தமிழ் காப்பாற்றியது!- புறநானூற்றுச் சிறுகதை

 

ல்ல வெயிலில் பசிக் களைப்போடு பல காத தூரம் நடந்து வந்திருந்தார் மோசிகீரனார். சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறையின் அரண்மனைக்குள் அவர் நுழைந்த போது அலுப்பும், சோர்வுமாக அவரைக் கிறக்கமடையச் செய்திருந்தன. உறக்கம் கண் இமைகளை அழுத்தியது. எங்கேயாவது ஓரிடத்தில் கொஞ்ச நேரம் படுத்து உறங்கினாலொழியக் களைப்பு தீராது என்று தோன்றியது. 

அரண்மனையின் முன்புறப் பகுதியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கிருந்த ஒரு மண்டபத்தின் நடுவில் மேடை மேல் அழகான கட்டில் ஒன்று காலியாகக் கிடந்தது. கட்டில் வைக்கப்பட்டிருந்த விதத்தையும் அதைச் சுற்றிப் பூக்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு அது ஏதோ வழிபாட்டுக்குரிய ஒரு பொருளை வைக்கின்ற இடம் என்று எளிதில் அனுமானித்து . விடலாம். ஆனால் புலவருக்கு அப்போதிருந்த களைப்பில் அவற்றையெல்லாம் எண்ணத் தோன்றவில்லை.) 

விறுவிறு என்று அந்த மண்டபத்திற்குள் சென்றார். கட்டிலில் ஏறிப் படுத்துவிட்டார். கையை மடக்கித் தலைக்கு அணைவாக வைத்துக்கொண்டு படுத்தவர் விரைவில் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். கட்டிலின் மேல் எண்ணெய் 

 

நுரையைப் போன்ற மெல்லிய பூம்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. பட்டு விரிப்பின் மேல் படுத்த சுகம், உடம்பு தன்னை மறந்த உறக்கத்தில் உணர்வொடுங்கியிருந்தது. புலவர் வெகு நேரம் உறங்கினார். நன்றாக உறங்கினார். உறக்கத்தின்போது அங்கே மண்டபத்திற்குள் யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள்?‘ என்பதே அவருக்குத் தெரியாது

மறுபடியும் அவர் கண்விழித்தபோது திகைப்படையத்தக்க காட்சியைக் கட்டிலின் அருகே கண்டார். மன்னர் மன்னனாகிய பெருஞ்சேரல் இரும்பொறை மயில் தோகையாற் செய்யப்பட்ட விசிறியால் தமக்கு வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார் அவர். தூக்கிவாரிப் போட்டது அவருக்கு. பதை பதைத்துப் போய் எழுந்திருந்து கட்டிலிலிருந்து கீழே குதித்து இறங்கினார். 

“ஏன் எழுந்திருந்துவிட்டீர்கள் புலவரே? இன்னும் உறங்க வேண்டுமானால் உறங்குங்கள். இன்னும் சிறிது நேரம் உங்கள் பொன்னான உடம்புக்கு விசிறியால் வீசுகின்ற பாக்கியத்தை யாவது நான் பெறுவேனே?” சிரித்துக் கொண்டே தன்னடக்கமாகக் கூறினான் அரசன். 

“என்ன காரியம் செய்தீர்கள் அரசே நான்தான் ஏதோ தூக்க மயத்தில் என்னை மறந்து உறங்கி விட்டேன். தாங்கள் அதற்காக.’ 

“பரவாயில்லை மோசிகீரனாரே! தமிழ்ப் புலவர் ஒருவருக்குப் பணிவிடை செய்யக் கொடுத்துவைக்க வேண்டுமே!” 

அரசனைச் சுற்றி நின்றவர்கள் கையில் பெரிய முரசம் ஒன்றைத் தாங்கிக் கொண்டு நிற்பதைப் புலவர் அப்போதுதான் – கவனித்தார். உடனே திடுக்கிட்டார். அவர் உடல் வெடவெட வென்று நடுங்கியது. கண்கள் பயத்தால் மிரண்டன. வாயில் பேச்சு எழாமல் பயத்தினால் நாகுழறியது. 

அவருடைய இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணம் என்ன? தாம் படுத்திருந்த கட்டில் அரசனுடைய முரசு கட்டில் என்பதை அவர் தெரிந்து கொண்டு விட்டார். முர்சு கட்டிலில் முரசு தவிர வேறு மனிதர்கள் யாராவது ஏறினால் அவர்களை அந்தக் கணமே 

வாளால் வெட்டிக் கொன்றுவிடுவது வழக்கம். அவர் அரண் மனைக்குள் நுழைந்த நேரத்தில் அந்தக் கட்டில் காலியா யிருந்ததன் காரணம், காவலர்கள் முரசத்தை நீராட்டுவதற்கு எடுத்துக் கொண்டு போயிருந்ததுதான். 

“அரசே! இதுவரை முரசு கட்டிலிலா நான் படுத்துக் கொண்டிருந்தேன்?” 

”ஆமாம் புலவரே! நீங்கள் வேண்டுமென்றா செய்தீர்கள்? உறக்க களைப்பு. பாவம் தெரியாமல் ஏறிப்படுத்துக் கொண்டு விட்டீர்கள்.” 

”முறைப்படி என்னை இந்தக் குற்றத்திற்காக நீங்கள் வாளால் வெட்டிக் கொன்றிருக்க வேண்டுமே என்னை எப்படி உங்களால் மன்னிக்க முடிந்தது?” 

“வேறொருவர் இதே காரியத்தைச் செய்திருந்தால் முறைப் படி அவ்வாறு செய்திருக்கத் தயங்க மாட்டேன் புலவரே! நான் இந்தப் பக்கமாக வரும்போது கட்டிலில் ஆள் படுத்திருப்பதைக் கண்டு ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டுதான் வந்தேன். நல்லவேளையாக நீங்கள் அப்போது புரண்டு படுத்தீர்கள். உங்கள் முகத்தைக் கண்டு கொண்டேன். கோபம் அடங்கியது. தமிழுக்கு மரியாதை செய்வது என் கடமை. உருவிய வாளை உறைக்குள் போட்டேன். எழுந்த ஆத்திரத்தை அன்பிற்குள் அடக்கினதைப் போல. அப்போதிருந்தே விசிறியை எடுத்து வீசிக்கொண்டுதான் இருக்கிறேன். நடுவில் நீராட்டச் சென்றிருந்த இவர்கள் முரசத்தை வைப்பதற்காகக் கொண்டு வந்தார்கள், உங்கள் அமைதியான உறக்கம் கலைந்துவிடக்கூடாதே’ என்பதற்காக இவர்களை இப்படியே தடுத்து நிறுத்தி வைத்தேன். இப்போதுதான் உங்கள் தூக்கம் கலைந்தது. நீங்கள் எழுந்திருந்தீர்கள்!” இரும்பொறை தூங்கும்போது நடந்த நிகழ்ச்சிகளைப் புலவருக்கு விவரமாக எடுத்துக் கூறினான்… 

புலவர் மோசிகீரனார் நன்றிப் பெருக்கினால் கண்களில் நீர் சுரக்க அவனை அப்படியே இறுகத் தழுவிக்கொண்டார். 

புறநானூற்றுச் சிறுகதைகள் ”தமிழுக்காக இவ்வளவு பெரிய மன்னிப்பா? மன்னிக்க முடியாத பிழையை நீங்கள் மன்னித்துவிட்டீர்கள் அரசே!‘ 

இல்லை புலவரே! நீங்கள் என்னை அதிகமாகப் புகழ்கிறீர்கள். அளவுக்கு மீறி நன்றி செலுத்துகிறீர்கள். தமிழுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். நான் செய்ததோ மிகச்சிறிய காரியம்!‘ 

“சேரர் பெருந்தகையே! உருவிய வாளை உறைக்குள் போட்டுவிட்டதோடு நிற்காமல், உங்கள் கையில் விசிறியை எடுத்து மத்தளம் போலப் பருத்த தோள் வலிக்கும்படியாக எனக்கு விசிறியிருக்கிறீர்கள். நீ தமிழைமுழுமையாக உணர்ந்து கொண்ட தற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த உலகில் நலம் புரிந்தவர்களுக்கே மறுமை நல்லதாக இருக்கும் என்று 

அறிந்த அறிவின் பயன் தான் இச்செயலோ?” 

“இல்லை! இல்லை! இம்மையில் புகழையோ, மறுமையில் புண்ணியத்தையோ விரும்பி இதை நான் செய்யவில்லை, புலவர் பெருமானே! உங்கள் தமிழ்ப் புலமைக்கு நான் செலுத்திய வணக்கம் இது. வேறொன்றுமில்லை.” 

“உனது வணக்கத்திற்கு நான் மட்டும் இல்லை . என் உயிரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. தமிழின் பெயரால் பிழைத்த உயிர் அல்லவா இது?” 

இரும்பொறை சிரித்தான். வீரர்கள் முரசத்தைக் கட்டிலின் மேல் வைத்து அதற்கு வழக்கமாகச் செய்ய வேண்டிய வழிபாடுகளைச் செய்தனர். 

அரசன் புல்வரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றான். மோசிகீரனார் தூக்கக் கிறக்கம் தணிந்து அவனோடு சென்றார். அவர் உள்ளம் தமிழை வாழ்த்திக் கொண்டிருந்தது. 

தமிழ்ப்புலமைக்குத் தமிழ் அரசு செய்த மரியாதைக்கு இந்தச் சம்பவம் ஒரு சரியான அளவுகோலாக விளங்குகின்றது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அன்பின் அறியாமை – புறநானூற்றுச் சிறுகதைஅன்பின் அறியாமை – புறநானூற்றுச் சிறுகதை

  அப்போது கார்காலம். மலை நங்கை தன் பசுமை கொழிக்கும் உடலில் நீலநிறப் பட்டாடை அணிந்தாற்போல முகில்கள் மலைச் சிகரங்களில் கவிந்திருந்தன. பொதினி மலையின் வளத்தைக் காண்பதற்குச் சென்றிருந்தான் பேகன். அவன் ஆவியர் குடிக்குத் தலைவன். பொதினி மலை அவன் ஆட்சிக்கு

மனம்தான் காரணம் – புறநானூற்றுச் சிறுகதைமனம்தான் காரணம் – புறநானூற்றுச் சிறுகதை

  “பிசிராந்தையாரே! உமக்கு என்ன ஐயா வயது இப்போது?”  “ஏன்? எவ்வளவு இருக்கலாம் என்று நீங்கள் தான் ஒரு மதிப்புப் போட்டுச் சொல்லுங்களேன் பார்ப்போம்?” தம்மிடம் கேள்வி கேட்ட புலவர்களைப் பார்த்து எதிர்க் கேள்வி போட்டார் பிசிராந்தையார்,  ”உம்மைப் பார்த்தால் முப்பது

அடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதைஅடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதை

  ஒரு சமயம் சங்கப் புலவர்கள் யாவரும் கூடியிருந்த அவையில் பாண்டிய மன்னன் புலவர்களை நோக்கி ஒரு ஐயத்தை வெளியிட்டான். ”குபேரன் முதல் கோவணாண்டி வரை வாழ்க்கைக் கயிற்றில் ஒரே நூலில் கோக்கப்பட்டிருந்தும் அவர்களுக்குள் தகுதியினால் வேறுபாடு ஏன்? அடிப்படையில் ஒற்றுமை