Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized சிதம்பரம் அவர்களின் பயணக் கட்டுரை

சிதம்பரம் அவர்களின் பயணக் கட்டுரை

கோடை என்றவுடன் குழந்தைகள் போல குதித்தாடுது மனசு இனிமை இடம் தேடி பயணம் செல்ல..       

சுற்றுலா செல்வதே இன்பம். அதைச் சொல்வது என்றால் அது கொள்ளை இன்பம் அல்லவா. அதற்கு வாய்ப்பளித்த தமிழ் பிஃஷ்சனுக்கு நன்றி.          

பயணங்கள் முடிவதில்லை உண்மை தான். எத்தனை வருடங்கள் ஆனால் தான் என்ன? அந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் நினைத்தால் இந்த நிமிடம் வரை இனிக்கிறதே..          

அன்று….. இளமை துள்ளும் வயது. இனிமை தரும் பயணம். ஆம் 10 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற பயணம் இன்று வரை என் கண்ணை விட்டோ கருத்தை விட்டோ மறையவில்லை.        

செங்கல்தேரி……… 

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 45 கிமீ தூரத்தில் உள்ள பல களங்கள் கண்ட களந்தை எனும் களக்காட்டில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது இந்த சுற்றுலா தளம்.        

இயற்கை எழில் கொஞ்சும் இனிமையான மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரமே இது அமைந்துள்ள இடம்.        

களக்காடு முண்டந்துறை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற்றே இங்கு செல்ல முடியும்.          

அந்த அழகை அனுபவிக்க முடிவு செய்து குடும்பத்தின் அத்துணை சொந்தங்களும் ஒன்று சேர்ந்து மூன்று ஜீப்பில் மலை ஏறத் தொடங்கினோம்.        

ஆட்டமும், பாட்டமுமாக ஆரவாரமாக கிளம்பிய நாங்கள் செங்கல்தேரியின் அருகே நெருங்க நெருங்க அமைதி கொஞ்சும் அதன் அழகை இரசிக்க ஆரம்பித்தோம்.           ஆஹா….. அந்த குயில்களின் குசல விசாரிப்பு, பறவைகளின் பஜனை, இளமைத் தென்றல் சுமந்து வரும் இனிய மண் வாசனை, குரங்குகளின் குதூகலம், வனவிலங்குகளின் வாய்ச்சத்தம், இவற்றை வஞ்சனை இல்லாமல் வாரிவழங்கியது இயற்கை எனும் தேவதை.      இன்பமாக இதை அனுபவித்துக் கொண்டே இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

இனிய மதிய வேளையை நெருங்க ஆரம்பித்தது காலம். மரங்களை துளைத்து கதிர்களை பாய்ச்ச தோற்று ஒதுங்கி நின்றான் கதிரவன். கொண்டு சென்ற சமையல் பாத்திரங்கள், பொருள்களைக் கொண்டு சமைக்க ஆரம்பித்தோம். சலசல என ஓடும் ஆற்றில் நீரெடுத்து, அடுப்பெரிக்க அங்கயே விறகொடித்து அழகாய் சமைத்து அருகருகே அமர்ந்து மரங்களில் இலை பறித்து பறிமாறி இன்பமாக உணவருந்தினோம்..          

பேசி, சிரித்து, விளையாண்டு, களித்து களைப்புற்றோம். இரவை கழிப்பதற்காக அங்குள்ள மரத்தால் ஆன வீட்டில் அனைவரும் ஓய்வெடுத்து உறக்கத்தை தொட ஆரம்பித்தோம்.          

திடீரென கதவை தட்டுவது போன்று ஒரு ஒலி. திடுக்கிட்டு விழித்து ஒருவர் பின் ஒருவராக எழுந்தோம். திடீர் திடீரென அந்த ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. யார்? யார்? என நாங்கள் குரல் கொடுக்க மறுபக்கத்தில் பதிலே இல்லை. மனதில் கிலி. இருப்பினும் அதை முகத்தில் காட்டாமல் ஒருவொருக்கொருவர் வீரத்தை வெளிக்காட்டினோம்.          

கதவை திறந்து பார்க்கலாம் என எழுந்து சென்றோம். அப்போது எங்களுடன் அங்கு தங்கியிருந்த காவலாளி அம்மா அது கரடி, புலியாக இருக்கலாம். பார்த்து திறங்கள் என்றார்.          

அவ்வளவுதான். பின்னங்கால் பிடறியில் படவிழுந்தடித்து ஓடி வந்து கட்டிலின் மீது ஏறிக்கொண்டோம். அன்று இரவு உட்கார்ந்தே விடிந்தது.          

சூரியனின் கதிர்கள் கதவின் இடைவெளி வழியே வானவில்லாய் உள்ளே விழ நாங்கள் அதன் வழியாக கண்ணை வைத்து ஏதாவது வெளியே நிற்கிறதா எனப் பார்த்து எதுவும் உறுதியாக இல்லை எனத் தெரிந்த பின் மெல்லமாக கதவைத் திறந்தோம். பிறகு தான் தெரிந்தது வந்தது கரடியோ, புலியோ இல்லை. வெறும் மர நாய் என்று.            

எங்கள் வீரத்தை நினைத்து விழுந்து, விழுந்து சிரித்தோம். பின் அந்த நாளை ஆனந்தமாக களித்தபின் நிறைந்த மனதுடன் வீட்டை நோக்கி கிளம்பினோம்.          

இந்த இனிய பயணம் என் வாழ்நாள் இன்பத்தில் ஒரு மைல் கல் எனலாம். இதை உங்களுடன் பகிர்ந்தது அதன் மகுடத்தில் வைரம் என்றால் மிகையில்லை.            

நன்றி… வணக்கம்.. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கார்த்திகா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைகார்த்திகா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

சுற்றுலா என்றால் எத்தனையோ அனுபவங்கள் இருக்கும். எனக்கு ஸ்கூலில் நான் போன டூர் தான் நினைவு வருது. படிக்கும்போது எங்க ஸ்கூலில் வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருச்சி டூர் கூட்டிட்டு போனாங்க. நானும் என் பிரெண்டுகளும் ஒரு மாசம் முன்னாடியே பணம் கட்டிட்டு எப்படா

விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2விநாயகர் சதுர்த்தி செய்திகள் – 2

விநாயகர் சதுர்த்தி சந்தோஷம் தரும் விஷயம் என்றாலும், அதன் பின் சிலையை ஆற்றிலோ கடலிலோ இல்லை நீர்நிலையிலோ கரைக்கிறோம். தற்காலத்தில் அழகுக்காக சேர்க்கப்படும் செயற்கை சாயங்களும், பிளாஸ்டர் ஆப் பாரிஸும் கரைவேனா என்று அடம்பிடித்து சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றன. இந்த