ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 2’

 நாகம்மாளின் நான்கு வயதுக் குழந்தை முத்தாயி நிலா வெளிச்சத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். தன் தாயாரைக் கண்டவுடன் “எனக்கு என்னம்மா வாங்கியாந்தே?” என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள்.

     முத்தாயாளுக்காக எத்தனையோ சாமான்கள் தாயார் வாங்கி வந்திருந்தாள். பழம், பொரிகடலை, முறுக்கு, மிட்டாய் முதலிய தின்பண்டங்கள். ஆனால் நாகம்மாள் இப்போது அவைகளை எல்லாம் எடுக்காமல் மேலேயிருந்து ஒரு முறுக்கை மட்டும் ஒடித்துக் குழந்தையிடம் கொடுத்தாள். முறுக்கைப் பார்க்கவும் குழந்தைக்குப் பரமானந்தம் உண்டாயிற்று. அதைக் கடித்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடியதில் பாதி முறுக்குக் கை நழுவி கீழே விழுந்தது கூடக் குழந்தைக்குத் தெரியவில்லை.

     “உன் சின்னய்யன் இன்னம் வல்லயாயா?” என்று நாகம்மாள் தன் மகளிடம் கேட்டாள்.

     அப்போது குழந்தைக்கு இருந்த சந்தோஷத்தில் சின்னய்யனே எதிரில் வந்திருந்தாலும், கண்ணெடுத்துப் பார்த்திருக்குமா என்பது சந்தேகமே. தாயின் கேள்வியைக் கவனியாது முறுக்கைச் சுவைப்பதிலேயே முத்தாயா மூழ்கியிருந்தாள். “நல்ல சின்னய்யன்” என்று நாகம்மாள் சப்புக் கொட்டினாள்.

     இவள் இப்படிச் சலித்துக் கொள்ளும் சின்னய்யன் யார் என்பதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்வது அவசியம். நாகம்மாளுடைய கணவனுடன் பிறந்த தம்பி தான் சின்னய்யன் என்கிற சின்னப்பன். சின்னப்பனே தான் இப்போது குடும்பத் தலைவன். அநேகமாக நாகம்மாளுடைய அரசு தான் வீட்டில் நடக்கிறதென்றாலும், சின்னப்பனுக்கும், அவனது மனைவி ராமாயிக்கும் இதுவரை எவ்விதமான கஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சின்னப்பனைக் குழந்தை முத்தாயி ‘சின்னய்யன்’ என்று கூப்பிடுவதால் நாகம்மாளும் அவனை அந்தப் பெயராலேயே குறிப்பிடுவது வழக்கம்.

     வெளியே ‘கடக்’கென்று சத்தம் கேட்டது. “வண்டி வந்திட்டுது போலிருக்குதே” என்று நாகம்மாள் திண்ணையிலிருந்து எழுந்தாள். இத்தனை நேரம் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த ராமாயி, “அரிசி வண்டி இதுக்குள்ளே வந்திருமாக்கா?” என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டு வந்தாள்.

     “செரி, அடுப்பு வேலையெல்லாம் ஆச்சா?” என்று நாகம்மாள் கேட்டாள்.

     ராமாயி பொழுது போவதற்கு முன்பிருந்தே காரியம் செய்ய ஆரம்பித்திருந்தும், ஒன்றும் முடிந்தபாடில்லை. ஆனால் ‘இல்லை’ என்று சொன்னால் ‘எக்காள’மாக ஏதாவதொன்று சொல்வாளென்பது தெரியுமாதலால் “நீ தண்ணி வாத்துக்கிறதுக்குளே ஆகாதய போயிருது, எந்திரியக்கா” என்றாள்.

     “நான், மேலுக்கு ஊத்திக்கறதுக்குளே அந்த முறத்திலிருக்கிற அரிசி மாயமா வெந்து போயிருமா? பேச்சைப் பாரு, பேச்சை! மொதல்லே அரிசி கழுஞ்சு ஒலயில போடு, சோறு ஆக்கியானதுக்கப்பறம் வேறெ வேலை பார்க்கலாம்” என்று நாகம்மாள் சொன்னாள்.

     ராமாயி பதில் பேசாது முறத்திலிருக்கிற அரிசியை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். நாகம்மாள் கூப்பிட்டு, “இத்தனையுமா போடப் போறாய்!” என்றாள்.

     “ஆமாக்கா, நாம நாலு சீவனுக்கு இதுதான் வேண்டாமா?”

     “நல்லாக் கணக்குப் போட்டாய். இப்படிப் பாத்தா ஊடு, வாசலாயிறாதா? உன்னையும் ஊன்ற ஊட்டுக்காரரையும் என்னையும் இந்தப் பூப்பாலனையும் ஒரே கணக்கில் சேத்தினயே! இந்தக் குழந்தை காப்பிடி தின்னுமா?”

     “சரி, ரண்டு வட்டச்சேறை எடுத்துப் போடட்டாக்கா?” என்று கேட்டுக் கொண்டே ராமாயி திரும்பினாள்.

     நாகம்மாள் சட்டென்று, “சுண்டைக்காயிலே வெக்கிறது பாதி, கடிக்கிறது பாதியென்ன? போட்டதை ஏன் எடுக்கிறாய்? மிச்சமிருந்தால் காலம்பர பழையது ஆகுது. வேலையைப் பாரு” என்றாள். அதோடு “சாணித் தண்ணி போட்டு இந்தக் கூடையை உள்ளே எடுத்து வை” என்று கட்டளையும் இட்டாள்.

     சாணித் தண்ணி போட்டுவிட்டால் எல்லாத் ‘தீட்டும்’ போய் விட்டதாக அர்த்தம். சந்தையிலிருந்து வந்து சாமான்களை உள்ளே கொண்டு போகுமுன் சாணியை நீரில் கலக்கி அதை சாமான் நனையாமல் தெளித்துவிடுவது. சாமான்களுக்கு மட்டும் சாணித் தண்ணீரைப் போட்டுக் கொள்வதோடு சிலர் தங்களுக்கும் போட்டுக் கொண்டு குளிக்காமலே சும்மா இருந்து விடுகிறதும் உண்டு. ஆனால் நாகம்மாளைப் போன்றவர்கள் அப்பேர்ப்பட்டவர்களை ரொம்பவும் இழிவாகக் கருதுவார்கள். இந்த மாதிரி விஷயங்களை நாகம்மாள் வரிந்து கட்டிக் கொண்டு பாட்டுப் பழமொழிகளுடன் பேச ஆரம்பித்து விட்டால் கிட்டத்திலிருப்பவர்களுக்கும் பொழுது போவதே தெரியாது. நாகம்மாளும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பாள்.

     ‘சரி, நாகம்மாளைப் பற்றி சொல்லிக் கொண்டு போனால் சங்கதிகள் எல்லையற்று விரியுமாதலால் மற்றப் புறங்களிலும் திருஷ்டியைச் செலுத்துவோம்.’

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 35கல்கியின் பார்த்திபன் கனவு – 35

அத்தியாயம் இருபத்தைந்து சமய சஞ்சீவி தன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே அவன், “வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவது

கல்கியின் பார்த்திபன் கனவு – 47கல்கியின் பார்த்திபன் கனவு – 47

அத்தியாயம் 47 காட்டாற்று வெள்ளம் சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! – என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை