Tamil Madhura சிறுகதைகள் கொள்ளையோ கொள்ளை – கி.வா. ஜகன்னாதன்

கொள்ளையோ கொள்ளை – கி.வா. ஜகன்னாதன்

    • காட்டுக்கோட்டை ராஜாங்கம் சின்னதானாலும் கெடுபிடிக்குக் குறைவு இல்லை. ராஜா, மந்திரி, சேனாபதி சட்டசபை எல்லாம் வக்கணையாகவே இருந்தன. சேனாபதி போலீஸ்காரர்களுக்குத் தலைவர்; சட்டசபை என்பது நகர சபையைப் போலிருக்கும். ஆனாலும் அதற்குச் சட்டசபை என்று பெயர். அதில் காட்டுக்கோட்டை ராஜ்யத்துக்குரிய சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் எல்லாச் சட்டங்களுக்கும் அரசருடைய உடம்பாடு வேண்டும். அரசர் தனியே ஒரு சட்டம் செய்யவேண்டுமென்று தாமாகவே விரும்பினால் மூச்சுப் பேச்சு இல்லாமல் அத்தனை பேரும் கையைத் தூக்கி அந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிடவேண்டும். இல்லையானால் சட்டசபை முழுவதையும் கலைத்துவிடும் உரிமை அரசருக்கு இருந்தது.

 

    • எப்படியோ எல்லாச் சட்டங்களும் சட்டசபையின் மூலமாகவே நிறைவேறி வந்தன. அந்தச் சட்டசபையைப் பொம்மைச் சபை என்று கூற யாருக்குத் தைரியம் வரும்?

 

    • அரசாங்கத்தில் செலவு மிகுதியாகிவிட்டது. குடிமக்களுக்காக ஏதோ பெரிய காரியங்களைச் செய்து இந்தச் செலவு ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. எல்லாம் அரசருடைய சொந்தச் செலவுதான். அரசர் சௌக்கியமாக இருந்தால்தானே அரசாட்சி நன்கு நடைபெறும்? மன்னனே நாட்டுக்கு உயிர் என்பது உண்மையாக இருந்தால், அவனைக் காப்பது – வேண்டிய சுகங்களைப் பெற்று வாழும்படி செய்து காப்பது – நாட்டு மக்களுக்கு உரிய கடமை என்பதும் உண்மையாகத்தானே இருக்க வேண்டும்?

 

    • அரசருக்குரிய செலவு, அரசாங்கச் செலவு என்று வேறு பிரித்துப் பார்க்கும் கெட்ட வழக்கம் காட்டுக் கோட்டை அரசில் இல்லை. ஆதலின், அரசாங்கச் செலவு மிகுதி யாகிவிட்டதென்பதைக் குடிமக்களுக்கு அறிவித்து, மேற்கொண்டு அரசாங்கத்தின் வரவை அதிகப்படுத்தும் வழி துறைகளை ஆராயும் அவசியத்தையும் தெளிவாக வற்புறுத்த மந்திரிமார்கள் முன்வந்தனர்.

 

    • மந்திரிகளும் சேனாதிபதியும் அரசரும் அந்தரங்க ஆலோசனை செய்தார்கள். “என் சம்பளத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்கிறேன்” என்று முதல் மந்திரி விண்ணப்பித்துக் கொண்டார்.

 

    • “சே சே! அது கூடாது. உங்களுக்கு இப்போது கொடுக்கும் சம்பளம் போதாது. மற்ற இராஜ்யங்களின் வெறும் மந்திரிக்கே ஆயிரக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். நாமெல்லாம் மிகவும் அவசியமான தேவைகளுக்குக் குறைவாகவே பொருளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நம்முடைய விசுவாசமுள்ள குடி மக்கள் நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்வதில்லையே! எல்லாம் சட்ட சபையின் மூலமாகவேதான் நடைபெறுகின்றன. இனிச் சம்பளக் குறைவைப்பற்றியே பேசக்கூடாது” என்று அரசர் ஒரு பிரசங்கமே செய்து விட்டார்.

 

    • “நாங்களும் அப்படிச் செய்யலாமென்று எண்ணியிருந்தோம். ஆனால் மன்னர்பிரானின் திருவுள்ளாம்…” என்று இழுத்தார் ஒரு மந்திரி.

 

    • “அதைப்பற்றி இனிப் பேசுவதில் பயன் இல்லை. அரசர் பெருமானுக்கு உவப்பில்லாத ஒன்றை நாம் செய்யக்கூடாது” என்று முதல் மந்திரி கூறினார்.

 

    • “சரி, சரி; நாம் மேலே பொருள் வருவாய்க்கு வழி என்ன என்று ஆலோசனை செய்யலாம்” என்று அரசர் நினைவுறுத்தினார்.

 

    • “புதிய வரிகள் போடலாமா?”

 

    • “அது யோசனை செய்து, பிறகு செய்ய வேண்டியது” என்றார் மன்னர்.

 

    • “எல்லாருக்கும் வரி போடுகிறதை விடக் குறிப் பிட்ட சிலருக்குக் கணிசமாக வரி போடலாம்” என்று ஒருவர் யோசனை கூறினார்.

 

    • அப்போது சேனாபதி ஒரு நல்ல யோசனையை உந்தித் தள்ளினார். “இப்போது குற்றவாளிகளில் சிலருக்கு அபராதம் போடுகிறோம்; சிலரைச் சிறையில் தள்ளுகிறோம்; சிலருக்கு அபராதம், சிறைவாசம் என்று இரண்டும் விதிக்கிறோம்; இதை மாற்றினால் வருவாய் கிடைக்க இடமுண்டு” என்றார்.

 

    • “எப்படி மாற்றுவது? என்று ஆவல் தோன்றக் கேட்டார் அரசர்.

 

    • “மிக மிகப் பெரிய குற்றத்துக்கு சிறைதண்டனை கொடுப்பது; மற்ற எல்லாவற்றிற்கும் அபராதமே விதிப்பது; இப்படிச் செய்தால் அபராதத் தொகை நிறையக் கிடைக்கும்” என்று சேனாபதி தம் திட்டத்தை விரித்துரைத்தார்.

 

    • “குற்றவாளிகளில் பலர் அபராதம் செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்களே! அவர்களிடம் அபராதம் எப்படி வசூல் செய்வது?” என்று ஒருவர் கேள்வி கேட்டார்.

 

    • சேனாபதி அதற்கு விடை தயாராகவே வைத்திருந்தார். “அப்படிப்பட்ட ஆசாமிகளை யாரிடமாவது வேலை செய்யச் சொல்கிறது. கிடைக்கும் சம்பளத்தை அபராதத் தொகையாக வசூல் செய்கிறது” என்று அவர் சொன்னவுடன், “சபாஷ்! நல்ல யோசனை” என்று அரசர் ஆமோதித்தார். அதற்குமேல் தடைகூற அங்கே யாருக்கும் துணிவில்லை.

 

    • “திருடர்களிடங்கூட அபராதம் வசூலித்துவிடுவதா?” என்று அரசர் கேட்டார்.

 

    • “ஆம்; அதுதான் முக்கியம். திருடிய பொருளிலிருந்து எளிதில் அபராதம் செலுத்திவிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் சொல்லும் செய்தியை வைத்துக்கொண்டு நூற்றுக்கு இவ்வளவு என்று அபராதம் போடலாம்.”

 

    • “பலே! அபராதம் வசூலிக்கும் கடமை உங்கள் தலையில்தான் விழும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?

 

    • “அதனால்தான் இத்தனை தைரியத்தோடு பேசுகிறேன். எப்படியாவது பணத்தை வசூலிக்க முடியும்; மகாராஜா உத்தரவு கொடுத்தால் போதும்.”

 

    • “மகாராஜாவா! எல்லாம் சட்டசபையின் மூலமே வரட்டும்.”

 

    • சட்டசபையில் ஒரு புதிய சட்டம் எழுந்தது. ‘அரசருடைய தனி அனுமதியின்றி எந்தக் குற்றத்துக்கும் சிறைத் தண்டனை விதிக்கக்கூடாது; எல்லாவற்றிற்கும் அதனதன் கடுமைக்கு ஏற்றபடி அபராதம் போடவேண்டும்’ என்று அந்தச் சட்டம் கூறியது.

 

    • இதனால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று அரசியலார் எதிர்பார்த்தனர். சிறைவாசத் தண்டனை மிகமிகக் குறைந்துவிடுவதனால் சிறைகளையும் சிறைப்பட்டோர்களையும் பாதுகாக்கும் செலவு குறைந்துபோகும்; முன்னையினும் அதிகமாக அபராதத் தொகை அரசாங்க பொக்கிஷத்திலே சேரும்.

 

    • சட்டம் வந்த முதல் மாதத்தில் அரசாங்க வருவாய் முன்னையினும் இருமடங்கு ஆயிற்று. அபராதம் செலுத்த இயலாதவர்களை முதலில் அரசாங்க வேலையில் வைத்துக் கொண்டு அபராதத் தொகையை ஈடு செய்தார்கள். ‘குற்றவாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளலாமா? அவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா? என்ற கேள்விகளைச் சட்டசபையிலே கேட்க எதிர்க்கட்சி என்ற ஒன்று அந்த அரசாங்கத்தில் இல்லை.

 

    • நாளாக ஆக அபராதம் செலுத்த முடியாதவர்கள் தொகை அதிகமாயிற்று. அவர்கள் யாவருக்கும் வேலை கொடுக்க அரசாங்கத்தில் வேலை இல்லை. ராஜ்யத்தில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் சிலரை அனுப்பினார்கள். “குற்ற வாளிகளை நாங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டோம்” என்று சொல்ல அவர்களுக்குத் தைரியம் இல்லை. ஆகையால் வேலைக்கு எடுத்துக்கொண்டதாகப் பாவித்து அவர்களுக்குரிய சம்பளத்தை மாத்திரம் கஜானாவில் கட்டிவந்தார்கள். குற்றவாளிகள், “வேலை கொடுங்கள்” என்றபொழுது, “வேலையே செய்யவேண்டாம். உங்கள் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் போங்கள்” என்று சொல்லிவிட்டார்கள்.

 

    • இந்தக் கட்டணங்களால் அரசாங்க வருவாய் அதிகமாயிற்று.அரசருக்குச் சேனாபதியினிடம் அபாரத் தயை உண்டாயிற்று; சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். மந்திரிகளுடைய சம்பளத்தையும் கூட்டினார். அவரும் தம் அந்தப் புரத்தை விரிவாக்கினார்.

 

    • மறுபடியும் செலவுக்குப் பணம் போதாது என்ற நிலை வந்தது. மந்திராலோசனை நடந்தது. இப்போதெல்லாம் சேனாபதியின் வார்த்தைக்குத்தான் செலாவணி அதிகம்.

 

    • “என்ன செய்யலாம்?” என்று அரசர் கேட்டார்.

 

    • “திருடுகிறவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர்கள் கையிலுள்ள பொருள்களை வாங்கி உரியவர்களிடம் கொடுத்துவிடும் வழக்கம் இப்போது இருக்கிறது. அதற்குமேல் திருடனுக்கு இப்போது அபராதம் போடுகிறோம். இந்த முறையைச் சிறிது மாற்றினால் வருவாய் அதிகமாகலாம்” என்று சேனாபதி சொன்னார்.

 

    • “எப்படி மாற்றுவது?”

 

    • “நம்முடைய முதல் மந்திரி முதலிய பெரியவர்களுக்கு நான் சொல்வது பொருத்தமாகத் தோன்றினால் எடுத்துக் கொள்ளட்டும். இல்லாவிட்டால் தாட்சண்யமில்லாமல் வேண்டாமென்று சொல்லட்டும். என்ன இருந்தாலும் நான் சின்னவன்தானே?”

 

    • முதல் மந்திரிக்கு எரிச்சலாக வந்தது; ஆனாலும், “உங்களுடைய அற்புதமான புத்திசாலித்தனத்தை மகா ராஜாவே மெச்சும்போது நாங்களெல்லாம் தனியே அதைப்பற்றிச் சொல்லவேண்டுமா?” என்று அதை வெளிக்காட்டாமல் பதில் சொன்னார்.

 

    • “என்ன மாறுதல் செய்யவேண்டும்? அதைச் சொல்லுங்கள்” என்று மன்னர் அவசரப்படுத்தினார்.

 

    • “இதோ சொல்கிறேன்: திருடினவனை நாம் போய்ப் பிடிக்கக்கூடாது; பொருளை இழந்தவர் அழைத்துவந்து முறையிட்டால் விசாரித்து இழந்த பொருளுக்கு ஒரு மதிப்பு வைத்து அதில் பாதியை அபராதமாக வசூலித்து விடலாம்.”

 

    • “பொருளை இழந்தவனுக்கு அந்தப் பொருளைத் திரும்பத் தரவேண்டாமா?” என்று முதல் மந்திரி கேட்டார்.

 

    • “அதைப்பற்றி நமக்கு ஏன் கவலை? திருடன் குற்றம் செய்தால் அவனைத் தண்டிப்பது நம் கடமை; அதைத்தான் செய்கிறோம்; அபராதம் வாங்குகிறோம்” என்று வியாக்கியானம் செய்தார் சேனாபதி.

 

    • அதன்படியே சட்டசபையில் பழைய சட்டத்திற்குத் திருத்தம் வந்து நிறைவேறியது. அதை நிறைவேற்றி வைத்த பிறகு முதல் மந்திரி அரசரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். தாம் பல காலமாகத் தலயாத்திரை செய்வதாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதாகவும் தம் வேலையிலிருந்து ஓய்வு பெற்று அவ்வாறு செய்ய அநுமதிக்க வேண்டுமென்றும் பணிவுடன் வேண்டினார்.

 

    • அரசர் முதலில் சிறிது யோசித்தாலும், பிறகு அவர் விருப்பப்படியே அவரை முதல் மந்திரிப் பதவியிலிருந்தும் விடுதலை செய்தார். அடுத்தபடி சேனாபதியே முதல் மந்திரியாகிவிட்டார். இரண்டு வேலையையும் அவரே பார்த்துக் கொண்டார்.

 

    • புதிய சட்டத்தின்படி திருடர்கள் அபராதம் செலுத்தத் தொடங்கினார்கள். எல்லாருடைய வீட்டிலும் திருட்டுப் போயிற்று. திருட்டுக் கொடுத்தவர்கள் தம் பொருள்கள் இன்ன மதிப்புடையன என்று சொல்லிப் புலம்புவதோடு சரி; அதற்குமேல் இழந்த பொருளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

 

    • திருடர்கள் பாதிப் பங்கை அபராதமாகச் செலுத்தி வந்தார்கள். முன்னிலும் அதிகமாகப் பொக்கிஷத்தில் பணம் சேர்ந்தது. சேனாபதியாகிய முதல் மந்திரிக்குப் பெரிய மாளிகையை அரசாங்கத்தில் கட்டிக்கொடுத்தார்கள். அவர் தாமாக அதில் ஒரு சிறிய அந்தப்புரத்தையும் கட்டிக் கொண்டார்.

 

    • சேனாபதிக்கு இப்போது அரசரைவிட அதிகாரம் மிகுதியாயிற்று. அவர் ராஜபோகம் அநுபவித்தார். ஆகவே, அவருடைய சொந்தச் செலவு கணக்கு வழக்கு இல்லாமலே வளர்ந்து வந்தது. அதைச் சரிக்கட்ட அரசாங்கத்திலிருந்து வரும் வருவாய் போதுமா? அதனால் வேறு வகையில் வருவாயைப் பெருக்கிக்கொள்ள எண்ணினார். ஓர் அரசாங்கத்தின் முட்டுப்பாட்டைப் போக்க வழிகண்ட அவருக்குத் தம் செலவுக்குப் பணம் தேடுவது பெரிய காரியமா?

 

    • முன்பே அபராதம் செலுத்தின திருடர்களை அந்தரங்கமாக அழைத்தார். “உங்களுக்கு உபகாரமாக ஒரு காரியம் செய்யலாமென்றிருக்கிறேன். பொருளை இழந்தவர்கள் தாம் இழந்ததை அப்படியே சொல்லி விடுகிறார்கள். அதில் பாதியை நீங்கள் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டி வருகிறது. நான் முதலாளிகளை அழைத்து ஓர் ஒப்பந்தம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று தம் கருத்தை விளக்கினார். அவர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, திருட்டுக் கொடுப்பவர்களைத் தனியே அழைத்துப் பேசினார். “உங்கள் வீடுகளில் திருட்டுப் போகும் சொத்தின் மதிப்பைக் குறைவாகச் சொல்லுங்கள். அதனால் திருட்டைத் தொழிலாக நடத்துபவர்களுக்கு லாபம் உண்டு. உங்களுக்கும் அதில் பங்கு தரச் சொல்லுகிறேன்” என்றார். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஒன்றும் இல்லாததற்குக் கொஞ்சமாவது கிடைக்குமல்லவா?

 

    • இந்த ரகசிய ஏற்பாட்டால் அரசாங்கத்தின் வரும்படி குறைந்தது. மறுபடியும் மந்திராலோசனை நடை பெற்றது. “திருட்டுத் தொழிலை நடத்துகிறவர்கள் அபராதம் செலுத்துகிறார்கள். அபராதம் என்று சொல்வதனால் சமுதாயத்தில் அவர்களைச் சற்றே தாழ்வாகக் கருதுகிறார்கள். இனி அதைக் கட்டணம் என்று சொல்வது நல்லது. அதற்கு ஏற்றபடி சட்டத்தின் வாசகத்தைத் திருத்துவது எளிது” என்று காமதேநுவாகிய சேனாபதி தந்திரம் கூறினார். அப்படியே நடைபெற்றது.

 

    • மறுபடியும் அந்தரங்க ஆலோசனை நடந்தது. சேனாபதிதான் தந்திரம் சொன்னார். மற்றவர்களுக்கு என்ன தெரியும்?

 

    • “இப்போது திருட்டுத் தொழிலாளர்கள் கட்டணம் செலுத்துவதால் நாலு பேர் காண வீதியில் உலவுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கம் போதாது.”

 

    • “எப்படி ஊக்கம் உண்டாக்குவது?”

 

    • “அரசாங்கத்தில் விளம்பரப் பகுதி ஒன்றை நிறுவ வேண்டும். திருட்டுத் தொழில் செய்யும் கனவான்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.”

 

    • “அற்புதமான யோசனை! உம் மூளையின் பெருமையை எப்படிப் பாராட்டுகிறது?” என்று குதூகலத்தால் துள்ளினார் அரசர்.

 

    • “இந்த நாய்க்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் மகா ராஜாவின் அன்பு விசேஷம்” என்று தம் பணிவைக் காட்டினார் சேனாபதி.

 

    • அடுத்த வாரமே நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுவரொட்டிகள் பளபளத்தன.

 

    • “திருட்டுத் தொழில் புரியும் கனவான்களே! உங்கள் தொழிலை ஊக்கத்தோடு செய்யுங்கள். அரசாங்கத்துக்கு நீங்கள் செலுத்தும் கட்டணங்களில் ஒரு தொகைக்கு மேற் பட்டுப் போனால் சலுகை உண்டு. தொழில் வன்மை உடையவர்களுக்கு ஆதரவு தருவதில் அரசாங்கம் என்றும் பின் வாங்காது.”

 

    • இந்த விளம்பரத்தைக் கண்ட வியாபாரிகளும் முதலாளிகளும் நகர மாந்தர்களும் ஒருவரை ஒருவர் விழித்துப் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ முணுமுணுத்தார்கள். “கொள்ளையோ கொள்ளை!” என்று அவர்கள் அந்தராத்மா அலறியது.

 

    • அடுத்த வாரம் அரண்மனைக் கஜானாவே திறந்து கிடந்தது. பெட்டிகளில் ஒரு செப்புக் காசு இல்லை. பட்டத்தரசியின் நகைப் பெட்டி காலியாக கிடந்தது. அரசர் வந்து பார்த்தார். அரசி அவரைப் பார்த்தார். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கோபத்தால் வந்த சிரிப்புத்தான். “உங்கள் அற்புதமான சேனாபதியின் திட்டத்தால் வந்த விளைவு இது. அரண்மனை முழுவதும் குற்றவாளிகளையும் பழைய கைதிகளையும் வேலைக்குக் கொண்டு வந்து வைத்தால் இது மாத்திரமா நடக்கும்? இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறதோ!” அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள்.

 

    அடுத்த நாளே சேனாபதியைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவு போட்டார் அரசர். சட்டத்தை மாற்றி, யாராவது திருடினால் ஏதாவது ஓர் அங்கத்தை வெட்டி விடுவது என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். தேசாடனம் போயிருந்த பழைய முதல் மந்திரி அந்தச் சமயத்துக்கென்று எப்படியோ வந்து சேர்ந்துவிட்டார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்

கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்! அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. “சிங்காரவேலு, போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்?” இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன. சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான்

பாங்கர் கோட்டைபாங்கர் கோட்டை

    இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமிஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி (தமிழ்க் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை