Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் சிறுமைக்கு ஒரு சூடு! – புறநானூற்றுச் சிறுகதை

சிறுமைக்கு ஒரு சூடு! – புறநானூற்றுச் சிறுகதை

 

பெருஞ்சித்திரனார் என்ற புலவர் ஒருமுறை வெளிமான் என்னும் சிற்றரசனைக் கண்டு உதவி பெற்று வருவதற்காகச் சென்றார். வெளிமானுடைய வள்ளன்மையும் வரையாது கொடுக்கும் நல்லியல்பும் நாடறிந்தவை. ஆனால், இவற்றிற்கு நேர்மாறான குணங்களோடு இள வெளிமான்’ என்று அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். வெளிமானிடத்தில் இருந்த உயர்ந்த குணங்களில் சில வேனும் கூட இளவெளிமானிடம் கிடையாது. தன் பருவத்தைப் போலவே சிறுமையுள்ளமும் குறுகிய நோக்கமும் கொண்டவன் அவன். 

 

பெருஞ்சித்திரனார் வெளிமானைத் தேடிப் போன நேரத்தில் அவன் களைப்பு மிகுதியால் உறங்குவதற்காகப் பள்ளியறைக்குச் சென்றிருந்தான். புலவர் ஒரு காவலனிடம் தான் உதவி கோரி வந்திருந்தலை வெளிமானுக்குக் கூறியனுப்பினார். 

புலவர் வரவைக் காவலன் பள்ளியறையிலே போய்க் கூறியபோது இளவெளிமானும் அருகில் இருந்தான். வெளி மானுக்குத் தூக்கம் கண்களைச் சொருகியது. எனவே, அவன் புலவரை வரவேற்றுப் பரிசில் கொடுக்க முடியாத சோர்வில் ஆழ்ந்திருந்தான். ‘புலவரைப் போகச் சொல்லி விட்டு மற்றோர் சமயம் வரச்சொல்லி அனுப்பினாலோ, அவர் தவறாக எண்ணிக் கொள்வார்’ என்று சிந்தித்து வெளிமான் அருகில் இருந்த தன் தம்பியாகிய இளவெளிமானை நோக்கி, “தம்பி! எனக்காக நீ ஒரு காரியம் செய்யேன். நான் எழுந்திருந்து நடக்க முடியாதபடி களைத்துப் போயிருக்கின்றேன். கண்களில் உறக்கம் சுமையாக அழுத்துகின்றது. புலவர் பெருஞ்சித்திரனார் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றார். நீ அவரை நான் வரவேற்க இயலாத, நிலையில் இருப்பதற்காக வருந்துவதாகக் கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வேண்டிய உதவிகளை அவருக்குச் செய்து கொடு. அவர் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று கூறினால் இன்று முழுவதும் இங்கே தங்குவதற்கு வசதி செய்து கொடு. நான் உறங்கி விழித்ததும் அவரைச் சந்திக்கிறேன்” என்று கூறினான். அவன் குரலில் குழைவும் கனிவும் இணைந்திருந்தன. ஆனால், அண்ணனின் இந்த வேண்டுகோளுக்கு இளவெளிமான் பதிலே பேசவில்லை. அலட்சியமாக மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். 

”என்ன தம்பி? பேசாமல் பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்கிறாயோ நான் சொல்வது உன் காதில் விழுகிறதா இல்லையா?” – வெளிமான் சற்றே இரைந்த குரலில் கேட்டான். 

“விழுகிறது அண்ணா ! இந்தப் புலவர்களே இப்படித்தான்! நேரம், காலம் தெரிந்து வரமாட்டார்கள். இவர்கள் தொல்லையே பெரிய தொல்லையாகப் போய்விட்டது..! அது சரி, இப்போது இதற்காக நான் போக வேண்டுமா? இந்தக் காவலனே சென்று 

 

ஏதாவது பரிசிலைக் கொடுத்து அவரை அனுப்பும்படி ஏற்பாடு செய்து விடுகிறேனே... அலட்சியம் தொனிக்கிற குரலிலேயே இளவெளிமான் பதில் கூறினான். 

தம்பீ! நீ என்ன பேசுகிறாய், யாரிடம் பேசுகிறாய் என்பதைச் சிந்தித்து நிதானமாகப் பேசு நீ என் உடன்பிறந்தவன் என்பதற்காக உன்னை விடுகின்றேன். இதே சொற்களை வேறொருவன் பேசியிருந்தால் அவனுடைய நாக்கு இந்த விநாடி என் கத்தி முனையிலிருந்திருக்கும்” வெளிமானின் குரலில் கேட்பவர்களை நடுங்க வைக்கும் கடுமை ஒலித்தது. 

”சரி அண்ணா ! கோபப்படாதீர்கள். நான் போகிறேன்” என்று கூறிவிட்டு வேண்டா வெறுப்பாகப் புலவரைக் கண்டு வரவேற்பதற்காகச் சென்றான் இளவெளிமான். எப்படியும் தன் தம்பி புலவரைச் சந்தித்து அவருக்கு வேண்டியவற்றைச் செய்வான் என்ற நம்பிக்கையோடு வெளிமான் தன்னை மறந்த உறக்கத்தில் இலயித்துப் போனான். ‘ 

ஆனால், நடந்தது முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சி. இளவெளிமான் புலவரை அன்போடு வரவேற்கவில்லை. ”என்ன காரியமாக ஐயா வந்தீர்கள்?” என்று அன்போடு விசாரிக்கவில்லை. பெருஞ்சித்திரனாரிடம் சென்று அவர் தகுதியை உணராமல் இரண்டு மூன்று பொற்கழஞ்சுகளைப் பிச்சைக்காரனுக்கு வீசி எறிகிறாற் போல வீசி எறிந்துவிட்டு, ‘ஓய்! புலவரே, பேசாமல் இதை எடுத்துக்கொண்டு போய்விடும். இப்போது நீர் என் அண்ணனைப் பார்க்க முடியாது. அவன் தூங்குகிறான். இன்னொரு சமயம் வந்து பாரும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான். தன்னுடைய பண்பற்ற செயல் புலவரை எவ்வளவு தூரம் மனம் புண்பட்டு வருந்தச் செய்திருக்கும் என்பதை அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை. பெருஞ்சித்திரனாரோ தமக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இளவெளிமான் வீசி எறிந்த பொற்கழஞ்சுகளை எடுத்துக்கொள்ளாமல் அமைதியாக வந்த வழியே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். 

 

இவன் சிறுமைக்குச் சரியான சூடு கொடுக்கவில்லை யானால் என் பெயர் பெருஞ்சித்திரனார் இல்லை” என்று திரும்பிச் செல்லும் போது கடுமையான சங்கல்பம் ஒன்றைச் செய்து கொண்டது அவர் மனம். 

நாட்கள் கழிந்தன. பெருஞ்சித்திரனார் தன் தம்பி இளவெளிமானால் அவமானப்படுத்தப்பட்டு ஊர் திரும்பிய விவரம் வெளிமானுக்குத் தெரியாத . “புலவரை நன்றாக உபசரித்து வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பிவிட்டேன் அண்ணா !” என்று தன் தமையனிடம் பொய் கூறிவிட்டான் இளவெளிமான். வெளிமானும் அதையே மெய்யாக நம்பிவிட்டதனால்தான் அவனுக்கு உண்மை விவரம் தெரியக் காரணம் இல்லாமலே போய்விட்டது. 

திடீரென்று ஒருநாள் காலை வெளிமானின் கோட்டை எல்லையிலே இருந்த காவல் மரத்தைக் காக்கும் வீரர்கள் பதறியடித்துக் கொண்டு அரசனைக் காண அரண்மனைக்கு ஓடி வந்தனர். அவர்கள் வந்த வேகத்தைக் கண்ட அரசன் என்னவோ, ஏதோ என்று நினைத்துப் பரபரப்படைந்து விவரத்தை விசாரித்தான் வெளிமான். 

”அரசே! நம்முடைய காவல் மரத்திற்கு ஆபத்து! யாரோ ஒரு புலவர் நாங்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் ஒரு பெரிய யானையைக் கொண்டுவந்து நம்முடைய காவல் மரத்திலே கட்டிவிட்டார். கொம்புகளை ஆட்டி மரத்தை அசைத்து இழுத்து அட்டகாசம் புரிகிறது அந்த யானை : யாரும் கிட்ட நெருங்க முடியவில்லை. அந்த யானையினது கம்பீரமான பயங்கரத் தோற்றத்தைக் கண்ட கைகால்கள் நடுக்கமெடுக்கின்றன. அதன் முதுகிலே பல பெரிய மூட்டைகள் கட்டியிருக்கின்றன. அந்த யானையை இப்படியே இன்னும் சிறிது நேரம் விட்டுவிட்டால் நம்முடைய காவல் மரத்தை ஆணிவேரோடு பிடுங்கி எறிந்து விடும். இதெல்லாம் அந்தப் புலவர் செய்கிற வேலை அரசே! யானையைக் கொன்று அவரைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்” என்று காவலர்கள் பதறிக் கூறினார்கள். 

அரசன் வெளிமான், தம்பி இளவெளிமானுடனும் படைகளுடனும் உடனே காவல்மரம் இருந்த இடத்தை அடைந்தான். அவன் மனத்தில் சினமாகிய நெருப்பு மூண்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கே காவலர்கள் கூறியபடி மிகப் பயங்கரமான தோற்றத்தை உடைய பெரிய யானை ஒன்று மரத்தை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த யானைக்கு அருகிலே நின்றுகொண்டிருந்த புலவர் பெருஞ்சித்திரனாரைப் பார்த்தபோது அவனுடைய ஆத்திரம் ஆச்சரியமாக மாறியது. அதே சமயத்தில் அவனருகிலிருந்த இளவெளிமான் புலவரை’ அங்குக் கண்டதும் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போலத் திடுக்கிட்டான். அரசனைக் கண்டதும் புலவர் யானையின் கொட்டத்தை அடக்கி, மந்திரத்தாற் கட்டி நிறுத்தியது போல அதை அமைதியாக நிற்கச் செய்தார். எல்லோரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 

புலவரை நோக்கி, “இது என்ன பெருஞ்சித்திரனாரே! என் காவல் மரம் உங்களுக்கு என்ன குற்றத்தைச் செய்தது?” என்று கேட்டான் வெளிமான். 

”காவல் மரம் ஒரு குற்றத்தையும் செய்யவில்லை அரசே! இப்போதெல்லாம் மரங்கள் கூடச் சில மனிதர்களைவிட நல்லவைகளாக இருக்கின்றன. சில மனிதர்கள் தாம் மரங்களை விட மோசமானவர்களாக இருக்கிறார்கள்” இப்படிக் கூறிக் கொண்டே அவர் தம் பார்வையை இளவெளிமான் மேல் பதிய வைத்தார். சவுக்கடி பட்டது போலிருந்தது அவனுக்கு. அவன் தலை குனிந்தான். புலவர் மேலும் கூறினார் ”அரசே! இந்த யானையின் முதுகிலுள்ள முட்டைகள் நிறையப் பொற்கழஞ்சுகள் இருக்கின்றன. இது தகுதியறிந்து கொடுத்த பரிசில். நான் இப்போது அவற்றை உங்கள் தம்பி இளவெளிமானுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன்” அவர் கூறி முடிக்கவில்லை, ‘ஐயோ புலவரே! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று அலறிக் கொண்டே அவர் காலில் விழுந்துவிட்டான் இளவெளிமான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதைபாண்டியன் வஞ்சினம் – புறநானூற்றுச் சிறுகதை

  நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான். அவ்வாறு பட்டத்துக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய சோதனை ஒன்று அவனது அரசாட்சியை நோக்கி எழுந்தது. மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனும் அவனைச் சேர்ந்தவர்களாகிய திதியன், எழினி முதலிய சிற்றரசர்களும் ஒன்று

வீரக் குடும்பம் – புறநானூற்றுச் சிறுகதைவீரக் குடும்பம் – புறநானூற்றுச் சிறுகதை

  ”அதோ அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா?”ஒக்கூர் மாசாத்தியார் தம்மிடமிருந்த மற்றோர் புலவருக்குச் சுட்டிக் காட்டினார்.  “அந்தக் குடிசை வாயிலில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாளே, அந்தப் பெண்ணைத் தானே சொல்லு கிறீர்கள்?”  “ஆமாம் அவளேதான்! “அவளுக்கு என்ன?”    “சொல்லுகிறேன்! அந்தப் பெண்ணின்

அவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதைஅவன் ஒரு வல்லாளன் – புறநானூற்றுச் சிறுகதை

  அவன் ஒரு பயிர்த்தொழிலாளி. வேளாண்மகன். அப்போது ஊரிலுள்ள வயல்களில் வரகுப் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. அங்கங்கே வயல்களிலிருந்து கருநிற வரகின் தாள்களை அரிந்து களத்துக்குக் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். இந்த அறுவடை வேலையில் ஈடுபட்டுக் கூலி பெறுவதற்காகப்