Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16

அன்று லாஸ் ஏன்ஜல்ஸ்

ஜிஷ்ணுவுக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை. அவன் தாய் ஜெயசுதா ஆதாயமில்லாமல் ஒரு காரியமும் செய்ய மாட்டார். இவன் அமெரிக்காவை விட்டுச் செல்ல மனமில்லாமல் வருடக்கணக்காய் படிக்கிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் பணம் அனுப்புகிறார்கள். மார்க்கை, டிகிரியைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை.

‘வீட்டை ரொம்ப ஏமாத்துறோமோ’ என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்வான். பார்ட் டைம் வேலை செய்யவும் அவனது தாய் பெரிய தடா போட்டுவிட்டார். ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்தேவிட்டது.

“ஜிஷ்ணு சங்கராந்திக்கு எங்கண்ணா வீட்டுக்குப் போயிட்டு வந்துடு. போறப்ப மறக்காம நிறைய ஸ்வீட்ஸ், பழம் எல்லாம் தந்து அத்தை மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ. அப்பறம் போனதடவை நீ ஊருக்கு வந்தப்ப வாங்கித் தந்தேனே வைர நெக்லஸ்… அதை ஜமுனாகிட்டத் தந்துடு. நான் வாங்கித் தந்தேன்னு சொல்லாதே… நீயே வாங்கின மாதிரி தா” என்று தாய் சொல்லும்போது கூட அவனுக்குத் தன்னையும் ஜமுனாவையும் தாய் ஜோடி சேர்க்க நினைப்பது புரிபடவில்லை.

முதல் காரணம், ஜமுனா அவனை விட ஆறு மாதங்கள் பெரியவள். தன்னை விடப் பெரிய பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொள்ளச் சொல்வார்கள் என்று எண்ணவில்லை.

இரண்டாவது காரணம், அவனது ஒன்று விட்ட பெரியப்பா மகன் பானுபாஸ்கரனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கப் போவதாக சின்னப் பிள்ளையிலிருந்து பேச்சு. அதற்குத் தகுந்தார்ப்போல் பானு மருத்துவம் படிக்க, ஜமுனாவும் மருத்துவம் படித்தாள். பானு மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தான். இங்கு வந்ததும் அவனது எண்ணமும் மாறிவிட்டது.

“எனக்கு வீட்டைப் பார்த்துக்கிற மாதிரி பொண்ணுதான் வேணும். டாக்டர் வேண்டாம். நான் வேணும்னா விஜயவாடால இருக்குற சின்ன மாமா பொண்ணு ஸ்ரீவள்ளியைக் கல்யாணம் செய்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டான்.

ஜமுனாவோ, “என்னால வீட்ல உட்கார முடியாது. பானு வேற படிச்சு முடிச்சதும் இந்தியாவுக்குத்தான் திரும்பிப் போகணும்னு சொல்லுறான். நான் அமெரிக்காவை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்க மாட்டேன்ப்பா ” என்று மறுத்துவிட்டாள்.

எப்படியோ திருமணம் கலைந்துவிட்டது. அவர்கள் ரெண்டுபட்டதில் ஜெயசுதாவுக்குத் தான் மகிழ்ச்சி. ஜிஷ்ணுவுக்கும் ஜமுனாவைக் கட்டிக் கொள்ளும் முறை வருகிறது. அவர்கள் இனத்தில் ஜிஷ்ணு மிகப் பெரிய பணக்காரனென்றால் ஜமுனாவின் வீடோ மூன்று ஜிஷ்ணுவின் குடும்பத்தை உள்ளடக்கியது. இந்தத் தகுதிகளில் ஜமுனா ஜிஷ்ணுவை விட மூப்பு என்ற விஷயமே கடுகாய் அருகிவிட்டது. அதனால் ஜமுனாவே அவர்கள் வீட்டு மருமகள் என்று தீர்மானித்து விட்டார். ஜமுனாவின் தாய் தந்தையருக்கும் அதில் மகிழ்ச்சியே. ஆனால் ஜமுனா திருமணம் என்ற ஏற்பாட்டுக்கு முன் ஜிஷ்ணுவிடம் அதைப் பற்றிப் பேச விரும்பினாள். அதன் விளைவே ஜிஷ்ணுவின் இன்றைய விஜயம்.

“ஜமுனா வீட்டுல விருந்து ஒண்ணு ஏற்பாடு செய்திருக்காங்க… உன்கிட்ட சொல்லவேண்டியதில்லை… அவங்க பெரிய பணக்காரங்க நாணா… அதனால நீயும் நல்லா டிரஸ் பண்ணிக்கோ. உன்னோட கிழிஞ்ச ஜீன்ஸையும், கசங்குன டீ ஷர்ட்டையும் போட்டுட்டுப் போயிடாதே. போன தடவை பஞ்சாரா ஹில்ஸ்ல வாங்கின சில்க் ஷெர்வானியப் போட்டுட்டு போயிட்டு வா. விரலுக்கு வைர மோதிரம், கழுத்துல ஒரு மொத்த செயின் ரெண்டையும் மறந்துடாம போட்டுக்கோ”

திருமணத்தைப் பற்றி சொன்னால் ஜிஷ்ணு செல்லமாட்டான் என்று தெரிந்து நைசாக விருந்துக்கு அனுப்பினார். அங்கே போனதும் ஜமுனா வீட்டில் அவனைப் பணத்தால் மடக்கிப் போட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை.

மாலை நான்கு மணிக்கு, அவனுக்காகவே பிரத்யேகமாய் டிசைன் செய்த, கிரீம் நிறத்தில், தங்கச்சரிகை வேலைப்பாடு கொண்ட ஷெர்வானியை அணிந்துக் கொண்டான். கழுத்தை சுற்றிலும் அமைந்த காலரின் ஜர்தேசி வேலைப்பாட்டில், முத்தும், வண்ணக் கற்களும் கற்களும் கண்ணைப் பறித்தது. உடைக்குப் பொருத்தமாக மஞ்சள் தங்கத்தில் வைரத்தைப் பதித்து செய்யப்பட்ட ‘ரொலெக்ஸ் யாட்ச் மாஸ்டரை’க் கட்டிக் கொண்டான். அவன் ஆடை அலங்காரத்தைப் பார்த்த தோழன் கேட்டான்.

“ஜிஷ்ணு பெல்லிகொடுகுலா வெல்துன்னா? நீக்கே இப்புடு பெல்லியாரா” (“ஜிஷ்ணு மாப்பிள்ளை மாதிரிக் கிளம்புற? உனக்கே கல்யாணமாடா?” )

“நா அம்மா மாவைய இன்டிகி விந்துக்கு வெல்லமன்னாரு ரா” (“அம்மா எங்க மாமா வீட்டு விருந்துக்குப் போகச் சொல்லியிருக்காங்கடா”)

“அவுனு… நீ மாவைக்கி ஒக்க கூத்துரு உந்திகா… சக்கனி டாக்டர் அம்மாய்” (“உன் மாமாவுக்கு சூப்பரா ஒரு டாக்டர் பொண்ணு இருக்கில்ல”)

“ச்சே தானிக்கி நா கண்ட்டே ப்ராயம் எக்குவ” (“ச்சே அவ என்னை விடப் பெரியவ”)

அவனது பளீரிடும் வாட்சைப் பார்த்துக் கேட்டான் நண்பன்.

“ஏன்டி கொத்த வாட்ச்சா? எந்தகி கொன்னா?” (“வாட்ச் புதுசா? எவ்வளவு?”)

“நேனு கொனலேது மா நாணகாரு நா புட்டினதினானிகி ஒக்க லஷ அரவை வெய்யி இச்சி கொன்னாரு” (“நான் வாங்கல. ஒரு லட்சத்தி அறுவதாயிரம். பிறந்த நாள் பரிசா அப்பா வாங்கித் தந்தார்”)

“ஏன்ட்டி? ஒக்க லஷ அரவை வெய்யிக்கி ஒக்க வாட்சா? ஆ டப்பு உண்டே நேனு ஒக்கசாரி குண்டூருக்கி வெல்லி ஒச்சேஸ்தாணு” (“ஒரு லட்சத்தி அறுவதாயிரத்துக்கு வாட்சா? அந்தக் காசிருந்தா ஒரு தடவை குண்டூருக்குப் போயிட்டு வந்துடுவேன்”)

“அரே, நேனு டாலர்லோ சொப்பேனு” (“நான் விலையை டாலர்ல சொன்னேன்டா…”)

ஈ போவது கூடத் தெரியாமல் பிளந்த கொண்டல்ராவின் வாயையும், வீட்டின் கதவையும் லாக் செய்துவிட்டுக் கிளம்பினான்.

முனாவின் வீட்டில் நண்பர்கள் கூட்டம் குமிந்திருந்தது. அவர் மாமா அந்த ஊரில் பெரிய புள்ளி. தெலுகு மன்றம் ஒன்றில் தலைவர் வேறு. அதனால் அடிக்கடி ஏதாவது சாக்கிட்டு பார்ட்டி வைத்துவிடுவார். வழக்கம் போல் ஒரு ஓரத்தில் நின்று பப்பே உணவை உண்டுவிட்டு, ஜமுனாவின் சித்தி மகன்களான இரட்டையர்கள் சேஷாத்ரி, வெங்கடாத்ரி (அந்தக் கும்பலில் அவர்கள் தான் அவனது அலைவரிசை நண்பர்கள்) இருவருடனும் சேர்ந்து அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மார்க் போட்டுவிட்டு, பின் வாசல் வழியே எகிறிக் குதித்து எஸ்கேப்பாகி விடலாம் என்றெண்ணி வந்திருந்த ஜிஷ்ணுவின் எண்ணத்தில் மண் விழுந்தது. அத்தையும் மாமாவும் அவனை நகரவிடாமல் விழுந்து விழுந்து கவனித்தார்கள். வந்திருந்த பெரிய தலைகளிடம் அறிமுகம் வேறு. ஏதோ இவன் ஆப்பிளுக்கும், மைக்ரோசாப்ட்டுக்கும் போட்டியாய் பெரிய கம்பனி ஆரம்பிப்பதைப் போல அவர்கள் போட்ட பிட்டில் ஜிஷ்ணுவே அசந்து போனான்.

மாடிக்கு அழைத்துச் சென்ற மாமாவிடம் மெதுவாகச் சொன்னான்,
“மாமா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. நான் ஊருக்குப் போய் ஊறுகாய் கம்பனியைத்தான் பாத்துக்கப்போறேன். அது எங்க தாத்தா ஆரம்பிச்சது. எனக்குப் பன்னெண்டு வயசாயிருந்தப்ப அவருக்கப்பறம் நான் தான் பாத்துக்கணும்னு சத்தியம் வாங்கிட்டு செத்துப்போயிட்டார். அவருக்கு செஞ்சுத் தந்த சத்தியத்தைக் காப்பாத்தணும்”

திகைத்த மாமா, “அதனால என்ன அல்லுடு… அது மட்டும் பிசினெஸ் இல்லையா? நம்ம எல்லாரும் சேர்ந்து உங்க சத்தியத்தைக் காப்பாத்துவோம். ஊறுகா பிசினஸயே நாம இங்க பெரிய பட்ஜெட்ல பண்ணுவோம்” என்று சமாதானப்படுத்தினார்.

“ஹாய் ஜிஷ்ணு” என்றபடி அவனருகே வந்தமர்ந்த ஜமுனாவும் அந்த விருந்தின் தன்மைக்கு சற்றும் குறையாத ஆடம்பர உடை அணிந்திருந்தாள். பொன்னிறத்துக்குப் பொருத்தமாக கடல் வண்ணத்தில் அவளணிந்திருந்த காக்ரா சோளி உடலின் வளைவுகளை அற்புதமாக எடுத்துக் காட்டியது. ஜிஷ்ணுவே அவளது அருகாமையில் வயது வித்யாசத்தை மறந்து ஜொள்ளு விட்டான்.

“நல்லா அளவெடுத்துட்டியா?” ஐந்து நிமிடம் கழித்து ஜமுனா ஜிஷ்ணுவிடம் வினவினாள்.

“என்னது?”

“டிரஸ்ஸுக்கு அளவெடுக்குற மாதிரி என்னைப் பார்த்தியே… அதுதான் கேட்டேன்”

“ஹி… ஹி…”

“சரி இப்ப நம்ம கொஞ்சம் பேசலாமா?”

“பேசலா…மே…”

சொல்லிவிட்டாலும் மனதுக்குள் ஒரு உதறல். ஜமுனா கொஞ்சம் ஹை பை என்று அலட்டிக் கொள்வாள். அவள் பேசுவதில் இவனுக்குப் பாதி புரியாது. ஷேக்ஸ்பியர் என்பாள், கீட்ஸ் சொன்னதை மேற்கோள் காண்பிப்பாள். இவனுக்குப் பிடித்த ஆங்கிலக் கதாசிரியை ஜே.கே. ரவ்ளிங் என்று சொன்னால் ‘இன்னும் நீ வளரவேயில்லையா?’ என்பது போல அலட்சியமாய்ப் பார்ப்பாள். இரானிய விருதுப் படங்களை சிலாகித்துப் பேசுவாள். தனக்குப் பிடித்த படங்களைப் பற்றி சொன்னால் காறித் துப்பி விடுவாளோ என்றெண்ணி அமைதியாகக் கேட்டுக் கொள்வான்.

“நீ ஏன் பெர்க்ளிலயோ, ஸ்டான்போர்ட்லயோ படிக்கல?” என்று கேட்டு அவனை முட்டாப்பீசாக்கி விடுவாள்.

“நான் லோகல்தான். போடி, நீ உன் பிஸ்து பிரெண்ட்ஸ் கூடப் போய்க் கடலை போடு” என்று கத்தலாம் போல ஜிஷ்ணுவுக்குக் கடுப்பாய் இருக்கும்.

மொத்தத்தில் அழகான ஜமுனாவுடன் கழிக்கும் நேரத்தை அவன் வெறுத்தான் என்பதே நிஜம்.

‘ஏடுகொண்டலவாடா இவ டிகிரி முடிச்சுட்டியாங்குற கேள்வியைத் தவிர வேற என்னன்னாலும் கேட்கட்டும்’ என்றெண்ணிக் கொண்டான்.

மாடியிலிருக்கும் அந்த அறையில் அவர்கள் இருவரையும் விட்டு விட்டு நைசாக அனைவரும் நழுவியிருந்தனர்.

ஜமுனா ஒரு வித்யாசமான பெண். அழகானவள்… வெளிப்படையாகப் பேசுவாள்… அம்மா அப்பா சொல்வதை ஓரளவு கேட்டாலும் சில விஷயங்களில் பிடிவாதம் அதிகம். அவள் முடிவெடுத்தாள் என்றால் எடுத்ததுதான்.

ரெட் வைனை இருவருக்கும் கோப்பையில் ஊற்றியபடி சொன்னாள்.

“நீ இந்த டிரஸ்ல ரொம்ப ஹாண்ட்சம்மா இருக்க ஜிஷ்ணு. நான் லுக் பொருத்தவரை எப்படி? ஓகேயா ஜிஷ்ணு”

‘என்னடா சாத்தான் வேதம் ஓதுது’ என்று ஆச்சரியமாய் பார்த்தான்.

“உனக்கென்ன ஜமுனா… சூப்பர் பிகர்”

“என்ன?”

“டபிள் ஓகேன்னு சொன்னேன்”

“பானுவுக்கும் எனக்கும் கல்யாணம் நின்னது ஏன்னு நீ கேக்கலையே?”

“எனக்குத் தெரியணும்னு அவசியமில்ல. பானுவுக்கும் ஸ்ரீவள்ளிக்கும் கல்யாணமாகி ஆறு மாசமாயிடுச்சு. இனிமேல் அதைப் பத்திப் பேசிப் பயனில்லை. நீயும் உன் வாழ்க்கையைப் பாரு”. தன்னைப் பெரிய மனிதனாக்கி இவள் இவ்வளவு பேசியது அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை.

“கேட்காம இருக்குறது உன் பெருந்தன்மையைக் காட்டுது. சொல்லலேன்னா என் மனசாட்சி என்னைக் கொன்னுடும். நான் அமெரிக்கக் கலாச்சாரப்படி வளந்தவ. இந்தியாவுல மிகப்பெரிய குற்றமா நினைக்கிற சில விஷயங்கள் இங்க சர்வ சாதாரணம். என்னோட வாழ்க்கையும் அதுக்கு விதிவிலக்குக் கிடையாது. உதாரணத்துக்கு நம்ம ரெண்டு பேரும் இப்ப வைன் குடிக்குறது எனக்குத் தப்பாத் தோணல. ஆனா பானுக்கு இது பயங்கரமானத் தப்பு. இதே மாதிரி தான் மத்த எல்லா விஷயங்களிலும்” மத்த என்பதை அழுத்திச் சொன்னாள்.

“நீ என்னைப் பத்தித் தெளிவா புரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன். கல்யாணம்னு சொன்னவுடனே இதைப் பத்தி பானுகிட்ட பேசினேன். உடனே எங்கக் கல்யாணத்தை நிறுத்திட்டான். இப்ப நீ என்ன செய்யப்போற?”

ஜமுனா சொல்வது ஜிஷ்ணுவுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மது அருந்தும் பழக்கம் பற்றி மனதில் பதிந்ததால் அவளைக் குளிர்விக்கும் பொருட்டு அப்போதைக்கு சொன்னான்.

“பிரெண்ட்ஸ் கூட காலேஜ்ல எல்லாரும் செய்றதுதான். இதையெல்லாம் நான் பெரிய தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா நீயே ஒரு டாக்டர். பொண்ணுங்க ட்ரிங்க் பண்ணா குழந்தைப் பிறப்பைப் பாதிக்கும்னு சொல்லுவாங்க. அதை மட்டும் குறைச்சுக்கோ”

எப்பப் பார்த்தாலும் அறுக்கும் அவளுக்கு அட்வைஸ் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட திருப்தி அவனுக்கு.

“ஜிஷ்ணு யூ ஆர் டெரிபிள். அப்ப நான் வெர்ஜின் இல்லை அப்படின்னுறது உன்னைப் பாதிக்கல. நான் அல்ட்ரா மாடர்ன் பொண்ணுதான் ஆனா மோசமான பெண்ணில்லை. உனக்கு நூறு சதவிகிதம் நல்ல மனைவியா நடந்துப்பேன். நம்ம திருமண வாழ்க்கை நல்லபடியாவே இருக்கும் ஜிஷ்ணு” ஜிஷ்ணுவின் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தமிட்டுவிட்டு ஓடினாள் ஜமுனா.

ஜமுனா சொல்லிச் சென்றதின் அர்த்தம் புரிபட திகைத்து நின்றான் ஜிஷ்ணு.

காலையில் “அம்மா” என்ற ஜிஷ்ணுவின் கோபக் குரல் கேட்டு பதறியபடி வந்தார் ஜெயசுதா. ஜமுனாவின் வார்த்தையைக் கேட்டவுடன் அடுத்த பிளைட் ஏறி சென்னையில்தான் வந்து நின்றான் ஜிஷ்ணு.

“அந்த ஜமுனாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத்தான் விருந்துக்கு அனுப்புனிங்களா? நீங்க சொன்ன படிப்பைப் படிச்சேன், சொன்ன எல்லாத்துக்கும் கீழ்படிஞ்சு நடந்தேன். ஆனா கல்யாண விஷயத்துல மட்டும் நான் முடிவெடுக்குறதுதான். எனக்குப் பிடிச்ச பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று ஜெயசுதாவையும், சலபதியையும் ஒரு உலுப்பு உலுப்பினான்.

“ஜமுனாவுக்கு என்னடா குறைச்சல். உனக்கு ஏண்டா அவ வேண்டாம்?” என்ற கேள்விக்கு ஜிஷ்ணு பதில் சொல்லவில்லை.

பதில் சொல்ல ஒரு வினாடி போதும். ஆனால் இது ஜமுனாவின் அந்தரங்கம். அதை வெளிச்சம் போட அவன் யார். ஜெயசுதா தவறிப் போய் யாரிடமாவது சொல்லிவிட்டால் தன்னை நம்பி உண்மையைச் சொன்ன ஜமுனாவுக்குத் துரோகம் செய்தவனாவான். கோவமாய் அவன் அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்தினான்.

மகனின் கோவத்தைப் பார்த்து ஜெயசுதா பயந்திருந்தார். ஜமுனாவுக்கு ஜிஷ்ணுவைப் பிடித்து விட்டதால் விரைவில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று அவரது அண்ணன் அபிப்பிராயப் பட, ஜோசியரிடம் நாள் பார்த்துக் கல்யாண ஏற்பாடுகளை செய்து விடுவதாகவும், கூடிய விரைவில் வந்து கலந்து கொள்ளுமாறும் சொல்லி போனை வைத்தார். ஜிஷ்ணுவை இந்தக் கல்யாணத்துக்குத் தலையாட்ட வைக்க பல்வேறு யோசனைகள் அவரது மூளையைப் பிராண்ட ஆரம்பித்தது.

ஜிஷ்ணு வெறி கொண்ட வேங்கையாய் அவனது அறையில் அங்கும் இங்கும் நடை போட்டான். கடற்கரையில் மணிகணக்காக அமர்ந்திருந்தான். இருந்தும் அமைதி கிடைக்கவில்லை.

அவன் வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கப் போவதாக அவன் உள்ளுணர்வு சொன்னது. காலையில் எழுந்தவுடன் திருப்பதி செல்லலாமா என்று யோசித்தான். பின் நேரமாகிவிட்டது இன்றைக்கு முகப்பேர் பெருமாளைப் பார்க்கலாம், நாளை வேண்டுமானால் திருப்பதி செல்லலாம் என்று முடிவு செய்தான்.

முகப்பேர் சந்தான கோபாலனின் தரிசனம் முடித்துக் கோவிலுக்கு வெளியே வந்தான் ஜிஷ்ணு. அவனுக்குப் பிடித்த கோவில். திருப்பதியில் இருக்கும் பெருமாளைப் பார்த்த திருப்தி இந்தப் பெருமாளைப் பார்க்கும்போதும் அவனுக்குக் கிடைக்கும்.

‘ஒரு கிஸ் கூடத் தராம கற்பைப் பாதுகாத்து வச்சிருக்கேன். நான் ஜமுனாவைக் கல்யாணம் செய்துக்குறதா… நோ நெவர்… இந்த ஜிஷ்ணுவைப் பாத்தா எல்லாருக்கும் கேணையனாத் தெரியுதா… இனிமே லேட் பண்ணக் கூடாது… எனக்குன்னு பொறந்த ப்ரியத்தமாவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதுதான்…” மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் பளாரென்று அறையும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

கோவிலுக்கருகே மனநிலை பிறழ்ந்த பெண் ஒருத்தி பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து சுற்றிக் கொண்டிருப்பாள். சேலையை அவள் அணிந்ததில்லையோ இல்லை மற்ற மனித மிருகங்கள் அணிய விட்டதில்லையோ தெரியவில்லை. அந்தப் பெண்தான் கொள்ளை அழகான ஒரு இளம்பெண்ணிடம் அறை வாங்கிக் கொண்டிருந்தாள்.

“ஏய் சீலைதான் கட்ட மாட்டன்னு தூக்கிப் போட்டுட்ட, இந்த சட்டையைப் போட்டுக்கோ. கழட்டினாக் கொன்னுடுவேன்” மிரட்டி சட்டையை அணிய வைத்தாள் அந்த அழகி. அருகே இருந்த பூக்கடைக்காரரிடம்,

“ஏன் அண்ணாச்சி, இந்தம்மாவ இப்படி அரகுறையா விட்டிருக்கியலே… கூட வச்சுக் காப்பாத்த வேணாம்… ஆனா மானத்தை மறைக்க உங்க பழைய சட்டையைத் தந்திருக்கலாமில்ல… வைத்தியம் பாக்கக் கூட்டிட்டு போகச் சொல்லி ஆஸ்பத்திரிக்கு போன் போட்டிருக்கலாமில்ல” என்று சண்டை போட்டாள்.

அர்ச்சனைத் தட்டு வாங்கி வந்த அவள் தோழிகள்,

“நீ வாடி, பொறந்தநாளதுவுமா ஒரு கோட்டிக்காக (கோட்டி – பைத்தியம்) சண்டை போட்டுக்கிட்டு” என்று இழுத்துச் சென்றார்கள்.

நெடு நெடுவென ஜிஷ்ணுவுக்கு ஈடு கொடுப்பதைப் போல நல்ல உயரம், ஐந்து ஏழு இருப்பாள். மஞ்சள் தேகம், கார்மேகக் கூந்தல், அதில் சூடியிருந்த வெண்மல்லிகை, தரையைப் பாதங்கள் தொடுகிறதோ இல்லையோ என்று எண்ண வைக்கும் துள்ளல் நடை, கைக்கு அடக்கமான சின்ன இடை, அக்கறையெடுத்து செதுக்கிய கோவில் சிற்பமாய் உருவம், அதைத் தழுவிய பாக்கியம் பெற்ற மெஜந்தா நிறப் புடவை. மெதுவாய் நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான். அப்படியே அந்த முகம் கல்வெட்டாய் மனதில் பதிந்தது. கோவமாய் இருந்தாலும் சற்று குழந்தைத்தனம் கலந்த முகம், மான்விழி, சிவந்த தாமரை இதழ்கள், மாம்பழக்கன்னம். ஜிஷ்ணுவுக்கு முதல் முறையாகப் பார்ப்பது போலவே தோன்றவில்லை. அவளுடன் ஜென்ம ஜென்மமாய் பழகிய உணர்வு.

காலம் காலமாய்த் தேடிய புதையலைக் கையருகே கண்ட ஆச்சரியத்துடன், தென்றலாய் நடந்து செல்பவளை இமைக்காமல் பார்த்தான்.

ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சிக் கிளி இவளோ!
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ!

சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு…

யாரோ யாரோ ஒருத்தி…
முன்ன போறா என்னக் கடத்தி…
ஆளக் கொல்லும் அந்த கொள்ளிக் கண்ணில்
உசுரோட என்னக் கொளுத்தி…

அவள் போகுமிடமெல்லாம் அவனது கால்களும் பின் தொடர, சந்தோஷத்தோடு நடந்தான்.

‘இன்னைக்கு இவ பிறந்தநாள் போலிருக்கே. முதல் முதல்ல சேலை கட்டிருக்கான்னு நினைக்கிறேன். ரொம்ப அன் ஈஸியா இழுத்து விட்டுட்டே இருக்கா. நான் வேணும்னா புடவையை சரி பண்ண ஹெல்ப் பண்ணட்டுமா செல்லி’ என்று மனதினுள் அவளுடன் பேசினான்.

அந்த நாளும், ஆளும் நீங்காமல் மனதில் பதிய, கட்டாயமாய் சொன்னான், “வெங்கடேஸ்வர சுவாமி… என் மனசில பிக்ஸ் பண்ணிட்டேன்… இவதான் என் பொண்டாட்டி… எங்கள சேர்த்து மட்டும் வச்சுடு… திருப்பதிக்கு நடந்தே வரேன்”

நொடியில் நூறு யோசனை தூரம் கடக்கும் மனதின் உதவியால் கனவிலேயே மனம் கவர்ந்தவளுடன் மணம் முடித்து, ரெண்டு பிள்ளைகளும் பெற்று விட்டான். அவன் ஜாடையில் ஒரு பெண். அவளைப் போல் ஒரு பையன்.

நிஜத்தில் அர்ச்சனைக்காக அனைவரும் காத்திருக்க, அவளது தோழி சொன்னாள், “ஏன்டி… அந்த ஆளு உன் பின்னாடியே வாராண்டி… அதுவும் வச்சக் கண்ணு வாங்காம உன்னையேப் பாக்குதான்”.

அவள் கோவமாய் ஜிஷ்ணுவிடம் திரும்ப, அடிதான் விழப்போகுது என்ற பயத்தில் ஜிஷ்ணு கைகளால் கன்னத்தைப் பொத்திக் கொண்டான். அவனைக் கோவமாய்ப் பார்த்தவளின் கண்கள் திகைத்துப் பின் ஆச்சரியத்தைக் காட்ட, முகம் புன்னகையால் மலர்ந்தது.

“விஷ்ணு… நீயா? எப்ப அமெரிக்காவில இருந்து வந்த?” கேட்டு அவனைத் திகைக்க வைத்தாள் அவள்.

இதற்குள் அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை வாங்கியபடி பெயரைக் கேட்க, “சரயு, மக நட்சத்திரம்” என்றவள் அவனிடம் திரும்பி, “உன் நட்சத்திரத்தையும் சொல்லு” என்று கட்டளையிட்டாள்.

“ஜிஷ்ணு, கற்கடக நட்சத்திரம்” என்று இயந்திரன் போல் சொல்லி முடித்தான். சக குடும்ப ஷேமத்துக்கும் அர்ச்சனை செய்து தந்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வந்தனர்.

“இது என் சொந்தக்காரர்தாண்டி. நான் மெட்ராஸ் வந்தது தெரியாதில்ல… திடீருன்னு பாக்கவும் சந்தேகமா பாத்திருப்பார். அப்படித்தானே விஷ்ணு…” என்று கேள்வி கேட்டாள்.

‘கடவுளே இது என் சரயுவா? ரெட்டை ஜடை போட்டுட்டு ரவுடித்தனம் பண்ணிட்டு இருந்தவதான் என் நினைவில இருக்குறா, சில வருடங்கள் இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு ஒரு பெண்ணை மாத்திடுமா’ என்ற திகைப்பில் நின்றிருந்தான்.

‘நான் வேற இவளைக் கல்யாணம் செய்து எங்க பிள்ளைகளுக்குப் பேர் வைக்கிற அளவுக்குக் கனவு கண்டுட்டேன். அது மட்டும் சரயுவுக்குத் தெரிஞ்சது இன்னைக்கே எனக்கு சமாதிதான்’ அவன் எண்ணத்தை தடை செய்யும் வண்ணம் ஒரு இளைஞன் சரயுவை நெருங்கியிருந்தான்.

“ஹாப்பி பெர்த்டே சரயு” என்றபடி ஒரு வாழ்த்து அட்டையும், லைட் எரியும் பெருமாள் படமும் தந்தான்.

“தாங்க்ஸ்… ஆமா என் பொறந்தநாள் உனக்கு எப்படி தெரியும்?” என்றபடி வாங்கிக் கொண்டாள் சரயு. அதற்கு அசட்டுத்தனமாய் சிரித்தான்.

“என்ன ட்ரீட் தரப்போற?” ஆவலாய் கேட்டான் அவன்.

“சாயந்தரம் ஒரு சாக்லேட் வேணும்னா தரேன். நாளைக்கு மேட்ச்சுக்கு ப்ராக்டிஸ் பண்ணு போ” என்று துரத்திவிட்டாள்.

அனைத்தையும் கவனித்தான் ஜிஷ்ணு.

“ஹாப்பி பெர்த்டே சரவெடி” என்று அவள் கைகளைப் பிடித்துக் குலுக்கினான். அதற்கு முன்னும் சரயுவின் கைகளைப் பிடித்து நடந்திருக்கிறான். ஆனால் இப்போதோ அவளின் கைகளைப் பற்றியதும் விடாதே என்று மனது முரண்டு பிடித்தது.

“உனக்குப் பொறந்தநாளுன்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா ப்ரெசென்ட் வாங்கிட்டு வந்திருப்பேன்”.

“உன்னைப் பார்த்ததே எனக்குப் பெரிய ப்ரெசென்ட் விஷ்ணு. நீ எப்படி இருக்க? ரொம்பக் கொஞ்சம் குண்டாயிட்ட. மத்தபடி வேற ஒரு வித்யாசமும் தெரியல. ஆமாம் நீ எப்படி என்னைப் பார்த்ததும் கண்டுபிடிச்ச? நான் இன்னமும் மாறவேயில்லையா?”

‘நீ சரயுன்னு நான் கொஞ்சம் கூட ஊகிக்க முடியாத அளவு மாறியிருக்க… இதுல எங்க நான் கண்டுபிடிக்கிறது?’ மனதினுள் சொல்லிக் கொண்டான்.

“என்ன சரவெடி மெட்ராஸ் பக்கம்…”

“பேஸ்கட்பால் டோர்னமெண்ட் வந்தேன் விஷ்ணு. இங்கதான் ஒரு ஹாஸ்டல்ல தங்கிருக்கோம்”

“சரி வா ஹோட்டெல்ல சாப்பிட்டுட்டு உன்னை ஹாஸ்டல்ல கொண்டுபோய் விடுறேன்” என்றவன் அவளது தோழிகளிடம் திரும்பி,

“நான் சரயுவோட மாமாதான். பத்திரமா கொண்டுவந்து விட்டுடுறேன். நீங்க போயிட்டு வாங்க” என்று அவர்களைக் கட் செய்தான்.

இவ்வளவு நாள் கழித்து அவனது சரயுவைப் பார்த்திருக்கிறான். அவளிடம் நிறைய பேசவேண்டும், இடைப்பட்ட காலத்தில் காலம் அவர்கள் வாழ்க்கையில் போட்டக் கோலங்களைக் குறித்துப் பகிர வேண்டும். குறுக்கீடாய் எதற்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று ஆரம்பத்திலேயே சரயுவின் தோழிகளைக் கழட்டி விட்டான்.

சரயுவை அழைத்துக் கொண்டு அண்ணாநகர் சரவணபவனில் நிறுத்தினான். பெரிய சோலா பூரி வாங்கி அதனை நடுவில் குத்தி ஆவி வெளியேறுவதை சரயு ரசிக்க, ஜிஷ்ணு அவளை ரசித்தான்.

“அப்பறம் சரயு… பேஸ்கட் பாலெல்லாம் விளையாடுற… இதென்ன சாரி எல்லாம் கட்டிகிட்டுப் பெரிய பொண்ணாட்டம்”

“பிரெண்ட்ஸ் ரொம்ப கம்பெல் பண்ணாங்க அதுதான்… இன்னைக்குத்தான் முதல் முதல்ல கட்டுறேன் விஷ்ணு. எனக்கும் பிடிக்கவேயில்லை. நடக்குறப்பக் காலெல்லாம் தடுக்குது, இடுப்பெல்லாம் தெரியுது. இனிமே கட்ட மாட்டேன்பா”

ஜிஷ்ணுவின் கண்கள் அவளது இடுப்பைத் தேடிச் சென்றது. ‘யப்பா எலுமிச்சை நிறத்துல, வழவழன்னு கிள்ளணும் போல…’ கட்டவிழ்ந்த மனதை இறுக்கிக் கட்டினான்.

‘தப்பு செய்யாதே மனமே… இவ சரயு.. என் சரவெடி… இவளை சைட் அடிக்காதே…’ மூளை கட்டளையிட்டாலும் மனம்,

‘இதுவரைப் பாத்த பொண்ணுங்களை சைட் மட்டும்தான் அடிச்சிருக்க. இவளைப் பாத்தவுடனே இவதான் என் பொண்டாட்டின்னு ப்ராமிஸ் செய்தேல்ல. நான் அப்படியே பிக்ஸ் ஆயிட்டேன். இனிமே என்னால மாத்திக்க முடியாது’ அடங்காப் பிள்ளையாய் அவளிடமே சென்றது.

“சாரி உனக்கு நல்லாயிருக்கு சரயு. தேவதை மாதிரி இருக்க. தேவதை தரிசனம் எனக்கு அடிக்கடி வேணுமே” அவனுள்ளிருந்த ஜொள்ளன் ஜொள்ளினான்.

“நான்தான் டோர்னமென்ட் முடிஞ்சதும் ஊருக்குப் போயிடுவேனே… நான் சாரி கட்டினாலும் உன்னால பாக்க முடியாதே”

கையிலிருந்த கைப்பேசியில் விதவிதமாய் அவளைப் படமெடுத்தான்.

“இதைப் பார்த்துப்பேனே”

“எதிரே இருந்த நகைக்கடைக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்று அவளது புடவைக்குப் பொருத்தமாக ஒரு சிறிய செயின், ரூபி பெண்டெண்ட் மற்றும் ரூபி செட் காதணிகளுடன் வாங்கினான்.

“நகை வேண்டாம் விஷ்ணு… ப்ளீஸ்…”

“சரயு… இவ்வளவு நாள் கழிச்சுப் பிறந்தநாள் அன்னிக்கு உன்னைப் பார்த்திருக்கேன்… நான் உனக்கு வாங்கித் தரக்கூடாதா… எனக்கு அந்த உரிமையில்லையா… நான் உன் ப்ரெண்டில்லையா… இதுவே அணுகுண்டு தந்திருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பியா?” உருக்கமாய் டைலாக் விட்டான்.

சரயுவிடம் அது வேலை செய்தது. “ஹாஸ்டல்ல தொலைஞ்சுடும் ஜிஷ்ணு… வேணும்னா நான் ஊருக்குப் போறப்ப வாங்கிக்கிறேன்”

“சரி இப்பக் கொஞ்ச நேரம் போட்டுக்கோ” மறுக்காமல் போட்டுக் கொண்டாள்.

நீண்ட நேரமாய் நினைத்ததை சொன்னான். “ரொம்ப அழகாயிருக்க சரவெடி… என் கண்ணே பட்டுடும் போலிருக்கு” அவளது கன்னத்தைத் தொட்டு நெட்டி முறித்தான்.

அவளை அழைத்துக் கொண்டு பீச் ரோட்டில் ஒரு சுற்று சுற்றினான். அவள்தான் பாஸ்கெட் பாலில் ‘சென்டர்’ என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டான். மாட்ச் பற்றி அவள் சொன்னது அவனுக்கு அவ்வளவாய் புரியவில்லை. இருந்தும் ஆவலாய் கேட்டுக் கொண்டான். மறுநாளிலிருந்து தவறாமல் மேட்ச் பார்க்க வருவதாய் வாக்களித்தான்.

“ப்ராக்டிஸ் பண்ணனும்… டீச்சர் திட்டுவாங்க… என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடு”

மூட்டை மூட்டையாய் கங்கா ஸ்வீட்ஸ் தின்பண்டங்களுடன் பத்திரமாய் அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டான்.

நுங்கம்பாக்கம் ஹிக்கின்பாதாம்ஸில் ‘பாஸ்கெட்பால் பார் டம்மீஸ்’ புத்தகமும் சில பாஸ்கெட் பால் சிடிக்களும் வாங்கி வீட்டிற்கு சென்றவன் நிஜமாகவே பரிட்சைக்குப் படிக்கும் மண்டைப் பசங்களைப் போலப் படிக்க ஆரம்பித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14

அத்தியாயம் – 14 வழக்கத்துக்கு மாறாக அன்று காலை சித்தாரா எழுந்தபோது அரவிந்த் எழுந்து சென்று விட்டிருந்தான். ‘இவனுக்கு என்ன வந்தது? நான் வந்து காபி கொடுத்து, வனி அவன் மேல ரெண்டு குதி குதிச்சாத்தானே எழுந்திருப்பான்’ என்று எண்ணிக்  கொண்டே

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’

அத்தியாயம் – 6 ஆத்தங்கரைக் காற்று சிலிசிலுக்க, பாதையின் இருமருங்கும் நந்தவனமாய் மாற்றியிருந்த பூக்காட்டை ரசித்தபடி தனது புது ஸ்கோடாவை செலுத்திக் கொண்டிருந்தான் ரஞ்சன். இளம் தொழிலதிபன். மதுரையிலிருக்கும் பணக்காரக் குடும்பத்தில் ஒருவன். அவனது சொந்தக் கம்பனியின் மூலம் மாம்பழக் கூழ்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

அத்தியாயம் – 30   கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம். ஊரில் இருந்து நேரம் கெட்ட