ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 19’

சின்னப்பன் ஊரிலிருந்து வந்து விட்டான். ஆனால் தான் போய் வந்த விவரத்தையும் மைத்துனன் உடல் நிலையைப் பற்றியும் இரண்டே வார்த்தையில் சுருக்கமாகக் கூறினான். வேறு அதிகப்படியாக ஒன்றுமே சொல்லவில்லை. அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராமாயி எப்படியோ ஏதோவெனக் கலங்கினாள். ஆள் சோடையற்றிருபப்தையும், முகம் கருகி வழிந்து கண் உள்ளே போய் கவனமில்லாதிருப்பதையும் கண்ட அவள், ஏதாவது தன்னிடம் சொல்ல அஞ்சி மறைக்கிறானோ என்று கூட நினைத்தாள். ராத்திரி படுக்கைக்குப் போகும் முன்பு கணவனிடம், “எப்படி இருக்குது, தேவலாமா” என்றாள். இதே கேள்வியை இதற்கு முன் அவனிடம் எண்ணற்ற முறை கேட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் மனம் என்னவோ சஞ்சலித்துக் கொண்டே இருந்தது.

சின்னப்பன் ஊரிலிருந்து வந்து விட்டான். ஆனால் தான் போய் வந்த விவரத்தையும் மைத்துனன் உடல் நிலையைப் பற்றியும் இரண்டே வார்த்தையில் சுருக்கமாகக் கூறினான். வேறு அதிகப்படியாக ஒன்றுமே சொல்லவில்லை. அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராமாயி எப்படியோ ஏதோவெனக் கலங்கினாள். ஆள் சோடையற்றிருபப்தையும், முகம் கருகி வழிந்து கண் உள்ளே போய் கவனமில்லாதிருப்பதையும் கண்ட அவள், ஏதாவது தன்னிடம் சொல்ல அஞ்சி மறைக்கிறானோ என்று கூட நினைத்தாள். ராத்திரி படுக்கைக்குப் போகும் முன்பு கணவனிடம், “எப்படி இருக்குது, தேவலாமா” என்றாள். இதே கேள்வியை இதற்கு முன் அவனிடம் எண்ணற்ற முறை கேட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் மனம் என்னவோ சஞ்சலித்துக் கொண்டே இருந்தது.

     “இல்லை அப்படியே தான் இருக்குது.”

     “அப்படினா இன்னம் நோக்காடு நீங்கலயா? எப்படித்தான் இருக்குது? நல்லாச் சொல்லுங்கோ, கட்டில உட்டு எழுந்தரிக்க முடியலயா? சோறு, தண்ணீ குடிக்கிறானா என்ன?”

     “அதெல்லாம் எப்போதும் போல் திங்கறான். ஆனா நரம்புதான் அடிக்கடி பளீர் பளீர்னு தொந்தரவு கொடுக்குது. படுத்தாலும் உக்காந்தாலும் பொறுக்க முடியலீங்கறான்” என்று சின்னப்பன் சொன்னான்.

     ராமாயிக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. சகோதர வாஞ்சையில் அவள் உள்ளம் பொருமிக் கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் நெளிந்து புரண்டு அவஸ்தை படுகிற அவள் தமையனுடைய சங்கடத்தைக் கற்பனை பண்ணி உபாதைப் பட்டாள். அவள் கண்களில் கண்ணீர் திரண்டது.

     விம்மலுடன், “இப்போது ஏதாச்சு பண்டிதம் பார்க்கறாங்களா? எப்படித்தான் இருக்குது?” என்று கேட்டாள்.

     சின்னப்பனுக்கு இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஓயாது ‘எப்படி இருக்கிறான், எப்படி இருக்கிறான்’ என்றாள் எதைச் சொல்வது? “ஒண்ணும் செய்திடாது” என்று மட்டும் சொன்னான். அதே சமயம் ‘கடி கடீ’ரென்று தலைக்கு மேல் கூரையிலிருந்து பல்லி சொல்லிற்று. இருவர் மனத்திலும் சுருக்கென்றது. ஏனெனில் அந்த இடத்திலிருந்து சொல்லும் பல்லி மகா கெட்டது என்று சொல்வதுண்டு.

     “ஐயோ, இந்த நச்சுக் கெரகம் சொல்லுதே” என்றாள் ராமாயி.

     சின்னப்பன் “உச்சத்தில் சொன்னா அச்சமில்லெ, நல்லதுதான்” என்றான் சற்றுத் திடமாக.

     அவளுக்கு உடனே போய்த் தான் பார்த்துவிட்டு வந்து விடலாமே என்ற ஆவல். ஆனால் தலைக்கு மேல் காத்திருக்கும் வேலையெல்லாம் தான் அவளுக்குத் தெரியுமே. பருத்தி எடுத்து முடிப்பதற்குள் கம்மங்காடு விதைப்பு வந்துவிடும். இந்த ஒரு வாரமாக சின்னப்பன் இல்லாததினால் எவ்வளவோ காரியங்கள் தடைப்பட்டுப் போய்விட்டன. அடுத்தடுத்து இப்படி ஊர்ப்பயணம் போனால் குடும்பம் முன்னுக்கு வந்த மாதிரிதான். எந்தக் குடியானிச்சிதான் இதற்குச் சம்மதிப்பாள். இதையெல்லாம் யோசித்தே அவள் தன் கணவனிடம் வாய் திறக்கவில்லை. காலையில் சின்னப்பன் தோட்டத்திற்குப் போனான். எதிரில், குறுக்கே அங்கே, இங்கே காணுபவர்களெல்லாம், “அடெ எங்கே சின்னப்பா பத்து நாளாகக் காணோம். உம் மச்சினனுக்குத் தேவலையா, அது என்ன? நரம்பு சுளுக்குதானே, நம்ம சிக்கிரிச்சிபாளையம் வண்ணான் மந்திரிப்பதில் சூரனாச்சே, கூட்டி வந்து காட்டினீங்களா” என்று தங்கள் அனுதாபத்தையும், பரிகாரத்தையும் பலவிதமாகத் தெரிவித்தார்கள். சின்னப்பன் எல்லாவற்றிற்கும் அப்படியப்படியே பதில் சொல்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. இவர்கள் எல்லோரையும் விட மாரமூப்பன் தான் வாட்டி வளவெடுத்து விட்டான். “நரம்பு சுளுக்காம், இதுக்குப் படுத்துக் கொள்வதாம். கொஞ்சம் விளக்கெண்ணெய் போட்டுத் தேய்த்தால் ஓடி விடுகிறது. இல்லாவிட்டால் வாய்க்காலில் திடுதிடுவென்று மடை தண்ணீர் விழுகையில் உட்கார்ந்து வலிக்கிற இடத்தைக் காட்டினால் பறந்து விடும். அப்படியும் தீரவில்லையானால் ஆத்தாள் பேரைச் சொல்லி பிடி சாம்பலைப் போட்டுட்டு ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் காணிக்கை முடிந்து வைத்துவிட்டு, மேலைக்கு ஒரு ஆடு வெட்டினால் போகுது. இதுதான் எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது என்பார்கள்” என்று தன் மேதாவிலாசம் முழுதும் காட்டி விட்டான். சின்னப்பனுக்கு “ஆமாம், ஆமாம்” என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லாது போயிற்று. ராமாயியிடமும் இப்படித்தான் சகலரும் விசாரித்த வண்ணமிருந்தனர். பருத்தி காட்டிற்குள், “என்ன ராமாயி, உன் அண்ணனுக்கு எப்படி இருக்குது?” என்பாள் ஒருத்தி. மற்றவள், “ஐயோ பாவம்! இந்த அக்காளுக்கு இப்படி மிசிற நேரம் இல்லாமே இருக்குதே, இல்லாமே போனா இங்கே நிப்பாளா? இப்பவும் உயிர் அங்கேயும், கட்டை இங்கேயும்மாத்தான் இருக்கிறாள்” என்பாள்.

     வேறொரு பெண் குனிந்த தலை நிமிராமலே, “அதுவும் பொல்லாத நோக்காடுதானம்மா. எங்க ஐயனுக்கு அதுதானே எமனாக முடிந்தது” என்பாள். கொஞ்சம் இளகிய மனதுடையவள், “என்ன பண்ணிப்போடும்? நீ யாருக்கு சூதுவாது செய்ய நினைத்திருக்கிறாய்? மலை போல் வந்தாலும் பனிபோல் நீங்கிவிடும். ராமாயி, ஆரு என்ன சொன்னாலும் நீ காதில் போட்டுக்காதே” என்று ஆறுதல் கூறுவாள்.

     இவ்வித ஆறுதலும், அனுதாபமும் கிடைத்தாலும் அவள் மனது சாந்தமடையவில்லை. என்று நல்ல சேதி வரும் என்ற ஏக்கத்திலிருந்தாள்.

     ஒரு நாள் காலை ராமாயி, வீட்டு வேலைகளை மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். வாசலில் பாத்திரங்கள் எல்லாம் துலக்குவதற்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்த கூரை மேல் ஒரு காகம் வந்து உட்கார்ந்து கத்தியது. அந்தச் சத்தத்தைக் கேட்ட ராமாயியின் முகம் மலர்ந்தது. “இன்றைக்கு ஊரிலிருந்து யாராவது வருவார்கள்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். ஆனால் சற்று நேரத்தில் ஏழெட்டுக் காகங்கள் எங்கிருந்தோ வந்து கத்தவே, அவள் கையைப் பலமாகத் தட்டினாள். காகங்கள் போவதாகக் காணோம். பறப்பதும் உட்காருவதுமாகவே கத்திக் கொண்டிருந்தன.

     “இதென்னடா எழவாயிருக்குதே” என்று அங்கு வந்த சின்னப்பன் ஒரு கோலை எடுத்து வீசினான். காக்கைக் கூட்டம் கண்காணாது பறந்தது.

     ராமாயி காரணமற்ற பயத்துடன், “காக்கை கத்தினா ஒண்ணும் கெட்டதில்லையே?” என்றாள்.

     சின்னப்பன் “வருவது வழியா தங்கப் போறது” என்றான்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின்

கல்கியின் பார்த்திபன் கனவு – 19கல்கியின் பார்த்திபன் கனவு – 19

அத்தியாயம் 19 தந்தையும் மகளும் குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள். இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 16திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 16

அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக்காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஓடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்க மாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில் தான் கோயிலுக்கு