ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 1’

சந்தைக் கூட்டம் மெதுவாகக் கலையவாரம்பித்தது. சோளத் தட்டுகளைக் கடித்து அசைபோட்டுக் கொண்டிருந்த காளைகள், மணிகள் ஒலிக்க எழுந்து நின்று வண்டியில் பூட்டத் தயாராயின. சக்கரத்தடியில் கிடந்த சரக்குகளை எடுத்துச் சிலர் தட்டினர். வாங்கி வந்த சாமான்களை வண்டியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சந்தைக்குள்ளே நிழலுக்காக முளை அடித்துக் கட்டியிருந்த துணிகளையும், விற்பதற்குப் பரப்பியிருந்த பண்டங்களையும் அவரவர் பரபரப்பாக எடுத்தனர். பெண்களும் ஆண்களும் தங்கள் தங்கள் கிராமத்துப் பாதையின் வழியே வேகமாக நடக்கலானார்கள். இரண்டொரு உள்ளூர்க்காரரும், சிறுவர்களும் அங்குமிங்கும் எதையோ தேடுவதைப் போல திரிந்து கொண்டிருந்தார்கள்.

     வெங்கமேட்டில் வாரத்திற்கொருமுறை புதன்கிழமை சந்தை கூடும்; வீட்டுச் சாமான்கள் வாங்குவதற்கு இங்குதான் வருவது வழக்கம். ‘உப்புத் தொட்டுக் கற்பூரம்’ வரை சாதாரணமாக எல்லாச் சாமான்களுமே அங்கு கிடைக்கும். அந்தப் பக்கத்துக்கே பெரிய சந்தை அதுதான்.

     பிரதி வாரமும், ‘எனக்கு முந்தி, உனக்கு முந்தி’ என்று பொழுது சாய்வதற்கு முன்பே சகலரும் பயணம் கட்டி விடுவார்கள். ஆனால், இந்த வாரம் வியாழக்கிழமை சிவியார்பாளையத்தில் சாமி சாட்டியிருந்ததால், சந்தையில் கூட்டம் அதிகமானதோடு, இருட்டும் வரை அவர்கள் ஊர் போவதையே மறந்து வியாபார முசுவில் நேரம் பண்ணிக் கொண்டிருந்து விட்டார்கள்.

     வெங்கமேட்டிற்கு மேற்கில் மூன்றாவது மைலில் இருக்கிறது சிவியார்பாளையம்; ஆற்றுப் பாசனம் அதிகம் இல்லாவிட்டாலும் நீர் கொழிக்கும் ஊர் அது. தோட்டக் கிணறுகளில் ‘எட்டித் தொடும்’ தண்ணீர் எந்தக் காலத்திலும்; ஊரைச் சுற்றி பூக்குலுங்கும் பசுமையான மரங்கள்; கண்ணுக்கினிய காட்சிகளே நாலா பக்கங்களிலும் நிறைந்திருந்தன. வறட்சியென்பது அங்கு வெகுதூரத்துக்கில்லை.

     சிவியார்பாளையத்திலிருந்துதான் இன்று அதிகம் பேர் வந்திருந்தார்கள். பொங்கல் கொண்டாடப் போகும் ஆனந்தத்தில் வெகு குதூகலமாக சம்பாஷித்துக் கொண்டே அவர்கள் நடந்தார்கள்.

     அவர்கள் போய்க் கொண்டிருந்த இட்டேறி மிகக் குறுகலானது. அதோடு குண்டுகுழி நிறைந்து கரடு முரடானது. அந்தத் தடத்தில் நல்ல பழக்கமில்லாது புதிதாக நடப்பவர்கள், அதுவும் அந்த மசமசப்பான நேரத்திலே, ஒரு எட்டு அப்பாலே எடுத்து வைக்க முடியாது. வேண்டுமென்று நாம் ஒரு நாளைக்கு அந்தக் கஷ்டமான பரீட்சையில் இறங்கினாலும் கல்லும் முள்ளும் நம் பாதத்தைப் ‘பதம்’ பார்க்காது விடமாட்டாது. இப்படிப்பட்ட இக்கட்டான பாதையில் அப்பெண்கள் அனாயசமாகச் செல்வதைப் பார்த்தால் நமக்கெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். வரிந்து கட்டின மாராப்புச் சீலையுடன் நேராக நிமிர்ந்து தலையில் வைத்திருக்கும் கூடை விளிம்பில் இரு கரங்களையும் உயர்த்திப் பிடித்து ஒய்யாரமாக அவர்கள் பேசியவாறே சென்றனர். வரிசையாக ஒருவர் பின் ஒருவராக எறும்புச் சாரை போல் அவர்கள் போகும் தினுசு வெகு அழகாயிருந்தது.

     அப்போது மணியடித்தது போல் ஒரு குரல் எழுந்தது. முன்பின் போகிற பத்து முப்பது பேரும் ‘கப்’பென்று பேச்சை விட்டனர். “நான், எல்லாம் வாங்கியும் ஒண்ணை மறந்திட்டனே!” என்று கணீரெனும் ஒரு குரல் எழுந்தது. யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது? பெண்ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் மகிமையை அளித்தான் என்று நீங்கள் வியப்படையாதீர்கள். இந்த நாகம்மாளைப் பற்றிப் பின்னால் நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ளப் போகிறீர்களாகையால் சுருக்கமாகக் கூட இப்போது நான் சொல்லப் போவதில்லை. ஆனால் கணவன் இறப்பதற்குப் பத்து வருஷத்திற்கு முன்பிருந்தே அவள் ஒரு ‘ராணி’ போலவே நடந்து வந்திருக்கிறாளென்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும், என்னவென்றே அவள் அறியமாட்டாள் என்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.

     “இந்தப் பாழாப் போன ஊட்டிலே நான் நெனச்சுப் பார்த்து ஒண்ணு வாங்கினா உண்டு. இல்லாட்டி நாளைக்கு இல்லீங்கற சமயத்தில் இதுக்கா வண்டி கட்டிக்கிட்டுப் போறது?” என்றாள் நாகம்மா.

     அது என்ன? எதை மறந்து விட்டாள் என்பதை கூடக் கேட்காமலே இரண்டொருத்தி, “ஆமாம்” என்று ஆமோதித்தனர். ஒருவேளை என்னவென்று விசாரித்தால், ‘கொட்டைப் பாக்கில் சின்ன ரகம் வாங்காதது’ போன்ற பதில் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது போலும்!

     இந்தச் சங்கதியொன்றும் காதில் போட்டுக் கொள்ளாது தன் பாடுபரப்பைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்த ஒரு பெரியவள், “அந்த வெந்தயக்காரன், அரைக்காச் சொல்லி, மூணரைத் துட்டுக்குப் போட்டானே! நான், மூணு துட்டுக்கே கேக்காது போனம் பாத்தியா?” என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக் கொண்டாள்.

     அதைக் கேட்கவும் நாகம்மாள் கூடச் சிரித்துவிட்டாள். “எல்லாமே அப்படித்தான். ஏமாந்தா தலையிலே கல்லைப் போடற நாளாத்தான் இருக்குது. யாரை நம்பறது? யாரை விடரது?” என்று உபதேசம் செய்யும் பாணியில் ஒருத்தி தொடங்கினாள்.

     “தூர ஏம்போவோணும்?” என்று நாகம்மாள், தனக்கு முன் சொல்லியவளின் பேச்சை அங்கீகரிக்கும் விதமாய், “என்னையே எடுத்துக்குவோம்” என்று ஆரம்பித்தவள் ஏனோ சடக்கென, உதட்டைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள்.

     இந்தச் சமயத்தில் பக்கத்துக் கிழுவமர வேலியைத் தாண்டி, நாலைந்து பேர் ஒரு முயலைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். திடுதிடுவென வருவது யாரெனத் தெரியாமல் இரண்டொரு பெண்கள் சத்தமிட்டனர். நாகம்மாள் போன்றவர்கள், “அட, மொசல் எந்தச் சந்திலே போச்சோ! இங்கு ஏன் வந்து இப்படி ஏறுகிறீர்கள்?” என்று கூறவும், சந்தடி மட்டுப்பட்டது. ஓடி வந்த ஆட்களும் ஏமாந்த முகத்தோடு நின்று விட்டார்கள்.

     இக்காட்சிக்குப் பின்னால் முயல்களைப் பற்றி அங்கு கிளம்பிய கதைகளெல்லாம் நமக்கு வேண்டாம்; எப்படியோ ஊர் வந்து நாகம்மாளும் தன் வீடு போய்ச் ‘ச்சோ’வென்ற ஒருவிதச் சலிப்போடு, திண்ணையில் கூடையை இறக்கி வைத்தாள். கீழ்வானில் நிலவும் பூத்தெழுந்தது.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 36கல்கியின் பார்த்திபன் கனவு – 36

அத்தியாயம் 36 குடிசையில் குதூகலம் மறுநாள் பொன்னனும் வள்ளியும் பேசிப் பேசிச் சிரிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. படகு கிளம்புகிற சமயத்தில் தீவர்த்திகளுடனும் ஆட்களுடனும் வந்து சேர்ந்த மாரப்ப பூபதிதான் என்ன ஆர்ப்பாட்டம் செய்தான்? என்ன அதிகார தோரணையில் பேசினான்?

சாவியின் ‘ஊரார்’ – 02சாவியின் ‘ஊரார்’ – 02

2 முறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே ‘ப்ளாக்’ டயல் ‘ஸீக்கோ’ பளபளத்தது. ‘V’ போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா. சிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான். சாமியாரை நெருங்கி வந்து “என்ன சாமி!

சாவியின் ஆப்பிள் பசி – 5சாவியின் ஆப்பிள் பசி – 5

“அம்மா, நான் குளிச்சு இன்னியோடு நாப்பத்தேழு நாளாச்சு!” என்று சொல்லும்போதே அபரஞ்சியின் கண்கள் மலர்ந்து காது மடல் சிவந்து போயிற்று. “அடிப்பாவி! அந்த மேட்டுப்பட்டி மிராசுதார் புள்ளையா வயித்துல?” என்று தாயார் நாகரத்னம் வியக்க, பதில் ஏதும் கூறாமல் கால் கட்டை