Advertisements

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 18


பெரம்பூர், பாஸ்கெட்பால் க்ரௌண்டைத் தேடிக் காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே வந்தான் ஜிஷ்ணு. முதல் நாள் வேறு சரயுவிடம்,

“நான் ஸ்கூல் படிக்கிறப்ப பாஸ்கெட்பால் விளையாண்டது. டென்த்ல நல்ல மார்க் வாங்கணும்னு விளையாட்டை மூட்டை கட்டி வச்சுட்டு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்” என்று புரூடா விட்டிருந்தான்.

அவளும் அதனைப் பற்றி அவனிடம் கேட்க, கஷ்டப்பட்டு வேறு ஏதோ பேசித் திசை திருப்பினான். நேற்று டம்மீஸ் புத்தகம் படித்ததும்தான் கிரிக்கெட் மட்டுமில்ல பாஸ்கட்பால் கூட ரொம்ப அருமையான கேம்தான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். சரயு விளையாடுவது என்று தெரிந்ததும் அதன் மேல் ஆர்வம் பீறிட்டது ஜிஷ்ணுவுக்கு.

வகுப்பு மாணவர்களுக்குப் புது விளையாட்டுக் கற்பிக்கும் எண்ணத்துடன் பழக்கூடையை பால்கனியில் கட்டிவிட்டு அதில் பந்தைப் போடுமாறு சொல்லிய ஜேம்ஸ் கூட அந்த விளையாட்டு இப்படி உலக அளவில் புகழ் பெறும் என்று நினைத்திருக்க மாட்டார். ஒவ்வொரு முறையும் கூடையில் விழும் பந்தினை எடுப்பது கஷ்டமாயிருந்ததால் கூடையின் அடிப் பகுதியில் வெட்டி விட்டாராம்.

அப்படி அவர் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சத, சரயு விளையாடுறான்ற ஒரே காரணத்திற்காக ஓவர்நைட் ஸ்டடி செய்து அறிந்துக் கொண்ட ஜிஷ்ணுவை என்ன சொல்றது? நம்ம ஊர்ல விளையாட்டுத் துறையை வளர்க்க பெண்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும் போலிருக்கிறது.

மைதானம் ஜே ஜே என்றிருந்தது. வெளியே ஒரு ஜோதிகாவின் தங்கையைப் போல ஒரு பெண் பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள். நல்ல நிறம், ஓரளவு உயரம் என்று எதிலும் குறை சொல்ல முடியாததைப் போலிருந்தாள். ஆனால் இறுக்கிப் பிடித்த சட்டை மற்றும் முக்கால் தொடை தெரிய போட்டிருந்த மிகச் சிறிய ஷார்ட்ஸ் விளையாட்டு உடையையே அவள் போட்டிருந்த விதம் முகம் சுளிக்க வைத்தது. அவளை விட்டுக் கண்ணகற்ற முடியாமல் ஆண்கள் பிரிவினர் பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர்.

அவ்வளவு நேரம் அவர்களை இம்சித்தவள், ஜிஷ்ணு இறங்கியதும் அவனை சுவாரஸ்யமாக நோட்டமிட ஆரம்பித்தாள். அவள் கையைத் தூக்கும் போது லோ ஹிப் உடையின் பலனால் தெரிந்த வயிற்றைப் பார்த்து முகம் சுளித்துக் கொண்டே சென்றான் ஜிஷ்ணு. அவன் அழகை ரசிப்பவன்தான். ஆனால் அதற்கொரு இடம், பொருள், ஏவல் இருக்கிறது. ஆண்கள் பயங்கரமான சபல புத்திக்காரர்கள் என்று அவளிடம் யாரோ தப்பாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. அந்தப் பெண் வேண்டுமென்றே அங்கங்களை வெளிச்சம் போட்டு அங்கு விளையாடிய ஆண்களின் கவனத்தை சிதறடிப்பது போலத் தோன்றியது அவனுக்கு.

“பூஜா, யாருடி இந்த மன்மதன்? உன்னை பார்த்து முகம் சுழிச்சுட்டுப் போறான்” என்று அந்தப் பெண்ணின் தோழி அவளிடம் கேட்க, பூஜாவின் முகம் அவமானத்தால் கருத்தது.

இதை அறியாத ஜிஷ்ணுவோ ‘ஐயோ சரவெடியும் இவளமாதிரிதான் அரைகுறையா டிரஸ் பண்ணிருப்பாளா’ என்று சற்று மனக் கிலேசத்துடன்தான் சென்றான். மைதானத்தில் பயிற்சி செய்துக் கொண்டிருந்தவளை கண்கள் தேடிக் கண்டுபிடித்தது. அவன் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாய் உடையணியவில்லை. கிட்டத்தட்ட முட்டியைத் தொட்ட தொளதொள ஷார்ட்ஸ், காலணி மற்றும் சரியான அளவில் போடப்பட்ட டீஷர்ட். அப்பாடாவென்றிருந்தது ஜிஷ்ணுவுக்கு. இருந்தும் ஷார்ட்ஸ்க்கும் ஷூவுக்கும் நடுவே தெரிந்த சரயுவின் கால்கள் தந்தமாய் ஒளிவீசியது.

‘பெரிய பொண்ணானதும் சந்தனக்கட்டையாட்டமிருக்கா. இவ மட்டும் வெளில இருக்குற பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிருந்தா… நானே கையோட கூட்டிட்டுப் போய் நல்ல ட்ராக் ஷூட் வாங்கித் தந்திருப்பேன்’ என்றது மனது.

மறுநாள் நடக்கவிருந்த மேட்சுக்காக ஷூட்டிங் ப்ராக்டிஸ் செய்துக் கொண்டிருந்தாள். ராம பாணத்தைப் போல சரியாய் கூடையில் விழுந்த பந்துகளை பொறுக்கித் திரும்பத் திரும்ப மற்ற பெண்களிடம் தந்துக் கொண்டிருந்தார் அவளது கோச்.

தரையில் ஏணியைப் படுக்கப் போட்டு இடைவெளியில் குதித்துத் குதித்து சைடில் ஓடினார்கள். எதிராளிகளிடமிருந்து பாலைப் பிடுங்கப் பக்கவாட்டில் ஓட வேண்டும். அதற்குப் பயிற்சி எடுக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டான் ஜிஷ்ணு.

சிறிய முக்காலி ஒன்றினைப் போட்டு ரைட், ரைட், ஜம்ப், லெப்ட், லெப்ட் என்று சவரிமுத்து கத்தக் கத்தப் பெண்கள் அனைவரும் தெய்வ வாக்காய் மதித்து இடது புறம் நகர்தல், வலது புறம் நகர்தல், முக்காலியைத் தாண்டல் என்று பயிற்சி எடுத்தனர்.

பந்தினை இடத்தும் வலதும் தரையில் தட்டித் தட்டி ஓடியவர்களின் வேகத்தைத் தடுக்க தோள்களை மற்றொருத்தி பிடித்துக் கொள்ள தடுப்பவர்களை எதிர்த்தும், பந்தினைக் கீழே விட்டுவிடாமல் தரையில் தட்டியபடியே வேக வேகமாய் முன்னேறினார்கள். சவரிமுத்து சரயுவைப் பிடித்துத் தடுக்க அவரை அனாயசமாய்த் தள்ளித் தள்ளி இலக்கை நோக்கி முன்னேறினாள் சரயு.

பெண்கள் டீமின் பொறுப்பான காஞ்சனா டீச்சர் கீழே விழுந்துவிட்டதால் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. அதனால் அவரே இரு டீம்களையும் சுமக்கும் பொறுப்பினை ஏற்க வேண்டியதாயிற்று.

“வெல்டன்லே… சரயு இந்த தடவை வெற்றிக் கோப்பையோடத்தான் ஊருக்குப் போறோம்லே. நீங்க மட்டும் மங்களூர் டீம ஜெயிச்சா… எல்லாருக்கும் தலப்பாக்கட்டுல பிரியாணி… ” சொல்லிவிட்டு மகளிரணியில் அனைவரின் முகத்தையும் பார்த்தார்.

ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அலட்சியமாய் பார்த்தவர்களிடம்,

“நடிகர் விஜய் வீடு இங்க விருகம்பாக்கத்துலதான் இருக்காம். உங்க எல்லாரையும் கூட்டிட்டு போறோம்ல. இது கில்லில நடிச்ச திரிஷா மேல சத்தியம்லே” என்று சொல்லி முடித்தவுடன் அணியே புது ரத்தம் பாய்ந்தாற்போல் சுறுசுறுப்பானது.

இதே சவரிமுத்து, ஆண்கள் டீமிடம் திரிஷா வீட்டுக்குக் கூட்டிச் செல்வதாய் விஜய் மீது சத்தியம் செய்திருக்கிறார்.

சரயு பயிற்சி செய்யுமிடத்தில் அருகிலேயே ஒரு பெஞ்சில் அமர்ந்துக் கொண்டான் ஜிஷ்ணு.

“ஸ்மால் பார்வர்ட் இங்க வா”

“கார்ட் இப்படி டிபென்ட் பண்ணு” என்று சரயுவின் குரல் தனியாக ஜிஷ்ணுவின் காதில் கேட்டது.

“ஹாய் விஷ்ணு, எப்ப வந்த?” என்றபடி ஒரு பெண்ணைத் தனியே அழைத்துக் கொண்டு ஜிஷ்ணு அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“ஒரு மணி நேரமாச்சு” என்றபடி அவளுக்கு குடிக்கத் தண்ணியையும், முகம் துடைக்க டவலையும் எடுக்க உதவினான்.

“போன தடவை நீ என்னடி ஷூட் பண்ண? ஒரு பால் கூட கூடைல விழல. நீ ரைட்லயோ லெப்ட்லயோ நின்னு ஷூட் பண்ணா எனக்கு டைரக்க்ஷன் கணிக்க சுலபமா இருக்கும். நான் அந்த திசைல நின்னு பால் அடுத்த டீம் கைக்கு போக விடாம தடுத்துடுவேன். நீ நடுவுல நின்னுக் கேவலமா ஷூட் பண்ணா என்னால எப்படி பந்து போற திசையைக் கணிக்க முடியும்?” என்று சரயுவும் அரட்டிக் கொண்டிருந்தாள்.

“அந்த பூஜா என்னை முன்னாடித் தள்ளித் தள்ளி விடுறாடி” புகார் சொன்னாள்.

“அவ என்னடி இப்படித் தப்பாட்டமா ஆடுறா… இருந்தாலும் பௌல் தரமாட்டிங்காங்க”

சரயுவுக்கும் தெரிந்துதானிருந்தது. எல்லாரும் அவளது கோச் சவரிமுத்தைப் போல நேர்மை நீதி என்றிருக்க முடியுமா?

“நானும்தான் பாக்கேன். அவ நம்பள ஒழுங்காவே விளையாட விடமாட்டேங்கா” அவளும் நெல்லைத் தமிழிலேயே பதிலளித்தாள்.

அவளை டீமில் மற்ற ஆட்களை அழைத்து வரச் சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

‘என்ன செய்யப்போறா? யோசனை பண்ணுற ஸ்டைலே பயங்கரமா இருக்கு’ என்றபடி அவள் யோசிக்கும் அழகை ரசித்தான் ஜிஷ்ணு. ஒரு நகை அவள் அணிந்திருக்கவில்லை. சொல்லப் போனால் பொட்டு கூட வைக்கவில்லை. தலைக்கு ஹேர்பின் கூட குத்தவில்லை. முடியை அள்ளிக் கொண்டை போட்டிருந்தாள். இருந்தும் அந்த செதுக்கி வைத்த மூக்கும், சதிராடும் கண்ணும், பித்துப் பிடிக்க வைக்கும் இதழ்களும் ஜிஷ்ணுவின் மனத்தைக் கொள்ளை கொண்டது.

தனது வழக்கமான மந்திரமான ‘மனமே விட்டுவிடு, இவ சரவெடி, இவளை நினைக்காதே’ என்றபடி ஒரு ஷணம் கூட விடாமல் அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவளைப் பார்த்ததிலிருந்து மற்ற பெண்களின் மேல் இருந்த ஆர்வம் கூட போய்விட்டது. கழுவித் துடைத்த தரை போலப் பளிச்சென்றிருந்த அவன் மனதில், சரயு கொஞ்சம் கொஞ்சமாய் கால் பதித்து வருவதைத் தடுக்க இயலாத கையாலாகாதவனாய் இருந்தான்.

ஜமுனா அவனுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிக் பேசினால் கோவம் வரும். பிலிம் காட்டுறா பாருன்னு திட்டத் தோணும். ஆனா சரயு பாஸ்கட்பால் விளையாடுவான்னு தெரிஞ்சதும் அதைப் பத்தின அத்தனை விஷயத்தையும் ராவோட ராவா கத்துட்டு வந்து நிக்கிறேன். இவ எனக்குள்ள என்ன மாயம் செஞ்சா? சரயுவைப் பார்த்தாலே மனம் லேசாகுதே? அவளை நேற்று விடுதியில் இறக்கிவிடும்போது என் இதயத்தில் ஏதோ வலி தோணுச்சே? இவதான் இனிமே என் வாழ்க்கைன்னு என் மனசு சொல்லுதே? ஒரு வேளை இந்த உணர்வுதான் காதலா? என தனக்குள்ளேயே ஆயிரம் முறை கேள்வி கேட்டுக் கொண்டான்.

உள்ளத்தைக் கட்டிப் போடத் தெரிந்தவன்

யாருமே உலகத்தில் இல்லையே

வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்

வண்டுகள் என்ன செய்யும் முல்லையே

சரியா இது தவறா

இந்த உணர்வினை விலக்கிட மனதுக்குத் தெரியல

சரியா… காதல் தவறா…

அவர்கள் தோழிகள் அவளிருக்கும் இடத்துக்கு வந்தனர். அனைவருக்கும் ஜிஷ்ணு, சரயுவின் மாமா என்ற செய்தி பரவியிருந்தது. அதனால் தலைவி சரயுவின் அழகான மாமனுக்கும் ஒரு வணக்கம் வைத்தார்கள். சரயு சேரில் அமர்ந்து கொண்டு கைகளை தொடையில் ஊன்றிக் கொண்டு சொன்னாள்.

“மங்களூர் டீம்ல பூஜா பண்ணுற தொல்லைத் தாங்க முடியல. அவளைச் சின்ன சின்னதா தப்புப் பண்ண வச்சு வெளிய அனுப்பப் பாக்கலாம். அப்பறம் நம்ம நிம்மதியா விளையாடலாம். சோ மேட்ச் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்துக்குள்ள அவ டீம்ல இருந்து வெளிய போய்டணும். கார்ட்ஸ் இது உங்க பொறுப்பு. ஏன்னா உங்களைத்தான் அவ தள்ளி விடப்பாக்குறா. நாளைக்கு விளையாட்டுல அவ தள்ளி விட்டதும் சமாளிச்சு நிக்காம கீழ விழுந்துடனும். அப்பத்தான் வைலேஷன்னு நான் சண்டை போட முடியும். பாத்துடி அடி படாதமாதிரிக்கு ஜாக்கிரதையா விழுங்க. சரியா”

ரயு வர வர நீ மனோரமா டீச்சர் மாதிரியே பேசுற போ” என்றபடி வந்தாள் சேர்மக்கனி. சரயுவின் பள்ளித்தோழி. இப்போது அவளுடன் பாலிடெக்னிக் படிக்கிறாள். இருவரும் பேசுவதை ஜிஷ்ணு பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க, இரண்டு காப்பி வாங்கி வருமாறு தோழியை அனுப்பிவிட்டு சாவகாசமாய் ஜிஷ்ணுவின் பக்கம் திரும்பிக் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். ஜிஷ்ணுவின் முகத்தைப் பார்த்தவாறே கிண்டலாய் கேட்டாள்.

“என்ன ஜிஷ்ணு சைட் அடிக்கிறியா?”

“ச்சே ச்சே இல்ல இல்ல”

“அப்படியா… அந்தப் பொண்ணு என் கிளாஸ்மெட்தான் சேர்மக்கனின்னு பேரு… வேணும்னா அவகிட்ட நீ நல்லவன் வல்லவன்னு புகழ்ந்து வைக்கிறேன்”

‘போடி… வாத்து மடச்சி… உன்னைப் பார்க்க காலைல எந்திருச்சு லொங்கு லொங்குன்னு ஓடி வந்திருக்கேன்… எவளையோ ஒருத்திய சைட் அடிக்கிறியான்னு கேக்குறதைப் பாரு. இவளுக்குத் தானும் ஒரு அழகான பொண்ணுன்னு ஒரு உணர்வேயில்லையா?’ மனதினுள் புலம்பியபடி வெளியே அவளிடம் கேட்டான்.

“நானே கேட்கனும்னு நெனச்சேன் உங்க ஊர்ல என்ன சேர்மக்கனி, சேர்மத்தாயி, சேர்மத்துரைன்னு வித்யாசமா பேர் இருக்கு”

“எங்க தாமிரபரணி ஆத்தங்கரையோரம் அருணாசலம்ன்னு ஒரு சித்தர் இருந்தார். அவரோட சக்தியைக் கேள்விப்பட்ட நெல்லை சீமை கலெக்டர் அவருக்கு சேர்மன் போஸ்ட் கொடுத்தார். அதுலேருந்து அவரை சேர்மன்னு எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க. இருந்தாலும் அவர் சித்து வேலை செய்றதை நிறுத்தல. பக்கத்து ஊர்ல சுடலைப் பேச்சின்னு ஒரு பொண்ணுக்கு குஷ்டரோகம் மாதிரி ஒரு தோல் வியாதி வந்துடுச்சு. அதனால அவளோட வீட்டுக்காரரும் அவளை விட்டுட்டு போய்ட்டான். வைத்தியம் எதுவும் பலன் தராம நம்ம சேர்மனைப் பார்த்தா. அவர் மந்திரிச்சு திருநீறும், தீர்த்தமும் தந்து… தினமும் திருநீறு பூசிட்டு, தீர்த்தத்தைக் குடிச்சுட்டு வரச் சொன்னாரு. அடுத்த அமாவாசைக்கு அவரைப் பார்க்க வந்தா தானே மருந்து கொடுத்து முழுசா குணப்படுதுறதா வாக்கு தந்தாரு”

“அப்பறம் குணமாயிடுச்சா. அதனாலதான் அவங்க பரம்பரைல எல்லாரும் அவரோட பேரை வச்சுக்கிறாங்களா?”

“குறுக்க பேசாதே விஷ்ணு. இந்த மாதிரி திருப்பமே இல்லாம இருந்தா அவரோட சக்தி எப்படி நமக்குத் தெரியும்?”

“இதுல என்ன சரவெடி ட்விஸ்ட் வேண்டி இருக்கு”

“ ஒரு நாள் சேர்மன் தன்னோட சேக்காளிங்கள கூப்பிட்டு”

“அப்படின்னா பேஷன்ட்டா?”

“சீக்காளின்னா தான் வியாதியஸ்தங்க. இவங்க சேக்காளி அப்படின்னா பிரெண்ட்ஸ்ன்னு அர்த்தம்”

“சரி சேக்காளி… கண்டின்யூ”

“நல்லா கேட்டுக்கோ… அப்ப அவருக்கு இருவதெட்டே வயசுதான். ஒரு நாள் அவரோட பிரெண்ட்ஸ்சைக் கூப்பிட்டார்…” குரலை மாற்றி மிமிக்ரி செய்தாள்.

“’ஆண்டவன்ட்டருந்து அழைப்பு வந்துட்டு… வர்ற அமாவாசையன்னைக்கு என்ன அழச்சுக்கிடுவான். என் உயிர் போன பொறவு உடம்ப ஊருக்குத் தெக்க தாமரபரணி ஆத்தங்கரைல இருக்கற பெரிய ஆலமரத்துக்கு அடியில குழிதோண்டி, உக்காந்தா மாதிரி வச்சுரு. நான் பயன்படுத்துன பொருள்களையும் அங்கனேயே வச்சுரு. வானத்துல செங்கருடன் மூணு மொற வட்டம் போடு. மூணாவது தடவ போடும்போது அது நிழலு எம்மேல படும். அதுக்குப் பொறவு மண்ணைப் போட்டுக் குழிய மூடிடுங்க’ன்னு சொன்னாரு”

“பொறவு” சுவராஸ்யமாய்க் கதை கேட்டான் ஜிஷ்ணு.

“அவர் சொன்ன மாதிரியே அமாவாசை காலைல ஆபிஸ்ல வந்து வேலையைப் பார்த்துட்டு, பகல் பன்ணென்டு மணிக்குக் கட்டையை சாய்ச்சவர்தான் எந்திரிக்கல. அவர் வாக்குப்படி அடக்கம் பண்ணிட்டாங்க”

“அப்ப அந்த பொண்ணுக்கு அவர் தந்த ப்ராமிஸ்? வா நான் குணப்படுத்துறேன்னு சொன்னாரே”

“கரெக்ட். அமாவாசைக்கு அவரைப் பார்க்க வந்த பேச்சி விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த அத்துவானக் காட்டுல அவரைப் புதைச்ச இடத்துக்குப் போய் நீ கேட்ட அதே கேள்வியைக் கேட்டு அழுதுட்டு நின்னா. அப்ப அங்க ஒரு தாத்தா வந்தார். அவளைப் பார்த்து,

‘அழாத தாயி, சேர்மன் உசிரோட இல்லாட்டியும் அவரு இடம் தேடிவந்துட்டல்ல உன் நோய் தீர்ந்து ராணியாட்டம் ஆயிருவ… அவரு சமாதி மண்ண எடுத்து தீருநீறா பூசிக்கோ… தீர்த்தத்துக்கு ஊத்து தோண்டி அதுல வர்ற தண்ணிய எடுத்துட்டுப்போ… இந்த மாதிரி இரண்டு அமாவாசைக்கு வந்துட்டு அவரக் கும்புட்டு போம்மா… இந்த மண்ணையும் ஊத்து தண்ணியையும் சேர்மன் நாமத்த சொல்லி பூச உன் நோய் தீரும் சுடலைபேச்சின்னு சொல்லிட்டு மாயமானாரு’

பேச்சியும் அவர் சொன்ன மாதிரியே செஞ்சா. முழுசா குணமாயிட்டா. பிரிஞ்சு போன வீட்டுக்காரனும் கூட வந்து சேர்ந்துகிட்டான். அவளோட கதையைக் கேள்விப் பட்ட ஜனங்க அவர் சமாதி மண்ணை எடுத்து பூசிக்க ஆரம்பிச்சாங்க. அவரை தெய்வமா வழிபட ஆரம்பிச்சாங்க. அதனால பிள்ளைங்களுக்கு அவர் பேரை வைக்க ஆரம்பிச்சாங்க”

“பொறவு”

“பொறவென்ன… கதையும் முடிஞ்சதாம், கத்திரிக்காயும் காய்ச்சதாம். விஷ்ணுவோட காப்பி கப்பும் காலியாச்சாம், காலைலேருந்து சாப்பிடாத சரயுவுக்கும் பசிக்க ஆரம்பிச்சுருச்சாம்”

Advertisements

2 thoughts on “தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 18”

  1. ugina says:

    HAHA SO SWETTTTTT SUPERRRRRRRR

  2. ugina says:

    HAHA SO SWETTTTTT SUPERRRRRRRR

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: