Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized சுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

சுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் நம் வாழ்வில் என்றும் பிரிக்க முடியாதவை, மனது துவண்டுவிடும் வேளைகளில் , வேலைகளில் களைத்து தடுமாறும் வேளைகளில் , மேற்கொள்ளும் சிறு சிறு பயணங்கள் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் இனிமையாக்கும். நீண்ட தூர பயணங்கள், பல நாள் விடுப்பு எடுக்கும் பயணங்கள் என்று தான் அவை இருக்க வேண்டும் என்றும் இல்லை.மிக மிக எளிமையாக நாம் இரசிக்க வென்று பல இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் மனதின் இளமையோடு சென்று வந்தாலே போதும், வாழ்க்கை மீண்டும் சுவாரசியாமாகிவிடும்,

நானும் என்னுடைய ஒரு பயணத்தை பற்றி தான் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். கணவன் மனைவி என்று இருவரும் வேளைக்கு செல்லும் குடும்பம் என்னுடையது. என் குழந்தைகளுடன் நாங்கள் இருவருமாக சேர்ந்து செலவளிக்கு நேரங்களும் எங்களுக்கான நேரங்களும் மிக குறைவுதான். இருப்பினும் சிறு சிறு பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருப்போம். சண்டையோ, சாமாதானமோ, சந்தோசமோ எதோ ஒன்றுடன் எங்கள் பயணம் இனிமையாக கழிந்து சுகமான நினைவுகளுடன் திரும்பிவரும். வாழ்க்கையின் சுவாரசியத்தை மீண்டும் மீண்டும் நம்முடன் கூட்டி வரும்.   

*************

இது சரியாக வராது, இது நன்றாக இல்லை, இங்கு வண்டியை எப்படி நிறுத்துவது, இவ்வளவு விலையில் தங்கும் அளவிற்கு அங்கு ஒன்றும் இல்லை.. சில மணி நேரங்களுக்கு முன்பு வந்து இறங்கிய என் அம்மா எங்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார். நாளை ஆறு மணிக்கு துவங்க வேண்டிய பயணத்திற்கு, இன்னமும் தங்கும் இடம் முடிவு செய்யாமல் , கணவனும் மனைவியும் அடித்துக் கொண்டிருந்தால் பாவம் அவரும் தான் என்ன செய்வார்.

இரவு பத்து மணிக்கு துவங்கி உச்சகட்டத்தில் விவாதித்து ஒருவழியாக பன்னிரண்டு மணி அளவில் விடுதியை முடிவு செய்தோம். நீங்கள் இருவரும் இன்னமும் தூங்க வரவில்லையா? என் அம்மாவின் குரலில் பொறுமை எல்லையைத் தொட்டிருந்தது. இதோ வந்துட்டோம்! என்ற உறுதி மொழியுடன் ஒருவழியாக உறங்க செல்லும் போது, எங்கள் வீட்டு வாண்டு இன்னும் தூங்காமல் விழித்து இருந்து. அம்மா நாளைக்கு பிரியாணி! ஆணையிட்டுவிட்டு உறங்கிவிட்டாள். என் அம்மாவும் கணவரும் நமட்டு சிரிப்புடன் என்னை பார்த்துவிட்டு உறங்க சென்றுவிட்டார்கள். 

காலையில ஆறு மணிக்குள் பிரியாணி செய்ய வேண்டும் , கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?! ஒரு வழியாக உறங்கச் சென்று காலையில் அடித்து பிடித்து எழுந்து அம்மாவும் நானும் மதிய உணவிற்கு பிரியாணியே! [சத்தியமாக பிரியாணி தான்!] செய்து முடித்தோம். காலையில் இலகுவாக சாப்பிடுவதற்கு இட்லி.அடித்து பிடித்து ஒரு வழியாக ஆறு என்பதை ஏழு மணியாக்கி கிளம்பியே விட்டோம்!

காரில் ஏறியவுடன் மேக்கப் கலைவதற்கு முன் அவசரமாக ஒரு செல்பி, முதலில் என் பெரிய பெண் என்னுடன் சேர, பிறகு குடும்பம் மொத்தமாக செல்பி எடுத்துவிட்டே பயணம் ஆரமித்தோம். வரலாறு முக்கியம் அமைச்சரே!! 

நான் ஒரு பாடலை போட என் பெண்கள் வேறு பாடலை போட சொல்ல, உனக்கு வயதாகி விட்டதம்மா! என் பெண்கள் ஏக மனதாக ஒரே குரலில் சொன்னார்கள். இதிலெல்லாம் மட்டும் ஒற்றுமை பொங்கி வழியும், மனதுக்குள் கடுப்படித்துக் கொண்டேன். பிறகு நான் ஒரு பாடல், அவர்கள் ஒரு பாடல் என்று ஒரு சமாதான உடன் படிக்கைக்கு வந்தோம். என் கணவரும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்களை யார் மதித்தார்கள்! எங்கள் பாடல் எங்கள் உரிமை. பாடலை கேட்டுக் கொண்டு வருவது அவர்கள் க[கொ]ட[டு]மை.

எனக்கு பிடித்த ஜன்னலோர இருக்கை. கணவன் காரை ஓட்ட,அருகில் ஜன்னலோர இருக்கையில் ஒரவிழிப் பார்வையில் இதழோர புன்னகையுடன் அமர்ந்து வருவது ஒரு வரம். பின்புறம் பாட்டி நடுவில் அமர்ந்திருக்க என் இரண்டு கண்மணிகளும் இரண்டு ஜன்னலோர இருக்கையில்அமர்ந்து வர, நான் அந்த கணங்களை உணர்ந்து அனுபவித்து கொண்டு வந்தேன். அந்த நொடியில் நான் தான் இந்த உலகிற்கு அரசி என்பது போன்ற ஒரு நிறைவு. அரிதாகக் கிடைக்கும் இது போன்ற சில பயணங்களை பொக்கிசமாக சேர்த்து வைத்து கொள்வேன். ஆண்டு முழுவதிற்கும் தேவையான ஆற்றலை இவை போன்ற பொக்கிச பயணங்களே கொடுக்கின்றன. வேலைக்கு செல்லும் நேரங்களில், வேலை மனதை அழுத்தும் வேலைகளில் சென்று வந்த பயணங்களை அசைப் போட்டு கொண்டால் போதும், மனது பூஸ்டு குடித்தது போல் ஆகிவிடும்!  

அட இப்பொழுது வரை நீ எங்கே செல்கிறாய் என்று சொல்லவே இல்லையே.நீங்கள் கேட்டது என் காதில் விழுந்தே விட்டது! மலைகளின் இளவரசி… இயற்கை கொட்டிக் கிடக்கும் நந்தவனம்.. அட நம்ம கொடைக்கானல் தாங்க. 

எப்படியும் இந்த பயணம் முடிவதற்குள் சில சண்டைகள், பல புகைபடங்கள், பல சந்தோசங்கள், சில துக்கங்கள் என்று நடத்திவிட்டே செல்லும்.இது மட்டுமல்ல ஒவ்வொரு பயணமும் இப்படி எதாவது ஒரு வழியில் மனதை நிரப்பிவிட்டே செல்லும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு பொன்னான பயணம் தான். 

போகும் வழியில், பழனி சென்றுவிடலாம் என்று நாங்கள் முயல, மதியம் ஒரு மணி வேளையில் கூட்டம் நிறைந்து தள்ளியது. தை பூசைத்தை ஒட்டிய விடுமுறை தினம். வின்ச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்க, வெயில் மண்டை பிளந்தது. நடந்தே சென்றுவிடலாம் என்று நாங்கள் முயல பத்தடிக்கு மேல் நடக்க முடியவில்லை. ஏசியிலேயே உட்கார்ந்து உடம்பை கெடுத்து வைத்திருக்கிறாய் சன்னமாய் என் அம்மா திட்டினார். உண்மை தானே! இருந்தாலும் நடக்க முடியவில்லை, என்ன தான் செய்வது. என் பெண்கள் இருவரும் கண்ணீர் விடவே ஆரமித்துவிட்டனர், எங்களால் நடக்க முடியவில்லை என்று அவர்கள் குரலில் சுருதி உயர்ந்து கொண்டே வந்தது. ஒரு வழியாக ஏகமனதாக முடிவெடித்து, படிக்கருகில் சென்று ஒரு கற்பூரத்தை கொளுத்தி முருகனை கீழிருந்தே வணங்கி சென்றோம். அதை நிவர்த்தி செய்ய, வேறு ஒரு நாள் மீண்டும் பயணம் செய்து முருகனை தரிசனம் செய்தது ஒரு தனிக் கதை!!!! என்ன தான் நம் மனது இறைவனை நாம் நினைக்கும் நொடிகளில் தரிசித்து விடலாம் என்று ஆணவமாக நினைத்தாலும் , இது போல சில சம்பவங்கள் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று மண்டையில் அடித்து சொல்லிவிட்டேச் செல்லும். மனதை சமாதனப்படுத்திக் கொண்டு ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி உணவருந்தினோம். என மகள்கள் நிறைவாக உணவருந்தியதில், மனது சற்று இயல்புக்குக் திரும்பியது. உழைப்பிற்கான அங்கிகாரங்கள் மறைமுகமாகக் கிடைத்தாலும், மனது நிறைவடைந்துவிடும்.  

மாலைக்குள் கொடைக்கானலை அடைந்துவிட்டோம். ஓய்வு எடுத்துவிட்டு நாளை சுற்றி பார்க்கலாம் என்று அனைவரும் சொல்ல, நானோ இன்றே முடியும் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று வாதம் செய்ய, இறுதியில் சக்தியே வென்றது. அது தாங்க, நான் தான் வென்றேன். அருகில் இருந்த மியூசியம் ஒன்றிற்கு சென்று விட்டு அமைதியாக திரும்பும் போது இரவு துவங்கியிருந்தது. அந்த இரவில் கொடைக்கானல் ஏரியை பார்க்க மனது ஆசைக் கொண்டது. 

என் கணவரிடம் மெல்ல என் கோரிக்கையை வைக்க, என் முகத்தை நிமிர்ந்து பார்த்து அதில் இருந்த ஆர்வத்தை பார்த்து மெல்ல புன்னகையுடன் தலையசைத்தார். அழகிய நிலவுடன் , அந்த ஏரியை பார்த்ததையை வார்த்தைகளால் வடிக்க இயலாது. அனைவரும் எங்கள் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்கள், நானும் என் கணவரும் மட்டும் அங்கிருப்பது போல் ஒரு பிரம்மை. என்னையும் என் கணவரையும் பார்த்துவிட்டு, ஒரு மவுனப் புன்னகையுடன் என் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எதிர்புறமாக நடக்க ஆரமித்தார்கள் என் அம்மா. நான் என் கணவரின் கையைப்பிடித்துக் கொண்டு மெல்ல அந்த எரியை சுற்றி நடக்க ஆரமித்தான். வேலையின் அழுத்தங்கள், மனதில் தோன்றியிருந்த வெறுமை அனைத்தும் என்னை விட்டு நகர்ந்து ஒரு இழுகுத் தன்மை என்னை வந்து ஓட்டிக் கொண்டது. 

மெல்ல அந்த சூழல் என் மனதில் ஓட்டிக் கொள்ள,சுற்றுப்புறம் மனதில் பதிய ஆரமித்தது. வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் மிக உற்சாகத்துடன் கயிறு அவிழ்ந்த காளைகளாக மிதிவண்டியில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் எனக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது [உன்னக்குத் தான் சைக்கிள் ஓட்டத் தெரியாதே, மனச்சாட்சி திடிரென்று முன்னால் வந்த குதித்தது].அதற்குள் என் பெண்கள் குத்தித்துக் கொண்டுவந்து மிதிவண்டி ஆசையைக் கூற, இருவர் அமரக் கூடிய ஒரு சைக்கிளை என் கணவர் வாடைக்கு எடுத்து மகள்களை அமரவைத்து நிதானமாக ஓட்டி ஆரமித்தார். மகள்கள் என்றால் மட்டும் தகப்பன்கள் வேறு பிறவிகளாக மாறிவிடுகிறார்கள். மனதோடு பெருமூச்சு எழுந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சைக்கிளை ஒப்படைக்க வேண்டும் நான் மனதோடு எண்ணிக் கொண்டிருக்க, சடாரென்று என் முன்னால் சைக்கிள் வந்து நின்றது. ஏறிக்கொள், நிதானாமாய் என் கணவன் கூற என் விழிகள் வட்டமாய் மலர்ந்தது. என்னவனின் தோள்சாய்ந்து கொண்டு அந்த சுகந்தமான இரவில், குளிர குளிர சுற்றி வந்த அந்த பயணம் எத்தனை மனஅழுத்தங்களை என்னை விட்டு விலக்கி அடித்தது என்பது நான் மட்டுமே அறிந்த இரகசியம்.

அடுத்த நாள் பரப்பாக விடிந்த காலை, குறிஞ்சி ஆண்டவர் கோவில் போய் நின்றது. பழனியில் கண்டால் மட்டும் தான் முருகனா, மனம் சமாதனப்படுத்திக் கொண்டது. நெஞ்சு நிறைய இறைவனை கும்பிட்டு மனம் நிறைய சந்தோசத்துடன் வெளியே வந்தோம். நான் உன்னை விட்டு என்றும் விலகுவதில்லை என்ற பைபிளின் வாசம் என் மனதில்!!!

கொயாக்கர்ஸ் வாக்கில் ஒரு நீண்ட நடை பிறகு, சில அற்புதமான காட்சி முனைகள் என்று எங்களுடைய நாள் நீண்டப் பட்டியலில் ஓடிக் கொண்டிருந்தது. இருப்பினும் என் நினைவுகள் கொடைக்கானல் ஏரியை தொட்டுக் கொண்டு தான் இருந்தது. இன்று கிளம்பிவிடுவோம். மீண்டும் ஒரு முறை பார்த்தால் பரவாயில்லை. நான் மனதோடு நினைத்துக் கொள்வதை எப்படி தான் என் கணவர் கண்டுகொள்வாரோ, எத்தனை சிறு சிறு சண்டைகள் வந்தாலும் இந்த புரிதல் தான் எங்கள் இருவரையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்தால் பல மணிநேரங்கள் பேசிக் கொள்ளுமளவிற்கு விசயங்கள் எங்களிடம் இருக்கும். பல விசயங்களை இயல்பாய் தொட்டுச் செல்வோம். சொல்லப் போனால் இருவரின் இரசனையும் வட துருவமும், தென் துருவமும். இருப்பினும் ஒருவரின் கருத்தையும் இரசனையும் இருவரும் மிக ஆழமாக மதித்ததால், ஒருவரின் பேச்சு மற்றொருவருக்கு இரசிக்கத் தக்கதாகவே இருக்கும். 

ஏரிக்கு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றுவிட்டு அனைவரும் ஏரியை மீண்டும் சென்று பார்த்துவிட்டு வந்தோம். இரவில் அமைதியை காட்டிய இடமோ, மதியம் வேளையில் பரபரப்பை காட்டிக் கொண்டிருந்தது. ஏனோ வாழ்க்கையும் இப்படிதான் என்று மனதிற்கு ஒரு நினைவு வந்துவிட்டு சென்றது. 

கைநிறைய் ஹோம்மேட் சாக்லெட்டுகளை வாங்கிக் வாய் நிறைய திணித்துக் கொண்டோம். வாயோடு சேர்ந்து மனதும் தித்தித்தது.புன்னகைத்துக் கொண்டோம். மீண்டும் எங்கள் பயணம், கூட்டை நோக்கித் திரும்பும் பறவைகளாய். 

கார் நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரமித்ததும், நான் ஒரு முறை பின்னால் திரும்பி பார்த்துவிட்டு கணவரை திரும்பி பார்த்தேன். பின்னால் பிள்ளைகளும் அம்மாவும் அசந்து உறங்கொண்டிருந்தார்கள்.மனதில் மிக நிறைவாக இருவருக்கும், மெல்லிய மழையும் அழையா விருந்தாளியாக எங்களுடன்..         

பயணகள் முடிவதில்லை…தொடர்ந்து  கொண்டு தான் இருக்கின்றன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிநேகிதனேசிநேகிதனே

வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்

ராணி மங்கம்மாள் – 27ராணி மங்கம்மாள் – 27

27. விஜயரங்கன் தப்பி விட்டான் ராணி மங்கம்மாளின் மனம் நிம்மதியிழந்து தவித்தது. பேரன் விஜயரங்க சொக்கநாதன் பேசிவிட்டுச் சென்ற சொற்களை அவளால் மறக்கவே முடியவில்லை.   பேரன் வலுவில் வந்து தன்னிடம் ஏறுமாறாகப் பேசி இப்படியெல்லாம் வற்புறுத்தியிராவிட்டால், அவளே ஒருவேளை அவனைக்