Advertisements

சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 11


அத்தியாயம்-11

முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
ஒரு மலையில் நான் கண்ட
மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின்
மூலத்தைப் பாதிக்குமா….
நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது
தைய தையா..”

‘பா’ வடிவில் அமைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் குருவிக்கூடுப்போல் இருந்த அத்தனை வீடுகளில் ‘8c’ என்ற கதவு எண் பொறுத்தப்பட்ட வீட்டில் முழு வால்யூமில் இப்பாடல் ஓடிக்கொண்டிருக்க தொலைகாட்சி முன் அமர்ந்திருந்தான் ஆரியன்.

நெற்றியில் ஒரு ப்ளாஸ்டரும் வலதுக்கையில் சிறு கட்டும் வலது  கணுக்காலோடு பாதத்தில் சற்று பெரிய கட்டும் போடப்பட்டிருக்க காலை எதிரே இருந்த மேசைமீது வைத்து சாய்ந்தமர்ந்திருந்தான்.

சற்று தள்ளி அமர்ந்து மும்முரமாய் ஏதோ எழுதிக்கொண்டிருந்த தங்கை மேக்னா,

“சவுன்டயாவது குறைச்சு தொலையேன்டா..ஸ்கூல் வீட்டு வந்ததில் இருந்து என் காது ஜவ்வே அறுந்திடும் போல..”

என்று எரிச்சலாக கூற அலட்சியமாய் தோளை குலுக்கிய ஆரியன்,
“முடியாது..காது வலிச்சா ரூமில் போய் படி போ..”
என்று கூற கடுப்புடன் பேனாவையும் கோட்டையும் டப்டபபென்று மூடியவள் அவற்றை எடுத்துக்கொண்டு பூமி அதிர வேக எட்டுக்களுடன் நடக்க அவளை மேலும் கடுப்பேற்றவே,

“ஏய்…மேகி..அப்படியே அந்த தண்ணீய எடுத்துக் கொடுத்துட்டு போ..”
என்று கட்டளையாய் கூற புஸூபுஸூவென மூச்சு விட்டவள்,

“அம்மாஆஆஆஆ..”
என்று பல்லை கடித்துக்கொண்டு கத்த இவள் சத்ததில் உள்ளிருந்து வெளியே வந்த ரம்யா,
“ஏன்டி..கத்துற…” என்றார்.

“உன் புள்ளைய ஒழுங்கா இருக்க சொல்லு..இல்ல நான் மனுஷியா இருக்க மாட்டேன்..”

“என்னடா பண்ண…”

“தாகமா இருக்கேன்னு தண்ணீ தான் ம்மா கேட்டேன்..அதுக்கு கத்துற..”

என்றான் பாவம்போல்..

“ஏன்டி..அடிப்பட்டு கிடக்கான் என் புள்ள..தண்ணீ எடுத்துக் தரதுல என்னடி குறைஞ்சு போயிடுவ..”

“இத ஒன்னு சொல்லியே நாலு நாளா உன் புள்ளை என்ன படுத்தி எடுக்குறான்..போயும் போயும் ஒரு நாய் க்ராஸ் ஆனாதுல பயந்து பைக்கில் தடுமாறி விழுந்து வாரிட்டு ஏதோ வீரதீர சாகசம் பண்ணின மாதிரி ராஜ கவனிப்பு தான்… பேசாமல் நானும் நாளைக்கு ஒரு கட்டு போட்டுட்டு வந்து உட்கார்ந்திடுறேன்..”

“வாயிலே போடுவேன்.. இதெல்லாம் பேச்சுக்கு அழகா.. கழுதை ரொம்ப வாய் வச்சு கிடக்கு..”

“ம்மா..விடும்மா தங்கச்சி ஏதோ தெரியாமல் பேசிட்டாள்..”

என்று அப்பாவி போல் கூறினாலும் அவன் நடிக்கிறான் என்று மேக்னாவிற்கு தெரியும்.

நான்கு நாளாய் வீட்டிலேயே அடைந்து கிடப்பது சலிப்பாய் இருக்க தங்கையை சீண்டி வம்பிழுப்பதே முழு நேரப் பொழுதுப்போக்காய் வைத்திருந்தான் ஆரியன்.

அப்பா- அம்மா இருவரிடமும் ஆரியன் பொறுப்பானவன், எந்த வம்பு தும்புக்கும் போகாத அக்மார்க் நல்ல பையன் என்று பெயரெடுத்தாலும் அவன் செய்யும் தகிடுததம் எல்லாம் மேக்னா கண்டுப்பிடித்திடுவாள்.அவன் கல்லூரியில் செய்யும் ரகளை எல்லாம் எப்படியும் தங்கையிடம் உளரிடுவான்..ஆனால் அதனை அவள் பெற்றோரிடம் கூறினால் அவர்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.எனவே எப்பொழுது அண்ணன் -தங்கை இடையே டாம்-ஜெர்ரி உறவு தான்.

“பாரு..இப்பகூட அவன் உனக்கு தான் சப்போர்ட் பண்றான்..கொஞ்சமாவது அவனை பார்த்துக் கத்துக்கோ..”
என்றவர் வாயிலே ஏதோ  முணுமுணுத்தப்படி உள்ளே செல்ல தங்கையை பார்த்து நக்கலாய் சிரித்தான் ஆரியன்.

“நீ என்னை படுத்துறதை கூட தாங்கிப்பேன்டா..ஆனால் எல்லாம் செஞ்சிட்டு இந்த புள்ளையும் பால் குடிக்குமாங்குறா மாதிரி கொடுக்குறீயே ஒரு லுக்கு அதை தான் தாங்கவே முடியல..

உனக்கெல்லாம் நல்ல பேய்  மாதிரி ஒரு அண்ணி வந்து டெய்லீ கும்பிபாகம் ட்ரீட்மெண்ட் தான் கிடைக்கும்டா..இது என் சாபம் டா..”
என்று ஆற்றாமையோடு சபிக்க,

“போடி..போடி.. நானெல்லாம் நிஜ பேய்யே பார்த்தாச்சு..”
என்று அலட்சியமாய்..
(பார்த்துடா..தங்கச்சிங்க சாபம் வலிமையானது 😉)

அதே சமயம் அழைப்புமணி ஒலிக்க தந்தை வரும் நேரம் என்பதால் அவர்தான் என்று எண்ணி வால்யூமை குறைத்துவிட்டு சேனலை மாற்றி நல்லப்பிள்ளையாய் அமர்ந்திருக்க அவனை முறைத்தாலும் தானே சென்று கதவின் பீக் ஹோலில் பார்க்க அனித்தும் ஜெய்யும் நின்றிருந்தனர்.

“போதும் சர் ஆக்டிங்..உன் பிரண்ட்ஸ் தான்..”
என்றபடி கதவை திறக்க,

“ஹாய் தங்கச்சி..”

என்று கோரஸ் போட்டவர்களுக்கு பதில் சொல்லாமல் அவள் உள்ளே செல்ல,
“வாங்கடா..”
என்று இருந்த இடத்தில் இருந்தே வரவேற்றான் ஆரியன்.

“என்ன மேகியோட சண்டையா..முகத்தை திருப்பிக்குது..”

“சண்டை என்னைக்கு தான் இல்ல…நீங்க உட்காருங்கடா…”
என்றான்.

“இப்போ பரவாயில்லையாடா..நீ இல்லாமல் காலேஜ் போகவே போர் அடிக்குது..தானே சஸ்பென்ஸன் கேன்சல் ஆகும் போது..நீ இப்படி விழுந்து வாரிட்டு வந்திருக்க…”

என்று அனித் கூறினான்.ஆம்..எல்லோரிடமும் அப்படி தான் கூறி வைத்திருந்தான் ஆரியன்.

அன்று சக்தியை பார்த்துவிட்டு வந்தபின் இரவு தூக்கமே இல்லை.

அங்கே நடந்ததே அவன் கண்முன் வர ‘தேவையில்லாத விஷயத்தில் சிக்கி இருக்காளே..’ என்று சக்தி மேல் கோபம் போகி பரிதாபமே மேலோங்கியது.

அவளோடான சந்திப்புகளில் அவளை பற்றி ஓரளவு யூகித்திருந்தான்.தான் சற்று அதட்டி பேசியதற்கே பயப்படும் சக்தி ஏன் இந்த விபரீத பிரச்சனையில் தலையை கொடுத்தாள் என்ற எண்ணமே பிரதானமாய் இருந்தது.

இவ்வாறான மனநிலையில் அவன் இருக்க மறுநாள் கடைக்கு சென்று திரும்பும் வழியில் எதிரே வந்த இரு பைக்குடன் மோதி கீழே விழுந்தான்.

தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தவன் இதனை விபத்து என்ற முதலில் எண்ணினான்.ஆனால் அவன் ஹெல்மட் அணிந்திருந்த ஆடவன் அவனை மீண்டும் கீழே தள்ளி குரல்வளையை நெறித்தவன்,

“ஏன்டா..படிக்க காலேஜ் போறீயா..இல்ல பொம்பள பிள்ளைங்களை வம்பிழுக்க போறீயா…”
என்று தொடங்கி கண்ட மேனிக்கி வசைபாடியபடி தாக்க ஏற்கெனவே கீழே விழுந்ததில் கிறக்கத்தில் இருந்ததனால் எதிர்க்க முடியவில்லை.

சற்று நேரம் கேட்பார் அற்று கிடந்தவன் சமாளித்துக்கொண்டு தந்தையை அழைத்தால் பயந்துவிடுவார் என்பதால் நண்பர்களை அழைக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே வந்து அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சக்தி பிரச்சனைகாக தான் அடித்தார்கள் என்று புரிந்தது.ஆனால் இது அவளுக்கு தெரியாமல் யாரோ செய்தது என்று எண்ணினான்.அவன் சஸ்பென்ட் ஆனாதே அவளுக்கு தெரியாமல் தான் நடந்தது.அதே போல் அவள் இருக்கும் பிரச்சனையில் இதெல்லாம் அவளுக்கு தோண்றாது..வேறு யாரோ தான் என்பது புரிந்தது.இருந்தாலும் இதனை பெரிது படுத்த விரும்பவில்லை.

ஏற்கெனவே வந்த புகாரில் தந்தை மனம் நொந்துள்ளார்.மேலும் இதுவேறு தெரிந்தால் தேவையில்லாமல் பயப்படுவார் என்பதால் வெறும் விபத்து என்பது போலே சித்தரித்துக் கூறியிருந்தான்.

இதனிடையே கல்லூரியில் இருந்து ‘ஆரியன் மேல் தவறு இல்லை என்று அந்த பொண்ணே கூறி விட்டதால் சஸ்பென்ஷன் கேன்சல் ஆகிற்று.’ இதன்மூலம் அவன் யூகம் சரியே என்பதை உணர்ந்தான்.

ரம்யா மூவருக்கும் காஃபி எடுத்து வந்தவர் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல,

“ஏன் மச்சான் கேட்குற..இந்த நாலு நாளா காலேஜ்ல என்னென்னவோ நடக்குது..”

என்று ஜெய் தொடங்கவும்,

“சும்மா இருடா..அப்புறம் பேசிக்கலாம் அம்மா காதுல விழுப்போது..”

என்று அனித் அடக்க, “என்னாச்சு டா..சொல்லு அம்மா கவனிக்க மாட்டாங்க..”
என்று ஆரியன் கேட்க மெல்லிய குரலில் கூறினான்.

“நம்ம காலேஜ் பக்கத்துல ஒரு காலி இடம் இருக்கும்ல..அங்க ரெண்டு டெட் பாடி எடுத்திருக்காங்க..பாடி கூட இல்ல வெறும் எழுப்புகூடு..எத்தனை வருஷத்திற்கு முந்தி புதைச்சதோ..போலீஸ் இப்போ தான் மோப்பம் பிடிச்சிருக்கு..செம்ம இஸூ ஆச்சுடா..”

“மக்கும்..அவங்க எங்க கண்டுபிடிச்சாங்க..யாரோ தகவல் சொல்ல அதை செக் பண்ண தான் வந்திருக்காங்க..பார்த்தால் அது உண்மையா ஆகியிருக்கு..”

அவர்கள் கூறிய செய்தியில் அதிர்ந்தவன் சட்டென்று விஷயம் பிடிப்பட, ‘இந்த சக்திக்கு ஏன் இந்த வேலை…’ என்று எண்ணியவன்,

“என்னடா சொல்றீங்க..நியூஸ்ல எல்லாம் எதுவும் வரலையே..”
என்றான் குழப்பமாக..

“அங்க தான் விஷயமே..அந்த பாடி நம்ம விஜய் சர் தங்கச்சியோடதுனு ஒரு புரணி கிளம்பியிருக்கு..நம்ம காலெஜ் பேர் இன்வால்வ் ஆகுறதால மேனேஜ்மெண்ட் பணத்தால ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க..இருந்தாலும் விசாரணை போயிட்டு இருக்கு..இந்த விஷயம் நடந்தபுறம் இதுல திடீர்னு நைட் கேர்ள்ஸ் ஹாஸ்டலில் ஏதோ சவுன்ட் கேட்குது.. மர்மமான நடமாட்டம் இருக்குனு ஸ்டூடென்ஸ் பயந்து சிலருக்கு காய்ச்சல் வந்துடுச்சு போல.. ஹாஸ்டல் ஒட்டி தானே அந்த இடம்..அதனால ஏதேதோ கற்பனை பண்ணி இந்த பொண்ணுங்க பயப்படுறாங்க..
அது ஒருபக்கம் பிரச்சனை..”

அனித் கூறியவை எல்லாம் கேட்டு விஷயம் பெரிதாவதை உணர்ந்த ஆரியன் அனைத்திற்கும் வேர் சக்தியை வைத்து இயக்கம் அக்னிமித்ரா என்பது புரிந்தது.

அந்த பெண்ணின் கதையை கேட்டு பரிதாபம் வந்தாலும் ப்ராக்டீகலாய் யோசிக்கும்போது போய் சேர்ந்துவிட்ட அவளால் இருக்கும் சக்திக்கு தானே ஆபத்து என்று தோண்ற
அன்று கேண்டீனில் தான் சட்டென்று எழும் போது மிரண்டு விழித்த அவள் முகம் அவன் கண்முன் இம்சிக்க
எதாவது செய்து அவளை இதிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வேரூன்றியது.ஏன் அவள்மீது இந்த அக்கறை என்றெல்லாம் அவன் யோசிக்க முற்படவில்லை.

“உனக்கு எப்படி அனித் இதெல்லாம் தெரியும்..”

“இந்த விசாரணை குழுவில் என் அண்ணனும் இருக்கான்டா..என் காலேஜ் சம்பந்தப்பட்டதுன்றதால அப்பாட்ட சொல்லிட்டு இருந்தான்..அது அப்படியே என் காதிலும் விழுந்துச்சு..”

என்று சொல்ல அப்பொழுது தான் அவன் அண்ணன் இன்ஸ்பெக்டர் என்பது நினைவு வந்தது.

அதன்பின் பேச்சு நண்பர்களுடன் இருந்தாலும் மனதில் சீக்கிரமே கல்லூரி செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.அவன் நினைப்பதுபோன்ற விபரீதம் சக்திக்கு ஏற்படுமா..??

Advertisements

One thought on “சமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 11”

  1. sridevi says:

    Sakthi wanteda matti kitale

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: