Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்

வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்

சுற்றுலா என்றாலே ஐந்து முதல் ஐம்பது வரை அனைவருக்குமே அலாதி ஆனந்தம் தான். அட்டவணை வாழ்க்கையிலிருந்து சிறிது நாட்கள் அத்துவானக் காட்டில் தொலைந்துவிட்டு வந்தாலும், ரீஸ்டார்ட் செய்த கணினியைப்போல உடலும், மனமும் உற்சாகம் கொள்கின்றன. 

நான் பள்ளிப்படிப்பு பயின்ற காலங்களில், கோடை விடுமுறைக்கு பிறந்த ஊருக்குச் செல்வது அல்லது தஞ்சாவூர், கும்பகோணம் என்று கோவில் கோவிலாகக் கூட்டிச்செல்வதே வழக்கமாக இருந்தது எனது குடும்பத்தில் (‘எங்க வீட்லயும் இதே கதை தான்!’ என்று நீங்கள் அயர்ந்துகொள்வது எனக்குக் கேட்டுவிட்டது!!). ஒரு முறை (ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்), மாறுதலுக்காக வடநாடு செல்ல திட்டமிட்டனர் என் குடும்பத்தினர். இங்கே எனது குடும்பம் என்று நான் குறிப்பிடுவது என் பெற்றோர் மட்டுமின்று, என் தந்தையின் சகோதரர்கள், அவர்களின் மனைவி மக்களையும் சேர்த்து. எனது சித்தப்பா, புது தில்லியில் இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்ததால், அங்கே அரசாங்கக் குடியிருப்பில் தங்கியிருந்தார். அவரின் அழைப்பை ஏற்று, நாங்கள் செல்வதென தீர்மானமானது. 

ரயிலில் பயணம் செய்வதே குதூகலம் தான். அதிலும், சித்தப்பாக்கள், சித்திகள், தம்பி தங்கை என்று ஒரு படையுடன் பயணிப்பது அன்று தெரியவில்லை என்றாலும், இன்று நினைத்துப்பார்க்கையில் நினைவில் மட்டுமே நிலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்கள். மூப்பின் காரணமாக எனது பாட்டியும், தாத்தாவும், பணி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் எனது தந்தையும் எங்களோடு உடன் வரமுடியாமல் போனதில் இன்றும் எனக்கு சிறு வருத்தமே.

ஓர் நாள் முழுதும் ரயிலில்! ஏறத்தாழ இருபத்து நான்கு மணி நேரம், கத்திரி வெய்யிலின் வெப்பம் எங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு விடுவேனா என்றது. வருடத்திற்கு ஓரிரு முறை மட்டுமே கிடைக்கப்பெறும் ரயில் பயணத்திற்கு ஆசையாசையாய் காத்திருந்ததுண்டு. ஆனால், சென்னையில் தொடங்கி புது தில்லி வரையிலான ரயில் பயணத்தில், ரயிலின் மீதிருந்த மொத்த ஆசையும் வடிந்துவிட்டிருந்தது. அலுத்து சலித்து வீடு சென்று சேர்ந்தோம்.

அமைதியான குடியிருப்புப் பகுதியில், எங்கும் மரங்கள், செம்மையான சாலைகள், பூங்கா என்று கண்டதும் பிடித்துவிட்டது எனது சித்தப்பா குடியிருந்த கவர்ன்மெண்ட் குவார்ட்டர்ஸ். பயணக்கலைப்பு ஓய இரு தினங்கள் ஓய்வு கொண்டபின் ஆரம்பமானது ஊர் சுற்றும் படலம்.

புது தில்லி என்றாலே பாராளுமன்றம் தான் முதலில் நமக்குத் தோன்றும். தூரத்தில் நின்று பார்த்தாலும் கூட ஒருவித பெருமிதமும், நாட்டின் மீதான காதலும் பெருக்கெடுக்கத் தான் செய்தது. 

லோட்டஸ் டெம்பில் – தாமரைக்கோவில். தாமரை வடிவில் வடிவமைக்கப்பட்ட தியான மண்டபம். அத்தகைய பெரிய அரங்கில் அத்தனை மக்கள் வந்து சென்று கொண்டிருக்க, சிறு முனகல் கூட கேட்கவில்லை. திடீரென வகுப்பிற்குள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்து நின்றால் எத்தகைய அமைதி நிலவுமோ, அதே நிசப்தம்.

குதுப் மினார் – புகழ் பெற்ற இரும்புத் தூண். வெய்யில், மழையில் நின்ற பொழுதிலும் துரு ஏறாமல் கம்பீரமாய் நின்றிருந்தது. 

“இந்த இடத்தோட வரலாறு சொல்லு” என்றொரு குரல், தூணை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த என்னை கலைத்தது. திரும்பிப் பார்த்தால் என்னுடைய சித்தப்பா.

“ம்ம் சொல்லு”

“சித்தப்பா, இந்த தூணை நானா நாட்டு வச்சேன்? சொல்லு சொல்லுனா என்ன சொல்றது?” என்றுவிட்டு ஹாஸ்யம் சொன்னது போல் நான் சிரிக்க, 

“அப்போ ஸ்கூல்ல என்ன தான் படிக்கற?” என்று முறைத்துக்கொண்டு வந்து நின்றார், என் அருமை தாயார்.

என் பதிலை எதிர் நோக்கி, மொத்த குடும்பமும் தூணை மறந்து என் முகத்தை நோக்கிக்கொண்டு நின்றது. 

“அது… இதை பத்தி இன்னும் படிக்கல. அடுத்த வருஷம் தான் பாடத்துல குதுப் மினார் பத்தி படிக்கப்போறோம். அதனால, அடுத்த லீவுல இந்த இடத்தோட ஹிஸ்டரி, ஜியாக்ரபி எல்லாம் சொல்லித்தரேன்.” 

“’தெரியல’னு ஒரு வார்த்தைல சொல்லாம, எதுக்கு ஒரு கிலோமீட்டருக்கு வசனம் பேசற?” என்று என் தம்பி கூற, மற்ற நண்டு சுண்டுகள் சிரிக்க,

“வீட்ல மூத்த புள்ள நீ; நல்லா படிக்கற புள்ள வேற; உனக்கே தெரியலனா மத்த பிள்ளைங்க எல்லாம்… சுத்தம்” என்ற குடும்பத்தின் கருத்தை, அதே குடும்பத்தின் சார்பாக கூறிவிட்டு என் சித்தப்பா நகர, என் மானம் குதுப் மினார் தூணின் மீதேறி என் கண் முன்னே கீழே விழுந்து மரித்தது. என் வாழ்வின் ‘அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்’ மொமெண்ட்.

அடுத்து செங்கோட்டை, இந்தியா கேட், ஹுமாயுன் கல்லறை என்று வரிசையாக, ‘இதெல்லாம் ஹிஸ்டரி புக்ல பார்த்த மாதிரியே இருக்கே!’ என்று விழிகள் விரிய, பிரம்மாண்ட ஆச்சர்யத்துடன் ரசிக்கப்பட்டன.

மகாத்மா காந்தி மற்றும் இந்திரா காந்தி நினைவிடங்கள் நெஞ்சை நெருட தவறவில்லை. அவ்விடம் மட்டுமல்ல, அங்கு வீசும் காற்றில் கூட ஒருவித சோகத்தின் வாடை கலந்திருந்தது. 

புது தில்லியின் முக்கியத் தளங்களில் காலடித் தடத்தினை பதித்தபின் அடுத்த நிறுத்தம், ஆக்ரா தாஜ்மகாலில். பற்பல பேனாக்கள் போதுமான அளவு முன்னமே தாஜ்மகாலின் அழகையும், அதில் புதைந்திருக்கும் ஆத்மார்த்த காதலின் ஆழத்தையும் இவ்வுலகிற்கு பறைசாற்றி விட்டதால், நான் புதிதாகக் கூற ஒன்றுமில்லை. என் மனதில் தோன்றியது ஒன்று மட்டுமே. இரண்டு அறை உள்ள, ஆயிரம் சதுரடி வீட்டைக் கட்டுவதற்குள் அவரவர்க்கு கபாலம் காய்ந்துவிடுகிறது. அக்கால ராஜாக்களால் மட்டும் மாளிகைகள், கோபுரங்கள், வழிபாட்டுத்தலங்கள் என விஞ்ஞான வளர்ச்சி பெரிதும் இல்லாத காலகட்டத்தில் எப்படி சாத்தியப்படுத்தியிருக்க முடியும்?!! அவர்களின் செல்வம், படைபலத்தையும் தாண்டி அப்பணிகளில் ஈடுபட்டிருந்த கடைநிலை ஊழியன் வரை அனைவரும் நேர்மை குறையாது, கடமை தவறாது இருந்திருக்க வேண்டும். செய்யும் தொழிலை விரும்பி, ரசித்து செய்திருக்க வேண்டும். வடிவுகளும், வர்ணங்களும் கற்பனாசக்தியின் உச்சத்தில் உயிர் பெற்றிருக்க வேண்டும். சாதித்து மறைந்த யுகபுருஷர்களின் புகழை காலங்கள் தாண்டி இந்த பிரம்மாண்டங்கள் சொல்லிக்கொண்டு நிற்கும் என்று ஞான திருஷ்டியின் உந்துதல் இருந்திருக்க வேண்டும். ஆளுமை, அறிவு, திட்டமிடுதல், எதிர்நோக்குதல், கண்ணியம், கொடை என்று அனைத்து புறங்களிலும் தலைமையின் செயல்கள் தலையாயதாய், இணையற்றதாய் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், இத்தகைய அதிசயங்கள் சாத்தியப்பட்டிருக்காது!! 

காட்சிப்பொருளாய் நிற்கும் மாளிகைகளில் மன்னர்களும், மாமன்னர்களும் வாழ்ந்த பெரும் வாழ்வினை காலச்சக்கரத்தில் பின்னோக்கி சுழன்று சென்று கண்கூட காணவேண்டும் என்ற அவா மனதில் தோன்றத்தான் செய்தது.

எத்தகைய யாத்திரையாக இருந்தாலும், அதை ஆன்மீக யாத்திரையாக திசை திருப்பிவிடும் கலையறிவு, நம் வீட்டு பெண்களுக்கு சற்று தூக்கலாகவே இருக்கும்.

“இவ்வளவு தூரம் வந்துட்டு ஹரித்வார், ரிஷிகேஷ் போகலேன்னா எப்படி?” 

என் சித்தப்பாக்களுக்கான கேள்வியை, என் தாயார் தொடுத்தார். ‘அண்ணியின் வாக்கு அம்பிகையின் வாக்கு’ என்று முடிவெடுத்து, அடுத்து வந்த இருநாட்களுக்கு பக்திப் பரவசத்தோடு பரமேஸ்வரனை வணங்கி, புனித கங்கை நீராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. குறிப்பு – இந்த முடிவு, என்னையும், என் தம்பி தங்கையையும் கலந்துகொள்ளாமல் பெரியவாஸ் மட்டுமே கலந்து எடுக்கப்பட்டது. உண்மை தெரியாமல் முந்திக்கொண்டு சுமோவில் ஏறிவிட்டு, உண்மை தெரிந்ததும் பிஞ்சு உள்ளங்களின் கண்கள் வேர்த்ததை தாட்சண்யமின்றி உதாசீனப்படுத்தினர். அப்பொழுது அவர்கள் அறிந்திருக்கவில்லை சற்று நேரத்தில் அனைவருக்குமே கண்கள் மட்டுமல்ல, நாடி நரம்பெல்லாம் வேர்க்கப்போகிறது என்பதை.

மாலை நேரத்தில் கிளம்பியதால், இரவெல்லாம் பயணம் தொடரப்பட்டது. சீராக சென்றுகொண்டிருந்தது வண்டி. திடீரென ஓட்டுனரின் மண்டையில் பல்ப் எரிய, நெடுஞ்சாலையிலிருந்து வலப்புறம் ஒடித்துத் திருப்பினார். ‘நினைத்த நேரத்தை விட முன்னதாகவே ஹரித்வார் சென்றுவிடலாம்’ என்று கற்பூரம் அடிக்காத குறையாய் சத்தியம் செய்தார், ஓட்டுனர். வழி தோறும் மேடு பள்ளம்; இரு புறமும் பெருங்காடு; வண்டியின் விளக்குகள் தவிர, மின்மினியின் வால் கூட கண்ணில் புலப்படவில்லை. வாழ்க்கையில் நான் மேற்கொண்ட முதல் ரோலர் கோஸ்டர் பயணம். எம்பி குதிக்கும் வேகத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எனது கபாலம் காரின் மேற்கூரையை முட்டிவிடும் அபாயம். டாபா எனப்படும் நம் ஊரின் டீக்கடையும் அல்லாத, கையேந்தி பவனும் அல்லாத ஒரு ரோட்டோரக்கடையில் டீ பருகிட வண்டி நின்றபின்னே தொட்டுப்பார்த்தேன், மண்டை பத்திரமாக இருந்தது. ஒருவழியாக, நடுநிசியில், இருள் படர்ந்த காட்டில், தேநீர் அருந்திவிட்டு கிளம்பிட நினைக்கையில், 

“எங்க ஜம்மு காஷ்மீர் போறீங்களா?” என்றார் கடைக்காரர், ஹிந்தியில்.

“சச்ச… நோ நோ… நாங்க ஹரித்வார் போறோம்… சம்போ சங்கரா!” என்றார் என் சித்தப்பா.

“இது ஜம்மு போகிற வழி” என்றாரே போதும், அனைவரும் ஒருசேர ஓட்டுனரை முறைத்துத் தள்ளினோம். அந்த இருட்டில் ஓட்டுனர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

மீண்டும் வந்த வழியே திரும்பியது வண்டி. ‘மண்ட பத்திரம், மண்ட பத்திரம்’ என்று உள்நெஞ்சு என்னை எச்சரித்துக்கொண்டே வந்தது. திடீரென என் சித்தப்பாவும், ஓட்டுனரும் அனைவரையும் குனிந்து அமரும்படி கத்த, என்னவென்று புரியாமல் நாங்களும் இருக்கையின் அருகே அனைவரும் முட்டி மோதி தலை குனிந்து கிடக்க, வண்டியும் விரட்டு விரட்டு என விரட்டப்பட, அடித்து பிடித்து நெடுஞ்சாலையை வந்து சேர்ந்த பின்பு தான் சற்று நிதானம் கொண்டது வண்டியின் வேகம். குமிந்து கிடந்த அனைவரும் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்து, என்னவென்று விசாரிக்க, எங்கள் வண்டியைக் கண்டதும் கையில் துப்பாக்கியுடன், முகத்தை முக்காடிட்டு மறைத்தபடி மூவர் அம்பாசிடரில் ஏறி எங்களை துரத்தியதைக் கூறினார், என் சித்தப்பா. அதைக் கேட்டதும் பக்கென்று நின்றுபோனது டக் டக் என துடிக்கின்ற இதயம். பின்தொடர்ந்து விரட்டி வந்த வண்டி, எங்கள் வண்டி காட்டு வழித்தடத்தை தாண்டியதும், காட்டின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டிருந்தது. ‘துப்பாக்கி – முக்காடு’ என்பது அன்றைய தமிழ் சினமாவில் தீவிரவாதிகள் அணிந்து வரும் உடையாக இருந்ததால், அவர்கள் தீவிரவாதிகள் என்று நானே முடிவு செய்துகொண்டேன். ‘எங்களை தீவிரவாதிகள் சேஸ் பண்ண, நாங்க சுமோவுல பறக்க, துப்பாக்கியால அவங்க குறி வைக்க, சுமோவின் பின் கதவு அருகே நான் பதுங்கி அமர்ந்திருக்க’ என்று பின்னாளில் நான் என் நண்பர்களிடம் டெரர் கலந்து படம் ஓட்டியதும், அவர்களும் அசராமல் கதையைக் கேட்டதும், எத்தனை அழகிய நாட்கள்!!

பிறகு ஒருவழியாக ஹரித்வாரை சென்றடைந்த நாங்கள், தங்கும் விடுதியில் குளித்து முடித்துவிட்டு கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு, ராமன் பாலம், லக்ஷ்மன் பாலம் எல்லாம் சுற்றிவிட்டு, இடையிடையே சில பல இனிப்புகளையும், சப்பாத்திகளையம் விழுங்கிவிட்டு உலாவினோம், மாலை நிகழவிருக்கும் மற்றொரு சாகசம் அறியாமல்.

மாலை ஹரித்வாரில் குளித்திட முடிவு செய்து, மொத்த குடும்பமும் தண்ணீருக்குள் இறங்கியது. இளவெயில் நேரத்திலும் சில்லிட்டிருந்தது தண்ணீர். 

“அம்மா, தண்ணி ரொம்ப சில்லுனு இருக்கு. ஒரு கேன்’ல எடுத்துட்டு போய் வீட்ல சுட வச்சு குளிச்சுக்கறேனே” என்றேன் அறிவாளித்தனமாய். என் தாய் என்னைக் கண்ட விளங்காத பார்வை ஒன்றிலேயே மேற்கொண்டு எதுவும் பேசாமல் தண்ணீரில் இறங்கினேன். இரண்டு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைத்த நீர் நதியாய் ஓடினால் எப்படி இருக்குமோ அப்படி சில்லிட்டிருந்தது நீர். அவசர அவசரமாக நானும் மற்ற பொடுசுகளும் முங்கி எழுந்து கரைக்கு ஓடிச்சென்று உடை மாற்றிக்கொண்டோம். பெரியவர்கள் குளித்துக்கொண்டிருக்க, எங்களுக்க துணையாய் நின்றிருந்தார் குடும்ப நண்பர் ஒருவர்.   

பெரியவர்கள் அனைவரும் கரையேற, மூச்சு திணறி என் சித்தப்பா மட்டும் மெல்லிய மயக்க நிலையை அடைய, சங்கிலியைப் பிடித்திருந்த அவரின் கைகள் தளர்ந்து விட, நதியின் ஓட்டத்தோடு அவரும் மிதக்கலானார். சற்று தொலைவில் இருந்த மற்றொரு பாலத்தின் கீழே தொங்கிக்கொண்டிருந்த சங்கிலிகளைப் பற்றியவர் மெல்ல மெல்ல நினைவு இழப்பதை கண்கூட கண்டதை இன்று நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன. அதற்குள் இங்கே நாங்கள் அனைவரும் அவருக்கு உதவுமாறு கூச்சல் எழுப்ப, நீருக்குள் பாய்ந்த இரண்டு வாலிபர்கள் என் சித்தப்பாவை பத்திரமாகக் கரை சேர்த்தனர். அவரது உள்ளங்கைகளிலும், கால்களிலும் சூடு பரப்பி அரும்பாடுபட்டு நிலைக்குத் திருப்பினோம். அதற்குள்ளாக அவ்விரு இளைஞர்களும் எங்கோ சென்று மறைந்திருந்தனர். எங்கு தேடியும் அவர்கள் மீண்டும் கண்ணில் படவே இல்லை. காலத்தினால் செய்த உதவியின் மகத்துவத்தை, அந்த பாலத்தைத் தாண்டி அகண்டு விரிந்த நதியையும், அதில் தென்பட்ட பெருஞ்சுழலையும் கண்ட பின்னே எனக்கு விளங்கியது. பெரியவர்கள் அனைவரும் மாறிமாறி புலம்பியபடி இருக்க, அமைதியாய் இருந்த என் சித்தப்பா, “எனக்கு எதுவும் நடந்திருக்காது. நான் சரணாகதி அடைந்துவிட்ட என் குரு என்னை முப்பொழுதும் காப்பாற்றி வருகிறார். இப்பொழுதும்  என்னுடைய குருவே என்னைக் காப்பாற்றினார்” என்று கூறிய தருணம் ஒருவித சிலிர்ப்பு என்னுள். 

கோயெல்லோ கூறியது போல், நாம் ஒன்றை முழு மனதுடன் விரும்பினால், அதை அடைய அண்டமே துணை நிற்கும். அது இலக்கினை அடைய மட்டுமல்ல எதிர்பாரா ஆபத்திலிருந்து நம்மை மீட்பதற்கும் என்று எனக்கு அப்பொழுது தோன்றியது. ஒரு வார்த்தையில் கூறினால் அது மிராக்கில்… அதிசயம். ஆத்திகனின் கண்களுக்கு இறையருள்; நாத்திகனின் கண்களுக்கு அதிர்ஷ்டம். “என்னுடைய குரு என்னைக் காப்பாற்றினார்” என்ற வார்த்தைகள் இன்றும் என் நினைவில் ரீங்கரிக்கின்றன. ஆன்மீகம் கொடுக்கும் ஆத்ம பலத்தை முதல் முறை நான் உணர்ந்த தருணம் அது. அதன் பிறகு, ஒரு நிமிடம் இறைவனை வணங்கினால் கூட, உள்ளம் உருகி வழிபட கற்றுக்கொண்டேன்.

பயணத்தின் இறுதி நிறுத்தமாய், அமிர்தசரசின் பொற்கோவில். அங்கே நான் கண்டு வியந்தது ஆன்மீகத்தையும் தாண்டிய ஒழுக்கம். அன்னதானம் வழங்குமிடம் முதல், குளியலறை வரை, அனைத்திலும் சுத்தம். அதனோடு அங்கு நிலவியிருந்த அமைதி. இறைவனை உணர மதம் வேண்டாம், மார்க்கம் வேண்டாம், அமைதியான மனம் போதும் என்று அவ்விடம் எனக்கு உணர்த்தியது.  

அதே போல் மற்றொரு ஹிமாலய அமைதி கொடுத்தது, அடுத்து நாங்கள் பயணித்த ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி திருக்கோவில். மலையின் மீது சுயம்புவாய்த் தோன்றிய தேவிகளின் குகைக்கோவில். இரவு முழுதும் இமய மலை மீதேறி, விடியலில் தரிசனம் முடித்து, சூரியன் கண்விழித்து எழும் நேரத்தில் பனிச்சிகரங்களைக் காண்கையில், மூச்சிவிடவும் மறந்துபோகும் அந்த விஸ்வரூப அழகை வியப்பதில். இன்று எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. நடந்து மலையேறுவது வெகுவாகக் குறைந்துவிட்டதாய்க் கேள்வி. இருப்பினும், இரவு முழுதும் குடும்பத்தினரோடு கதை பேசிக்கொண்டு, கண்விழித்து நடுசாமக் குளிரில் பதினாறு மைல் நடந்த நினைவுகள் என்றும் இனியவை!

போதும் போதும் என்றளவு பல நாட்கள் சுற்றித்திரிந்த பின் ஊருக்குத் திரும்பும் நாள் வந்தது. பெட்டிகள் எல்லாம் தயார் நிலையில். நாங்களும் ரயிலேற தயார் நிலையில். ஆனால், எங்களின் மனம் மட்டும் அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அனைவருக்கும் வருத்தம் தான். இப்பயணம் மேலும் தொடராதா என்றொரு நப்பாசை எனக்குள். எனது ஆசை இறைவனுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ, வீட்டில் பயணச்சீட்டை சரிபார்த்த என் சித்தப்பா கண்கள் சிவக்க கோபம் கொண்டு திட்டத்தொடங்கினார். ஒன்றும் புரியாமல் நாங்கள் முழிக்க, பயணச்சீட்டின் நேரத்தை சரிவர யாரும் கவனிக்காது ரயிலை தவறவிட்டது தெரியவந்தது. எனக்கோ இனம் புரியா சந்தோஷம். பெரியவர்கள் அனைவரும் பதட்டதோடு இருக்க, நேரங்கெட்ட நேரத்தில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை பெரும்பாடு பட்டு நான் அடக்கியது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

ஒருவழியாக, இரண்டு நாட்கள் கழித்து பயணிக்க மீண்டும் பயணச்சீட்டுகள் வாங்கப்பட்டன. ஆனால், என்ன சொல்லி என் பாட்டியை சமாளிப்பது என்று அனைவருக்கும் யோசனை. பாட்டியைக் கண்டால் அனைவருக்கும் அத்தனை பயம்! வேறு வழியின்றி, எனக்கு வயிற்றுவலி என்பதால் பயணம் தாமதப்பட்டுவிட்டது என்று ஒருவாறு கூறி சமாளித்தனர். நான் செல்லப்பேத்தி என்பதால் என்னைக் கோர்த்துவிட்டு அனைவரும் ஒதுங்கிக்கொண்டனர். சென்னை சென்ட்ரலில் வந்திறங்க, என் பாட்டி, தாத்தா மற்றும் அப்பா அங்கே எங்களுக்காக காத்திருந்தனர்.

“உனக்கு வயித்து வலி, அதுக்கு ஏத்த மாதிரி பரிதாபமா மூஞ்சிய வச்சுக்கோ, பல்ல காட்டி சிரிச்சு வச்சுடாத” என்று என் சித்தி காது கடிக்க, உடனே உஷாரானேன்.

“கண்ணு, வயித்து வலியா உனக்கு?”

மருகினார், என் பாட்டி.   

‘ஆமாம்’ என்று தலையாட்டிய நான், இருந்துவிட்டு  போகட்டும் என்று இரண்டு முறை இருமி வைத்தேன். 

“இருமல் வேறயா?”

“ஆமாம் பாட்டி, வயித்து வலி வந்ததுல ஜலதோஷம் பிடிச்சு, இருமல் வந்துடுச்சு…”

என் பாட்டி புரியாமல் முழித்துக்கொண்டு நிற்க, எனது தாயார் தனது தலையில் அடித்துக்கொள்ள, ஒரு முடிவிற்கு வந்த நான் “எனக்கு ரொம்ப தலை வலிக்குது, வீட்டுக்கு போகலாம்” என்றேன்.

அதற்கு மேல் என்னை  பேசாவிட்டால் ஆபத்து என்று என் சித்தி என்னை ஓரங்கட்டினார். மூட்டை முடிச்சுகளை அள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வெகு வருடங்கள் கழித்து, அனைத்து உண்மைகளையும் என் பாட்டியிடம் கூறி, ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்த ஞாபகங்களும் என்னுள்ளே வாழ்கிறது. எத்தனையோ பயணங்கள் நாங்கள் சென்றிருப்பினும், இந்த பயணம் மட்டுமே எனக்கு மிகவும் சிறப்பான, சிரிப்பான நினைவுகளைத் தந்ததோடு சிந்திக்கவும் வைத்தது!!    

நமது பிறவி என்பதே ஒரு தேடலின் பயணம். அனைவரும் ஏதோ ஒரு மார்க்கத்தில், அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் தேடலை தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றோம். அறிவின் தேடலுக்கு விடை கிடைக்கும், ஆத்மாவின் தேடலுக்கு அனுபவம் மட்டுமே கிடைக்கும். உங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!

வாழ்க வளமுடன்!

  • அர்ச்சனா நித்தியானந்தம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 31

31 – மனதை மாற்றிவிட்டாய் “அறிவில்ல உனக்கு, எங்க எல்லாம் உன்ன தேடுறது? இப்டியே பண்ணிட்டு இரு. கொல்லப்போறேன் உன்ன. இடியட். எதாவது பேசு டி ” என்று அவன் கத்திகொண்டே இருக்க அவள் இவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது. “இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்…” “அம்மா…! என்

கற்பூர நாயகியே கனகவல்லிகற்பூர நாயகியே கனகவல்லி

  https://youtu.be/rxRiOwoytOU கற்பூர நாயகியே கனகவல்லி ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன்