ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 23’

 கட்டறுத்துக் கொண்ட காளை போலவும், சுயேச்சையாகச் சிறகடித்துப் பறந்து செல்லும் பட்சி போலவும் நாகம்மாள் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருந்தாள். அவ்வீட்டுக்கு அவளே ராணி, அவள் வைத்ததே சட்டம். வாசல் குப்பையை பெருக்கித் தள்ளுவாள். தள்ளாதும் விடுவாள். கன்றை இடம் மாற்றிக் கட்டுவாள். கட்டாதும் விடுவாள். பாலைச் சும்மா காய்ச்சிக் குடிப்பாள். குடிக்காமலும் இருப்பாள். இஷ்டம் போல் சமைப்பாள். சும்மாயிருப்பாள். எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் செல்லுவாள். அவளை ‘ஏனென்று’ கேட்பார் யாருமில்லை. சுதாவாகப் பாய்ந்தோடும் காட்டாறு போல் தன் போக்கில் தலைகால் தெரியாது ஏக அமர்க்களமாயிருந்தாள். வீடு எந்நேரமும் கலகலப்பாகவே இருந்தது. சதா பேச்சுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கொண்டே இருப்பார்கள். இரவு பகல் வித்தியாசமின்றி நினைத்த சமயத்தில் அடுப்பு மூட்டுவாள். சாதமா, குழம்பா எதுவும் செய்வாள். தாராளமாக வந்தவர்களுக்குப் பரிமாறுவாள். திருப்தியாகச் சாப்பிட்ட பின் வம்புப் பேச்சுக்குக் கேட்கவேணுமா? ஓயாத ஒரே கொண்டாட்ட மயம் தான்!

     கெட்டியப்பன் இங்கேயே ‘முகாம்’ போட்டு விட்டான். அடடா, அவன் தடபுடல்களைப் பார்த்தால் “ஏதேது இந்த ஆசாமி தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் போலிருக்கிறதே!” என்று எண்ணத் தோன்றும்.

     “என்ன கோழி போடலாமா?” என்பான் முறட்டுத் தொனியில்.

     “ஆஹா அதற்கென்ன?” என்பாள்.

     உடனே மிளகு அரைத்தாகி விடும். கண்மூடி விழிப்பதற்குள் கோழி பக்குவமாகி விடும். அப்புறம் கேட்க வேண்டுமா? ‘குளு, குளு’ வென்ற தென்னங்கள்ளுடன் ஆனந்தமாக உணவை உள்ளே தள்ள வேண்டியதுதான். இடையில் சில தமாஷ்களும் நடக்கும். முதலியார் நடுவில் சில பேச்சுக்களைப் போட்டு மடக்குவார்.

     “ஆமாங்க ஐயா நீங்களெல்லாம் குடித்து விட்டு போகிறவர்கள் தான். உங்களால் தான் என்னத்தை சாதிக்க முடியும்?” என்பார்.

     “பாக்கலாமே” என்பான் கெட்டியப்பன். “என்னத்தைப் பிடித்துப் பார்க்கிறது? ‘அவன்களெல்லாமே வந்து வாங்கிக் கொள்ளட்டும்’ என்று சின்னப்பன் பேசியது தெரியாதா? கேட்டுப் பாருங்களே நாகம்மாளே சொல்லும். என்னவோ பாக்கிறீர்களாம்” என்று ஏளனமாக நாராயணசாமி ஆரம்பிப்பான். கெட்டியப்பன் தைரியமாக, “அட கடைசிக்கு இருந்தே இருக்குது” என்பான் தீர்மானமாக.

     இதைக் கேட்டு இருவரும் சிரிப்பார்கள்.

     முதலியார் சட்டென, “அப்படியெல்லாம் திடுபுடென கை வைப்பது கூடாது. அது என்ன ஒரு நிமிஷத்திய காரியம். நாமும் பொறுத்துப் பார்ப்போம். அக்கிரமத்திற்கு நாம் போக வேண்டாம். ஆனா வந்தாலும் விட வேண்டாம்” என்பார். வழியில் போகிறவன் கூப்பிட்டுச் செருப்பால் அடித்தாலும் முதலியார் மேலும், கீழும் பார்த்துக் கொண்டு முறுக்காது போகிற ஆசாமி, இவ்வளவு தூரம் பேசுகிறார்! அதையும் கேட்க இருக்கிறார்கள் மஹாஜனங்கள்!

     “ஆமாமப்பா அது நிஜம்தான்” என்று கெட்டியப்பன் ஆமோதிப்பான்.

     நாகம்மாள் “மணியக்கார அண்ணனும் இதுக்கு ஒத்துக்கு வாங்களா?” என்பாள்.

     முதலியார் தாழ்ந்த குரலில், “கண்ணைத் தின்ற குருடனும் நாயத்தை ஒத்துக் கொண்டு தானே ஆகணும்? அண்ணனை அப்ப ஒத்துக் கொள்ள சொல்கிறவன் நானல்லவா? அதைப் பற்றி நீங்க துளி கூடக் கவலைப்பட வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு இரண்டு மூன்று செலவுக்கு வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்வான்.

     தனக்காக இவ்வளவு பேசுகிற மனிதனுக்கு நாகம்மாள் ‘இல்லை’யென்றா சொல்லிவிடுவாள்? தாலி தண்டையாவது விற்றுக் கொடுப்பாளல்லவா? ஆமாம் இப்படிக் கொடுத்துத்தான் அடியோடு நாசமடைய வேண்டாம். ஒரே நாளில் ‘கெட்டுப் போ என்றால்’ கெட்டா போவர்கள்.

     தனித்திருக்கையில் நாகம்மாளுக்கு சில சமயங்களில் இவை எல்லாம் தோன்றும். தன்னைத்தானே வெறுத்துக் கொள்வாள். நொந்து துக்கிப்பாள்.

     ‘நான் ஏன் இங்கு வந்து சேர்ந்தேனோ? நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி. பெரிய குடும்பத்துக்கு அவக்கேடாக வந்து சேர்ந்தேனே! தலைமுறை தலைமுறையாக ஐக்கியமாக வாழ்ந்திருந்தவர் களுக்குக் கெட்ட பேர் உண்டு பண்ணப் பார்க்கிறேன். பங்குபிரிக்க வேணுமென்று பாழ்படுத்த ஆரம்பிக்கிறேன். ஐயோ சின்னப்பன் எவ்வளவு அன்பாக வைத்திருக்கிறான். ஒரு வார்த்தை காரமாகச் சொல்வானா. நல்ல மனதை அன்று புண்படுத்தி விட்டேனே! இனியாவது நல்லதனமாக நடந்து கொள்ள வேண்டும். சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் அல்லவா?”

     இவ்வித நினைவுகள், ஒரு வினாடிக்கப்புறம் பாதரஸம் போல் நிலைகொள்ளாது. ‘அப்படி எதற்கு இருப்பது’ கட்டறுத்துக் கொண்டு பத்து நாள் இருந்தாலும் அதுவே அடிமையாகப் பத்தாயிரம் வருஷம் இருப்பதை விட மேலல்லவா? எனக்கென்று தனியாக எல்லாம் இருக்க வேண்டும். நான் நினைத்தால் எதையும் செய்ய வேண்டும். என் மகளுக்கு நகை நகையாகப் பூட்டிப் பார்க்கவேண்டும். இந்த பிசினாரிகள் அதற்குச் சம்மதிப்பார்களா? அடேயப்பா, அன்றைக்கு கேட்டதும் கேட்காததுமாய் சீத்துப் பூத்தெனச் சீறுகிறானே! யார் சம்பாதித்த சொத்து? என் புருஷன் சொத்து எனக்குச் சேராதா? இத்தனை கோபம் எவ்வளவு நாளைக்கு வருகிறதெனப் பார்க்கிறேன்.’ நாகம்மாள் இப்படி உக்கிரமாக இருக்கும் வேளையில் கெட்டியப்பனும் இரண்டொரு வார்த்தை சொல்லி வைப்பான். எரிகிற நெருப்பிற்கு எண்ணெய் விட்ட மாதிரி, அவள் உள்ள ஜ்வாலை கொழுந்து விட்டு எரியும். யாராயிருந்தால் தான் என்ன? சதா ஒருவருடைய துர்போதனைக்கு ஆளாகிவிட்டால் அப்புறம் அவர்கள் இதயம் மாறுவதில் ஆச்சரியமில்லை அல்லவா?

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 6திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 6

அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடியவில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை