Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் வன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதை

வன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதை

 

செல்வக் கடுங்கோ வாழியாதன்’ என்று ஒரு சேர அரசன் இருந்தான். கபிலருக்கு நெருங்கிய நண்பன் இவன். கபிலர் பாடிய பாடல்களில் பெரும்பகுதி இவன் மேற் பாடப்பட்டவையே. 

ஒரு முறை சேர நாட்டுக்கு வந்து இவன் அரண்மனையில் இவனோடு சிலநாள் தங்கியிருந்தார்கபிலர். அந்தச் சில நாட்களில் வீரமும் கவிதையும் நட்புக் கொண்டாடி மகிழ்ந்தன. ஒருநாள் மாலை, கபிலரும் செல்வக் கடுங்கோவும் சேர நாட்டுக் கடற்கரை ஓரமாக உலாவச் சென்றனர். செல்லும் போதே இருவருக்கும் இடையே பல வகை உரையாடல்கள் நிகழ்ந்தன. 

”புலவரே! வீரத்துக்கும் கவித்துவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கூற முடியுமா?’ 

“திடீரென்று உனக்கு இந்தச் சந்தேகம் எப்படி உண்டாயிற்று, கடுங்கோ ?” 

“வேடிக்கையான ஒரு எண்ணம் எனக்கு உண்டாயிற்று கபிலரே! நீர் சொல்லைத் தொடுத்துக் கவிபாடும் பாவலர் . நான் வில்லைத் தொடுத்துப் போர் செய்யும் காவலன். உம்முடைய செயல், பூக்களின் மலர்ச்சி போல் மென்மையானது. என்னுடைய செயல் கத்தியோடு கத்தி மோதுவது போல் வன்மையானது.” 

”கடுங்கோ ! உன் சிந்தனை அழகாகத்தான் இருக்கிறது. அதையே நான் வேறொரு விதமாகச் சொல்கின்றேன். ஆற்றலின் மலர்ச்சி கவிதை. ஆற்றலின் எழுச்சி வீரம் அழகினுடைய சலனம் கவிதை ; ஆண்மையின் சலனம் வீரம் 

பேசிக்கொண்டே பராக்குப் பார்த்தவாறு வந்த கபிலர் கீழே தரையில் இருந்த சிறு பள்ளத்தைக் கவனிக்கவில்லை. 

அவர் பள்ளத்தில் விழ இருந்தார். நல்லவேளையாகக் கடுங்கோ அதைப் பார்த்துவிட்டான். சட்டென்று அவருடைய வலது கையைப் பிடித்து இழுத்துப் பள்ளத்தில் விழாமல் காப்பாற்றிவிட்டான். புலவருடைய கையைப் பிடித்தபோது மல்லிகைப் பூவினால் கட்டிய ஒரு பூஞ்செண்டைப் பிடித்தது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. கபிலருடைய கை பெண்களுக்கு அமைகிற கைகளைப் போல மிக மென்மையாக இருந்தது. அவன் ஆச்சரியம் அடைந்தான். கையை இன்னும் விடவில்லை

அரசே இதோ நிதர்சனமான விளக்கம் கிடைத்துவிட்டது. நான் செய்ய இருந்தது கவிதை. நீ செய்தது வீரம். என்னைக் காப்பாற்றியதற்காக உனக்கு என் நன்றி.” 

“அதிருக்கட்டும் கபிலரே! உங்கள் கை ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கிறது, பெண்களுடைய கை போல?” 

‘நீ கேட்பதைப் பார்த்தால் என் கையைவிட உன் கை வலிமையாகவும் கரடுமுரடாகவும் இருக்கிறது என்ற பொருளும் அதில் தொனிக்கிறதே?‘ 

“ஆம் உண்மைதான். இதோ என் கைகளைப் பாருங்கள். சொற சொற வென்று கரடு முரடாகத்தான் இருக்கிறது.” 

”நல்லது கடுங்கோ ! நான் தடுக்கி விழுந்தாலும் விழுந்தேன். உனக்கு ஓர் உயர்ந்த உண்மையை விளக்க அது காரணமாக அமைந்துவிட்டது. என் போன்ற கலைஞர்கள் அறிவினாலும் சிந்தனையினாலும் மட்டுமே உழைக்கிறோம். கைகளால் உழைப்பதில்லை. எனவே எங்கள் கலையைப் போல வேகைகளும், உடலும் மென்மையாக இருக்கின்றன. ஆனால் நீயும் உன் போன்ற வீரர்களுமோ கைகளால் உழைக்கிறீர்கள். உழைத்து உழைத்து வன்மையை அடைகின்றன. உங்கள் கைகள்.” 

“இந்த உலகுக்கு அறிவால் உழைப்பவர்கள் முக்கியமா? உடலால் உழைப்பவர்கள் முக்கியமா?” 

”இருவருமே முக்கியந்தான் அரசே! நீதியும் உண்மையும் அழகும் மென்மையும் அழிந்துவிடாது காக்க அறிவு வேண்டும். அறிவைக் காப்பாற்றவும் அறிவுக்குத் துணை செய்யவும் உழைப்பு வேண்டும்.” 

‘ஆகா! என்ன அருமையான விளக்கம்? எத்தகைய தத்துவம்?” 

“தத்துவமாவது விளக்கமாவது நீ அளித்த சோறு பேசச் சொல்கிறது. உன்னைப் போன்ற மன்னாதி மன்னர்கள் நல்லெண்ணத்தோடு சோறு இட்டு வளர்த்த உடல் மென்மையாக இல்லாமலா போகும்? கறியையும், சோற்றையும் மற்றவைகளையும் உண்பதைத் தவிர, உடல் உழைப்புக்கும் வருத்தத்திற்கும் இடமின்றி எங்கள் வாழ்வு உன்னாலும் உன் போன்ற தமிழ் மன்னர்களாலும் வளர்க்கப்படுகிறது. காரணம் அதுதான்.” 

”நியாயத்தைப் போலவே அறிவையும் வளர்ப்பது எங்கள் பணிதான் கபிலரே!” – 

“வேறென்ன வேண்டும்? இந்த அன்பும் ஆதரவும் போதுமே, ஆயிரம் பெருங்காப்பியங்கள் பாடிவிடுவேனே. நீங்கள் செடியை வைத்துத் தண்ணீர் ஊற்றுகிறீர்கள். நாங்கள் பூத்துக் கொழித்துப் புகழ் மணம் பரப்புகிறோம்.” 

‘உங்களுடைய பூஞ்செண்டு போன்ற இந்தக் கையை விடுவதற்கே மனமில்லை. பிடித்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறது. செல்வக்கடுங்கோ கபிலருடையகையை விடுவதற்கு மனமில்லாமல் மெல்லத் தன் பிடியிலிருந்து விடுவித்தான். இருவரும் மேலே நடந்தனர். புல்வரும் கை வீசி நடந்தார். அரசனும் கைவீசி நடந்தான். இந்தக் கைவீச்சில் குழைவும் அந்தக்கைவீச்சில் மிடுக்கும் இருந்தன, 

அன்பும் ஆதரவுமே கவிதையை வளர்க்கும் சாதனங்கள் என்பதை இச்சம்பவம் தான் எவ்வளவு அருமையாக விளக்கி விடுகின்றது? 

2 thoughts on “வன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதைதமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதை

  நல்ல வெயிலில் பசிக் களைப்போடு பல காத தூரம் நடந்து வந்திருந்தார் மோசிகீரனார். சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையின் அரண்மனைக்குள் அவர் நுழைந்த போது அலுப்பும், சோர்வுமாக அவரைக் கிறக்கமடையச் செய்திருந்தன. உறக்கம் கண் இமைகளை அழுத்தியது. எங்கேயாவது ஓரிடத்தில்

இரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதைஇரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்று பெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும் பார்த்தவர்களை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.  அந்தத் தோற்றத்தை வெறும் அழகான தோற்றம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.

இந்த உலகம் – புறநானூற்றுச் சிறுகதைஇந்த உலகம் – புறநானூற்றுச் சிறுகதை

  நன்கணியார் தெருவழியே நடந்து கொண்டிருந்தார். தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் கலியாணம் போலிக்கிறது. வாத்தியக்காரன் மங்கலமயமான இராகத்தைத் தெருவெல்லாம் கேட்கும்படி வாரியிறைத்துக் கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அழகான பெரிய பந்தல், பந்தல் தூண்களில் வாழை மரங்கள்;    மாவிலைத் தோரணங்கள்.