Tamil Madhura சிறுகதைகள் உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்

உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்

    • கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும் சேர்ந்து கைதட்டினார்கள். அதைக் கண்டு க.ம.க-க்காரர்கள்; கடவுளையே வென்றுவிட்டதாகப் பெருமைப்பட்டார்கள். வெளிப்படையாகவும் பேசினார்கள்.

 

    • முருகேசன் இந்தக் கட்சியில் சேர்ந்துகொண்டான். அதற்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக் கூற முடியாது. காற்றடித்த வாக்கிலே சாயும் மரம் போல அவன் கருத்துச் சாய்ந்தது. கொஞ்சம் பத்திரிகைகளைப் படித்துப் படித்து நாலு வார்த்தை பேச அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஆதலால், அவன் நாளடைவில் ஒரு குட்டித் தலைவன் ஆனது ஆச்சரியம் அல்ல.

 

    • முருகேசன் கடவுள் மறுப்புக் கட்சியில் சேர்ந்ததே அந்தக் கட்சிக்குப் பொரிய வெற்றி. அவனுடைய குடும்பம் சைவவேளாள மரபைச் சேர்ந்தது. பரம்மரை பரம்பரையாகச் சிவபூஜை செய்து வந்த குடும்பம். அவன் காலத்தில் அவ்வளவு விரிவான பூஜை இல்லாவிட்டாலும் படத் துக்கு விளக்கு ஏற்றி மாலை போடும் வழக்கம் மாத்திரம் தவறாமல் இருந்தது. கூடத்தில் சுவாமி படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. பூஜை யறையில் நடராஜர் படம் தலைமை பெற்று விளங்கியது.

 

    • முருகேசன் புதுக்கட்சியில் சேர்ந்த பிறகு அந்தப் படங்களை யெல்லாம் எடுக்கவேண்டி வந்தது. கூடத்தில் படம் ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டான். சில போட்டோக்களை மாட்டலாம் என்று யாரோ நண்பர்கள் சொன்னபோது அவன் அந்த யோசனையை ஏற்கவில்லை.

 

    • அவன் மனசுக்குள் ஏதோ ஒன்று அங்கே போட்டோக்களை மாட்ட வேண்டாமென்று சொல்லியது. வாசனை, வாசனை என்று சொல்கிறார்களே அதுதானோ இது? எவ்வளவு காலமாகக் கடவுளை வழிபடும் குடும்பம் அது. திடீரென்று அதைக் கைவிடுவது என்றால் பழக்க வாசனை விடுமா? ஆனால் படங்களை எடுக்காவிட்டால் நண்பர்கள் எளிதில் விட்டுவிடுவார்களா? மானத்தை வாங்க மாட்டார்களா?

 

    • மனசுக்குள் உறுத்தல் இருந்தாலும் கூடத்தில் இருந்த படங்களையெல்லாம் எடுத்துவிட்டான். அவனுடைய வயசான அத்தை ஒருத்தி அவனை இதற்காக வைதாள். அதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

 

    • படங்களை யெல்லாம் எடுத்த பிறகே கட்சித் தலைவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து உபசரித்தான். ஒருநாள் க.ம. கட்சித் தலைவர் தோழர் நடராஜன் அவனுடைய வீட்டுக்கு வந்திருந்தார். அவர் முருகேசனுடைய கட்சிப்பற்றைப் பாராட்டினார். “உங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வந்த மூடப் பழக்கங்களை இவ்வளவு விரைவில் விட்டொழித்ததற்கு ஈடும் எடுப்பும் இல்லை. உங்களைப்போல ஐம்பதுபேர் இருந்தால் தமிழ் நாடு முழுவதையும் ஒரு கலக்குக் கலக்கிவிடலாம்” என்று சிலாகித்தார். “தம்பி, அவர் யார்? எங்கே வந்தார்?” என்று அத்தை கேட்டாள்.

 

    • “அவரா? தமிழ்நாட்டில் இன்று அரசியல் தலைவர்களாக உலவும் பொம்மைகளைப் போலன்றி உண்மை உழைப்பும் அறிவும் உடைய எங்கள் தலைவர்” என்று பிரசங்க தோரணையில் சொன்னான் முருகேசன்.

 

    • “நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று அத்தை நிதானமாகக் கேட்டாள்.

 

    • “கடவுள் மறுப்புக் கட்சியின் தலைவர்” என்றான் முருகேசன்.

 

    • “நம்முடைய வீட்டில் உள்ள படங்களை யெல்லாம் எடுத்துவிடும்படி சொன்ன மகாநுபாவன் இவன்தானா?” என்று கோபத்தோடு கேட்டாள்.

 

    • “அப்படிச் சொல்லாதே, அத்தை; அவர் பெரிய அறிவாளி.”

 

    • “தெய்வம் இல்லையென்று சொல்கிறதற்குப் பெரிய அறிவு வேண்டுமா?” என்று அத்தை கேட்டாள்.

 

    • “தெய்வம் உண்டு என்பதற்கு எவ்வளவு அறிவு வேண்டியிருந்தது? எவ்வளவு சாஸ்திரங்கள் வேண்டியிருந்தது? அவற்றையெல்லாம் கீழ்ப்படுத்தித் தெய்வம் இல்லை என்று சாதிப்பதற்கு இன்னும் பெரிய அறிவு வேண்டாமா அத்தை? யோசித்துப் பார்” என்று நியாயம் பேசினான் அவன்.

 

    • அவனுடைய வக்கீல் வாதம் அந்தக் கிழவிக்குப் புரிபடவில்லை. “இதெல்லாம் நல்லதுக்கு வரவில்லை!” என்று தன் வழக்கமான தீர்ப்போடே அவள் விலகிக் கொண்டாள்.

 

    • அத்தையிடம் வாயடி கையடி அடித்துப் பேசினாலும் முருகேசனுக்கு வேறு ஒன்று அடிக்கடி எதிர்நின்று கேள்வி கேட்டது. அதுதான் அவனுடைய மனச்சாட்சி. எதற்கெடுத்தாலும் கடவுள் என்றும், சாமியாரென்றும் தேடிச்சென்ற குடும்பம் அது. கோபுரத்தைக் கண்டால் கைகள் தாமே குவியும்; பெரியவர்களைக் கண்டால் தலை தானே தாழும். இந்தப் பண்பு முருகேசனுடைய உடம்பிலே ஒட்டியிருந்தது; உள்ளத்தில் ஊன்றியிருந்தது.

 

    • ஆகவே, ஒவ்வொரு நாளும் அவனுடைய மனத்துக்குள் ஒரு பெரும்புயல் அடித்துக்கொண்டே வந்தது. க.ம. கட்சிக் கூட்டத்தில் இருக்கும் வரையில் அவனுக்குத் தான் தைரியமாகச் சீர்திருத்த நெறியில் நடப்பதாக ஒரு பெருமை தோன்றும். வீட்டுக்கு வந்தாலோ பல காலமாக வைத்திருந்த பொருள் ஒன்றை இழந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்படும். வீதியில் ஏதேனும் தெய்வ ஊர்வலம் போனால் அவன் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர மாட்டான். ஆனாலும் அவன் மனசு பக் பக்கென்று அடித்துக் கொள்ளும்.

 

    • வீட்டில் இருக்கிற படங்களை யெல்லாம் எடுத்து விட்டதோடு நின்றிருந்தால்கூட அவனுக்கு இத்தனை சங்கடம் உம்டாயிருக்காது. பூஜை அறை என்ற இடத்தை இப்போது படிப்பறை யாக்கிக்கொண்டான். அங்கே உள்ள நடராஜர் படத்தையும் எடுத்துவிட வேண்டும் என்ற முயற்சி தலைப்பட்டபோதுதான் அவனுக்கு விளங்காத வேதனை உள்ளத்தில் தோற்றியது. தன் கட்சிக்காரன் ஒருவனை ஒரு நாள் அந்த அறைக்குள் அழைத்து வந்தான். அந்த மனிதன் கண்ணில் நடராஜர் படம் பட்டு விட்டது. “என்ன, ஐயா, இது? வெளியிலே வேஷம் போடுகிறது போலக் கூடத்திலே இருக்கிற படங்களை மாத்திரம் கழற்றினாய். இந்த இடத்திலே இது தாண்டவமாடுகிறதே! ” என்று பரிகாசம் செய்தான்.

 

    • ” அதையும் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் படங்கள் நிறைந்திருந்த வீட்டில் ஒரு படங்கூட இல்லாமல் இருந்தால் ஏதோ மாதிரி இருக்கிறது.”

 

    • ” அதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாயோ? யாராவது கண்டால் சிரிக்கப் போகிறார்கள்! அப்படிப் படம் வேண்டுமென்றால் இந்த நடராஜன் படம் எதற்கு? நம் அருமைத் தலைவர் நடராஜன் படத்தை இங்கே மாட்டி விடலாமே!” என்று வந்த நண்பன் யோசனை கூறினான்.

 

    • “சரியான யோசனை! உன் அறிவை மெச்சுகிறேன்” என்று சொல்லிக் குதித்தான் முருகேசன்.

 

    • முருகேசன் தன் வீட்டில் தலைவருடைய படத்தை மாட்டினான். பிரதிஷ்டை செய்தான் என்று சொல்வது வைதிக சம்பிரதாயம்; ஆதலால், அப்படிச சொல்லக் கூடாது. ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சி பிரதிஷ்டையைப் போலப் பெரிய நிகழ்ச்சியாகவே அமைந்தது. ‘தலைவர் படத் திறப்புவிழா’வை மிக விமரிசையாக நடத்தினான். அதற்கு அந்தத் தலைவரும் வந்திருந்தார். அந்தப் படத்தைக் கூடத்தின் நடுவில் மாட்டி வைத்தான். முருகேசன். அன்று அவனுடைய கட்சி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். தூபதீப நைவேத்தியம் என்று சொல்லா விட்டாலும் படத்தைச் சுற்றி விளக்குப் போட்டிருந்தான். ஊதுவத்தி ஏற்றி வைத்தான். எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கினான்.

 

    • படங்களையெல்லாம் எடுத்துவிட்டபோது அவனுக்கு இருந்த மனப்போராட்டம் இப்போது இல்லை. அந்தக் கூடம் சூனியமயமாக இருந்ததைக் காண அவனுக்குப் பொறுக்கவில்லை இப்போது தலைவர் படத்தை மாட்டிய பிறகு அவன் முகத்தில் மலர்ச்சி வந்துவிட்டது என்று அவனோடு நெருங்கிப் பழகினவர்கள் சொன்னார்கள்.

 

    • கடவுள் மறுப்புக் கட்சித் தலைவர் வீட்டில் சில நண்பர்கள் கூடியிருந்தார்கள். முருகேசன் வரவில்லை. எல்லோரும் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

    • “முருகேசன் வீட்டுப் படத்திறப்பு விழா எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது!” என்று ஒருவர் கொண்டாடினார்.

 

    • “முருகேசனுக்குத் தலைவரிடம் உள்ள பக்தி…..”

 

    • ” என்ன, பக்தியா? அந்த வார்த்தையை எதற்கப்பா இங்கே கொண்டு வருகிறாய்?”

 

    • “சரி, பக்தி வேண்டாம், அன்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்குத் தலைவரிடம் உள்ள மதிப்பு, மரியாதை, அன்பு எல்லாம் ஒரு தனிரகம். தம்முடைய குடும்பத்துக்கு ஏற்ற முறையிலே அந்த அன்பைக் காட்டுகிறார். அவருடைய போக்கிலே பழமையும் புதுமையும் கலந்து விளங்குகின்றன.”

 

    • “என்ன ஐயா, சும்மா அளக்கிறாய்? பழமையாவது, புதுமையாவது! மனிதன் தன் வீட்டுப் படங்களை யெல்லாம் அகற்றிப் பெரிய புரட்சி பண்ணிவிட்டான். அங்கே பழமை ஏது?” என்று ஒருவர் கேட்டார்.

 

    • ” நாள் தவறினாலும் தலைவர் படத்துக்கு மாலை போடுகிறது தவறுகிறதில்லை. ஊதுவத்தி ஏற்றுவது தவறுவதில்லை. விளக்கு ஏற்றுவது தவறுவது இல்லை.”

 

    • ” சரிதான். நமக்குக் கோயில் கட்டிக்கும்பிடுவதுதான் பாக்கி போல் இருக்கிறது!” என்று புன்முறுவலுடன் தலைவரே பேசினார்.

 

    • ” அவருடைய அன்பை நாம் பாராட்டவேண்டும்” என்று இடையிலே தம் கருத்தை உரைத்தார் ஒருவர்.

 

    • ” நான் அன்பு இல்லை என்றா சொல்ல வருகிறேன்? வெளி விளம்பரம் இல்லாமல் அந்தரங்க அன்போடு முருகேசன் இருக்கிறார் என்பதையே இந்தச் செயல் காட்டுகிறது. ஆனாலும்… தலைவர் மேலே பேசுவதற்குள், ” ஆனாலும் இது பழைய பண்பாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என்று ஒருவர் கேட்டார்.

 

    • ” இல்லை, இல்லை. பழமை, புதுமை என்ற வேறுபாடு சிலவற்றிற்கு இல்லை. மலரால் அலங்காரம் செய்வது பழமை என்று தள்ளிவிட முடியுமா? ஊதுவத்திவைப்பது பழமை என்றால் நமக்கு நல்ல மணம் வேண்டாமா? ஆனால்

 

    • இவற்றை யெல்லாம் கண்ணுக்குத் தெரியாத பேர்வழி ஒருவரைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு, வாழும் மனிதருக்கு ஆகாமல் வீணடிப்பதுதான் தவறு…” நல்ல வேளை! தலைவர் தம்முடைய பிரசங்கத்தைத் தொடர்வதற்கு முன் மற்றொரு நண்பர் இடையிலே பேசினார். “எப்படியானாலும் முருகேசன் தம் மரியாதையைக் காட்டத் தாம் விரும்பும் முறையை மேற்கொள்ள அவருக்கு உரிமை உண்டு” என்று அவர் கூறினார்.

 

    • அன்று தலைவர் பிறந்த நாள் விழா. முருகேசன் வீட்டில் ஏகதடபுடல். அன்று ஆடி வெள்ளிக்கிழமை. வேறு சிலர் வீட்டில் சுவாமிக்கு ஆராதனை நடத்தினார்கள். முருகேசனோ தலைவர் படத்துக்கு அலங்காரம் செய்து, நண்பர்களைக் கூப்பிட்டு உபசாரம் செய்தான். இப்படி அடிக்கடி நடந்தது.

 

    • ஒருநாள் கூட்டம் கூடியது. தலைவர் ஊரில் இல்லை. அந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய யோசனையை அவன் வெளியிட்டான்.

 

    • “வருகிற மாதம் திருவாதிரை வருகிறது. மற்ற ஜனங்கள் அன்று உற்சவம் நடத்திக் கொண்டாடுகிறார்கள். நாம் சும்மா இருக்கிறோம். நாமும் அன்று விழாக் கொண்டாடவேண்டும். குருட்டு நம்பிக்கையைத் தகர்க்க இது சரியான வழி. பகைவனை சரியான இடத்தில் சரியான காலத்தில் தாக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் விழாக் கொண்டாடும் காலத்திலேயே நாமும் விழாக் கொண்டாடினால் பலரை நாம் இழுக்கலாம்” என்று தன் கருத்தைக் கூறினான். மற்றவர்கள் அது நல்ல யோசனை என்று ஒப்புக்கொண்டார்கள்.

 

    • திருவாதிரை யன்று தலைவர் நடராஜன் படத்துக்கு மாலையிட்டு விழா நடத்தினான், முருகேசன். அன்று களியே கிண்டி வந்தவர்களுக்கு வழங்கினான்.

 

    • “சரியான தந்திரம். இப்படித்தான் குறும்பாடுகளை வசமாக்க வேண்டும்” என்று க.ம. கட்சிக்காரர்கள் பேசிக் கொண்டார்கள்.

 

    • முருகேசன் கூட்டம் கூட்டி விழா நடத்துவது மாத்திரம் அல்ல; தனியாகவே தலைவர் படத்தின் முன் அமர்ந்து தியானம் செய்தான். கண்ணீர் வடித்தான். இந்த விசித்திரத்தைக் கண்டவர்களுக்கு அவன் மனநிலை ஒன்றும் விளங்கவில்லை.

 

    • தலைவர் நடராஜனுக்கு இந்தச் செய்திகள் காதில் பட்டபோது அவருக்கு உடம்பு பூரித்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

 

    • எதிர்பாராத விதமாக ஒருநாள் தலைவர் படத்துக்குக் கண்ணாடி உடைந்துபோயிற்று. அப்போது முருகேசன் வருந்தினான். விம்மி விம்மி அழுதான்: ‘இனிமேல் இந்த வேஷம் போதும். என் மனச்சாட்சி என்னை அறுக்கிறது’ என்று வாய்விட்டுப் புலம்பினான். வீட்டில் உள்ளவர்களுக்கு அவன் ஏன் அப்படிக் கதறவேண்டுமென்பது விளங்கவில்லை.

 

    • படத்துக்குக் கண்ணாடி போடுகிறவனை அழைத்து வரச் செய்தான். அந்தப் படத்தின் உடைந்த கண்ணாடிகளை எடுக்கச் சொன்னான்.

 

    • “பின்னாலே தகரம் உறுதியாக இருக்கிறது. சட்டத்தை மாற்றிவிடட்டுமா?” என்று படக்காரன் கேட்டான்.

 

    • “சட்டம், தகரம் எல்லாம் இருக்கட்டும். முதலில் மேலே இருக்கும் படத்தை எடு” என்றான் முருகேசன்.

 

    • “வேறு படம் போடப் போகிறீர்களா?”

 

    • “இல்லை; இந்தப் படத்தை மெதுவாக எடு; கீழே உள்ள காகிதம் குலையாமல் இந்தப் படத்தை மாத்திரம் ஜாக்கிரதையாக எடு.”

 

    • படக்காரன் மேலிருந்த தலைவர் நடராஜன் படத்தை மெல்ல எடுத்தான். என்ன ஆச்சரியம்! உள்ளேயும் நட ராஜன் படம். க. ம. கட்சித் தலைவர் நடராஜன் அல்ல; முருகேசனுடைய குலதெய்வமாகிய நடராஜன். ஆம்!

 

    • அப்படியானால் இத்தனை காலமும் நடந்த விழாக்கள்-?

 

    • அடுத்த நாளே முருகேசன் கடவுள் மறுப்புக் கட்சியினின்றும் விலகிக்கொண்டான். அவன் வீட்டுக் கூடத்தில் மறைந்து நின்று அவனுடைய பூஜையை ஏற்ற நட ராஜப் பெருமான் வெளிப்பட்டுவிட்டார்!

 

    • இதோ முருகேசன் வாயாரப் பாடுகிறது காதில் கேட்கிறது:

 

    • ‘தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான புன்மை யேனை ஆண்டுஐயா புறமே போக விடுவாயோ? என்னை நோக்கு வார்யாரே? என்நான் செய்கேன் எம்பெருமான்? பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே?”

 

    – திருவாசகம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லிக்கண்ணன் கதைகள் – ஊரும் ஒருத்தியும்வல்லிக்கண்ணன் கதைகள் – ஊரும் ஒருத்தியும்

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை. இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது. ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே

தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)

இருமருங்கும் வானைத் தொட்டு உயர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்களுக்கு மத்தியில், வளைத்து நெளிந்து சென்ற மலைப்பாதையில்… மெதுவாக ஊர்ந்தது அந்த இனோவா. மழையின் ஊடே உதகமண்டலத்தில் அந்த சரிவான பாதையில் வண்டியை ஓட்டுவது சிரமமாகவே இருந்தது காண்டீபனுக்கு. அதில் பயணித்த அனுஜா

தாயும் கன்றும் – கி.வா. ஜகன்னாதன்தாயும் கன்றும் – கி.வா. ஜகன்னாதன்

கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன் அருமையாக வளர்த்த மாட்டின் கன்று அது. அவன் அருமையாக வளர்த்தது மாட்டைத்தான்; அதன் கன்றை அல்ல. கன்று மாடு சுரப்பு