ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 12’

நாகம்மாள் நேராக வீட்டிற்கு வந்ததும் தாவாரத்தில் சொருகியிருந்த சாவியை எடுத்து மளமளவென்று பூட்டைத் திறந்து உள்ளே போனாள். உடனே அடுக்குச் சந்தருகே எதையோ எடுக்கப் போனவள் அருகிலிருந்த கண்ணாடிச் சுவற்றின் மேல் கை வைத்தாள். அவள் கை பட்ட வேகத்தில் அங்கிருந்த மயிர்கோதி சொத்தென ஒரு மண்பானை மேல் விழுந்தது. அந்தப் பானை உடைந்ததா, தூர் விட்டதா என்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஒரு பானைக்குள் கையைவிட்டு என்னவோ துணியில் சுற்றியிருந்த முடிச்சை எடுத்துக் கொண்டு கதவைக் கூடச் சரியாகச் சாத்தாமல் ஆற்றங்கரைப் பக்கம் நடந்தாள். கீழே மண் வெகுவேகமாகச் சூடேறிக் கொண்டிருந்தது. சுற்றுப்புறமெங்கும் ஒரே மௌனம், நிசப்தம். ஒரு வீட்டிலும் துளி கூடச் சத்தம் கிடையாது. திண்ணையில் படுத்திருக்கும் இரண்டொரு கிழவர்கள் இருமுவதுதான் லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நேரம் தப்பிக் கூவும் சேவல்களைத் தவிர அப்போது அரவம் செய்ய யாருமில்லை. சின்னஞ் சிறுசுகளும் தங்கள் தாயாரின் பின்னாலேயே காடுகளுக்கு ஓடிப் போயிருந்தன. நாகம்மாள் ஆற்றுக்குப் போகும் பாதையை விட்டு மேட்டில் ஏறி நடந்தாள். காலில் செருப்பில்லாததால் அவ்வப்போது முட்கள் குத்தும் போது நிற்க வேண்டியிருந்தது. இச்சிறு தாமத்தையும் பொறுக்காது அவள் முகத்தைச் சுளிப்பதிலிருந்தும், மேலெல்லாம் வியர்வை வழிவதிலிருந்தும், அவளுடைய பாய்ச்சல் நடையிலிருந்தும், ஏதோ முக்கியமான காரியமாகத்தான் போகிறாளென்பது விளங்கும். ஆனால் பருத்திக் காட்டில் ‘வெடுவெடுப்’பென்று வேஷம் போடுவானேன்? இப்போது எங்கே போகிறாள்? வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதென்ன? என்ற கேள்விகளுக்கு ஒரேயடியாகப் பதில் சொல்லுவதென்பது சிரமம். ஆனால் உச்சிவேளையில் ‘மடுவுத் தோப்பு’க்குப் போகிறாள் என்பதையும் தெரிவித்து விடுகிறோம்.

     மடுவுத் தோப்பு என்ற பெயரைக் கேட்டவுடனே அந்தப் பக்கத்திலுள்ள பெரியவர்களும் ‘அப்பாடா’ என்று வாய்மேல் கை வைப்பார்கள். வாசக நேயர்களுக்காக அந்த இடத்தைப் பற்றிச் சிறிது வர்ணிக்க வேண்டியிருக்கிறது.

     ஆற்றுக்கப்பாலே வெங்கக்கற் காடு; வெகு தூரத்துக்குப் பயிர், பச்சை சாகுபடிக்கே லாயக்கற்று நீண்டு கிடக்கிறது. அதற்கப்புறம் ஊசிப் புல் என்ற ஒருவகைப் புல் படர்ந்திருக்கிறது. சாதாரணமாக அங்கெல்லாம் மழைக் காலத்தில் புல் இன்னும் அடர்த்தியாக தளிர்த்து நிற்கும். அப்புற் காட்டிலே மாடு கன்றுகளை மேயவிடுவது வழக்கம். அக்காட்டிற்கு அப்பால் கொஞ்ச தூரத்தில் ஒரு அடர்ந்த சோலை. பல ஜாதி மரங்கள் ஒன்றோடொன்று இணைந்து நீண்டு வளர்ந்திருக்கும். அந்த இடம் சதா இருண்டிருக்கும். ஒரு புறம் ஆறு, மறுபுறத்தில் விஸ்தாரமான மேட்டங்காடு. எதிராக பின் இருபுறங்களிலும் சிறு சிறு குன்றுகள். இப்படியாக அந்த மடுவுத் தோப்பு மனிதப் போக்குவரத்துக்கே அதிகம் உபயோகப்படாத நிர்மானுஷ்யமான பூமியாக இருந்து வந்தது. யாராவது தப்பித் தவறி பண்டம் பாடிகளை விட்ட சிறுவர்கள் கூட உள்ளே செல்ல அஞ்சுவார்கள். இல்லாத பொல்லாத மிருகங்களெல்லாம் அங்கு உலாவுவதாக கதைகள் உண்டு. இன்னொரு முக்கியமான பயம் அங்கு என்னவென்றால் கரைக்கு எதிர்ப்புறத்திலுள்ள சுடுகாட்டுப் பேய்களெல்லாம் வாசம் செய்வது அந்த இடத்தில் தான் என்று. ஆனால், கெட்டியப்பன் போன்றவர்கள் இதையெல்லாம் தூசி போல ஊதி விட்டு ‘நெறு, நெறு’ என்று உள்ளே நுழைவார்கள். அப்படித் தைரியமாக நுழையாவிட்டால் அந்த இருண்ட பிரதேசத்தில் அவ்வளவு அடுப்புக் கற்களும் சட்டிகளும் எலும்புகளும் ஏது? ஒரு பட்டியிலே ஆடு திருட்டுப் போய்விட்டதென்றாலோ, வீட்டிலிருந்து கோழி களவு போய்விட்டதென்றாலோ, இன்னும் அரசாணிக்காய், வாழைக்காய், அது இது எல்லாம் காணாமல் போன அடுத்த நாள் நிச்சயம் இந்த இடத்தில் ஏதாவது அடையாளம் இல்லாமல் போகாது.

     நாகம்மாள் அங்கு தான் இப்போது முக்காட்டை எடுக்காமல் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தாள். காட்டு யானையே எதிரில் வந்திருந்தாலும் நிறுத்த முடியாத அவளைப் பக்கத்தூர் உபாத்தியாயர் நிறுத்தி விட்டதுதான் ஆச்சரியம். ஆனால் பலத்தில் யானையை தோற்கடிக்க முடியாவிட்டாலும், அப்புலவர் பெருமான் இரண்டு யானைக்கு ஒரே சமயத்தில் குழி வெட்டக்கூடிய அவ்வளவு சமர்த்தர். “வாத்தியாரே அவசரமாகப் போறேன்” என்று நாகம்மாள் நகர்ந்தாள்.

     “ரொம்ப அவசரமா?”

     “ஆமாம், ஆமாம்” என்று கூறிக் கொண்டே நிற்காது போனாள்.

     “ஒரு பேச்சு” என்று கெஞ்சும் குரலில் பின் தொடர்ந்தார்.

     “இல்லை வாத்தியாரே, வெகு அவசரம்.”

     “நானும் ரண்டு வார்த்தையில் முடித்துடறேன். ஒரு நாலு வள்ளம் கம்பு வேணும். ஆனால் யாரிருந்தாலும் நம்ம வளவிலே சொல்லணுமா? அதென்னமோ நான் புறப்பட்ட வேளை, கும்பிடப் போன சாமி குறுக்கே வந்தது போல” என்று அடுக்கிக் கொண்டே ஓடி வந்தார் புலவனார்.

     அந்தச் சமயத்தில் நாலு வள்ளமல்ல, நாற்பது வள்ளம் கேட்டிருந்தால் கூட நாகம்மாள் கொடுப்பதாக வாக்களித்திருப்பாள். ஏனென்றால் அவ்வளவு அவசரத்திலிருந்தாள் அவள்.

     “அதற்கென்ன காலையில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அவரை வழியனுப்பினாள். பின்னர் மேட்டிலிருந்து இறங்கி ஆற்று மணலில் அடி எடுத்து வைத்தாள்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 64கல்கியின் பார்த்திபன் கனவு – 64

அத்தியாயம் 64 புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் பார்த்தான்.

கல்கியின் பார்த்திபன் கனவு – 49கல்கியின் பார்த்திபன் கனவு – 49

அத்தியாயம் 49 சூரிய கிரகணம் விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 45

அத்தியாயம் 45 – சாஸ்திரியின் வியப்பு! நாடகம் பார்த்த அன்றிரவு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரியின் மீது அவருடைய மனைவிக்கு வந்த கோபம் தணியவேயில்லை. திரும்பி ஊருக்குப் போகும் வழியெல்லாம், “நல்ல உத்தியோகம்; நல்ல வயிற்றுப் பிழைப்பு! ஒன்று மறியாத பெண் பிள்ளைகளைச்