ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 11’

ந்தச் சம்பவம் நடந்த சில தினங்கள் வரை குடும்பம் எவ்வித ஆட்ட அசைவுமின்றிச் சென்று கொண்டிருந்தது. சில சில சமயங்களில் புயல் கிளம்புவதற்கு அறிகுறி தோன்றும். ஆனால் அதற்குக் காரணபூதமான சந்தமாருதமே நிறுத்திக் கொள்ளும். நாகம்மாளின் இந்த வேகத்தணிவைக் கண்ட சின்னப்பன், ‘ஒரு வேளை நல்ல புத்தி வந்து விட்டதாக்கும்’ என்று ஆறுதலடைந்தான்.

     இதற்கிடையில் சோளக்காடு அறுவடை வந்து சேரவே ஊரிலும் இப்பேச்சு சற்று மட்டுப்பட்டது. காலையில் எழுந்திருந்ததும் எழுந்திராததுமாய் காக்கை, குருவி போல் தோட்டங்காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது, வீண் பேச்சுப் பேச நேரம் ஏது. தவிர, கதிர் கொய்யும் போது நான் முந்தி, நீ முந்தி என்று அவளவள் காரியமாயிருக்கையில் இந்த அத்துவானச் சங்கதியிலா பொழுதைப் போக்குவார்கள்?

     நல்லவேளையாக சின்னப்பன் காரியத்தில் கண்ணாயிருந்ததால் சோளக்காடு ஊருக்கு முந்தி போரடித்து தவசம் கூட மூட்டை ஏறிவிட்டது. இனி பருத்தி வெடிதான் பாக்கி.

     ஒரு நாள் காலை ராமாயி அடுப்படியிலே வேலை ரொம்ப முசுவாகச் செய்த வண்ணமிருந்தாள். நாகம்மாள் தயிரைக் கடைந்து, மத்து, சட்டி பானைகளையெல்லாம் சீராகக் கழுவி வைத்துவிட்டு அடுக்குச் சந்தில் துணிமணிகளைப் புரட்டிக் கொண்டிருந்தாள். கூடையைத் தூக்கி வைப்பதையும், குண்டாவை நகர்த்துவதையும், உறிச்சட்டியை துளாவுவதையும் பார்த்தால் அன்றைக்கு வேலைகள் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருப்பது தெரியும். “முத்து, கடுகை எடுத்துத் தரச் சொல்லி வாங்கியா, கண்ணு” என்று ராமாயி சொன்னாள். நாகம்மாள் தானே கடுகுச் சொம்பை எடுத்துக் கொண்டு எண்ணெயும் மொண்டு போனாள். “கத்திரிக்காய் இன்னும் அரியலையா?” என்று நாகம்மாள் கேட்டாள்.

     “இல்லையக்கா. இதோ அரிந்து வைக்கிறேன்.”

     “இல்லை ஆயா; இந்தா, நீ கொஞ்சம் சாணியைப் போட்டு அந்த சின்ன வீட்டை மாத்திரம் வழிச்சிரு. இன்னைக்கு வெள்ளிக் கிழமையல்ல; நான் பூரா பாத்துக்கிறேன்” என்றாள் நாகம்மாள். அப்புறம் “சும்மா ரண்டு சொம்பு தண்ணியாலேயே மெழுகிவிட்டு கண்மூடி விழிப்பதற்குள்ளே வாயா. பருத்திக் காட்டுக்கு முன்னாலேயே போயிடலாம். தோட்டம் போகிறபோது சொல்லிட்டுப் போனாங்க” என்றாள்.

     ராமாயிக்கு ஒரு புறம் சந்தோஷம். இந்த மாதிரி தன்னிடம் சந்தோஷமாக நாகம்மாள் பேசி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. கலியாணமான பத்தடியில் எவ்வளவோ கொஞ்சிக் குலாவி அன்பாக ஆதரவாகப் பேசியிருக்கிறாள். அதற்குப் பிறகு, அதுவும் சமீப காலத்தில் வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவும்தான். பழையபடி இன்று அந்த சிரித்த முகத்துடன், மிருது வசனத்தைக் கேட்க அவளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இதிலிருந்து நாகம்மாள் எப்போதும் கடுகடுத்தவளாக இருக்கவில்லையென்பதும், விதரணை தெரிந்தவள் தான் என்பதும் விளங்கும். பொதுவாக எல்லோர் உள்ளத்திலும் இனிமையும், இளக்கமும், கனிவும், காதலும் பொங்கித்தான் நிற்கிறது. சந்தர்ப்ப பேதங்களினால் சிலர் வேண்டுமென்றே ஹிருதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.

     இன்று நாகம்மாள் காட்டும் நயப் பெருக்கு வேறொரு காரணத்தைப் பற்றியது. அது பின்னால் தெரியும். பாம்புக் குட்டி புரண்டு விழுந்து விளையாட வந்தாலும், கொத்துவதைத் தவிர வேறு எதற்காக இருக்க முடியும்?

     நாகம்மாளும் ராமாயியும் பருத்திக் காட்டிற்கு வந்து சேர்ந்த போது மற்ற பெண்களும் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்களில் முக்கால் வாசிக்கு மேல் இளவயதுடையவர்கள் தான். அவர்கள் புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பைச் சுற்றி மடி கூட்டியிருந்தார்கள். கரண்டைக் காலுக்கு மேல் தூக்கி, கொசுவம் வைத்திருந்த கொரநாட்டு சேலையுடன் நடுநெற்றியில் வாகு எடுத்துச் சிலர் கொண்டை போட்டிருந்தார்கள். இன்னும் சிலர் ஈரக்கூந்தலை உலர்த்துவதற்காக கோடாலி முடிச்சுப் போட்டிருந்தார்கள். அவர்களது மினுமினுப்பான உடம்பையும், கரங்களின் உறுதியையும் பார்க்கப் பார்க்க இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். இளமை பூத்து நிற்கும் அங்க வனப்பை, அள்ளி எறிவதைப் போல, சும்மா ஒரு குலுங்குக் குலுங்கி குனிந்து பருத்தி எடுக்கும் போதும், நிமிர்ந்து கம்பீரமாக ஒருவரையொருவர் பார்க்கும் போதும், கலகலவென்று அவர்கள் பேசும் போதும், சிரிக்கும் போதும், திரும்பும் போதும், கால் மிஞ்சிகள் ஒலிக்க நடக்கும் போதும், செடிகளை ஒதுக்கிவிட்டு அவர்கள் முன்னோக்கிச் செல்லும் போதும், அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும், மனதை மகிழ்விக்கும் மாயம் ததும்பி நின்றது. இவர்களெல்லாம் சின்னப்பன் காட்டிற்கு மாற்றுக்கு மாற்று – அதாவது இன்று இவர்கள் காட்டிற்கு வந்தால், நாளைக்கு அவர்கள் காட்டிற்கு இவர்கள் போவது – இந்தக் கணக்கில் வந்திருந்தாலும் சொந்த விஷயம் போல அவ்வளவு கண்ணும் கருத்துமாய் காரியத்தில் கவனம் செலுத்தினர். பத்துப் பேர் முன்னுக்குப் பாத்தி தாண்டிப் போகும் போது, ஒருத்தி தளுங்கி விட்டால் சிரிக்க மாட்டார்களா? ‘இவ்வளவுதானே’ என்று கேலிக்கு இடமாகிவிடுமே! எந்த ரோசக்காரிதான் ‘அத்துவானம்’ என்ற பட்டத்தைச் சுமக்கச் சம்மதிப்பாள்?

     இப்படி இளமான்கள் போல் அவர்கள் செடிகளுக்கிடையே துரிசாகப் போய்க் கொண்டிருக்கையில் நாகம்மாள் என்ன செய்கிறாள் என்பதைக் கவனிப்போம். அவள் இரண்டு பத்தி எல்லோருடனும் சரியாகப் போவாள். பின்பு பின் தங்கிக் கொள்வாள். அப்புறம் பருத்தி எடுக்க ஆரம்பிப்பாள். ரொம்ப களைப்படைந்தவள் போல் உட்கார்ந்து கொள்வாள். இவளது தளர்வைக் கண்டு பக்கத்தில் வருவோர் சலித்துப் போய் விட்டாளென்று நினைக்கவில்லை. ஏனென்றால் நாகம்மாளை மிஞ்சி யாரும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இதுமட்டுமல்ல, எந்த வேலையிலும் கெட்டிக்காரிதான். ஆனால் இன்று என்ன வந்துவிட்டது?

     “என்ன நாகம்மா? காலில் ஏதாவது கட்டை பட்டுவிட்டதா?” என்றாள் கூட நின்ற பெரியவள்.

     ஒருத்தி, “அக்கா, அக்கா இந்த துணியை நனச்சுச் சுத்து” என்று சிகிச்சைக்கு உதவ முன் வந்தாள். க்ஷண நேரத்தில் காடே இவள் பக்கம் வந்துவிட்டது. “நாகம்மாளுக்கு என்ன? நாகம்மாளுக்கு என்ன?” என்ற குரல்களுக்கு எதிரொலிக்கு எதிரொலி கிளம்பியது. இதற்குள் ராமாயி ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து, “என்ன அக்கா எப்படி இருக்குது? தண்ணி குடிக்கிறயா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

     நாகம்மாள் ஒன்றையும் கவனியாதவள் போல, “எப்படியோ வெடுவெடுப்பாய் வருது” என்றாள். காட்டு வேலை செய்கிறவர்களுக் கெல்லாம் சாதாரணமாக ‘வெடுவெடுப்பு’ தான் வருவது வழக்கம். அப்படிச் சொன்னால்தான் உடனே பக்கத்திலிருப்பவர்கள், “அப்படியானால் ஏறுவெயிலில் நிற்கக் கூடாது. நிழலுக்குப் போய் உட்கார்ந்து கொள்” என்பார்கள். இந்த வெடுவெடுப்பிலே, மயக்கம் – தலைச்சுற்றல் – வாந்தி – கண்ணடைப்பு எல்லாம் அடங்கியிருக்கிற தென்றால் அவ்வியாதியைப் பற்றி நாம் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. இதற்குள் ஒரு பெண் ஒரு சொம்பு தண்ணீருடன் ஓடி வந்தாள். ராமாயி அதை வாங்கிக் குடித்தாள். “இந்தாக்கா குடி. வாந்தி வாராப் போலருக்குதா?” என்றாள் துக்கமாக.

     இன்னும் பல குரல்கள் அதே கேள்வியை அதே தொனியில் சற்று ஏற்றியும் இறக்கியும் கேட்டார்கல். நாகம்மாளின் பதில் மௌனம் என்பதைச் சொல்லாமல் விட்டுவிடுவதே மேல். ஆனால் இந்த நடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும் பார்ப்போம்.

     நாகம்மாள் ஒரு வாய் தண்ணீரைக் குடித்துவிட்டு, “போதும், போதும், சற்று தேவலாம். நீயே சகலத்தையும் பார்த்துக் கொண்டு வந்து சேரு. முத்தாயா செடி கொடிகளுக்குள்ளே போகப் போறாள் – கவனமாகப் பாத்துக்க. நான் ஊட்டுக்குப் போறேன்” என்று ராமாயிடம் கூறிவிட்டுக் கிளம்பினாள். தோட்டத்தைத் தாண்டி அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும், நாகம்மாளுக்கு இந்த ஓட்ட நடை எங்கிருந்து வந்ததென்று கேட்காதீர்கள்!

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50

அத்தியாயம் 50 – நள்ளிரவு ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி ‘டிரஷரி’க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள். கச்சேரியை

கல்கியின் பார்த்திபன் கனவு – 24கல்கியின் பார்த்திபன் கனவு – 24

அத்தியாயம் 24 “வயதான தோஷந்தான்!” அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர்