ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 10’

செல்லக்காள் ஏனோ சில நாளாக ராமாயி வீட்டுப் பக்கம் வருவது இல்லை. முன்பெல்லாம் இரண்டு நாளைக்குச் சேர்ந்தாற் போல் வராமல் இருக்க மாட்டாள். இங்கே வந்து எங்கெங்கே என்ன நடக்கிறதோ அதையெல்லாம் விஸ்தாரமாகப் பேசுவாள். அவள் ரொம்பவும் ராமாயிக்கு நம்பிக்கையுள்ளவள். இங்கே பேசுவதை வேறு எங்கும் சொல்ல மாட்டாள். அதனால் இவர்களுக்குள் எப்பொழுதும் மனஸ்தாபம் வருவதற்கிடமில்லை. ராமாயிக்குச் சில சமயம் ஆறுதல் சொல்லவே இங்கு வருவாள். அதோடு சில விசேஷ நாட்களில் ராமாயி பண்ணும் பலகாரங்களை ருசி பார்க்கவும், சாதாரண நாட்களிலும் குழம்பு, பொரியல் தினுசுகளுக்கு உப்பு, காரம் சொல்லவும் வரத் தவற மாட்டாள். செல்லக்காள் வீடு தென்புறம் அடுத்ததுதான். ஒரே ஒரு சுவர். அதுவும் கொஞ்சம் இடிந்த குட்டிச் சுவர் தான் இவர்களிருவருக்கும் மத்திய பாலம். அநேகமாக அந்த மதில் ஓரத்தில் நின்று கொண்டு தான் இருவரும் பேசுவார்கள். பக்கத்து நடைக் கதவைத் திறந்து கொண்டு அந்தப்புறம் போவதில் சலிப்பு ஏற்படும் போது ராமாயி இந்த முறையைக் கையாள்வாள். செல்லக்காளும் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று கொண்டே ‘உனக்குப் பல ஜோலியிருக்கும், வரமுடியாது. எனக்கும் வேலை தலைக்கு மேலிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே மணிக்கணக்காகப் பேசுவாள். இப்படிப்பட்ட அருமையான சிநேகிதையைக் காணாவிட்டால் யாராயிருந்தாலும் என்ன சங்கதி என்று தெரிய முயற்சி செய்வார்களல்லவா?

     ஒரு நாள் ராமாயி இலை கொண்டு வந்து போடும் ஆண்டி பையனைக் கேட்டுப் பார்த்தாள்.

     அவன், “என்னமோ தெரியலீங்க. ஆனா, அவுங்க மகள் ஊரிலிருந்து வந்திருக்காங்க. மகளுக்குத்தான் ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு உடம்புக்கு வந்திருமே! உங்களுக்குத் தெரிஞ்சதுதானே” என்றான்.

     இந்தப் பேச்சிலிருந்து செல்லக்காள் ஏன் வரவில்லையென்று சுத்தமாகத் தெரியாவிட்டாலும், மகள் நோயுற்றிருக்கிறாள் என்றால் தாயார் வேண்டிய சிசுருஷை செய்து கொண்டிருப்பாளல்லவா? அதனால் வர நேரமில்லை என்ற அர்த்தம் கலந்திருந்தது. இதையெல்லாம் யோசித்து அறிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர்களுக்கு இது ரொம்ப சுலபம். இன்னும் சொன்னாலும் தெரிந்து கொள்வார்கள். ஊரில் உள்ள பண்டாரங்கள் மாத்திரம் அல்ல; மற்ற சாதிகளும் எதிலும் கவுண்டர்களிடம் பிடி கொடுத்து விடுகிற மாதிரி பேசிச் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்காது அவர்கள் பேச்சு. ரொம்ப ரொம்ப சாதுரியமாகப் பதில் சொல்லுவதிலும், தளுக்காக நடந்து கொள்வதிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் கூடிக் கொட்டம் அடிக்கும் போது பார்க்க வேண்டும் அந்த வேடிக்கையை!

     ராமாயி ஒரு நாள் மதில் புறம் போய் எட்டிப் பார்த்தாள். அங்கு பின்புறத்தில் ஒரு கட்டில் போடப்பட்டு பாயும் விரித்திருந்தது. தலையணை காலுக்கு ஒன்று தலைக்கு ஒன்று இன்னும் ஒன்று எச்சாக இருப்பதிலிருந்து செல்லக்காளின் மகளே தன் படுக்கையையும் ஊரிலிருந்து தயாராகக் கொண்டு வந்து விட்டாளென்பது விளங்கிற்று. அதே சமயம் செல்லக்காள் தன் மகளை உள்ளேயிருந்து கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்தாள். “ஏக்கா, உடம்புக்கு எப்படியிருக்குது? எனக்கு இத்தனை நாளாத் தெரியாது போ” என்றாள் ராமாயி.

     செல்லக்காள் தலையை நிமிர்ந்து பார்த்து, “ஐயோ, நீயா ஆயா! ஆரோன்னு இருந்தேன்; ஆமாத்தா, இந்த பாழு முண்டைக் காச்சல் தான் இருபது நாளா கனலாக் காயுது” என்று வாய்மேல் கையை வைத்தாள்.

     “உம்! என்னத்தைப் பண்ணிப் போடுது? எதாச்சும் மருந்து கொடுக்கறீங்களா?” என்றாள் ராமாயி.

     “ஆமாம், கொடுத்துக்கிட்டுத்தான் வருது. என்ன பண்றது? இதை விட்டுவரத் துளி கூட நேரமில்லெ. இங்கேயே காத்துக்கிட்டுக் கிடக்கிறேன். அதுதான் உங்க வளவுப் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியலெ.”

     “அதனாலே என்ன. இது நல்லானாப் போதும்” என்று அங்கலாய்த்தாள் ராமாயி.

     ஆனால் அவள் மனதிற்குள், ‘ஐயோ பாவம், இது எங்கே நன்றாகப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டாள்.

     செல்லக்காள் மகளுடைய சமாச்சாரம் குழந்தையிலிருந்தே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. சதா நோய்வாய் படுவதே அவள் தொழிலாய் விட்டது. அவள் ரத்தத்திலே அணு அணுவாய் நோய்க் கிருமிகள் கலந்து தேகம் பூராவும் வியாபித்து விட்டதால் கஷாயமும், பத்தியமும், அதுவும், இதுவும், எதுவுமே அவளைக் குணப்படுத்து வதாய்க் காணோம். அவள் கலியாணம் செய்து கொண்டு ஒரு சுகத்தையும் காணவில்லை! ஒரு காடு, தோட்டம், பருத்தி பம்பலுக்குப் போய் நாலோட ஒன்றாய்த் திரிந்து, வேலை வெட்டியிலே கெட்டிக்காரியாயிருந்தால் தன் கட்டினவனுக்கும் சந்தோஷமா யிருக்கும். புகுந்த இடத்திலும் போற்றுவார்கள். இந்த நோக்காட்டுச் சீவனைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும்? அதற்குத் தான் பத்திலே, பதினைஞ்சிலே தாய் வீட்டிற்கே வந்துவிடுவது.

     செல்லக்காள் சொல்வது போல, “அவள் தலையிலே இதையெல்லாம் காண எழுதியிருக்கிறதாக்கும்.”

     “கால் வலிக்குமே, என்னேரம் நின்னபடியிருப்பாய்? எனக்குத் தான் வர முடியல்லெ. போகுது. இதென்ன ராமாயி ஊருக்குள்ளே ‘கசமுச’ன்னு பேசிக்கிறாங்களே, நிசம்தானா?”

     “என்ன அது?”

     “அது என்னன்னு சொல்றது போ, அந்த மானங்கெட்ட பேச்சை!” என்று செல்லக்காள் நிறுத்தினாள்.

     ராமாயிக்கு உள்ளுக்குள் வருத்தமும், கோபமும் பொங்கிக் கொண்டு வந்ததானாலும், “என்ன அக்கா வாயை உட்டுச் சொன்னாத் தெரியுமா? சொல்லாது போனால்தான் போ” என்று அந்தப் பேச்சை அப்படியே மறைக்கப் பார்த்தாள்.

     “நாம் இருந்திடலாம்; ஆனா உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியுமா?” என்று இவள் உள் கருத்தை அறிந்தவள் போலச் செல்லக்காள் பேசினாள்.

     “என்னம்மோ நீ பேசறது மூடு மந்திரமாயிருக்குது. சரி, நேரமாச்சு மாட்டுக்குத் தண்ணி வைக்கோணும்” என்று கிளம்பினாள்.

     “என்ன இருந்தாலும் நாகம்மாள் இப்படியா கெட்டுத் திரிவா!” என்று செல்லக்காள் பேசி முடிப்பதற்குள், “எம் பேச்சை ஆராச்சும் எடுத்தால் கையிலிருப்பது தான் கிடைக்கும்” என்று நாகம்மாள் சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த ராமாயி நடுங்கிப் போனாள். அப்போது நாகம்மாளுடைய கையில் விளக்குமாறு வைத்திருந்தாளாகையால் அந்தப் பேச்சு அப்படியே அடங்கிவிட்டதென்பதையும், செல்லக்காள் இழுக்குப் பொடுக்கெனப் பேசவில்லையென்பதையும் தெரிவிப்பதே போதுமானது.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில்

தனி வழி 9 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 9 – ஆர். சண்முகசுந்தரம்

9 “பிரச்சினை!” என்று இந்தச் சமயத்தில் ஞாபகமூட்டினான் பழனிச்சாமி. “நீ நல்ல ஆளப்பா! இப்ப நமக்கு முன் இருக்கும் பிரச்சினை யெல்லாம் அந்த பழத் தட்டம் தான்” என்று பாலனும் ரங்கனும் தட்டத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். “இன்னும் இருக்குது” என்று சொல்லிக்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 17கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 17

அத்தியாயம் 17 – தண்ணீர்க் கரையில்      ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் அந்தத் தெரு வீதியில், மனுஷ்யர் யாரும் இல்லாமல் போயினர். காயம் பட்டுக் கீழே கிடந்தவன் கூட எழுந்து ஓடிப் போனான். நாய்கள் மட்டுந்தான் ஆங்காங்கு தூரதூரமாய் நின்று குரைத்துக் கொண்டு இருந்தன.