சூரப்புலி – 4

மரக்கூட்டத்தைவிட்டு ஆண் இரலை முன்னால் வந்தது. பெண் இரலை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பின்னால் அடியெடுத்து வைத்தது. அது மரங்களைத் தாண்டிக் குட்டையிலிருக்கும் வெட்ட வெளிக்கு வந்துவிடவில்லை. திடீரென்று ஒரு மலைப்பாம்பு மரத்தின் கிளைகளிலிருந்து அதன் மேல் தாவி, மின்னல் வேகத்தில் அதன் உடம்பைத் தன்னுடைய வலிமையான நீண்ட தேகத்தால் சுற்றிக் கொண்டது. சுற்றுச் சுற்ற இரலையின் எலும்புகள் படபடவென்று நொறுங்கின. மலைப்பாம்பு தனது தலையால் இரலையின் தலையில் ஓங்கி மோதிற்று. பரிதாபமாகக் கத்திக்கொண்டு பெண் இரலை உயிரை விட்டது. ஆண் இரலையால் என்ன செய்யமுடியும்? காட்டெருமைக் குள்ள பலமிருந்தால் அது சண்டை போட்டிருக்கும். ஆனால் மலைப் பாம்புக்கு முன்னால் அந்தச் சிறிய பிராணி என்ன செய்யமுடியும்? திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அது தண்ணீர் கூடக் குடிக்காமல் கானகத்திடையே புகுந்து மறைந்துவிட்டது. மலைப்பாம்பு தனது வலிமையான தசை நார்களால் இறுக்கி எலும்பை நொறுக்கியதும் அகன்ற வாயைத் திறந்து இரலையை விழுங்கத் தொடங்கியது. 

சூரப்புலிக்கு அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லை. அதற்கு ஒரே பயம். எப்படியாவது அங்கிருந்து தப்பித்துக் கொண்டு போய் விட வேண்டுமென்று தோன்றிற்று. 

அடர்ந்த கானகத்திலே வசிக்க வேண்டுமானால் எந்த நிமிஷத்திலும் ஆபத்தை எதிர்பார்த்து எச்சரிக்கையோடிருக்க வேண்டுமென்று அதற்குத் தெரிந்தது. கானகத்திலே அன்பு என்பதில்லை. இங்கே பலமொன்றே உயிரைக் காப்பாற்றும். பலத்தோடு கூர்மையான காதுகளும் கண்களும் மின்னல் வேகத்தில் காரியம் செய்யும் சக்தியும் இருக்கவேண்டும். பலமில்லாவிட்டாலும் மற்றவை இருந்தால் உயிர் பிழைக்கலாம். தன்னிலும் வலிமை குறைந்த பிராணிகளை ஈவிரக்கமில்லாமல் கொல்லவேண்டும். வலிமை யினால் தனக்கு மீறிய பிராணிகளுக்கு அகப்படாமல் தந்திரமாகத் தப்ப வேண்டும். ஓடிப் பிழைப்பதற்குக் கால்களாவது வேகமுள்ளவைகளாக இருக்கவேண்டும். 

கானகத்தின் கொடுமையைப் பார்த்த பிறகு பாக்கு வியாபாரியின் மகனுடைய தொல்லையும், காவல்காரர்களுடைய மூங்கில் தடிகளும் சூரப்புலிக்கு அற்பமாகத் தோன்றின. மனிதர்களை விட்டுக் காட்டில் வாழ்வதிலே இப்பொழுது அதற்கு அத்தனை உறுதியில்லை. எந்த மனிதனாவது அன்போடு ஆதரிப்பானானால் அவனோடு இருந்துவிடலாம் என்கிற மனப்பான்மையோடுதான் அது புதரைவிட்டு வெளியே நகர்ந்தது. குட்டைக்குச் சென்று தண்ணீர் குடிக்க அதற்குத் தைரிய மில்லை. பக்கத்திலே இரலையை விழுங்கிக் கொண்டிருக்கும் மலைப் பாம்பை மறுபடியும் கண்ணெடுத்துப் பார்க்க அது விரும்பவில்லை. மறுதிசையிலே மா அடர்த்தி குறைந்த பகுதியை நோக்கி அது விரைந்தது. அதற்குள் நல்ல வெளிச்சமாகிவிட்டபடியால் சூரப் புலிக்கு அதிக சிரமமிருக்கவில்லை.  குட்டைப் பகுதியை விட்டு வெகுதூரம் வந்த பிறகுதான் சூரப் புலிக்குப் பசியுணர்ச்சி மீண்டும் ஏற்பட்டது; தாகமெடுத்தது. அடிபட்ட உடம்பிலும் வலி தோன்றிற்று. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அது கால் போன திசையில் ஓடிக்கொண்டிருந்தது. 

அப்படி ஓடும்பொழுதுதான் அந்த மனிதன் எதிர்ப்பட்டான். எங்கிருந்தோ அவன் திடீரென்று தோன்றினான். காட்டிலே மரங்களின் பின்னாலிருந்து வரும்போது எங்கிருந்து வந்ததாகக் கண்டு கொள்ளவே முடியவில்லை. 

சூரப்புலி திடுக்கிட்டுத் தயங்கி நின்றது. ஒரு நாயை அந்தக் காட்டுக்குள் அந்தப் பகுதியில் பார்த்து அந்த மனிதன் ஆச்சரியப் பட்டான். பிறகு மெதுவாக அதைக் கூப்பிட்டான். ”நாயிருந்தால் நமக்கு இந்தக் காட்டிலே ரொம்ப உதவியாகத்தானிருக்கும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அந்த எண்ணத்தோடு சூரப்புலியிடம் அன்பு காட்டி அவன் அழைத்தான். சூரப்புலியும் மனிதனோடு செல்லத் தயாராக இருந்ததல்லவா? அதனால் உடனே வாலைக் குழைத்துக்கொண்டு அவன் பின்னால் சென்றது. 

அந்த மனிதன் சூரப்புலியை அழைத்துக்கொண்டு நடந்தான். அந்தப் பக்கத்துக் காடுகளிலே அவனுக்கு நல்ல பழக்கம் உண்டு என்று தோன்றியது. ஏனென்றால், அவன் தயக்கமில்லாமல் அந்தக் காட்டினுள்ளே புகுந்து மரக்கூட்டங்களுக்கிடையேயும் புதர்களுக்கு கிடையேயும் முட்செடிகளுக்கிடையேயும் வழி கண்டுபிடித்துச் சென்றான். உண்மையில் அங்கு வழியொன்றும் இருக்கவில்லை. அடிக்கடி நடந்த பழக்கத்தினால் அவன் சற்றும் மலைக்காமல் 

சென்றான். 

கடைசியில் அவன் பாறைகள் நிறைந்த ஓரிடத்திற்குப் போய்ச் சேர்ந்தான். ஒரு பக்கத்திலே ஒரு செங்குத்தான சிறு குன்று இருந்தது. ஆனால், சுற்றிலும் உயர்ந்து வளர்ந்திருந்த மரக் கூட்டத்தினால் தூரத்திலிருந்து பார்த்தபோது அது கண்ணுக்குப் புலப்படவில்லை. குன்றின் வலப்புறத்திலே சிலுசிலுவென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மேலே எங்கோ உயரமான பகுதியிலிருந்து ஊற்றெடுத்து அப்படி வந்து கொண்டிருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக இல்லாவிட்டாலும் எப்பொழுதும் வற்றாமல் ஓடிக்கொண் டிருந்தது. இந்த நீரோடைக்கு அருகிலேயே குன்றின் இடுக்கிலே சற்று சிரமத்தோடு குனிந்து நுழைந்து சென்றால் ஒரு வளைவைத் திரும்பிய பிறகு உட்பகுதியிலே ஒரு சிறிய குகை உண்டு. அந்தக் குகை யாருடைய பார்வையிலும் படாதிருந்தது. குன்றின் இடுக்கிலே சாமர்த்தியமாக நுழைந்தவர்கள் தாம் அதை அடைய முடியும். குகைக்கு முன்னால் சிறிதளவு திறந்த வெளியும் இருந்தது. அங்கே மூன்று மூன்று கற்களை வைத்து அடுப்புக் கூட்டியிருந்தார்கள். அந்த ‘மனிதன் சூரப்புலியை அழைத்துக் கொண்டு குகைக்குள் சென்றான். அங்கே அவன் வரவை எதிர்பார்த்திருந்தவன் போல், தாடிக்காரன் ஒருவன் கருகருவென்று குதிர்போல அமர்ந்திருந்தான். ”ஏண்டா 

கருப்பா, ஏன் இவ்வளவு நேரம்?” என்று தாடிக்காரன் கொஞ்ச கோபத்தோடு கேட்டான். 

“இந்த நாய்க்குட்டி வழியிலே கிடச்சுது. அதைக் கூட்டிக் கிட்டு வர நேரமாயிட்டது” என்று கருப்பன் பொய் சொன்னான். 

சூரப்புலியைக் கூட்டிக்கொண்டு வந்ததினால் நேரமாகிவிடவில்லை. 

“இது குட்டியா? சோத்துக்குச் செத்த நாயல்லவா இது? உனக்கு இது எதற்கு?” என்று உறுமினான் தாடிக்காரன். 

”இங்கே காவலுக்கு இருக்கட்டும்; நம்ம காரியத்திற்கு இது உதவியாக இருக்கும்” என்றான் கருப்பன். 

”சோத்துக்குத்தான் கேடு : இது உனக்கு என்ன உதவி செய்யப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டே தாடிக்காரன் சூரப் புலியின் முதுகில் ஓங்கித் தட்டினான். சூரப்புலி வீல் என்று கத்திக் கொண்டு ஓடைப் பக்கம் ஓட்டம் பிடித்தது. 

தாடிக்காரன் சிரித்துக்கொண்டே, “நல்ல சூரப்புலி உனக்குக் கிடைத்ததடா, சரி, இட்டலி எங்கே? எடு சீக்கரம், ரொம்பப் பசிக்கிறது” என்றான். 

கருப்பன் தான் கொண்டுவந்திருந்த மூட்டையை அவிழ்த் தான். அதற்குள்ளே ஒரு பாத்திரத்தில் நிறைய இட்டலி இருந்தது. தாடிக்காரன் சட்டினியைத் தொட்டுக்கொண்டு இட்டலியை ஆவ லோடு வாயில் போட்டு அவசரம் அவசரமாக விழுங்கினான். “எங்கடா, ஈரல் கறி வாங்கி வரவில்லையா?’ என்று அவன் இட்டலியை வாயில் குதப்பிக்கொண்டே கேட்டான். சாப்பிடுவதிலே அவன் சூரப்புலி . ஈரல் என்றால் அவனுக்குத் தனிப்பிரியம். 

“இந்நேரத்திலே ஈரல் கிடைக்குமா? எல்லாம் மத்தியானம் வரும் – பிரியாணியும் ஈரல் கறியும்” என்று பதில் கொடுத்தான் கருப்பன். 

தாடிக்காரன் சூரப்புலியைக் கூப்பிட்டு அதன் முன்னால் ஓர் இட்டலியை வீசியெறிந்தான். அவனிடம் ஆரம்பத்திலேயே அதற்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தாலும் பசியின் கொடுமையால் இட்டலியை ஆவலோடு தின்றது. தாடிக்காரன் குகைக்குள்ளே போய் ஒரு புட்டியை எடுத்துவந்தான். திறந்து மடக்கு மடக்கென்று இரண்டு வாய் குடித்து விட்டு மறுபடியும் இட்டலியை விழுங்கத் தொடங்கினான்.

 தாடியெல்லாம் சட்னி மயமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்த வில்லை. மறுபடியும் ஓர் இட்டலியை சூரப்புலிக்கு வீசினான். வேறோர் இட்டலியைக் கையில் எடுத்துக்கொண்டு சூரப்புலியை அருகிலே கூப்பிட்டான். சூரப்புலி கீழே கிடந்த இட்டலியைத் தின்றுவிட்டுப் பிறகு தயங்கித் தாடிக்காரனிடம் சென்று. அவன் கையில் இருந்த இட்டலியை வாயில் கௌவிற்று. ”அப்படி வாடா, பயப்படாதே” என்று சொல்லிக்கொண்டே தாடிக்காரன் அதன் முதுகிலே ஓங்கித் தட்டினான். இப்படித் தட்டுவது அவனுடைய இயல்பு என்பதைத் தெரிந்து கொள்ள சூரப்புலிக்குப் பல நாட்கள் ஆயின். அவன் தட்டும் போதெல்லாம் ஏதோ ஒரு மாத் தடி முதுகின் மேலே விழுவது போன்ற உணர்ச்சியும் வலியும் ஏற்படும். அவன் போடும் சோற்றுக்காக அங் கேயே தங்க வேண்டுமானால் அவனுடைய கையின் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சூரப்புலிக்குத் தெளிவாகி விட்டது. காட்டுக்குள்ளே புகுந்து எதேச்சையாக வாழவும் அதற்குப் பயமாக இருந்தது. அதனால், தாடிக்காரனுடைய கொடுமையைச் சகித்துக்கொள்ள அது தீர்மானித்துவிட்டது. ஆனால், அவனுடைய கைக்கு எட்டாமல் கூடிய வரையில் வாழ வேண்டுமென்று முடிவு செய்தது. அவன் மேல் ஏற்பட்ட வெறுப்பு வளர்ந்து கொண்டே இருந்தது.

இட்டலியைத் தின்றுவிட்டு நீரோடைக்குச் சென்று ஆவலோடு சூரப்புலி தண்ணீரைக் குடித்தது. அப்பொழுதுதான் அதற்குப் புதிய உயிர் வந்தது போல் தோன்றிற்று. பிறகு சூரப்புலி மெதுவாகச் சுற்றுப்புறத்தை ஆராயத் தொடங்கியது. குகைக்குள்ளேயும் சென்று பார்த்தது. தாடிக்காரனும் கருப்பனும் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டும், ரூபாயை எண்ணிக்கொண்டும் இருந்ததால் சூரப்புலியைப் பற்றிக் கவனிக்கவில்லை. 

குகைக்குள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரம் உள்ளே இருந்தபிறகுதான் அங்கேயிருக்கும் பொருள்கள் கண்ணுக்குத் தென்படலாயின. ஒரு பக்கத்திலே நூற்றுக்கணக்கான கண்ணாடிப் புட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. மற்றொரு பகுதியிலே பெரிய பெரிய தாழிகளும் மிடாக்களும் பானைகளும் இருந்தன. அவற்றிலிருந்து ‘மொய்’ என்ற சத்தம் மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஏதோ பொருள்கள் கொதிப்பதால் நுரை பொங்கி எழுவதும் கண்ணுக்குத் தெரிந்தது. அதிலிருந்து ஒரு வகையான நெடி எழுந்து மூக்கைத் துளைத்தது. மரப்பட்டைகளும் பனைவெல்லமும் மற்றொரு பக்கத்திலே கிடந்தன. எதற்காக இவையெல்லாம் அந்தக் காட்டுக்குள்ளே இருக் கின்றன என்பதைப்பற்றிச் சூரப்புலிக்கு யோசனை ஏற்படவில்லை. வேண்டியபோது பனைவெல்லம் தின்னக் கிடைக்கும் என்று மட்டும் யூகித்துக்கொண்டது. அப்பொழுதே ஒரு சிறு துண்டு வெல்லத்தையும் லபக்கென்று வாயில் கௌவிக்கொண்டு குகையின் மறைவிலிருந்து தின்னலாயிற்று. அரசாங்க உத்தரவை மீறித் திருட்டுத்தனமாகச் சாராயம் காய்ச்சுகின்ற கூட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிற விஷயம் சூரப்புலிக்கு அப்பொழுது தெரியாது. தெரிந்திருந்தாலும் அது அந்தக் கூட்டத்தைவிட்டுப் போயிருக்காது. அரசாங்கத்தினிடத்திலே அத்தனை விசுவாசமோ அல்லது சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டும் மென்ற உணர்ச்சியோ அதற்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆறறிவு படைத்த மனிதர்களுக்கே அவை இல்லாதபோது சாதாரணமான ஒரு நாயிடம் எதிர்பார்க்க முடியுமா? 

தாடிக்காரன் குகையிலிருந்து எடுத்துவந்த புட்டி காலியாகி விட்டது. அதைக் காலி செய்வதிலே கருப்பனுக்கும் பங்கு உண்டு. புட்டி காலியாக ஆக அவர்களுக்குள்ளே வார்த்தை தாறுமாறாக எழுந்தது. காரணமின்றிச் சச்சரவு செய்து கொண்டு இருந்தார்கள். ஈரல் கறி கிடைக்கவில்லையென்று தாடிக்காரனுக்குப் புதிதாகக் கோபம் பிறந்தது. கருப்பன் சொன்ன சமாதானம் இப்பொழுது  அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. குடி வெறியால் கருப்பனும் ஏதேதோ தாறுமாறாகப் பேசினான். 

பிறகு இரண்டு பேரும் உளறிக்குள்றிப் பேசிக்கொண்டே கீழே படுத்துத் தூங்கிவிட்டார்கள். சூரப்புலியும் சுகமாகப் படுத்துத் தூங்கிற்று. உச்சிநேரத்திற்கு நான்கு பேர் புதிதாக அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்களிலே ஒருவன் தான் அந்தக் கூட்டத்திற்கு முதலாளி. மற்ற இரண்டு பேர் பெரிய பெரிய மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எல்லோருக்கும் வேண்டிய உணவு வகைகள் அந்த மூட்டைகளில் இருந்தன. முதலாளியின் குரலைக் கேட்டதும் தாடிக்காரன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் ; கருப்பனும் எழுந்து மரியாதையாக நின்றான். 

”ஏண்டா தாடி , கணக்கெல்லாம் சரியாகப் பார்த்து வைத்திருக் கிறாயா?’ என்று அதட்டினான் முதலாளி. அவனைக் கண்டால் தாடிக் காரனுக்கு ஒரே பயம். அதனால் தடுமாறிப் பதில் பேசினான். 

“எல்லாம் தயாராக இருக்குதுங்க. கணக்கெல்லாம் சரியாய் போச்சுது , பாக்கி யெல்லாம் கருப்பன் வசூல் செய்து கொண்டு வந்து விட்டான்,” என்று தாடிக்காரன் சொல்லிக்கொண்டே ஒரு பணப் பையை முதலாளியிடம் நீட்டினான். முதலாளி அதை வாங்கிக் கொண்டு, “சரி, சாப்பிட்டுவிட்டுக் கணக்கைப் பார்க்கலாம்” என்று கூறினான். 

பிறகு சாப்பாடு நடந்தது. தாடிக்காரனுக்கு விருப்பமான உணவு வகைகளெல்லாம் கிடைத்தன. அந்தச் சோற்றுக்காகத்தான் அவன் இந்தக் கூட்டத்திலே தங்கியிருக்கிறான் என்பது முதலாளிக்குத் தெரிய யும். அதனால், அவனுக்கு விருப்பமானவற்றைக் கொடுத்துவிட்டு அவனிடம் ஏராளமான வேலை வாங்கினான் அவன். குகையில் எந்த நேரத்திலும் இருந்து கொண்டு சாராயம் காய்ச்சும் வேலையைச் செய் பவன் அவனே. மற்றவர்களெல்லாம் வேண்டிய சாமான்களைச் சேகரிப் பதும் சாராயப் புட்டிகளைத் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு போய் விற்பதும் ஆகிய காரியங்களில் ஈடுபட்டவர்கள். தான் செய்கின்ற வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்று தாடிக்காரனுக்கு உள்ளுக்குள்ளே வருத்தம். இருந்தாலும் அதை முதலாளியிடம் சொல்ல அவனுக்குப் பயம், முதலாளி அவனை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவான். விருப்பமான உணவைக் கொடுப்பதோடு அவனை அடிக்கடி மிரட்டிக் கொண்டிருந்தால்தான் தனது காரி யம் பலிக்கும் என்று முதலாளி அறிவான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதைவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் விருதூர் எனும் ஊரில் ஒரு ஏழைத் தாய் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வாழ்க்கை மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத அளவுக்கு மிகவும் சிரமம் வாய்ந்ததாகவே இருந்தது. அந்த மகனின் பெயர் வெற்றிவேலன். அவன்

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்