.

 

    • “டேய் •பிரஷி! நீ கை வைக்கில, நாங்க ஒம்மேல வச்சிருவோம். இன்னக்கி ராத்திரி ஒன்ன “ரேப்” பண்ணாம விட்றதில்ல! பாத்துக்க!” கூட்டம் சிரிப்பும் கும்மாளமுமாய் கத்தியது.

 

    • குனிந்தவாறிருந்தாள். இந்தக் கூட்டத்திற்குத் தான் காட்சிப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் ஆகிவிட்ட அவமானம் தாங்கவில்லை. கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு வந்தது. உள்ளத்தில் அவமானமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. “ஏன் வந்தோம் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு” என்ற வெறுப்பு திடீர் எனப் பரவியது. இந்த வளாகத்தைவிட்டே ஓடிவிட வேண்டும் என்ற நினைப்பு வந்தது. உடனே அலோர் ஸ்டாரில் தன் வீட்டின் பாதுகாப்புக்குள் சென்று புகுந்துவிட வேண்டும் என்று தோன்றியது. அம்மாவைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

 

    • பரசுராமனைக் கூட்டம் உற்சாகப் படுத்தியது. அந்த உற்சாகத்தில் அவன் அவள் முதுகில் கைவைத்தான். மெதுவாகத்தான். ஆனால் ஆயிரம் புழுக்கள் ஊர்வதைப் போல இருந்தது.

 

    • “டேய், முன்ன பின்ன காதல் பண்ணியிருக்கியா! இதோ பாரு இப்படி!” இன்னொருவன் மின்னால் ஓடிவந்து அவள் தோள்களை அழுத்தித் தேய்த்துவிட்டு ஓடினான். தொட்ட இடம் பற்றி எரிந்தது.

 

    • கையில் கத்தி இருந்தால் ஒன்று அகிலா அவனைக் குத்தியிருப்பாள். அல்லது தன்னையே குத்திக் கொண்டிருப்பாள். குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை. தரையையே பார்த்திருந்தாள். இந்த அசிங்கங்களைப் பார்க்க விரும்பவில்லை. தன் முகத்தை அவர்களுக்குக் காட்டி அவர்களைக் கௌரவப் படுத்த அவள் விரும்பவில்லை.

 

    • முன்னுதாரணம் பெற்ற உற்சாகத்தில் பரசுராமன் கையை இன்னும் அழுத்தமாக வைத்தான். தேய்த்தான். “என் அன்பே! என் மேல் கோபமா?” என்று வசனம் பேசினான்.

 

    • அகிலா முகத்தை மேலும் தரையை நோக்கித் தாழ்த்தினாள். உடல் எரிந்தது. மனம் கொதித்தது. கண்களில் கொதிநீர் வழிய ஆரம்பித்துவிட்டது.

 

    • “ஒரு முத்தம் குட்றா!” என்று ஒருவன் கத்தினான். அந்தச் சொற்கள் அகிலாவை ஈட்டியாய்க் குத்தின. இரண்டு கைகளையும் தூக்கி முகத்தைப் பொத்திக் கொண்டாள். பரசுராமனின் முகம் ஒரு தீய நச்சு மேகமாக அவள் முகத்தின் அருகில் வருவது நிழலாகத் தெரிந்தது. அவனுடைய மூச்சு அவள் கன்னத்தில் அனலாய்ப் பட்டது.

 

    • “டேய் முத்தம்னா என்னன்னு தெரியுமா, இடியட்? கன்னத்தில குடுத்தா தங்கச்சின்னு அர்த்தம். வாய்ல குடுத்தாத்தான் காதலி. தெரியுதா?” என்று ஒருவன் கத்தினான்.

 

    • பரசுராமன் முகம் குனிந்து தன் முகத்தை மூடியிருந்த கைகளுக்குக் கீழ் வந்தது தெரிந்தது. முகத்தைத் திருப்ப முயன்றாள். யாரோ தலையைப் பின்னால் அழுத்தமாகப் பிடித்திருந்தார்கள்.

 

    • “பளார்” என்ற சத்தம் கேட்டது. “ஐயோ” என்று பரசுராமன் கத்தியது கேட்டது. அவள் தலை நிமிர்ந்த போது பரசுராமன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்தான். ஓர் உறுதியான கை அகிலாவின் இடது கையைப் பற்றி இழுத்துத் தூக்கியது. “எழுந்திரு, போகலாம்!” என்ற குரல் கேட்டது.

 

    • அகிலா அதிர்ந்து எழுந்தாள். இடது கையில் புத்தகங்களை ஏந்திக் கொண்டு வலது கையால் அவளை இறுகப் பற்றித் தூக்கினான் அந்த அந்நிய ஆண்பிள்ளை.

 

    • கூட்டம் “ஏ” என்று ஏமாற்றம் தெரிவித்துக் கொண்டது.

 

    • “ஏய். நீ ஏண்டா இதில தலையிட்ற இதில?” என்று கேட்டான் ஒருவன்.

 

    • “ஏண்டா! நம்ம பொண்ணுங்களயே போட்டு இப்படி அனியாயம் பண்றிங்க! போய் யாராவது சீனப் பொண்ணு மலாய்க்காரப் பொண்ணுங்ககிட்ட ஒங்க வீரத்தக் காட்டிப் பாருங்களேன். எப்படி ஒத வாங்கிச் சாவப் போறிங்கன்னு தெரியும்!” அந்தப் புதியவன் உறுதியாகச் சொன்னான்.

 

    • “என்னப்பா ரொம்பதான் கோவிச்சிக்கிற! எல்லாம் ஒரு வேடிக்கைக்குத்தான! நம்ப •பிரஷியா வரும்போது நம்பள என்னல்லாம் பண்ணுனாங்க!”

 

    • “அப்ப ஒன்னோடு மனசு என்ன பாடு பட்டிச்சின்னு நினச்சிப் பாத்தியா? மலாய்க்கார சீன மாணவர்கள்ளாம் இந்த ரேகிங்க நிறுத்திட்டு அவங்கவங்க இன மாணவர்களுக்கு பாடக் குறிப்புகள் தயாரிச்சிக் குடுக்கிறாங்க. வழிகாட்டுறாங்க! உங்களுக்குத்தான் உங்க படிப்பிலும் அக்கற இல்ல, மத்தவங்க படிப்பையும் கெடுக்கிறிங்க!”

 

    • “ஆமா இவரு பெரிய அறிவாளி! போடா!” என்றான் ஒருவன்.

 

    • “போறேண்டா! உங்களோட எனக்கென்ன பேச்சு. நாளைக்கு இந்த விஷயம் கெசலாமாத்தானுக்கு (பாதுகாப்புத் துறை) போச்சின்னா அப்ப சாட்சி சொல்ல நான் வருவேன். அப்ப “போடா”ன்னு என் மொகத்தப் பாத்து சொல்லு பார்க்கலாம்”

 

    • கூட்டம் ஆத்திரத்தில் பொருமிக்கொண்டு அடங்கியிருந்தது.

 

    • அந்தப் புதியவன் பரசுராமனைப் பார்த்தான். “ஏய்! நீ எந்திருச்சி ஓடு” என்றான். பரசுராமன் தன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோமென ஓடினான்.

 

    • பற்றிய கையைத் தளரவிடாமல் அவளை இழுத்துக் கொண்டு கேன்டீனை நோக்கி நடந்தான் அவன். ஆபத்து நீங்கி விட்டது போலத் தோன்றினாலும் அவள் நெஞ்சு ஒரு புறாவின் நெஞ்சைப் போல படபடத்துக்கொண்டிருந்தது.

 

    • “நீங்க எந்த தேசா?” என்று கேட்டான். “தேசா கெமிலாங்” என்று பெயர் சொன்னாள்.

 

    • “வாங்க போலாம்!” என்று அவள் கையை விட்டு விட்டு ஆதரவாகப் பக்கத்தில் நடந்தான்.

 

    • இவன் எப்படி என்று தெரியவில்லை. கொதிக்கும் எண்ணெயிலிருந்து கொள்ளிக்கட்டையில் விழுந்து விட்டேனோ என்று சந்தேகத்தோடு நடந்தாள். எப்படியும் இந்தத் தருணத்துக்கு அவன் நல்லவனாக இருந்தான். உறுதியாக நடந்தான். உயரமாக இருந்தான். முகத்தைச் சரியாக ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. பயமும் நடுக்கமும் அடங்கவில்லை.

 

    • “எப்படி இவங்ககிட்ட மாட்டினிங்க?” அவன் கேட்டான்.

 

    • “ராஜன்னு ஒரு பையன். கம்ப்யூட்டர் கிளாசில பாத்தேன். அவரு பேசிக்கிட்டே இங்க கொண்டு போயிட்டாரு!”

 

    • “ஓ ராஜனா? ரொம்ப கெட்டவன். “காராட்” கேங்னு ஒரு கேங் வச்சிருக்கானுங்க. நம்ப தமிழ்ப் பையன்களுக்கே அவமானம். ஒரு வாரத்துக்கு எங்க போனாலும் உங்க •பிரஷி தோழிகளோட போங்க. சீனியர்ஸ் கூட அதிகம் சேர வேணாம். இப்படித்தான் நடிச்சி ஏமாத்துவானுங்க!” என்றான்.

 

    • “அவரு சீனியர்னு தெரியாது! எங்கிட்ட மொதல்ல சொல்லல “

 

    • கெமிலாங் அருகில் வந்ததும் “ஓக்கே! நீங்க போகலாம்!” என்று திரும்பி நடந்தான்.

 

    • ஓட்டமும் நடையுமாக தன் அறையை அடைந்தாள் அகிலா. படுக்கையில் விழுந்தாள். பொருமிப் பொருமி அழுதாள்.

 

    • அறைத் தோழி ஜெசிக்கா இருந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவள் வந்து தோளைத் தடவி “என்ன நடந்தது அகிலா?” என்று கேட்டாள்.

 

    ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

13  நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 23

23  அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1

  காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசு முன்னுரை காதல் என்பது உன்னதமான பொருள்.   காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்.