நினைவெல்லாம் நீயே கண்ணம்மா -17

மாறன் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்க அவனருகில் அமர்ந்திருந்த சேகரோ” மச்சான் டேய்…. இன்னும் அதையே நினைக்காதடா… நீ நார்மலா என்னட்ட பேசி எவ்வளோ நாள் ஆகுது தெரியுமா… இங்கப்பாருடா.. என மாறனை தன் பக்கம் அழைத்துக் கொண்டு இருந்தான்.. சேகர்…
ஆனால் மாறனோ அவனது கையை தட்டி விட்டு ” டேய் என்னிய விடுடா… என்னோட சோகம் எனக்குத்தேன் தெரியும்.. அத உன்னாலலாம் புரிஞ்சுக்க முடியாது… அந்த பர்வதம் என்னிய எவளோ பாசமா அண்ணே அண்ணேனு கூப்புடும் தெரியுமா… அந்தபுள்ளைய எ ஒடம்புறப்பாவே நா பாக்க ஆரம்பிச்சுட்டேன்…. எனக்கு கூடப்பொறக்காட்டியும் அவ தங்கச்சிதேன்…
சேகர் : எனக்கும் புரியுதுடே… என்னாப் பண்ணச் சொல்லுறவ… அவ தலையெழுத்து அப்புடி….
மாறன் அவனை முறைத்து விட்டு…” என்னலே தலையெழுத்து அவ என்ன பண்ணுவா பாவம்…காதலிச்சா இது தப்பா… நீயும் ஊர்க்காரப் பயலுக மாதிரி உளரிட்டுத் திரியாத… அவ செத்து அந்த தடம் கூட போகல.. அதுக்குள்ள அந்த குணாப்பயலை கொன்னுட்டானுக…என்றான் அடக்கமாட்ட ஆத்திரத்துடன்…
சேகர் : எலேய் அவ தற்கெலையில பண்ணிக்கிட்டியான்… பர்வதம் செத்தது தாங்க முடியாம மருந்த குடிச்சுப்புட்டியான்… நீ என்னமோ புதுக்கத சொல்றவ…
மாறன் : ஆமா அவ பர்வதம் செத்ததால அவள மறக்க முடியாம நா மருந்த குடிக்கப் போறேன்னு உன்னட்ட சொல்லிட்டு செத்தியான் கூறுகெட்டவனே….என தலையில் அடித்துக் கொண்டான்…
சேகர் : அப்போ அது தற்கொலை இல்லியா… என நம்ப மாட்டாமல் கேட்டான்…
மாறன் : ஏன்டா… நீ வேற.. என அவன் சேகரை கொலை செய்யும் வெறியோடு பார்க்க ம்க்கும்.. என தொண்டை செருமலின் சத்தத்தால் நிமிர்ந்து பார்த்தான் அங்கு மதியழகி ஒற்றைப் புருவ சுழிப்புடன் நின்றிருந்தாள்…
அவளைப் பார்த்ததும் மாறனின் பிடியில் இருந்து நழுவிய சேகர்” என்னத்தா மதி எப்புடி இருக்க.. அப்பா சவுக்கியமா… என்று குசலம் விசாரித்தான்…
அவனுக்கு பதிலளிக்காமல் மாறனையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்….
அவளது வருகையை சேகரின் விசாரிப்பின் மூலம் அறிந்து கொண்ட மாறன்மதியிடம் திரும்பினான்… 
ஆனால் அவனுடைய கண்களில் எப்போதும் தெரியும் குறும்பு இன்று பிரதிபலிக்கவில்லை…. 
அதை கவனித்த மதியழகி விழியை எங்கும் திருப்பாமல் அவனையே மௌனமாக நோக்கிக் கொண்டு இருந்தாள்…
ஆனால் மாறனோ மதியின் பார்வையில் இருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டான்….
சேகர் : ஆத்தா… உன்ன தாம்மா… கேக்குறேன்…. அப்பா எப்படி இருக்காரு? 
மதி ஏதோ மாயையில் இருந்து வெளி வந்தது போல… ” ஆஆ அண்ணே அப்பா அம்மா எல்லாரும் சவுக்கியம்தேன்… நீங்க எப்புடி இருக்கிய…சேகரிடம் பேச்சுக் கொடுத்தாலும் மதியழகியின் பார்வை மாறனையே சுற்றி வந்தது…
அதைக் கண்டு கொண்ட சேகர் ” நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் இந்த நெல்லுமூடைய வீட்டுக்கு கொண்டுப் போறேன்… என அவர்களிடம் விடைபெற்று சென்றான்…
மாறன் அப்போதும் மதியின் புறம் திரும்பாது வானத்தையே வெறிக்க.. அதில் கடுப்பானவள்…அவனது தாடையைப் பிடித்து தன் பக்கம் வலுக்கட்டாயமாக திருப்பினாள்…
மதியழகி : ஏய் என்னடே ஓவரா போய்ட்டிருக்க…. உன் பிரச்சினைதே என்ன…
மாறன் : அடியேய் எட்றி கைய…மதி : எடுக்க முடியாது என்னலே பண்ணுவ… என முரண்டு பிடித்துக்  கொண்டு இருந்தாள்….
மாறன் : ம்ப்ச்.. என அவனது தாடையில் இருந்து அவளது கைகளை பிரித்து எடுத்தான்…
மதி : ஏன்டா இப்படி இருக்க….அவளது குரலில் அவன் மேல் இருக்கும் காதல் வெளிப்பட்டதை எண்ணி அவனுக்கு மனதில் லேசான நிம்மதி  துளிர்த்தது….அவளது கையை ஆதரவிற்காக பற்றிக் கொண்டான்…
மாறனின் கை பட்ட ஸ்பரிசத்தால் உடல் சிலிர்ததாள்… மனம் முழுக்க அவனது ஞாபகங்களை சுமந்திருந்த மதி இன்று அவனை கண்டதும் மொட்டு மலர்ந்து விரிவது போல் அவளது முகம் மலர்ச்சி ஆனது.. ஆனால் அவனது சோகமுகத்தைக் காணப் பிடிக்காமல் அதை மாற்றும் முயற்சியில் இறங்கினாள்…
மதி : சொல்லு மாறா உன்னியத்தேன் கேக்குறேன்…அவளின் கைகளில் திடீரென ஒரு துளி நீர் விழ அதைப் பார்த்து நிமிர்ந்தவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்…
மதி : மாறா.. என்னடா இது சின்னப்புள்ள மாதிரி அழுதுகிட்டு…. என அவறது கண்களை துடைத்து விட்டாள்…மாறன் தேம்பி தேம்பி அழுது கொண்டே ” முடியல மதி… என்னால… குணாவும் பர்வதமும் என்னத் தப்புப் பண்ணாங்க… லவ் பண்ணாங்க அவ்ளோதேன்.. அதுக்காக அவங்களை கொல்றது சரியா… நீயே சொல்லு உங்க சாதிக்காரவக செய்றது உனக்கு சரியாத்தேம்படுதா.. என்று அவளிடம் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்…
அவனது முகமதில் குடி கொண்ட வேதனையை இவளால் காண முடியாமல் தவித்தாள்…
” அம்மா… சமையலை மேற்பார்வை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்த ராஜலட்சுமிதனது மூத்த மகள் செவ்வழகியின் குரலைக் கேட்டு திரும்பினார்…
” ஏய் செவ்வழகி எப்புடித்தா இருக்க… என மகிழ்ச்சி பொங்க அவளை வரவேற்று அமரச் செய்தார்…
செவ்வழகி : அம்மா நான் நல்லா இருக்கேன்… அவரும் கூட வந்துருக்காரு…
ராஜலட்சுமி : மாப்பிள்ளை வந்துருக்காரா எங்கடி காங்கல…
செவ்வழகி : வண்டிய நிப்பாட்டி விட்டு வர்றேன்னு சொன்னாவ…
ராஜலட்சுமி : ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்காவ கோழி அடிச்சு கொழம்பு வச்சுப்புடுதேன்…
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த விஸ்வம் ” அத்தை ஒரு கோழி பத்தாது… ஊருக்கே விருந்து வைங்க.. என்றான் குரலில் உற்சாகம் தொனிக்க….
ராஜலட்சுமி மாப்பிள்ளையை குழப்பத்தோடுப் பார்க்க அவர் சிரித்துக் கொண்டே செவ்வழகியைப் பார்த்தார்… 
செவ்வழகியின் முகம் அவளது பெயருக்கு ஏற்றார் போல் செம்மையுற ராஜலட்சுமிக்கு விஷயம் புரிந்து விட்டது…
ராஜலட்சுமி : ஏ மாரியாத்தா… எ வேண்டுதல் பலிச்சுடுச்சும்மா.  நா சொன்னா மாதிரியே நேத்திக்கடன நிறைவேத்திடறேன்… என்று கைகளால் வீட்டில் மாட்டி இருந்த சாமிப்படத்தைப் பார்த்துக் கும்பிட்டார்…
செவ்வழகியைப் பார்த்து ” ஏ ராசாத்தி இங்க வா ஆத்தா..  என மகளை சாமிப்படத்தின் அருகில் அழைத்துச் சென்று திருநீறு குங்குமம் பூசி விட்டார்…
மருமகனிடம் ” மாப்பிள்ளை நீங்க உக்காருங்க … இன்னும் எரு வாரத்துக்கு நீங்களும் செவ்வழகியும் இங்கத்தேன் இருக்கனும்.. சரியா…
விஸ்வம் :அதுக்கென்ன அத்த.. இங்கயே இருக்குறோம்… என்று அவனும் சம்மதம் தெரிவிக்க அவர்களுக்கு சமையல் செய்வதற்காக அடுக்களைக்குள் நுழைந்தார்…
தனது வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்த ரங்கநாதனின் பார்வையில் அழகி தென்பட்டாள்… அவளுடன் தானே தன் மகளும் கோயிலுக்குச் செல்வதாக கூறினாள்.. இவள் மட்டும் தனியே வருவது கண்டு அவளை அழைத்தார். 
” ஏம்மா அழகி இங்கன வாம்மா..அழகி பதட்டத்துடன் அவரது எதிரில் வந்து நின்றாள்…” சொல்லுங்க அய்யா…
ரங்கநாதன் : நீயும் மதியும் தான கோயிலுக்கு போறேனுப் போனீக மதி எங்கம்மா காங்கல உங்கூட வரலியா…
அழகி எச்சிலை விழுங்கிக் கொண்டே பயத்தில் உதடுகள் நடுங்க” அய்யா அது அவ கார்த்திகாவ வழில பாத்தா அதுனால அவகூட பேசிட்டு வர்றேன்னுட்டு சொன்னா உங்ககிட்ட சொல்லிடு சொன்னாய்யா… என்று ஒருவாறு அவரிடம் மதி சொல்லிக் கொடுத்ததை ஒப்புவித்தாள்…
ரங்கநாதன் அவளை கூர்ந்து நோக்கி விட்டு ” சரிம்மா நீ பத்தரமா உங்க வீட்டுக்குப் போம்மா.. என அழகியை அனுப்பி விட்டார்…
ரங்கநாதனின் மனதில் நெருடிய விஷயம் யாதெனில் அழகி ஏன் என்றும் இல்லாமல் இன்று இவ்வளவு பதட்டத்துடன் தன்னிடம் உரையாடுகிறாள்… மதியழகி உண்மையிலேயேகார்த்திகாவிடம் தான் பேசிக் கொண்டு இருக்கிறாளா… என்ற கேள்விகள் அவரின் மூளையை மையமிட்டு இருக்க அவரை அதிக நேரம்  யோசிக்க விடாமல் அதற்கான பதில் அவருக்கு எதிரிலேயே வந்து கொண்டு இருந்தது…
                                                 – தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: